“இந்த மரியாதையும், உபசரிப்பும் எனக்கானதா மட்டும் இருக்கக்கூடாது, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாருக்கும் இதே மரியாதையும் உபசரிப்பும் உங்ககிட்ட இருந்து கிடைக்கணும்.” நாசூக்காக ஒரு அறிவுரையையும் பணியாளர்களுக்கு ரஞ்சன் கடத்த, எல்லோருக்கும் அந்த ரஞ்சன் சுவாரஸ்யமான நபராகித்தான் போனான்.
உணவு நேரம் கலகலப்பாக முடிய, “என்னோட அம்மாவும், அப்பாவும் உங்களைப் பார்த்து பேசணும்னு வெயிட் பண்ணுறாங்க, அவங்களை இங்க கூட்டிட்டு வரட்டுமா ம்மா?” என்று திலகத்திடம் அனுமதி கேட்டு நின்றான் ரஞ்சன்.
“கண்டிப்பா, கூட்டிட்டு வாங்க தம்பி.” எந்தவித தயக்கமும் இன்றி புன்னகை முகமாகவே சொன்னார் திலகம்.
ரஞ்சனின் பேச்சில் யாருக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை. தோழியின் குடும்பத்தைப் பார்க்க பெற்றவர்களை அழைத்து வருகிறான் என்ற எண்ணம் தான்.
“பரவாயில்ல, இந்துவோட ஃப்ரெண்ட் ரொம்ப நல்லவிதமா இருக்காப்ல.” என்று பாராட்டு பத்திரம் வேறு.
ஆனால் தங்கையின் பதட்டத்தையும் ரஞ்சனின் பார்வையையும் ஒரே புள்ளியில் கோர்த்து யோசித்த அனிதாவால் அப்படி நினைக்க முடியவில்லை. எனவே தன்னருகே அமர்ந்திருந்த இந்துவிடம், “என்னடி நடக்குது இங்க?” என்று ஆர்வமாக கிசுகிசுத்தாள்.
“ம்ப்ச்…கொஞ்ச நேரம் சும்மா இரு அனி.” பதிலுக்கு படபடப்பாக வந்தது பதில்.
“ஹ்ம்ம்… எனக்கென்னவோ நாம ட்ரிப்புக்கு வந்தது மாதிரி இல்லையே… ஏதோ உனக்கு மாப்பிள்ளை பாக்க வந்தது போல இல்ல இருக்கு…” சந்தேகமாக இழுத்தாள் அனிதா.
“ப்ளீஸ் அனி, இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இரு.” கிட்டத்தட்ட கெஞ்சினாள் இந்து.
“ஹேய்… அப்போ அப்பிடித்தானா? ஆளு சும்மா ஃபிரிட்ஜல வச்ச ஆப்பிள் மாதிரி பளபளன்னு இருக்கார் டி.” உற்சாகத்தில் தன்னை மறந்து அனிதா கிறீச்சிட, எல்லோரும் அவளைப் பார்த்தார்கள்.
இந்துவிடம் மேற்கொண்டு பேசுவதற்கு வாய் துறுதுறுவென வந்தாலும் அக்காவின் பார்வையில் அனிதா அமைதியாகிப் போக, பந்தயக் குதிரையாய் பாயும் மனதை பிரயத்தனம் செய்து கடிவாளம் இட்டபடி அமர்ந்திருந்தாள் இந்து.
சொல்லிச் சென்றது போல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பெற்றோரோடு வந்துவிட்டான் ரஞ்சன்.
எந்த வீண்பகட்டும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்தார்கள் ரஞ்சனின் பெற்றோர்கள். இரண்டு தரப்பிலும் முறையான அறிமுகத்தை ரஞ்சன் செய்து வைக்க,
“நாங்களே உங்க ஊருக்கு வந்து உங்களை சந்திக்கணும்னு நினைச்சிட்டு தான் இருந்தோம். எதிர்பாராத விதமா நம்ம சந்திப்பு இன்னைக்கே நடந்திடிச்சு.” மலர்ந்த முகத்தோடு சொல்லியபடியே அமர்ந்தார் ரஞ்சனின் அம்மா. மனைவியின் வார்த்தைகளை ஆமோதிப்பது போல புன்னகை முகமாக மனைவிக்கு அருகில் அமர்ந்தார் ரஞ்சனின் அப்பா.
‘ஊருக்கே வந்து சந்திக்க வேண்டும் என்று நினைத்தார்களா? எதற்காக?’ யோசனையாக நந்தினியின் புருவம் உயர, தங்கையைத் திரும்பி பார்த்தாள்.
