திலகம் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தள்ளியும் நிறுத்தவில்லை. இதோ இப்போது கூட தன் வீட்டு மருமகன்களுக்கு எடுத்திருந்தது போலவே வேஷ்டி சட்டை அவனுக்கும் எடுத்திருந்தார்.
லக்ஷ்மி, ஞானவல்லி பாட்டி, பூங்கோதை, சபேசன், ஐஸ்வர்யா, தீபா, அவளுடைய கணவர் என்று எல்லா உறவுகளும் அங்கே கூடியிருந்தார்கள்.
பூங்கோதை சபேசன் தம்பதியரின் இரண்டாவது மகள் துளசிக்கு தன்னுடைய அக்கா ஐஸ்வர்யா தான் எல்லாம். பட்டுப் பாவாடை தாவணி அணிந்து தேவதையாக சுற்றிக்கொண்டிருந்த அக்காவின் கையையே பிடித்துக்கொண்டு அலைந்தது அந்த குட்டித் தேவதை.
பாட்டி ஞானவல்லி கொஞ்சம் தளர்ந்திருந்தார். வைரவ மூர்த்தி எல்லாத் தேவைகளுக்கும் அடுத்தவர் கைகளை எதிர்பார்த்தபடி படுத்த படுக்கையாகிவிட்டார். நர்ஸ் வைத்து அவரை கவனித்துக் கொள்கிறான் மூத்த மகன். அவர் தலையில் தூக்கி வைத்து ஆடிய மூத்த மருமகள் அவரை ஒரு சுமையாகத் தான் பார்க்கிறாள் இப்போது. மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு மகனோடு திரும்பி விட்டார் லக்ஷ்மி. மருமகளின் அலட்சியத்தில் காலம் கடந்து மனைவியின் அருமை புரிகிறது அந்த மனிதருக்கு, கூடவே செய்த தவறுகளும். ஆனால் அதனால் பயன் தான் இல்லை.
குறித்த நேரத்தில் அந்த வீட்டில் பால் பொங்க, ஞானவல்லி பாட்டி, லீலாவதி தயவால் குலவை ஒலி கூட கேட்டது அங்கே.
“ஏன், பொண்ணுங்க மட்டும் தான் குலவை விடணுமா? ஆம்பிள்ளைங்களும் விடலாம்.” எப்போதும் போல நந்தினி போர்க்கொடி தூக்கியதில், பாட்டியைப் பின்பற்றி ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் குலவைவிட முயற்சி செய்ய, வந்துவிழுந்த வித்தியாசமான சத்தத்தில் அவர்களே கிளுக்கிச் சிரிக்க என்று அந்த இடமே சந்தோஷத்தால் தளும்பி நின்றது.
எப்போதும் போல நெருங்கிய சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் மட்டுமே அழைப்பு. அழைத்திருந்த அத்தனைபேரும் வந்திருக்க, கிரகப்பிரவேசம் இனிதே நடந்து முடிந்திருந்தது. திலகத்தையும் அவர் பெற்ற பிள்ளைகளையும் பாராட்டாத வாயே இல்லை எனலாம்.
ஆனால் எப்போதும் போல கல்பனா தான் வயிறெரிந்து கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அதுவும் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றதில் முடிவு தெரியாமல், இன்னமும் வாடகை வீட்டில் குடியிருந்தவரிடம் பொறாமை உணர்வு பொங்கிவழிந்தது. அவர் பெற்ற பிள்ளை வேறு அந்த குடும்பத்தின் மீது பைத்தியமாக இருக்க, அந்த பெண்மணி புலம்புவது அதிகப்பட்டிருக்கிறதே தவிர குறையவில்லை.
ராஜவேலுவுக்கோ தன் பெண்பிள்ளைகளோடு மகன் சேர்ந்ததால் அவனும் நல்ல நிலமைக்கு சென்றுவிட்டான் என்ற எண்ணம். அவர் எண்ணத்தை மனதோடு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். மற்றபடி, முன்புபோல தன்னுடைய முதல் மனைவி, மக்களைப் பார்த்து பொறாமையில் பொசுங்குவது குறைந்திருந்தது.
திலகம் இல்லத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு எல்லோரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். இப்போது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்க, தங்களுக்குள் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
சிறிதுநேரத்தில் கீழே இருந்த படுக்கை அறைக்குள் சென்ற கௌரி, அங்கிருந்து கணவனை அழைத்தாள்.
