Advertisement

அத்தியாயம் 10 

உந்தன் ஒற்றைப்

பார்வையில் ஆயிரம்

அர்த்தங்கள் உணர்கிறேன்!!!

பேச வேண்டும் என்று வந்த பரணியும் சரி, அவன் என்ன பேசப் போகிறானோ என்ற பயத்தில் இருந்த யமுனாவும் சரி எதையுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள். வெகு நேரம் காருக்குள் மௌனமே ஆட்சி செய்தது. காருக்குள் இருந்த ஏ.சியின் குளிரால் கூட அவர்களின் மனதில் இருக்கும் வெக்கையைத் தணிக்க முடிய வில்லை. அப்படி ஒரு ஆழ்ந்த அமைதி. இருவரும் மூச்சு விடும் ஓசையைத் தவிர அங்கு வேறு எந்த சத்தமும் இல்லை.

இதற்கு மேல் அவளிடம் காதலைச் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் தான் தைரியத்துடன் வந்து விட்டான். ஆனாலும் அவனுக்கு எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று தயக்கமாக இருந்தது. முன்பு ஒரு நாள் அவள் கண்களில் சலனத்தைக் கண்டான் தான். ஏதோ ஒரு உணர்வில் அவன் மார்பிலும் அவள் சாய்ந்து விட்டாள். ஆனால் அதை வைத்து அவளும் அவனைக் காதலிக்கிறாள் என்று அவன் எப்படி நம்புவது.

அவன் அவளை விரும்புவது இருநூறு சதவீதம் உண்மை. அவள் இல்லாமல் அவன் இல்லை என்று அவன் உணர்ந்து எவ்வளவோ நாள் ஆயிற்று. யாருக்காகவும் அவளை அவனால் விட்டுக் கொடுக்க முடியாது. அதே நேரம் அவள் அவனைக் காதலிக்கவில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வதாம்?

அவள் மறுத்தால் அவன் கட்டாயம் விலகித் தான் செல்ல வேண்டும். அவளைக் கட்டாயப் படுத்த முடியாது. அவளை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் அவனால் விலகி இருக்க முடியுமா? கடந்த ஒரு மாதமாக கல்லூரி முடிந்ததால் வீட்டுக்குள் சென்று அடைந்தவளைப் பார்ப்பதற்குள் அவன் ஒரு வழி ஆகிப் போனது அவனுக்கு தானே தெரியும்?

மிகப் பெரிய கோடீஸ்வரன் பரணி. அவன் திருமணத்துக்கு சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் பல கோடீஸ்வரர்கள் தங்கள் பெண்ணைக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்படிப் பட்டவன் தான் யமுனா காதலை மறுத்து விடுவாளோ என்று நடுக்கத்துடன் பேச்சு வராமல் அமர்ந்திருந்தான்.

அவளது கண்ணீரையும் வெட்கத்தையும் கண்டு விட்டு அவன் பேச வந்து விட்டான் தான். ஆனால் அந்த கண்ணீரும் வெட்கமும் பரணிக்கானதா என்று தெரியாதே?

“சாரி சார், நான் உங்களை அப்படி நினைக்கலை?”, என்று அவள் சொல்லி விட்டால் அவன் வாழ்வு என்ன ஆகும்? நிச்சயம் அவனால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது. யமுனாவை மறக்க ஒரு சதவீதம் கூட அவனால் முடியாது. அவள் மறுத்தால் அடுத்து தன் நிலை என்ன என்பதே அவனுக்கு பூதாகரமாக இருந்தது. அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் அவள் அல்லவா? தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதெல்லாம் இந்த நிமிடம் அவனுக்கு நினைவே இல்லை. அவனுடைய அத்தனை வெற்றிகளையும் இந்த காதல் மிக மிக சிறுமைப் படுத்தி விட்டது.

அவன் யோசிப்பதையும், அவன் கண்கள் சுழலுவதையும், அவன் புருவங்கள் ஏறி இறங்குவதையும் யமுனா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் தவிப்பு அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.

அன்று அவன் மார்பில் சாய வேண்டும் என்ற ஆசை வந்த போது தவித்தாளே, அதே தவிப்பை இப்போது பரணியிடம் கண்டாள் யமுனா.

