“ம்ம்… கோர்ட்டுக்கு தான். அந்த பையன் மேல அங்கதானே தப்புதப்பா வழக்கை ஃபைல் பண்ணியிருக்குற, அது பொய்னு நீ சொல்ல வேண்டாமா?” நக்கலாகச் சொன்னவள், அலைபேசியை எடுத்து கணவனுக்கு அழைத்து அவனுடைய சட்ட அலுவலகத்திற்கு வருவதாக சொன்னாள்.

நிலைமை தன் கையை மீறிச்செல்வதை கண்டுகொண்ட அந்த யுவா, “என்னோட அப்பா அம்மாகிட்ட பேசணும், அவங்க இல்லாம எங்கயும் வரமாட்டேன்.” என்றாள் பிடிவாதமாக.

“உன் அம்மா, அப்பா உன்னோட லாயர் எல்லோரும் வருவாங்க. நீயும் வா.” அந்த யுவாவின் கையை அழுத்தமாக பிடித்து டீ ஷாப்பை விட்டு வெளியே நந்தினி அழைத்து வர, உடனிருந்த பெண் மெதுவாக நழுவினாள்.

“எங்க போற? நீதான் மெயின் விட்னஸ். கோர்ட்டுக்கு வந்துட்டு போலாம்.” என்றாள் அதட்டலாக.

“கோர்ட்டுக்கா? எங்க அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னே போடுவாங்க.” பெரிதாக அந்த பெண் அங்கலாய்க்க,

“இந்த மாதிரி ஆட்கள் கூட பழகுறதுக்கு முன்னாடி அதை யோசிச்சிருக்கணும் அம்மிணி.” கேலியாக சொல்லியவள், ஒரு வாடகைக் காரை அமர்த்தி இருவரையும் கணவனின் அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தாள்.

இரண்டு பெண்களோடு, அதுவும் அந்த வரதட்சணை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணோடு மனைவி வரவும் குழப்பம் தான் கண்ணனுக்கு.

என்னவென்று கேட்டவனுக்கு தன் மொபைல் போனில் பதிவு செய்திருந்த வீடியோவைக் காட்ட, விஷயம் புரிந்தது.

காரில் வரும்போதே அந்த பெண்ணிடம் அவளுடைய பெற்றோர்களின் மொபைல் நம்பரை வாங்கி கணவனின் அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தாள் நந்தினி.

தன்னை எஸ்பி என்று அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் பெண் வழக்கு சம்மந்தமாக பேச, உங்கள் பெண் என்னோடு தான் இருக்கிறாள் என்றும் சொல்ல, அவர்களும் தங்களுடைய வழக்கறிஞர் சகிதம் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்திருந்தார்கள்.

கண்ணன் அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பையனின் வீட்டுக்கு அழைக்க, அவர்களும் வந்திருந்தார்கள்.

ஆக, அந்த வழக்குக்கு சம்மந்தப்பட்ட இருதரப்பினரும் அங்கே இருக்க, நந்தினியின் கைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோ மறுபடியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரின் முகங்களும் பல்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.

வீடியோ முடியவும், “பாவி மகளே! உன் தலையில நீயே மண்ணள்ளி போட்டுகிட்டியே?” என்றபடியே அந்த பெண்ணின் தாய் தன்னுடைய மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

அப்படியே அந்த பையனின் பெற்றோரைப் பார்த்து கைகளைக் குவித்த அந்த பெண்மணி, “ஏதோ தெரியாம செய்துட்டா, அவளை மன்னிச்சு ஏத்துக்கணும்” மகளுடைய வாழ்க்கையை காப்பாற்றிவிடும் எண்ணத்தில் சொல்ல,

“இல்ல, எங்களால முடியாது.” பாதிக்கப்பட்ட பையனிடமிருந்தும், அவன் பெற்றோரிடமிருந்தும் ஒருசேர பதில் வந்திருந்தது.

“எனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னேன், அதைக் கேட்டிருந்தா, நான் ஏன் இப்படி எல்லாம் செய்யப் போறேன்?” தன் குட்டு வெளிப்பட்டு விடவும் அந்த பெண் நேரடியாக பெற்றோரிடம் பாய்ந்தாள்.

“இந்த ஒரு வீடியோ போதும் என் கட்சிக்காரர் மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்க, என்ன சொல்லுறீங்க?” அந்த பையனின் வழக்கறிஞராக பெண்ணை பெற்றவர்களிடம் பேசினான் கண்ணன்.

“நாங்க கேஸை வாபஸ் வாங்கிக்கறோம், நமக்குள்ளயே சமாதானமா போயிடலாம் சர். ” சோர்ந்து போனக் குரலில் அந்த பெண்ணின் தகப்பன் சொல்ல, “முடியாது” என்றான் மாப்பிள்ளை பையன்.

“இவங்க கேஸை வாபஸ் வாங்குறதால, இந்த சொசைட்டி முன்னாடி டேமேஜ் ஆன என்னோட இமேஜ் திரும்ப வருமா சர்?” மாப்பிள்ளை பையனின் கேள்வியும் நியாயமாகத் தான் இருந்தது.

“கோர்ட்ல ஜட்ஜ் முன்னாடி இவங்க பொண்ணு தன்னோட தவறை ஒத்துக்கணும், அது எல்லா மீடியாவுலயும் செய்தியா வரணும். இப்பிடி செய்யுறதால என்னோட மதிப்பும் மரியாதையும் திரும்ப வந்துடப் போறதில்லை தான். இருந்தாலும் இதுகூட இல்லைன்னா எப்பிடி?” தீவிரமான குரலில் அந்த அந்த இளைஞன் சொல்ல,

“அப்பிடி செய்தா எம்பொண்ணோட எதிர்காலம் என்னாகுறது?” என்றார் பெண்ணின் தகப்பன்.

“அப்போ அந்த பையனுக்கு மட்டும் எதிர்காலம் இல்லையா?” இத்தனை நேரமும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி இருந்த நந்தினியிடமிருந்து தான் சூடாக வந்திருந்தது கேள்வி.

“கேக்குறாங்க இல்ல, சொல்லுங்க சர்.” மனைவியை நிமிர்ந்து பார்த்தபடியே சொன்னான் கண்ணன்.

பதில் சொல்லும் சூழ்நிலையில் மகள் அவர்களை நிறுத்தியிருக்கவில்லையே. எனவே மௌனமாக தான் நிற்க முடிந்தது பெண்ணை பெற்றவர்களால். கடைசியில் அந்த மாப்பிள்ளை பையனின் வார்த்தைகளை ஒத்துக்கொள்வதை தவிர வேறுவழியில்லை அவர்களுக்கு.

எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டு பெண் வீட்டார் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து போட, நாளை நீதிமன்ற நேரத்தில் மறுபடியும் சந்திக்கலாம் என்று முடிவு செய்து எல்லோரும் கலைந்து சென்றார்கள்.

“எம்பையனோட மரியாதையை காப்பாத்தி குடுத்திட்டீங்க மேடம், ரொம்ப நன்றி உங்களுக்கு.” செல்லும் போது உணர்ச்சி மேலீட்டால் கைகளை குவித்து நந்தினிக்கு நன்றி சொன்னார் அந்த பையனின் அம்மா.

இப்போது கணவனும் மனைவியும் மட்டும் தான் அந்த அலுவலகத்தில்.

“நம்ம கல்யாணத்துக்கு பிறகு மொதமொதலா என்னோட ஆபீஸுக்கு வந்திருக்கீங்க, வெல்கம் மேடம்.” விரிந்த புன்னகையோடு மனைவியை வரவேற்றான் கண்ணன்.

