Advertisement

கனவுக்குள் காவல்

ஆணோ? பெண்ணோ? தன் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், தோல்விகள் என்ற கசப்பான பக்கங்கள் அனைத்தையும் கடந்து வந்தால் மட்டும்தான், வாழ்வின் மகிழ்ச்சி வெற்றி நிம்மதி என்ற இனிப்பான கனிகளை சுவைத்திட  முடியும்.

  இவற்றை  கடந்து வரும் காலங்கள் எல்லாம் நமக்கு போராட்டம் தான்.  இப்போராட்டங்கள் நிறைந்த  வாழ்வை வாழ நம் மனம் எதிர்ப்பாப்பது ஒன்றே ஒன்றுதான்.  “என்றும் நான் உன்னுடன் துணை இருப்பேன்” என்று உரைத்து, தன் தோளோடு தோள் நிற்கும் ஓர் வாழ்க்கை துணையை மட்டுமே.

    இதற்கு எடுத்துக்காட்டாய் அப்படி ஒரு வாழ்வை  வாழ்ந்தே காட்டி அதில் வெற்றியும் கண்டிட இங்கு ஓர் காதலர்கள் தன் இணையின் துணையுடன் வருகின்றனர்.

                              பயணம் ஆரம்பம்……

பாகம்-க

  பாசம் தனை நெஞ்சில் சுமந்து,

  தன்னவர்களையும் தன் மக்களையும்

  அரவணைத்து,  பார்வையில் நேர்மையும் திடமும் கொண்டு,

   எதிர்த்து நிற்கும் தீயவர்களை மண்ணில் புதைத்து,

   தன் மன்னன் மனம்தனில் காதல் புரிந்து,

   ஆண்டுகள் பல கடந்தும் மக்கள் மனங்களை ஆட்சி செய்யும்,

   நாற்புறமும் கோபுரங்கள் சூழ்ந்த  மாளிகையில் வீற்றிருக்கும்

   எந்தன் மகாராணி அவள் “மீனாட்சி.”

அவள் வீற்றிருக்கும் மதுரை மண்ணில் இருந்து புறப்பட்டவள் தான் இவள் நம் நாயகி, “மேகமதி“, வயது 25. தந்தை- ஞானவேல், தாய்- தனம். இரு சகோதரிகள் சக்தி மற்றும் ஜீவா.

       இவள் பிறந்தது, வளர்ந்து எல்லாம், மதுரையில் தான். ஆரம்பம் கல்வி முதல் மேல் நிலை கல்வி வரை ஒரே பள்ளியில் பயின்றாள். மதுரையில் ஓர் பிரபல கல்லூரியில் இளங்கலை -இதழியல் மற்றும் மக்கள் செய்தி தொடர்பு (journalism and mass communication) பட்டப்படிப்பை முடித்து இருந்தாள்,மதி.

        தான் வளர்ந்த மண்ணே தன் சொர்க்க பூமி என வாழ்ந்து வந்தவள், தன் பெற்றோரிடத்தில்” மதுரை மாப்பிள்ளை தான் எனக்கு பார்க்க வேண்டும்” என வாதிட்டவள், தற்சமயம் வசிக்கும் இடம் சென்னை.  படிப்பு, வேலை என எதற்கும் தன் மண்ணை தாண்டாதவளை அவள் வாழ்வில் ஏற்பட்ட சில இழப்புகளும் அதனால் நேர்ந்த துயரமும், இந்த சிங்கார சென்னைக்கு அழைத்து வந்திருந்தது.

         மதி, சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் அதன் பின்னனியையும் அறிந்து,  அதனை மக்களிடம் சேர்க்க விரும்பும், தைரியமும், திடமும், துடிப்பும் கொண்ட ஓர் இளம் பத்திரிகையாளர்.

        “The society” எனும் வாரப் பத்திரிகையின் மதுரை கிளையில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக இவள் பணிபுரிந்தது.  அவ்வப்போது சென்னை தலைமையகத்திற்கு வந்து செல்பவளுக்கு சில மாதங்களுக்கு முன்பு இங்கு ஓர் சிறப்புப்பணிக்காக மாற்றல் வந்தது.  இருப்பினும் அதனை மறுத்து வந்தவள்,  இரு வாரங்களுக்கு முன்பு தான் தானே கேட்டு இங்கு வந்திருந்தாள்.

           குற்றங்களை கண்டறிந்து அதனை மக்களிடம் சேர்ப்பது மட்டும் அல்லாது அதன் ஆதி முதல் அந்தம் வரை முழுவதுமாய் அதனை விளக்கி மக்களிடம் விழிப்புணர்வையும் வளர்ப்பவள்.

