“ஒருத்தவங்கள பார்க்கும் போதே புடிக்கணும்., ஒரு வேளை பார்த்த உடனே பிடிக்கலை னா, திரும்ப ஒரு ரெண்டு மூணு தடவ அவங்கள பார்க்கும் போது இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும் ன்னு தோணனும்., அந்த மாதிரி ஒரு தோணல் யாரை பார்த்து வருதோ அவங்கள கல்யாணம் பண்ணா லைப் பெஸ்ட்டா இருக்கும்”, என்றாள்.

     “சரி உனக்கு ஒருவேளை யாரையும் பார்த்து அப்படி தோணலை னா, என்ன செய்ய”, என்று கேட்டார்.

    “அப்படி தோணலை னா கஷ்டம் தான், கல்யாணம் ன்ற கான்செப்ட் பற்றி நான் இப்போதைக்கு யோசிக்கவே இல்லை, ஆனால்  உங்க நிலை யோசிக்க வேண்டிய விஷயம் தான்”, என்று சொன்னாள்.

    அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளது அம்மா, “அத்த அது என்ன ன்னு நீங்களே கேளுங்க”, என்று சொல்லிவிட்டு சென்றார்.

      பாட்டி  மீண்டும் பிடித்துக் கொண்டார்., “அது எப்படி தோணும், தெரியாம தான் கேட்கேன் அது எப்படி தோணும்., எனக்கு உங்க தாத்தாவை கொண்டு வந்து காமிக்கும் போது, நான் உங்க தாத்தா முகத்தை சரியா கூட பாக்கல, ஏன் உங்க அப்பா அம்மாவை பார்க்கும் போது ஆகட்டும், இப்போ உங்க அண்ணனுக்கு  பார்த்திருக்க பொண்ணு ஆகட்டும், அந்த மாதிரி சொல்லலையே”, என்று சொன்னார்.

      “பாட்டி ஒரு சிலருக்கு பார்த்த உடனே புடிச்சிருமா இருக்கும்., நீங்க சொல்லுற மாதிரி வீட்ல பாத்த பொண்ணோ, இல்ல வீட்ல பார்த்த பையனோ., இவங்க நமக்கு ஓகே அப்படின்னு தோணும் சரியா., ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம்., நல்லா கவனிங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமா, ஐயோ இருந்திருந்து இவங்களையா கல்யாணம் பண்ணுனோம் அப்படிங்கற ஒரு ஃபீல் வரக்கூடாது., அந்த பீல் எனக்கு எந்த சூழ்நிலையும் வந்து விடக்கூடாது., அவங்க கிட்ட இருக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்கணும்., அதே மாதிரி தான் அவங்களும்., ஒருவேளை என்னை புடிக்கலன்னு அவங்க சொன்னாங்கன்னா., ஒன்னு  நான் காத்திருப்பேன்., இல்ல னா தூர விலகிப் போயிடுவேன்,

    எனக்கு பிடித்த மாதிரி ஒருத்தர் பார்த்தா, இவங்க தான் புடிச்சிருக்கு அப்படின்னு நான் கண்டிப்பா சொல்லுவேன்., நான் பார்க்குற வரைக்கும் வெயிட் பண்ணுங்க”, என்றாள் சிரித்தபடி,

     தாத்தா தான், “என்ன அந்த பட்டாம்பூச்சி பறக்குற கதையா”, என்று கேட்டார்.

     “ஆமா தாத்தா, இன்னிக்கு அந்த டயலாக் சொல்லாம விட்டுட்டேன் பாத்தீங்களா.,  அவர பார்த்த உடனே ஹார்ட் டப்பு டப்பு டப்பு டப்புன்னு துடிக்கணும்.,  வயித்துக்குள்ள அப்படியே குட்டி குட்டியா பட்டாம்பூச்சி பறக்கணும்.,  கண்ணு எமைக்காம அவங்கள பாக்கணும்., அப்ப கை கால் எல்லாம் ஒரு சின்ன நடுக்கம் வரணும்., அப்படி இருந்தா மட்டும் தான் எனக்கு அவங்கள பிடிக்குது ன்னு அர்த்தம், அது நல்லா இருக்கும்”.,என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

      பாட்டி தான், “என்னது பார்த்தவுடன் நடுக்கம் வரணுமா., அப்படின்னா உனக்கு வில்லன் மாதிரி ஒருத்தனை பிடித்து கட்டி வைக்கணும்”, என்று சொன்னார்.

