Advertisement

செழியனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி, அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய விஜய் நிதானமாக,

“நீ தேவி காலனியில் தானே வீடு எடுத்து ஸ்டே பண்ணி இருக்க”

என்று தன் விசாரணையை தொடங்க, செழியனின் மனதிற்குள், “இதை எதற்கு இப்போ கேட்கிறான்” என்ற யோசனைகள் ஓட, வெளியே அவனும் சாதாரணம் போல,

“ஆமா விஜய்”

என்று சொல்ல, விஜய்யோ செழியனின் முகத்தை அளவெடுத்தவாறே,

“எதுக்கு அங்க போய் தங்கி இருக்க, வீடு கூட ரொம்ப சின்னது தானு கேள்விப் பட்டனே செழியா”

என்று அடுத்த கேள்வி கேட்க, செழியனோ,

“அய்யோ போலீஸ் ஸ்டேஷன்ல அக்யூஸ்ட் அஹ இன்வெஸ்டிகேட் பண்ற மாதிரியே, என்னையும் கேள்வி கேட்குதே பக்கி”

என்று மனதிற்குள் நொந்தவாறே, வெளியே அவனின் கேள்விக்கு பதிலாக,

“வீடு சின்னது எல்லாம் இல்லை, ஒரு ஆளுக்கு அது ரொம்பவே தாளரம் தான் விஜய், நான் சென்னைல தான் இருக்கேன்னு, எல்லாருக்கும் தெரியுறதுல எனக்கு விருப்பம் இல்லை, சுற்றி இருக்கிற யாருக்கும் நான் யாருன்னு தெரியாத இடத்துல, ஸ்டே பண்ணி இருக்கேன்”

என்று பாதி உண்மையை கூறி, அதோடு அந்த பேச்சை முடிக்க பார்க்க, விஜய்யோ விட்டேனா பார் என்று,

“அதுக்கு நீ வெற்றி, தமிழ் கூடவே இங்கேயே தங்கி இருக்கலாம் இல்ல, தினமும் அங்க இருந்து இங்க வந்து போற அலைச்சல் எல்லாமே மிச்சம் தானே, அங்க ஏன் தனியா தங்கி கஷ்டப்படனும்”

என்று வெகு அக்கறை போலவே கேட்க,

“இவன் தெரிஞ்சி கேட்குறானா, இல்ல தெரிஞ்சிக்கலாம்னு கேட்குறானு, புரியலையே ஆண்டவா”

என்று செழியனால் மனதிற்குள் மட்டுமே அலுத்துக் கொள்ள முடிந்தது. இதற்கு செழியன் பதில் அளிப்பதற்குள் மீண்டும் விஜய்யே,

“ஒரு வேளை நீ இங்க இருந்தா, உனக்கு அவங்க தொந்தரவா இருப்பாங்களா இல்ல, இவங்க உன்னை தொந்தரவா நினைப்பாங்களா, ஏன் நீ இவங்க கூட ஸ்டே பண்ணல”

என்று அடுத்தடுத்த கேள்விகளாக அடுக்கி, இவ்வளவு நாள் வெற்றியும், தமிழும் யோசிக்காததை எல்லாம் அவர்களுக்கு எடுத்து கொடுத்து, செழியனை அவர்களிடம் வசமாக மாட்டி விட்டான்.

இவ்வளவு நேரம் விஜய், செழியனின் உரையாடல் போகும் போக்கு புரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த, வெற்றிக்கும், தமிழுக்கும்,

“ஆமா, செழியன் அண்ணா ஏன் நம்ப கூட தங்கல”

எனும் கேள்வி அப்போது தான் உதிக்க, தமிழ் வாய் வார்த்தையாகவே,

“ஆமா அண்ணா, ஏன் நீங்க எங்க கூட ஸ்டே பண்ணல”

என்று கண்களில் வருத்தத்தையும், கேள்வியையும் ஒருங்கே தேக்கி, செழியனை பார்க்க, செழியனோ,

“ஹே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தமிழ், உங்களுக்கு என்ன பத்தி தெரியாத, நான் அப்படி எல்லாம் நினைப்பனா, இந்த விஜய் சொல்றத எல்லாம் நம்பாத, இ…து… இ…து… வேற விஷயம்டா”

என்று அவனை சமாதானபடுத்தும் விதமாக சொல்லியவன், விஜய்யை கண்டிக்கும் விதமாக, அவனை ஒரு பார்வையும் பார்த்து வைத்தான்.

