“நம்மால யாரும் கெட்டுப்போனாங்கன்னு இருக்கக்கூடாது இந்து, புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். வெளியே நிக்குறேன், வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்தவள்,

“வீட்டுக்கு போனதும் மூட்டை முடிச்சை கட்டிகிட்டு சென்னைக்கு கிளம்புற. இல்ல, என்னால முடியாதுன்னா உன் வாழ்க்கையை யாராலும் காப்பாத்த முடியாது.” விறைப்பாகவே சுரேந்தரிடம் சொன்னாள்.

“இல்லக்கா, இதோ இப்பவே போய் கிளம்புறேன், ரொம்ப தேங்க்ஸ் க்கா.” உற்சாகமாக சொன்னவன், சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி சிவாவோடு சென்றே விட்டான்.

அன்றிரவு உணவு நேரத்தில் நடந்தவற்றை கணவனிடம் நந்தினி சொல்ல, “உண்மையாவா?” என்றவனிடம் மிதமிஞ்சிய ஆச்சர்யமே.

கணவனுடைய குரலிலேயே விஷயம் இப்போதுதான் அவனுக்கு தெரிகிறது என்பதை புரிந்து கொண்ட நந்தினி, “என்ன உண்மையாவா? இன்னமும் விஷயத்தை உங்க மாமா பையன் ஃபோன் பண்ணி உங்களுக்கு சொல்லலையா என்ன?” என்றாள் அவனை சீண்டும் விதமாக.

“நீ சொல்லுறதைப் பாத்தா, தினம் மூனுவேளை ஃபோன் செய்து நாங்க கொஞ்சுறது போலல்ல இருக்கு?” சிலிர்த்துக் கொண்டான் கணவன்.

“இல்லியா பின்ன?”

“அன்னைக்கு ஒருநாள் இரட்டை வேஷம் போடாதீங்கன்னு எங்கிட்ட சொன்னியே, அப்பவே இரண்டு அப்பு அப்பியிருந்தா, இன்னைக்கு இந்த கேள்வி வந்துருக்காது.” மனைவியின் கேலியைப் புரிந்து கொண்டவன், தன்னுடைய நீண்டநாள் கோபத்தை கேலி போலவே இறக்கி வைத்தான்.

“ஓஹ்… அடிப்பீங்களோ நீங்க? எங்க, அடிங்க பாப்போம்.” கணவனின் முகத்துக்கு நேராக தன் முகத்தை நீட்டியபடி நந்தினி சொல்ல, தனது இடதுகையை மனைவியின் வலது கன்னத்தில் பொத்தினாற் போல வைத்து எடுத்தான்.

“இதுதான் உங்க டக்கா யுவர்ஆனர்?” நந்தினி வெடித்துச் சிரிக்க, உடன் இணைந்து கொண்டவன்,

“அந்த பையன் சுரேந்தரோட மனநிலைமையை பாக்கும்போது அவனோட நிலமை பரிதாபத்துக்குரியது தான். அதே நேரம் அத்தைக்கு நடந்தது மன்னிக்க முடியாத நம்பிக்கை துரோகம். அதுக்கு காரணமான மனுஷனை எந்த காலத்திலயும் மன்னிக்க முடியாது. சோ, உனக்கு தேவையில்லாதவங்க எனக்கும் தேவையில்லாதவங்க தான் நந்து. இதை நீ எப்பவும் மனசுல வச்சிக்கணும்.” தான் சொல்லியதை கடைபிடிக்க முடியாமல் போவது தெரியாமல் பேசிக்கொண்டே சென்றான் கமலகண்ணன்.

சுரேந்தருக்கு மகள் உதவி செய்த விஷயத்தை கேள்விப்பட்ட திலகத்திற்கு கூட நிம்மதியாகத் தான் இருந்தது. “நம்மளால யாரும் கெட்டுப்போனாங்கன்னு இருக்கக்கூடாது.” மகளின் மனதையே அந்த தாயும் பிரதிபலித்தார்.