“எதுக்கு கௌரி இப்ப கூப்பிட்ட, எல்லோரும் என்ன நினைப்பாங்க?” என்றபடி வந்து நின்றான் அருள்.
“அது… அம்மாவுக்கு முதுகு வலிக்குது டா, என்னால இன்னைக்கு கீழ படுக்க முடியாது. எல்லோருக்கும் ரூம் தான் இருக்கே, அங்கயேப்போய் தூங்குங்க, போங்க.” திலகம் சொல்லிவிட,
“ரொம்ப வலிக்குதா? எத்தனை நாளா இருக்குது? வாங்க, ஹாஸ்பிடல் போலாம்.” பதறிப்போனார்கள் அவருடைய பிள்ளைகள்.
பிள்ளைகளின் பாசத்தில் நெக்குருகிப் போனத் திலகம், “எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க? இரண்டுநாளா கொஞ்சம் வேலை அதிகம், தூங்கி முழிச்சா எல்லாம் சரியாப் போயிடும்.” என்றார் சிரித்தபடியே.
அவருக்குமே வேலையின் நிமித்தம் தங்கள் துணையைவிட்டு பிரிந்து கிடக்கும் பிள்ளைகளை இன்றைக்கும் பிரித்து வைக்க மனமில்லை. தன் பிள்ளைகளிடம் அதை சொல்லலாம் என்றால் மருமகன்களும் அங்கேயே நிற்கிறார்கள். அதனாலேயே இந்த முதுகுவலி நாடகம்.
ஆனால் நந்தினியோ, “அம்மாவை வேலைபாக்க விட்டுட்டு நீங்களும் அருளும் என்ன செய்தீங்க த்தான்?” என்று கணவனிடம் சாடினாள்.
“அம்மாடி, ஃபங்ஷன் வீடுன்னா எல்லோருக்குமே வேலை தான் இருக்கும். அம்மா மேல அவ்வளவு அக்கறை இருக்குறவ ஒரு வாரத்துக்கு முன்னாடியே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துருக்க வேண்டியது தானே. ஃபங்ஷன் அன்னைக்கு காலைல வந்து நிக்குற நீ எல்லாம் என் மருமகன்களை அதட்ட கூடாது ம்மா.” பதிலுக்கு மகளை அதட்டினார் திலகம்.
“நீங்க எப்போ தான் உங்க மருமகன்களை விட்டுக்குடுத்திருக்கீங்க.” முணுமுணுத்த நந்தினி,
“இன்னைக்கு நைட் மட்டும் தான் பாப்போம், நாளைக்கும் இப்பிடியே வலி இருந்தா கண்டிப்பா ஹாஸ்பிடல் வரணும்.” கண்டிப்பான குரலில் சொல்ல, வேகமாக தலையாட்டினார் திலகம். அதன்பிறகே எல்லோரும் தூங்குவதற்கு கலைந்து சென்றார்கள்.
“சரி, பிள்ளைங்களை எங்கிட்ட விட்டுட்டு போங்க, ஆசையா இருக்கு.” திலகம் மெதுவாக கேட்க,
“அதெல்லாம் சரி வராது. நீங்க நல்லா படுத்து தூங்குங்க.” என்று விட்டு பிள்ளைகளோடு நகர்ந்திருந்தார்கள்.
மாடியிலிருந்த ஒரு படுக்கையறைக்கு கணவன் பிள்ளைகளோடு வந்திருந்தாள் நந்தினி. ஒரு குடும்பம் தாராளமாக புழங்குவதற்கு ஏதுவாகவே இருந்தது அறை. கட்டில் எதுவும் இல்லை. புத்தம் புதிய பாய், பெட்ஷீட், தலையணைகள் என்று தரையில் தூங்குவதற்கு ஏதுவாக எல்லாம் இருந்தது.
ஓடியாடி விளையாடிய அசதியில் எளிதாக பிள்ளைகள் தூங்கிப் போனார்கள். அவர்களுக்கு போர்த்திவிட்டு நிமிர்ந்த நந்தினி, நீண்ட நேரமாக சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கியபடி இருந்த கணவனிடம், “நானும் அப்போ இருந்து பாத்துட்டு தான் இருக்குறேன், மாமியார் ஜப்போட் செய்ததுல மாப்பிள்ளைக்கு சிரிப்பு அள்ளுது போல, ம்ம்…” என்றாள் கேலியாக.
