Advertisement

இப்போது எல்லாம் பொற்செழியன், பெரும்பாலும் நங்கையுடன் வீடு திரும்புவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தான்.

சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், நங்கை சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் இருக்கும் போது, இவன் தன் மடிகணினியுடன் ஐயக்கியமாகி இருப்பான்.

அன்று பொற்செழியன், அந்த மந்திரியின் உதவியாளரின் கைபேசியின் உள் நுழைந்து, வெற்றி சேகரித்து இருந்த தகவல்களை அலசி கொண்டிருந்தான்.

இடையில் நங்கை உணவுக்கு அழைக்க, உணவை உண்ணும் போதும் தன் யோசனையிலே மூழ்கி இருக்க, நங்கையும், நன்மாறனும் கூட எதுவும் பேசமால் அமைதியாகவே உண்டனர்.

வழக்கம் போல நன்மாறன் தனது அறைக்கு சென்று விட, பொற்செழியன் கூடத்திலே தரையில் அமர்ந்து, நன்மாறன் எழுதுவதற்கு பயன்படுத்தும் சிறிய மேசையில் மடிக்கணினியுடன் ஒன்றி விட்டான்.

நங்கை எல்லாவற்றையும் எடுத்து வைத்து, வீட்டை தாழிடும் வரையிலும் கூட அப்படியே இருக்க, நின்ற படியே அவனின் தலை கோதிய நங்கை,

“என்னங்க தூங்குற ஐடியா இருக்கா இல்லையா”

என்று கேட்க, காலையில் இருந்து தொடர்ந்து மடிக்கணினியை பார்த்து கொண்டிருந்ததில் தீயாய் தகித்த கண்களை மூடி, தன்னவளின் அருகாமையை அனுபவித்தவன், சோர்வான குரலில்,

“இல்ல கண்ணம்மா, இன்னும் வேலை இருக்கு, நீ போய் தூங்கு, நான் இதை முடிச்சிட்டு வரேன்”

என்று சொல்லியபடியே, வலி மிகுதியால் கழுத்தை இப்படியும், அப்படியும் திருப்பினான். அதை பார்த்த நங்கை, அப்படியே அவனின் பக்கத்தில் அமர்ந்து விட்டாள்.

தன் இரு கையின் கட்டை விரல்களை கொண்டு கழுத்தை, இதமாக பிடித்து விட ஆரம்பித்தாள்.
பொற்செழியனும் கண்மூடி அதை இரசித்து கொண்டிருக்க, நங்கையோ,

“இந்த வேலை எல்லாம் ஆபிஸ்லையே பார்த்தா என்ன, வீட்டுல டேபிள், சேர் எல்லாம் ஒர்க் பண்ண கம்பர்டப்ளா இல்ல இல்ல”

என்று சொல்ல, பொற்செழியனோ எந்த மறுமொழியும் சொல்லாமல் அமைதியாக இருக்க, தன் கையின் அழுத்தத்தை அதிகமாக்கிய நங்கை,

“ஈவ்னிங் என்ன கூட்டிகிட்டு வரணும்னு சீக்கிரமா ஆபிஸ்ல இருந்து கிளம்பி, எதுக்கு இப்போ இப்படி உட்கார்ந்து ஒர்க் பண்ணணும், ஹ்ம்ம்”

என்று சற்று மிரட்டலாக கேட்க, இவ்வளவு நேரம் நங்கைக்கு முதுகை காட்டி கொண்டு திரும்பி இருந்த பொற்செழியன், மின்னல் வேகத்தில் திரும்பி, அவளின் முகத்தை தன் கைகளால் பற்றி இருந்தான்.

