“நான் வேலு மாமா பேசுறேன்.” இந்தக் குரல் தெளிவாக காதில் வந்து விழுந்ததும், “யாரு? யாரு பேசுறது? அந்த ஆளா?” தன்னையறியாமல் குரலில் ஒரு அதட்டல்தொனி வந்து ஒட்டியிருக்க, கணவனிடம் வேகமாக கேட்டாள் நந்தினி.
அந்ததொனி பிடிக்காமல் போகவே, மனதில் வீம்பு வந்து உட்கார்ந்து கொள்ள, “ஆமா” என்று அழுத்தமான குரலில் பதில் சொல்லியவன், “ஒரு அஞ்சுநிமிஷம் வெயிட் பண்ணுங்க மாமா, நானே கூப்பிடுறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.
“என்ன, மாமாவா?” ஏதோ கேட்கக் கூடாத வார்த்தையை கேட்டது போல அருவருப்பாக முகத்தை சுளித்த நந்தினி,
“அப்போ இன்னும் அந்த ஆள்கூட தொடர்புல தான் இருக்கீங்க, அப்பிடித்தானே? அன்னைக்கு ரெட்டைவேஷம் போடாதீங்கன்னு நான் சொன்னப்போ மட்டும் நல்லவர் மாதிரி கோபப்பட்டீங்களே? அது எல்லாம் பொய் தானா?” என்று பல்லைக் கடித்தாள். குரலிலோ ஏகத்துக்கும் கோபம் இருந்தது.
சற்றுமுன் மனைவி பேசிய வார்த்தைகளின் வீரியமே இன்னும் குறையாதிருக்க, இந்தக் குற்றச்சாட்டு எரிச்சலையே உண்டாக்கியது கண்ணனுக்கு. என்றாலும், ஆழ்ந்து மூச்செடுத்து அதை நிதானமாக வெளியேற்றியவன் தன்னுள் முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்தி, சற்றே தன்னை நிதானித்தான்.
“ஆமா… மேடம் பிறவியிலேயே இப்பிடி அறிவாளியா? இல்ல, காவல்துறையில சேர்ந்த பிறகுதான் இப்பிடியா?” நக்கலாக மனைவியிடம் கேட்டவன், அவளைப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமரவைத்தபடி,
“மூச்… நான் ஃபோன் பேசி முடிக்கிறவரைக்கும் சத்தம் வரக்கூடாது.” என்றான் அதட்டலாக.
“இல்ல… நீங்க அந்த ஆளுகூட பேசக்கூடாது.” உட்கார மறுத்து திமிறியதோடு கண்ணன் கையிலிருந்த ஃபோனையும் பறிக்க முயன்றாள் அவன் மனைவி.
அதற்கு இடம் கொடாமல், “நீ என்னோட மனைவி மட்டும் தான். பாஸ் இல்ல, நீ சொல்லுறதை எல்லாம் கேட்டு நான் சலாம் போட.” என்று முகத்திலடித்தாற் போலச் சொன்னவன்,
“இந்த உலகத்துல, தான் மட்டும் தான் நியாயவாதி, மற்றவங்க எல்லாரும் ஃபோர்ஜரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கின்னு நினைச்சிட்டு பேசுறது.” சத்தமாக சொல்லியபடியே ராஜவேலுவிற்கு அழைத்தான்.
“அப்போ என்னோட மன உணர்வுகளுக்கு உங்ககிட்ட மதிப்பு இல்ல, அப்படித்தானே?” நந்தினியின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிப்போக, குரலும் கம்மியிருந்தது.
“யாரு, எம்பொண்ணு பக்கத்துல இருக்குறாளா? எங்கூட பேசக்கூடாதுன்னு சொல்லுறாளா? சொல்லத்தான் செய்வா, நான் செய்து வச்ச வேலை அப்படித்தானே, அதுக்காக எங்கூட பேசாம இருந்துடாத மாப்பிள்ள, இப்போ உன்னை விட்டா எனக்கு நம்பிக்கையான ஆள் யாருமில்ல.” உருக்கமான குரலில் ராஜவேலு பேச,
“ம்ப்ச்… என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லுங்க?” என்றான் கோபத்தை மறைக்காத குரலில்.
