“நீ வாய மூடு, அன்னைக்கே சொல்லிட்டேன். தேவை இல்லாம அந்த பொண்ணு கிட்ட பேசாதன்னு, சொன்னேனா, இல்லையா”, என்று அவர் கத்தவும்.,
பாட்டியோ, “பொண்ணு கட்டி கொடுத்து இருக்கே ன்னு, உனக்கு அறிவு இருக்கா., என்ன பேச்சு பேசிட்டு இருக்க நீ., எதுக்கு அந்த புள்ளையை அதிகாரம் பண்ணிட்டு இருக்க,
அவதான் உன் பொண்ணுக்கு நாத்தனார், உன் பொண்ணு ஒன்னும் அவளுக்கு நாத்தனார் இல்ல, சரியா., உன் பொண்ணு தான் அவங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி இருக்க.,
அவ ஒன்னும் இந்த வீட்டுக்கு மருமகளா வரல., அப்படியே வந்தா கூட உன்னை எல்லாம் கிழிச்சி அடுப்புல திணிச்சிடுவா., பேசுறா பாரு பேச்சை, அடுத்த பிள்ளைக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்கிறதப் போய் கணக்கு பார்க்குறீயே, நீ எல்லாம் மனுஷியா., ஒருத்தங்களுக்கு ஒரு நேரம் சாப்பாடு கொடுக்குறது தப்புன்னு சொல்லி கொடுக்குற பாரு, நீ எல்லாம் என்ன அம்மா., நீ புள்ள பெத்தவ தானே,
பிரசவம் பாக்குற அந்த பிள்ளைக்கு, மனசுல இருக்குற ஈரம் கூட உனக்கு இல்ல தானே, நேத்து நாங்க பேசுறத ஒட்டு கேட்ட இல்ல., அன்னைக்கு நாங்க பேசறது ஓட்டு கேட்டு இருக்க இல்ல., அப்போ அந்த பிள்ளை சொல்லுச்சு, அடுத்தவங்க வீட்டு விஷயத்தை நம்ம பேசக்கூடாது பாட்டி., அந்த பொண்ணு பாவம் ன்னு, நான் செஞ்சு கொடுத்தேன்னு சொன்னாளா, இல்லையா, அத்தோடு நிறுத்தி இருக்கணுமா இல்லையா., நீ தேவையில்லாம எதுக்கு பேசுற”, என்று சத்தம் போடவும்.
“நான் என்ன தப்பா பேசினேன்”, என்றார் சரிகா அம்மா.
“இப்போ உன் மக வீட்டுக்கு விஷயம் போகும், அதுக்கப்புறம் மக புருஷனுக்கும், உன் மவ குடும்பத்துல கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு”, என்று சொல்லிவிட்டு, “ஏய்யா நம்மளே முன்னாடி சொல்லிருவோம், இவ தெரியாம பேசிட்டா மன்னிச்சுக்கோங்க ன்னு கேட்டுருங்க., எதும் தப்பா ஆயிட போகுது, அந்த பிள்ளை வேற வீட்டை பார்த்து காலி பண்ணிட்டு போறேன், உங்க வீட்ல இருக்க இஷ்டம் இல்லன்னு சொல்லுது., இதெல்லாம் நல்லவா இருக்கு., நாள பின்ன மூஞ்ச பாத்து பேச வேண்டாமா”, என்று பாட்டியும் அனைவரிடமும் சத்தம் போட்டுவிட்டு உள்ளே சென்றார்.
