Advertisement

பரணி குருப் ஆப் கம்பெனிஸின் மெயின் அலுவலகம் மதுரையின் முக்கியமான இடத்தில் மிக கம்பீரமாக வீற்றிருந்தது. ‘பரணிதரன் எம். டி’ என்ற பெயர் பலகை போட்ட அறையின் வாசலில் கைகளைப் பிசைந்த படி நின்று கொண்டிருந்தாள் பரணியின் பி.ஏ சாரு. பதட்டத்துடன் நகத்தைக் கடிப்பதும் கைக் கடிகாரத்தில் மணியைப் பார்ப்பதும் பின் வாசலைப் பார்ப்பதுமாக இருந்தவளை ரசனையாக பார்த்த படி அவள் அருகே வந்தான் முகுந்தன்.

முகுந்தன் ஒரு லாயர். அது மட்டும் அல்ல, பரணி குருப் ஆப் கம்பெனிஸின் லீகல் அட்வைசர் அவன் தான். பரணியின் உயிர் நண்பனும் கூட. இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். முதலாளியின் நண்பன் என்பதால் அந்த அலுவலகத்தில் அவனுக்கு மரியாதையும் உண்டு. ஆனால் அதிக சலுகையை எடுக்க மாட்டான். ஆபீஸ் நேரத்தில் பரணி அவனுக்கு முதலாளி மட்டுமே.

எல்லாரிடமும் கலகலப்பாக பேசுபவன். தாய் தந்தைக்கு ஒரே மகன். அவனுக்கும் தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பரணியைப் போல இவனுக்கு வேறு எண்ணங்கள் எதுவும் கிடையாது. அவன் ஜாதகத்தில் செவ்வாதோஷம் இருப்பதால் சரியான வரன் அமைய வில்லை. ஆனால் அவனுக்கு சாருவின் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அது காதலா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. அவள் இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. அன்றில் இருந்து சற்று ஆர்வமாகவே அவளிடம் பேசுவான்.

பதட்டத்துடன் நின்ற சாருவின் அருகில் வந்து “ஹாய் சாரு”, என்று அவன் சொல்ல அவளிடம் எந்த எதிர் வினையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் பேசியதையும் அவனையும் அவள் கவனிக்கவே இல்லை என்பது தான் உண்மை.

எப்போதும் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து “வணக்கம் முகுந்தன் சார்”, என்று சொல்லும் அவள் இன்று இப்படி இருக்கவும் அவன் வியப்பு மேலும் கூடியது.

அவள் கையைத் தட்டி “ஹலோ பி.ஏ மேடம். எப்பவும் தவ்ஸண்ட் வாட்ஸ் பல்ப் மாதிரி இருப்பீங்க? இன்னைக்கு முகமே சரி இல்லையே? என்னைக் கூட கவனிக்கலை. என்ன ஆச்சு?”, என்று அவன் மீண்டும் கேட்ட பிறகு தான் அவள் அவனைக் கவனித்தாள்.

“மணி ஒன்பது ஆகப் போகுது முகுந்தன் சார், அதான்”, என்று பதட்டத்துடன் சொன்னாள் சாரு.

“டோன்ட் கால் மீ சார்”, என்று அவன் சட்டென்று சொல்ல “இப்ப இது ரொம்ப முக்கியம்”, என்று அவள் வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள்.

இப்போது விளையாட்டைக் கை விட்டவனாக “என்னன்னு சொல்லுங்க சாரு. காலைலே இவ்வளவு டென்ஷன் எதுக்கு? ஏதாவது சொன்னீங்கன்னா நான் சொலுசன் சொல்லுவேன்ல?”, என்று கேட்டான்.

“ஒன்பது மணி ஆகப் போகுது சார்”, என்று மீண்டும் பதட்டத்துடன் சொன்னாள்.

“யார் இல்லைன்னு சொன்னா? நேரம் ஓடத் தான் செய்யும்? ஒன்பது மணிக்கும் உங்க டென்சனுக்கும் என்ன சம்பந்தம்?”

