Advertisement

சாதாரண கடைநிலை, இடைநிலை ஊழியர்கள் எல்லாம் அரக்கப்பறக்க அலுவகலம் சென்று அழுவலில் மூழ்கியிருக்க, அவர்களை மேற்பார்வையிடம் மேல்நிலை ஊழியர்கள், நிதானமாக வேலைக்கு, கிளம்பி கொண்டிருக்கும் நேரம்.

காலை பத்து மணி.

‘தேவி காலனி’

அது ‘ப’ வடிவத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு.

ஒரு பெரிய இரும்பு கதவு, அதன் உள்ளே நுழைந்தால், பக்கத்திற்கு இரண்டு என்ற வீதம், ஆறு வீடுகள், ஏறத்தாழ ஒன்று போலவே அமைந்து இருக்கும்.

எல்லாமே குட்டி, குட்டி தனி வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும், கீழே, மேலே என இரண்டு பகுதிகள் உண்டு.

கீழே இருக்கும் வீடுகள், ஒரே நேரத்தில் பெரியவர்கள் ஐவர் அமரக்கூடிய கூடம், ஒரு கட்டில் போட்டால் நம்மால் நடக்க கூட முடியாத அளவு ‘விஸ்தாரமான’ ஒரு அறையையும், அதைவிட சிறியதாக மற்றொரு அறையையும், இருவர் நின்று சமைக்க கூடிய அளவிலான சமையலறையையும், அதோடு இலவச இணைப்பாக குளியலறையும் கொண்டது.

மாடியில் இருக்கும் பகுதியோ, கீழே இருக்கும் பகுதியை விட எல்லாவற்றிலும் சிறியது. சிறிய கூடம், சிறிய ஒரே ஒரு படுக்கை அறை, சிறிய சமையலறை, அதோடு குளியலறையும் கொண்டது.

எல்லா வீட்டிற்கும் தனி தனியாக இரும்பு கதவுகளும் உண்டு என்பதால் இங்கு பாதுகாப்புக்கு குறைவு இல்லை.

‘தேவி காலனி’ தாய்குலங்கள் எல்லாம், தங்கள் வீட்டு ஆண்களையும், பிள்ளைகளையும், வெற்றிகரமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று கிளப்பி அனுப்பிவிட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளில் மூழ்கி இருந்தனர்.

தங்களின் வீட்டு வேலைகளை முடித்தவர்களோ, பக்கத்து வீட்டினரிடம், இரு வீட்டுக்கும் பொதுவாக இருக்கும் மதில் அருகே நின்று, அக்கம்பக்கத்து வீட்டு கதைகளை சுவாரஸ்யமாக அலசி கொண்டு இருந்தனர்.

அப்போது ‘தேவி காலனியில்’ ஒரு இருசக்கர வாகனமும், அதை தொடர்ந்து ஒரு ‘குட்டி யானையில்’ வீட்டிற்கு தேவையான பொருட்களும் வர, அது அங்கு நாட்டு நடப்பும், அடுத்த வீட்டின் நடப்பும், பேசி கொண்டிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தில் வியப்பில்லை.

கருப்பு நிற காலசட்டை அதற்கு எடுப்பாக, மெல்லிய சாம்பல் நிற சட்டை என இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கினான் செழியன்.

அவன் கண்களால் ஒரு முறை, அந்த காலனியை பார்வையால் ஆராய்ந்தவாறே, தான் அணிந்திருந்த குளிர்கண்ணாடியை கழற்றினான்.

நெற்றியில் இருந்த சிறிய சந்தனகீற்றும், சீராக வெட்டப்பட்டு இருந்த தாடியும், அவனுக்கு ஒரு கம்பீரத்தை தந்ததோடு, அவனை அழகனாகவும் காட்டி தொலைத்தது.

வண்டியில் இருந்து இறங்கியவன், அந்த ஆறு வீடுகளில் நடுநாயகமாக இருந்த இரு வீடுகளில்,  ஒரு வீட்டின் முன் சென்று, நின்று அழைப்பு மணியை அடித்தான்.

அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தவர், இவனின் தோற்றத்தை கண்டு மரியாதையுடன்,

“யார் நீங்க, யாரை பார்க்கணும்”

என்று கேட்க, அடுத்து இவன் சொல்லிய பதிலில் அவரின் முகத்தில் இருந்த மரியாதை எல்லாம் பின்வாசல் வழியாக ஓடிவிட, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது.

அவரின் பாவனையை பார்த்த செழியனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. அவரின் கேள்விக்கு,

“பக்கத்து வீட்டு மாடிக்கு, குடி வர போறது நான் தான்”

என்று சொன்னதற்கு, இந்த முதிய பெண்மணி ஏன் இப்படி முறைக்கிறார், என்று புரியாமல் குழம்பியவன், அவரின் கோபம் தந்த தயக்கத்தில்,

“வீட்டு சாவி…..”

என்று கேட்க, இன்னும் அவனை முறைத்து கொண்டிருந்த அவரோ, தனக்கு தானே பேசி கொள்வது போல, ஆனால் சற்று உரத்த குரலில்,

“அந்த கிழவரை என்ன செஞ்சா தகும், சொந்த புத்தி தான் இல்லைன்னா, சுயபுத்தியும் இல்ல, நான் சொல்றத எங்கையாவது கேட்குறாரா அந்த கிழவர், இந்த மாதிரி ஒரு பையனையா மாடியில குடி வைப்பாரு, கூறு கெட்ட மனுஷன்”

என்று சகட்டு மேனிக்கு திட்ட, அவரின் முன்பாதி பேச்சை கேட்டு செழியனோ,

“யாருக்கோ செமையா அர்ச்சனை நடக்குது போல”

என்று மனதிற்குள் சிரித்து கொண்டிருக்க, அவரின் பின்பாதி பேச்சை கேட்டு, பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தான்.

ஒரு முறை தன்னை குனிந்து பார்த்துக் கொண்டவன், அவர் “இந்த மாதிரி” என்று எந்த மாதிரியை சொல்கிறார் என்று புரியாமல், அவரை பாவமாக பார்த்து வைத்தான்.

இவனின் பாவங்களை கவனிக்காத அந்த முதிய பெண்மணியோ, ஆணியில் மாட்டியிருந்த மாடி வீட்டின் சாவியை எடுத்து கொண்டு இவனை நெருங்கியவர், என்ன நினைத்தாரோ, நொடியில் தன் முகத்தில் கரிசனத்தை கொண்டு வந்தவர், அவனிடம் பாசமாக,

“உன் பேரு என்னப்பா”

என்று கேட்க, அவரின் முகப்பாவனைகளை கவனமாக பார்த்து கொண்டிருந்த செழியனோ, ஏகத்துக்கும் கவனமாகி, எச்சரிக்கையுடன்,

“செழியன்” 

என்று அவரை விட பவ்யமாக சொல்ல, அவரோ இவனின் மீதான திடீர் பாசம் மீதுறும் குரலில்,

“அந்த கிழவர், அதான் என் புருஷன், இதை உன்கிட்ட சொன்னாருனு தெரில, அவரை மாதிரி என்னால கல் நெஞ்சு காரியா இருக்க முடிலப்பா, உனக்கு என் பேரன் வயசு தான் இருக்கும், அதான்  எப்படியோ போனு விடமுடியாம நெஞ்சு கிடந்து அடிச்சிக்குது”

என்று நடிகையர் திலகத்தையே மிஞ்சிடும் முகபாவத்துடன் பேச, செழியன் அவரை அசந்து போய் பார்த்து கொண்டிருந்தான்.அவரோ தொடர்ந்து,

“இப்போ நீ குடி வர போறியே அந்த வீட்டுல, உனக்கு முன்னாடி உன்னை மாதிரியே ஒரு சிறு வயசு பையன் தான் குடி இருந்தான், ஏதோ லவ் பி..ரு…., ப்….ரு… என்னமோ சொல்லுவாங்களே”

