ஓங்கி உயர்ந்திருந்த ராஜகோபுரம், அதை அலங்கரித்துக் கொண்டிருந்த நுணுக்கமான சிற்பங்கள், அழகிய பெரிய தெப்பக்குளம் என மயிலாப்பூரின் சிறப்பம்சமாய் விளங்கியது கபாலீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி இரவன்று கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் தங்கள் பாதயாத்திரையைத் தொடங்கி, மயிலாப்பூரிலேயே வீற்றிருக்கும் ஆறு சிவாலயங்களுக்கும் சென்று தரிசித்து விட்டு மீண்டும் கபாலீஸ்வரர் திருக்கோயிலிலேயே அந்த யாத்திரையை முடிப்பார்கள். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரியன்று அதிக பக்தர்கள் சிவபாதயாத்திரை போவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குள் ஒருவித பரிதவிப்புடன் இளமுகிலன் நுழைந்ததும், அந்த கோயிலில் நிறைந்திருந்த தூபம் கலந்த வாசனை, சுபஸ்வரமாய் ஒலித்த நம்மாழ்வார் பாடல்கள் இவை அனைத்தும் அவனுள் ஒருவித அமைதியைப் பரப்பியது.
பெற்றவர்கள் பார்த்து வைத்திருந்த பெண்ணைப் பார்க்க வந்திருக்கிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் தரிசிக்க வந்திருக்கிறோம் என்கிற எண்ணத்தோடு தான் கோயிலுக்குள் இளமுகிலன் பிரவேசித்தான்.
அதற்கேற்றது போல் நிதானமாகத் தெய்வ வழிபாடு செய்துவிட்டு, அங்கே இருந்த தூணின் அருகில் அமைதியாக அமர்ந்து கொண்டான். இன்னும் மணி ஐந்தாகி இருக்கவில்லை. ஒரு பெண்ணுக்காகத் தான் இப்படிக் காத்திருக்கிறோம் என்பதை யோசிக்கவே மனதிற்கு உவப்பாக இருக்கவில்லை.
அமைதியாக அமர்ந்தபடி தன் மனதிற்குள், ‘இன்று தன்னைப் பார்க்க வரும் பெண்ணிடம் எவ்விதம் மனம் நோகாமல் பேசி இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்வது?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். கோயில் சூழல் தந்த மனஅமைதி அவனுக்கு நிதானத்தைக் கொடுத்திருந்தது.
மறுபுறமோ இவனுக்கு முற்றிலும் எதிர்ப்பதமாக வெண்மதி மிகுந்த பதற்றத்தோடு இருந்தாள். அவளின் உள்மனம் அவளை எச்சரிக்க நினைத்ததோ என்னவோ?
“பாருங்கடி இன்னைக்கு என்னவோ எனக்கு ஒரு மாதிரி மனசு பிசைஞ்சிட்டே இருக்கு. சம் ஸ்ட்ரேன்ஞ் (அந்நியத்தனமான) பீலிங். பேசாம இந்த பிளானை டிராப் பண்ணிடலாமா?” என்றாள் தோழிகளிடம்.
“மனசு பிசையுதா? இவ என்னடி சொல்லறா?” சிந்து ஒன்றும் புரியாமல் நிஷாவின் காதை கடிக்க,
நிஷா தான், “என்னாச்சு மதி? எதிலேயும் நீ அவ்வளவு சீக்கிரம் பின்வாங்க மாட்டயே! இன்னைக்கு ஏன் பிளானை ட்ராப் பண்ணலாம்ன்னு சொல்லற?” என்றாள் புரியாதவளாய். சிந்துவிற்குப் பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது.
வெண்மதி தன் வலது கையால் நெற்றியை லேசாகத் தேய்த்தபடி, “ம்ப்ச் அதுதான் எனக்கும் புரியலைடி” என்று குழப்பமாகச் சொன்னவள், “சிந்து ஒன்னு செய். பேசாம நீயே போய் அந்த பையனை பாருடி. தைரியமா உனக்கு பிடிக்கலைன்னு சொல்லு. எனக்கென்னவோ அதுதான் சரியா வரும்ன்னு தோணுது” என்றாள் தோழியிடம்.
சிந்து அரண்டு போனவள், “மதி ப்ளீஸ்டி…” என்று பாவமாகக் கெஞ்ச, ‘இவளுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு நான் அவஸ்தை படறேனே’ என்று இருவரையும் பார்த்து நிஷாவும் நொந்து போனாள்.
வெண்மதிக்கு உள்மனம் போ என்றும் சொல்கிறது. வேண்டாம் என்றும் சொல்கிறது. ஒரு மாதிரி அவளால் நிலையாக யோசிக்கவே முடியவில்லை. காரணமே இல்லாத பதற்றம் வேறு! இந்த மாதிரி சமீபகாலமாக அவள் தனக்குள் தவித்ததாக, அவஸ்தைப்பட்டதாக நினைவிலேயே இல்லை. நிதானமாக யோசித்துச் செயலாற்ற முடியாதபடி சிந்து கெஞ்சுவதில் கடுப்பானவள், “இப்படி பயந்து நடுங்கறவங்களுக்கு எல்லாம் காதல் செய்ய எங்கிருந்து தான் தைரியம் வருதோ?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு முன்னே விறுவிறுவென்று நடந்தாள்.