‘படிக்கும் காலத்தில் இது என்ன?’ என்று அதிருப்தியாக தங்கையைப் பார்த்தாள் நந்தினி. திலகத்துக்கும் மகளின் படிப்பே முதன்மையாகத் தோன்ற, மகளை யோசனையாகப் பார்த்தார்.
“இல்ல… உடனே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எல்லாம் இல்ல. இந்துவும் எக்ஸாம் க்ளியர் செய்து சர்வீஸ் எடுக்கணும், அதுக்கப்புறம் தான். வீட்டுல அம்மாவுக்கும் அக்காவுக்கும் விஷயத்தை சொல்லாம இருக்கிறது கில்டியா ஃபீல் ஆகுதுன்னு இந்து சொல்லிட்டே இருந்தா. அதேநேரம் உங்ககிட்ட விஷயத்தை ஓப்பன் பண்ணுற தைரியமும் இல்லை அவளுக்கு, அதான் நான் என்னோட பேரெண்ட்ஸ் கிட்ட ஹெல்ப் கேட்டேன்.” அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தான் ரஞ்சன்.
அப்படியா என்பது போல நந்தினி தங்கையைப் பார்க்க, தமக்கையின் முகத்தை பார்த்த இந்துவின் முகத்தில் தவிப்பு அப்படமாக தெரிந்தது.
ரஞ்சனை சந்தித்த நேரத்திலிருந்து அவன்மீது ஒரு நல்ல அபிப்பிராயமே எல்லோருக்கும். இப்போதோ தன் காதலுக்கு உதவி கேட்டு பெற்றோரிடம் போய் நின்றேன் என்று அவன் சொன்ன வார்த்தையில் இன்னும் பிடித்தது அவனை.
என்றாலும் சட்டென்று வார்த்தைகளை விட்டுவிடாமல் நந்தினியும் திலகமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“ரஞ்சன் ரொம்ப நல்ல மாதிரி ம்மா. அவரைக் கல்யாணம் செய்துகிட்டா என்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்புறேன்.” மெல்லிய குரலில் தன்னுடைய விருப்பத்தை சொல்லியே விட்டாள் இந்துஜா.
“இன்னும் என்ன வேணும் திலகா உனக்கு? நம்ம பொண்ணு ஒன்னும் பொறுப்பில்லாதவ கிடையாதே, அவளோட தேர்வு ஒன்னும் தப்பா போகாது. நாம வந்த நேரத்துலயிருந்து அந்த தம்பியை பார்க்கத்தானே செய்யுறோம். நல்ல மாதிரியாத்தான் தெரியுது. அதைவிட பிள்ளையோட விருப்பத்தை மதிக்கிற பெத்தவங்க. வேறென்ன வேணும்? ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு உன்னோட சம்மதத்தைச் சொல்லு.” லீலாவதி தான் பேசியது.
‘ஆமாம்… என்னுடைய பிள்ளைகள் சொக்கத் தங்கங்கள். கண்டிப்பாக அவர்களுடைய தேர்வுகள் சோடை போகாது.’ மகளின் மீது முழு நம்பிக்கை வைத்த திலகம்,
“எவ்வளவு சீக்கிரம் இந்து எக்ஸாம் கிளீயர் செய்து போஸ்டிங் எடுக்குறாளோ, அவ்வளவு சீக்கிரம் அவங்க கல்யாணத்தை வச்சிக்கலாம்.” என்றார்.
திலகத்தின் சம்மதத்தில் அந்த இடமே கலகலப்பாகி போனது. மேலும் சிறிதுநேரம் இருந்து பேசிவிட்டே கிளம்பிச் சென்றிருந்தார்கள் ரஞ்சனின் பெற்றோர்கள். இன்று இரவு தங்கள் வீட்டுக்கு இரவு உணவுக்கு வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு விட்டே சென்றிருந்தனர்.
பெற்றோரை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வருவதாக ரஞ்சனும் கிளம்பிச் சென்றிருந்தான். போவதற்கு முன்னர் அவர்கள் சுற்றிப் பார்க்க செல்லும் இடங்களின் விபரங்களைக் கேட்டு, கூடுதலாக சில இடங்களையும் பார்ப்பதற்கு பரிந்துரை செய்திருந்தான்.
எல்லோருக்கும் தங்கள் விஷயம் தெரிந்து விட்டதே, இனி என்ன என்று தங்கையோடு ஒட்டிக்கொண்டு வராத ரஞ்சனின் செயலில் அவன்மீது கூடுதலாக மரியாதை உண்டாகியிருந்தது நந்தினிக்கு.
எல்லோரும் பொட்டானிக்கல் கார்டனில் வந்து இறங்கியிருந்தார்கள். அங்கே வருவதற்கு எடுத்துக்கொண்ட பயணநேரம் முழுவதும் ரஞ்சனும், அவனுடைய பெற்றோருமே அவர்களின் பேசுப்பொருளாக இருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?
