Advertisement

“கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? எனக்கே என்னை நினைச்சா ஆச்சர்யமா தான் இருக்கு யமுனா. நான் இப்படி எல்லாம் கிடையாது. உன் விசயத்துல நான் வேற மாதிரி இருக்குறது எனக்கே தெரியுது. உன் மேல இந்த அளவுக்கு பைத்தியமா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கலை. ஐ லவ் யு யமுனா. உன்னால என் காதலை ஏத்துக்க முடியுமா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று வெளிப்படையாகவே கேட்க அவளுக்கு தர்மசங்கடமான நிலை.

“அது வந்து… நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை. ஆனாலும் சொல்லித் தான் ஆகணும். எனக்கு வரப் போற கணவர் சாதாரணமானவரா தான் இருக்கணும். உங்களை மாதிரி இப்படி ஒரு பெரிய ஆளா இருக்க கூடாது. நீங்க ரொம்ப பெரிய உயரத்துல இருக்கீங்க?”

“அப்படின்னா என்ன சொல்ல வர யமுனா? என்னைப் பிடிக்கலையா?”

“பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்ற அளவுக்கு என் நிலைமை இல்லைன்னு சொல்ல வரேன். வாழ்க்கை ஒண்ணும் சாதாரணமானது இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய ஏற்றத்தாழ்வு இருக்கு. காலம் முழுக்க நான் உங்க வீட்ல வந்து வாழனும். அங்க என்னால எப்படி பொருந்திப் போக முடியும்?”, என்று அவள் கேட்க அவளை வியப்பாக பார்த்த பரணிக்கு சிரிப்பு கூட வந்தது. நிம்மதியாக மூச்சு விட்டான்.

அவன் காதலைச் சொல்லிக் கொண்டிருக்க அவளோ திருமணம் முடிந்து அவனுடைய வீட்டில் வந்து வாழும் அளவு யோசித்திருப்பதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கூடவே அவள் அவனை பிடிக்க வில்லை என்று ஒரு வார்த்தை கூட சொல்லாததும் அவ்வப்போது அவள் முகத்தில் தோன்றும் வெட்கமும் அவள் மனதை அவனுக்கு புரிய வைத்தது.

“நம்ம ரெண்டு பேருக்கும் இடையே ஏற்றத் தாழ்வு மட்டும் இல்லை. நிறைய பிரிவினையும் இருக்கு யமுனா. நம்ம ரெண்டு பேரும் ஒரே ஜாதி கிடையாது. அதை உங்க அப்பா அம்மா பெருசா நினைப்பாங்க. அவங்களைப் பாத்த ஒரே நாள்ல நான் அதை கண்டு பிடிச்சிட்டேன். அவங்களால என்னை உரிமையா வீட்டுக்குள்ள கூட கூப்பிட முடியலை. அவங்களுக்கு என்ன தான் நான் உதவி செஞ்சாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்காது. நான் இப்ப பேச வந்தது நம்ம குடும்பத்தை பத்தி இல்லை. நம்மளைப் பத்தி. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா? அது மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும்”

“அது…. அது எப்படி? குடும்பம் பத்தி பேசாம நம்மளைப் பத்தி பேச முடியும்? நம்மன்னா அது குடும்பமும் தானே? குடும்பம் முக்கியம் இல்லையா?”

“நம்ம குடும்பம் முக்கியம் தான். ஆனா நம்ம குடும்பம் வேற நம்ம விருப்பு வெறுப்பு வேற. இவ்வளவு நாள் உன் கிட்ட காதலைச் சொல்ல முடியமாம தவிச்சது எனக்கு தான் தெரியும். அதுவும் உன் படிப்புக்காக தான். என் கண்ணைப் பார் யமுனா. என்னோட காதல் உனக்கு தெரியலையா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்க அவன் கண்களைப் பார்த்தாள். அவன் குரலில் அவள் மனது அவன் பக்கம் மேலும் மேலும் சாய்ந்தது தான். ஆனால் அவன் உயரம்.

“சொல்லு யமுனா, உனக்கு என்னைப் பிடிக்கலையா? அதை மட்டும் சொல்லு. பிடிக்கலைன்னு சொன்னா அடுத்த நிமிசத்துல இருந்து உன் வாழ்க்கைல நான் குறுக்க வர மாட்டேன். ஆனா எனக்கு உண்மையான பதில் வேணும்”, என்று அவன் விடாப் பிடியாக கேட்க அவன் கண்களிலும் குரலிலும் இருந்த காதல் அவளை பெரிதாக அசைத்தது. பார்த்த முதல் பார்வையிலே அவள் மனதில் சலனத்தை விதைத்தவனின் மீது அன்பு பெருகி இருந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று எண்ணி அவன் கண்களில் இருந்த தவிப்பு அவளை அதிகம் பாதித்தது.