அதைக் கண்டுகொள்ளாதவர், “அந்த வைரவமூர்த்தி இருக்குறார் இல்ல, அந்த ஆள் என்னோட வீட்டை வாங்கிட்டாராம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அடியாட்களோட வீட்டுக்கு வந்த அவரோட மூத்த மகன், என்னை வீட்டை காலி பண்ண சொல்லி மிரட்டுறான்” என்றார் பரிதாபமாக.
“என்ன சொல்லுறீங்க மாமா, நீங்க குடியிருக்குற வீட்டையா?” இப்படியொரு நகர்வை வைரவமூர்த்தியிடமிருந்து எதிர்பாராத கண்ணன் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் கேட்டான்.
“ஆமா.”
“நீங்க எப்போ அதை வித்தீங்க?”
“நான் எங்க வித்தேன்? உங்க மூத்த மாமன், அந்த பாழாப்போன பரதேசி வித்ததா சொல்லுறாங்க.”
“தாமோதரன் மாமாவா?”
“ஆமா. அவனே தான்.”
“வீட்டுக்கு ஓனர் நீங்க தானே, பின்ன அவர் எப்படி விக்க முடியும்?”
“வீட்டோட ஓனர் நான் இல்லையாம். நான் எப்பவோ என் வீட்டை அந்த பயலுக்கு வித்துட்டேனாம்.”
“என்ன மாமா சொல்லுறீங்க?!”
“ம்ம்… அந்த வைரவமூர்த்தியோட மகன் காட்டுற டாக்குமெண்ட் அப்படித்தான் சொல்லுது.”
“தாமோதரன் மாமாகிட்ட இதைப்பத்தி கேட்டீங்களா?”
“நான் கேட்க அவன் ஊர்ல இருக்கணுமே.”
“வெளியூர் எங்கேயும் போயிருக்காரா என்ன?”
“கேரளாவுல புதுசா நம்ம ட்ராவல்ஸோட பிராஞ்ச் ஓப்பன் பண்ணப் போறோம்னு குடும்பத்தோட வீட்டை காலி செய்துட்டு போயிட்டானாம், எனக்கே தெரியாது. அவனோட பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லித்தான் தெரியும். ஃபோன் பண்ணிப் பார்த்தேன், அவன் வீட்டுல உள்ள எல்லாரோட போனும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க.” சோர்ந்து போனக் குரலில் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்கும்போது அண்ணன்காரர் திட்டமிட்டு தம்பியை ஏமாற்றியிருக்கிறார் என்பது நன்றாகவே புரிந்தது. ஒரு வழக்கறிஞனாக இதைப்போல எத்தனையோ பார்த்தவனுக்கு, அடுத்தவர் ஏமாற்றும் அளவிற்கு ஏமாளியாக இருந்தது இவர் தவறுதானே என்ற எண்ணம் தான்.
“இல்லையே, அப்படி எதுவும் இல்லையே.” வேகமாக மறுத்தவர்,
“இப்பிடி போன்லயே எல்லாத்தையும் விசாரிச்சு முடிச்சிடுவியா மாப்ள? நேர்ல வந்து அந்த ஆட்கள் தந்துட்டு போன பத்திரங்களோட ஜெராக்ஸ்ஸை படிச்சு பாத்து என்ன ஏதுன்னு சொல்லு, தயவுசெய்து சீக்கிரம் வா.” என்றார் நொந்து போனவராக.
அதுவும் சரியென்று தோன்றவே, “வெயிட் பண்ணுங்க, இதோ வரேன்.” என்று கண்ணன் அழைப்பை துண்டித்தான்.
அதற்காகவே காத்திருந்தது போல கடகடவென்று சத்தமாக சிரித்த நந்தினி, “கடவுள் இருக்கான் குமாரு.” என்றாள் ஆர்ப்பாட்டமாக. கணவனுடைய கைபேசி வழியே கசிந்த வார்த்தைகள் பாதி, அவனுடைய பேச்சை வைத்து யூகித்தது மீதி என்று நடந்தவை நந்தினிக்கும் புரிந்திருந்தது.