அவளோ கணவனுக்கு பின்னால் ஷெல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டப்புத்தகங்களை பார்வையிட்டபடியே, “நிஜமா இதையெல்லாம் படிச்சு தான் நீங்க லாயர் ஆனீங்களா த்தான்?” என்றாள் கேலிப்புன்னகையை உதட்டுக்குள் அடக்கியபடியே.

“உனக்கு எப்பிடி தோனுது?” உற்சாகமான மனநிலையில் இருந்தவன் கேள்விப் பந்தை மனைவியிடமே தள்ளி விட்டான்.

“ம்ம்… உண்மையைச் சொல்லப்போனா, எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கு.” இப்போது புன்னகை சிரிப்பாக விரிந்திருந்தது நந்தினியின் இதழ்களில்.

“அடிங்… என் ஆஃபீஸுக்கு வந்து என்னையே சந்தேகப்படுவியா? கொழுப்பு டி உனக்கு.” மனைவியின் காதைப்பிடித்து லேசாக முறுக்கியவன்,

“டீ குடிக்கிறியா?” என்றான் வரவேற்பாக.

“அதைச் சொல்லுங்க மொதல்ல, அது ஒன்னைக் குடிக்க நினைச்சு கடைக்குள்ள போய்தான் இவங்களை கையும் களவுமா பிடிக்க முடிஞ்சது. ஆனா டீ தான் குடிக்க முடியல.” காதை தேய்த்து விட்டபடியே பலசரக்கு கடையில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கணவனிடம் சொன்னவள்,

“போலீஸ்னா லஞ்சம் வாங்குறவங்கன்னு எப்படி இவங்களே முடிவு செய்துக்குறாங்க?” என்றாள் இன்னமும் கோபம் குறையாதவளாக.

“எல்லாம் உங்க துறையைச் சேர்ந்த மக்கள் செய்துவச்ச வேலை தான் ம்மா.” எப்போதும் டீ வாங்கும் கடைக்கு ஃபோன் செய்து டீ கொண்டுவரச் சொன்ன கண்ணன் கேலியாகச் சொல்ல,

“உங்களுக்கு எங்க டிப்பார்ட்மெண்டை குறை சொல்லலைன்னா ஆகாதே.” நொடித்தாள் மனைவி.

“உனக்கும் அதை ஒத்துக்க முடியாதே.” சிரித்தவன்,

“அந்த வீடியோ எவிடென்ஸ்ஸை மட்டும் எங்கிட்ட கொடுத்திருந்தாலே போதுமே, அந்த பொண்ணை கையோடு இங்க கூட்டிட்டு வந்திருக்கத் தேவையில்லையே.” என்றான்.

“ம்ம்… சுமார் வருமானம் உள்ள என்னோட அப்பாவி லாயர் ஹஸ்பெண்ட் இந்த கேஸ்லயாவது ஜெயிச்சு, நல்லா வருமானம் பாக்கட்டுமேங்குற நல்லெண்ணத்துல தான் கூட்டிட்டு வந்தேன்.” கணவனின் வார்த்தைகளைக் கொண்டே அவனை கேலி செய்து சிரித்தவள்,

“அந்த வீடியோவை நீங்க சாட்சியா கோர்ட்ல சப்மிட் செய்யும்போது வீடியோல இருக்குறது நான் இல்லை, அந்த குரல் என்னது இல்லைன்னு அந்த பொண்ணு சொல்லமாட்டான்னு என்ன நிச்சயம்? அப்பிடி மட்டும் நடந்தா அந்த பையனுக்கான நியாயம் தள்ளிப் போகுமே. அதான் என்கிட்ட மாட்டிக்கிட்ட ஆரம்பகட்ட அதிர்ச்சி விலகுறதுக்கு முன்னாடியே அந்த பொண்ணை உங்ககிட்ட கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா ரெண்டு பேரோட பெத்தவங்களும் ஒன்னா வந்து சேருவாங்கன்னு நினைச்சுகூட பாக்கல. உண்மையிலே அந்த பையனுக்கு நேரம் நல்லா இருந்துருக்கு. அதான் எல்லாம் சரியா நடந்திடிச்சு.” என்று உண்மையான காரணத்தைச் சொல்ல, அவளையே விழி அகலாது பார்த்தபடி இருந்தான் கண்ணன்.