அடுத்துவந்த வாரத்தில் நந்தினியின் தங்கைகள் இருவரும் விடுமுறையில் ஊருக்கு வர, அனிதா குடும்பத்தை விருந்துக்கு அழைத்தாள் நந்தினி. ஆமாம்… பாட்டி, அத்தை, சபேசன் தம்பதியினர் என்று ஒட்டுமொத்தமாக எல்லோரையும் சேர்த்து தான் அழைத்திருந்தாள்.

அவர்கள் எல்லோரும் வரும்போது தன்னுடைய புகுந்த வீட்டு உறவுகளை நந்தினி விட்டுவிடுவாளா என்ன? கண்ணனின் தங்கை தீபா முதற்கொண்டு எல்லோரையும் அழைத்திருக்க, வீடு ஜேஜே என்று கொண்டாட்டமாக இருந்தது.

அத்தனை பேர் வந்திருந்தாலும் உணவை வீட்டில் உள்ளவர்களே சமைத்துக் கொண்டார்கள். ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட வேண்டும் என்றால் ஹோட்டலுக்கே போகலாமே, விருந்து என்று வீட்டுக்கு ஏன் அழைக்க வேண்டும்? மூத்த பெண்களின் கூற்று இப்படியாக இருக்க, ஆளுக்கொரு வேலை செய்து சமையலை முடித்திருந்தார்கள்.

சாப்பாடு, பேச்சு என்று கலககலப்பாகவே சென்றது பொழுது. கடைசியில் அங்கேசுற்றி இங்கேசுற்றி பேச்சு வைரவமூர்த்தியிடம் வந்து நின்றது.

“என்னதான் சட்டப்படி நாம பாதுகாப்பை ஏற்பாடு செய்திருந்தாலும், எதிராளி அதை மதிக்கிற வரைக்கும் தான் நமக்கு பலம்.” நிசர்சனத்தை சொன்னான் கண்ணன்.

“நீ பயப்படாத பேராண்டி, வீட்டுக்கு வந்து எங்ககிட்ட எவனாவது வாலை ஆட்டினா, அருவாமனையாலே வகுந்துடுவேன்.” வரிந்துகட்டிக் கொள்ளாத குறையாக குரல் கொடுத்தார் பாட்டி ஞானவல்லி.

“ஹஹ… பாத்தீங்களா கண்ணன், இப்பிடியொரு வீரப்பெண்மணியை வீட்டுல வச்சிகிட்டே வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் செக்யூரிட்டி போட்டுருக்கேன். அனிதாவை எங்கூடவே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு, திரும்ப கூட்டிட்டு வர்றேன். பாப்பாவை நாங்களே ஸ்கூல்ல விட்டுட்டு கூப்டுக்குறோம். அப்பிடி பார்த்தா சபேசன் மாமா மட்டும் தான் செக்யூரிட்டி இல்லாம சிங்கிளா சுத்துறார்.” விளையாட்டு போலவே பேசினான் ஜெகன்.

“ஹஹ… விட்டா மாப்பிள்ளை எனக்குமே பவுன்சர்ஸ் போட்டுருவாங்க போல.” கேலி செய்தான் சபேசன். இவ்வளவு ஏன்? பூங்கோதையின் முகம் கூட பயம் இன்றி தெளிந்த வானம் போல அழகாக இருந்தது. அனிதாவுமே ஆரம்பத்தில் இருந்த பயத்தை கைவிட்டுவிட்டு தெளிவாகியிருந்தாள். தெளிவாக்கியிருந்தான் ஜெகன், இதுதான் உண்மை.

வாழ்க்கையே சவாலாகிப் போயிருக்க, எந்நேரமும் பயந்து நடுங்கி கொண்டிருக்காமல், வாழ்க்கையை அதன் போக்கில் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மையை அந்த குடும்பத்தினர் வளர்த்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இரவு உணவையும் முடித்துவிட்டே அனைவரையும் கிளம்பிச் செல்ல அனுமதித்திருந்தாள் நந்தினி. அதன்பிறகு கிடைத்த நேரத்தில் சுரேந்தரைப் பற்றி இந்துவிடம் நந்தினி விசாரிக்க,

“உன் தோள்லயிருந்து இறங்கி இப்போ என் தோள்ல ஏறியாச்சு அந்த வேதாளம். இந்து, இந்துன்னு உயிரை வாங்குறான். விட்டா எங்கூட விருந்துக்குன்னு நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்துருப்பான்.” அலுத்துக் கொண்டாலும் சிரிப்பிருந்தது இந்துஜாவின் முகத்தில்.

