“ஆமா கேட்க நினைச்சேன், அந்த ஷாட் என்ன பண்ணுனீங்க., அந்த ஷேட் அதுக்கப்புறம் நீங்க போட்டு பார்க்கவே இல்லை”, என்று சொல்ல.,
“மேரேஜ்க்கு அப்புறம் காட்டுறேன்”, என்றான்.
” ஏய், கள்ளப் பையா நீங்க அந்த ஷர்ட் துவைக்கல தானே”, என்று சொல்லி அவனிடம் கேட்க,
அவனும் சிரித்தபடி “இன்னும் அதுல உன் குங்குமம் இருக்கே”, என்று சொல்ல,
“இப்ப அதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., இப்பவும் தேச்சு விடவா” என்று கேட்க,
“இப்ப வேண்டாம், அப்புறம் நானே பார்க்கிறேன்”, என்று சொல்லி அவளிடம் சிரித்தபடி அவளுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து கொண்டிருந்தான்.
அவன் அம்மா அப்பாவிடம் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டவன்., அவனுடைய சம்பாத்தியத்தில் அவன் சேர்த்து வைத்திருந்ததில் கொஞ்ச பணத்தை கொடுத்து., “நீங்க வாங்குற நகை இதுல வாங்குங்க., வீட்ல பொது பணத்திலிருந்து எடுக்க வேண்டாம்”, என்று சொன்னான்.
அவன் பாட்டிதான், “அது என்னடா குடும்பம் பொதுவா செய்றது எல்லாருக்கும் உரிமை பட்டது தானே”, என்று சொல்ல.,
“பொதுவா செய்வது, உங்களுடையது பாட்டி, இது என்னோட சம்பாத்தியம்., என்னோட மனைவிக்கு நான் செய்றது”, என்று சொன்னவன்.,
அவன் அம்மாவின் கையில் கொடுத்தான்,
“அவளுக்கு பிடித்த மாடலில் நகை எடுங்கள்”, என்று சொல்ல.,
“ஏன்டா நீ பார்த்து எடுக்க வேண்டியது தானே”, என்று சொல்லவும்.,
“சரி போலாம் வாங்க”, என்று வீட்டினரை அழைத்துக் கொண்டு சென்றவன்., அம்மா அவளுக்காக நகை பார்க்க செல்ல., அம்மாவை அழைத்து வந்தவன் முதலில் அவன் அம்மாவுக்கு வளையல் வாங்கி கொடுத்தான்.,
அதன் பிறகு அவளுக்கு கழுத்திற்கு சிறிதாக மாலை போல வாங்கினான். அதுவும் அவள் அண்ணனின் நிச்சயதார்த்தத்துக்கு வரும் போது போட்டிருந்தது போல தான்., ஆனால் மாடல் மட்டும் வேறாக இருந்தது.
நிச்சயதார்த்த தேதி நெருங்க இவ்ளோ இங்கிருந்து சென்னைக்கு சென்று விட்டாள்.
அவளுக்கு அனைத்தும் போட்டோ மூலம் அனுப்பி இருந்தாலும்., அவள் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அது அவனுக்கும் தெரியும்.
நிச்சயதார்த்தம் அன்று காலை அழகாக விடிந்தது.
இவள் தோழியும் ஊரிலிருந்து வந்திருக்க எல்லோரும் இவளை கலாய்த்து எடுத்துக் கொண்டிருந்தனர்.
அவன் வீட்டினர் அனைவருக்கும் அப்போது தெரிந்தது, ‘படபடப்பு லப்புடப்பு, பட்டாம்பூச்சி பறக்கிறது., கண்ணுல ஸ்பார்க் வர்றது’ என்று சொல்லி அனைவரும் கிண்டலும் கேலியுமாக சிரித்துக் கொண்டு இருந்தனர்.
பின்பு நிச்சய பத்திரிக்கை எழுதப்பட்டு சரியாக இன்னும் இரண்டரை மாதங்களில் தேதி குறிக்கப்பட்டிருந்தது., அனைவருக்கும் மகிழ்ச்சியே, ஆனால் சரிகா தான் வந்து அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அவள் ஏற்கனவே இங்கு தான் இருப்பாள், டெலிவரி முடிந்து வந்து விடுவாள், என்பதாலும் என்ன செய்வது என்று யோசனை தான் ஓடிக்கொண்டிருந்தது.
திருமணத்தை எங்கு வைக்க என்பது மட்டும் தான் இப்போது அவர்களுடைய கேள்வியாக இருந்தது.
மதுரையில் தான் வைக்க வேண்டும் என்று தாத்தா பாட்டி சொல்லிவிட., அவளை அழைத்து செல்ல என்று பேசும்போது.,
கடைசி சித்தியின் மகன்கள் தான்., “இது என்ன கொடுமையா இருக்கு., அது என்ன கூட பிறந்த அக்கா தங்கச்சி தான் வந்து பொண்ணு அழைக்கணும்னா., அக்கா தங்கச்சி இல்லாதவங்க என்ன செய்வாங்க., இப்ப அக்காக்கு டெலிவரி ஆயிடும் அந்த நேரத்துல அக்கா வந்து அழைக்க முடியாது., நாங்க எதுக்கு இருக்கோம்., நாங்க வர்றோம், நாங்க வந்து கூட்டிட்டு போறோம்”, என்று சொல்லவும்.
