Advertisement

“உங்க அதிர்ச்சி புரியுது வினோத். பிளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க. நான் உங்களுக்கு செஞ்ச உதவில சத்தியமா எந்த உள் நோக்கமும் இல்லை”, என்று சொன்னவன் யமுனாவை முதலில் பார்த்தது, அதற்கு முன்னான அவனுடைய கனவு என அனைத்தையும் சொன்னான். ஆனால் அவளைப் பார்த்து காதலைச் சொன்னதையும் அவள் மனநிலையையும் பற்றி வினோத்திடம் சொல்ல வில்லை. தன்னவளுக்கு கெட்ட பெயர் வருவதை அவன் விரும்ப வில்லை.

“சார், நான் உங்ககளை நம்புறேன். காதல் எப்ப யார் மேல வரும்னு தெரியாது. அதுவும் யமுனாவை ஒருத்தருக்கு பிடிக்காம இருந்தா தான் அதிசயம். அதனால நீங்க கேட்டது எனக்கு தப்பா தெரியலை. ஆனா அதுக்கு டக்குனு என்னால சம்மதம் சொல்ல முடியலை நீங்க எல்லாம் பெரிய இடம். நாங்க அப்படி இல்லை. இன்னும் சொல்லப் போனா இந்த வாழ்க்கையே நீங்க போட்ட பிச்சை. அப்படி இருக்கும் போது உங்களை எங்க வீட்டு மாப்பிள்ளையா நினைக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் சார். உங்க கிட்ட சாதாரணமா பேசிப் பழகவே யோசிக்கிற என் அம்மா அப்பா சம்பந்தம் பண்ணன்னா கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க சார்”, என்று மறுத்தான்.

“நீங்க சொல்றது எனக்கு புரியுது வினோத். ஆனா எனக்கு யமுனாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அவ ஒரு பொக்கிஷம். அவ என் கிட்ட இருந்தா தான் ரொம்ப சந்தோஷமா இருப்பா”

“யமுனா விலைமதிப்பில்லாத மாணிக்கம்னா நீங்க ஒரு சாம்ராஜியத்தோட ராஜா சார். மாணிக்க கல் கண்டிப்பா ராஜாவோட மணிமுடில இருக்குறது பெருமை தான். ஆனா கண்டிப்பா எங்க வீட்ல அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க சார். அவங்களுக்கு ஜாதி, அரசியல் தான் கண்ணுக்கு தெரியும்”

“உங்க அம்மா அப்பாவை விடுங்க. முதல்ல உங்க விருப்பத்தைச் சொல்லுங்க வினோத்”

“எனக்கு இதுல சந்தோஷம் தான் சார். என் தங்கச்சிக்கு கிடைக்கப் போற வளமான வாழ்க்கையை நான் எப்படி கெடுப்பேன்? ஆனா…. அப்பா அம்மா”

“அவங்க சம்மதிக்க மாட்டாங்கன்னு எனக்கும் நூறு சதவீதம் தெரியும் வினோத். முதல் நாள் அவங்க என்னைப் பார்த்த பார்வையிலே எனக்கு அது புரிஞ்சது. அதனால தான் உங்க கிட்ட முதல்ல பேச வந்தேன்”

“உங்க வீட்ல ஒண்ணும் சொல்லலையா சார்?”

“இன்னும் என் வீட்ல பேசலை. உங்க கிட்ட சொன்ன பிறகு தான் எங்க வீட்ல பேசணும்”

“உங்களுக்கும் எங்களுக்கும் இடைல பணத்துல மட்டும் ஏற்றத் தாழ்வு இல்லை சார். நீங்க மாமிசம் சாப்பிடுறவங்க. எங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது”

“வேற ஜாதின்னு நீங்களும் வேண்டாம்னு சொல்றீங்களா வினோத்?”

“நான் ஜாதி பாக்க விரும்ப மாட்டேன் சார். ஏன்னா என்னோட ஜாதிக்காரன் எனக்கு இந்த வேலையைப் போட்டுக் கொடுக்கலை. ஆனா அம்மா அப்பா பாப்பாங்க. அவங்களுக்கு கோடீஸ்வரன், மகளை நல்லா பாத்துக்குவான்னு எல்லாம் தோணாது. இனத்தை தான் பாப்பாங்க. முதல் நாள் உங்க கிட்ட பேசக் கூடாதுன்னு அவங்க சொன்ன காரணம் நீங்க அரசியல்வாதி குடும்பம்னு. ஆனா அது வாய் வார்த்தையா இருந்தாலும் அவங்க மனசுக்குள்ள இன்னும் ஜாதி வெறி இருக்க தான் சார் செய்யுது”

“அப்படின்னா என்னோட ஆசை நிறைவேறாது, நான் உங்க தங்கையை மறக்கணும்னு சொல்ல வறீங்களா வினோத்?”