மனைவி அப்படி சொல்லத்தான் தாமதம், சத்தமாக வெடித்து சிரித்தான் கண்ணன்.
“என்னோட அத்தைக்கு இருக்குற விவரம் கூட, அவங்க பெத்த பொண்ணுங்களுக்கு இல்லாம போச்சே… அதை நினைச்சா எனக்கு சிரிப்பை அடக்க முடியல.” மறுபடியும் சிரிப்பு அள்ளியது கண்ணனிடம்.
“ஓய், என்ன? அப்பிடியே ஸ்வாகா பண்ணிடலாம்னு எண்ணமா?” கண்களால் அழைப்பு விடுத்தபடியே மனைவியை நோக்கி கைகளை நீட்டினான் கண்ணன்.
அந்த கைகளுக்குள் ஆர்வமாக புகுந்து கணவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு, “உங்களுக்கு ரொம்ப நன்றி த்தான்.” என்றாள் மெல்லிய குரலில்.
“நன்றியா?! எதுக்கு?” மனைவியின் கழுத்தில் ஊர்வலம் போய்க் கொண்டிருந்த கண்ணனின் உதடுகள், தனது வேலையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கேள்வியைக் கேட்டிருந்தது.
“நந்தினி… இந்த பேச்சு வேண்டாம், இதோட விட்டுடு.” ஒரு பேச்சுக்காக என்றாலும் கூட மனைவியின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை அதட்டினான் கண்ணன்.
“பார்றா… அத்தானுக்கு பொஸஸிவ்னெஸ் எல்லாம் வருது. ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு.” என்றவள், உற்சாகமாக விட்ட இடத்திலிருந்து மறுபடியும் பேச முயற்சி செய்ய,
“சண்டிராணி, இதுக்கு மேல எதுவும் சொல்லாத டி, எனக்கு எரிச்சலா வருது.” என்றான் மனைவியை இறுக்கி அணைத்தபடி.
“நான் சொல்ல வர்றதை முழுசா கேட்டுட்டு உங்க ஒப்பீனியனைச் சொல்லுங்க.” என்றவளோ இன்னும் வாகாக கணவனோடு ஒட்டிக்கொள்ள,
“ம்ம், சொல்லு.” என்றான். ஆனால் கதை கேட்கும் ஆர்வம் மட்டும் கொஞ்சம் கூட இல்லை அந்த முகத்தில்.
“இப்பிடி மூஞ்சை வச்சிட்டு இருந்தா நான் எப்பிடி சொல்ல?” நந்தினி சிணுங்க,
“அப்போ சொல்லாத.” வெடுக்கென்று வந்தது பதில்.
“ஹப்பா, என்னா கோபம், அனலடிக்குது.” என்றவள்,
“உங்களைத் தவிர வேற யாரைக் கல்யாணம் செய்திருந்தாலும் இத்தனை உயிர்ப்பா ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பேனான்னு தெரியாது. அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும். போதுமா? இப்போ சந்தோஷமா?” கணவனின் மீசையை முறுக்கி விட்டபடியே நந்தினி கேட்க,
“போதாது? என்றான்.
“போதாதா? ஐயாவுக்கு வேற என்னதான் வேணுமாம்?” சிணுங்கல் போய் இப்போது கொஞ்சல் மொழி வந்திருந்தது நந்தினியிடம்
“ம்ம்… இதுக்கு மேல எப்பவுமே இப்பிடி மொக்க கதையைச் சொல்லி என்னைக் கடுப்பேத்தக்கூடாது. அது போதும்.” கட்டளையாகச் சொன்னான்.
“நீங்க ஆர்டர் போட்டா… நான் கேட்டுடணுமா? எனக்கு தோனும் போதெல்லாம் இதைவிட மொக்க கதை எல்லாம் சொல்லுவேன். அதை நீங்க கேட்டுத்தான் ஆகணும்.” சட்டென்று கணவனிடமிருந்து விலகி, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தபடி சொன்னாள்.
“இது… இது தான் நந்தினியோட ஒரிஜினல் வெர்ஷன். நீ இப்பிடி இருந்தா தான் நல்லாயிருக்கு. அதைவிட்டுட்டு இந்த கொஞ்சுறது, கெஞ்சுறது எல்லாம் உனக்கு செட்டே ஆக மாட்டேங்குது.” சன்னச்சிரிப்போடு கேலியாக உதட்டைச் சுழித்தான்.