இது வரை ஊசலாடிக் கொண்டிருந்த அவள் மனதும் அவன் பக்கம் மொத்தமாக சாய்ந்தது. இப்படி பட்டவனை மறுக்க அவளால் முடியுமா என்ன?

அவள் மன மாற்றத்தை அவளின் கண்களின் வழி உணர்ந்தானோ என்னவோ “பேபி”, என்று அழைத்த படி அவள் கரம் பற்றினான். அவன் தொடுகையிலும் அவனுடைய நெகிழ்வான அழைப்பிலும் அப்படியே உருகிப் போனாள் யமுனா.

சிறிது நேரத்தில் அவன் அவளுடைய கையை விட்ட பின்னரும் அவள் கையை கீழே இறக்க வில்லை. அவள் கை அந்தரத்திலே நின்றது. அதைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் சிரிப்பில் இயல்புக்கு வந்தவள் சிறு வெட்கத்துடன் கையை மடக்கி வைத்துக் கொண்டாள். அவள் முகம் சிவந்தது.

“உன் முகமும் கண்களும் எனக்கான பதிலைச் சொன்னாலும் எனக்கு உன் பதில் வேணும். என்னை பிடிச்சிருக்கா பேபி? பிளீஸ் சொல்லு”, என்று சொல்ல அவள் பதிலே சொல்ல வில்லை. அந்த நேரத்திலும் அவனுடைய பேபி என்ற அழைப்பு அவளை கிரங்கடிக்க “அண்ணனும் தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்காங்க”, என்று எண்ணிக் கொண்டாள்.

அவன் எத்தனை முறை கேட்டாலும் அவளால் அவனிடம் காதலைச் சொல்ல முடிய வில்லை. அதே நேரம் அவனைப் பிடிக்க வில்லை என்றும் சொல்ல முடிய வில்லை. அவள் அமைதியே அவளது குழப்பத்தை அவனுக்கு தெரிவிக்க “கல்யாணத்துக்கு உங்க வீட்ல பேசட்டுமா பேபி?”, என்று கேட்டான்.

கல்யாணம் என்றதும் திக்கென்று இருந்தாலும் “நீங்க கல்யாணம் இப்ப வேண்டாம்னு சொன்னீங்க? இது அதுக்கான வயசு இல்லைன்னு சொன்னீங்களே?”, என்று கேட்டாள்.

“எனக்கு கல்யாணம் இப்ப வேண்டாம் தான். ஆனா நீ எனக்கு தான்னு ஒரு முடிவு வேணும். உங்க வீட்ல சரின்னு சொல்லிட்டா எத்தனை வருஷம் ஆனாலும் காத்துட்டு இருப்பேன். சரின்னு சொல்லலைன்னாலும் அப்படி தான் இருப்பேன். எவ்வளவு நாள் கல்யாணம் பண்ணாம இருக்க முடியும்னு நீ கேக்கலாம். ஆனா சத்தியமா உன் இடத்துல வேற ஒரு பொண்ணை என்னால வச்சு பாக்க முடியாதுன்னு மட்டும் தெளிவா தெரியுது. உங்க அம்மா அப்பா கிட்ட பேசட்டுமா?”

“பேசணும் தான். ஆனா அவங்க ஒத்துக்க மாட்டாங்க”

“ஏன் டி பேசுறதுக்கு முன்னாடியே அப்படிச் சொல்ற?”, என்று அவன்  உரிமையாக கோபப் பட அவன் கோபம் கூட அவளுக்கு தித்தித்தது. அதுவும் அவனுடைய உரிமையான அழைப்பு அவள் மனதைக் கவர்ந்தது. இனி வேறு ஒருவன் வந்து அவளை உரிமையாக டி என்று அழைக்க முடியுமா? அந்த அழைப்பை தான் அவள் ரசிப்பாளா?

பரணியைத் தவிர வேறு ஒரு ஆண்மகனின் மூச்சுக் காற்றை அவளால் அருகில் இருந்து சுவாசிக்க முடியுமா? முடியாதே என்று அந்த நொடி உணர்ந்து கொண்டாள். இனி அவன் இல்லாமல் அவள் இல்லை என்று அவள் உணர்ந்த தருணம் அது தான். ஆனால் அதை அவள் வெளியே சொல்ல வில்லை.

“அம்மா அப்பா ஜாதி பாப்பாங்க. அது மட்டும் இல்லை. உங்க அப்பா…..”, என்று தடுமாறினாள். அவள் மனக் குழப்பம் வார்த்தையாக வெளியே வந்தது. அதை அவன் தெளிய வைத்துக் கொண்டிருந்தான்.