செழியனின் பார்வையை எல்லாம் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாத விஜய் தொடர்ந்து,

“நீ மாடில தங்கி இருக்க, கீழ் வீட்டுல ஒரு அக்காவும், தம்பியும் தங்கி இருக்கங்கலாமே, அ..ப்..ப…டி…யா….”

என்று அப்பாவியாய் கண்களை விரிக்க, செழியனின் மனமோ, அவனின் ‘எவன்ஜெலினை’ நினைத்து உருக, அதரங்கள் புன்னகையில் விரிய, அந்த புன்னகை அவனின் நயனங்களையும் எட்ட,

“ம்ம்ம்ம், ஆமா”

என்று தலையாட்ட, மற்ற இருவரும் செழியனை ஆச்சர்யமாக பார்க்க, விஜய்யோ அவனின் மலர்ச்சியை குறித்து கொண்டவனாக,

“அந்த பொண்ணு பேரு கூட, என்னமோ மங்கை, ஹான் இல்ல தங்கை, ச்சி அப்படின்னா தங்கச்சி இல்ல, இதே மாதிரி வேற என்னமோ தானே அந்த பொண்ணு பேரு, என்ன அது…..”

என்று நங்கையின் பெயரை மறந்த மாதிரி, மாற்றி மாற்றி சொல்லி செழியனை வெறுப்பேற்ற, அவன் எதிர்பார்த்த மாதிரியே விஜய்யை முறைத்த செழியன்,

“மண்ணாங்கட்டி, மங்கையும் இல்ல தங்கையும் இல்ல, அவங்க பேரு நங்கை”

என்று கடுப்புடன் ஆரம்பித்தவன், நங்கையின் பெயரை சொல்லும் போது, எவ்வளவு மென்மையாக சொல்ல முடியுமா அவ்வளவு மென்மையாக சொல்ல, அவனை உற்று பார்த்து விஜய்,

“பார்க்க எப்படி, அழகா இருப்பாங்களாடா”

என்று கேட்க, தன் மங்கையின் நினைவில் தன்னை மறந்து, “ஆமாம்” என்று தலையாட்ட வந்த செழியன், கடைசி நொடியில் தன்னை சுதாரித்து கொண்டு,

“நான் அந்த அளவுக்கு எல்லாம் கவனிச்சு பார்க்கல விஜய்”

என்று தன் நெஞ்சு அறிய பொய் சொல்ல, விஜய்யோ, இன்று உண்மையை செழியனின் வாய் வார்த்தையால், அறியாமல் விட போவதில்லை என்ற உறுதியுடன்,

“என்னடா லவ் அஹ”

என்று நேரடியாக கேட்க, செழியனும், அவனவளை பற்றிய சுகமான நினைவுடன் முதலில் “ம்ம்ம்ம்” என்று ஒரு இலயிப்புடன் தலையசைத்தவன், பின்பு வேகமாக,

“எதாவது சும்மா உளராத விஜய்”

என்று தன் மறுப்பை, முயன்று கடுமையான குரலில் சொல்ல, விஜய்யோ,

“ஒரு பேச்சுக்கு கூட இல்லை, நான் விரும்பலனு சொல்ல முடியல, ஆனா உண்மையை சொல்ல மாட்றான், இவனை….”