அவனின் திடீர் செயலில் நங்கை கொஞ்சம் அதிர்ச்சியாகி பார்க்க, வார்த்தைகளில் குறும்பு கூத்தாட, கண்களில் காதல் வழிய,

“இப்படி எல்லாம் பண்ணலாவது, ‘இந்த காதலே எனக்கு புரியமாட்டுது’ன்னு சொன்ன என் கண்ணம்மாவுக்கு, அவ மேல நான் வச்சி இருக்கிற காதல் புரியதான்னு தான்”

என்று சொல்ல, முன்பு தான் சொல்லியதையே வைத்து தன்னை கிண்டல் செய்யும் தன்னவனை நங்கை பொய் கோபத்துடன் முறைத்து பார்க்க, பொற்செழியனோ,

“இதுவரைக்கும் உன்னை யாரும் ஈர்த்தது கூட இல்லையா கண்ணம்மா, ஜஸ்ட் பன்க்காக கூட நீ யாரையும் பார்த்தது இல்லையா”

என்று ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்டவனுக்கு ஏனோ ஒரு உறுதி, தன்னவள் நிட்சயம் ‘இல்லை’ என்று தான் சொல்ல போகிறாள் என, ஆனால் நங்கையோ,

“ஹ்ம்ம் இல்லைனு மொத்தமா சொல்லிட முடியாது, ஒரே ஒருத்தர் இருக்கார், அப்போ அப்போ சைட் அடிச்சி இருக்கேன்”

என்று குறும்புடன் சொல்ல, பொற்செழியனின் முகமோ சோபயை இழந்து, கூம்பி தான் போய்விட்டது.

ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்டவனுக்கு, இப்போது நங்கை ‘ஆமாம்’ என்றதும், அதை கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை.

எனவே அவன் அமைதியாக இருக்க, அவனின் கன்னம் தாங்கி, அவனின் கண்களோடு கண் பார்த்த நங்கை,

“அது யாருன்னு நீங்க கேட்கலைன்னா, அது நீங்க தான்னு நான் எப்படி சொல்றது”

என, அதை கேட்டதும் பொற்செழியனின் முகமும், அகமும் பளிச்சென மலர, அதை பார்த்த நங்கைக்கோ சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

அந்த சிரிப்புடனே,

“நான் ஆமா சைட் அடிச்சி இருக்கேன்னு சொன்னதும் முகத்தை பார்க்க முடியல, இதுக்கு எதுக்கு கேட்கணும் ஹான்”

என்று தன்னவனை கிண்டல் செய்ய, முகம் சிவந்த பொற்செழியனோ அசடு வழிய சிரித்து வைத்தான்.

அந்த சிரிப்பில் கவரப்பட்ட நங்கை, அவனின் தாடியை இரு கைகளாலும் பற்றி, வலிக்குமாறு பிடித்து இழுத்தவள்,

“சோ கியூட்”

என்று கொஞ்ச, அவளவளின் பார்வை மாற, பொற்செழியன் நங்கையை நோக்கி குனிய, அவனின் பார்வையில் முகம் சிவக்க தலை குனிந்து நங்கையோ, தன்னை சுதாரித்து கொண்டு அங்கிருந்து எழுந்தவள்,

“போதும் போதும், பார்க்கிற பார்வையை பாரு, வேலை இருக்குனு தானே சொன்னிங்க, அதை பாருங்க, நான் உள்ளே போறேன்”

என்று முற்பாதியை முணுமுணுத்தவள், பிற்பாதியை சத்தமாக சொல்லிவிட்டு, நிற்காமல் அவர்களின் அறைக்கு சென்று விட்டாள்.

செல்லும் அவளை பார்த்த பொற்செழியனோ மனதிற்குள்,

“நான் பாட்டுக்கு சிவனனே தானே வேலை பார்த்து கிட்டு இருந்தேன், இவளா வந்து பக்கத்துல உட்கார்ந்துட்டு, இப்போ உள்ள ஓடிட்டா, இ…வ…ளை…”

என்று கருவி கொண்டவனுக்கு, தன்னவளை தொடர முடியாத அளவுக்கு கையில் இருக்கும் வேலை முக்கியமானதாக இருக்க, முயன்று தன் கவனத்தை வேலையில் குவித்தான்.

