Advertisement

செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

செழியனின் கண்ணசைவில், தமிழ் சென்று கதவிடுக்கில் பார்க்க, கதவை தட்டிய நபர் கதவுக்கு முதுகை காட்டியபடி நிற்க, முகம் தெரியவில்லை.

ஆனால் அணிந்திருந்த, காக்கி கால்சட்டையும், காலணியும் வந்திருப்பது காவல்துறையை சேர்ந்த நபர் என்பதை ஐயம் தெளிவுற காட்டியது.

தமிழ் திரும்பி, வீட்டிற்குள்ளே இருந்தவர்களை பார்த்து,

“போலீஸ்”

என்று வாயசைக்க, சற்று யோசனையோடு அவர்களை பார்த்த செழியனோ, கதவை திறக்க சொல்லி கண்ணை காட்டிவிட்டு, உள் அறையின் உள்ளே சென்று மறைந்து நின்றான்.

தமிழும், வெற்றியும் ஒருவரை ஒருவர் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு, வெற்றி சோபாவில் சென்று அமர, தமிழ் சென்று கதவை திறந்தான்.

தமிழ் கதவை திறந்து, பதட்டமே இல்லாமல் சாதாரணமாக,

“யாருங்க வேணும்”

என்று கேட்க, இவனின் குரல் கேட்டு திரும்பிய மனிதரை நிச்சயம், இந்த நேரம், இங்கு எதிர்பாரக்காத தமிழ், என்ன பேசுவது என்று தெரியாமல்,

“சார் நீ…ங்…க, நீ…ங்…க…”

என்று வார்த்தை வராமல் தடுமாற, உள்ளிருந்து இவனின் தடுமாற்றத்தை கண்ட வெற்றியோ, “என்ன ஆச்சு இவனுக்கு” என்ற யோசனையுடன், அவனும் வெளியே வந்தான்.

அதற்குள் வந்திருந்த ஆசாமி தமிழிடம்,

“கதவை திறக்க ஏன் இவ்ளோ நேரம், உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க, உன் பேரு என்ன, உள்ள இன்னும் எத்தனை பேரு இருக்காங்க”

என்று விசாரணையை ஆரம்பிக்க, இப்போது வெளியே வந்து இருந்த வெற்றியும், அந்த மனிதரை பார்த்து “அசிஸ்டெண்ட் கமிஷனர் விஜய்” அஹ என்று ஜெர்க் ஆகி நின்றான்.

அதற்குள் தன் குரலில் கடுமையை ஏற்றிய விஜய்,

“நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் இப்படியே மரம் மாதிரி நின்னா என்ன அர்த்தம், இப்போ வாய திறக்க போறீங்களா இ……..”

‘இல்லையா’ என்று மிரட்டுவதற்குள், கதவருகில் நின்றிருந்த தமிழையும், வெற்றியையும் தாண்டி, உள்ளிருந்து வந்த செழியன், மின்னல் விரைவில் விஜய்யை உள்ளே இழுத்திருந்தான்.

செழியன் விஜய்யை உள்ளே இழுத்ததும், வெளியே நின்றிருந்த இருவரும், சுற்று புறத்தை ஒரு முறை, பார்வையால் அளந்தனர்.

தள்ளி தள்ளி இருந்த அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து, யாரும் எதையும் பார்க்கவில்லை என்பதை, உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றனர்.

உள்ளேயோ செழியன் கோபமாக, விஜய்யிடம் ,

“உன் கிட்ட நான் என்ன சொன்னேன், நான் சொன்னதையும் மீறி, நீ எதுக்கு இப்போ இங்க வந்த விஜய்”

என்று கேள்விகளை கேட்டு கொண்டிருந்தான். அப்போது தான் உள்ளே வந்த தமிழ், செழியனின் கடைசி வரிகளை மட்டும் கேட்டு விட்டு,

“என்ன அண்ணா வீட்டுக்கு வந்தவங்களை போய், ஏன் வந்தீங்கனு கேட்குறீங்க”