என்று பல்லை கடித்தவன், போலியாக ஒரு பெரு மூச்சை விட்டு விட்டு, செழியனை பார்த்து,

“நல்ல வேலை நீ கூட எங்க லவ் தான்னு சொல்லிடுவியோனு பயந்துட்டேன், அந்த பெண்ணை நானும் பார்த்தேன், பார்க்கவும் சுமாரா தான் இருக்கு, உன் அளவுக்கு எல்லாம் இல்லடா, நீ போய்…”

என்று, நங்கையை பற்றி வேண்டுமென்றே இறக்கி பேச, அது இவனை சீண்டுவதற்காக சொல்ல பட்டது என்பதை கூட உணராமல், தான் முன்பு சொல்லியதை மறந்து உணர்ச்சிவசப்பட்ட செழியன்,

“உன்னோட நொள்ள கண்ணை வச்சு, எதுக்கு என் நங்கையை நீ பார்த்த, என் கண்ணுக்கு என் நங்கை அழகு போதும், உன் கண்ணுக்கு எப்படி தெரிஞ்சா எனக்கு என்ன”

என்று “என் நங்கை” என்று வெகு உரிமையுடன் பேசி வைக்க, மூவரும் அவனை இப்போது குருகுருவென பார்த்து வைத்தனர்.

அவர்களின் பார்வையில் தான், தான் பேசியதை உணர்ந்த செழியன், தன் நுனி நாக்கை கடித்து, முகம் சிவந்து தலை குனிய, ஆஹா ஆஹா கண் கொள்ளா காட்சி தான்.

தன்னவன் முன் முகம் சிவந்து, தலை குனியும் பெண்ணின் நாணமும், தன்னவளை பற்றிய பேச்சில், ஆறடி ஆண்மகன் அரிதாக கொள்ளும் நாணமும் என்றும் அழகு தான்.

சற்று நேரத்தில் தன்னை சமாளித்து கொண்டு செழியன் நிமிர, இன்னும் அவர்களின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.

அதற்கு மேல் அவர்களின் பார்வயையை பொறுக்க முடியாமல் செழியன்,

“என்னங்கடா, இப்படி பார்க்குறீங்க”

என்று கேட்க, அதற்கு மேல் அவனை சங்கடப்படுத்த விரும்பாத விஜய்,

“லவ் பண்றனா தைரியமா சொல்ல வேண்டியது தானே, அதை எதுக்கு எங்க கிட்ட இருந்து மறைக்கனும்”

என்று கேட்க, ஒரு பெரு மூச்சை விட்ட செழியன்,

“நங்கையும் லவ் பண்ணா சொல்லி இருப்பேன்”

என்று சொல்ல, ஒரு நண்பனாக பொங்கி எழுந்த விஜய்,

“ஏன் நங்கை ஓ.கே சொல்லலையா, உனக்கு என்ன குறைச்சல் ஹான்”

என்று படபடவென பெரிய, அவனை சமாதான படுத்தும் விதமாக, அவனின் தோளில் தட்டிய செழியன்,

“இந்த மாதிரி பேசாத விஜய், குறை ஏதும் இல்லனா, என்னையும் என் லவ்வையும் நங்கை அக்ஸ்ப்ட் பண்ணனும்னு கட்டாயம் என்ன இருக்கு, லவ் எல்லாம் அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம், அதும் இல்லாம, நங்கைக்கு என் லவ் இன்னும் தெரியாது”

என்று திடமாக ஆரம்பித்தவனின் குரல், கடைசி வரியை சொல்லும் போது உள்ளே போக, அவனை யோசனையுடன் பார்த்த விஜய்,

“நீ அங்க போய் ஒரு வாரம் தானே ஆகுது, இதுல இந்த லவ்….”

என்று முழுதும் கேட்காமல் இழுக்க, அவனை நிமிர்ந்து பார்த்த செழியன்,

“எனக்கு நங்கையை, நான் சென்னை விட்டு போறதுக்கு முன்னாடியே தெரியும்”

என்று சொல்ல, அவனை அதிர்ச்சியுடன் பார்த்த விஜய்,

“என்னடா சொல்ற, அப்படின்னா நீ அஞ்சு வருஷமாவா நங்கையை லவ் பண்ற”

என்று கேட்க, இத்தனை வருடமாக உரியவரிடம் சேர்க்காமல் தேக்கி வைத்திருக்கும் காதலின் கணம், கண்களில் வலியாய் தெரிய “ஆமாம்” எனும் விதமாக தலையாட்டினான் செழியன்.

