அத்தியாயம் 21

“ம்மா… கிளம்பியாச்சா?” சத்தமாக கேட்டபடியே தங்களுடைய வீட்டுக்குள் நுழைந்த நந்தினி புடவை அணிந்திருந்தாள். கைகளில் பழங்களும் இனிப்புகளும் அடங்கிய பைகள் இருந்தன.

“நான் கிளம்பியாச்சு, கண்ணன் வரலையா?” பதில் சொல்லியபடியே வீட்டுக்குள்ளிருந்து வந்த திலகம் மகளுக்கு பின்னால் எட்டிப் பார்த்தார்.

“இந்த அம்மாக்களுக்கு எப்பவுமே மகள்களைவிட மருமகன்கள் தான் முக்கியம், இல்லம்மா?” நந்தினி முகத்தைச் சுருக்க,

“எங்க அம்மா உன்னைக் கொஞ்சும் போது, நான் சின்னபுள்ள மாதிரி கண்ணைக் கசக்கவா செய்யுறேன்? இந்த விஷயத்துல நீ இன்னும் கொஞ்சம் வளரணும் பேபி.” கிண்டலடித்தபடியே மனைவிக்கு பின்னால் வந்து நின்றான் கண்ணன். அவனது வலது கையில் ஹெல்மெட் இருக்க, இடது கையில் ஜவுளிக்கடை பைகள் இருந்தன.

இப்போதெல்லாம் மனைவியோடு கண்ணன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிகிறான். அதேநேரம் தனியாக பயணிக்கும்போது அந்த வழக்கறிஞனுக்கு தலைக்கவசம் சுமைக்கவசம் ஆகிப்போவதால் அதற்கு டிமிக்கி கொடுத்துவிடுகிறான். மனைவி மறக்காமல் கையில் எடுத்து கொடுத்தால்கூட மறக்காமல் அதை மறந்து வைத்துவிட்டு சென்றுவிடுகிறான்.

“ஹெல்மெட் போடலைன்னு எங்கயாவது மாட்டும்போது, எஸ்பியோட புருஷன்னு பல்லைக் காட்டினீங்கன்னு தெரியவந்திச்சோ, அன்னைக்கு இருக்கு உங்களுக்கு.” இப்படிச் சொல்லி நந்தினி பல்லைக் கடித்தால்,

“ஹோய்… போடீ, போடீ… பெரிய எஸ்பி புருஷன், உன் பெயரைச் சொல்லாமலே அந்த சிச்சுவேஷனை எப்பிடி ஹேண்டில் பண்ணனும்னு எங்களுக்கும் தெரியும்.” என்று நழுவிவிடுவான்.

ஒரு சின்ன விஷயத்தில் கூட நீ தவறு என்று யாரும் தன்னை நோக்கி விரலை நீட்டிவிடக் கூடாது என்ற அதீத கவனம் நந்தினிக்கு. மனைவியின் வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் புரிந்தாலும் இந்த விஷயத்தில் அவளுடைய அலைவரிசைக்கு வருவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது கண்ணனுக்கு.

“உங்கிட்ட கண்ணனையும், கண்ணன்கிட்ட உன்னையும் விசாரிக்குறது தானே டி, இதுக்கு போய் மூஞ்சை தூக்குவியா நீ? போ, போய் அத்தை புறப்டாச்சான்னு பாரு.” சிரித்தபடியே மகளை அவளுடைய புகுந்த வீட்டு பக்கமாக திருப்பி விட்டார் திலகம்.

எல்லோரும் குடும்பமாகச் சேர்ந்து கண்ணனின் தங்கை தீபாவைப் பார்க்கப் போகிறார்கள்.

ஆமாம்… தான் குழந்தை உண்டாகியிருக்கும் விஷயத்தை தீபா காலையில் ஃபோன் மூலமாகச் சொல்லியிருக்க, நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த சந்தோஷ செய்தியை கேட்டவுடனே அவளை பார்த்து வர எல்லோரும் கிளம்பிவிட்டார்கள்.