“செய்தாலும் செய்வான், சரியான அதிகப்பிரசங்கி.” மெல்லிய சிரிப்போடு சொன்ன நந்தினி, “கொஞ்சம் கைட் பண்ணு எப்படி படிக்கணும்னு.” என்றும் தங்கையிடம் சொல்ல,

“ம்ம்…என்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட கோர்த்து விட்டுட்டு தான் வந்திருக்கேன்.” என்றாள் இந்து.

அவர்களைப் பொருத்தவரை, கழிவிரக்கத்தில் தன்னையே கரைத்துக்கொள்ள முயன்ற இளைஞன் ஒருவனுக்கு சரியான வழியைக் காட்டுகிறார்கள். அவ்வளவு தான். அதைத் தாண்டி அவர்களுக்கிடையே எந்த உணர்வுப் பூர்வமான உறவுக்கும் அங்கே இடமில்லை என்பதில் தெளிவாகவே இருந்தார்கள்.

ஒருவார விடுமுறை முடிந்து தங்கைகள் இருவரும் சென்னைக்கு கிளம்பி சென்றிருக்க, நந்தினியின் வாழ்க்கை என்ற வட்டம் சீராகவே சுழன்றது.

அன்று என்னவோ சாயங்காலம் சீக்கிரமாக வீட்டுக்கு சென்று கணவனுக்கு காஃபி முதல் இரவு உணவு வரை தன் கையாலே செய்து கொடுத்தால் எப்படி இருக்கும் என்று தோன்ற, சபேசனிடம் சொல்லிவிட்டு ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி விட்டாள் நந்தினி.

ஆனால் வீட்டுக்கு முன்னால் அவளுக்கு முன்னரே வந்து நின்றிருந்த கண்ணனின் புல்லட் அவளை கேலியாக வரவேற்றது. புன்னகையோடு தன்னுடைய வாகனத்திலிருந்து நந்தினி இறங்க, வீட்டுக்குள் இருந்து ஒரு நபர் வெளியே வந்துகொண்டிருந்தார்.

‘யார் இது? பார்த்த முகமாக இருக்கிறதே?’ யோசனையோடு நடந்தாள்.

“கேஸ் விஷயமா சாரை பாக்க வந்தேன் மேடம்.” நந்தினிக்கு அருகே வந்திருந்த அந்த நபர் சொல்ல, பளிச்சென்று ஞாபகம் வந்தது அவளுக்கு. கூடவே அதிருப்தியும் வந்திருந்தது.

திருமணத்திற்கு முன்னர் கண்ணன் தன்னுடைய கட்சிக்காரர்களை எப்போதாவது வீட்டில் சந்திப்பது வழக்கம் தான். ஆனால் அரசாங்கம் நந்தினிக்கு கொடுத்திருக்கும் இந்த வீட்டில், ஒருமுறை கூட கட்சிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு யாரும் அவனை சந்திக்க வந்ததில்லை.

“யாரு த்தான் இது?” வீட்டுக்குள் வந்தவள், ஹாலில் அமர்ந்து ஏதோ பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த கணவனிடம் கேட்டாள்.

“என்னோட க்ளையண்ட்.” சுருக்கமாகவே சொல்லியவன்,

“என்ன, இன்னைக்கு எஸ்பி மேடம் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டீங்க?” என்று ஆரவாரமாகவே மனைவியை வரவேற்றான்.

“நேற்று ஒரு வரதட்சணை கேஸ்ல அம்மாவையும் பையனையும் அரெஸ்ட் பண்ணியிருந்ததே, அந்த கேஸ்ல சம்மந்தப்பட்டவரா?” கணவனின் உற்சாகத்தில் பங்கு கொள்ளாமல், தன்னுடைய கணிப்பு சரி தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே நந்தினியின் முனைப்பு இருந்தது.