இவனோ, ‘அவ என் மேல கோவத்துல இருந்து இருப்பா., இந்த நேரத்துல போய் இந்த சித்தி வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டாங்க, வைச்சு செஞ்சிட்டு போயிட்டா’., என்று நினைத்தவன்,
‘ஜலதோஷம், தலைவலி ன்னு சொன்னா, முகமும் டல்லா இருந்துச்சி, தூங்கி இருக்க மாட்டாளோ ., இல்லையே நைட் லைட் எல்லாம் ஆப் ஆயிடுச்சே’, என்று யோசிக்க.,
அவன் மனசாட்சியோ, ‘தூத்ஊ. நீ எல்லாம் மனுசனாடா., அவ வீட்டுல லைட் எரியுதா, ஜன்னலில் லைட் எரியுதா ன்னு நீ எதுக்கு பாத்துட்டு இருக்க., அவளுக்கு உன்னை பிடிச்சிருக்குறது நீ அன்னைக்கே கண்டுபிடிச்சிட்ட அப்படித்தானே, பேசுவான்னு தெரிஞ்சு தான் அவசர அவசரமா மறுத்த., போடா போ நீயும், உன் மறுப்பும்’,என்று சொன்னது.
இவனோ, ‘இல்ல இல்ல இந்தா சித்தி பேசினதுக்கே அடுத்து என்ன பிரச்சனை வரப்போகுதோ., இந்த லட்சணத்துல இவ கேட்டு நான் சரின்னு சொல்லி இருந்தா., அதுக்கு ஒரு பெரிய பிரச்சினையா வந்துரும்., இதெல்லாம் சரிப்பட்டு வராது நம்ம பேசாம பெட்டியை கட்டிட்டு கிளம்புவோம்’, என்று நினைத்துக் கொண்டே உள்ளே வர திரும்பினான்.
அவன் மனசாட்சியோ, “உன் சித்தி பெரிய யோக்கியம்தான், அவங்க பேசுறதுக்கு சண்டை போடாம இருந்தா தான் என்னனு யோசிக்கணும்., சண்டை போட்டா தப்பே இல்லை” என்றது.
இவன் மனசாட்சிக்கு பயந்து வீட்டிற்குள் வேகமாக போனான்.
அவனுடைய அப்பா தான், “நான் வேணா பேச வாப்பா” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அவனுடைய தாத்தா தான் , “இல்லப்பா போன் போட்டு குடு, நானே பேசுறேன்”, என்று சொன்னார்.
போன் போட்டு தாத்தாவிடம் கொடுக்க, இங்கு ஸ்பீக்கரில் போட, அங்கும் இந்த நேரத்தில் எதற்கு அழைத்திருக்கிறார்கள் என்று எண்ணத்தோடு அனாமிகாவின் தாத்தாவும் போனை ஸ்பீக்கரில் போட்டார்.
இங்கு எப்படி வீட்டினர் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்களோ, அதுபோலவே அங்கு வீட்டினரும் இருந்தனர்.
‘காலையிலே கூப்பிட்டு இருக்காங்களே, என்னவோ தெரியலையே’ என்று பதட்டத்தோடே அனைவரும் இருக்க.,
இங்கு சித்தார்த்தனின் தாத்தா தான், “ஐயா ஒரு சின்ன விஷயம், தப்பா எடுத்துக்க கூடாது, விஷயத்தை நானே சொல்லிருதேன்”, என்று சொல்லிவிட்டு நடந்த கதை அனைத்தையும் சொன்னார்.
சற்று நேரம் எதிர்ப்புறம் இருந்து எந்த பேச்சும் இல்லை, சற்று நேரம் அமைதியாக இருந்தவர், எதிர்ப்புறம் பதில் சொல்லாமல் இருக்க.,
“நீங்க ஒண்ணுமே சொல்லலையே, என் மருமக பேசுனது தப்புதேன்., பேத்தி நான் வேற வீடு பார்த்துக்கிறேன் ன்ற மாதிரி பேசிருச்சு, அதுக்குதேன் உங்ககிட்ட சொல்லலாம் ன்னு இருந்தோம், தப்புதேன் இனிமேல் சரிகாவோட அம்மா வாயை திறக்காத அளவுக்கு நாங்க பார்த்துக் கொள்வோம்., பேத்தி பொண்ணு இங்கே இருக்கட்டும்”, என்று சொன்னார்.