“எங்க அப்பா அரசியல்வாதி. அதனால உங்க வீட்ல வேண்டாம்னு சொல்லுவாங்கன்னு சொல்லுறியா?”

“ஆமா”

“உங்க அம்மா அப்பா அப்படி நினைப்பாங்க தான். ஆனா நீ சொல்லு. ஜாதி, அரசியல் இதையெல்லாம் நீ பெருசா எடுக்குறியா?”

“இல்லை”

“அப்புறம் என்ன? விடு, மத்தது எல்லாம் நான் பாத்துக்குறேன். நாளைக்கே உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன்”

“முதல்ல அண்ணா கிட்ட பேசுங்களேன்”, என்று அவள் கேட்க “சரி பேசுறேன்”, என்று ஒத்துக் கொண்டான்.

“உங்க வீட்ல சம்மதிப்பாங்களா?”, என்று அவள் கலக்கத்துடன் கேட்க அவள் அவளுடைய காதலைச் சொல்லாமலே அவள் காதல் அவனுக்கு தெளிவாக புரிந்தது.

அவளுக்கு நிம்மதியைக் கொடுக்க “இது வரை என் விருப்பத்துக்கு மாறா அவங்க எதுவும் செஞ்சது இல்லை”, என்றான் பரணி.

“அது மத்த விசயத்துல சரி தான். ஆனா இது…. முதல்ல உங்க வீட்ல பேசிட்டு எங்க வீட்ல பேசுங்களேன். அவங்களும் மறுத்து இவங்களும் மறுத்தா…. என்ன செய்யுறது?”

“கவலைப் படாதே பேபி. எல்லார்க் கிட்டயும் பெர்மிசன் வாங்கி உன்னைத் தூக்கிட்டு போறேன்”, என்று சிரித்தான். அவளும் வெட்கத்துடன் புன்னகைத்தாள். இது ஒரு வழிப் பாதை என்று இருவருக்குமே புரிந்தது.

அவள் காதலைச் சொல்ல வில்லை தான். ஆனாலும் யமுனா பரணியின் காதலி தான் என்று அவன் உணர்ந்து கொண்டான். உடனே காரை எடுத்தவன் அவளை வீட்டருகே இறக்கி விட்டுவிட்டு சென்றான். அவளிடம் நிறைய பேச வேண்டும், உரிமையுடன் பாஜக வேண்டும், குறைந்தது ஒரு முத்தமாவது கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தான். ஆனால் அவள் அமைதியும் பயமும் அவனைக் கட்டிப் போட்டது.

அவளை இறக்கி விட்டுவிட்டு தன்னுடைய போனை எடுத்தவன் அழைத்தது வினோத்தை தான்.

“சார் சொல்லுங்க”

“எங்க இருக்கீங்க வினோத்?”

“நம்ம ஜூவல்லரி ஷாப்ல சார்”

“அங்கயே இருங்க, வரேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

“சரி சார்”, என்று சொல்லி போனை வைத்தவன் என்னவா இருக்கும் என்று குழம்பினான்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பரணியை மற்ற ஊழியர்கள் வரவேற்க அவர்கள் வரவேற்பை வாங்கிக் கொண்டு அவனுடைய அறைக்குள் சென்று அமர்ந்தான் வினோத்துடன்.

ஜூஸ் சொல்லட்டுமா சார்?”

“வேண்டாம் வினோத், கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க சார்”

“சொன்னா எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலையே”

“நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களை தப்பா நினைக்க மாட்டேன் சார். நீங்க என்னோட சாமி மாதிரி”

“சாமி எல்லாம் இல்லை வினோத், நானே உங்க கிட்ட வரம் கேட்டு வந்துருக்கேன். நீங்க தான் எனக்கு உதவனும்”

“சார் நானா? என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா செய்வேன் சார்”

“என்னைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“நான் கணிக்க முடியாத உயரத்தில் இருக்குறவர் சார் நீங்க? ரொம்ப நல்லவங்க… எங்களுக்கு செஞ்ச உதவியை மட்டும் வச்சி சொல்லலை சார். பொதுவாவே உங்களுக்கு உதவி செய்யுற குணம் அதிகம் சார். என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்?”

“அப்படின்னா என்னை நல்லவன்னு சொல்றீங்களா?”

“கண்டிப்பா சார், அதுல எந்த சந்தேகமும் இல்லை”

“அப்படின்னா… எனக்கு…. இந்த நல்லவனுக்கு உங்க தங்கச்சியைக் கொடுக்குறீங்களா?”, என்று பட்டென்று கேட்க வினோத்தோ கண்கள் தெறித்து விடும் அளவுக்கு அதிர்ச்சியாக அமர்ந்திருந்தான்.

Advertisement