உள்ளே சென்று கொஞ்ச நேரம் தன் தலைவனின் நினைவில் உழன்ற நங்கையும், அதரங்களில் உறைந்த புன்னகையுடனே உறங்கி விட்டாள்.

தன்னவன் கூடத்தில் வேலை செய்வதாலோ அல்லது அவன் அருகில் இல்லாததாலோ என்னவோ நங்கையின் உறக்கம் சில மணி நேரத்தில் கலைந்து விட்டது.

எழுந்தவள் மணியை பார்க்க, அதுவோ நடு சாமத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஒருவேளை கூடத்திலே உறங்கி விட்டாரோ என்ற எண்ணத்தில் எழுந்து வெளியே சென்றாள்.

ஆனால் பொற்செழியனோ நேரத்தை கவனிக்காமல், மடிக்கணினியோடு தான் மல்லு கட்டி கொண்டிருந்தான்.

அரை தூக்கத்தில், கூடத்தில் எரிந்த விளக்கின் ஒளி கண்ணை கூச, கண்களை கசக்கி கொண்டே வந்த நங்கை,

“இன்னும் உங்க வேலை முடியலையா, மணி என்னனு பார்த்திங்களா, மீதி வேலையை நாளைக்கு பார்த்தா என்ன”

என்று கேட்க, மடிக்கணினியில் இருந்து கண்ணை நிமிர்த்தாத பொற்செழியன்,

“இல்லடா இன்னும் முடியலை, இன்னைக்கு முடிச்சே ஆகணும், நீ போய் தூங்கு கண்ணம்மா, தூக்கம் கலஞ்சிட போகுது, போ போ”

என்று சொல்ல, ஒரு நிமிடம் அவனை பார்த்த நங்கையோ நேராக சமையலறைக்கு சென்றாள்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து காய்ச்சியவள், அதனோடு பிஸ்கட்களையும் எடுத்து கொண்டு வந்தாள்.

தன் அருகில் யாரோ அமர்வது போல இருக்க, பொற்செழியன் கண்களையும், கவனத்தையும் மடிக்கணினியில் இருந்து திருப்ப, நங்கையோ,

“சாப்பிட்டது எல்லாம் இன்னேரம் கரைஞ்சி காணாம போய் இருக்கும், இந்தாங்க இதை சாப்பிட்டு அப்புறம் வேலையை பாருங்க”

என்று சொல்ல, அவளின் அக்கறையில் நெகிழ்ந்து போன பொற்செழியன், அதன் அடையாளமாக, அவளின் நெற்றியில் மென்மையாக அச்சாரம் ஒன்றை இட்டான்.

அவனுக்கு புன்னகையை பதிலாக தந்த நங்கை, தான் கொண்டு வந்தவற்றை, கண்களால் சுட்டி காட்ட, அவனும் நல்ல பிள்ளையாக சில பிஸ்கட்களை உண்டு, பாலையும் அருந்தி முடித்தான்.

உண்டு முடித்தவன் திரும்பி நங்கையை பார்க்க, அவளோ நாள் முழுக்க செய்த வேலையின் அசதியில், பொற்செழியனின் மடியில் தலை வைத்து நன்றாக உறங்கி இருந்தாள்.

நங்கையை ஆதுரத்துடன் பார்த்த பொற்செழியன், அவளின் தலையை மெதுவாக கோதியவன், தன் மடியில் அவளின் தலையை வாகாக வைத்தவன், மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு வழியாக பொற்செழியன் வேலை முடித்து, நேரத்தை பார்க்க, அதுவோ இரண்டை நெருங்கி கொண்டிருந்தது.

