12

நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா
நான் வாடும் நேரம்
உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்.
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள்
நான் போன போது
கை சேர்த்து நீதானே
மெய் சேர்த்த மாது,

அவள் காலை கண்விழிக்கும் போதே மணி ஏழை தாண்டி இருந்தது. நேரத்தை பார்த்தவள்,

     ‘ஐயோ எவ்வளவு நேரம் தூங்கி இருக்கோம்’ என்று யோசித்தவள்., அவனுக்கு மறுபடியும் காய்ச்சல் வந்துச்சா., தெரியலையே’, என்றே அவளுக்கு தோன்றியது.

    அவசரமாக போனை எடுத்து பார்க்க யாரும் அழைத்து இருக்கவில்லை., ‘அப்ப சரி’ என்ற நினைவோடு தன் காலை வேலைகளை முடிக்க தொடங்கினாள்.

     காலை உணவாக இட்லி ஊற்றி வைத்தவள், சட்னியை அரைத்து தாளித்துவிட்டு குளிக்கச் சென்றாள். குளித்து உடைமாற்றி வந்து தனக்கான ஒரு கப் காபியை  குடித்து முடித்தவள்., அதன் பிறகு அவனை பார்க்க வெளியே சென்றாள்.

     மணி எட்டே முக்காலை தாண்டி இருக்க., அவள் வெளியே வரும்போது ராகவன் தான் பால்கனியில் நின்று யாரிடமோ போனில் பேசிக்கொண்டு நின்றான்.

   அவளை பார்த்தவன் லேசாக சிரித்தபடி, உள்ளே என்று கையை காட்ட அவளும் அவனிடம் சினேகமான ஒரு புன்னகையோடு நகர்ந்தாள்.

    அவன் அறைக் கதவை இலேசாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

    அவனும் காலையில் ராகவன் உதவியோடு முகம் கால் கை கழுவி உடைமாற்றி இருந்தான். அருகில் டம்ளர் இருக்க, “டீ மட்டும் எடுத்திருப்பான்” என்று நினைத்துக் கொண்டே அவனிடம் சென்றவள்.,

    “பெயின் இருக்கா இப்போ”, என்றாள். கடமை தவறாத டாக்டராக மட்டுமே அவனிடம் பேசினாள்.

    அவனும் “இல்லை” என்று சொல்லவும்.,

       “கட்டை மாற்றுவோமா” என்று அவனிடம் கேட்டவள்.,

     ‘கட்டை மாற்றுவதற்கு வெந்நீர் வேண்டுமே, எப்படி கேட்க’ என்று யோசனையோடு அருகில் வேறு யாரும் இல்லை என்றவுடன்., “ஒரு நிமிஷம் இப்ப வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்தாள்,

     கொஞ்சமாக வெந்நீர் வைத்து சிறிய மக் ல் எடுத்துக் கொண்டாள்.பின்பு கிருமி நாசினிகளையும் துடைப்பதற்காக எடுத்துக்கொண்டு., அவள் அறையில் இருந்த மற்றொரு மருந்து மற்றும் பேண்டேஜ் கிளாத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

    அப்போது தான் உணவை எடுத்துக்கொண்டு சித்தார்த்தின் அம்மாவும் சித்தியும் மேலே வந்திருந்தனர்.

    இவளை பார்த்தவுடன், “ஐயோ சொல்லியிருந்தா, நான் வச்சு கொண்டு வந்திருப்பேனேமா”, என்று சொல்ல,

     “பரவாயில்ல, இதுல என்ன இருக்கு”, என்று சொல்லிவிட்டு அவன் கையின் கட்டை பிரிக்க தொடங்கும் போதே, ராகவன் வந்து அருகில் அமர்ந்து கொண்டான்.

      ராகவனோ கிண்டலாக, “அவன் கையில கண்ணாடி இருக்கா ன்னு நல்லா அமுக்கி பாருமா”, என்று சொல்ல.,

     இவளோ சிரித்தபடி, “வலிக்கும் ண்ணா”, என்றாள்.

       “சும்மா அமுக்கி பாரு மா, அவனுக்கு எவ்வளவோ வலி இருக்கு, அதோட சேர்த்து இந்த வலியும் வலிக்கட்டும்”, என்று சொன்னான்.

