Advertisement

கனவுக்குள் காவல் – ௰௨

“என்னாச்சு மதி?” என தன் அருகே  அமைதியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கேள்வி எழுப்பினான் ரகு.  “ஒன்னும் இல்ல”, என்று கூறிய போதும், அவள் ஏதோ யோசனை இருக்க, ரகு மீண்டும் “என்னாச்சு?”, என்றான்.

ஒரு நொடி அவனை உற்றுப் பார்த்தவள்,  மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என அந்த அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள்.

அந்த அறையின் முதன்மை மேஜைக்கு அருகில் கௌதமியும் பரத்ராஜும் அமர்ந்திருக்க, ஒரு மூலையில் ரவி நின்று கொண்டு அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

அந்த அலுவலக அறை மிகப்பெரியதாகவே இருக்க, அதன் இன்னொரு மூலையில் அமர்ந்து இவர்கள் இருவரும் மெல்லிய குரலில் பேசுவது மற்ற யாருக்கும் கேட்பதற்கான வாய்ப்பில்லை.

மற்ற மூவரையும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு ரகுவிடம், “ஆமா…. ஏசிபி ஆபீஸ் எப்படி, நல்லா இருந்துச்சா?” என புருவம் உயர்த்தி கேட்டாள்.

உடனே கண்களை சுருக்கி அவளைப் பார்த்தவன், இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, “மிஸ்டர்.  கதிரவன், ஊர்ல இருந்து வந்த உடனே உன்கிட்ட நியூஸ் பாஸ் பண்ணிட்டாரா?, என்றான்.

“கதிரவன் ஊருக்கு போன விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்”, என மீண்டும் மதி கேள்வி எழுப்ப,

“அன்னைக்கி போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து மறுநாள் ஜெய்க்கு கால் பண்ணி அவரை மீட் பண்ண முடியுமான்னு கேட்டேன். அவர் ஊருக்கு போயிருக்காருன்னு சொன்னான். அப்புறம்  நானே ஒரு நாள் அவரை மீட் பண்ணிக்கிறேன்னு  சொல்லி வச்சிட்டேன்” என்று ரகு சொல்லி முடித்தான்‌.

“ஓஹோ “, என்று விட்டு, “நான் முதல்ல கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லையே?”  என மீண்டும் முதல் கேள்வியை நினைவூட்டினாள்.

“ஏன், உனக்கு தெரியாதா?” என அசால்டாக கூறியவனை, அழுத்தமாக அவன் புஜத்தில் கிள்ளி வைத்தாள்.  மற்றவர் கவனத்திற்கு சென்று விடுமோ என அஞ்சி,  வலியை கத்தாமல் பொறுத்துக் கொண்டவன், மதியின் புறமாக நன்றாக திரும்பி அமர்ந்துக் கொண்டு, “ஏன் மதி?” என பாவமாக வினவினான்.

“அப்புறம் என்ன? உங்களுக்கு ஏன் அப்படி ஒரு அசால்ட்டு.  அன்னைக்கு யாராவது  உங்க முகத்தை பார்த்து இருந்தா, என்ன ஆகும் யோசிச்சு பாத்தீங்களா.  சும்மா ஏதாவது ஒரு விஷயத்தை ஏட கூடமா செஞ்சு வைக்கக்கூடாது”

“அந்த கதிரவன் உன்கிட்ட முழுசா சொன்னாரா இல்லையா?  நான் ஒழுங்காக தான் எல்லாத்தையும் செஞ்சேன். ஏட கூடமா எல்லாம் எதுவும் செய்யல” என அப்பாவியாக பேசிக் கொண்டிருந்தான்.

“அப்படி எதுக்கு அவனை அடிக்கனும்னு நான்  நான் கேட்கிறேன்”

“காலையில சொன்னது தான் உன் உயிர் எனக்கு சொந்தமானது”

காலையில் அவன் சொன்ன போதே அவளால்  அப்பேச்சுக்கு மறுப்பேச்சு பேச முடியவில்லை, இப்போது மட்டும் பேச முடிந்து விடுமா என்ன?

மதி அமைதியாக அமர்ந்திருக்க,  அவள் கை விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக்கொண்டு, “சரி கிளம்பலாமா ?உனக்கு வொர்க் இருக்கும் இல்ல?” என்றான்.

