“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்., எங்க இருக்க”, என்று கேட்டார்.

      “தேனிக்கு போயிட்டு இருக்கேன்”, என்றான்.

    “மதுரைக்கு வந்திருந்தியா பா, உன்னை பார்த்ததா சொன்னாங்களே., ரயில்வே ஸ்டேஷன்ல”, என்று சொல்ல.,

    ஒரு நிமிடம் அமைதியானவன் ., “ஆமா தாத்தா மதுரைக்கு வந்துட்டு தான் போனேன்., இப்ப தேனிக்கு போயிட்டு இருக்கேன்., வேலைய முடிச்சுட்டு அப்படியே மூணாறு க்கு கிளம்பிடுவேன்”, என்று சொல்ல.,

     “அப்படி யாப்பா, உடனே மூணாறுக்கு போகணும்னு யோசிக்காத, கொஞ்சம் பொறு”, என்று சொல்ல.,

       இவனும் மனதிற்குள், ‘பார்த்துட்டாங்களோ, யாரோ பார்த்துட்டு வீட்ல சொல்லி குடுத்துட்டாங்க போலையே’ என்று  யோசித்தவன், உடனடியாக அனாமிகா விற்கு அழைத்தான்.

   அவன் எப்போதும் அவளை அழைக்கும் அழைப்போடு, “எனக்கெனவோ வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு ன்னு தோணுது”, என்று சொல்ல.,

     “யார் வீட்டுக்கு” என்றாள் சந்தோஷமாக.,

    “மதுரை வீட்டில் தான்”, என்று சொல்லவும்.

   “எப்படி சொல்றீங்க”, என்றாள்.

    “இல்ல, தாத்தா போன் பண்ணி தேனிக்கு போயிட்டு இருக்கியான்னு கேக்குறாரு., மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல உன்னை பார்த்ததா சொல்றாங்கன்னு சொல்றாரு,  ஆமான்னு ஒத்துக்கிட்டேன்., ஆனா உன் கூட பார்த்ததா யாரும் சொல்லல., இன்னும் கொஞ்ச நேரத்துல போன் வரும்னு எதிர்பார்க்கிறேன்”, என்று சொல்லவும்.,

     “சரி, வேலை முடிச்சுட்டு அப்படின்னா நைட் வீட்டுக்கு வந்துருங்க”, என்று சொல்ல.

   அவனும் “ஓகே”, என்று சொல்லி போனை வைத்தான்.

     அதற்குள் வீட்டில், தாத்தா தான், “ஆமாடா, இப்ப தேனிக்கு போயிட்டு இருக்கானாம்”,  என்று  சொல்ல.,

      “உனக்கு யாரு டா சொன்னா, பொண்ணு யாரு டா”, என்று அவன் அம்மா அவசரமாக கேட்க.,

     “உங்களுக்கு என்னம்மா இவ்வளவு அவசரம் பொறுங்களேன்., பெரியம்மா பேசாம தான இருக்காங்க”, என்று சொல்ல.,

         பாட்டியோ, “டேய் யாரு எவருன்னு தெரியலையே டா., பிரச்சனையாகிறுமா”, என்று சொல்லவும்.,

     “பிரச்சினையாகாதுன்னு தான் நினைக்கேன், பார்க்கலாம்”, என்று சொன்னவன்.

     தன் நண்பன் தனக்கு அனுப்பிய போட்டோவை காட்ட, வீட்டில் உள்ளவர்களுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.

    “சரிகா நாத்தனாரா” என்று அத்தனை பேரும் ஒன்று போல கேட்க.,

சித்தார்தனின் அம்மாவோ எதுவும் பேசவில்லை.,

     “என்னம்மா நீ ஒன்னும் சொல்லல”, என்று பாட்டி கேட்க.

     “அவன் வரட்டும் அத்தை, அப்புறம் பேசிக்குவோம்”, என்று சொன்னவர்  அமைதியாக இருந்தார்.

அதற்குள் வீட்டு ஆண்களுக்கு தகவல் செல்ல, அவர்களும் வர, அனைவரும் போட்டோவை பார்த்தவுடனேயே ஒரு பதட்டம் தான் இருந்தது.