பச்சைப் பசேலென்று பல ஏக்கர்களில் பரந்து விரிந்திருந்த அந்த தோட்டம் எல்லாருடைய மனங்களையும் கொள்ளையடித்தது. பலவண்ணங்களில் பூத்து குலுங்கி நின்ற செடிகளையும், ஓங்கி வளர்ந்திருந்த மரங்களையும் கண்டு ஐஸ்வர்யா சிறகில்லாத பட்டாம்பூச்சியாக பறக்கத்தான் செய்தாள். அவளோடு கௌரியும் சேர்ந்துகொண்டாள்.
‘அப்பாவா? அவர் எப்படி இங்கே?’ ஆச்சர்யமாக பூங்கோதை மகளைப் பார்க்க, அவளோ சற்றுதள்ளி ஒரு மரத்துக்கு கீழே நின்றிருந்த சபேசனை நோக்கி, “அப்பா…” என்று உற்சாகமாக கத்திக்கொண்டே ஓடினாள்.
‘ஆமா, அவர் தான்.’ அடுத்த வினாடியே பூங்கோதையும் சபேசனை நோக்கி சிட்டாக பறந்திருந்தாள். தன்னை நோக்கி முதலில் வந்த மகளை அப்படியே அள்ளி தட்டாமாலை சுற்றிய சபேசன், தன்னில் வந்து மோதிநின்ற மனைவியை தோளோடு அணைத்திருந்தான்.
அவர்களை பார்த்துக்கொண்டு நின்றிருந்த பெண்களின் உதடுகளில் சந்தோஷ முறுவல் பூத்திருந்தது. அதுவும் இதுவரை சபேசனை ‘அப்பா’ என்று அழைத்திராத ஐஸ்வர்யாவின் அழைப்பில் லட்சுமியின் கண்கள் பனித்து விட்டன.
பத்தே வயது நிரம்பிய சிறுபெண் தான் ஐஸ்வர்யா. சபேசனை அப்பா என்று அழைக்க கூடாது என்றெல்லாம் இல்லை. ஏனோ அந்த அழைப்பு எளிதாக வரவில்லை அவளுக்கு. ஆனால் இந்த ஒரே நாள் பிரிவு அந்த சிறு பெண்ணில் இருந்த தயக்கத்தை உடைத்து அப்பா என்று அழைக்க வைத்திருந்தது.
“அவங்களை அப்பிடி பார்க்கவே சூப்பரா இருக்குல்ல க்கா.” தன்னுடைய மொபைல் ஃபோனில் ஜூம் செய்து மூவரையும் புகைப்படமாக கிளிக் செய்தபடியே சொன்ன அனிதா,
“அட… அங்க பக்கத்துல நிக்குறது யாரு? ஜெகனா?!” ஆச்சர்யமாக வாயைப் பிளந்தவள், கண்மூடி திறக்கும் முன்னர் கணவனின் கை அணைப்பில் இருந்தாள்.
இப்போது நந்தினிக்கு புரிந்து விட்டது, கட்டாயம் தன் கணவனும் இங்கே எங்கேயோ தான் இருக்கிறான் என்று. ஒரு எதிர்பார்ப்போடு நந்தினி கண்களை நாலாபுறமும் சுழற்ற, அவளை ஏமாற்றாமல் மனைவியின் பார்வையில் விழுந்தான் கண்ணன்.
தன்னைப் பார்த்து மயக்கும் சிரிப்போடு கையசைத்தபடி நின்றிருந்த கணவனை நோக்கி வேகமாக நடந்த நந்தினியின் காதுகளை, உடன் நின்றிருந்த தங்கைகளின் கேலிச்சிரிப்பு நிறைத்தது.
திரும்பிப் பார்த்து ஒற்றை விரலை ஆட்டி அவர்களுக்கு பத்திரம் சொன்னவள், வேகமாக கணவனுக்கு அருகே வந்து நின்றாள். அவளது வலதுகை இயல்பாக கணவனின் இடுப்பை சுற்றிக்கொள்ள, லேசாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள்,
“எப்பிடி, எப்பிடி, உன்னோட பெர்மிஷன் இல்லாம என்னால கிளம்பி வரமுடியாது பேபி, ம்ம்… திருட்டு ராஸ்கல், எப்பிடி எல்லாம் கம்பி கட்டியிருக்கீங்க?” அதட்டுகிறேன் பேர்வழி என்று கண்களை உருட்டியவளுக்கு சிரிப்பு தான் பொத்துக்கொண்டு வந்தது.
