Advertisement

நங்கையும், நன்மாறனும் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், பொற்செழியனின் கைப்பேசி சிணுங்க, விஜய் தான் அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்ற பொற்செழியன்,

“சொல்லுடா வந்துட்டியா”

“ஹ்ம்ம் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல நீ சொன்ன ஹோட்டலுக்கு வந்துடுவேன்”

“ஹ்ம்ம் ஓக்கே”

“நான் வரதுக்குள்ள எதும் பண்ணி வைக்காதடா நல்லவனே”

“சரி சரி”

என்று பொற்செழியன் சொன்ன தோரணையே அவன் ஏதோ முடிவு செய்து விட்டான் என்று புரிய, காரின் வேகத்தை கூட்டினான் விஜய்.

அவன் நினைத்த மாதிரியே, அணிந்திருந்த சட்டையின் கைகளை மடித்து விட்ட பொற்செழியன், அந்த உணவு விடுதியை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான்.

இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த ஆசாமிகளில் இருவர், நடந்து செல்லும் பொற்செழியனை பின்தொடர, இன்னொருவன் வண்டியை மெதுவாக உருட்டி கொண்டு வந்தான்.

குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவர்கள் பின்தொடர, இதற்சியாக பார்ப்பவன் போல திரும்பி பார்த்து, அவர்கள் தன்னை தொடர்வதையும் உறுதி செய்து கொண்டான் பொற்செழியன்.

இரண்டு தெரு தள்ளி வந்ததும், ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்க, தன் கைபேசியில், விஜய்க்கு தான் இருக்கும் இடத்தை வாட்சப்பில் அனுப்பியவன், அவர்களை நோக்கி திரும்பினான்.

பொற்செழியன் சட்டென்று திரும்பவும், அதை எதிப்பார்க்காமல் பின்னால் வந்தவர்கள் திகைக்க, வெகு நிதானத்துடன் அவர்களை அளவிட்டவனோ,

“யார் நீங்க, எதுக்கு என்ன பாலோ பண்றீங்க”

என்று நேரடியாக கேட்க, இப்படி கேட்பான் என்று எதிர்பார்த்திராத இருவரும் திகைத்து போய் அவனை பார்த்தனர்.

எதிர்பார நேரத்தில் தொடுக்கும் தாக்குதல் தான், முக்கால்வாசி நேரம் வெற்றியை கொடுக்கும். இங்கு அவர்கள் அந்த வாய்ப்பை இழந்து இருக்க, இனியும் தாமதிக்க விரும்பாமல், தங்கள் கத்தியுடன் பொற்செழியனை தாக்க விரைந்தனர்.

இரவு நேரத்தில், தெரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, அமைதியில் மூழ்கி இருந்த அந்த வீதி, வந்தவர்களுக்கும் வசதியாக தோன்ற, வந்த காரியத்தை செயலாற்ற முற்ப்பட்டனர்.

தான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், அவர்கள் கத்தியுடன் தன்னை நோக்கி வர, அதன் நீளத்தையும், பளபளப்பையும் கண்டு வியந்து பொற்செழியனும், தன் கைகளால் பேச ஆரம்பித்தான்.

முதலமாவனின் கத்தி சரியாக பொற்செழியனின் கழுத்தை குறிவைத்து வர, குனிந்து அந்த தாக்குதலில் இருந்து தப்பித்தவன், அப்படியே திரும்பி, பின்னால் நெருங்கி இருந்த இரண்டாமவனை ஒரு உதை உதைத்தான்.

அந்த உதையில் இரண்டாவமவன் தடுமாற அந்த இடைவெளியில், முன் பக்கம் திரும்பி, திரும்ப தாக்க முயன்ற முதலமாவனின் கையை பிடித்து திருகி, அவனையும் ஒரு உதைவிட, அவனும், அவனின் கத்தியும் அநாதரவாக தரையில் விழுந்தனர்.

கத்தியை மட்டும் காலால் எத்திவிட்டு, தூர சென்று விழ வைத்த பொற்செழியன், தடுமாறிய இரண்டாமவன் சரியாக நிற்பதற்குள், அவனுக்கு சரமாரியாக பல குத்துக்களை பரிசாக வழங்கினான்.