     “எப்படி நாம் இதை பேசி முடிப்பது”, என்று கேட்டுக் கொண்டிருக்க.,

    “முதல்ல அவங்க வீட்டுக்கு தெரியப்படுத்தணுமே, சரி இப்பவே போன்ல எதுவும் சொல்லிடாதீங்க., யாரையாவது வர மட்டும் முடியுமான்னு கேளுங்க., வந்தாங்கன்னா முதல்ல பேசுவோம்., இல்ல இங்க இருந்து யாரும் வரவா ன்னு கேளுங்க, அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு பார்ப்போம்., அவங்களும் சம்மதிக்கனும் இல்ல”, என்று சொல்லவும்.

     சரிகாவின் அம்மா தான், “டாக்டர் படிச்ச புள்ளைய அப்படி தூக்கி கொடுப்பாங்களா க்கும், நமக்கு ஏத்தாப்புல தான் நம்ம பாக்கணும்”, என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேச.,

      சித்தார்த்தனின் அப்பா தான், “ஏம்மா இப்படி பேசுற” என்றார்.,

       “என் பையனுக்கு என்ன குறைச்சல் ன்னு சொல்லிட்டு நீ இப்படி பேசுற., ரெண்டு பேரும் விரும்புறாங்க, இப்ப அதான் பேச போறோம், இப்ப சொன்ன உடனே அவங்க பதறக்கூடாது என்பதற்காக தான் அவங்க வந்ததுக்கு அப்புறம் பேச சொல்லலாம்னு நினைச்சி இருக்கோம்”, என்று சொன்னவர்.,

      அனாமிகா வீட்டிற்கு அழைத்து சாதாரணமாக நலம் விசாரித்து விட்டு, அவர்களிடம் “உங்களால் எப்போது வர முடியும்” என்று கேட்டனர்.

    “ஏன் என்னாச்சு”, என்று கேட்டனர்.

      “இல்ல ஒரு முக்கியமான விஷயம் பேசணும், இல்ல நாங்க அங்க வரணுமா”, என்று கேட்டனர்.

      “என்ன ஏதாவது பிரச்சனையா”, என்று அனாமிகா தாத்தா கேட்டார்.

      இங்குள்ள தாத்தா தான், “பிரச்சனை இல்ல, நீங்க முடிஞ்சா யாராவது ஒருத்தர் வந்தா கூட போதும், வர முடிஞ்சா வந்துட்டு போங்க., இல்ல னா நாங்க அங்க வாரோம்., என்ன பண்ண ன்னு தெரியல., முதல்ல விஷயத்தை பேசி விடுவோம்., அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு முடிவுக்கு வருவோம்”, என்று மொட்டைக்கட்டையாக பேசியவுடன்.,

     நித்திலன் தான், “நாங்க வரோம்”, என்று சொல்லிவிட்டான்.

     தாத்தாவிடம் நித்திலன் தான்,  “எனக்கென்னவோ நம்ம பாப்பா லவ் மேட்டர் அவங்க வீட்டுக்கும் தெரிஞ்சிருக்கும் ன்னு தோணுது தாத்தா, அதனால தான் நாங்க வரோம்னு சொன்னேன்., எதுவா இருந்தாலும் அங்க போய் பேசி விடுவோம்”, என்று தனியாக சொல்லவும்.

      தாத்தாவும் “ஆள் யாருன்னு சொல்லலையே டா”, என்று சொல்ல.,

     “அதைத்தான் நம்ம போய் கேட்டுக்குவோம்”, என்று சொல்லவும் கிளம்ப தொடங்கினர்.

தாத்தாவும் நித்திலனும் கிளம்ப, நித்திலனின் அப்பா தான்,  “நான் வரவாடா”, என்றார்.

         “நீங்க எதுக்குப்பா அலையறீங்க, ஏற்கனவே ரெண்டு நாளா அலைச்சல் வேலைன்னு இருந்தீங்க., நான் அவ கூட ஹாஸ்பிடல் போனதா,  வேலைக்கு ஒழுங்கா உங்க கூட வந்து பார்க்கல., சோ நீங்க ரெஸ்ட் எடுங்க ப்பா,  நானும் தாத்தாவும் மத்தியானம் பிளைட்டுக்கு போயிட்டு, நைட் ஃப்ளைட்டுக்கு திரும்பிடுறோம்”, என்று சொல்லி அவர்கள் பிளைட்டில் வந்து மதுரை இறங்கும் போது அனாமிகாவிற்கு ஃபோன் செய்தான்.

‘அண்ணா எதுக்கு இப்ப போன் பண்றாங்க’, என்று எண்ணி விட்டு., “என்ன ண்ணா.,  என்ன விஷயம், அண்ணி ஓகே தானே”, என்று கேட்டாள்.