“கடவுளே நான் இப்ப என்ன செய்வேன்? என் குடும்பத்தோட மொத்த சந்தோசத்தையும் மீட்டுக் கொடுத்தது இவர் தான். ஆனால் இப்போது எனக்காக இவர் தவிக்கிறாரே? ஆனால் என்னால என்ன செய்ய முடியும்? நான் சரின்னு சொன்னா கூட அம்மா அப்பா சம்மதிக்க மாட்டாங்களே? இவங்க குடும்பத்து கூட நட்பையே வளக்க கூடாதுன்னு சொல்ற அம்மா அப்பா கல்யாணம் பண்ண சம்மதிப்பாங்களா? ஆனா இவரோட காதலை மறுக்குறது எவ்வளவு பெரிய பாவம். என்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்துட்டியே? அதுவும் இவர் கலங்குறதை என்னால பாக்க முடியலையே?”, என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் அவள் மனசாட்சியோ “என்ன ஓவரா யோசிக்கிற? இப்ப அவன் காதலைச் சொல்ல தான் வந்துருக்கான்னு நீ எப்படி நினைக்கிற? இவ்வளவு நாள் அவன் உன்னை பாலோ பண்ணினான்னு நினைக்கிற? அவன் உண்மையிலே வேற யாரையும் பாக்க வந்திருக்கலாம் தானே? அவ்வளவு பெரிய ஆள் உன்னை லவ் பண்ணுவானா? அவன் காதல் கிடைக்கணும்னு நினைக்கிற, இதுல கல்யாணம் வரைக்கும் போயிட்ட? இதெல்லாம் உனக்கு பேராசையா தெரியலை?”, என்று கேள்வி கேட்டது. ஆனால் அதற்கு அவள் என்ன பதில் சொல்வாளாம்?

அவன் அமைதி அவளை இன்னும் கொல்லத் தான் செய்யும் என்பதால் “பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க? என்ன விஷயம்? சொல்லுங்க”, என்று பேச்சை ஆரம்பித்தாள்.

“யமுனா… நான்… இப்ப சொல்லப் போற விஷயம்… அதை நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை….”, என்று தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் எதுவும் பேச மாட்டாள் என்று புரிந்து “என்னை நீ தப்பா எடுக்க மாட்ட தானே?”, என்று கேட்டான்.

மாட்டேன் என்னும் விதமாய் தலையசைத்தாள். “நான் உங்க குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணதுல நிஜமாவே எந்த உள்நோக்கமும் இல்லைன்னு நீ நம்புறியா?”, என்று கேட்டான்.

“நான் உங்களை நம்புறேன்”, என்று சொன்ன யமுனா “எங்க வீட்ல உள்ளவங்க நம்ப மாட்டாங்களே? நீங்க செஞ்ச உதவியைக் கூட இனி தப்பா தானே பேசுவாங்க”, என்று எண்ணிக் கொண்டாள்.

“அன்னைக்கு நிஜமாவே நிஷா சொன்னதும் உனக்கு உதவணும்னு எண்ணத்துல தான் பார்க்க்கு வந்தேன். ஆனா அங்க உன்னைப் பாத்ததும்… என்னால… என் மனசுல… நான்…”, என்று தடுமாறி தலையைக் கோதிக் கொண்டவனை அந்த நிமிடம் அப்படி ரசித்தாள்.

தன்னவன் வெட்கப் படும் அழகு அவள் மனதை கொள்ளை கொண்டது. இந்த தருணம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் திரும்பி வராதே? அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையில் இருந்த ஆர்வத்தில் அவனுக்கு கொஞ்சம் தைரியம் கூடியது. அவள் முகத்தில் கோபமோ வெறுப்போ இருந்திருந்தால் அடுத்து பேச யோசித்திருப்பான்? ஆனால் அவள் கண்கள் அவனை ரசித்துக் கொண்டிருக்க அதற்கு மேல் அவன் ஏன் தயங்கப் போகிறானாம்?

“அன்னைக்கு உன்னைப் பாத்ததும் நான் சத்தியமா விழுந்துட்டேன் யமுனா. உன் மேல இருந்து என்னால பார்வையை எடுக்கவே முடியலை. அப்ப உன்னோட அழகு என்னை ரொம்பவே பாதிச்சது. இது வரைக்கும் எந்த பொண்ணைப் பாத்தும் நான் அப்படி திகைச்சு நின்னதே இல்லை. உன்னை வேற யாரோவா என்னால நினைக்கவே முடியலை யமுனா. நீ எனக்கானவன்னு அந்த நிமிசமே நான் புரிஞ்சிக்கிட்டேன். ஆமா யமுனா நான் உன்னை விரும்புறேன்”, என்று சொல்லி முடித்தவன் அவளையே பார்த்தான்.