இங்கிருந்து எல்லோரும் ஒன்றாகவே காரில் சென்றுவிடலாம் என்று முடிவு செய்து தான் கண்ணனும் நந்தினியும் வந்தது.

அனிதாவுக்கும் விஷயம் பகிர்ந்துகொள்ளப்பட, அவளும் கணவனோடு நேரடியாகவே தீபா வீட்டுக்கு வந்துவிடுவதாக சொல்லியிருக்கிறாள்.

“வந்துட்டீங்களா இரண்டு பேரும்? கிளம்பலாமா?” இவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே வீட்டை விட்டு வெளியே வந்திருந்த லீலாவதி பரபரப்பாக கேட்டார்.

“பாட்டி ஆகப்போற சந்தோசத்துல முகம் சும்மா ஜொலி ஜொலிக்குது அத்த.” கேலி செய்தபடியே கையிலிருந்த பைகளை அத்தையிடம் நீட்டினாள் நந்தினி.

“நீயும் நல்ல செய்தி சீக்கிரம் சொல்லு, அத்தை டாலடிக்கிறேனா இல்லையா பாரு.” பதிலுக்கு கேலி பேசியபடியே லீலாவதி அதை வாங்கிக் கொள்ள, தன் கையிலிருந்த ஜவுளிக்கடை பைகளையும் அம்மாவிடம் நீட்டினான் கண்ணன். தங்கைக்கும் அவளுடைய கணவருக்கும் புது துணிமணிகள் எடுத்திருந்தான்.

தீபாவை பார்த்துவர கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்ததுமே, எதுவும் செய்முறைகள் உண்டா என்று அத்தையிடம் கேட்டுக்கொண்டாள் நந்தினி. இப்போது எதுவும் இல்லை. பழங்களும் இனிப்புகளும் வாங்கிக் கொண்டு போவோம் என்று லீலாவதி சொல்ல, எல்லாவற்றையும் தாங்களே வாங்கிக்கொண்டு வருவதாக சொல்லிவிட்டாள். மறக்காமல் தீபாவிற்கு பிடித்த இனிப்பு வகைகளின் பெயர்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.

எல்லோரும் ஒரே நேரத்தில் பழங்களை வாங்கிக்கொண்டு சென்றால் வீணாகப் போய்விட வாய்ப்பு உள்ளது. தீபா இங்கே பக்கத்தில் தானே இருக்கிறாள், அவ்வப்போது பார்த்து வாங்கி கொடுத்துவிட்டால் போச்சு. மருமகள் இப்படிச் சொல்லவும் அதில் உள்ள உண்மையை ஒத்துக் கொண்டு, மகளுக்கு பூவைத் தவிர எதுவுமே வாங்கியிருக்கவில்லை லீலாவதி.

இப்போது பூ, பழங்கள், இனிப்பு, புத்தாடைகள் என்று மகனும் மருமகளும் குறைவில்லாமல் வாங்கிக்கொண்டு வந்து நின்றதில் அந்த தாயின் மனம் நிறைந்து தான் போயிற்று.

“எல்லாத்தையும் தாம்பாளத்துல வச்சி குடுத்துடுவோமா நந்து? தாம்பாளம் எடுத்து வச்சிக்கவா?” ஆவலாக திட்டமிட்டார் லீலாவதி.

“ம்ம்… எடுத்து வச்சிக்கோங்க அத்த, கார்லதானே போகப்போறோம்.” நந்தினி சொல்ல, தன் பங்குக்கு திலகமும் கையில் பைகளோடு வந்து நின்றார்.

“நீங்களும் இன்னைக்கே வாங்கி குடுக்கணுமா ம்மா?” நந்தினி அலுத்துக் கொள்ள,

“பிள்ளைதாச்சி பொண்ணை பாக்கப் போகும் போது சும்மாவா போக முடியும் நந்து? பேசாம இரு, உனக்கு இதெல்லாம் தெரியாது.” மகளை அதட்டியபடி, தாம்பாளம் எடுக்க வீட்டுக்குள் சென்ற லீலாவதியோடு சேர்ந்துகொண்டார் திலகம்.