அவள் சரி என்றதும் இருவரும் எழுந்து நிற்க, மற்ற மூவரின் பார்வையும் இவர்களை நோக்கி திரும்பியது. உடனே ரகு  ரவியிடம் “நம்ம கிளம்பலாம் “, என்று கூறிவிட்டு, கௌதமி பரத இருவரையும் ் ஒரு பார்வை பார்த்துவிட்டு மதியுடன் நடக்க ஆரம்பித்தான்.

மதியும் இருவரிடமும் வருகிறேன் என சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

வெளியே வந்த மூவரும் அந்த நடை கூடத்தில் ஒன்றாக நடந்து கொண்டிருக்க, சட்டென்று தன் நடையை நிறுத்திய ரகு ரவியிடம், “டேய் முன்னாடி போடா”, என கோவம் போல் சொல்ல,

ரவியும், “காதலி வந்தா நண்பனை துரத்தி விட்டுருவானுங்க” என முனுமுனுப்பாக, அதே சமயம் மற்ற இருவருக்கும் கேட்கும்படி கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

“இப்ப எதுக்கு அவர விரட்டுனீங்க”

“பின்ன நம்ம ரெண்டு பேரும் மட்டும் ஒண்ணா போகணும்ல.   அவன் என்னடான்னா நம்ம கூடவே வரான். அதுக்கு தான்”

“நான் உங்க கூட வரப்போறதில்லை, ரகு.  நீங்க இங்க ஃபேமிலி மெம்பர்ஸ் யூஸ் பண்ற பர்சனல் லிப்ட்ல போக போறீங்க. நான் இந்த பக்கம் இருக்கிற ஸ்டாப் யூஸ் பண்ற லிப்ட்ல போ போறேன். பாய்”

“மதி, பேமிலி மெம்பர்ஸ் யூஸ் பண்ற லிஃப்ட்ல தான நீயும் வரணும் அந்த பக்கம் போறேன்னு சொல்ற. நோ நோ. என் கூட வா”

“நான் ரிசப்ஷன் வழியா தான் மேல வந்தேன். மறுபடி அந்த வழியா தான் கீழ போகணும் நீங்க இந்த பக்கம் போங்க. ஓகே பாய்”,  என்று கூறி விட்டு விறுவிறுவென இயந்திர தூக்கி நோக்கி நகர்ந்தாள்.

அதன் உள்ளே சென்றவள் பொத்தானை அழுத்தி விட்டு ரகுவை பார்த்தவாறு நின்றாள்.  அவளை சிறுபிள்ளை கோபத்தோடு பார்த்துக் கொண்டு இருந்த ரகு, கதவு மூடும் கடைசி நிமிடத்தில் கண்சிமிட்டி, முத்தம் கொடுப்பது போல சமிக்ஞை செய்ய,

அவளுக்கு முகம் கொள்ளா புன்னகை.  அதன் ஊடே தெரிந்த வெட்க சாயலை, அங்கிருந்து வெளியேறும் நேரம் யாருக்கும் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.

அதன் பின் அந்த இளம் தம்பதியினர் இருவரும் அவரவர் வேலையில் மூழ்கி விட்ட போதும் மனதின் ஓரம் ஓர் இனிய உணர்வோடு சுற்றிக் கொண்டு இருந்தனர்.

நேரம் இரவை நெருங்க வீடு திரும்பிய இருவரும் தங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு,  தங்கள் அறையில் அன்றைய நாளின் உடல் சோர்வை போக்க சாய்வாக அமர்ந்திருந்தனர்.

நம் துணையோடு ஆன நேரங்களும் அவர்களின் அருகாமையும் நம்மை இனிமையாக  உணரச் செய்தாலும், மறுபுறம் கடந்த காலத்தின் வலியும் வேதனையும், அந்த இரவின் கூக்குரல்  நிசப்தத்தில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

அதுவும் மதிக்கு கடந்த கால நினைவுடன் காலையில் தான் கேட்ட செய்தியினால் ஏற்பட்ட குழப்பமும் மனதின் ஓரம் இருக்க,  அவற்றை ரகுவிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

மதி ரகுவைத் திரும்பி பார்க்க அவனும் ஏதோ ஒரு வேதனையில்  தவித்துக் கொண்டுருக்கிறான் என்பதை முகமே காட்டிக் கொடுத்தது.

“ரகு”

“..”