“புருஷனைக் கொஞ்சும் போதுகூட போலீஸ் புத்தி உன்னைவிட்டு போகமாட்டேங்குது பாரேன்.” தலையை பின்னால் சாய்த்து அட்டகாசமாக கண்ணன் சிரிக்க, முகத்தை நிமிர்த்தி அவனை ரசனையாக பார்த்திருந்தாள் நந்தினி.
ஒரே நாள் பிரிவில் கணவன் மீதான தேடல் இந்த அளவிற்கு தனக்குள் இருக்கும் என்பதை அவளாலேயே நம்ப முடியவில்லை.
“அப்புறம், எப்போ ஊட்டிக்கு வந்தீங்க? எங்க தங்கியிருக்கீங்க? நாங்க இங்கதான் வந்துருக்கோம்னு கரெக்டா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” கணவனோடு சேர்ந்து நடந்தபடியே நந்தினி கேள்விகளை அடுக்கினாள்.
“ம்ம்… நீங்க தங்கியிருக்குற அதே ஹோட்டல்ல தான் தங்கியிருக்கோம். எல்லாம் இந்து தயவால தான்.” வாய்கொள்ளா சிரிப்போடு சொன்னான்.
“அதே ஹோட்டலா? அப்போ காலைல சாப்பிடும் போதே வந்திருக்கலாம் இல்ல? உங்க மச்சினிச்சியோட காதல் கதையையும் தெரிஞ்சிருக்கலாமே.” விளையாட்டாகவே தங்கையின் காதலை சொல்ல முயற்சி செய்தாள் நந்தினி.
“அதுதான் எனக்கு தெரியுமே. ரஞ்சன், ஐஏஎஸ் பாஸ் பண்ணியிருக்காப்ல, இன்னும் ஒரு வாரத்துல ட்ரெயினிங் கிளம்ப போறார்.” கண்ணன் விலாவாரியாக ரஞ்சனின் விபரங்களைச் சொல்ல, வியப்பாக இருந்தது நந்தினிக்கு.
“எப்பிடிங்க?”
“எங்கிட்ட எப்பவோ இந்து சொல்லிட்டாளே.” கெத்தாக சொன்ன கணவனைக் கொஞ்சம் பொறாமையாக பார்த்தவள்,
“கூடப்பொறந்த எங்கிட்ட கூட சொல்லாம, உங்ககிட்ட சொன்னாளா உங்க மச்சினிச்சி.” முகத்தைச் சுருக்கினாள்.
“ஹஹ…உங்கிட்ட சொல்லணும்னு நினைக்கும் போதெல்லாம் அனிதாவை நீ அப்புனது நியாபகத்துக்கு வந்தா, எப்பிடி தைரியமா சொல்ல முடியுமாம்?” மனைவியின் கன்னத்தில் அடிப்பது போல தன் கையை ஒற்றியெடுத்து கேலி செய்தான் கண்ணன்.
‘பயம் ஒரு காரணம் என்றாலும், தன் தங்கையின் நம்பிக்கையை அத்தான் சம்பாதித்திருப்பதால் தானே, தைரியமாக இந்த விஷயத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது.’ இந்த ரீதியில் யோசித்தவளுக்கு மனதிற்கு நிறைவாகவே இருந்தது.
“அப்புறம், முதற்கட்ட விசாரணையில அந்த விஏஓ, தாசில்தார், ஆர்டிஓ எல்லோருக்கும் சஸ்பென்ஷன் ஆர்டர் கிடைச்சிடிச்சின்னு நியூஸ் கிடைச்சது. அதைப்பத்தி வேற தகவல் எதுவும் இருக்கா அத்தான்?” ஆர்வமாக நந்தினி கேட்க,
“அம்மா தாயே! இது ஊட்டி. உன்னைச் சுத்திப் பாரு, இவ்வளவு ஏன்? உங்கூட பிறந்ததையும், உங்கூட வேலை பாக்குறவரையும் பாரு, அப்பவாவது நீ என்ன பண்ணிகிட்டு இருக்குறன்னு உனக்கு புரியுதா பார்க்கலாம்.” சொல்லியபடியே கண்ணன் தங்களைச் சுற்றி கண்களைச் சுழற்றினான். கணவனை பின்பற்றிய நந்தினியின் கண்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவள் தங்கையையும், சபேசன் ஜோடியையும் காணவில்லை.
“அன்பு மனசுல இருந்தா போதும் த்தான், அதை எல்லா இடங்களிலும் வச்சு வெளிப்படுத்தணும்னு கிடையாது.” தத்துவம் பேசியவள், தங்கைக்கு அழைத்து,
“ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு போயிடாதீங்க அனி.” என்று எச்சரிக்கை செய்தாள். அதையே சபேசனுக்கும் சொன்னவள், இந்துவுக்கு அழைத்து பெரியவர்களும் கௌரியும் அவளோடிருப்பதை உறுதி செய்து கொண்டாள்.