“ப்ப்பா… எஸ்பி மேடத்தை அதட்டவும் ஆளிருக்கு. என் மனசே இப்போதான் நிறைஞ்சு போச்சு.” மார்பில் கைவைத்தபடி கண்ணன் பெருமூச்சு விட,

“நான் உங்களை ரொம்ப டாமினேட் பண்ணுறேனா த்தான்? அப்பிடி எதுவும் இருந்தா ப்ளீஸ் சொல்லிடுங்க. நான் என்னை மாத்திக்க முயற்சி செய்யுறேன்.” சிறிது நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கேள்வியை கணவனிடம் கேட்டு விட்டாள் நந்தினி.

“சொல்லிடுவேன், அப்புறம் அத்தான் இப்படி சொல்லிட்டாங்களேன்னு வருத்தப்படக் கூடாது.”

“ம்ம்… சும்மா சொல்லுங்க த்தான், தெரிஞ்சுக்கத்தானே நானும் கேக்குறேன்.”

“உண்மையைச் சொன்னா, நீ கொஞ்சமேக் கொஞ்சம் ஓவர் டோஸ் தான். ஆனா அதுதான் நம்மளோட வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குது. அதனால என்னோட ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அநாவசியமா அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்து உன்னை நீயே குழப்பிக்காத.” மனைவியின் தலையைப் பிடித்து செல்லமாக ஆட்டியபடியே கண்ணன் சொல்ல, அவன் வார்த்தைகளை உள்வாங்க முற்பட்டாள் அவன் மனைவி.

இப்போதெல்லாம் ஒரு மனைவியாக கண்ணனின் குணாதிசயங்களை படிக்க முயற்சி செய்கிறாள் நந்தினி.

சிறுவயதிலிருந்தே கணவனைத் தெரியும் தான். அதுவும் மனதிற்கு நெருங்கமானவனாகவே. ஆனால், ஆணாக பிறந்தவர்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணம் இடைப்பட்ட காலத்தில் அவளிடம் வளர்ந்திருக்க, அந்த எல்லோரோடும் சேர்த்து ஒரே தராசில் தான் கண்ணனையும் வைத்திருந்தாள். அவளுடைய இந்த அணுகுமுறை தவறு என்றாலும் கூட, பாதிக்கப்பட்டவளின் மனநிலையில் இருந்து பார்த்தால் சரிதான்.

ஆனால் எப்போது அவனோடு திருமண பந்தத்திற்குள் நுழைவதற்கு சம்மதித்தாளோ, அந்த நொடியிலிருந்தே தன்னுடைய எண்ணத்திலிருந்து கணவனுக்கு மட்டும் விலக்கு அளித்து தன்னுடைய உறவு வட்டத்துக்குள் அனுமதித்திருந்தாள்.

திருமண பந்தத்தின் மூலம் வெவ்வேறு குணநலன்களை உடைய ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் போது, அவர்களுக்கிடையே புரிதல் என்பது உடனே ஏற்பட்டுவிடாது தானே. அதுவும், ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் ஒரு தவறான வரையறையை வைத்திருக்கும் நந்தினிக்கு இன்னமுமே அது கடினம்.

அப்படியொரு சூழ்நிலையில், கணவனின் கைகளை நம்பிக்கையோடு பிடித்துக்கொண்டு திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக கரையேறிவிட அவள் முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் தான், அந்த விபத்து விஷயத்தில் தானே முடிவெடுத்து முதல் சறுக்கலை ஏற்படுத்தியிருந்தான் கண்ணன்.

அதுவும் பணியில் நேர்மையை உயிர்மூச்சாக கடைபிடித்து வருபவளுக்கு, அதையே கணவனிடமும் எதிர்பார்ப்பவளுக்கு, கணவனின் நேர்மையை தன்னுடைய சகஅலுவலரே கேள்விக்குரியதாக்கி கேலி செய்ததில் அவளுடைய முசுட்டுக் குணம் லேசாக எட்டிப் பார்த்திருந்தது.