என்று விஜய்யை மரியாதையுடன் பார்த்துக்கொண்டே கேட்க, இன்னமும் கடுப்பான செழியன்,

“ஆமா இவரு விருந்தாட வந்து இருக்காரு, உட்கார வச்சி நல்லா உபசரிங்க, நாம எதுக்கு இங்க வந்து இருக்கோம், என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம் எதும் புரியாம பேசுறதை பாரு”

என்று அவனையும் கடித்து வைக்க, வெற்றியோ யோசனையுடன் செழியனை பார்த்து,

“அண்ணா உங்ககளுக்கு இவரை முன்னாடியே தெரியுமா”

என்று விஜய்யை காட்டி கேட்க, தான் சொன்னதை மீறி விஜய், இப்படி பகலில் வந்த கடுப்பில் இருந்த செழியன், வெற்றியிடமும் சற்று கடுப்புடன்,

“இந்த சுவரை எனக்கு தெரியுறது இருக்கட்டும், உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா????”

என்று கேட்க, இருவரும் பலமாக தலையாட்ட, தமிழோ வாய்மொழியாகவே கண்களில் விஜய்யின் மீதான மரியாதை மிளிர,

“நல்லா தெரியும் அண்ணா, அசிஸ்டெண்ட் கமிஷனர் தானே, லாஸ்ட் அஹ ஒரு சின்ன பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்ட அந்த பொறுக்கியை சுட்டதோட சேர்த்து, இவரு வேலையில் சேர்ந்த பைவ் இயர்ல ஆறு என்கவுண்டர்”

என்று பிரம்பிப்போடு சொல்ல, தன் சட்டை காலரை தூக்கி விட்ட விஜயோ செழியனை “கேட்டுக்கோ” எனும் விதமாக கெத்தாக பார்த்து வைக்க, செழியனோ கண்களாலே அவனை காரிதுப்பினான்.

தமிழ் சொல்லியதை கேட்ட செழியன் விஜய்யை பார்த்து,

“உண்மையாவே அதை எல்லாம் நீ தான் பண்ணியா, இல்ல இந்த ‘அவசர போலீஸ் 100’ படத்துல வர மாதிரி, உன்னோட சப்ஸ்டியூட் யாராவது பண்றாங்களா”

என்று கோவமாக கேட்க, அதை கேட்டு வெகுண்ட விஜய்,

“யார…. பார்த்து.…. என்ன…பார்த்து…. இப்படி கேட்டுட்ட இல்ல, ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே”

என்று நெஞ்சில் கை வைத்து நடிகர் திலகம் போல நடிக்க, சம்பந்தமே இல்லாமல், நடிகையர் திலகத்தின் நினைவு வந்து தொலைந்தது செழியனுக்கு.

சிரிப்பு பொங்க செழியன்,

“உனக்கும் இப்போ நான் இருக்குற வீட்டுல இருக்கிற அந்த நடிகையர் திலகத்துக்கும் ஏக பொருத்தமா இருக்கும் விஜய்”

என்று சொல்ல, விஜய்யோ கொஞ்சம் ஆர்வம் எட்டிப்பார்க்க,

“ஓ ரியலி, எனக்கு மேட்ச் ஆகுற அளவுக்கு பொண்ணு அவ்ளோ அழகா என்ன”

என்று கேட்க, செழியனோ ‘திருவிளையாடல்’ படத்தில், சிவாஜியாக விஜயும், மீனவ பெண் போல வரும் சாவித்ரியாக தேவி பாட்டியும், கடற்கரையில் ஆடி பாடுவது போல, கற்பனை பண்ணி பார்க்க, தான் கண்ட காட்சியில் அடக்க மாட்டா சிரிப்புடன்,

“ஆமா பியூட்டின்னா பியூட்டி, அப்படி ஒரு பியூட்டி,
என்ன ஒரு நாலு பல்லு தான் கொட்டி போச்சு, வயசும் ஒன்னும் அதிகம் இல்லை, ஸ்வீட் சிக்ஸ்டி தான்”

என்று சொல்லி விஜய்யை பார்க்க, விஜயோ அழமாட்டாத குறையாக,

“அது பியூட்டி இல்லடா, பாட்டிடா, படுபாவி, என் மகதி இருக்கும் போது இன்னொரு பெண்ணு, வுவாக் பாட்டியை பத்தி ஆர்வமா கேட்டேன் இல்ல, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்”

என்று தனக்கு தானே சொல்லி கொண்டு, தன் தலையில் அடித்து கொள்ள, அவன் முகம் போன போக்கை பார்த்து, வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தான் செழியன்.