சொற்ப நேரத்தில் இருவரும் கீழே சரித்து இருந்தான் பொற்செழியன். எல்லாம் மின்னல் விரைவில் நடைபெற்று இருக்க, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்றாமவனோ, வண்டியை முடிக்கி விட்டான்.

கீழே கிடந்த இருவரையும் புரட்டி எடுத்து கொண்டிருந்த பொற்செழியனோ, தன்னை நெருங்கிய இருசக்கர வாகனத்தை கவனிக்க தவறி விட்டான்.

பொற்செழியனை நெருங்கியதும் வண்டியின் வேகத்தை குறைத்த மூன்றாமவன், முழு பலத்துடன் கத்தியை பொற்செழியனின் கழுத்தை குறி வைத்து பாய்ச்சினான்.

கத்தி வீச பட்ட பிறகே பொற்செழியன் சுதாரித்து அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ள குனிந்தான்.

அவனின் தற்காப்பு முயற்சியில் கழுத்தை நோக்கி பாய இருந்த கத்தி, தன் இலக்கை அடைய முடியாமல் தோற்று, அவனின் வலப்பக்க தோள்பட்டையை மட்டும் பதம் பார்த்து சென்றது.

வலியில் ஒரு நிமிடம் முகத்தை சுருங்கிய பொற்செழியன், தன்னை தாக்கி விட்டு, தாண்டி செல்ல முயன்ற மூன்றாமவனை, இடது கையால் வண்டியில் இருந்து இழுத்து கீழே போட்டான்.

கீழே விழுந்தவன் மீண்டும் தன் கத்தி கொண்டு அவனை தாக்க முயல, பொற்செழியன் அவனை தடுத்து கொண்டிருக்க, அடிபட்டு கிடந்த மற்ற இருவரும், தட்டு தடுமாறி எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தனர்.

அந்நேரம் அங்கு வந்த விஜய்க்கு நிலைமை துல்லியமாக புரிய, வந்த வேகத்திலே மூன்றவமாவனுக்கு முகத்திலே பல குத்துக்களை விட, அவன் தடுமாறி கீழே விழப்போக, அவனின் கையில் விலங்கை மாட்டினான்.

கீழே கிடந்த இருவருக்கும் விலங்கு மாட்டப்பட, மூவரையும் தன்னுடைய காரில் தள்ளி கதவை அறைந்து சாத்திய விஜய், திரும்பி பொற்செழியனை பாரக்க, அவனும் அமைதியாக வந்து காரில் ஏறினான்.

விஜய்யின் கார் நேராக அவர்களின் தனி வீட்டிற்கு செல்ல, விஜய் ஏற்கனவே சொல்லி இருந்த படியால், வெற்றியும் தமிழும் தயாராக இருந்தனர்.

விலங்கு பூட்டப்பட்டிருந்த மூவரையும் அழைத்து சென்று அந்த வீட்டின் தனி அறை ஒன்றில் உள்ளே தள்ளி, கதவை பூட்டினான் விஜய்.

பொற்செழியன் இரத்த போக்கை தடுக்க இறுக்கி கட்டி வைத்திருந்த கைக்குட்டையை அகற்றி, அவனின் காயத்தை பரிசோதித்த விஜய் அதிருப்தியுடன் தலையாட்டியப்படி,

“மினிமம் த்ரீ ஸ்டிச்செஸ்வாது போடணும்”

என்று சொல்ல, பொற்செழியனும் வலியில் முகத்தை சுருக்க, அதற்கு மேலும் தாமதிக்க விரும்பாத விஜய்,

“வா ஹாஸ்பிடல் போகலாம்”

என்று அவனை அழைக்க, மறுப்பாக தலையசைத்த பொற்செழியனோ,

“மூணு பேர உள்ள பூட்டி வச்சி இருக்கோம், நாம ரெண்டு பேரும் இங்க இல்லைனா ரிஸ்க்”

என, விஜய்க்கும் அதில் உள்ள நியாயம் புரிய, தன்னுடைய கார் சாவியை வெற்றியிடம் தூக்கி போட்டவன்,

“உனக்கு கார் ஓட்ட தெரியும் இல்ல, இந்த வெண்ணையை ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போய்ட்டு வந்ததுடு”

என்று சொல்ல, பொற்செழியனுக்கும் இரத்தப்போக்கு, வலி எல்லாம் சேர்ந்து உடல் அயர்வாக இருக்க, அதற்கு மேல் மறுக்காமல், வெற்றியுடன் கிளம்பி சென்றான்.