அதைத்தொடர்ந்து கணவனின் ஒவ்வொரு செயல்களையும் வார்த்தைகளையும் அவளை அறியாமலேயே பூதாகரமாக்கி பார்த்ததில் விரும்பத்தகாத வார்த்தைகள் அவளிடமிருந்து வந்து விழுந்துவிட்டன.

சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாதாம். ஆனால் அதையும் மனைவியோடு சேர்ந்து அள்ளவே முயற்சி செய்தான் கண்ணன். கணவனோடு பேசவேண்டும் என்று சொன்ன அன்று தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வார்த்தைகளால் கணவன் விளாசப் போகிறான் என்று எதிர்பார்த்தவளுக்கு, உன் தவறில் என் பங்கும் சரிபாதி இருக்கிறது என்று பழியைத் தன் மீது தூக்கிப் போட்டுக்கொண்ட கணவன் ஆச்சர்யமாகத் தான் தெரிந்தான்.

கணவனின் இந்த அணுகுமுறையில் தன்னுடைய நிழலைக் கண்டே பயப்படும் குழந்தை போல அநாவசியமாக பயந்திருக்கிறோம் என்பது நந்தினிக்கு புரிந்து போக, தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்வதோடு ஒரு மனைவியாக கணவனின் குணநலன்களை படிக்கவும் முயற்சி செய்கிறாள்.

இத்தனை நாட்களில் அவளறிந்த அவள் கணவன் கலகலப்பானவன். சமூகத்தின் மீது அக்கறையும் அதன்மீதான கோபமும் சரிவிகிதத்தில் அவனிடத்தில் உண்டு. சிலநேரங்களில் அவன் பேச்சுக்கு பொருள் எப்படி எடுத்துக்கொள்வது என்ற குழப்பம் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் அவளுக்கு இருக்கிறது. சகவாச தோஷம் போல, செய்யும் தொழிலின் காரணமாகக்கூட இந்த பழக்கம் அவனில் வந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் குழப்பாமல் நேரடியாக பேசவேண்டும் என்று கணவனிடம் சொல்ல வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக காதல்… அது தன்மீது கணவனுக்கு நிறையவே இருக்கிறது. இது போதுமே. குறைகள் இல்லாத மனிதன் ஏது? ஒருவேளை என்னைப்பற்றிய குறைகளைக் கணவனிடம் கேட்டால், இதோ இப்போது பொட்டிலடித்தாற் போலச் சொன்னானே அதைப்போல ஆயிரம் அடுக்குவானாக இருக்கலாம்.

ஆனால் அதைக்கூட குறையாகச் சொல்லவில்லையே! அத்தானிடமிருந்து தானும் அந்த குணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நந்தினியின் சிந்தனை இப்படியேச் செல்ல, முகம் சிந்தனை வசப்பட்டிருந்தது.

“பிள்ளையை என்னடா சொன்ன? முகம் வாடிப்போயிருக்கு?” தாம்பாளம் சகிதமாக வீட்டுக்குள் இருந்து வந்த லீலாவதி தான் மகனை அதட்டியிருந்தது.

“இந்தா வந்துட்டாங்க இல்ல உன்னோட பாடிகார்ட். நல்லா பாத்துக்க, இதுக்காக நான் ஒன்னும் அழலை.” புன்னகைப்பது போல உதடுகளை கண்ணன் இழுத்து வைக்க, வாய்விட்டு சிரித்த நந்தினி,

“ஒன்னுமில்ல த்த, ஏதோ சிந்தனை” என்று அந்த பேச்சை முடித்து வைத்தாள்.

அவர்கள் அழைத்திருந்த காரும் வந்துவிட, எல்லோரும் கிளம்பினார்கள். அருள் மட்டும் அவனுடைய பைக்கில் வந்தான். எல்லோரும் வரப்போவதை லீலாவதி முன்கூட்டியே மகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இவர்கள் சென்று இறங்கவும், தடபுடலாக இருந்தது வரவேற்பு. அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள் என்று தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்டதும் கொஞ்சம் உணர்ச்சிமயமாகத் தான் போனாள் தீபா. எப்போதும் கலகலப்பாக பேசும் லீலாவதி கூட உணர்ச்சிவசப்பட்டு மகளை கட்டி அணைத்திருந்தார்.

