Advertisement

அத்தியாயம் 1 

பேசப் படாத வார்த்தைகளும்

சொல்லப் படாத காதலும்

ஒன்று தான் வலி தருவதில்!!!

மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்யும் அழகான மதுரை மாநகர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரையில் சிறிதும் பரபரப்பே இல்லாமல் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி மட்டும் அமைதியாக இருந்தது. அந்த இடத்தில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் அழகாக வீற்றிருந்தது அமைச்சர் சரவணப் பெருமாளின் பங்களா.

வீட்டைச் சுற்றிலும் அதிக உயரத்தில் இருந்த கோட்டைச் சுவர், இரண்டு செக்யூரிட்டியுடன் பிரம்மாண்டமாக இருந்த கேட், சுற்றிலும் பூவகைகளும் பல வகை மரங்களும் அழகாக அமைந்திருந்த தோட்டம், அதற்கு நடுவே இருந்த அழகான பங்களா என எல்லாமே அழகு தான். அங்கிருந்த ஒவ்வொரு இடமும் பணச் செழுமையை பறைசாற்றியது என்று சொல்லலாம்.

வெளியே மட்டும் அல்ல, உள்ளேயும் அழகு தான். கண்ணாடி போல பளபளக்கும் டைல்ஸ் தரைகள், பிரமாண்டமான தேக்கு கதவுகள், கண்ணாடியாலான அழகு பொருள்கள் என அனைத்தும் கண்ணைக் கவரும் படி இருந்தது. ஆங்காங்கே மாட்டப் பட்ட சித்திரங்கள், அலங்காரப் பொருள்கள் எல்லாமே அந்த வீட்டுக்கு கூடுதல் அழகு சேர்த்தது.

ஒரு அரசியல்வாதியின் வீடு இப்படி எல்லாம் இல்லாமல் இருந்தால் தான் அதிசயம். பால் வளத் துறை அமைச்சர் சரவணப் பெருமாளின் வீடு தான் அது. அவர் அரசியலுக்கு வந்து பதினோரு வருடங்கள் ஆகிறது. ஒரு இடைதேர்தலில் நின்று தான் வெற்றி பெற்றார். ஆனால் அப்போது அவர் வெறும் எம். எல். ஏ மட்டும் தான். ஆனால் அடுத்த தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆனார். இப்போது பால்வளத் துறை அவரது கையில்.

ஆனால் அரசியலில் சேர்ந்த பிறகு அவர் இதை எல்லாம் சம்பாதிக்க வில்லை. ஏற்கனவே பணக்காரர் என்று அறியப் பட்டதால் தான் அவரை அரசியலில் சேர்த்துக் கொண்டார்கள். சரவணப் பெருமாளின் குடும்பம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மதுரையில் புகழ் பெற்றது தான்.

மதுரை மற்றும் சென்னையில் பரணி இண்டெர்நேசனல் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல், தூத்துக்குடியில் மீன் மற்றும் இறால் பண்ணை, மதுரையில் பெரிய தியேட்டர், தமிழ் நாட்டில் ஏழு நகரங்களில் இருக்கும் நகைக் கடைகள், அது போக கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் கம்பெனிகள் இப்படி பல உண்டு. அது போக தோட்டம் துறவு என அனைத்தும் குத்தகையின் பேரில் நடந்து கொண்டிருந்தது. மதுரையில் பரணி தியேட்டரும் உண்டு. பரணி குருப் ஆப் கம்பெனிஸின் தலைமையகம் அமைந்திருப்பது மதுரையில் தான். இப்படி பல தொழில்களில் கொடிகட்டி பறப்பவர்கள் தான் பரணி குடும்பம்.

மதுரை மக்களுக்கு சரவணப் பெருமாள் என்றால் உயிர். அந்த அன்புக்கு ஏற்றவர் என்பது போல ஏழை எளிய மக்களுக்கு அதிகம் நன்மை செய்வார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே தன்னுடைய அன்பினாலும் நல்ல செய்கைகளினாலும் மதுரையே கைக்குள்ளே வைத்திருந்தவர். அவ்வப்போது சில பல கட்டப் பஞ்சாயத்துகளும் அவர் தலைமையில் நடைபெறும். மற்ற படி அடிதடிக்காரர் எல்லாம் கிடையாது. முன்பே அவர் புகழ் பெரியது என்றால் அமைச்சர் ஆன பிறகு கேட்கவும் வேண்டுமா?