“ஹலோ, எதுக்கு இப்பிடி பாக்குறீங்க?” கணவனின் முகத்துக்கு நேரே தன்னுடைய கையை ஆட்டியபடி கேட்டாள்.

“இல்ல, அந்த பையன் தான் தப்பு செய்திருப்பான்னு அன்னைக்கு உறுதியா சொன்ன நீ, இன்னைக்கு இவ்வளவு யோசிச்சு செய்ததோடு அந்த பையனுக்கு ஆதரவா பேச வேற செய்தியே, அதான் என்ன மாயம் நடந்துருக்கும்னு பாக்குறேன்.”

“சிம்பிள், தப்பு செய்யாதவன் தண்டிக்க பட்டுறக்கூடாதுங்குற அடிப்படை எண்ணம் தான். உண்மையைச் சொன்னா, ஆண்களைப் பற்றிய என்னோட அபிப்பிராயம், வேலையில் ஒருதலைபட்சமா என்னை நடக்க வச்சிடக்கூடாதுன்னு ரொம்பவே மெனக்கெடுவேன். அப்பிடியிருந்தும் ஏதோ ஒரு இடத்துல நான் சறுக்கியிருக்குறேன்னா, கண்டிப்பா இதை நான் சரி செய்துக்கணும்.” டீ வந்திருக்க, அதைப் பருகியபடியே தன் மனஉணர்வுகளை கணவனோடு பகிர்ந்து கொண்டாள் நந்தினி.

“தப்பை தப்புன்னு ஒத்துக்கவும் தனி தைரியம் வேணும் நந்து. அது உங்கிட்ட இருக்குது. அதனால உன் முயற்சியில சீக்கிரம் வெற்றி கிடைக்கும்.” பதிலுக்கு கண்ணன் சொல்ல,

“ஹலோ… ஹலோ நான் இப்பிடி சொல்லுறதால உங்க இனத்தைச் சேர்ந்த எல்லாரும் ரொம்ப நல்லவங்கன்னு அர்த்தம் ஆகிடாது.” பழைய பன்னீர்செல்வமாக குரலை உயர்த்தினாள் அவன் மனைவி.

“அதேதான்… அதேதான், ஆம்பிள்ளைங்க எல்லோரும் அயோக்கியங்களும் கிடையாது, பொண்ணுங்க எல்லோரும் புண்ணிய ஆத்துமாக்களும் கிடையாது. இரண்டு பக்கமும் தப்பு செய்யுற ஆட்கள் சரிசமமா இருக்குறாங்க. இதை மட்டும் மனசுல பதிய வச்சிகிட்டா குழப்பமே இல்ல. இதுக்கு மேல இதைப்பத்தி பேசினா நமக்குள்ள குழப்பம் வந்தாலும் வந்துடும். அதனால நாம வாயையும் ஆஃபீஸையும் ஷட்டப் பண்ணிட்டு கிளம்புவோம். வீட்டுக்கு போய் ஏகப்பட்ட வேலை இருக்குது” என்றவன், பரபரப்பாக வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தான்.

“அப்பிடி என்ன வேலை வீட்டுல காத்துக்கிடக்குதாம்?” கணவனுடைய அலுவலக பையை கையிலெடுத்தபடியே கேட்டாள்.

“என்ன இப்பிடி கேட்டுட்ட செல்லம்? இந்த ஒரு வாரமா சின்ன ஹக், கிஸ்ஸுக்கு கூட பஞ்சமாப் போச்சே, இன்னைக்கு அது எல்லாத்தையும் வட்டியும் மொதலுமா மொத்தமா வசூல் பண்ணுற வேலை இருக்குல்ல.” வெட்கமே இல்லாமல் ரசனையான குரலில் கண்ணன் சொல்ல, வெக்கத்தால் சிவந்து போனவள் கணவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள்.