“இல்லை சார், நீங்க சந்தோஷமா இருக்கனும்னு தான் நானும் நினைப்பேன். சரி சார், என்ன நடக்குதுன்னு பாக்கலாம். நீங்க எங்க வீட்டுக்கு வந்து பேசுங்க. நான் உங்க பக்கம் நிக்குறேன்”, என்று சொல்ல அவன் முகம் மலர்ந்தது.

“நிஜமா தான் சொல்றீங்களா வினோத்?”

“கண்டிப்பா சார். என் தங்கச்சியும் நீங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நானும் ஆசைப் படுறேன். நீங்க உங்க வீட்ல பேசிட்டு எங்க வீட்டுக்கு வாங்க”, என்று சொல்ல பரணி சந்தோசத்துடன் அவன் கையைப் பற்றிக் கொண்டான்.

பரணி தன்னுடைய வீட்டில் விஷயத்தைச் சொல்லுவதற்காக வீட்டுக்கு செல்ல அதே நேரம் வினோத் யமுனாவை போனில் அழைத்தான்.

“இந்நேரம் அண்ணா கூப்பிடுறான். அவங்க எல்லா விஷயமும் பேசிருப்பாங்களா?”, என்று திகைத்து போனை காதில் வைத்தவள் “சொல்லுண்ணா”, என்றாள்.

“பரணி சார் என்னைப் பாக்க வந்தார் மா”, என்று அவன் சொல்ல அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். உன்னைக் கல்யாணம் பண்ண ஆசைப் படுறார். எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம அம்மா அப்பா பிரச்சனை பண்ணுவாங்க தான். ஆனா அதுக்கு முன்னாடி உன் விருப்பம் என்னன்னு தெரியணும்னு தான் மா உன்னைக் கூப்பிட்டேன்”, என்று அவன் சொன்னதும் தான் புரிந்தது பரணி அவனிடம் யமுனாவை சந்தித்து காதலைச் சொன்னதை சொல்ல வில்லை என்பது. அது அவன் மேலான அன்பை இன்னும் அதிகப் படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

“யமுனா, லைன்ல இருக்கியா?”

“இருக்கேண்ணா”

“நீ என்ன மா பதில் சொல்ற?”

“என் கிட்ட பேசாம அவர் உன் கிட்ட வந்து பேசிருப்பார்னு நினைக்கிறியாண்ணா?”

“அப்படின்னா சார் உன்னைப் பாக்க வந்தாங்களா?”

“ம்‌ம், இன்னைக்கு பாத்தேன். விரும்புறேன்னு சொன்னாங்க. நான் எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்கன்னு சொன்னேன். அவர் கேக்கலை. அதே நேரம் என்னைக் கட்டாயப் படுத்தவும் செய்யலை. அதான் உன் கிட்ட பேசச் சொன்னேன்”, என்று அவள் சொன்னதும் அவனுக்கு யமுனாவின் மனநிலை புரிந்தது. பிடிக்காமல் அவள் பேசச் சொல்லி இருக்க மாட்டாள் என்று கண்டு கொண்டான்.

“ஓ, சரி மா. என்ன நடக்குதுன்னு பாப்போம். முதல்ல அவங்க வீட்ல பேசச் சொல்லிருக்கேன். அப்புறம் நம்ம வீட்ல பேச வருவாங்க. ஆனா யமுனா ….”

“சொல்லுண்ணா”

“நம்மளை அறியாமலே நாம ரெண்டு பேரும் பரணி சாருக்கு நம்பிக்கையைக் கொடுத்துருக்கோம். அது புரியுதா உனக்கு?”

“ஆமாண்ணா”

“நாம அதை காப்பாத்தணும்”

“என் வாழ்க்கைல இனி அவரைத் தவிர இன்னொரு ஆணுக்கு இடம் இல்லை அண்ணா. அவரைப் பிடிச்சதுனால தானே உன் கிட்ட பேசச் சொன்னேன். இனி எப்படி அவரைப் பிடிக்கலைன்னு சொல்ல முடியும்? என்னால அவரை ஏமாத்த முடியாது”, என்று சொன்னவளுக்கு தெரியாது அவள் அவன் முகத்துக்கு நேரே அவனைப் பிடிக்க வில்லை என்று சொல்வாள் என்று.

“சரி மா, உனக்கு பிடிச்சிருக்குல்ல? மேற்கொண்டு நான் பாத்துக்குறேன்”, என்று தங்கைக்கு சொன்ன வினோத்துக்கும் தெரியாது அவனால் எதுவுமே செய்ய முடியாது என்று.