ஆனால் அவரை நூறு சதவீதம் நல்லவர் என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு பாலம் கட்ட அவரது தொகுதிக்கு நிதி ஒதுக்கப் படுகிறது என்றால் காண்ட்ராக்டருடன் சேர்ந்து அவரும் பணத்தை தனக்கென்று எடுத்துக் கொள்வார். ஆனால் தான் எடுத்த பணத்தில் கால் வாசியை தன்னுடைய குடும்பத்துக்கு எடுத்துக் கொண்டு மற்றதை அந்த பாலம் கட்டும் தொழிலார்களுக்கே ஊக்கத் தொகையாக கொடுப்பார். அந்த ஊக்கமே அவர்களை ஒழுங்காக வேலை செய்ய வைக்கும். கட்டுமானப் பொருள்களின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று அவரது கம்பெனியில் இருந்து வாங்கிக் கொள்வார். பாலமும் உறுதியாக கட்டப் படும்.

காண்ட்ராக்டர் இன்னும் காசு பார்க்க முடியவில்லையே என்று பொருமத் தான் செய்வான். ஆனால் தனக்கு சேர வேண்டியது வருவதே போதும் என்று வாயை மூடிக் கொள்வான். இது தான் சரவணப் பெருமாள். ஒரு வேலை செய்தால் அதில் தனக்கும் ஆதாயம் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கும் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவார்.

அவரது மனைவி கௌரி அன்பான, அழகான, அமைதியான இல்லத்தரசி. ஆனால் கணவரும் சரி பிள்ளைகளும் சரி தவறு செய்தால் நேரடியாக கேட்டு விடுவாள். “எதுக்குங்க அரசாங்க பணத்தை எடுக்கணும்?”, என்று கணவரிடம் கேட்க தான் செய்வாள்.

“அட பொண்டாட்டி, அந்த பணத்தை நான் எடுக்கலைன்னு வை எனக்கு கீழே இருக்குற அரசாங்க அதிகாரிகள் அதை கொள்ளை அடிச்சு மக்களுக்கு ஒண்ணும் இல்லாம பண்ணிருவாங்க. அப்ப பாலம் ஒரு மாசத்துல இடிஞ்சு விழும். மக்கள் தரம் இல்லாத பாலத்தைக் கட்டினதுக்காக நான் தான் மொத்த பணத்தையும் சுருட்டின மாதிரி எனக்கு கெட்ட பேரை உண்டாக்குவாங்க. இதெல்லாம் எனக்கு தேவையா? ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் நான் நல்லவன்னு விளக்கம் கொடுக்க முடியுமா? அதனால ஊரோட ஒத்து வாழனும் டி. அதே நேரம் நம்ம மனசாட்சிக்கும் நேர்மையா இருக்கணும்”, என்று சொன்ன கணவனை காதலாக பார்த்தாள்.

கௌரியும் சாதாரண குடும்பத்து பெண் கிடையாது. திருநெல்வேலியில் அவர்கள் குடும்பமும் மதிப்பானது தான். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அங்கே உள்ள சொத்துக்கள், நிலங்கள், நகைகள், ஆயில்மில், ரைஸ்மில் அனைத்தும் இவளுக்கு தான் வந்தது. அதையும் சேர்த்து சரவணப் பெருமாள் மற்றும் அவரது பிள்ளைகள் தான் ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். இவ்வளவு தொழில்கள் இருந்தால் அவர்களுக்கு ஓய்வு என்பது ஏது? அனைவரும் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

சரவணப் பெருமாள் மற்றும் கௌரி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதலில் பிறந்தது விஷ்ணு வர்தன். சரவணப்பெருமாளின் அரசியல் வாரிசு அவன் தான். இப்போதைக்கு மதுரை மாநகராட்சியின் மேயர். அவனது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு ஐந்து வயதில் நித்திஷ் என்ற மகன் இருக்கிறான்.

சஞ்சனா வேறு யாரும் அல்ல. சரவணப்பெருமாளை அரசியலில் நிற்க வைத்த அவரது கட்சித் தலைவர் சண்முகசிகாமணியின் மகள் தான். இப்போதும் அவர் தான் கட்சியின் தலைவர். சம்பந்தி என்ற உறவைத் தாண்டி இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு உண்டு.