இத்தனை மணி நேரம் உழைப்புக்கு பயனாக, நிறைய ஆதாரங்கள் சிக்கி இருக்க, அவற்றை எல்லாம் தனியா எடுத்து, பத்திரப்படுத்தி வைத்தான்.

தங்கள் அறைக்கு செல்லலாம் என நங்கையை எழுப்ப, அவளோ ‘மம்ம்ம்ம்ம்’ என்றாலே தவிர எழுந்த வழியை காணோம்.

நங்கையை தன் கைகளில் ஏந்தி கொண்டு பொற்செழியன் எழுந்து நிற்க, சரியாக வெளியே வந்தான் நன்மாறன்.

தண்ணீர் குடிக்க வெளியே வந்தவன், நங்கையை பொற்செழியன் கைகளில் ஏந்தி இருக்க, என்னவோ ஏதோ என்று பதறி,

“என்ன, என்ன ஆச்சு மாமா”

என பொற்செழியனோ,

“ஷ், ஷ், ஒன்னும் இல்ல, இரு வரேன்”

என்றவன் உள்ளே சென்று அவளை படுக்க வைத்து விட்டு, கதவை சாற்றி வெளியே வர, இன்னமும் பதற்றத்தில் இருந்த நன்மாறன்,

“என்ன ஆச்சி மாமா அக்காக்கு”

என, அவனின் தோளில் கை வைத்து, அவனை அமைதிப்படுத்த முயன்றவாறே பொற்செழியன்,

“பதட்ட படுற அளவுக்கு ஒன்னும் இல்ல மாறா, உன் அக்கா இங்க ஹால்லையே தூங்கிட்டா, எழுப்பி பார்த்தேன், எழுந்திருக்கல, அதான் தூக்கி கிட்டு போனேன்”

என்று சொல்ல, நன்மாறனோ அவனின் பதிலில் திகைத்து நிற்க, அதை கவனிக்காத பொற்செழியன்,

“ஆமா நீ எதுக்கு வந்த”

என்று கேட்க, நன்மாறனோ,

“தாகமா இருந்தது அதான் தண்ணீர் குடிக்க வந்தேன் மாமா”

என்று சொல்லியன் சமையலறைக்கு சென்று தண்ணீர் குடித்து வர, அதுவரை கூடத்திலே தான் நின்றிருந்தான் பொற்செழியன்.

நன்மாறன் அவனின் அறைக்கு சென்றதும், கூடத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு, தானும் உறங்க சென்றான் பொற்செழியன்.

ஆனால் தன் அறைக்கு சென்ற நன்மாறனோ, தூக்கத்தை மொத்தமாக தொலைத்து விட்டு, விட்டத்தை பார்த்து கொண்டு படுத்திருந்தான்.

இந்த ஐந்து வருடத்தில் இந்த மாதிரி நன்மாறன் இரவில் எழும் போது எல்லாம், அடுத்த நிமிடம் நங்கையும் எழுந்து விடுவாள்.

தமக்கையை எழுப்பி விட கூடாது என்ற எண்ணத்தில் நன்மாறன் படுக்கைக்கு அருகில் நீர் எடுத்து சென்று வைத்தாலும், அதை பருக எழுந்திருக்க வேண்டுமே…..

நன்மாறனின் சிறிய அசைவிலும், நங்கை விழித்து கொள்வாள். அவள் உறங்குகிறாளா, இல்லையா என்பதே நன்மாறனுக்கு சந்தேகமாக இருக்கும்.

ஆனால் இன்று அதே தமக்கை, பொற்செழியன் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவனின் கைகளில் இருப்பதையும், உணர்ந்ததாக தெரியவில்லை.

திடிரென இரவில் கதவை தட்டிய மனித மிருங்களும், அழுது கரைந்த நங்கையும், நன்மாறன் கண் முன் வந்தார்கள்.