  சித்தார்த் அம்மா தான், ராகவனை பார்த்து., “ஏதாவது மறைக்குறீயா”, என்று கேட்டார்.

    “இல்லைமா, வேற ஒன்னும் இல்ல”, என்று சொல்லி விட்டு சித்தார்த்தை பார்க்க அவனும் ராகவனை பார்த்து முறைத்தபடி இருந்தான்.

    சித்தார்த்தின் அம்மா தான், “சாப்பாடு எடுத்து தரட்டா டா, சாப்பிடுறியா”, என்று கேட்டார்.

     “அம்மா வச்சிட்டு போங்க, நான் சாப்பிட்டுக்குவேன்”, என்றான்.

    “எப்படி சாப்பிடுவ”, என்று ராகவன் கேட்க.,

     இவளோ,  “நீங்க கொடுங்க அத்த, அவங்க சாப்பிடட்டும்., துடைச்சு விட்டு, இப்ப கட்ட மாத்திடுறேன்”, என்று சொல்லிவிட்டு அவனுடைய காயங்களை துடைக்க தொடங்கும் போது.,

     அவன் “மெதுவா” என்று சொல்லி கையை இழுக்க முயற்சி செய்ய.,

    இவளோ அவன் கையைப் பிடித்து, “கொஞ்சம் அசைக்காம வச்சிருந்தீங்கன்னா பெயின் இருக்காது., நீங்க இழுக்க நான் துடைக்கும் போது அழுத்திரக்கூடாது”, என்று சொல்லியே அவனை கையை அப்படியே வைத்திருக்க வைத்தவள்,  துடைத்து மீண்டும் மருந்து இட்டு கட்டுவதற்குள் சித்தார்த்தின் அம்மா அவனுக்கு உணவை கொடுத்து முடித்திருந்தார்.

     அதே நேரம் ராகவன் அவனுடைய உணவை வைத்துக் கொண்டே அமர்ந்திருக்க.,  “நீங்க சாப்பிடுங்கண்ணா”, என்று இவள் சொல்லியபடி அவன் கையை எல்லாம் சுத்தம் செய்து விட்டு கொண்டு இருந்தாள்.

      “நீ சாப்பிடுறீயா மா உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரவா”, என்று சித்தார்த்தின் சித்தி கேட்டார்.

   “இல்ல அத்தை, நான் செஞ்சு வச்சதை அப்புறம் யார் சாப்பிடுவது.,  அங்க இருக்கு, நான் சாப்பிட்டுகிறேன்”, என்று சொன்னபடி அவள் கொண்டுவந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு எழும்பும் போது “சாப்பிட்டாச்சுல மாத்திரை போடுங்க”, என்றாள்.

     “கொஞ்ச நேரம் கழிச்சு”, என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

    “இதோ வர்றேன்” என்று எல்லாவற்றையும் வெளியே வைத்துவிட்டு கையை வெளியில் இருந்த பைபில் கழுவி விட்டு வந்தவள். அவனுடைய மாத்திரைகளை எடுத்து கையில் வைத்தாள்.

    அவன் முறைத்து பார்க்க, “மாத்திரை போடுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    சித்தார்த்தின் அம்மா தான், “மாத்திரை போடுடா, வேற ஏதாவது கொண்டு வரவா”, என்று கேட்டார்.

  “ஃபீவர் வராமல் இருக்கணும் அவ்வளவு தான்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    ராகவன் தான், “ஏன் மா நீ ஹாஸ்பிடல் போகல”, என்றான்.

     “இல்ல ண்ணா இன்னைக்கு லீவு தான், நாளைக்கு தான் போகணும்”, என்று சொன்னாள்.

   “ஏன் மா”, என்றான்.

    “ஒன்னும் இல்லை ஜஸ்ட் லீவு ல இருக்கேன்”,  என்றால்.

      “வாரத்தில் ஒரு நாள் தானே லீவு வரும்”, என்று கேட்கவும்.,

     “அது லீவ் எடுத்துக்கலாம்”, என்றாள்.