“இப்போ எதுக்காக இந்த சிரிப்பு?” மனைவியின் செயல் பிடிக்காதவனாக புருவத்தை நெறித்தான் கண்ணன்.
“ஒரு நம்பிக்கைத் துரோகிக்கே நம்பிக்கை துரோகம் நடந்திருக்கே! இந்த ஒரு காரணம் போதாதா நான் சிரிக்க?” முகம் சந்தோஷத்தில் பூரித்துபோய் கிடக்க, உற்சாகமாக சொன்னாள்.
“நான் இதை அப்பிடி பார்க்கல, அந்த வைரவமூர்த்தி ஏதோ ஒரு விதத்துல நமக்கு குடைச்சல் குடுக்க முயற்சி பண்ணுறதா தான் எனக்கு தோணுது” என்றான் கண்ணன்.
“அப்பிடி நினைச்சு இதை அந்த ஆளு செய்திருந்தா அவனைப்போல அடிமுட்டாள் இந்த உலகத்துலயே இருக்க முடியாது.” என்று அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள்.
“ஓஹ்… அப்போ நீ மட்டும் தான் இந்த உலகத்துலயே புத்திசாலி, வேற எல்லாரும் முட்டாள், ம்ம்…” கண்ணன் லேசாக குரலை உயர்த்த,
“நமக்கு தேவையில்லாதவங்களைப் பத்தி பேசி நாம ஏன் பிரஷரை ஏத்திக்கணும்? சொல்லுங்க, நைட் டிபன் என்ன பண்ணலாம்?” இலகுவாக பேசியபடியே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழும்பினாள்.
“நீ ஏதாவது செய்து சாப்பிடு, நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்.” உன் தகப்பன் வீடுவரை சென்று வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும் மனதைரியம் இல்லாதவனாக மொட்டையாக சொன்னான்.
“அதெல்லாம் நீங்க எங்கேயும் போக வேண்டாம். உக்காருங்க, எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” கணவன் எங்கே செல்ல கிளம்பி நிற்கிறான் என்று புரிந்து கொண்டவளின் குரலில் பிடிவாதம் மிதமிஞ்சி நின்றது.
“ம்ப்ச்… புரிஞ்சிக்கோ நந்தினி, ஒரு லாயரா தான் என்னை இந்த நேரம் அவர் தேடுறார். கொஞ்சம் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடுறேன்.” அருகில் நிற்பவளின் மன எண்ணத்தை புரிந்து கொண்டவன் தன்மையாகவே சொன்னான்.
“லாயராவா? அப்போ ஃபீஸ் வாங்குவீங்களா அவர்கிட்ட? அப்பிடின்னா அந்த ஆளு தர்றதைவிட இரண்டு மடங்கு ஃபீஸ் நான் தரேன் உங்களுக்கு, நீங்க அங்கப் போகக்கூடாது.” கணவனை அங்கே போகவிட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே நந்தினியிடம் பிரதானமாக இருக்க, அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“அதாவது… பணத்துக்கு பின்னாடி ஓடுற ஆளுன்னு என்னைச் சொல்லுற, அப்பிடித்தானே?” கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தியபடி கேட்டவனின் இதழ்களில் கசந்த புன்னகை.
‘ஹைய்யோ… ஏற்கனவே வார்த்தைகளை விட்டு அதை சரிசெய்து கொள்ளும் முன்னர், மறுபடியுமா?’ நொந்து போனவள், பரிதாபமாக கணவனைப் பார்த்தாள்.
“பரவாயில்ல, என்னைப் பத்தி உங்கிட்ட ரொம்ப உயர்ந்த எண்ணங்கள் தான் இருக்கு, அதை வெளியே கொண்டுவந்த இந்த நாளுக்கும் சூழ்நிலைகளுக்கும் நான் நன்றி சொல்லியே ஆகணும்.” கேலிபோலவே சொன்னாலும் கண்ணனின் முகம் இறுகியிருக்க, விறுவிறுவென்று அறையிலிருந்து வெளியேறினான்.
“நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது தான். அதுக்காக நீங்க அந்த ஆளு வீட்டுக்கு போகாதீங்க.” நந்தினியின் குரல் காற்றில் கரைந்து போக, பைக்கில் வெளியேறியிருந்தான் கண்ணன்.
தன் சொல்லையும் மீறி கணவன் சென்றது ஏமாற்றமாக இருக்க, தொப்பென்று அப்படியே இருக்கையில் அமர்ந்தாள் நந்தினி.
வெளியே சாலையில் சென்று கொண்டிருந்த கண்ணனின் மனம் உலைகலனாக கொதித்து கொண்டிருந்தது.
தன் மனைவி நுனி நாக்கில் சாட்டையை சுழற்றும் ஆள் தான் என்பது தெரிந்தும், அதுவும் தகப்பன் என்று வந்துவிட்டால் அதற்கு வரையறையே கிடையாது என்பது தெரிந்தும், கோபம் கொண்ட அவன் மனது சமாதானமடைய மறுத்து திமிறிக்கொண்டு தான் நின்றது.
இப்படியே சென்றால் தன்னை மீறி பைக்கை எங்காவது விட்டாலும் விட்டு விடுவோம் என்று தோன்ற, ஒரு டீக்கடைக்கு அருகே வண்டியை நிறுத்தி டீயை வாங்கியவன், அந்த சூடான டீயால் தன் கோபத்தை அணைக்க முயன்றான்.
அங்கே ராஜவேலுவின் வீட்டிலோ அவரை உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டிருந்தார் கல்பனா.
ஏற்கனவே தாமோதரனை கல்பனாவுக்கு பிடிக்காது. எத்தனை முறைகளோ கணவனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவருடைய அண்ணனைப் பற்றி எச்சரித்தும்கூட, இன்று இந்த நிலைமையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் கணவனை பிய்த்து தின்றுவிடலாம் போலக் கோபம் அவரிடம்.
அதெல்லாம் போக, ஊரில் வழக்கறிஞர்களே இல்லாதது போல மகளின் கணவனிடம் போய் உதவி கேட்டுக்கொண்டு நின்றது அவரின் கோபத்தை இன்னும் விசிறிவிட்டது.
“ஒரு சொந்தக்காரனை நம்பி தெருவுக்கு வந்தது போதாதுன்னு, அடுத்த சொந்தத்தை உள்ள இழுக்குறீங்களோ?” கணவனிடம் எகிறினார் கல்பனா.
“நீ கொஞ்சம் வாயை மூடிகிட்டு சும்மா இரு கல்பனா, எனக்கு எல்லாம் தெரியும்.” பதிலுக்கு அதட்டினார் வேலு.
“எல்லாம் தெரியுமா? தெரிஞ்சதால தான் குடியிருக்குற வீட்டை அடுத்தவன்கிட்ட தூக்கி குடுத்துட்டு நிக்குறீங்களா?” வார்த்தைகளாலேயே கணவனை மட்டம் தட்டினார் அந்த பெண்மணி.
“இப்போ என்ன உனக்கு? என்னவோ உங்க அப்பன் வீட்டுல இருந்து நீ கொண்டுவந்தது போல ரொம்பத்தான் குதிக்கிற? நான் சுயமா சம்பாதிச்ச சொத்து டி, என்ன வேணும்னாலும் பண்ணுவேன். அதைக் கேக்க யாருக்கும் இங்க அதிகாரம் கிடையாது. வாயை மூடிட்டு பேசாம இருக்கிறதா இருந்தா இரு, இல்லைன்னா கிளம்பி போய்ட்டே இரு.” மனைவி தன்னை ஏமாளி என்று சொல்லாமல் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் குதித்தார் ராஜவேலு.
“எனக்கு போக்கிடம் இல்லைன்னு தெரிஞ்சு தானே இப்படியெல்லாம் பேசுறீங்க?” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கல்பனா அழுகைக்கு தயாராக,
“ச்சை… எப்போ பாத்தாலும் நொய் நொய்னு அழுதுகிட்டு, எப்போ என் வாழ்க்கையில நீ வந்தியோ, அப்பவே என் நிம்மதி போச்சு. இப்போ என் சொத்தும் போச்சு. சரியான ராசி கெட்டவ.” பழியைத் தூக்கி எளிதாக அடுத்தவர் தலையில் வைத்து பழக்கப்பட்ட ராஜவேலு, மிக எளிதாக கல்பனாவிடம் எல்லாவற்றுக்கும் உன் ராசி தான் காரணம் என்றுவிட்டார்.