வீடு மாறியதும், இந்த சூழல் பாதுகாப்பானது என்று தான் மனம் தெளிந்து விட, தன் தமக்கையோ அந்த மிருங்கள் முன் செய்த செயலின் பயனாய், ஓரு விதமான பாதுகாப்பின்மையில் உழன்று இருக்கிறாள்.

இது புரிந்ததும், கண்களின் ஓரம் கசிந்தது நன்மாறனுக்கு. பத்து வருட இடைவெளியா, அல்லது ஆண் என்பதாலோ நங்கையின் உணர்வுகளை உணர தவறி இருந்தான் நன்மாறன்.

இன்று அப்படி ஆழ்ந்த, நிம்மதியான உறக்கம் கொள்ளும் நங்கையை பார்க்கும் போது, அதற்கு காரணமான பொற்செழியனை நிரம்ப, நிரம்ப பிடித்தது நன்மாறனுக்கு.

மனதோடு மாமனுக்கு நன்றி ஒன்றை தெரிவித்த நன்மாறன், மனதளவில் பொற்செழியனிடம் மிகவும் நெருங்கி இருந்தான்.

அதற்கு அடுத்த நாட்கள், தான் சேகரித்த தகவல்களின் நம்பக தன்மையை ஆராய்வதிலும், அதை ஒழுங்கு படுத்திவதிலுமே சென்றது பொற்செழியனுக்கு.

மருந்து தொழிற்சாலையின் பிரச்சனை அதன் கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்க, பொற்செழியனுக்கு ஒரு பக்கம் நிம்மதியாகவும், மறுபக்கம் நங்கையை நினைத்து கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

வெளியே எங்காவது சென்று வந்தால் என்ன என்று தோன்ற, நங்கை, நன்மாறன் இருவரையும் கிளம்ப சொன்னவன், முன்னவே கிளம்பி வெளியே வந்தான்.

பக்கத்து வீட்டில் தேவி பாட்டி வெளியே நிற்க, திருமணதிற்கு பிறகு அவரோடு பேசவே நேரம் இல்லாமல் போக, அவரோடு பேச நினைத்து, அவரின் வீட்டுக்கு சென்றான்.

பொற்செழியனை பார்த்த தேவி பாட்டியோ,

“வாப்பா புது மாப்பிள்ளை, எப்படி இருக்க, என்ன இந்த பக்கம், இப்போ தான் உனக்கு இந்த கிழவி கண்ணுக்கு தெரியராளா”

என்று வழக்கம் வக்கனையாக ஆரம்பிக்க, இத்தனை நாட்கள் கழித்து, அவரின் பேச்சை கேட்ட மகிழ்வில்,

“எனக்கு என்ன ஆயா, நான் சூப்பர் அஹ இருக்கேன், நங்கை என்ன நல்லா பார்த்துகிறா”

என்று பதில் சொல்ல, தேவி பாட்டியோ,

“நல்லா இருக்கே கதை, நீ என் பேத்தியை பார்த்துப்பனு கல்யாணம் பண்ணி வச்சா, அவ தான் உன்னை பார்த்துகிறாளா”

என்று பொற்செழியனின் காதை பிடித்து திருகிய அவருக்கு நன்கு தெரியும், பொற்செழியன் நங்கையை பார்த்து கொள்ளும் விதம்.

பொற்செழியன் துணி துவைத்து உலர வைத்த அன்று, தேவி காலனி முழுவதும், சூடான செய்தி அவன் தானே.

நங்கை மறுத்தும் அவன் கேட்கவில்லை என்பதையும், தினமும் அந்த வேலையை அவன் செய்வதையும் தேவி பாட்டியும் அறிந்து தான் இருந்தார்.