வீட்டினர் “டேய் முறையவே மாத்துறீங்க”, என்று சொல்ல.,
“அதெல்லாம் இல்ல, முறை எல்லாம் மாத்தல, நாங்க செய்யலாம் தப்பு கிடையாது”, என்று அவர்கள் சொல்ல.,
பின்பு சரி என அங்கு பேச்சுகள் ஓடியது., சரியாக டெலிவரி வரை எப்படியும் அனாமிகா மதுரையில் இருக்க வேண்டியது இருக்கும்., அவளுடைய ட்ரெய்னிங்கும் அப்போது தான் முடியும் என்பதால் அதன் பிறகு அவள் சென்னை வந்து இரண்டு மாதங்கள் கழித்து திருமணம் முடிந்த பிறகு, மீண்டும் மதுரையில் அல்லது தேனியில் அவளுடைய வேலையை தொடர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தனர்.
சித்தார்த்திடம் அது பற்றி பேச, “தங்கம் என்ன சொல்றாளோ அதுபடியே செஞ்சுக்கலாம்”, என்று சொல்ல.,
பாட்டி தான்., “டேய் எல்லாரும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் டா பொண்டாட்டி தாசனா மாறுவாங்க, நீ இப்பவே பொண்டாட்டிக்கு குடை பிடிச்சிட்டு சுத்துவ போலயே”, என்று சொல்ல.,
“ஐயோ, பாட்டி தப்பான அர்த்தத்திலேயே யோசிக்காதீங்க”, என்று சொன்னவன்.,
“எப்போ அவதான் எனக்கு, நான் தான் அவளுக்கு ன்னு நாங்க முடிவு பண்ணிட்டோமோ., அப்பவே அவ என்னோட வொய்ப் தான், நான் அவளோட ஹஸ்பண்ட் தான்., இதுல எந்த மாற்றமும் இல்லை”, என்று சொன்னவன் பெரியோர்களிடம் சிரித்து சமாளித்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் வடபழனி கோயிலிலுக்கு சென்று சாமியை வணங்கி விட்டு., அதன் பிறகு மண்டபத்திற்கு சென்றனர்.
மண்டபத்தில் வைத்து தான் நிச்சயதார்த்தம் நடந்தது., வெகு சிறப்பாக இங்கு உள்ள நண்பர்கள் அனைவரையும் கூட்டி., மதுரையிலிருந்து முக்கிய சொந்தங்கள் வந்திருக்க., நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக முடிந்தது.,
மாலை மாற்றி, இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள சித்தார்த்தின் அம்மா தான் அவள் கழுத்தில் நகையை போட்டு., தன் வீட்டு மருமகள் என்று அறிமுகம் செய்ய.,
அதன்பிறகு கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலையை பாட்டி இருவர் கையிலும் கொடுக்க., இருவரும் மாலையை மாற்றிக்கொண்ட போது.,
சித்தார்த்தன் யாரைப் பற்றியும் யோசிக்காமல் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
இவளோ, சிரித்துக் கொண்டே “ஆயிரத்த தாண்டி இருக்குமா”, என்று கேட்க.,
அவனும் “நீ தான் சொல்லணும்”, என்றான்.
இருவரும் பேசுவது தெரிந்தாலும், அவன் வைத்த முத்தத்தை தான் அத்தனை பேரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாட்டி தான், “ஏன்டி ட்ரெடிஷனல் ட்ரெடிஷனல் ன்னு சொல்லுவ, இதெல்லாம் மாடல் லா போய்ட்டு இருக்கு”, என்றார்.
“நான் இன்னும் மாடர்னா போகல பாட்டி., மாடர்னா போனா, அண்ணிக்கு முதல் நாள் எனக்கு தான் வளைகாப்பு வச்சிருக்கணும்”, என்று சொன்னாள்.
அருகில் இருந்த பாட்டி தான், வெட்கம் தாங்காமல், “இவ ஒருத்தி பக்கத்திலேயே பேரனையும் வச்சுக்கிட்டு பேசுவதை பாரு”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்.
“நீங்க தான் பாட்டி வாய கொடுத்து வம்பை இழுக்கிறீங்க”, என்று சொல்லி இவளும் பாட்டிய வம்பு இழுத்தாள்.
அதன் பிறகு இவர்களுக்கான நேரமாக, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, போட்டோ எடுப்பது என தொடர்ந்தது.
அதற்கு அடுத்து ஒரு நாள் மட்டும் இருக்க, அனைவரும் அங்கு தங்கியிருந்து மறுநாள் சரிகாவிற்கு வளைகாப்பை இது போலவே மண்டபத்தில் வைத்து சிறப்பாக முடித்து மதுரைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்.