அன்றொருநாள், “எல்லாம் உன்னாலத் தான், நீ பொம்பிள்ளை பிள்ளைகளா பெத்து போட்டா, எனக்கு ஆம்பிள்ளைப் பிள்ளை வேணும், அதான் இன்னொரு கல்யாணம் செய்துகிட்டேன்.” என்று திலகம் மீது பழியைத் தூக்கி வைத்தபோது ரசித்த கல்பனாவின் மனது, இப்போது எல்லாவற்றுக்கும் காரணம் உன் ராசி என்று பழியை தன் தலையில் தூக்கி வைத்தபோது ஏற்றுக்கொள்ள முடியாமல் முரண்டு பிடித்தது.
சிலிர்த்துக்கொண்டு பதிலுக்கு பதில் கொடுக்க கல்பனா முயன்ற நேரத்தில் தான் கண்ணன் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.
“வாடா மாப்பிள்ள, எங்க வராம இருந்துடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்.” வேகமாகச்சென்று கண்ணனின் கைகளை ராஜவேலு பற்றிக்கொள்ள, அந்த வரவேற்பை கல்பனாவின் மனம் ரசிக்கவில்லை.
மகளின் கணவன் ஆவதற்கு முன்னரே கண்ணன் ராஜவேலுவின் அக்கா மகன். அந்த உரிமை அவருடைய வார்த்தைகளில் தன்னையறியாமலேயே வெளிப்பட்டு விட, கல்பனாவுக்கோ மகளின் கணவனிடம் எத்தனை பாசம் என்ற எண்ணம். அந்த எண்ணமே கண்ணனை கண்ட நிமிடமே அவன்மீது வெறுப்பை வளர்ப்பதற்கு போதுமாக இருந்தது.
கையைப் பிடித்து கண்ணனை அவர் உள்ளே அழைத்து வர, அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் முகத்தை திருப்பினார் அந்த பெண்மணி.
அவர் உடல்மொழியைக் கொண்டே தன் வருகையை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்ட கண்ணனுக்கு, அந்த இடத்தில் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் போனது.
தான் அங்கே வந்திருக்க கூடாது என்ற எண்ணம் நொடியில் வந்திருக்க, “அந்த டாக்குமெண்ட்ஸ்ஸோட ஜெராக்ஸ் காப்பீஸ் ஏதோ இருக்குதுன்னு சொன்னீங்களே, காட்டுங்க மாமா.” நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
ராஜவேலு தன் அண்ணனுக்கு வீட்டை விற்றதாக கூறும் பத்திரத்தின் பிரதி ஒன்று, தாமோதரன் வைரவமூர்த்திக்கு வீட்டை விற்றாக கூறும் பிரதி என்று இரண்டு பிரதிகள் இருந்தன.
ராஜவேலு தமையனுக்கு வீட்டை விற்றதாகக் கூறும் பத்திரத்தை எடுத்து கண்ணன் முதலில் வாசிக்க தொடங்கினான்.
“உட்கார்ந்து படி மாப்ள.” மனைவியின் வெறுப்பை அதிகரிக்கிறோம் என்பது தெரியாமலேயே உபசரிப்பில் இறங்கினார் ராஜவேலு.
“இல்ல, பரவாயில்ல…” மறுத்தவனின் உதடுகள் மெல்ல மெல்ல அதிருப்தியாக பிதுங்கத் தொடங்கியது.
“என்ன மாப்பிள்ள, அவங்க சொல்லுறதெல்லாம் உண்மைதானா?” கண்ணனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வேலு பதட்டமாக கேட்டார்.
“ம்ம்… நீங்க உங்க அண்ணனுக்கு வீட்டை வித்ததா பக்காவா இருக்கு டாக்குமெண்ட்.” உணர்ச்சிகள் எதையும் காட்டிக்கொள்ளாத குரலில் சொன்னான்.