என்று  சிறிது நேரம் யோசித்தவர், பின்,

“ஆ…ங் நியாபகம் வந்துச்சி பு..ரு..க்..க..ப், லவ் புருக்கப்”

என, இதுவரை சுவாரசியமாக கதை கேட்டு கொண்டிருந்த செழியன்,

“எது ப்ரு கப் அஹ, ப்ரு காபி தூள் பேரு தானே” 

என்று குழப்பத்துடன் கேட்க, தன் தலையில் அடித்து கொண்ட அவரோ, அவரையே பார்த்து கொண்டிருந்த செழியனை பார்த்து இளக்காரமான குரலில்,

“பார்த்தா படிச்ச புள்ள மாதிரி இருக்க, ஆனா இங்கிலிபிஷ் தெரியல, அதான் லவ் புட்டுகிச்சாம், காதல் தோல்விப்பா, காதல் தோல்வி”

என்று புளிபோட்டு விளக்க, “பிரேக்அப்”யை, “ப்ருகப்” ஆக்கி விட்டு, தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நக்கல் அடிக்கும் அவரை, இவன் கொலைவெறியில் பார்க்க, அவரோ இவனை கண்டுகொள்ளாமல், ஒரு விதமான திகிலூட்டும் அமானுஷ்யமான குரலில்,

“பாவம் அந்த விரக்தில, துக்கத்துல, அந்த பையன் தூக்குப்போட்டு செத்து போய்ட்டான், அதுக்கு அப்புறம், அந்த வீட்டுக்கு இன்னைக்கு வரைக்கும் யாருமே குடி வரல”

என்று சொல்லியவர், இன்னும் தன் வெண்கல குரலை தணித்து, செழியனை அருகில் அழைத்து,

“அந்த பையன் ஆவியை, அந்த வீட்டுல பார்த்ததா, அக்கம் பக்கத்துல எல்லாம் சொல்றாங்க, வாழ வேண்டிய புள்ள நீ, உனக்கு எதுக்கு அந்த பேய் வீடு, நீ வேற வீடு பார்த்துக்கோ ராசா”

என்று சொல்லியவர், அதோடு நிறுத்தாமல்,

“இப்போ நான் உன்கிட்ட சொன்னத, அந்த கிழவர் கிட்ட, நான் தான் உன் கிட்ட சொன்னேன்னு சொல்லாத, தெரிஞ்சா வர வருமானத்தை கெடுத்திட்டியேனு, அவரு இந்த வயசுலையும் என்ன அடிப்பாரு கண்ணு”

என ஏகத்துக்கும் கண்ணு, ராசா என்று பாச வார்த்தைகளை போட்டு உருக்கமாக பேசியவர், முத்யாப்பாக வராத கண்ணீரை முந்தானை கொண்டு துடைக்க,  செழியனோ அவரின் நடிப்பு திறமை கண்டு பிரம்மித்து தான் போய்விட்டான்.

அந்த நேரத்தில் செழியனின் எண்ணம் இப்படியாக தான் இருந்தது,

இந்திய திரையுலகம் ஒரு உன்னத நடிகையை இழந்துவிட்டது…..

அப்பப்பா என்ன ஒரு பாவம் அவரின் முகத்தில்……

கண்களை துடைப்பதாக  பாவனை செய்த அந்த முதிய பெண்மணியோ, ஒரு முறை மூக்கை உரிஞ்சிவிட்டு, இவனிடம் நயமாக,

“என்னப்பா செழியா, வேற வீடு பார்த்துகிறயா, அவர் கிட்ட உனக்கு வீடு பிடிக்கலனு சொல்லிடவா”

என்று ஆவலாக கேட்க, தன் மலைப்பில் இருந்து வெளிவந்த செழியனோ அவரை விட நயமாக, 

“நீங்க சொல்றத வச்சி பார்த்தா, அந்த செத்து போன பையன் இப்பவும் அந்த வீட்டுல ஆவியா இருக்கான், இல்லையா”

என்று கேட்டு நிறுத்த, அவரோ செழியன், அவர் சொல்லியதை நம்பிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக,

“ஆமா ராசா, ஆமா”