“என்னடி இவ இன்னைக்கு பார்த்து இப்படி சிடுசிடுன்னு இருக்கா?” சிந்துவால் வெண்மதியின் வித்தியாசமான செய்கைக்குக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நிஷாவும் குழப்பமாக, “அது தான்டி எனக்கும் புரியல. ஆனா அவ முழு மனசோட இதை செய்யலை. நீ நல்லா யோசிச்சுக்கோ உன்னால இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ண முடியாதா? கண்டிப்பா உனக்கு பதிலா வெண்மதி தான் போகணுமா?” என்று தோழியின் முரண்பாடான செய்கையில் கவலையுற்றவள் அவளுக்காகக் கேட்டதும் சிந்து பதறி நடுங்கினாள்.
“ஹே என்னடி இப்படி சொல்ற? நான் எப்படிடி போய் பார்க்க முடியும்?” என்று அநியாயத்திற்குப் பயந்து சாகிறவளை நிஷாவால் கட்டாயப்படுத்தவும் முடியவில்லை.
வேறு வழியின்றி, “மதி நில்லுடி… பாவம் ரொம்ப பயப்படறா?” என்று நிஷா தோழியின் பின்னேயே ஓடிப்போய் கெஞ்ச, சிந்து விட்டால் அழுதுவிடுவேன் என்கிற தோரணையில் அவர்கள் பின்னேயே வந்தாள்.
“என்னை அநியாயத்துக்குக் கொடுமைப் படுத்தறீங்கடி. இதுனால ஏதாவது பிரச்சனை வந்தது அவ தீர்ந்தான்னு அவகிட்ட சொல்லி வை” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வெண்மதி பேச, இருவரின் பின்னேயே பாவமாக வந்த சிந்துவுக்கும் அவள் சொன்னது நன்றாகவே கேட்டது. அதில் இன்னும் பாவமாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டாள்.
“மூஞ்சியை அப்படி வெச்சுக்காத. அப்படியே ஆத்திரமா வருது” என்று அப்போதும் வெண்மதி சத்தம் போட, நிஷா தான் இடையிட்டு, “ஹே கோயில் வாசல் வரைக்கும் வந்தாச்சு மதி” என்று தோழியை நிதானப்படுத்தினாள்.
“ம்ப்ச்…” என்று சலித்தவள் மணியைப் பார்க்க அது ஐந்தைக் கடந்து இருபது நிமிடங்கள் ஓடியிருப்பதைக் காட்டியது. “உங்க அப்பா போன் பண்ணினாரு தானே அந்த பையன் எங்கே இருக்கானாம்?” என்று கையைக் கட்டியபடி எங்கோ பார்த்துக் கொண்டு கேட்க,
“உள்ளே கோயிலுக்குள்ள சாமி வழிபாடு முடிஞ்சு வெளிய வர இடத்துல வலது பக்கம் இருக்கிற முதல் தூண் கிட்டயாம்டி. வைட் அண்ட் புளூ டீ சர்ட்” என்று சிந்து வேகமாக விவரம் தந்தாள்.
“சரி நான் முன்னாடி போறேன். எல்லாம் முடிஞ்சதும் கால் பண்ணறேன்” என்று சொல்லி நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டபடி உள்ளே சென்றவளுக்கு மனம் கொட்டும் இந்த மத்தளத்திற்கான காரணம் தான் விளங்கவே இல்லை.
கோயிலினுள் நுழைந்து கடவுளைத் தரிசிக்கச் சென்று விட்டாள். செல்லும் போதே பார்வையால் அலச சிந்து குறிப்பிட்ட இடத்தில் ஒருவன் இரு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றியபடி ஒய்யாரமாக அமர்ந்திருப்பது தெரிந்தது. அவள் குறிப்பிட்ட அதே நிற உடை! இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள். இலகுவாக அவன் அமர்ந்திருந்த தோற்றம் வசீகரித்தது. சில நொடிகள் இமைகளைக் கூட சிமிட்ட மறந்தவளாய் அவனையே பார்த்துக் கொண்டு நின்று விட்டாள்.
இத்தனை நேரமிருந்த பரபரப்பு குறைந்து ஒருவித ஆசுவாசம் அவளுக்குள்! யாரென்றே தெரியாத ஒருவனைப் பார்க்கும்போது மனம் இத்தனை ஆசுவாசப்படுமா என்று பெண்ணவளுக்கு புரியவில்லை. என்னவோ அவனை யாரோ ஒருவன் என்று யோசிக்க முடியவில்லை. என்ன பைத்தியக்காரத்தனம்!