         மேலும்,  மற்றவர்களுக்கு தான் செய்யும் செயலால்  என்னனென்ன இன்னல்கள் ஏற்படும் என சற்றும் சிந்திக்காத சிலர் செய்யும் அலட்சியங்களையும்,  சிறியது என எண்ணிக்கொண்டு பெரும் குற்றங்களுக்கு துணை புரியும் கேடான செயல்களையும்,  தவறென அறிந்தும்   “இதைத்தான் அனைவரும் செய்கின்றனர்” என்பவர்களின் சப்பைக்கட்டுகளையும்,  பொட்டில் ஆணி அடித்ததுப்போல் தன் எழுத்துக்கள் மூலம் மக்களுக்கு உரைக்கும் ஓர்  சிறந்த பத்திரிகையாளர் ஆகவும் திகழ்பவள்.

         இவை மட்டும் அல்லாது, வாழ்வில் படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர்கள், தடைகளை தகர்த்தெறிந்து கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு முன்னேறுபவர்கள், தன் முன்னேற்றத்தொடு மற்றவர்கள் முன்னேற்றத்திற்கும் துணை புரிபவர்கள் என பலரிடம் நேர்காணல் செய்து அதனை மக்களிடம் சேர்ப்பதனையும் தன் பணியாக செய்து வருகிறாள்.

       இவள் கட்டுரைகளும், நேர்காணல்களும் “மதுரம்” எனும் புனைப்பெயரில் வெளியிடப்படுகிறது.  இவள் எழுத்துக்களை வாசிக்கவென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

      இப்போது கூட  ஏனையோர்க்கு சிறு தொழில் அமைத்தளித்து அதன் மூலம் தானும் வளர்ச்சிப்பாதையில் முன்னேறும் ஓர் தொழிலதிபரின்  நேர்காணலை பதிப்பித்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் ஓர் பயணத்தில் இருக்கிறாள் மதி.

         தன் உடன் பணிபுரிபவர்கள் தன்னுடன் வர இயலா நிலையிலும்,  அந்த இரவு வேளையில், சென்னையில் இருந்து வெகு தொலைவில் தள்ளி அமைந்திருந்த அந்த “@@@” ஐந்து நட்சத்திர விடுதிக்கு ஓர் வாடகை மகிழுந்தின் உதவியுடன் பயணித்து கொண்டிருந்தாள், நம் மதி.

         இரு திசைகளிலும் வீற்றிருக்கும் மரம், செடி,  கொடிகளும்,  வெட்டவெளிகளும்,   இரவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள செயற்கை ஒளியில் அமைந்திருந்த சில நெடுஞ்சாலை கடைகளும், இருளில் கள்ளன் போல் யாருக்கும் அகப்படாமல் மேனி தீண்டி மனதை கொள்ளை அடிக்கும் தென்றல் காற்றும்,  இப்படி எதுவும் அவளை கவரவில்லை.  மாறாக அவள் மனம் கடந்த காலத்தில் தேங்கி நின்றது.

          வானில் சூழ்ந்திருந்த இருள் போல அவள் மனமும் இருளில் தான் இருந்தது. தன்னைப் போலவே இழப்பின் வலியில் இருந்து மீளாத தன் சொந்தத்தை அங்கே தனியே மதுரையில் விட்டு வர அவளுக்கு விருப்பம் இல்லை தான்.

          எனினும் தான் மறைத்து வைத்திருக்கும் உண்மை அவர்களுக்கு தற்சமயம் தெரியவேண்டாம் என எண்ணிதான் அவர்களை சிறிது காலம் பிரியும் முடிவை எடுத்திருந்தாள். ஆனால் அந்த முடிவு அவளுக்கு வேதனையோடு குற்றவுணர்ச்சியையும் தந்துக் கொண்டிருக்கிறது.

     திடமும் துடிப்பும் கொண்ட பெண் என்றாலும், எத்தனை துன்பங்களை தனியே சுமப்பது.  இத்தனை துன்பங்களை மனதில் சுமந்திருக்கும் நம் நாயகியின் மனத்துயரம் போக்க இருள் வானை தோற்கடிக்கும் இளம் சூரியனாய் தோன்றிடுவானா, நம் நாயகன்?  பார்ப்போம்.