“என்ன, வசூல் செய்துடலாம் இல்ல?” மனைவியின் கன்னத்தை லேசாக தட்டியபடி கேட்க,

“எங்க வச்சி என்ன பேசணும்ங்குற விவஸ்தையே இல்லையா உங்களுக்கு?” பல்லைக் கடித்தவள், கையிலிருந்த பையால் அவனை மொத்தினாள்.

“ஆமா… வெவஸ்தையே இல்லை தான், வீட்டுக்கு போய் அதையும் கத்து கொடுத்துடு.” உல்லாசமாக சொல்லியபடி மனைவியோடு கிளம்பிவிட்டான் கண்ணன்.

 இருவரும் புன்னகை முகமாகவே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

 கண்ணனின் அலுவலகம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலேயே இருந்ததால், காவலர்களின் நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. கணவனோடு பட்டுப்புடவையில் ஜோடியாக கண்ட தங்கள் எஸ்பியை சுவாரஸ்யமாக பார்த்த அந்த காவலர்கள், நந்தினிக்கு மரியாதையாக சல்யூட் வைத்தார்கள். அதை தலையசைத்து ஏற்றுக் கொண்ட நந்தினியிடம்,

“பேசாம தினமும் என் ஆஃபீஸ் பக்கம் வந்துட்டு போ நந்து. நெல்லுக்கு பாயும் நீர் ஆங்கே புல்லுக்கும் பாயுற மாதிரி, உனக்கு அடிக்கிற சல்யூட் எனக்கு அடிக்கிற மாதிரியே சும்மா ஜிவ்வுன்னு ஃபீல் ஆகுது.” கண்களைச் சிமிட்டியபடி உற்சாகமாக சொன்னான்.

“அப்போ கண்டிப்பா இனிமே இங்கே வரமாட்டேன்.” சட்டென்று சொன்னாள் நந்தினி.

“ஆனாலும் இந்தளவுக்கு விறைப்பா இருக்க வேண்டாம் எஸ்பி மேடம்.” கேலியாகவே பதில் சொல்லியவன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை உயிர்ப்பிக்க, கணவன் பின்னால் ஏறி அமர்ந்தவள்,

“நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி அப்படிங்குறதால என்னோட பதவிக்கான மதிப்பு உங்களுக்கு கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு த்தான்.” வண்டி நகரவும் பாடமெடுத்தாள்.

“ஹேய்… நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, அதை நீ சீரியஸா எடுத்துகிட்டியா?” சிரித்தபடியே கண்ணன் கேட்க,

“எதையும் முளையிலேயே கிள்ளிவிடுறது நல்லது இல்ல.” யோசிக்காமல் சொல்லிவிட்டாள்.

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற, உன்னோட பதவியில நான் குளிர்காய நினைக்கிறேன்னு சொல்லுறியா?” சட்டென்று வண்டியை ஓரம்கட்டி நிறுத்தி மனைவியை திரும்பிப் பார்த்தவன், ஏதோ போன்றக் குரலில் கேட்க,

“எதுக்கு இப்பிடி குதர்க்கமா யோசிக்கிறீங்க த்தான்? நான் அப்பிடி எல்லாம் நினைச்சு சொல்லலை” என்றாள் வேகமாக.

“பின்ன, எப்பிடி நினைச்சு சொன்ன?”

“அந்த விபத்து விஷயத்துல நீங்க நடந்துகிட்ட மாதிரி எதையும் செய்து இழுத்து வச்சிடக்கூடாதுன்னு தான்…” அவளுக்கே தன்னுடைய பேச்சு அபத்தமாகத் தோன்ற வார்த்தைகள் தேய்ந்து பலகீனமாகவே வந்து விழுந்தன.