“எம். டி வர நேரம் ஆச்சு முகுந்தன்”

“ஆமா, சார் இப்ப வந்துருவாங்க. அதுக்கு என்ன?”

“அதான் பதட்டமா இருக்கேன்”

“இப்படிச் சொன்னா எப்படி? என்னன்னு தெளிவா சொல்லுங்க சாரு”

“ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் முகுந்தன்”

“என்ன பண்ணுனீங்க?”

“எஸ்.கே காட்டன் மில் ஓனர், அப்புறம் விநாயக் மார்பில்ஸ் ஓனர் ரெண்டு பேருக்கும் தெரியாம ஒரே நேரத்துல பரணி சார் கூட அப்பாயின்மேண்ட் பிக்ஸ் பண்ணிட்டேன். எப்படி அப்படி பண்ணினேன்னு எனக்கே தெரியலை. இப்ப காலைல வந்து பரணி சார் ஷெட்யூல் பாத்த அப்புறம் தான் என் தப்பே எனக்கு புரிஞ்சது. பத்து மணிக்கு ரெண்டு பேருமே வந்துருவாங்க. யாரை வெயிட் பண்ணச் சொன்னாலும் பிரச்சனை தான். அது கூட பரவால்ல. பரணி சார் இன்னைக்கு ஒருத்தரை தான் மீட் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் அவங்க வெளிய போகணும்னு சொல்லிருந்தாங்க. நான் சார்க்கு இன்னைக்கு ஷெட்யூல் மெஸ்ஸேஜ் அனுப்பி வச்ச அப்புறம் தான் எனக்கே என் தப்பு புரிஞ்சது. சார் மெஸ்ஸேஜ் பாத்துட்டாங்க. ஆனா கால் பண்ணலை. எனக்கு பண்ணி கேக்கவும் பயமா இருக்கு. கண்டிப்பா இப்ப கோபமா வருவாங்க. எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. சாருக்கு வேலைல தப்பு பண்ணா பயங்கரமா கோபம் வரும்னு தெரியும். என்ன செய்யன்னு பயமா இருக்கு”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.

ஏனோ அவளது கண்ணீர் முகுந்தனை வெகுவாக பாதித்தது. முகுந்தன் அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவரிடமும் நன்கு பேசுவான் தான். ஆனால் சாரு மட்டும் அவன் மனதுக்குள் கொஞ்சம் ஸ்பெஷல். அது ஏன் என்று அவனே இன்னும் யோசிக்க வில்லை.

இப்போதும் அவள் கண்ணீர் அவனை பாதிக்க “இப்ப என்ன? இந்த மீட்டிங் நல்ல படியா நடக்கணும்? பரணி சார் ரெண்டு பேர் கூடவும் பேசணும் அப்படி தானே?”, என்று நிதானமாக கேட்டான்.

“ஆமா சார். அது மட்டுமில்லாம…”

“சார் கிட்ட இருந்து நீங்களும் தப்பிக்கணும். உங்களை சார் திட்டக் கூடாது. என்ன கரெக்டா?”

“ஆமா சார். நான் வேலைக்கு சேந்து இந்த மூணு மாசத்துல சார் கிட்ட இருந்து எந்த திட்டும் வாங்கினது இல்லை. ஆனா போன மாசம் அக்கவுண்டண்ட் தீபக் சார்க் கிட்ட திட்டு வாங்கினது மட்டும் இல்லாம அன்னைக்கே வேலையை விட்டும் போயிட்டாங்க. அதே மாதிரி நிலைமை எனக்கும் வந்துச்சுன்னா என் குடும்ப நிலைமை என்ன ஆகும்? இந்த மாதிரி சம்பளம் எங்கயும் கிடைக்காதே”

“என் கிட்ட சொல்லிட்டீங்கல்ல சாரு? எல்லாம் நான் பாத்துக்குறேன். பரணி சார் உங்களை திட்டவே மாட்டாங்க. அதுக்கு நான் கேரண்டி”, என்று முகுந்தன் சொல்ல அவனை வியப்பாக பார்த்தவள் “எப்படி சார்?”, என்று கேட்டாள்.