         “பாட்டி அந்த நடுக்கம் இல்ல பாட்டி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது பாட்டி., உங்களுக்கு ஹார்மோன் எல்லாம் வேலை செய்றத விட்ருச்சு ., அதனால இதெல்லாம் யோசிக்காதீங்க”, என்று சொல்லவும்.,

    தாத்தா சிரித்துக்கொண்டே பாட்டியை பார்க்க.,

      பாட்டியோ “நல்ல தாத்தா, நல்ல பேத்தி, நல்ல குடும்பம் போங்க., அவ சொல்றதுக்கு எல்லாரும் தலையாட்டிட்டு இருங்க., அவ என்னைக்கு கல்யாணத்துக்கு சரி சொல்லி., நீங்க என்னைக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க”, என்று சொன்னார் வருத்தமாக,

   “கவலையே படாதீங்க பாட்டி, எனக்குன்னு ஒருத்தன் பொறக்காமலா இருப்பான், எங்கேயாவது பிறந்து இருப்பான்., என்ன நான் இந்த டயலாக் சொன்ன உடனே சினிமாவா இருந்தா ஹீரோ என்ட்ரி கொடுத்திருப்பான்., இப்ப ஹீரோ என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இல்லை இல்லையா., அதனால வெயிட் பண்ணுங்க., என் ஹீரோ எங்க இருந்தாலும் என்னை தேடி வருவான்,. இல்லாட்டி நான் தேடி போவேன் போதுமா., போங்க”, என்று சொல்லி விட்டு சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டு எழுந்தவள்,

     பாட்டியை பார்த்து “கூடிய சீக்கிரம் சொல்றேன் பாட்டி, வெயிட் பண்ணுங்க”, என்று சொல்லவும்.,

      “ஏண்டி எங்கேயாவது பாத்திட்டியா”, என்று பாட்டி கேட்டார்.

   “ஒருத்தரையும் பார்க்கல, பார்க்கிற மாதிரி யாரும் இல்லை”, என்று சொல்ல.,

     “அடிப்பாவி கூட எத்தனை பையலுவ  டாக்டருக்கு படிக்காம், உனக்கு சீனியர் இருப்பான், முடிச்சவன் நீ ட்ரைனிங் போற ஹாஸ்பிடலில் கூட இருக்கலாம்”., என்றார்.

     “ஐயே டாக்டரா”, என்று சொன்னவள், “அப்படியே  டாக்டரா இருந்தா கூட பார்த்த உடனே நான் சொன்ன பீல் எல்லாம் வரணும்.,  வந்தா தான் பாட்டி நான் சொல்லுவேன்”, என்று சொன்னாள்.

     “நீயே போய் சொல்ல போறியாடி”.,என்றார்.

    “புடிச்சிருந்துச்சுன்னா, நானே போய் சொல்லிடுவேன்., எனக்கு என்ன பயம்”, என்று சொல்லவும்.,

“ஆமா அப்படி உனக்கு என்னைக்காவது பட்டாம்பூச்சி அடிச்சு.,  ஹார்ட்டு துடிச்சி.,   கை, கால்  நடுங்கி நீ அவன்கிட்ட போய் சொல்லும் போது அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பிள்ளை இருந்துச்சின்னா., என்ன பண்ணுவ”, என்று கேட்கவும்.,

      ஒரு நிமிடம் தட்டோடு திரும்பி பார்த்தவள்,  “என்னைய கிண்டல் பண்ணுறீங்க”, என்று சொல்லிவிட்டு “அந்த மாதிரி ஆட்களை பார்த்து எல்லாம் அப்படி வராது பாட்டி., அவங்க மூஞ்ச பாத்தாலே தெரியும்., அவங்களுக்கு எல்லாம் கிழடு தட்டி இருக்கும்., ஒருவேளை அப்படியே வயசானதை மறைக்கிறதுக்கு ட்ரை பண்ணாங்கன்னா  கண்டுபிடித்துவிடலாம் பாட்டி., அவங்க பாக்குற பார்வையில ஒரு திருட்டுத்தனம் இருக்கும்.,

      நான் நம்புறேன்.,  அப்படி ஒருத்தர மீட் பண்ணுவேன்னு நம்புறேன்., நீங்களும் நம்புங்க., நம்ப முடியலன்னா போய் சாமி கும்பிடுங்க., அந்த மாதிரி ஒருத்தன சீக்கிரம் என் பேத்தி கண்ணுல காட்டுன்னு., அதை விட்டுட்டு சும்மா  அப்படி ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவ., இப்படி ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவ ன்னு கொஸ்டின் கேட்க கூடாது., ஒரு வேலை நான் நினைக்கிற மாதிரி ஒருத்தன் கிடைக்கலன்னா.,

     கிடைக்கலைன்னா., நல்ல நோட் பண்ணனும் சரியா, கிடைக்கலன்னா நீங்க பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா”, என்று சொல்லிவிட்டு கையை கழுவிக்கொண்டு வந்தவள்.,

கல்லூரிக்கு கிளம்ப தொடங்கவும், பாட்டி தான் “இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம்., நம்ம மதுரைக்கு போகனும்”, என்று சொன்னார்.

    இவளோ “எக்ஸாம் அன்னைக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கீங்க, அப்புறம் நான் எப்படி உங்க கூட வர முடியும் நீங்க போங்க, நான் எக்ஸாம் முடிச்சிட்டு தான் வருவேன்”, என்று சொன்னாள்.

    அவள் அண்ணன் தான், “நான் உன் கூட இருந்து வரேன்”, என்று சொல்ல,

     “இல்ல ண்ணா நீ முன்னாடி போ., நான் வந்துருவேன்”, என்று சொன்னாள்.

   “மதுரைக்கும் சென்னைக்கும் என்ன பக்கமா இருக்கு, நீ எக்ஸாம் முடிச்சிட்டு எப்ப வந்து சேருவ”, என்று கேட்டார்.