என, இவனோ அவரின் புன்னகை முகத்தை பார்த்துக்கொண்டே,

“எனக்கும் தனியா இருக்கா போர் அடிக்கும், துணைக்கு ஒருத்தர் இருந்தா நல்லது தானே”

என்று அவரின் உற்சாகத்தை வடிய செய்தவன், அவரை கோவமாக்கும் பொருட்டு,

“அந்த பையன் எத்தனை மணிக்கு வருவானு அவனை பார்த்தவங்களை கேட்டு சொல்லுங்க, அவனும் அதே வீட்டுல இருக்க போறானா, பாதி வாடகை அவன் தருவானானுனு கேட்டு பார்க்கணும்”

என்று அசால்ட்டாக சொல்லியவன்,

“எது பேய் கிட்ட வாடகையா”

என்று வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த அவரிடம், அவரின் பாவனையை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பவ்யமான குரலில்,

“ரொம்ப நேரமா ஆளுங்க வெளிய நிக்கிறாங்க, நீங்க சாவிய கொடுத்தா, பொருள் எல்லாம் உள்ள வைக்க சொல்லிடுவேன்”

என்று கேட்க, அவரோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, சாவியை அவனிடம் கொடுத்தார்.

சாவியை வாங்கி கொண்ட செழியன், தான் குடியிருக்க போகும் பக்கத்து வீட்டின் மாடியை நோக்கி நடந்தான்.

அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்த அந்த முதிய பெண்மணியோ,

“சரியான எமகாதகனா இருக்கானே, பேய் கிட்ட வாடகை வாங்குவானாமில்ல, வாங்குனாலும் வாங்குவான், சரியான குசும்புகாரனா இருக்கான்”

என்று சிறுது நேரம் அங்கலாய்த்தவர், அவன் கொண்டு வந்த சொற்ப பொருட்களை மாடியில் வைத்துவிட்டு, கூலியாட்கள் செல்ல, அவனின் வீட்டை நோக்கி படையெடுத்தார் அந்த முதியபெண்மணி.

அவர் மாடிக்கு செல்ல, அங்கு செழியனோ பொருட்களை ஒழுங்குப்படுத்தி கொண்டு இருந்தான்.

ஒரு தொண்டை செருமல் மூலம் தான் வந்திருப்பதை அறிவித்த அந்த முதிய பெண்மணி, அவனின் அழைப்பை ஏற்று உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்தவர் அவனின் பொருட்களை ஒரு பார்வை பார்த்தவாறே அவனிடம்,

“என்ன இவ்ளோ தான் உன்னோட மொத்த பொருளா, இவ்ளோ கம்மியா இருக்கு”

என்று கேட்க, இவனோ தலையணைக்கு உறை மாட்டிய படியே,

“நான் ஒரு ஆள் தானே, இது போதாதா என்ன”

என்று அவரையே பதில் கேள்வி கேட்டு வைக்க, இப்போது அவனின் முகத்தையே குருகுருவென பார்த்த அவர்,

“ஆமா நீ ஏன் இவ்ளோ தாடி வளர்த்து வச்சி இருக்க, சவரம் பண்ணி தொலைக்க வேண்டியது தானே, கிரகம் மூஞ்சியே முழுசா தெரில”

என்று அவனின் முகபாவங்களை பார்க்க முடியாத கடுப்பில் பேச, செழியனோ,

“மூஞ்சி தெரிய கூடாதுன்னு தானே வளர்த்து வச்சி இருக்கேன்”

என்று சத்தம் இல்லாமல் முணுமுணுத்தவன், சத்தமாக அவரின் காதில் விழும்படியாக,

“வேண்டுதல், அதான் தாடி வளர்க்கிறேன்”

என்று உண்மை போலவே சொல்ல, அவரோ அவனை நம்பாமல் பார்த்து வைத்தார்.