அவனில் பார்வையை நிலைக்க விட்டு சில நொடிகளுக்கும் மேலேயே கடந்திருக்கும் போல, ஏனென்றால் தன்னை யாரோ பார்ப்பதாக அவனின் உள்ளுணர்வு உணர்த்தி விட்டதோ என்னவோ சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டிருந்தான். அதில் சுதாரித்தவள் வேகமாக பிரகாரம் நோக்கி சென்று விட்டாள்.
‘அவனை எதுக்குடி வெறிச்சு பார்த்துட்டு இருந்த?’ அவளின் மனம் அவளை மானக்கேடாகத் திட்டிக் கொண்டிருக்க,
அவளின் தோழிகளில் நிஷாவோ, “பார்த்தியாடி அந்த பையனை எப்படி முறைச்சு பார்த்துட்டு நிற்கிறான்னு. இன்னைக்கு இங்கே ஒரு கலவரம் நடக்கப் போகுது. உங்க அப்பா கிட்ட அந்த பையன் என்ன சொல்லி வைப்பானோ?” என்று சொல்லி சிந்துவின் வயிற்றில் புளியைக் கரைத்தாள்.
பேய் முழி முழித்த சிந்து, “என்னடி சொல்லற?” என்று கேட்க, “அவ முறைச்சதை கவனிச்ச தானே?” என்று மேலும் கலவரப்படுத்தினாள்.
“கடவுளே! அப்பாகிட்ட இந்த பிரச்சனையைக் கொண்டு போகாம சுமூகமா முடிச்சு கொடுப்பா” என்று அவசர வேண்டுதல் வைத்த சிந்துவுக்கு அப்பொழுதும் தான் சென்று இளமுகிலனை சந்திக்கும் தைரியம் இல்லை.
அமைதியாக இவர்கள் இருவரும் வேடிக்கைப் பார்க்க, இறை வழிபாடு முடித்து விட்டு நிதானமாக வெண்மதி இளமுகிலனிடம் வந்தாள். அரைமணி நேரத்திற்கும் மேலாகவே அவன் காத்திருந்து விட்டான். இவள் தாமதித்து வர சிறு சுணக்கம் கூட அவனிடம் இல்லை. தன்னருகில் ஒரு பெண் வந்ததும் ஏறிட்டுப் பார்த்தவன், அவளைப் பார்த்தது பார்த்தபடி சில நொடிகள் இருந்து விட்டான்.
பிரபஞ்சத்தில் நம் தேடல்கள் அதிகம்! இவனுள்ளும் ஒரு தேடல் உறங்காமல் இவனை அனுதினமும் இம்சித்துக் கொண்டிருக்கிறதே!
எதிரில் நின்றிருக்கும் பெண்ணை ஏன் பார்த்தது பார்த்தபடி இருக்கிறோம் என்று இளமுகிலனுக்கு தெரியவில்லை. ஆனால், அவன் சிந்தையில் அந்த நேரம் முற்றுமுதலாக எதிரில் இருப்பவளே நிறைந்திருந்தாள். இதற்கும் அவளின் பெயர் கூட இவனுக்குத் தெரியாது.
காற்றில் பறந்த அவளின் முன்னுச்சி முடிகள் வேகமாக வந்து காரிகையவளின் விழிகளை மறைக்க அதை அவசரமாக பின்னுக்குத் தள்ளியவளின் தளிர் விரல்கள், “சாரி பார்ட்னர் சட்டுன்னு முடி எல்லாம் கண்ணுல வந்து விழுந்துடுச்சு. இந்த முடியை ஒதுக்கிறதுக்கே தனியா இன்னொரு கை வேணும் போல… இருங்க எல்லாத்தையும் சுருட்டி கொண்டை போட்டுட்டு வரேன். டூ மினிட்ஸ் பிரேக் ப்ளீஸ்” என்று அவசர அவசரமாக உரைத்த பெண்ணின் குரலை நினைவுக்குக் கொண்டு வந்தது என்றால்,
நவநாகரீக மங்கையவள் அணிந்திருந்த பளீர் வெண்ணிற சுடிதாரில் சிதறியிருந்த அடர் சிவப்பு பூக்களும், அந்த பூக்களின் மகரந்தமாய் கண்ணை உறுத்தாத வண்ணம் ஜொலித்துக் கொண்டிருந்த தங்க வண்ணமும், “எனக்கெல்லாம் செண்டிமெண்ட் அதிகம். நான் நினைச்சது நடக்கணும்ன்னு நினைச்சா அன்னைக்கு கண்டிப்பா வைட் டிரஸ் தான்… அதில்லைன்னா ப்ளூ ஆர் கிரே. அப்பறம் ரெட், கோல்டன் எல்லாம் ஏடேட் அட்வான்டேஜ்” என்று சொன்னவளின் குரலை அவனுள் ஒலிபரப்பியது.