“வெயிட் அண்ட் சீ”, என்று சொன்னவன் தன்னுடைய போனை எடுத்து ‘யமுனா’ என்ற எண்ணுக்கு அழைத்தான்.

அதை எடுத்து “சொல்லுங்க வக்கீல் சார். என்ன காலைலே எனக்கு கால் பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டாள் யமுனா.

“யமுனா, நீ ஆபீஸ் வந்துட்டியா மா?”

“நான் அப்பவே வந்து என் வேலையை ஆரம்பிச்சிட்டேனே? ஏன்? என்ன ஆச்சு அண்ணா?”

“நீ கொஞ்சம் எம் டி ரூம் வரைக்கும் வர முடியுமா மா?”

“நானா? அங்கயா? அங்க அவர்… நான் வர மாட்டேன் பா. பிளீஸ் அண்ணா. என்னை கோத்து விடாதீங்க. உங்களுக்கு தெரியும் தானே? நானே அவர் கண்ணில் படாம ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கேன்?”

“பிளீஸ் யமுனா, இப்ப நீ தான் அவனை சரி பண்ண முடியும்? ஒரு பெரிய பிரச்சனை ஆகிருச்சு. பிளீஸ் மா”

“என்னைக் கோர்த்து விடுறதுல உங்களுக்கு இவ்வளவு ஆனந்தமா?”

“நீ எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம். ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வந்து நின்னா போதும்”

“நான் என்ன ஜவுளிக் கடை பொம்மையா அங்க வந்து ஷோ காட்ட?”

“ஆனா நம்ம எம்.டி சாருக்கு நீ மெழுகு பொம்மை தான். உன்னைப் பாத்தா கண்டிப்பா பிளாட் ஆகிருவாங்க”, என்று அவன் சொல்ல பரணியை நினைத்து சிறு கர்வம் அவளுக்குள் வந்தது மட்டும் நிஜம். அவன் சொல்வது முற்றிலும் உண்மை தான். அவளைக் கண்டு விட்டால் போதும் அலைபாயும் பரணியின் மனம் அமைதியாகி விடும். அவனை மட்டும் அல்ல இந்த உலகத்தையே பரணி மறந்து விடுவான். அவளும் அப்படித் தானே?

முகுந்தன் ‘ஹலோ’ என்று சொல்லவும் “வரேன், வந்து தொலையுறேன்”, என்று அவள் சலிப்புடன் சொல்ல அவன் முகம் மலர்ந்தது. “வா வா, சீக்கிரம் வா”, என்று சொல்லி போனை வைத்தான் .

“ஆடிட்டர் யமுனாவையா முகுந்தன் கூப்பிடுறீங்க? அவங்களை எதுக்கு இங்க கூப்பிடுறீங்க?”, என்று கேட்டாள் சாரு.

“உனக்கு ஒண்ணும் தெரியாதுல்ல? நான் எல்லாம் அப்புறம் சொல்றேன். ஐயோ, சார் வந்தாச்சு”, என்று சொன்னதும் சாரு திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஆறடி உயரத்தில், அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்டு கோப நடையுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் பரணி. பிஸ்கட் கலர் சட்டையும், கறுப்பும் காப்பியும் கலந்த கலரில் இருந்த பேண்ட்டும், கருப்பு கலர் ஷூஉம் அணிந்திருந்தான். அவன் சட்டையை டக்கின் செய்திருந்த விதம் கூட அழகாக இருந்தது.

அவன் கண்களில் தெறித்து விழுந்த கோபத்தைக் கண்டு “ஐயோ, சார் கோபமா வராங்க முகுந்தன். நான் இன்னைக்கு செத்தேன்”, என்று பயந்த சாரு முகுந்தன் அருகே ஒட்டி  நின்றாள். என்னவோ அவன் தான் அவளைக் காப்பவன் போல. அந்த நேரத்திலும் அவள் செய்கையில் முகுந்தன் முகம் மலர்ந்தது.

Advertisement