அப்போது தான் நியாபகம் வந்தவராக, 

“ஆமா நீ இந்த வீட்டுக்கு பால் காய்ச்சவே இல்லையே, புதுசா ஒரு வீட்டுக்கு குடி வரதுக்கு முன்னாடி, கருக்கல்ல பால்காய்ச்சனும்னு உனக்கு தெரியாதா”

என்று அவனிடம் வம்பு பண்ணும் நோக்கத்துடன் கேள்விகளாக கேட்க, அவனோ இப்போது புதிதாக வாங்கிய மின் அடுப்பை, சமையலறையில் வைத்தவாறே,

“தெரியாதே”

என்று இலகுவாகவே சொல்ல, அவரோ விடாமல், 

“புது வீட்டுக்கு வந்து இருக்க, உன்னோட அப்பா, அம்மா யாருமே வரலயே ஏன், நீ அவங்க கிட்ட இங்க குடி வரப்போறத பத்தி சொல்லலையா???”

என்று கேட்க, சமையலறையில் இருந்து, கூடத்திற்கு வந்தவனின் கால்கள் ஒரு நிமிடம் நிற்க, அடுத்த நிமிடம், வேறு ஒரு பொருளை பிரித்தவாறே, தன் முகத்தை குனிந்து கொண்டவன், ஒரு பாவமும் இல்லாத இயல்பான குரலில்,

“அவங்க எல்லாம் இருந்தா தானே வரதுக்கு” 

என்று சொல்ல, இப்போது அந்த முதிய பெண்மணிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. 


யாருமில்லாதவன் என்பதில், வயதின் காரணமாகவோ அல்லது பெண்களுக்கே உரித்தான தாய்மையின் இயல்பாகவோ, செழியன் மேல் கரிசனமும், பாசமும் வந்து  தொலைத்து அந்த முதிய பெண்மணிக்கு.

ஆனால் அதை இலாவகமாக மறைத்தவர், நடுவில் ஒரு கேள்வியே அவர் கேட்காதது போல, அவன் “தான் யாருமில்லாதவன்” என்ற பதிலே சொல்லாதது போல பாவித்து, அவனின் முந்தைய பதிலை பிடித்துக்கொண்டு,

“தெரிலனா, அக்கம்பகத்துல இருக்குற பெரியவங்க கிட்ட கேட்கணும் என்ன பண்ணும், ஏது பண்ணனும்னு, வாய் பேசுனா மட்டும் போதாது, போ, போய் பக்கத்துல இருக்கிற கடையில் பால் வாங்கிட்டு வா”

என்று அவனை கடைக்கு அனுப்பியவர், காலண்டரில் இப்போது இராகுகாலம், எமகண்டம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அவன் சற்று முன்பு பிரித்து வைத்த மின் அடுப்பில் பால் காய்ச்சுவதற்கு, தேவையான பாத்திரத்தை எடுத்து வைத்தார்.

செழியன் பால் வாங்கி வந்ததும், ஒரு புதுப் பாத்திரத்தில் பாலை காய்ச்சியவர், அவனுக்கு கொடுத்துவிட்டு, தானும் ஒரு குவளையில் எடுத்து கொண்டார்.

இந்த வீட்டிற்கு அவன் குடிவர கூடாது என்று சற்று முன்பு வரை முயன்ற தானே, அவனின் வீட்டில் பால் காய்ச்ச, வைத்த விதியை நினைக்க அவருக்கு சிரிப்பு தான் வந்தது.

பாலைக் குடித்து கொண்டிருந்த செழியனோ, 

“ஆமா நான் உங்களை எப்படி கூப்பிடறது”

என்று ரொம்ப நேரமாக கேட்க நினைத்த கேள்வியை கேட்க, ஒரு பெருமூச்சை வெளியிட்ட அந்த முதியபெண்மணி,

“என் பேரு தேவி, இந்த காலணிக்கு என்னோட பேர தான் வச்சி இருக்காரு என்னோட புருஷன், இங்க இருக்குற பசங்களுக்கு எல்லாருக்கும் நான் தேவி ஆயா தான், நீயும் அப்படியே கூப்பிடு”