“மொதல்ல உக்காந்து டீயைக் குடி.” அவள் கையைப் பிடித்து தன்னருகே சோஃபாவில் அமர வைத்தவன், அருகிலிருந்த ப்ளாஸ்கில் இருந்து டீயை ஊற்றிக் கொடுக்க, வாங்கிக் கொண்டாள்.

“சொல்லுங்க த்தான்.” டீயை உறிஞ்சியபடியே விட்ட இடத்திலிருந்து தொடங்க,

“ஆமா.” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

“இப்பிடியான ஆட்களுக்கு ஆதரவா கேஸ் நடத்த உங்களால எப்பிடி முடியுது த்தான்?” அதிருப்தியாக உதட்டைச் சுழித்தாள் மனைவி.

“வேண்டாம் நந்தினி, இதைப்பத்தி நாம பேசவேண்டாம்.”

“ஏன், பேசினா என்ன? வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்துறாங்க, கூடுதலா பணம் தந்தா தான் எம்பையன் கூட வாழவிடுவேன்னு மாமியார் மிரட்டுறாங்கன்னு ஒரு பொண்ணு கண்ணீர் விட்டு கதறுது. அந்த பொண்ணோட அம்மா, எம்முன்னாடியே அந்த மாமியார் எம்பொண்ணை அடிக்குறாங்கன்னு சொல்லுறாங்க. அப்புறமும் அந்த பையனுக்கு ஆதரவா எப்படி உங்களால கேஸை எடுத்து நடத்த முடியுது?” லேசாக குரல் உயர்ந்தது நந்தினிக்கு.

“பேசி முடிச்சிட்டியா, இப்போ நான் பேசலாமா?” மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடியே கேட்டவன்,

“இங்க பெண்களோட கதறல் மட்டும் தான் எல்லோராலயும் கவனிக்கப்படுது, ஆண்களோட குரல் பெண்களோட கண்ணீர் முன்னாடி எடுபடாமலேயே போயிடுது” என்றான் அலுத்துக் கொண்டபடி.

“என்ன சொல்லுறீங்க?”

“திருமணத்திற்கு பிறகு பெண்களோட பாதுகாப்பை உறுதி செய்யுறதுக்காக வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவந்தா, அதை எத்தனைப் பொண்ணுங்க சரியா யூஸ் பண்ணுறாங்கன்னு தெரியுமா உனக்கு? பாதிபேர் அந்த சட்டத்தை மிஸ்யூஸ் பண்ணி ஆண்களை மாட்டிதான் விடுறாங்க.”

“அப்போ இந்த கேஸ்லயும் அப்பிடித்தான் நடந்திருக்குன்னு சொல்லுறீங்களா?”

“கண்டிப்பா. அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கவே விருப்பம் இல்லை, பெத்தவங்களோட கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டா போல. ஏதேதோ காரணம் சொல்லி எங்கிட்டயிருந்து தள்ளியும் இருந்தா. இப்போ இந்த கல்யாணத்துல இருந்து வெளியேப் போக இப்படியெல்லாம் எங்க மேல வீணா பழியைப் போடுறா. இது அந்த பையனோட ஸ்டேட்மெண்ட்.”

“ம்ஹூம், எந்த ஆம்பிள்ள தான் தன்னோட குற்றத்தை ஒத்துக்கிறான்?” நக்கலாகச் சொன்னவளின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

“ஆண் தான் தப்பு செய்திருப்பான் அப்படிங்குற உன்னுடைய பார்வையை முதல்ல மாற்று நந்து, அப்போதான் எல்லாமே சரியா புரியும் உனக்கு. மோர்ஓவர், இந்த குணம் உன்னோட கேரியருக்கு கூட நல்லது கிடையாது.” அழுத்தமாகச் சொன்னான் கண்ணன்.

“ஹ்ம்… தப்பு செய்ததும் இல்லாம, அழகா கதையும் கட்டியிருக்காங்க. அதை நம்பி எனக்கு அட்வைஸ் வேற பண்ணுறீங்க நீங்க.” இப்போது கேலி சிரிப்பு நந்தினியிடம்.