“ஹ்ம்… அப்போ இவ்வளவு நாள்ல என்னைப் பத்தி நீ புரிஞ்சிகிட்டது அவ்வளவு தான், இல்ல?” உடல் விறைக்க கேட்டவன், மனைவியிடமிருந்து பதில் எதையும் எதிர்பார்க்காதவனாக வண்டியை அங்கிருந்து நகர்த்தியிருந்தான்.

அவன் கைகளில் வண்டி பறந்த வேகத்திலேயே அவனுடைய கோபம் நந்தினிக்கு புரிந்தது.

 “மெதுவா போங்க த்தான்.” கண்ணனின் தோளில் கைவைத்து அழுத்தியபடி நந்தினி சொல்ல, அவள் கைவைத்த தோளை லேசாக உயர்த்தி உதறியவன்,

“கையை எடு” என்றான் பல்லைக் கடித்தபடி.

“ஏன்? நான் ஏன் எடுக்கணும்?” உனக்கு சளைத்தவள் இல்லை என்ற ரீதியில் நந்தினியும் கேட்க,

“வீட்டுக்கு ஒழுங்கா போய் சேரணும்னா மரியாதையா கையை எடு” என்றான் மிரட்டும் தொனியில்.

அதற்கு மேலும் அவனைக் கோபப்படுத்த விரும்பாமல் கையை விலக்கிக் கொண்டவளுக்கே தன்னுடைய பேச்சு அதிகப்படியாக தோன்ற கவலையாகப் பார்த்தாள் கணவனை.

  சமீபமாக கருத்து வேறுபாடுகளால் கணவனோடு அடிக்கடி முட்டிக்கொண்டு நிற்பது புரிந்தது. அதுவும் இப்போதைய பேச்சு தேவையில்லாத ஆணி என்பதுவும் புரிய, ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று சுய அலசலில் இறங்கியது அவள் மனது.

‘வீட்டுக்கு போனதும் எப்படியேனும் கணவனை சமாதானப்படுத்தி, இதைப்பற்றி பேசிவிட வேண்டும்.’ முடிவு செய்து கொண்டாள்.

ஆனால் அதற்கு வழியில்லாமல் வீட்டுக்குள் நுழையவுமே கண்ணனின் கைபேசி அழைத்தது. கையில் அதை எடுத்தவனின் கண்களோ, திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும் மனைவியை யோசனையாகப் பார்த்து வைத்தன.

கணவனுடைய பார்வையிலிருந்த வித்தியாசத்தை சரியாக படித்த அவன் மனைவி, “யாரு த்தான்?” என்றாள் தன் மௌனத்தை கைவிட்டவளாக.

பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டவனோ அழைப்பை ஏற்காமல் அதை துண்டிக்க, அடுத்த வினாடியே மறுபடியும் அது கதறியது.

“ஏன் கட் பண்ணுறீங்க? எங்கிட்ட வச்சு பேச முடியாத அளவுக்கு அப்பிடி யார் தான் கூப்பிடுறாங்க?” கண்களைச் சுருக்கி யோசனையாக நந்தினி கேட்ட விதத்தில், மனைவியை வகைதொகை இல்லாமல் முறைத்தபடி அழைப்பை ஏற்று அலைபேசியை காதுக்கு கொடுத்தான்.

அவனுடைய ஹலோவுக்காக கூட காத்திருக்காமல் பாய்ந்து வந்து காதில் மோதியது ராஜவேலுவின் குரல்.

“மாப்பிள்ள, நான் வேலு மாமா பேசுறேன் டா. இங்க என்னவெல்லாமோ நடந்து போச்சு. எங்கூடப் பிறந்தவனே எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டான். கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போடா, ப்ளீஸ்…” பதட்டத்தில் ராஜவேலு படபடவென்று பேசியது, அங்கே நின்றிருந்த நந்தினியின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது…