அத்தியாயம் 10

திருமணத்திற்காக எடுத்திருந்த ஒருவார விடுமுறை முடிந்து தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஒருவார விடுமுறையில் தங்கள் தேன்நிலவு பயணத்தையும் முடித்திருந்தார்கள்.

ம்ம்… முதல்நாள் இரவில் கண்ணன் தேன்நிலவு செல்லுவதைப் பற்றி மனைவியிடம் ஆவலாக அபிப்பிராயம் கேட்க, இந்த விடுமுறையை விட்டால் தாங்கள் இருவரும் சேர்ந்து கழிக்க கிடைக்கும் பொழுதுகள் சொற்பமாகவே இருக்கும் என்று புரிந்திருந்ததால், நந்தினியும் சந்தோஷமாகவே கணவனின் விருப்பத்திற்கு தலையசைத்திருந்தாள்.

கொடைக்கானலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்துக் கொண்டவர்கள், விஷயத்தை தங்கள் பெற்றவர்களிடம் சொல்ல, திலகத்திற்கு அளவிடமுடியாத சந்தோஷம்.

“மனதில் வளர்த்து வைத்திருக்கும் திருமணத்தின் மீதான வெறுப்பையும் மீறி மகளால் திருமண வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியுமா?’ என்று மனதளவில் கவலை கொண்டிருந்த பெண்மணிக்கு, மெல்லிய வெட்கத்தோடு தேன்நிலவுக்கு செல்கிறோம் என்று மகள் சொன்ன தகவல், காதில் தேன்மாரி பொழிந்தது போலத்தான் இருந்தது.

முழுதாக மூன்று நாட்கள் தெவிட்ட தெவிட்ட தேன்நிலவை கொண்டாடிவிட்டு நேற்று திரும்பி வந்திருந்தவர்கள், இதோ வேலைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

“இப்பிடியே போனா யூனிஃபார்ம் எல்லாம் சீக்கிரம் சின்னதாகிடும் த்தான்.” கண்ணாடிக்கு முன் நின்று அப்படியும் இப்படியுமாக தன்னைத் திரும்பி பார்த்தபடி சொன்னாள் நந்தினி. இந்த ஒருவாரத்தில் கொஞ்சம்கூட உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க முடியாத ஆதங்கம் நிறையவே இருந்தது அவளது குரலில்.

“யூனிஃபார்ம் அப்படியே தான் மா இருக்கும், நீ தொப்பை வச்சிடுவன்னு சொல்லு.” அணிந்திருந்த சட்டையை இன் செய்தபடியே கேலி செய்தான் அந்த புது கணவன்.

“ஹைய்யோ… தொப்பையா? அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க த்தான்… எனக்கு பிடிக்கவே பிடிக்காது.” அசூசையாக முகத்தை சுளித்தாள் நத்தினி.

“உங்க டிப்பார்ட்மெண்ட்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச வார்த்தையாச்சே ம்மா அது! உனக்கு மட்டும் எப்பிடி பிடிக்காம போகும்?”

“ம்ம்… இப்பிடியே என்னை கேலி பண்ணிட்டு இருங்க, உங்களுக்கு மொதல்ல தொப்பையை வளத்து விட்டுடுறேன் நான்.” கணவனை மிரட்டுவது போல நந்தினி கண்களை உருட்ட,

“அது… உன்னால முடியாது, ஆனா என்னால முடியும்…” நமுட்டு சிரிப்போடு மனைவியை சவாலாகப் பார்த்தான் கண்ணன்.

“அதெப்படி, நான் கண்ட்ரோல்லா இருந்தா தொப்பை எப்படி வருமாம்?” வேகமாக மறுத்து பேசியவளுக்கு கணவன் சொன்னதன் அர்த்தம் தாமதமாக புரியவும்,

“சென்சார் வைக்கிற அளவுக்கு பேசுவீங்களா நீங்க?” என்றவள் படுக்கையில் கிடந்த தலையணையை தூக்கி கண்ணனை நோக்கி எறிந்தாள்.

அதை லாவகமாக கைகளில் பிடித்துக் கொண்டவன், “கணவன் மனைவிக்குள்ள அந்த ‘சார்’, சென்’சார்’ எல்லாம் எதுக்கும்மா?” என்று கேலியாக புருவத்தை உயர்த்தினான்.

“ஆஹாஹா… அதெல்லாம் இப்போ நல்லா சொல்லுவீங்களே! ஆனா வேற எதுவும் கேட்டா தான், என்னோட விஷயத்துல நீ தலையைப் போடாத, காலைப் போடாதன்னு குதிப்பீங்க.” திருமணத்துக்கு முந்தைய கண்ணனின் பேச்சை மறக்காமல் இப்போது தங்களுக்கிடையே இழுத்தாள் நந்தினி. அவனோ,

“எம் பொண்டாட்டி நீ கேட்டு, நான் அப்படி எதுவும் சொன்னேனா நந்து? எனக்கு எதுவும் ஞாபகமே இல்லையே?” என்று அப்பாவியாக விழிகளை விரித்தான்.

“வைரவமூர்த்தி வீட்டுக்கு போய்ட்டு வந்த அன்னைக்கு, நீங்க எதுக்காக அங்க வந்தீங்கன்னு நான் கேட்டதுக்கு, உன் வேலையை மட்டும் நீ பாரு, என்னோட தொழில்ல தலையை நுழைக்காதன்னு நீங்க சொல்லலை?” ஏதோ அந்த விஷயம் இப்போது நடந்தது போல ஒரு வேகம் நந்தினியிடம்.

“அப்போ நீ என்னோட வைஃப் இல்லையே, அதனால அப்படி தைரியமா சவுண்ட் குடுத்திருப்பேனா இருக்கும். இப்போ நீ என்னோட சரிபாதி. நீ சொல்லுறதை எல்லாம் அவ்வளவு ஈஸியா எடுத்தெறிஞ்சு பேசிட முடியாதே. கொஞ்சமாவது ரெஸ்பெக்ட் கொடுத்தே ஆகணுமே?” சொல்லியபடியே மனைவிக்கு விளையாட்டாக சல்யூட் ஒன்றையும் வைத்துக் கொண்டான்.

“ரெஸ்பெக்ட் பண்ணுறதுல என்ன கஞ்சத்தனம்? கொஞ்சம் நல்லாவே பொண்டாட்டியை ரெஸ்பெக்ட் பண்ணுறது.” என்றவளிடமிருந்து,

“இப்போ நான் சொன்னா கேப்பீங்களா த்தான்?” உற்சாகமாக வந்தது கேள்வி.

“சொல்லு, பாக்கலாம்.”

“அந்த ஆளு சரி கிடையாதுன்னு ஊருக்கே தெரியுது த்தான். அப்படிப்பட்ட மனுஷனுக்காக வேலை செய்யுறது நல்லாவா இருக்குது? சம்பாத்தியம் மட்டுமே முக்கியம் கிடையாது. அதை எப்பிடி பண்ணுறோம் அப்பிடிங்குறதுல தான் நம்ம மனநிறைவும் மரியாதையும் இருக்குது. இதுவரைக்கும் எப்படியோ தெரியல, இனிமேலாவது அந்த மாதிரி ஆட்கள் சார்பா கேஸ் எடுத்து நடத்தாதீங்க. ப்ளீஸ்…” கணவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அமைதியாகவேச் சொன்னாள்.

“நீ இப்பிடி பொலைட்டா சொல்லும்போது நானும் ஒரு உண்மையை உங்கிட்ட சொல்லிடுறேன் பொண்டாட்டி. என்னோட சீனியர் தான் வைரவமூர்த்தியோட லாயர். அவர் சொன்னதால ஒரு டாக்குமெண்ட்டை குடுத்துட்டு வரத்தான் அங்க வந்தேன். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உங்கிட்ட சொல்லிட்டேன். மற்றபடி நீயும் கொஞ்சமே கொஞ்சம் புருஷனுக்கு ரெஸ்பெக்ட் குடுத்து இதுக்குமேல என்னோட தொழில்ல தலையிடக்கூடாது.” தலையை சுற்றி என்றாலும் மறுபடியும் மூக்கையே தொட்டான் கண்ணன்.

வைரவமூர்த்தி சார்பாக கணவன் எதுவும் செய்வதில்லை என்பது தெரியவுமே நந்தினிக்கு மனசு லேசாகிப் போனது. என்றாலும் அவனுடைய பதில் திருப்தியில்லாமல் போகவே,

“முன்னாடி எப்படியோ தெரியாது த்தான், இப்போ நீங்க எது செய்தாலும் அதை என் பதவியோட கனெக்ட் பண்ணி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனால, எதை செய்யுறதா இருந்தாலும் நல்லா யோசிச்சே செய்யுங்க.” என்றாள்.

“அதாவது, எஸ்பி புருஷனா ஒழுங்கு மரியாதையா நடந்துக்கோன்னு சொல்லுற? ம்ம்… அப்படித்தான?” இலகு போல கேட்டாலும் அதில் அடக்கப்பட்ட கோபமும் லேசாக மறைந்திருந்தது.

“ஏன்? சொல்லக்கூடாதா என்ன?” சிரித்தபடியே கணவனின் மீசையை நீவிவிட்டாள் நந்தினி.

“இப்பிடி மீசையை முறுக்கி விட்டு, முறுக்கி விட்டே நீ நினைக்கிறதை என்னை செய்யவைக்கப் பாக்குற, அது மட்டும் எங்கிட்ட நடக்காது அம்மணி.” தலையை இடம்வலமாக அசைத்து சிரித்தபடியே சொன்னவன், மனைவியின் பின்னந்தலையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்து அவளுடைய இதழ்களில் முத்தக்கவிதை எழுதிவிட்டே விடுவித்தான்.

“அச்சோ… என்னோட டெக்னிக்கை இவ்வளவு சீக்கிரமா புரிஞ்சுகிட்டீங்களே த்தான். அது ரொம்ப தப்பாச்சே?” உதட்டை மடித்தபடியே கண்சிமிட்டியவள்,

“நேரமாகுது, மீதி கச்சேரியை வந்து வச்சிக்கலாம்.” என்றபடியே அறையை விட்டு வெளியே வந்தாள்.

“ம்ஹும்… கண்டிப்பா, ரெண்டு பேரும் ஆபீஸுக்கு வேற கிளம்பியாச்சு, மீதியை வந்துதான் வச்சிக்கணும்.” ஒரு ஏக்கப்பெருமூச்சோடு மனைவியின் பின்னோடு வந்தான்.

“இப்போல்லாம் நீங்க டபுள் மீனிங்ல ரொம்பவே பேச ஆரம்பிச்சிட்டீங்க.”

“நீதான் கல்யாணத்துக்கு அப்புறமா நான் எது பேசினாலும் இரண்டு அர்த்தம் கண்டுபிடிக்கிற.”

முறைப்பும் விறைப்புமாக இருவரும் சமையலறையில் கிடந்த சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்தார்கள்.

நேற்று கொடைக்கானலில் இருந்து இவர்கள் திரும்பி வந்தவுடன் இருவீட்டு உறவுகளும் வந்திருந்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த இட்லி மாவு, இப்போது இட்லியாக உருமாறி இருந்தது.

மதியத்திற்கும் உணவை செய்து டப்பாக்களில் அடைத்திருந்தனர். கணவன் மனைவியுமாக இணைந்து தான் சமையலை முடித்திருந்தார்கள்.

வீட்டு வேலைகளில் இது உன்னுடையது, நீதான் செய்தாக வேண்டும் என்ற முத்திரையை யார் மீதும் குத்தக்கூடாது என்று ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அப்புறம், அனிதா விஷயத்துல என்ன செய்யலாம்னு இருக்குற?” இருவருடைய தட்டிலும் இட்லியை பரிமாறியபடியேக் கேட்டான் கண்ணன்.

“கொஞ்சம் யோசிக்கணும் த்தான்.”

“கேரக்டெர் வைஸ் ஜெகன் நல்லவரா தான் இருக்குறார். வைரவமூர்த்தியோட பையன் ங்குற அடையாளத்தை அவர்கிட்டயிருந்து எப்பவுமே மாத்த முடியாது. அப்படியிருக்கும் போது இன்னும் யோசிக்க என்ன இருக்கு? சம்மந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் அவங்க முடிவுல உறுதியா இருக்குற பட்சத்துல அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைக்கத்தானே வேணும்?”

“ம்ம்…ஆனா, அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு முன்னாடி முடிக்க வேண்டிய கல்யாணம் ஒன்னு இருக்கு.” கண்கள் யோசனையில் மின்ன, இட்டிலியை பிய்த்து சாம்பாரில் தோய்த்து வாய்க்கு கொடுத்தாள் நந்தினி.

“இன்னொரு கல்யாணமா? யாரோடது?” குழப்பமாக வந்தது கேள்வி.

“சபேசன், பூங்கோதை கல்யாணம் தான்.”

“யார் இவங்க?” யோசனையாக கேட்டான்.

“சபேசன் எங்கூட வேலை பாக்குறவர், உங்களுக்கு கூட அவரைத் தெரியுமே. பூங்கோதை வைரவமூர்த்தியோட பொண்ணு.” அலட்டிக்கொள்ளாமல் நந்தினி சொல்ல, அதிர்ந்தே போனான் கண்ணன். அவனுக்கு வைரவமூர்த்தியின் மகள் என்றதும் பூங்கோதையையும் தெரிந்திருந்தது. அதுவும் பிள்ளையோடு இருக்கும் இளம் விதவை என்பது வரைக்கும் தெரியும். அதைத்தாண்டி வேறு எதுவும் தெரியாது.

“எனக்கு ஆயிரம் கட்டுப்பாடு விதிச்சிட்டு, நீங்க குளவி கூட்டுக்குள்ள கொண்டு கையை வைக்க ரெடியாகிட்டீங்கன்னு தெரியுதா எஸ்பி மேடம்? ஏற்கனவே அனிதா விஷயத்தால என்ன ரணகளம் ஆகப்போகுதோன்னு நான் டென்ஷன்ல இருக்குறேன். இதுல தேவையில்லாத பிரச்சினையை ஏன் இழுத்து தலையில போட்டுக்குற?” உண்பதை மறந்து படபடத்தான் கண்ணன்.

“எல்லாம் தேவையான விஷயம் தான் கண்ணத்தான். நான் ஆஃபீஸ் போய்ட்டு வந்து உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லுறேன். பதட்டப்படாம நீங்க சாப்பிடுங்க.” என்றவள் கணவனின் தட்டில் சாம்பாரை ஊற்ற, கண்ணனின் விழிகளோ அப்பட்டமாக தன்னுடைய அதிருப்தியை காட்டியது.

இங்கே திருமணம் முடிந்த ஆண்களே மனைவிமார்களை ஏமாற்றிவிட்டு வேறு பெண்களை நாடிச்செல்லும் போது, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக, தன் இளமையை காதலுக்காக கரைத்துக் கொண்டிருக்கும் சபேசன் என்கிற ஆணின் செயல் நந்தினியின் மனதை தொட்டிருந்தது.

அதோடு பூங்கோதையின் தற்போதைய தோற்றத்தையும் கண்டவளுக்கு, ‘அந்த முன்னாள் காதலர்களை வாழ்வில் சேர்த்து வைத்தால் என்ன?’ என்ற எண்ணம் உண்டாகியிருந்தது.

அதைப்பற்றி இன்னமும் சபேசனிடம் கூட பேசவில்லை. பேச்சுவாக்கில் கணவனிடம் தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்து கொள்ள பதைபதைத்து போனான் அவன். அவர்களுடைய முழுக் கதையையும் சொன்னால் கணவன் புரிந்துகொள்ள கூடும் என்ற நம்பிக்கையோடு அலுவலகம் வந்த நந்தினி, கிடைத்த சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி சபேசனிடம் பேசவும் தவறவில்லை.

நந்தினி அலுவலகத்திற்கு வரும்போது சபேசன் இல்லை. சிலமணி நேரங்கள் கழித்து வந்தவன், “வெல்கம் பேக் மேடம்” என்று வரவேற்க, சிறிய புன்னகை நந்தினியிடம்.

தான் சென்றுவந்த வேலைகளைப் பற்றிய அறிக்கைகளை நந்தினியிடம் சமர்ப்பித்த சபேசன், அங்கிருந்து கிளம்ப முற்பட, “நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறீங்க சபேசன்?” முதன்முறையாக அலுவலகத்தில் வைத்து சொந்த விஷயம் பேசினாள் நந்தினி.

“அதுக்கு, மொதல்ல கல்யாணம் பண்ணிக்கணும் மேடம். அப்படி எந்த ஐடியாவும் எனக்கு இல்ல.” கேலியாகவே பதில் சொல்லியபடி இருக்கையிலிருந்து எழும்பினான் சபேசன்.

“பொண்ணு பூங்கோதையா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கமாட்டீங்களா?” அலையாமல் குலையாமல் குண்டைத் தூக்கி சபேசன் தலையில் போட்டுவிட்டு அமைதியாக அவனையே பார்த்திருந்தாள் நந்தினி.

“என்ன… என்ன சொல்லுறீங்க மேடம்?” சட்டென்று தடுமாறி இருக்கையில் அமர்ந்திருந்த சபேசனின் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடின.

“பூங்கோதை… உங்க பூங்கோதையைக் கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா நீங்க?” நந்தினி நிறுத்தி நிதானமாக கேட்க,

“எப்படி மேடம்?” பதிலுக்கு கேட்டவனின் வார்த்தைகளில் சொல்லொண்ணா வேதனை.