விஷ்ணுவர்தனுக்கு அடுத்து பிறந்தவன் தான் பரணி என்ற பரணிதரன். சரவணப் பெருமாளின் தந்தை பெயரான பரணிதரன் என்பதை தான் இவனுக்கு வைத்திருந்தார்கள். இப்போது அவனுக்கு வயது முப்பத்தி ஒன்று. பார்த்தவுடன் மற்றவரைக் கவரும் அழகன். சிறு வயதிலே தொழிலில் சாதனை படைத்து திறமைசாலி என்று பெயர் வாங்கி யாரும் எட்டிப் பார்க்க முடியாத உயரத்தில் இருப்பவன்.

தந்தை மற்றும் அண்ணன் இருவரும் அரசியலில் களம் இறங்க இப்போதைக்கு பரணி குடும்பத்தின் சிம்ம சொப்பனம் பரணி தான். இன்ஜினியரிங் முடித்து மேலும் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து வந்ததும் தந்தை மற்றும் தாத்தாவின் தொழில்களில் கவனம் செலுத்தினாலும் அவனே அவனுக்கென ஆரம்பித்தது தான் பரணி ஜூவல்லரி.

தமிழ்நாட்டில் தங்கத்தின் மீதிருக்கும் மோகம் வேறு எங்கும் கிடையாது என்று அறிந்தவன். கடன் வாங்கியாவது தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள் இருக்கும் இந்த ஊரில் நகை கடைக்கு மதிப்பு இல்லாமல் போகுமா? முதலில் மதுரையில் தான் ஆரம்பித்தான். இப்போது அவனது கிளை ஏழு பெரிய ஊர்களில் நடக்கிறது. ஆனால் மற்ற நகைக்கடைக்காரர்கள் போல ஏமாற்ற எல்லாம் மாட்டான். சரியாக வரியும் கட்டி விடுவான். அது போக வருபவர்களுக்கு பர்ஸ், பேக் என்று பரிசு பொருள்களையும் கொடுக்க மாட்டான். அவன் கடையில் எந்த கிஃப்ட்டும் கிடைக்காது, ஆனால் நல்ல தரம் மற்றும் விலை குறைப்பு உண்டு என்பதால் நகை எடுக்க வருபவர்கள் அங்கே தான் வருவார்கள்.

மதுரையில் இருந்த நகைக் கடையை கட்டி ஆரம்பித்ததோடு சரி, வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே அவனால் அங்கு போக முடியும். அதுவும் மற்ற ஊர்களுக்கு இவன் கடை திறந்த நாள் மட்டுமே சென்றிருக்கிறான். மற்ற தொழில்களைப் பார்க்கவே அவனுக்கு நேரம் சரியாக இருக்கும். பரணி குருப் ஆப் கம்பெனிஸின் மெயின் அலுவலகத்தில் தன்னுடைய இடத்தில் அமர்ந்து அனைத்து வேலைகளையும் செய்வான்.

பரணிக்கு அடுத்து கடைசியாக பிறந்தவள் தான் நிஷா. சரவணப் பெருமாள் தன்னுடைய பிஸ்னஸ் பார்ட்னரின் மகன் விஸ்வாவை அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். இப்போது அவர்களுக்கு கீர்த்தி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருக்கிறது. இப்போது அவர்கள் இருப்பது லண்டனில். இது தான் சரவணப் பெருமாளின் குடும்பம். இப்போதைக்கு வீட்டினரில் அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரே கவலை பரணியின் திருமணம் தான். முப்பத்தி ஒன்று வயதாகியும் அவன் திருமணம் கேள்விக் குறியாக இருப்பதை யாரால் தான் தாங்க முடியும்?

மதுரையையே கைக்குள் வைத்திருக்கும் சரவணப் பெருமாள் மகனிடம் எவ்வளவோ போராடி விட்டார். ஆனால் அவனோ அசையவே இல்லை. அவன் இலக்கு ஒன்றே ஒன்று தான். அதை அடையும் வெறி மட்டும் அவன் மனதில் ஏழு வருடமாக எரிந்து கொண்டிருக்கிறது.

அனைவரையும் கவலை கொள்ள செய்யும் பரணியோ தன்னுடைய அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனது மொபைலில் அலாரம் சத்தம் கேட்டதும் எழுந்து நெட்டி முறித்தவன் குளிக்கச் சென்றான்.

குளித்து முடித்து வந்தவன் தலையைத் துவட்டிய படியே தன்னுடைய போனை எடுத்து பார்த்தான். வாட்சப்பில் வந்திருந்த மெஸ்ஸேஜைக் கண்டதும் அவன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. அதே கடுப்புடன் கிளம்ப ஆரம்பித்தான்.

Advertisement