விஜயின் முகபாவத்திலும், செழியனின் சிரிப்பிலும், வெற்றியும், தமிழும் இவர்களை வித்தியாசமாக பார்த்து வைத்தனர்.

அதை பார்த்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த செழியன், இவர்கள் இருவரையும் விஜய்க்கு அறிமுகப்படுத்தி விட்டு, விஜய்யும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

பின்பு என்ன செய்வது என்று சற்று முன்பு மூவரும் முடிவு செய்ததை விஜய்யிடமும் சொல்ல, அவனும் அவனுக்கு இருந்த சில சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டான்.

ஒன்றுக்கு பலமுறை ஏதாவது தேவை என்றால் கேட்குமாறு விஜய் சொல்ல, செழியனோ இப்படி பகல் வேலையில், காக்கி உடையில் இங்கு வரவே கூடாது என்று எச்சரித்து விஜய்யை அனுப்பி வைத்தான்.

அதற்கு அடுத்தடுத்த நாட்கள் நங்கைக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் செல்ல, தேவி பாட்டிக்கும், செழியனுக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் சென்றது.

முதல் நாள் கையும்,களவுமாக தேவி பாட்டியிடம் மாட்டிக்கொண்ட செழியன், அவரிடம் மீண்டும் சிக்காமல், அதே நேரம் நங்கையை பார்க்கவும் ஒரு வழி கண்டு பிடித்திருந்தான்.

காலையில் ஆறரை மணிக்கு எழுந்து நடைபயிற்சி என்ற பெயரில், அவர்களின் தெரு முனையில் இருக்கும் பூங்காவுக்கு சென்று விடுவதை, வழக்கமாக்கினான் செழியன்.

சரியாக நங்கை வீட்டில் இருந்து கிளம்பும் நேரம், பூங்காவிலிருந்து கிளம்புபவன், நேர் கொண்ட பார்வையுடன் செல்லும் பாவையவளை, ஓர விழியில் பார்த்து, உள்ளத்தில் நிறைத்து கொண்டே, வீடு வந்து சேருவான்.

நங்கை சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் வரும் செழியனை, தேவி பாட்டி குருகுருவென பார்த்து வைக்க, இவனோ மிதப்பாக பார்த்து வைத்தான்.

இந்த நான்கு நாட்களில், நங்கையின் தினசரி செயல்பாடுகள் செழியனுக்கு அத்துபடியாகி இருந்தது.

காலையில் ஐந்தரைக்கு சமையலில் தன் நாளை தொடங்கும் நங்கை, சரியாக ஏழரை மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பி செல்வாள்.

மாலை ஆறு மணி அளவில் திரும்பி வீட்டுக்கு வந்தால், அவளுக்காக காத்திருக்கும் அக்கம்பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு, ஒன்பது மணிவரை சிறப்பு வகுப்பு.

அதற்கு பிறகு, அதிகப்பட்சம் ஒரு மணி நேரத்தில், கீழ் வீட்டில் இருந்து சத்தமே வராது, அமைதியில் மூழ்கி விடும் நங்கையின் வீடு.

இதில் நங்கையிடம் இவனுக்கு பேசவோ, நட்பை வளர்க்கவோ, இவன் எவ்வளவோ முயன்றும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

இதற்சியாக இருவரும் ஓரிரு முறை பார்க்க நேர்ந்த போதும், ஒட்டி வைத்த மில்லிமீட்டர் அளவான புன்னகையுடன் கடந்து விடுவாள் நங்கை.

அவளின் தம்பி நன்மாறனோ, இவனை இன்னும் சந்தேகத்தோடும், யோசனையுடனும் தான் பார்த்து வைத்தான்.