அப்போது அவன் பார்வையைத் தாங்க முடியாமல் தலை குனிந்தாள். ஆனால் எதுவுமே பேச வில்லை.

“பிளீஸ் ஏதாவது சொல்லு யமுனா, உன் மனசுல என்ன இருக்கு? நான் இருக்கேனா? என்னை விரும்புறியா? அது கூட வேண்டாம். என்னை உனக்கு பிடிச்சிருக்கா? பிளீஸ் சொல்லு. நாம கல்யாணம் கூட உடனே பண்ணிக்க வேண்டாம். ரெண்டு பேருக்கும் அதுக்கான வயசு இல்லை. ஆனா உன் மனசுல எனக்கு இடம் இருக்கான்னு மட்டும் தெரியணும். அது தெரிஞ்சா எத்தனை வருஷம் ஆனாலும் நான் நிம்மதியா இருப்பேன்”, என்று கேட்டான்.

அவளோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவளுக்கு பிடித்தவன் அவளிடம் கெஞ்சுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த நேரத்திலும் அவன் நீ எதுக்கு அன்னைக்கு என்னைக் கட்டிப் பிடிச்ச என்று கேள்வி கேட்காதது அவனது கண்ணியத்தை காட்டியது. இப்படிப் பட்டவனை எப்படி இழக்கவாம்? ஆனால் அவள் நிலை. உண்மை நிலையை பேசுவது தான் சரி என்று தோன்றியது.

“சொல்லு யமுனா, உன் மனசுல என்ன இருந்தாலும் அதைச் சொல்லிரு. பிடிக்கலைன்னா கூட சொல்லிரு. நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன். ஆனா….நீ மறுத்தா…. என் வாழ்க்கை…  அதை விடு. நீ சொல்லு யமுனா”

“வந்து…. வந்து… நீங்க சொல்றது எனக்கு அதிர்ச்சியா இல்லை. இன்னும் சொல்லப் போனா நான் இதை எதிர் பாத்தேன்”, என்று தயக்கத்துடன் அவள் சொல்ல அவன் கண்களில் சிறு ஆர்வம் எழுந்தது.

“என்ன? என்ன சொல்ற நீ? என் மனசுல உள்ளது உனக்கு எப்படி தெரியும்?”

“தெரியும். ஒரு ஆண் எப்படி நம்மளை பாக்குறாங்கன்னு பொண்ணுங்களுக்கு தெரியாம இருக்காது. உங்க பார்வைலே உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குனு எனக்கு தெரிய வச்சது. இவ்வளவு நாள் நீங்க என்னைப் பாலோ பண்ணது கூட எனக்கு தெரியும்?”

“என்னது? அதுவும் தெரியுமா?”

“ஆமா, என்னைப் பாக்க எனக்காக தான் நீங்க வறீங்கன்னு ரெண்டாவது நாளே எனக்கு தெரிஞ்சது. உங்க மனசுல நான் இருக்கேன்னு அன்னைக்கு ஹோட்டல்ல வச்சே கண்டு பிடிச்சிட்டேன்”

“அங்க வச்சா? அங்க எப்படி? அன்னைக்கு நான் உன்னை சைட் அடிச்சேன் தான்? ஆனா என் காதலை எப்படி கண்டு பிடிச்ச?”

“கிளம்பும் போது நீங்க என்ன செஞ்சீங்க?”, என்று கேட்டவளால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியலை.

“ஹா ஹா, நீ பாத்துட்டியா?”, என்று சிரித்த படி கேட்டாலும் அவன் முகம் சிறிது சிவந்து தான் போனது. அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனது வெட்கத்தை பார்க்கும் வாய்பு வந்தது.

அவளை சிறு சிரிப்புடன் ஏறிட்டவன் கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி “உந்தன் இதழ் தீண்டும் வரம் இல்லாமல்

போனாலும் நீ சுவைத்த பனிக்கூழையாவது

சுவைக்கும் பாக்கியம் எந்தன் இதழுக்கு

கிடைத்தது வரம் அல்லவா?!!!!”, என்று கவிதையாக சொல்ல அவள் உடல் மொத்தமும் வெட்கத்தால் சிவந்தது. இவன் இப்படி எல்லாம் பேசுவானா என்று வியப்பாக இருந்தது அவளுக்கு.

Advertisement