      “எதுவும் உடம்பு முடியலையா மா”, என்று கேட்டார் சித்து அம்மா.,

   “அப்படி எல்லாம் இல்ல அத்தை, கொஞ்சம் ஒர்க் இருக்கு எனக்கு, இதுவரைக்கும் பார்த்த கேஸ் அப்புறம் ப்ராக்டிஸ் பற்றி நான் ப்ராஜெக்ட் எழுதி சப்மிட் பண்ணனும்.,  எதுவுமே பண்ணல., பாதி எழுதி எழுதாமல் நிக்குது., அதை கொஞ்சம் பார்த்துட்டு அதற்கு அப்புறம் தான் ஹாஸ்பிடல் போவதை பற்றி பார்க்க வேண்டும்”, என்றவள்.

    “இன்றைக்கு டூட்டில நிறைய டாக்டர் இருக்காங்க ., அதனால பார்த்துப்பாங்க., நாளைக்கு மத்தியானம் டூட்டி தான்”, என்று சொன்னபடி அங்கிருந்து கிளம்பினாள்.

      ராகவனும் அவளுடனே எழுந்து வெளியே வந்து., “நான் மதுரைக்கு போறேன்”, என்று சொல்ல.,

     “ஹோ நேத்தே சொன்னீங்க இல்ல ண்ணா”, என்று சொல்லவும்.,

   “அவனை கொஞ்சம் எட்டி பார்த்துக்கோ, அப்பப்போ”, என்று சொல்லிவிட்டு “முடிஞ்சா பேச ட்ரை பண்ணு, ரெண்டு பேரும் இப்படி அமைதியா இருந்தீங்கன்னா எப்ப பேசுவீங்க”, என்று சொன்னான்.

      “பேசுகிறேன் அண்ணா” என்று சொன்னாள்.

பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.

     காலை உணவு எடுத்துக் கொள்ளும் போது, இன்று அவன் பார்வையின் வித்தியாசம் அவளுக்கு புரியத்தான் செய்தது.

    ஆனாலும் ‘அவனாக சொல்ல வேண்டும்’ என்று நினைக்க.,

    அவள் மனமோ, ‘ஏன் நீ தானே விரட்டி விரட்டி லவ் பண்ண போறேன்னு சொன்ன, நீயா போய் கேட்டா என்ன குறைஞ்சா போயிருவ’, என்று கேட்டது.

    ‘இல்லையே’ என்று சொல்லிவிட்டு., ‘மதியத்திற்கு தனக்கு மட்டும் தானே’ என்று யோசித்தவள்., ‘இன்னைக்கு குழம்பு வச்சா நாளைக்கு யூஸ் பண்ணிக்கலாம் இல்ல’, என்று யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

     பின்பு ‘இல்ல பாத்துக்கலாம், நாளைக்கு மத்தியான டூட்டி தானே., காலையில எந்திருச்சு சமையல் செய்யலாம்’ என்று ரெசிபி தேடியவள்., பின்பு 1 பார்ட் வத்த குழம்பு சாதம் என்று சொல்லி வீட்டிற்கு மெசேஜ் செய்துவிட்டு சமைக்க தொடங்கினாள்.

அங்கு இவளது மெசேஜை பார்த்த இவள் அம்மாவும், “புதுசு புதுசா உங்க பேத்தி கத்துக்கிறா அத்தை”, என்று அங்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

     “என்னவாம் இன்னைக்கு அவளுக்கு”, என்றார்.

     “ஒன் பார்ட் வத்த குழம்பு சாதம் ன்னு எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கா., சமைச்சிட்டு போட்டோ போடுறேன்னு வேற போட்டு இருக்கா, வரட்டும் பார்ப்போம்” என்று சொல்லவும் .,

    அது போலவே ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாக,  அப்பளம், எக் ஆம்லெட் எல்லாம் வைத்து போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருந்தாள்.

  “தனியா இருந்தா சமைக்க தான்  செய்யுறா”, என்று சொல்லவும்.

     “எல்லாம் தெரியுது, என்ன செய்ய., கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன் றாளே” என்று பாட்டி புலம்பி கொண்டிருந்தார்.

     இங்கு அவள் காதல் பத்தி தெரியாதவர்கள், அங்கு அவள் கல்யாணத்திற்கு பேசிக் கொண்டிருந்தனர்.