சிறிது நேரத்தில் அனிதாவும் தன் ஒட்டுமொத்த குடும்பத்தோடு வந்து இறங்கிவிட்டாள். ஆமாம்… கணவன், மனைவி மட்டுமில்லாது மாமியார், பாட்டி, பூங்கோதை, குழந்தை ஐஸ்வர்யா, சபேசன் என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

 ஐஸ்வர்யாவுக்கும் சபேசனுக்குமிடையே நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டிருப்பதை சிறிது நேரத்திலேயே எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சபேசன் பூங்கோதை தம்பதியரின் அன்னியோன்யம் எல்லாருடைய கண்களையும் நிறைத்தது.

இனிப்பு, காரம், தேனீர் என்று வரவேற்பு படலம் முடியவும் சபேசன் அலுவலகம் செல்லுவதாகச் சொல்லிக் கிளம்பினான். அலுவலகத்துக்கு செல்லுவதற்கு ஏதுவாக பைக்கில் தான் வந்திருந்தான்.

கிளம்பும்போது நந்தினிக்கு அருகே வந்தவன், “சஸ்பென்ஷன் ஆர்டரைப் பத்தி கேள்விப்பட்டேன் மேடம். இதை சும்மா விடக்கூடாது, மேலிடத்துக்கு புகார் போடுங்க.” என்றான்.

தனக்கு தெரிந்த இந்த விஷயத்தை சபேசன் வீட்டில் யாருக்கும் சொல்லியிருக்கவில்லை போல. அவன் மனைவி உட்பட எல்லோரும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் நந்தினியைப் பார்த்தார்கள். நந்தினியும் இன்னும் வீட்டில் யாரிடமும் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை.

எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு மறக்காமல் மனைவியிடம் சொல்லிவிட்டே கிளம்பினான் சபேசன். அவனை வழி அனுப்பி வைக்க ஜெகத்ரட்சகனும் தீபாவின் கணவனும் உடன் சென்றார்கள்.

“அதானே… நல்லது செஞ்சா யாருக்கும் பிடிக்காதே, அந்த மூனு அரசாங்க அதிகாரிங்களுக்கு கூட தண்டனை எங்க கிடைக்கப் போகுது? தப்பு செய்யுறதுல பழம் தின்னு கொட்டை போட்டவனுங்களா இருப்பானுங்க போல. அந்த ஏழைப்பட்ட சனங்களுக்கு மட்டும் எப்பிடியாவது பட்டா வாங்கி குடுத்துடு ம்மா.” நேற்று நடந்தவை எல்லாம் செய்தி மூலமாக ஞானவல்லி பாட்டிக்கும் தெரிந்திருக்க, சபேசனின் பேச்சின் எதிரொலி அவரிடமிருந்து வந்தது.

“அந்த இடம் கிராம நத்தம்னு நிரூபணம் ஆகிடும் பாட்டி ம்மா. இனி யாராலயும் அந்த மக்களுக்கு பட்டா கிடைக்கிறதை தடுக்க முடியாது.” நம்பிக்கையாக சொன்னாள் நந்தினி.

சிறிதுநேரம் அதைப்பற்றிய பேச்சே பெரியவர்களுக்குள் நடக்க, தீபாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள் நந்தினி.

“எந்த ஹாஸ்பிடல்ல பாக்குறீங்க? அடுத்த செக்அப்புக்கு எப்போ வரச் சொல்லியிருக்காங்க.” என்று பொதுவாகவே கேட்டவளுக்கு, தீபாவிடம் இருந்த சிறிய பயத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

“அனாவசியமா பயப்படாத தீபா, சோர்வா இருக்கிறப்போ ரெஸ்ட் எடுத்துக்கோ. மற்றபடி நல்லா ஆக்டீவ்வா இரு, புக்ஸ் படி, உன்னையும் மனசையும் உற்சாகமா வச்சிக்கோ, நீ எவ்வளவு தைரியமா சுறுசுறுப்பா இருக்கிறியோ அப்பிடித்தான் உன் பேபியும் இருக்கும்.” என்றாள்.