மருத்துவமனையில் காயத்தை சுத்த படுத்தி, விஜய் சொன்னதை விட அதிகமாக ஒரு தையலும் இட்டு, பொற்செழியனை அனுப்பி வைத்தனர்.

அதற்குள் விஜய், நால்வருக்கும் தேவையான உணவை தமிழை அனுப்பி வாங்கி வர செய்து இருந்தான்.

பொற்செழியன், விஜய்யுடன் காரில் வரும் போதே, நன்மாறன் அழைத்து தாங்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக தகவல் சொல்ல, எதுவும் பேசாமல் கேட்டு கொண்டவன், பிறகு பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.

வெற்றியும், பொற்செழியனும் வீட்டிற்கு வந்ததும், பொற்செழியனை விஜய் சாப்பிட்டு மாத்திரை எடுத்து கொள்ள சொல்ல, அவனோ,

“நான் அல்ரெடி சாப்பிட்டேன், டேப்லெட் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி எடுத்துக்குறேன், நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க”

என மற்ற மூவரும் சாப்பிட்டு முடித்து, கூடத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். தனக்கு எதிரே அமர்ந்த பொற்செழியனை பார்த்து விஜய்,

“உன்னை கொல்ல ஆள் அனுப்பியது யாரா இருக்கும்னு எதாவது ஐடியா இருக்கா”

என, அப்படி கேட்ட, விஜய்யை பார்த்து பொற்செழியன் ஒரு மார்க்கமாக புன்னகைக்க, அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்த விஜய், தன் தலையில் அடித்து கொண்டு,

“அது சரி, எதிரி ஒருத்தரா, ரெண்டு பேரா நீ கணக்கு வச்சிக்க, எல்லா இடத்திலையும், எல்லார் கிட்டயும் தான் ஒரண்ட இழுத்து வச்சி இருக்க நீ”

என்று கடிந்து கொள்ள, பொற்செழியனோ அவனை பாராட்டியது போல பெருமையாகி சிரித்து வைக்க, கடுப்பான விஜய்,

“நான் என்னமோ அவார்டு கொடுத்த மாதிரி எதுக்கு ‘ஈஈஈ’ னு பல்ல காமிச்சுகிட்டு இருக்க, ஆமா நான் தான் வரேன்னு சொன்னேன் இல்ல, எதுக்கு அதுக்குள்ள தனியா போன”

என்று காய்ச்ச ஆரம்பிக்க, இப்போது முகத்தை பொற்செழியன் பாவமாக வைத்து கொள்ள, அவனை காப்பாற்றும் எண்ணம் கொண்டு வெற்றி,

“ஏன் அண்ணா, அந்த மூணு பேரையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிகிட்டு போகாம வீட்டுல பூட்டி வச்சி இருக்கோம்”

என்று கேட்க, பொற்செழியனை தன் கண்களால் எரித்து சாம்பலாக்கும் முயற்சியில் இருந்த விஜய், அதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, நீள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு,

“என்ன கேஸ் போட்டு உள்ள போடுறது”

என்று கேட்க, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட வெற்றியும், தமிழும் ஒருமித்த குரலில்,

“அட்டெம்ப் டூ மர்டர் தான் அண்ணா”

என்று சொல்ல, இயலாமையுடன் அவர்களை பார்த்த விஜய்,

“பச் அப்படி கேஸ் போட்டா, இவன் இங்க தான் இருக்கானு எல்லாருக்கும் நாமளே சொல்லுற மாதிரி ஆகாதா”

என்று கேட்க, இந்த கோணத்தில் யோசித்து பார்க்காத அவர்கள் இருவரும் தலையசைத்து கேட்டு கொள்ள, தன் இருக்கையில் இருந்து எழுந்த பொற்செழியன்,

“வாடா விஜய், அவனுங்க கிட்ட போய், அவனுங்களை அனுப்பினது யாருன்னு விசாரிப்போம்”

என்று சொல்ல, விஜய்யோ,

“ஆமா கேட்டதும், சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பானுங்க, போடாங்”

என்று அவனை திட்ட, வர மறுத்த விஜய்யையும் இழுத்து கொண்டு, பூட்டி இருந்த அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றான் பொற்செழியன்.