வீட்டுக்கு சென்ற பரணிக்கோ இருப்பே கொள்ள வில்லை. ஏனென்றால் வீட்டில் கௌரி மற்றும் நிஷா மட்டுமே இருந்தார்கள். சரவணப் பெருமாள் சென்னை போயிருந்தார். அவர் இரவு ஏழு மணிக்கு தான் வருவார் என்பதால் பொறுமையாக இருந்தான்.

அன்று இரவு ஒன்பது மணி, அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

விஷ்ணு மற்றும் நிஷா இருவரும் கதை பேசிய படியே உண்டு கொண்டிருக்க அவர்களின் பேச்சை சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சரவணப் பெருமாளும் கௌரியும். ஆனால் அவர்கள் பேச்சிலும் சரி, உணவிலும் சரி, பற்றற்று இருந்தவன் பரணி மட்டுமே.

எப்போதுமே வீட்டில் அவன் சத்தம் சற்று ஓங்கி ஒலிக்கும். இன்று அவன் அமைதியாக இருக்கவும் சரவணப் பெருமாள் புருவம் முடிச்சிட்டது. “பரணி கண்ணா”, என்று அழைத்துப் பார்த்தார். அவன் கவனம் இங்கு இல்லை என்பதால் அவர் அழைத்தது அவனுக்கு கேட்க வில்லை.

“என்ன ஆச்சு கௌரி உன் சின்ன மகன் புத்தர் மாதிரி உக்காந்துருக்கான்?”, என்று மனைவியிடம் கேட்டார்.

“தெரியலைங்க, வீட்டுக்கு அவசரமா வந்தான். அப்பா எங்கன்னு கேட்டான். அப்புறம் ரூமுக்கு போனவன் தான். இப்ப தான் சாப்பிட வந்து உக்காந்துருக்கான். அதுவும் அப்பா வந்துட்டாங்களான்னு கேட்ட பிறகு தான் வந்தான்”, என்று கௌரி சொன்னதும் அனைவரின் கவனமும் பரணி புறம் திரும்பியது.

அவன் பார்வையோ இலக்கற்று எங்கோ வெறிதத்து. அவன் கையை பிடித்து நிஷா “அண்ணா”, என்று அசைத்த பிறகு தான் திடுக்கிட்டு நடப்புக்கு வந்தான்.

“என்ன ஆச்சு பரணி? என் மகன் எப்பவும் தன்நிலை மறக்குறவன் இல்லையே?”, என்று கேட்டார் சரவணப் பெருமாள்.

அப்போதும் அவன் அமைதியாக இருக்க “ஏதாவது பிரச்சனையா டா? என் கிட்ட சொல்லனுமா?”, என்று மீண்டும் கேட்டார்.

“ஆமா பா, கொஞ்சம் பேசணும். உங்க கிட்ட மட்டும் இல்லை. எல்லார்க் கிட்டயும்”, என்று சீரியசாக சொன்னான். பரணி இப்படி பேசுவது இதுவே முதல் முறை என்பதால் அனைவரும் அமைதியாக அவனைக் கவனித்தார்கள்.

“எதுவா இருந்தாலும் சொல்லு கண்ணா. எங்க கிட்ட என்ன தயக்கம்?”, என்று கேட்டாள் கௌரி.

“இல்லை, உங்களுக்கும் அப்பாவுக்கும் என்னோட கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவு இருக்கும்….”

“உன் கல்யாணமே எங்களுக்கு கனவு தான் டா. ஆனா உனக்கு பிடிச்ச மாதிரி தான் செஞ்சு வைப்போம். இப்ப எதுக்கு இந்த பேச்சு? நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா? அப்பா பொண்ணு பாக்கட்டுமா?”

“வேண்டாம் பா.. எனக்கு… எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு”, என்று அவன் சொல்ல அனைவரும் திகைத்தாலும் யார் முகத்திலும் கோபமோ, மகன் இப்படி செய்து விட்டானே என்ற ஆதங்கமோ உண்டாக வில்லை.

“இவ்வளவு தானா? உனக்கு பிடிச்ச பொண்ணு யாரா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் டா. கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைப்போம். யாருன்னு சொல்லு அவங்க வீட்ல பேசுவோம்”, என்று புன்னகையுடன் சொன்னார் சரவணப் பெருமாள். அவர் அப்படிச் சொன்ன பிறகு தான் அவனுக்கு பெருத்த நிம்மதி வந்தது.

காரிகை வருவாள்….

Advertisement