அக்கா, தம்பி இருவரும் தங்களை சுற்றி, கண்ணுக்கு தெரியாத ஒரு வட்டம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களை எப்படி அணுகுவது என்று தெரியாமல், செழியன் தான் தவித்து கொண்டிருந்தான்.

அதுப்போக அவர்கள் மருந்து தொழிற்சாலையின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க முடிவு செய்தபடி, அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மருந்து தொழிற்சாலையின் உள்செயல்பாடுகளை கவனிக்கும், கண்காணிப்பு காமிராவை, இவர்கள் இடத்தில் இருந்து கண்காணிக்கும் படி ஊடுருவி இருந்தனர்.

அதுப்போக மருந்துகளை உரிய இடத்திற்கு சேர்க்க தொழிற்சாலையில் பயன்படுத்தும் கனரக வாகனங்களின் “ஜி.பி.எஸ்” யை ஊடுருவி, அது செல்லும் வழி தடங்களை, தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்தனர்.

இதை எல்லாம், அவர்களுக்கு சந்தேகம் வராத விதத்தில் சாமர்த்தியமாக வெற்றியும், தமிழும் செய்து முடிக்க, செழியன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய என இதற்கே இவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இப்போது மருந்து தொழிற்சாலை, இவர்களின் திட்டப்படி, முழுதாக இவர்களின் ரகசிய கண்காணிப்பின் கீழ்.

இப்படியாக செழியனின் நேரங்களை எல்லாம் நங்கையும், நன்மாறனும், தேவிப்பாட்டியும், மருந்து தொழிற்சாலையும், அவனின் புது தோழன் ‘அந்த நாயும்’ திருடி கொண்டன.

அன்று ஞாயிறு கிழமை.

எல்லாரையும் போல செழியனுக்கும் சோம்பலாகவே விடிந்தது. பொறுமையாக எழுந்து, நிதானமாக குளித்து முடித்தவன், வெளியே செல்ல கிளம்பி கீழே வந்தான்.

அப்போது வழக்கம் போல தேவிப்பாட்டி இவனை அழைக்க,

“இன்னைக்கு என்ன செய்ய காத்திருக்கோ இந்த கிழவி, தெரியலையே”

என்று உள்ளுக்குள் யோசித்தபடியே, வெளியில் படு நிதானமாக காட்டி கொண்டு, நடந்து வந்தான் செழியன்.

செழியன் வந்ததும், தேவி பாட்டியும் வெகு சாதாரணமாக,

“இன்னைக்கு பார்க்-ல நடக்க போகலையா செழியா”

என்று கேட்க, எதை எதையோ எதிர்பார்த்த செழியன் இதை எதிர்பார்க்காமல், ‘ஞே’ என முழிக்க, தேவி பாட்டியோ மீண்டும் அழுத்தமாக,

“நடக்க போகலையானு கேட்டேன்”

என்று அழுத்தி கேட்க, அதிகம் பொய் சொல்லி பழகியிராத செழியன், சட்டென்று என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்த வண்ணம்,

“அது வந்து, அது வந்து”

என்று வேக வேகமாக யோசித்த வண்ணம் இழுக்க, தேவி பாட்டியே அவனுக்கு உதவும் விதமாக,

“இன்னைக்கு நங்கைக்கு லீவ், அதான் நீயும் லீவ் விட்டுட்டியா”

என்று கேட்டு வைக்க, செழியன் சட்டென்று “ஆமாம்” என்று தலையசைத்தவன், பின்பே சுதாரித்து வேகமாக இல்லை என்று தலையசைத்தவன்,

“இல்ல ஆயா, நான்”

என்று பாட்டியின் நெத்தியடியான நேரடியான கேள்வியில் செழியன் திணறி திண்டாட, பாட்டியோ சாவகாசமாக,

“இன்னைக்கு சன்டே இல்ல, நங்கைக்கும் லீவ், எல்லாருக்கும் லீவ், அதான் நீயும் நடக்குறதுக்கு லீவ் விட்டு இருப்ப, அதை தான் கேட்டேன், நீ வேற எதாவது நினைச்சியா என்ன”

என்று போட்டு வாங்க, செழியனும் அதை பிடித்து கொண்டு அப்பொழுதுக்கு,

“ஆமா ஆயா, ஆமா லீவ் அதான் லேட் எழுந்தேன், அதான் வாக்கிங் போகல”

என்று சொன்னாலும், தேவி பாட்டியை சந்தேகமாக தான் பார்த்து வைத்தான் செழியன்.