ஆளுக்கு ஒரு பக்கம் வலியில் உருண்டு கொண்டிருந்த மூவரும், இவர்களை பார்த்ததும் எழுந்து அமர, கூரிய பார்வையால் அவர்களை துளைத்து கொண்டே பொற்செழியன்,

“உங்களை யாரு அனுப்புனது”

என்று கேட்க, அந்த குரலில் அவர்களின் உடலில் மெல்லிய நடுக்கம் பிறந்தாலும் மூவரும் வாயை இறுக்கமாக மூடி இருக்க, விஜய்யோ யோசனையுடன்,

“ஆமா நீங்க கொல்ல ட்ரை பண்ணிங்களே, இவன் யாருன்னு தெரியுமா”

என்று கேட்க, திருட்டு முழி முழித்த அவர்களின் முகமே, அவர்கள் கைவைத்தது யார் மேலென்று அவர்கள் அறியார் என்பதை பறைசாற்ற, பொற்செழியன்,

“நான் இருக்கிற இடத்தை எப்போ, எப்படி கண்டுபிடிச்சிங்க”

என்று உரும, அவர்கள் இப்போதும் அமைதியாகவே இருக்க, விஜய் கைமுஷ்டியை முறுக்கி கொண்டு அடிக்க முன்னே செல்ல, மூவரில் ஒருவன்,

“உங்க போட்டோ ஒரு வாரத்துக்கு முன்னாடியே எங்களுக்கு வந்துடுச்சி சார், தேடி கிட்டு இருந்தோம், இன்னிக்கு தான் உங்களை பஸ்ல பார்த்துட்டு பசங்க இன்போர்மேஷன் கொடுத்தானுங்க”

என்று திக்கி திணறி சொல்ல, அப்போது தான் வசிக்கும் இருக்கும்இடம் இவர்களுக்கு தெரியாது என்பதில் நெஞ்சம் முழுக்க நிம்மதி வியாபிக்க,

“என் கூட இருந்தவங்களை பத்தி, என்ன கொல்ல சொன்னவங்க கிட்ட எதுவும் சொன்னிங்களா”

என்று இவ்வளவு நேரம் உறுத்தி கொண்டிருந்த கேள்வியை கேட்க, மூவரும் வாயை திறக்காமல் இருக்க, முன்னேறிய விஜய், நாலு அறை கன்னத்தில் வைக்க, அடி வாங்கியவன் வலியில்,

“இல்ல சார், இல்ல சார், உங்களை போட சொல்லி மட்டும் தான் எங்களுக்கு அசைன்மெண்ட்”

என்று சொல்ல, விஜய்யோ,

“அப்படியே அந்த அசைன்மெண்ட் அஹ யாரு கொடுத்ததுனும் சொல்லிடுங்க பார்ப்போம்”

என்று கேட்க, முன்னால் விஜய்யிடம் அடி வாங்கியவன், கன்னத்தை பிடித்து கொண்டு,

“யாருன்னு சொன்னா எங்களை உயிரோட வுட மாட்டாங்க சார்”

என்று சொல்ல, நக்கல் சிரிப்பு சிரித்த பொற்செழியனோ,

“இப்போ மட்டும் நீங்க இங்க இருந்து உயிரோட போக போறீங்ன்னு யாரு சொன்னா ஹான்”

என்று புருவத்தை ஏற்றி கேட்க, அவனின் பாவனையில், குரலில் என மூவரும் நடுங்கி போய் அவனை பார்க்கவும், அவனின் கைப்பேசி இசைக்கவும் சரியாக இருந்தது.

அவர்களை பார்த்து வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்க வேண்டும் என்று சைகையில் சொன்னவன், அழைப்பை ஏற்று,

“சொல்லுடா”

என்று சொல்ல, இவ்வளவு நேரம் பேசிய குரலுக்கும், இப்போது பேசும் குரலுக்கும் இருந்த மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசத்தில் விஜய் அவனை கேள்வியாக பார்த்தான்.