     “ஒன்னும் இல்லம்மா., மதுரை தாத்தா போன் பண்ணி இருந்தாங்க., என்னன்னு தெரியல, கொஞ்சம் வாங்க பேசணும்னு சொன்னாங்க”, என்று சொல்லவும்.,

    மனதுக்குள், ‘தெரிஞ்சிருச்சு போலயே, சரி பரவாயில்ல’ என்று நினைத்துக் கொண்டவள்.

      “அப்படியா ண்ணா”,  என்றாள்.

      “நீ சீக்கிரம் வீட்டுக்கு வருவியா”, என்று கேட்டான்.

     “ஓ வாறேன்” என்று சொன்னவள்.

        மருத்துவமனையில், பெர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்ப தொடங்கினாள், அதே நேரம் அவனுக்கு போன் அடித்து சொன்னாள்.

     “நானும் தேனியில் வேலையை முடிச்சிட்டு ரிட்டன் வந்துட்டு தான் இருக்கிறேன், நீ வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு கீழ வா., அதுக்குள்ள நானும் வந்துருவேன்”, என்று சொன்னான்.

     அவனும் தேனியில் ரெசார்ட் ல் அவர்களுக்கான‌ தங்கும் இடத்தில் குளித்துவிட்டு தான் கிளம்பியிருந்தான்.

     இவள் எப்போதும் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்தால் குளித்துவிட்டு தான் வருவாள் என்பதால் அவன் சொன்னான்.

அவள் அண்ணனும் தாத்தாவும், வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவளும் வந்து விட வேகமாக சென்று குளித்து உடைமாற்றி விட்டு அவள் கீழே இறங்கும் போது அவனுடைய காரும் வந்து நின்றது.

அவனோ,  “முதல்ல நான் போறேன்” என்று செய்கை காட்டியபடி உள்ளே சென்றான்.

     பின்பு இவளும் வர முன்புறம் இருந்த பெரிய சீட்அவுட்டில் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

    மிகவும் மெதுவாக தான் பேசிக் கொண்டிருந்தனர்.

      அவன் வந்தவுடன், “என்ன காரியம் டா பண்ணி இருக்க” என்று அவன் சித்தி கேட்க.,

       இவனோ, “ஷ்ஷ்  நிறுத்துங்க, உங்ககிட்ட நான் எதுவுமே பேசல., என்ன விஷயம் ன்னு தெரியாது, தாத்தா வர சொன்னாங்க வந்து இருக்கேன்”, என்று சொல்லவும்.,

    அவளும் வந்து சேர்ந்தாள்., வந்தவள்,  “என்ன ண்ணா, அவசரமா போன் பண்ணி வர சொன்னீங்க”, என்றாள்.

      “இல்லம்மா என்னமோ முக்கியமான விஷயம், பேசுறதுக்கு நாங்க வரணும் ன்னு சொன்னாங்க.,  அதுதான் வந்தோம்”, என்றான்.

     அதே நேரம் கடைசி சித்தி.,  டீ கொண்டு வர.,  அனைவரும் எடுத்துக் கொண்டிருக்கும் போதே இவளுக்கும் கொடுக்கப்பட்டது., சித்தார்த்திற்கும் கொடுக்கப்பட்டது., இவளோ டீ யை குடிப்பது போல மெதுவாக, சித்தார்த்தை பார்க்க.,

    அத்தனை பேரும் அவர்களை நோட் செய்வதை இருவரும் பார்த்தும்  பார்க்காதது போல பார்த்தனர்.

     அவளுடைய அண்ணனுக்கும் தாத்தாவுக்கும்  தான் முழுதாக எதுவும் தெரியாது., ஆனாலும் அவர்கள் ஏற்கனவே யார் என்று தெரியாமல் என்ன பிரச்சனை என்று தெரியாமல் இருந்தனர்.

     அண்ணன் அருகில் அமைதியாக அமர்ந்திருந்தவள்,

     பாட்டியை பார்த்து , “பாட்டி என்னன்னு சொன்னா தான் தெரியும், எதுக்காக அண்ணாவையும்  தாத்தாவையும் வர சொன்னிங்க ன்னு தெரிஞ்சுக்கலாமா”, என்றாள்.

    “இல்லம்மா இன்னைக்கு தான், நீ மெட்ராஸ்ல இருந்து வந்தயாமா”, என்றார்.

      “பாட்டி நான் வந்த உடனே தான் உங்களை பார்த்து பேசினேனே”, என்றாள்.