“ரகு”

“ஹான்….சொல்லு மதி”

“ரகு உங்க பேஸ் ஏன் இவ்ளோ டல்லா இருக்கு என்ன ஆச்சு “

“கடந்த கால ஞாபகங்கள்”

“உங்களுக்கு அதை சொல்றதுல எந்த பிரச்சினையும் இல்லன்னா, கண்டிப்பா என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்”

எனக் கூறியவளை நிமிர்ந்து சில நொடிகள் பார்த்துக் கொண்டு இருந்தவன், சட்டென்று அவள் மடியில் படுத்துக்கொண்டான்.

மதியின் விரல்கள் தானாக அவன் தலைமுடியை கோத ஆரம்பித்தது.

“காலைல நீ லிஃப்ட் ஏறி போற வரைக்கும் ஒன்னும் தெரியல. நீ போனதுக்கப்புறம் அங்க இருந்து அமைதி எனக்கு பழச ஞாபகம் படுத்திருச்சு”

“ஐம் சாரி.  எனக்கு தெரிலை”

“சாரி எல்லாம் வேண்டாம் மதி.  ஜஸ்ட் உன் கிட்ட சொன்னேன். நீ போயிட்டு மெசேஜ் பண்ணல்ல, அதை பார்த்ததுமே நான் நார்மல் மோட்க்கு வந்துட்டேன்.

இப்போ இப்படி சாஞ்சு உக்காந்து காலைல இருந்து நடந்ததெல்லாம் யோசிச்சிட்டு இருக்கும்போது, மறுபடி அந்த நேர ஞாபகங்கள். வேற ஒன்னும் இல்ல.”

“இப்ப என்னோட மெசேஜ் இல்ல, நானே உங்க பக்கத்துல தான் இருக்கேன். உங்களுக்கு என்ன சொல்லணும் தோணுதோ சொல்லுங்க.”

“ம்ம்ம்..சொல்றேன். உன்கிட்ட மட்டும் தான் என்னால் எல்லாத்தையும் சொல்ல முடியும் “.

“ம்ம்”

“மதி இந்த குடும்பம் இதுதான் எனக்கு எல்லாமே இந்த வீட்ல நான் எல்லாருக்கும் செல்ல புள்ளையா இருந்தேன். தாத்தாவுக்கு கூட அம்மா ஒரே பொண்ணு, அதனால அவங்க பேரன் நான் ரொம்ப செல்லமா இருந்தேன்.

சின்ன வயசுல இருந்து செல்லம் கொடுத்து எல்லாரும் வளர்த்தாலும் எனக்கு பொறுப்பு இல்லன்னு சொல்லிட முடியாது.

எல்லா விஷயத்தையும் பொறுப்பா  பார்த்துக்கணும், எல்லாத்தையும் பாத்துக்குற கடமை எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும்.  ஆனா மத்தவங்களுக்கு நான் ஏதோ அப்படி இல்லாத மாதிரி தான் தெரியும் அது மாதிரி தான் என்னை காட்டிப்பேன்.

அது அப்பாக்கு மட்டும் தான் தெரியும். மற்ற யாரும் நான் பொறுப்பில்லாத பையனாதான் செல்லம்மா வளந்து இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தாங்க.  ஏன் அம்மா கூட அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தாங்க.

அப்படி மத்தவங்க நினைக்கிறதில எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்.  அதுவே பின்னாடி எனக்கு வாழ்க்கைல பெரிய இழப்பை தரும்னு அப்போ எனக்கு தெரியாது”

அதன் பின் சில நிமிடங்கள் மௌனமாகவே கரைய மதி மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.

“என்னாச்சு”

“மதி காலைல பேப்பர்ஸ் சைன் பண்ண வந்தியே, நீ ஏன் கார்மெண்ட்ஸ் ல வச்சு சைன் பண்ணன்னு உனக்கு தெரியுமா. அதுவும் நம்ம ஹெட் ஆஃபீஸ் இருக்கும்போது அம்மா ஏன் அங்க உன்னை வர சொன்னாங்கனு உனக்கு தெரியுமா?”

“எனக்கு பெருசா தெரியாது. ஆனா ஒரு கெஸ்ஸிங் தான். மாமா ஆரம்பிச்ச முதல் பிசினஸ் கார்மெண்ட்ஸ். அப்ப தனி ஆபீஸ் கூட கிடையாது. மே பீ அந்த சென்டிமென்ட் காரணமா அங்க வர சொல்லி இருக்கலாம்”

“எஸ், கரெக்ட் தான். பிசினஸ்காக நடக்கிற எல்லா பெரிய விஷயமும் அங்கதான் ஆரம்பிக்கும்.