இருந்தாலும் அவனிடம் வம்பு வளர்க்கும் விதமாக பேசி வைக்க, பொற்செழியனோ அவரை மேலும் கீழும் ஆராய்ச்சி பார்வை பார்த்து,

“என்ன கிழவி, இத்தனை நாள்ல உன்னோட அழகு கூடி தெரியுதே, அதன் இரகசியம் என்னவோ”

என்று கண்ணடிக்க, வெட்கப்பட்ட தேவி பாட்டி,

“போடா போக்கெத்தவனே, இதை எல்லாம் பொண்டாட்டி கிட்ட சொல்லாம, என் கிட்ட வந்து சொல்லி கிட்டு இருக்கான்”

என்று சொல்ல, புன்னகையுடன் பொற்செழியன் அவரை பார்க்க , தேவி பாட்டியோ ஏதோ நியாபகம் வந்தவராக,

“ஏன்டா நங்கை பிள்ளையை எங்கேயாவது வெளிய கூட்டிகிட்டு போய்ட்டு வர வேண்டியது தானே, நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போன மாதிரி தெரியலையே”

என்று பெரியவராக கண்டிக்க, பொற்செழியனோ சிரிப்புடன்,

“இப்போ வெளிய தான் கிளப்பி கிட்டு இருக்கோம் ஆயா”

என்று சொல்ல, அதே நேரம் நங்கை அவனை காணாமல் கைபேசியில் அழைக்க, அவசரமாக பாட்டியிடம்,

“நங்கை போன் பண்ணிட்டா, நான் வரேன் ஆயா”

என்று சொல்லி செல்ல, அதற்குள் நங்கையும், நன்மாறனும் வீட்டிற்கு வெளியே வந்து இருந்தனர்.

வேகமாக வீட்டின் உள்ளே சென்ற பொற்செழியன், தேவையானவற்றை எல்லாம் எடுத்துபிறகு, வீட்டை பூட்டி கொண்டு வர, மூவரும் வாசலை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.

இன்னும் வீட்டின் வாசலில் நின்ற தேவி பாட்டி, பொற்செழியன், நங்கையோடு நன்மாறனும் செல்வதை பார்த்தவர்,

“பொண்டாட்டியை கூட்டிகிட்டு போடான்னு சொன்னா, மச்சினனையும் துணைக்கு கூட்டிகிட்டு போறான், நல்ல பிள்ளை இவன் “

என்று செல்லமாக கடிந்து கொண்டவர் நிமிர, அக்கம் பக்கத்து வீட்டிலும் சில தலைகள் தெரிந்தது.

“முதல்ல அவங்க வந்ததும் சுத்தி போடணும், என் பிள்ளைகள் எப்போதும் இப்படியே ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும் ஆண்டவா”

என்று கடவுளை வேண்டி கொண்டவர், அவர்கள் கண்களில் இருந்து மறையும் வரை நின்று கண்களில் நிரப்பி கொண்ட, பின்பே உள்ளே சென்றார்.

வெளியே செல்லலாம் என்று அழைத்து சென்ற பொற்செழியனோ, சற்று தொலைவில் இருந்த புகழ்பெற்ற பெரிய விற்பனை அங்காடியில் இருந்த திரையரங்குக்கு தான் அழைத்து வந்தான்.

ஏற்கனவே படத்திற்கான டிக்கெட்களை இணையத்தில் வாங்கி இருக்க, கொஞ்ச நேரம் அங்காடியை சுற்றி பார்த்தவர்கள், பின்பு படம் பார்க்க சென்றனர்.

டிக்கெட் விலையும், பாப்கார்ன் விலையும் ஒன்றாக இருக்க, நங்கை வாயை பிளக்க, பொற்செழியனோ இதையும் அதையும் சொல்லி அவளை சமாளித்து வைத்தான்.

படம் முடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம் என நங்கை சொல்ல, பொற்செழியனோ உணவை முடித்து விட்டு செல்லலாம் என அருகில் இருந்த கொஞ்சம் பெரிய உணவகத்திற்கு அழைத்து வந்தான்.

நன்மாறனுக்கு இது எல்லாம் புது அனுபவமாக இருக்க, அவன் வேடிக்கை பார்த்து கொண்டே செல்ல, நங்கை சற்று கோவத்துடன் சென்றாள்.