செழியனின் வலி, அங்கு இருந்த மூவருக்கும் புரிய, வெற்றியும், தமிழும் எதிர்பாராத, இந்த செய்தியில் மலைத்து போய் இருந்தனர்.

இப்போது செழியனுக்கு காதல் என்று மகிழ்வதா, அல்லது ஐந்து வருடங்களாக சொல்லாத அவனின் காதலை நினைத்து வருந்துவதா என்று அவர்களுக்கு தெரியவில்லை.

இத்தனை வருடமாக காதலை சொல்லாமல், தனக்குள் பூட்டி வைத்து மறுகி கொண்டிருக்கும், தன் நண்பனின் மீதான கோவமும், அதை இத்தனை நாட்களாக கண்டு பிடிக்காத தன் மீதும் கோவம் அதிகமானது விஜய்க்கு.

தன் கோவத்தை மறைக்காமல் விஜய்,

“இத்தனை வருஷமா காதலை சொல்லாம இருந்து இருக்கியே, ஒரு வேளை இந்நேரம் அந்த பொண்ணுக்கு, வேற யார் கூடவாது கல்யாணம் ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்ப”

என்று மகா கடுப்புடன் கேட்க, தன் கண்களில் தெரியும் வலியை மறைக்க முயன்றவாறு, ஒரு வறண்ட புன்னகையை சூடி கொண்ட செழியன்,

“என்ன மாதிரி ஒருத்தரை இல்லாம, அவ அப்பா ஆசைப்பட்ட மாதிரி, அக்கா, அண்ணா, தம்பி, தங்கச்சி, சித்தப்பா பெரியப்பானு இருக்கிற பெரிய குடும்பத்துல, கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பானு தான் நானும் நினைச்சேன்”

என்று வருத்தத்துடன் சொல்ல, செழியன் சொல்லாததையும் புரிந்து கொண்ட விஜய்,

“உனக்கு என்ன குறை, ஏன் அவங்க அப்பாக்கு உன்னை மாதிரி ஒருத்தருக்கு நங்கையை கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பம் இல்லைன்ற மாதிரி சொல்ற, நங்கைக்கே உன் காதல் தெரியாதுனு சொன்ன, அப்புறம் எப்படி அவங்க அப்பா கிட்ட பேசுன”

என்று நடந்ததை ஆதி முதல் அந்தம் வரை அறிந்து கொள்ள விழைந்து கேட்டான் விஜய்.

ஒரே மூச்சாக செழியன் தனக்கு நங்கையின் மீது காதல் வந்த கதையையும், நங்கையின் தந்தை பேசியதை, தான் கேட்க நேர்ந்தையும் விளக்கி சொல்ல, அங்கு அவ்வளவு அமைதி.

செழியன், தன் காதல் மலர்ந்த நாட்களிலும், அதன் பிறகான கடந்த ஐந்து ஆண்டுகளாக நித்தமும், ‘தன் எவன்ஜெலின்’ தனக்கு இல்லை, என்று வலியுடன், தான் கடத்திய நாட்களில் இலயித்து கிடந்தான்.

அங்கு நிலவிய விரும்பதகாத அமைதியை கலைக்கும் விதமாக விஜய்,

“அப்போ அந்த வீட்டுல தங்கி இருக்குறது நங்கைக்காக தானா”

என்று மீண்டும் உறுதி படுத்தி கொள்ளும் விதமாக கேட்க, கடந்த காலத்தில் இருந்து வெளிவந்த செழியன்,

“ம்ம், ஆமா, இப்பவும் அவங்க அப்பா சொன்ன என்னோட நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை தான், ஒருவேளை நங்கைக்கு கல்யாணம் ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்பானோ தெரில, ஆனா என்னால நங்கையை, இனிமே விட முடியும்னு எனக்கு தோணல விஜய்”

