Advertisement

ஆனாலும் பரணி நெருங்கி வருவதைக் கவனித்து “ஆமா, சார் கிட்ட வந்துட்டாங்க. ஆனா இந்த யமுனாவை இன்னும் காணுமே?”, என்று பரபரப்பானான்.

“யு இடியட்,  நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா?”, என்று அந்த அறையே அதிரும் படி கத்திய பரணியைப் பார்த்து பயத்தில் முகுந்தன் பின்னால் நன்றாகவே ஒளிந்தாள் சாரு.

அடுத்து அவன் கத்த ஆரம்பிக்கும் போது “எக்ஸ்கியூஸ் மீ, இங்க என்ன சத்தம்?”, என்ற குயில் போன்ற குரல் கேட்க விறைத்து இருந்த பரணியின் தேகம் அப்படியே தளர்ந்தது. அவனது கோப முகம் அப்படியே சாந்தமானது. ஆவலாக குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான். பார்த்தவனின் கண்கள் அந்த பக்கம் இந்த பக்கம் நகரவே இல்லை.

அவன் பார்வை ரோஜா வண்ணக் காட்டன் புடவையை நேர்த்தியாக கட்டி, இடையை தாண்டிய கூந்தலை பின்னல் போட்டு அழகு சுந்தரியாக நடந்து வந்து கொண்டிருந்த யமுனா மேல் நிலைத்தது. ஒரு நொடி கூட அவன் கண் சிமிட்ட வில்லை. இது வரை இருந்த கோபமும் அவனுக்கு இப்போது இல்லை. அவன் பார்வையில் ஒரு நொடி தடுமாறியவள் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அவர்களை நெருங்கினாள். ஆனால் அவள் பரணியை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. பார்த்தால் தானும் அவனைப் போல சிலையாகி விடுவோம் என்ற உண்மை தான் அவளுக்கு தெரியுமே?

“குட் மார்னிங் யமுனா மேடம்“, என்று முகுந்தன் சொல்ல “குட் மார்னிங் ஆல் ஆப் யு. ஆமா இங்க என்ன டென்ஷன்?”, என்று கேட்டாள். அவள் பார்வை முகுந்தன் மற்றும் சாருவிடமே இருந்தது. பரணி புறம் திரும்பவே இல்லை. அவனோ அவளைத் தவிர வேறு எதையுமே பார்க்க வில்லை. கண்களை சிமிட்டக் கூட பயந்தான்.

“நான் ஒரு மிஸ்டெக் பண்ணிட்டேன் மேம். அதான் சார் ரொம்ப கோபமா இருக்காங்க”, என்று சாரு பயத்துடன் சொல்ல இதற்கு தான் என்ன செய்ய என்னும் விதமாய் முகுந்தனைப் பார்த்தாள் யமுனா. அவனோ பொறுமையாக இருக்கும் படி கண்ணைக் காட்டினான்.

அவன் நினைத்தது உண்மையே என்பது போல “இட்ஸ் ஓகே சாரு. வேலைல தப்பு நடக்குறது எல்லாம் சாதாரண விஷயம் தான். வரவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டா பிரச்சனை முடிஞ்சிரும்”, என்று சாந்த சொரூபியாக சாருவை சமாதான படுத்தியது பரணியே தான்.

அவன் பேச்சைக் கேட்டு சாரு ஆவென்று வாயைப் பிளந்து அவனைப் பார்க்க “அதான் சார் சொல்லிட்டாங்களே? மன்னிப்பு கேட்டு ஷெட்யூல் மாத்துங்க சாரு”, என்றான் முகுந்தன்.

“சரி சார்”, என்று சாரு சொல்ல “அப்புறம் என்ன? பிராப்ளம் முடிஞ்சிருச்சு. எல்லாரும் போய் வேலையைப் பாருங்க”, என்று சாதாரணமாக சொல்லி விட்டு யமுனாவை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு முகுந்தனையும் அவனை ஒட்டிக் கொண்டு நின்ற சாருவையும் பார்த்து விட்டே தனதறைக்குச் சென்றான் பரணி.

அவன் சென்றதும் ஊப் என்று மூச்சு விட்டுக் கொண்டார்கள் மூவரும். அதே செய்கையை தான் அறைக்குள் சென்றதும் பரணியும் செய்தான். அதற்கு மேல் வெளியே நின்றால் தன்னுடைய நிலை இன்னும் மோசமாகி விடும் என்று அவன் உணர்ந்தே இருந்தான்.