அங்கிருந்த தாத்தாவும், “நீங்களும் தப்பா எடுத்துக்க கூடாது., அவளுக்கு இஷ்டம் இல்லன்னா, அவளை நாங்க இருன்னு கட்டாயப்படுத்த மாட்டோம், ஒருவேளை வேற வீடு பார்த்துக்கிறேன்னு சொன்னா கூட, நாங்க சரின்னு தான் சொல்லுவோம், அவ இஷ்டம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு சம்மதிக்க மாட்டோம்., நாங்க பேசுறோம் , பேசி பார்க்கிறோம், அது மட்டும் இல்லாம ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். உங்க வீட்டு பொண்ண எங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கீங்க அவ்ளோதான், அதுக்காக எங்க வீட்டு பிள்ளைகளோட உரிமையை உங்க வீட்ல யாருக்கும் கொடுக்கல, நாங்க, எங்க வீட்டு பொண்ண சரியா வளர்த்திருக்கோம்னு நம்புறோம், எங்க பொண்ணு யாரிடமும் மரியாதை குறைவா நடக்க மாட்டா., மரியாதை குறைவா பேச மாட்டா., எங்களுக்கு தெரியும்.,
அவ கோவப்பட்டு பேசுறானா, அவளை இவங்க ஏற்கனவே எரிச்சல் படுத்தி இருக்கணும், அந்த கோவத்துல அவ பேசி இருப்பா, சில விஷயங்கள் என் பேத்தி செய்றானா., அதை சந்தோஷமா ஏத்துக்கிறேன்., அந்த பொண்ணுக்கு இவ சாப்பாடு செஞ்சு கொடுக்கிறானா, கண்டிப்பா அங்க அந்த பொண்ணுக்கு ஏதோ ஒரு பிரச்சனையோ, இல்ல சரியான சத்தான சாப்பாடு ஏதோ கிடைக்காம இருக்க போய் தான், என் பேத்தி செய்றா., அப்படியே செய்தாலும் நீங்க உங்க மருமக கிட்ட தாராளமா சொல்லலாம், அவ சம்பாத்தியத்தில் தான் அவ செஞ்சு குடுத்துட்டு இருக்கா., அடுத்தவங்க சம்பாத்தியத்தில் செய்யல., இத நீங்க தாராளமா சொல்லி வைக்கலாம்.,
அதுக்காக., நாங்க எங்க வீட்டு மருமக ட்ட முகம் காட்ட மாட்டோம்., அதே மாதிரி எங்க வீட்டு பொண்ணு கிட்ட தேவையில்லாம உங்க மருமகள் பேசாம பாத்துக்கோங்க., எங்க பொண்ணு இதை விட கோவமா பேசுறவ தான்., ஏதோ சாதாரணமா சில வார்த்தையோடு நிறுத்திட்டு போயிட்டாளே ன்னு நினைச்சுக்கோங்க., அவ கோபப்பட்டான்னா வார்த்தைகள் தாறுமாறா வந்துரும், தப்பா எடுத்துக்காதீங்க”, என்று சொல்லிவிட்டு.,
“நாம இத பத்தி இப்போதைக்கு வேற எதுவும் பேச வேண்டாம், நான் என் பேத்திட்ட பேசிட்டு., அப்புறமா உங்க கிட்ட பேசுறேன்” என்று சொன்னவர், “தப்பா நினைச்சுக்காதீங்க, போன வைக்கிறேன்”, என்று சொல்லி அனாமிகாவின் தாத்தா போனை வைத்தார்.
இங்கு சேகரன் கொதித்து விட்டார். மருமகளையும் மகனையும் பிடித்து வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் திட்டு, “தேவையில்லாத விஷயத்துல தலையிடாதீங்க, நானும் அன்னைக்கே சொன்னேனா, இல்லையா”, என்று சொல்லி கத்தி தீர்த்துவிட்டார்.