என்று பலவகை உணர்ச்சிகளுடன் சொல்ல, நங்கையின் மீதான செழியனின் காதலை புரிந்து கொண்ட விஜய்,

“நீ யாரு, என்னனு நங்கைக்கு தெரியுமா”

என்று கேட்க, உண்மையை நங்கையிடம் மறைக்கும் குற்ற உணர்ச்சியுடன் செழியன் தலை குனிந்து,

“ஹ்ம்ம் இல்ல, வெறும் செழியனா மட்டும் தான் தெரியும், ஒரு வேளை நான் யாருன்னு தெரிஞ்சி, நங்கை என்னை பார்த்து பயந்துட்டா, என் கிட்ட இருந்து விலகிட்டா, அப்படி எல்லாம் என்னால யோசிக்க கூட முடியல”

என்று செழியன் வருத்ததுடன் சொல்ல, அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட விஜய்க்கு தான், என்ன சொல்வது என்றே புரியவில்லை.

இப்படி பிறந்ததோ, சமுதாயத்தில் இப்படி ஒரு அடையாளத்தோடு வளர்ந்ததோ, இப்போது தனி மனிதனாக நிற்பதோ, செழியனின் தவறு இல்லையே.

அதற்காக, அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே, அவனின் காதல் மறுக்க படுவது, எப்படி, எந்த விதத்தில் முறையாகும் என்று விஜய்யின் நெஞ்சம் வருத்தம் கொண்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லையே.

செழியனும், விஜய்யும் தங்கள் சிந்தனைகளில் மூழ்கி இருக்க, மீண்டும் அங்கு கவ்விய அமைதியை, இம்முறை கலைக்க எண்ணம் கொண்ட வெற்றி, வரவழைக்க பட்ட உற்சாகத்துடன்,

“அண்ணா, அப்போ அண்ணிய நாங்க எப்போ பார்க்குறது”

என்று ஆரம்பிக்க, அவனின் முயற்சியை புரிந்து கொண்ட விஜய்யும்,

“ஆமாடா நான் எப்போ என் தங்கச்சியை பார்க்குறது, எப்போ இன்ட்ரோ கொடுப்ப”

என்று ஆர்ப்பாட்டமாக கேட்க, ‘அண்ணி, தங்கச்சி’ என்ற அவர்களின் உரிமை விளிப்பில் அகமகிழ்ந்து போன செழியன்,

“இன்னும் நானே நங்கை கிட்ட சரியா பேசல, அதும் இல்லாம, அவளுக்கு நான் யாரு, நான் என்ன பண்றேன்னு தெரியாது, இதுல உங்களை எல்லாம் என்னனு சொல்லி இன்ட்ரோ கொடுக்க”

என்று புன்னகையுடன் கேட்க, மூவரும் ஆளுக்கு ஒன்றாக, செழியனை மறுத்து பேசி வாதிட ஆரம்பிக்க, அந்த இடத்தில் சந்தை தோற்கும் அளவுக்கு அவ்வளவு இரைச்சல்.

ஏதும் பேசாமல் ஒரு புன்னகையுடன், அவர்களை பார்த்து கொண்டிருந்த செழியனின் மனமோ, அம்மூவரின் தன் மீதான அன்பில் நெகிழ்ந்து போய் இருந்தது.

தான் காதலிக்கும் ஒரே காரணத்திற்காக, பார்த்தேயிராத நங்கையை , ‘அண்ணி, தங்கை’ என்று அவர்கள் முறை வைத்து அழைப்பது எல்லாம், அவனின் மீது அவர்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடு அல்லவா……

அதே நேரம் ஒரு பக்கம், செழியனின் காதல் மனமோ, இத்தனை வருடங்களாக அணைபோட்டு வைத்திருந்த காதலை எல்லாம், உரியவளிடம் கொட்டி கவிழ்க்க போகும் காலத்திற்காக, காத்து கொண்டிருந்தது.

காந்தன் வருவான்……….

Advertisement