“நாணயத்துக்காவது இரண்டு பக்கம் தான். ஆனா ஒரு வழக்குக்கு பல பக்கங்கள், பல கோணங்கள். அதை விசாரிச்சா தானே கண்டுபிடிக்க முடியும். அதுக்கு அவனுக்கொரு லாயர் தேவை. அது நானா இருக்குறதுல உனக்கு என்ன கஷ்டம்?” மனைவியின் கேலிச்சிரிப்பில் உசுப்பப்பட்டவனின் குரலில் லேசாக சூடு ஏறியிருந்தது.

“கஷ்டம் தான், என்னோட புருஷன் நியாயமான விஷயத்துக்காக துணை நிக்குறார் அப்பிடிங்குறது எனக்கு பெருமை. அதே, அநியாயத்துக்கு துணை போனார்னா இனிக்கவா செய்யும்? உங்களுக்கு இந்த கேஸ் வேண்டாம், விலகிடுங்க.” சட்டமாகச் சொன்னாள் நந்தினி.

“என்னோட தொழில் விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு நான் ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்குறேன் நந்து.” கண்ணனின் குரலில் இப்போது அப்பட்டமாக தெரிந்தது கோபம்.

“ஒரு மனைவியா, உங்களை கைட் பண்ணுற கடமை எனக்கிருக்கு. சோ, இந்த கேஸ் உங்களுக்கு வேண்டாம்.” தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்க மறுத்து பிடிவாதம் பிடித்தாள் நந்தினி.

“அப்போ, நீ சரின்னு சொல்லுற கேஸ் மட்டும் தான் நான் எடுத்து நடத்தணுமா? இதுக்கு லாயரா ப்ராக்டீஸ் பண்ணுறதை விட்டுட்டு பேசாம உம்பின்னாடி கூஜா தூக்கிட்டு அலையலாமே.” யோசிக்காமல் வார்த்தைகளை விட்டான் கண்ணன்.

அவ்வளவு தான், முகம் சுருங்கி விட்டது நந்தினிக்கு. சட்டென்று இருக்கையிலிருந்து எழும்பியவள்,

“ம்ஹும்… உங்ககிட்டயிருந்து இப்படியொரு பேச்சை நான் எதிர்பாக்கல த்தான், கடைசியில நீங்களும் ஒரு சாதாரண ஆம்பிள்ளை தான்னு நிரூபிச்சிட்டீங்க.” அதிருப்தியான குரலில் சொன்னவள் அறைக்குள் நுழைந்து கொள்ள, கண்ணனுக்கு தன் வார்த்தையின் வீரியம் புரிந்தது.

அதன்பிறகு மனைவியை சமாதானப்படுத்த அவன் எடுத்த எந்த முயற்சியும் வேலைக்காகவில்லை. முதன்முறையாக அவர்களுடைய கோபம் படுக்கை அறையோடு முடிந்து போகாமல், நீண்டுகொண்டு சென்றது.

மறுநாள் காலைநேர உடற்பயிற்சி, உணவு தயார்செய்தல், சாப்பாடு என்று எல்லாம் எப்போதும் போலத்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் கணவனோடு பேச்சு மட்டும் குறைந்து போயிருந்தது நந்தினிக்கு. என்ன முயன்றும் மனைவியை கலகலப்பாக தன்னோடு பேச வைக்க முடியாமல் போனது கண்ணனால்.

அன்று அலுவலகம் சென்றுவிட்டு எப்போதும் போல வீடு திரும்பிய நந்தினி, கோபமாகவே வந்தாள்.

அவள் முகபாவனையை உள்வாங்கியபடியே, “ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா நந்து, டீ குடிக்கலாம்.” என்றான் கண்ணன் கணவனாக.

அவன் முன்னால் வந்து மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்றவளோ,

“என்ன வேலை பாத்து வச்சிருக்கீங்க த்தான் நீங்க?” என்றாள் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு.

“அப்பிடி என்ன பண்ணிட்டேன் நான்? சொன்னாத்தானே தெரியும்?” அமைதியாகவே கேட்டான் கண்ணன்.

“ஓ… என்ன பண்ணி வச்சிருக்கோம்னே தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட விஷயம் செய்திருக்கீங்களோ?” நக்கலாக கேட்டவளின் குரலில் கோபத்தின் அளவு கொஞ்சம் தூக்கலாகத்தான் இருந்தது…