         அது இரவு வேளை என்ற காரணத்தால், அந்த நெடுஞ்சாலை எந்த வாகன நெரிசலும் இல்லாது இருந்தது.  அதனால் வெகு விரைவிலேயே அந்த “@@@” விடுதியை அடைந்து இருந்தது மகிழுந்து.   இணையத்தின் வழியே கட்டணத்தை செலுத்தி விட்டதால் ஓட்டுநரிடம் நன்றி மட்டும் உரைத்துவிட்டு விடுதிக்குள் நடைப்போட்டாள், அந்த பத்திரிக்கைக்காரி.

          வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் தன் மனம் எங்கும் பரவி கிடந்த போதும் எதையும் தன் முகத்தில் காட்டாது புன்னகை என்னும் முகமூடியில் மறைத்துக்கொள்பவள்.  இப்போதும் அவ்வாறே தன் புன்னகை முகம் மாறாது விடுதியின் வரவேற்பு பகுதிக்கு விரைந்தாள்.

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்

இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்

எனக்கே தான்…. (மடை திறந்து….)

பின்னணியில் இப்பாடல் வரிகள் அறையை நிரப்பிக்கொண்டு இருக்க,  அதில் லயிக்காது அந்த பௌர்ணமி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.  அவன், கோலிவுட் எனும் திரை சாம்ராஜ்யத்தின் இளம் இயக்குனர்.

      கதைகளை இயக்கும் இவன், நம் கதைக்கு நாயகன், ரகுநந்தன்.  வயது 29. தந்தை- கவிதரன், தாய்- கௌதமி. சித்தப்பா-பவிதரன், சித்தி- தேவி. இவர்களின் புதல்வன், நம் நாயகனின் அண்ணன்- பரத்ராஜ்.

        “தரன்” குழுமம், தமிழ் நாட்டில் பெயர் பெற்ற குழுமங்களில் ஒன்று.  ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை இக்குழுமத்தில் அதிக பங்குகளை வைத்திருப்பவர்கள் தரன் குடும்பத்தினர்.  அக்குடும்பத்தின் வாரிசுதான்,  நம் ரகுநந்தன்.  ஒரு காலத்தில் தன் குடும்ப நபர்களின் நடுவே செல்லப் பிள்ளையாய் வலம் வந்தவன்.

        வீட்டில் அவன் கேட்ட எதுவும் கிடைக்காமல் போனது அல்ல. குடும்பத்தில் உள்ள அனைவர் இடத்திலும் வம்பு வளர்த்து, சேட்டை செய்து, கொஞ்சி விளையாடி என அனைவரின் அன்பிலும் வாடா புன்னகையுடன் வளர்ந்தவன்.

       இப்படி வளர்ந்த ரகுவிற்கு இப்போது கிட்டியது என்னவோ தனிமை மட்டும் தான். வீட்டிற்குள் அனைவரும் இருந்தும் தன் வீட்டிலேயே அனைவராலும் ஒதுக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

         மனம் முழுவதும் தன் உறவினர்களின் பிரிவால் ஏற்பட்ட வேதனையை  சுமந்து வாழும் ரகுவிற்கு உற்ற நண்பன் ஒருவன் இருக்கிறான். ரகுவின் ஒற்றை ஆறுதலும் அவன் தான், ரவி சரண்.  ரகுவின் பள்ளி தோழன்.

       சிறுவனாய் இருந்த காலம் தொட்டு ரகுவின் குறும்பு குணத்திற்கே ஏகபோக நண்பர்கள்.இருப்பினும் நெருங்கிய தோழன் என்பது ஒருவன் தானே.

     அப்படி ஒருவனாக ரகுவிற்கு கிடைத்தவன் தான் ரவி.  ரவி ரகுவை போல் அல்ல மிகவும் அமைதியானவன்.   சிறு வயது முதல் ரகுவை தவிர யாரையும் தன்னை நெருங்கவிட்டது இல்லை அவன்.

        ரவிக்கு தந்தை மட்டும் தான்,  அவரும் தொழில் காரணமாக வெளியூர் சென்றுவிடுவதால் இவனுக்கு வருடத்தில் பாதி நாட்கள் நண்பன் வீடு தான். சிறு வயது முதல் இது தொடர்ந்ததால் ரவிக்கு தங்கள் வீட்டில் தனியாக ஓர் அறையை ஏற்பாடு செய்திருந்தனர் ரகுவின் பெற்றோர்.

           தன் நண்பனின் இன்பம் துன்பம் இரண்டையும் அருகில் இருந்து பார்த்தவன் ரவி. இனியும் நண்பன் வாழ்வில் ஏற்பட போகும் அத்தனை மாற்றஙகளுக்கும் ஆதாரமாக இருக்க போகிறவன்.

         ரகு செல்வத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் அத்தனையும் வீட்டிற்குள் மட்டும் தான் வெளியே மற்றவர்களுக்கு அப்படி இருந்தது அல்ல.  தன் குடும்ப செல்வாக்கைப் பள்ளி காலங்களில் பயன்படுத்தி இருக்கின்றான் தான், எனினும் தன் கல்லூரி காலம் முதல் இயக்குனராக வெற்றி பெறும் வரை சாதாரண மத்திய நிலை குடும்பத்தைச் சேர்ந்தவனாக மட்டுமே தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

         அதனால் தான் என்னவோ, அவனுக்கு திரை துறையில் அடி எடுத்து வைக்கும் வாய்ப்பு அத்தனை எளிதில் கிட்டவில்லை.  உதவி இயக்குநர் பணி கிடைக்கவே பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது.   ஒரு வருடப் போராட்டத்திற்கு பிறகு தான் அந்த பணியும் கிடைத்தது.

         உதவி இயக்குநர் பணியில் சேர்ந்து ஒரு வருடம் நிறைவு பெற்று சிலவற்றை கற்ற பின்பு தான் ரகு தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்ல முயற்சித்தான். ஆனால் அவர்களிடம் நின்று பேசும் வாய்ப்பு கூட முதலில் அவனுக்கு கிடைக்கவில்லை.

       முதல் முறை ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிட்டியபோது இதனை தவற விடக்கூடாது என்பதில் மட்டும் திடமாக இருந்தான். அவன் திடமும் திறமையும் முதல் முறையிலேயே அவனுக்கு இயக்குநராக தன்னை நிரூபிக்கும் வாய்ப்பை அளித்தது.

      இதற்கு இடையில் அவன் இரண்டரை வருடத்தில் மூன்று திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தான். அந்த பயிற்சி அவனுக்கு இயக்குநர் பணியில் பெரும் உதவியாக இருந்தது.

      இவன் முதல் படமே இவனுக்கு பேர், புகழ், அடுத்தடுத்த வாய்ப்புகள் என அத்தனையும் அள்ளித்தந்தது. அதன் பின்னரே, இவன் பூர்வீகம் அனைவராலும் அறியப்பட்டது.  இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளான். அனைத்தும் வெற்றி தான்.

மேலும் மூன்று படங்களை தயாரித்தும் உள்ளான்.  அவை எதுவும் நஷ்டத்தை சந்திக்காது நன்றாகவே ஓடின.  தற்சமயம், தனது ஆறாவது படத்தின் படப்பிடிப்பில்  உள்ளான்.

காலை விடியலுக்கு முன்பு ஓர் காட்சி படப்பிடிப்பு இருப்பதால் வீட்டிற்கு செல்லாது அந்த விடுதியில் தங்கி இருக்கிறான்.  வீட்டினர் யாருக்கும் அவன் இரவு இங்கு தங்க போகும் செய்தி சொல்லப்படவில்லை.  எனினும், அவன் இங்கு தங்குவதைப் பற்றி ஏன் என்று அவன் குடும்பத்தினர் யாரும் விசாரிக்க போவதும் இல்லை.. இப்படி இருக்கையில்…..

      சற்று முன் நண்பனிடம் இருந்து வந்திருந்த குறுஞ்செய்தி அவனை சம்பிக்க செய்திருந்தது. கூடவே தன் வீட்டினருக்கும் தனக்கும் இருக்கும் இன்றைய நிலையும். அதை எண்ணிக் கொண்டு தான் அசைவற்று நின்றிருந்தான் நம் நாயகன்.

      நம் நாயகனின் இன்னல் என்னவாக இருக்கும்? அதனை களைய நம் நாயகனுக்கு துணைப் புரிவாளா நம் நாயகி? பார்ப்போம்.

     அச்சமயம் அழைப்பு மணி ஒலிக்க, அவன் செவிகளில் அப்போது தான் அங்கு ஒலித்த இசையும் உரைத்தது. அழைப்பு மணியின் ஒலிக்கு பதிலளிக்க, தான் நின்றிருந்த நிலையில் இருந்து மாறி கதவை திறக்க சென்றான்.

கதவை திறந்தவன் வெளியே கண்டது நம் மதியை தான்.  அவளும் அவனைத்தான் சற்று வியந்த விழிகளோடு பார்த்திருந்தாள்.  ஆம், நம் கதையின் நாயகன் நாயகி ரகுநந்தன்- மேகமதி அவர்களின் சந்திப்பு அங்கே நிகழ்ந்திருந்தது.

                                                                                        —காவல் புரிவா(ள்)ன்.

                                                                                              ‌_மகாஆனந்த்-

Advertisement