விஜய்யின் பார்வைக்கு, பதிலாக உதடு அசைத்து நங்கை என்று சொல்ல, அதேநேரம் அந்த பக்கம் நங்கையோ,

“வீட்டுக்கு வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்”

என்று ஒரு பாவனையும் இல்லாத குரலில் கேட்க, தன் தோளில் இருந்த கட்டை பார்த்த பொற்செழியன், ஒரு நிமிடம் யோசித்து விட்டு,

“இன்னைக்கு நான் வீட்டுக்கு வர முடியும்னு தோணலை நங்கை, டோர் அஹ நல்லா லாக் பண்ணிட்டு, நீயும் மாறனும் தூங்குங்க சரியா”

என்று எப்போதும் போல் வாஞ்சையுடன் சொல்ல, அந்த பக்கமோ எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்க, பொற்செழியன்,

“என்னடா”

என்று மீண்டும் கேட்க, உடைந்து போன குரலில் நங்கை,

“நீங்க, நீ…ங்…க நல்லா இருக்கீங்க தானே, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, இல்ல”

என உணவகத்தில் இருந்து அவன் அனுப்பி வைத்த விதத்தில் ஏதோ தவறாக பட, அதற்கு மகுடம் போல அவனும் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்ல, பாவம் மங்கையவள் தவித்து தான் போய் கேட்டாள்.

என்ன நடந்தது என்று அறிவதை விட, அந்நேரம் தன் தலைவனின் நலமே முக்கியமாக பட, அவனின் நலத்தை உறுதி படுத்தி கொள்ள விழைந்து கேட்க, அதை புரிந்து கொண்ட தலைவனும்,

“எனக்கு ஒன்னும் இல்லடா, நான் நல்லா தான் இருக்கேன், நான் ஒரு ப்ரொஜெக்ட்ல ஹண்டல் பண்றேன் இல்ல, அதுல ஒரு பிரச்சனை, அதான் இங்க வெற்றி, தமிழ் கூட என்னனு பார்த்து கிட்டு இருக்கேன்”

என்று உண்மையை உடைத்து சொல்லாமல், ஒரு மார்க்கமாக சொல்லி வைக்க, அதை நம்புவதை தவிர நங்கைக்கும் வேறு வழி இல்லாமல் போக,

“ஹ்ம்ம் சரி”

என்று கேட்க ஆயிரம் கேள்வி இருந்தாலும், அதை கேட்க சூழ்நிலை வாய்ப்பு அளிக்காமல் போக, அரைமனத்துடன் அழைப்பை துண்டித்தாள்.

பொற்செழியன் பேசி முடிக்கும் வரை, பொறுத்திருந்த விஜய், அவர்களிடம் மீண்டும் முன்பு கேட்ட கேள்வியையே கேட்க, அவர்களும் அமைதியையே பதிலாக தந்தனர்.

அவர்களை மீண்டும் அடிக்க போன விஜய்யை தடுத்த பொற்செழியன்,

“இங்க வச்சி இதுக்கு மேல எதுவும் பண்ண வேண்டாம் விஜய், லீகலா கேஸ் பைல் பண்ணி, லாக்அப்ல வச்சி கேட்குற வித்துல கேட்டா, பதில் சொல்லாம எங்க போக போறாங்க”

என்றவன் வெற்றியை அழைத்து அவர்களின் காயங்களுக்கு முதலுதவி செய்ய வைத்து, மீண்டும் அந்த அறையை பூட்டி விட்டு வெளியே வந்தான்.

அவனின் பின்னோடு வந்த விஜய்க்கு, பொற்செழியன் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டது புரிய, அதை அறிந்து கொள்ள அவனை பார்க்க, பொற்செழியனோ தமிழை பார்த்து,

“அந்த குடோன்ல இருக்கிற மெடிஸ்ன் எல்லாத்தையும் சென்னை முழுக்க இருக்கிற மெடிக்கல் ஷாப்கு இன்னைக்கு நயிட் தானே மூவ் பண்றாங்க”

என்று கேட்க, அவனும் ஆமாம் என்று தலையசைக்க, குறுக்கும் நெடுக்கும் நடந்த பொற்செழியன், விஜய்யை பார்த்து,

“பி.எஸ் இங்க வர வேண்டிய நேரம் வந்துடுச்சு விஜய்”

என்று சொல்ல, விஜய் புரிந்தது எனும் விதமாக தலையாட்ட, மற்ற இருவரும், இவர்களை புரியாமல் பார்த்தனர்.

காந்தன் வருவான்……..

Advertisement