பரணி உள்ளே சென்றதும் “சாரு, என்ன பிரச்சனை?”, என்று யமுனா கேட்க சாரு பிரச்சனையை விளக்கினாள்.

அதைக் கேட்டு ஒரு நொடி யோசித்த யமுனா “முதல்ல விநாயக் கம்பெனிக்கு அப்பாயின்மெண்ட் கொடுங்க. ஏன்னா அந்த கம்பெனி எம்.டிக்கு சின்ன வயசு. அவனுக்கு பொறுமை இருக்காது. ஆனா எஸ்.கே சார் பெரியவர், கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுவார்”, என்று சொல்ல “சரி மேடம்”, என்றாள் சாரு.

பின் முகுந்தன் புறம் திரும்பிய யமுனா “என்ன அண்ணா, நான் வந்த வேலை முடிஞ்சிருச்சா? நான் இப்ப போகலாமா?”, என்று கேட்டாள்.

“தேங்க்ஸ் யமுனா, நீ போ மா”, என்று முகுந்தன் சொல்ல சிறு சிரிப்புடன் அங்கிருந்து சென்றாள் யமுனா. போகும் முன் அவளது கண்கள் பரணியின் அறையை ஒரு நொடி திரும்பிப் பார்த்து விட்டே சென்றது.

இவ்வளவு நேரம் நடந்த விஷயத்தில் சாரு இன்னும் திகைத்த படியே இருக்க “ஹலோ மேடம், எல்லாம் ஓகே வா?”, என்று கேட்டான் முகுந்தன்.

“எப்படி சார்? என்னால இன்னும் நம்பவே முடியலை. சார் வந்த வேகத்துக்கு அவர் கோபத்துக்கு நாலு வாங்கிருப்பேன்னே நினைச்சேன். ஆனா ஒரு செகண்ட்ல ஒண்ணுமே இல்லாம போய்ருச்சு. சார் புத்தர் மாதிரி சமாதானமா போறாங்க? எனக்கே ஆறுதல் சொல்றாங்க?”, என்று வியப்பாக கேட்டாள்.

“எம். டி சார் புத்தர்னா அவரோட போதிமரம் யமுனா தான். மத்த கதை எல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப வேலையைப் பாருங்க. சீக்கிரம் போய் மீட்டிங் ஹால்ல எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க”

“சரி சார், ஆனா அவங்க விஷயம் தெரிஞ்சிக்கலைன்னா என் மண்டையே வெடிச்சிரும் சார்”

“சரி நைட் என்னோட நம்பருக்கு கால் பண்ணுங்க. நான் எல்லாம் சொல்றேன். இப்ப எனக்கு கோர்ட்ல வேலை இருக்கு. எம் டி கேட்டா சொல்லிருங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

இன்னும் திகைப்பு மாறாமலே தன்னுடைய சீட்டுக்குச் சென்றாள் சாரு. அவள் இங்கே வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இது வரை பரணியின் சின்ன சின்ன கோப முகத்தை பல முறை பார்த்திருக்கிறாள். ஆனால் அதெல்லாம் மற்றவர்களிடம் தான். அவளும் இது வரை எந்த தவறும் செய்ய வில்லை. அவன் கோபத்தையும் அனுபவித்ததில்லை.

என்ன தான் பரணியின் கோபத்தை முகுந்தன் போக்கி விட்டாலும் எல்லாம் தவறும் தன்னுடையது தான் என்று குற்ற உணர்ச்சி எழ திட்டினாலும் பரவாயில்லை, சாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவள் எண்ணும் போதே அங்கே விநாயக் கம்பெனி எம். டி வந்தார். அவரை காத்திருக்க சொல்லி விட்டு உடனடியாக பரணியின் அறைக் கதவை தட்டினாள். கனவுலகத்தில் இருந்த பரணி திடுக்கிட்டு “யெஸ் கம்மின்”, என்று கம்பீரமாக சொன்னான்.

பயத்துடன் உள்ளே வந்த சாருவைப் பார்த்து சிரிப்பு கூட வந்தது அவனுக்கு. அவன் அருகே வந்து நடுக்கத்துடன் நின்றவள் அவனைப் பார்த்தாள். “என்ன?”, என்னும் விதமாய் அழகாய் புருவத்தை உயர்த்தினான்.

“விநாயக் கம்பெனி எம்.டி வந்துட்டாங்க சார். மீட்டிங் ஹால்ல உக்கார வச்சிருக்கேன்”

“குட், நான் பாத்துக்குறேன். வாங்க”, என்று சொல்லி மீட்டிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

பாதி மீட்டிங்கில் இருக்கும் போதே சாருவுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் வந்தது. எஸ்.கேயும் வந்து விட்டார் என்று தெரிந்து பரணியின் காதில் முணுமுணுத்து விட்டு வெளியே வந்தாள்.