“இந்த ஆயா எல்லாம் தெரிஞ்சி கேட்குறாங்களா, இல்ல சும்மா குத்துமதிப்பா போட்டு வாங்குறாங்களானு தெரியலையே, எத்தனை பேரை நான் முழி பிதுங்க வச்சி இருப்பேன், இந்த ஆயா என்ன வச்சி செய்யுதே ”

என்று மனதிற்குள் அங்கலாய்த்த வண்ணம், அவரின் முகத்தில் இருந்து, ஏதேனும் அறிய முடியுமா என்று அவரை பார்க்க, அந்தோ பரிதாபம்,
அவரின் முகமோ நிர்மலமாக இருந்தது.

அதை பார்த்து இன்னும் கடுப்பான செழியனின் மனசாட்சி,

“இது ஆகுறது இல்லை செழியா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தாலும், இந்த பாட்டி உன் வாயாலையே, நீ இங்க எதுக்கு வந்து இருக்கேனு சொல்ல வச்சிடும், எஸ் ஆகிடு செழியா, எஸ் ஆகிடு”

என்று அறிவுறுத்த, அதை ஏற்று செழியனும்,

“அப்போ வேற ஏதும் இல்லனா நான் கிளம்பட்டுமா ஆயா”

என்று போலி பவ்யத்துடன் கேட்க, அவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட மாதிரி அவனை பார்த்த தேவி பாட்டியோ,

“வெளிய கிளம்பிட்ட போல இருக்கு, நீ போயிட்டு வரும் போது எனக்கு வெத்தலை வாங்கிகிட்டு வா, வெத்தலை தீர்ந்து போச்சு, இந்த கிழவரு கிட்ட நேத்து காலையிலேயே சொல்லி அனுப்புனேன், பார்த்தா ராத்திரி மறந்துட்டேனு மண்டையை சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறாரு, நீ வாங்கிக்கிட்டு வந்துடு என்ன”

என்று கிட்டத்தட்ட கட்டளை போல சொல்ல, செழியனோ உதடுகளை காது வரை இழுத்து பிடித்தபடி,

“ஈ…ஈ…ஈ…. சரி ஆயா”

என்று சொல்ல, தேவி பாட்டியோ மீண்டும்,

“ஹான் வெள்ளை வெத்தலைனு கேட்டு வாங்கு, கண்ணை மூடிக்கிட்டு கடைக்காரன் கொடுக்குற வாங்கிக்கிட்டு வராதா, என்ன புரியுதா”

என்று குறிப்பிட்ட சொல்ல, செழியனோ,

“கேட்குறது உதவி, இதுல இந்த கிழவிக்கு இருக்குற எகத்தாளத்தை பாரேன்”

என்று முணுமுணுத்து கொண்டே, மண்டையை நாலாபக்கமும் ஆட்டிவிட்டு கிளம்பினான்.

செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்த தேவி பாட்டியோ, ஏதோ யோசனையில் இருந்தார்.

வெளியே சென்ற செழியன் தன் வேலைகளை முடித்துகொண்டு, வரும் வழியில் மறக்காமல் தேவி பாட்டிக்கு வெற்றிலையும் வாங்கி கொண்டான்.

எப்போதும் போல தன் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தேவி பாட்டியின் வீட்டிற்கு செல்ல, செழியன் அவரின் வீட்டின் இரும்பு கதவின் அருகே செல்லும் போதே, உள்ளே ஒருவர் பேசும் குரல் கேட்டது.

அதை தொடர்ந்து, வழக்கத்தை விட இறுகி போன முகத்துடன் நங்கையும், அவளுடன் நன்மாறனும், சரசரவென வெளியே வந்து இவனை தாண்டி, தங்களின் வீட்டுக்கு செல்ல, செழியனோ கோவத்தில் இறுகி போய் நின்றிருந்தான்.

காந்தன் வருவான்………

Advertisement