அவர்களின் பின்னே சற்று இடைவளி விட்டு வந்த பொற்செழியனோ, பின்னால் இருமுறை திரும்பி பார்த்தவனின் முகம், ஏனோ தீவிரத்தை தத்துதெடுத்திருந்தது.

அவர்கள் இருவரிடமும் என்ன வேண்டுமோ ஆர்டர் கொடுக்க சொன்ன பொற்செழியன், உணவகத்தில் இருந்த கழிவறைக்கு சென்று, விஜய்க்கு அழைத்து பேசினான்.

பின்பு முகத்தை சீராக்கி கொண்டு வந்தவன், தன்னை இயல்பாக காட்டி கொண்டு, நன்மாறனோட உணவை பற்றியும், படத்தை பற்றியும் பேசிய படியே உண்டான்.

இருவருக்கும் வேண்டியதை கவனித்து கொண்டவன், நடு, நடுவில் ஓர கண்ணால், உணவகத்தின் வெளியேயும் பார்த்து கொண்டான்.

உணவு உண்டு முடித்ததும், அதற்கான தொகையை செலுத்திய பொற்செழியன், இணையத்தில் வாடகை கார் ஒன்றையும் பதிவு, செய்தான்.

அந்த கார் உணவகத்தின் வெளியே வந்ததும், பொற்செழியன் பர்ஸில் இருந்து சில ஐநூறுகளை எடுத்து, நன்மாறனிடம் கொடுத்து,

“மாறா வெளியே கார் நிக்குது, கார் நம்பர் நங்கை மொபைலுக்கு அனுப்பி இருக்கேன்”

என்று சொல்ல, ஏற்கனவே இன்றைக்கு நிறைய செலவு செய்து இருக்க, எதற்கு வாடகைக்கு கார் என்ற எண்ணத்தில் நங்கை,

“ஏங்க இப்போ எதுக்கு டாக்ஸி எல்லாம், நாம பஸ்லயே வீட்டுக்கு போகலாம்”

என்று சொல்ல, பொற்செழியனோ குரலில் கண்டிப்பை காட்டி,

“சொன்னா கேட்கணும் நங்கை, வெளியே கார் நிக்குது கிளம்புங்க”

என்று சொல்ல அவனின் குரலில் நங்கை அரண்டு நிற்க, அவனோ நன்மாறனிடம்,

“மாறா மேப் ஆன் பண்ணி வீட்டு அட்ரஸ் போட்டு வைச்சிக்கோ, கார் சரியான ரூட்ல தான் போகுதான்னு பாரு, ஏதாவது தப்பா இருக்குனு தோணுச்சின்னா, எனக்கு உடனே கால் பண்ணனும் புரியுதா”

என்று அறிவுரை சொல்ல, அப்போது தான் அவன் தங்களுடன் வரவில்லை என்பது புரிய நங்கை,

“அப்போ, நீ… நீ…ங்…க வரலையா”

என, அவளின் முகத்தை பார்த்த பொற்செழியன், அப்போது தான் தன் தவறை உணர்ந்தவனாக, தன் வழக்கமான குரலில்,

“எனக்கு ஒரு சின்ன வேலை இருக்குடா, நான் அதை முடிச்சிட்டு வரேன், நீயும் மாறனும் கிளம்புங்க”

என, ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய, அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றால் நங்கை.

அவர்கள் காரில் ஏறி செல்லும் வரை பார்த்து கொண்டிருந்த பொற்செழியன், அவர்களை யாரும் பின் தொடரவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டான்.

இப்போது தான் மனது கொஞ்சம் சமன்பட, அவர்கள் முன்பு அமர்ந்து இருந்த அதே மேசைக்கு சென்று, விஜய்க்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

காந்தன் வருவான்………….

Advertisement