ஐம்பது வயது மதிக்கத் தக்க முதியவர் அங்கே காத்திருக்க அவரை நெருங்கியவள் மிக மிக தாழ்மையாக சற்று காத்திருக்குமாறு சொன்னாள்.

“இதுக்கு எதுக்கு இவ்வளவு கெஞ்சிக் கேக்குற மா? பரணி சாரை வெயிட் பண்ணி பாக்குறதுல நான் ஒண்ணும் குறைஞ்சிற மாட்டேன். நான் வெயிட் பண்ணுறேன்”, என்று சொல்ல அவரை நன்றியுடன் நோக்கியவள் “ரொம்ப தேங்க்ஸ் சார். நான் வேலைக்கு புதுசு. தெரியாம தப்பு பண்ணிட்டேன். ஆக்ஸ்வலா நீங்க தான் இப்ப சார் கூட மீட்டிங்ல இருந்துருக்கணும். எல்லாம் என்னால தான். என்னை மன்னிச்சிருங்க”, என்று நேரடியாகவே மன்னிப்பு கேட்டாள். அவர் இவ்வளவு தாழ்மையாக பேசும் போது அவரிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் இழுக்கு இல்லையே.

“வேலைல இதெல்லாம் சகஜம் தான் மா. நீ பண்ணுற ஒவ்வொரு தப்பும் உனக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கும். நான் இங்க பொறுமையா வெயிட் பண்ணுறேன். நீ உன் வேலையைப் பாரு”, என்று சொல்ல அந்த பொறுமை என்ற வார்த்தை யமுனாவை நினைவு படுத்தியது. அவள் எப்படி இவர் இப்படி தான் என்று கணித்தாள் என்று வியந்த படி உள்ளே சென்றாள். யமுனாவிடம் ஏதோ ஸ்பெஷல் பவர் இருப்பது போலவே அவளுக்கு தோன்றியது.

சிறிது நேரத்தில் முதல் மீட்டிங் முடிந்து இரண்டாவது மீட்டிங்கும் முடிந்த பின்னர் அவனது அறைக்குள் சென்று அமர்ந்தான் பரணி. அவனுக்கு வெளி வேலைகள் இருக்கிறது தான். ஆனால் யமுனாவைப் பார்த்ததாலோ என்னவோ? அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடிய வில்லை. அப்போது அறைக் கதவை தட்டி விட்டு அவன் அனுமதி கொடுத்ததும் உள்ளே வந்தாள் சாரு. இப்போது அவன் முகத்தில் கோபம் இல்லை தான். ஆனாலும் அவளுக்கு பதட்டமாக இருந்தது.

“என்ன?”, என்னும் விதமாய் அவளைப் பார்த்தான். “நான் பண்ணினது பெரிய தப்பு சார். பிளீஸ் என்னை பனிஷ் பண்ணிருங்க. இனி இப்படி நடக்காது. இப்ப பண்ணினதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க சார்”, என்றாள்.

“தண்டனை தானே? கொடுத்துருவோம். அதுக்கு முன்னாடி முகுந்தன் எங்க?”, என்று கேட்டான்.

“முகுந்தன் சார் கோர்ட்க்கு கிளம்பிட்டாங்க”

“ஆடிட்டர் மேடம் எங்க?”

“யமுனா மேடம் அவங்க சீட்டுக்கு போயிட்டாங்க சார்”

“ஓ”, என்று சொன்னவன் அமைதியாக இருக்க “சார் பணிஷ்மெண்ட்”, என்று கேட்டாள் சாரு.

“என்ன பணிஸ்மெண்ட் கொடுக்கலாம்? அதுக்கு முன்னாடி காலைல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. ஆடிட்டர் மேடம் கீழேயே வர மாட்டாங்களே? இப்ப எப்படி கரெக்டா வந்தாங்க?”

“அது.. அது வந்து சார்…”, என்று ஆரம்பித்தவள் முகுந்தன் வந்ததை அவன் யமுனாவை அழைத்ததை என எல்லாவற்றையும் சொன்னாள்.

அனைத்தையும் கேட்டவனுக்கு முகுந்தன் சாருவைக் காப்பாற்றியது வித்தியாசமாக பட்டது. ஒரு நொடியின் நண்பன் மனதில் இருக்கும் ஈர்ப்பை கண்டு கொண்டவன் அமைதியாக இருந்தான்.

காரிகை வருவாள்….

Advertisement