அப்பாக்கு ரொம்ப பிடிச்ச இடம் கார்மெண்ட்ஸ்.  ஏன்னா அவரோட முதல் பிஸ்னஸ் அது.  இருந்தாலும் தன் தம்பி கேட்ட காரணத்துக்காக கார்மெண்ட்ஸ் பொறுப்பு மொத்தத்தையும் சித்தப்பா கையில ஒப்படைச்சாரு அப்பா.

சித்தப்பாவும் எல்லாத்தையும் சரியாதான் செஞ்சுட்டு இருந்தாரு. ஆனா எங்கிருந்து அவருக்கு அந்த பேராசை வந்ததுன்னு தெரியல அவர் முதல் முறை ஒரு தப்பு பண்ண ஆரம்பிச்சாரு.

அப்பா சித்தப்பா தப்பு பண்றாருன்னு நினைக்கல. ஆனா கார்மெண்ட்ஸ்ல ஏதோ தப்பு நடக்குது மட்டும் தெரிஞ்சுக்கிட்டாரு. அந்த விஷயத்தை பத்தி என்கிட்டையும் அம்மா கிட்டயும் சொன்னாரு.

நான் அப்பாக்கு நிறைய தடவை பிசினஸ்ல ஐடியா கொடுத்திருக்கேன்.  அதனால அம்மாக்கு நான் பொறுப்பா இல்லனா கூட என்கிட்ட ஏதோ திறமை இருக்குன்னு நம்பிக்கை.

இந்த விஷயத்தை நீயே என்னன்னு பாருன்னு அம்மா என்கிட்ட சொன்னாங்க. ஆனா இதை நீங்களே பார்த்துக்கோங்கன்னு அசால்ட்டா சொல்லிட்டேன் போய்டேன்.

அப்பா அதுக்கப்புறம் அடிக்கடி இதைப் பத்தி பேசும் போதும் அம்மா என்கிட்ட சொல்லிட்டு இருப்பாங்க, நான் காதிலையே வாங்காத மாதிரி இருந்திப்பேன்.

ஆனா உண்மைலயே நான் அந்த விசயத்தை அடில இருந்து நுனி வரை கண்டுப்பிடிச்சிட்டேன்.  அதுல சித்தப்பா தப்பு ரொம்ப பெரிசிங்கிற வரை.

ஆனா இந்த விஷயத்தை பத்தி நான் அப்பாகிட்ட எதுவும் சொல்லல.

அப்பாக்கு தெரிஞ்சாஅவர் ரொம்ப வேதனைப்படுவார்னு தான் நான் சொல்லல. அதே சமயம் அதை தொடர விடவும் இல்லை.

நான் சித்தப்பாவ சும்மா விட்டு வைக்கல. அவர்கிட்ட டைரக்ட்டாவே போய் அவருக்கு ஒரு வார்னிங் கொடுத்துட்டு தான் வந்தேன்.

இதுக்கு மேல அவர் ஏதாவது தப்பு செஞ்சா, அவர் இந்த கார்மெண்ட்ஸ் மட்டும் இல்லாமல் இந்த குடும்பத்தையும் சேர்த்து இழக்க வேண்டி இருக்கும்னு சொல்லிட்டு தான் நான் வந்தேன்.

அந்த சமயம் தான் எனக்கு காலேஜ்ல ஒரு எஜுகேஷன் ட்ரிப் இருந்தது.  இரண்டு நாள் அந்த ட்ரிப் போயிட்டு  திரும்பி வரும்போது எனக்கு அந்த நியூஸ் கிடைச்சது.

அப்பாக்கு ஹார்ட் அட்டாக்……….    ஸ்ட்ரெஸ் அதிகமானதால ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாருன்னு சொன்னாங்க.”

சொல்லும்போதே குரல் உள்ளே போய்விட தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்தான் சிறுபிள்ளையாய்.  பதிலுக்கு அவனிடம் எதுவும் பேசாமல் அவன் தலையை கோதி கொடுத்தபடியே அமர்ந்திருந்தாள், மதி.‌

காவல் புரிவா(ள்)ன்.

மகா ஆனந்த் ✨

Advertisement