என்று சொல்ல, செழியனோ தன் கண்களில் ஆச்சர்ய பாவத்தை கொண்டு வந்து,

“என்னது ஆயாவா….., உங்களுக்கு அ..வ..ளோ… வ..ய…சா… ஆகுது, பார்த்தா தெரியவே இல்லையே, அழகா, இளமையான தானே இருக்கீங்க, நானே நீங்க ஆண்டினு கூப்பிட்டா கோச்சிக்குவிங்க, அதனால் அக்கான்னு கூப்பிடலாம் நினைச்சேனே”

என்று ஏகத்துக்கும் கூச்சமே படாமல் பொய்களை அடித்துவிட, அந்த வயதிலும் தேவி பாட்டி அழகாக வெட்கப்பட, செழியனின் மனசாட்சியோ,

“அடேய் உனக்கே இது எல்லாம் நல்லா இருக்கா சொல்லு, அது ஆயா இல்லமா பின்ன என்ன ஐஸ்வர்யா ராயா, மனசாட்சியே இல்லாம பேசுற உனக்கு போய் மனசாட்சியா இருக்கேன் பாரு என்னய, என்னய”

என்று எதைக்கொண்டு தன்னை அடித்துக்கொள்ள என்று தேட, செழியனோ அதை கணக்கிலே கொள்ளாமல், தேவி பாட்டியிடம்,

“சொல்லுங்க அக்கான்னு கூப்பிடவா”

என்று விடாமல் கேட்க, அவரோ,

“அடேய் செழியா, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்டா, அக்கவாமில்ல, அக்கா”

என்று புன்னகையுடனே சலித்துக்கொள்ள, செழியனோ குரும்பாக,

“ஹப்பா நல்ல வேலை பொய்னு கண்டுபிடிச்சிட்டீங்க, நான் எங்க நீங்க நெஜமாவே அக்கான்னு கூப்பிட சொல்லிடுவிங்களோன்னு பயந்துட்டேன் ஆயா”

என்று அந்த ‘ஆயா’வை அழுத்தி சொல்ல, அவனின் முதுகில் செல்லமாக ஒரு அடி வைத்த தேவி பாட்டியோ,

“சரியான அராத்து, சரியான அரட்டை”

என்று சொன்னவர், சிரித்துகொண்டே எழுந்து செழியனிடம் விடைப்பெற்று வாசல் வரை சென்றார். பின்பு ஏதோ நினைவு வந்தவராக அவனிடம் திரும்பி,

“இங்க பாரு செழியா, உன்னால கீழ இருக்கிற என்னோட பேத்திக்கு ஏதும் தொந்தரவு வந்தது, அவ்ளோ தான் சொல்லிட்டேன்,  உன்னை தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ, என்னோட புருஷன் அந்த காலத்துல பெரிய ரவுடி, அவரோட ஒரு அடி கூட தாங்க மாட்ட நீ, ஜாக்கிரதை”

என்று இவனை எச்சரிக்கை செய்ய, ‘பென்சிலில் போட்ட கோடு’ மாதிரியான உடல்வாகை கொண்ட தேவி பாட்டியின் கணவரை நினைத்து பார்த்த செழியனுக்கு சிரிப்பு பொங்க, அதை மறைத்து,

“என்னை பார்த்தா பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ற மாதிரியா இருக்கு ஆயா”

என்று கொஞ்சம் முறுக்கி கொண்டு கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த தேவி பாட்டியோ,

“பார்த்தா நல்ல பையனா தான் தெரியுற, ஆனா உன்னோட வயசு, அதை தான் நம்ப முடியாது”

என்று சொன்னவர், மீண்டும் ஒருமுறை அவனை கண்களால் எச்சரித்துவிட்டே, அவரின் வீட்டுக்கு சென்றார் தேவி பாட்டி.

சென்ற அவரை பார்த்த செழியன் யோசனையுடன் தன் வேலையை பார்க்க, அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, இன்று இரவு அவர் பேத்தி என்று குறிப்பிட்ட அப்பெண்ணின் கையை பிடித்து தாம் இழுத்து வைக்கப்போகிறோம் என்று.

காந்தன் வருவான்………

Advertisement