Advertisement

கைப்பேசியையும், தன்னையும் மாறி மாறி பார்த்த நன்மாறனை பார்த்து புன்னகை புரிந்த பொற்செழியன், அவனை நெருங்கி,

“என்ன மாறா”

என்று கேட்க, நன்மாறனோ என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தெரியாமல், விழித்து கொண்டிருந்தான்.

பொற்செழியன் யார் என்ற விவரம் அவனுக்கு அதிர்ச்சி தான் என்ற போதும், அவன் கடந்து வந்த நாட்கள், நன்மாறனுக்கு வயதுக்கு மீறிய தெளிவையும், நிதானத்தையும் கொடுத்து இருந்தது.

நிலமையை வெகு கவனமாக கையாள வேண்டிய அவசியத்தை, அவன் நன்கு உணர்ந்து இருந்தான்.
அவசரப்பட்டு கேள்வி கேட்கவோ, வார்த்தையை விடவோ, அவன் தயாராக இல்லை.

அதை எல்லாம் விட, பெரியவர்கள் ஒன்றும் விசாரிக்காமல், திருமணத்தை முடிவு செய்து இருக்க மாட்டார்கள் என்பதும் புரிந்தது அவனுக்கு.

ஆக தனக்கு தெரியாத விஷயம் இதில் ஏதோ இருக்கிறது என்பது உறுதியாக, உண்மை நிலவரம் என்ன என்று, முழுதாக தெரியாத போது, என்னவென்று பொற்செழியனிடம் கேட்பது.

அப்படி கேட்பதால் மட்டும், இவர்களின் உறவு முறை ஒன்றும் மாறப்போவது இல்லையே. அவன் பாசதிற்குரிய தமைக்கையின் வாழ்வு, இன்று பொற்செழியனோடு அல்லவா பிணைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே தன்னை நிதானப்படுத்தி கொண்டு, பொற்செழியனை பார்த்து புன்னகை புரிந்த நன்மாறன்,

“ஒன்னும் இல்ல மாமா, வாங்க கீழ போகலாம்”

என்று கொஞ்சம் தயங்கினாலும், மாமா என்றே அழைத்து, அதை தன் மனதிலும் பதியவைத்து கொண்டவன், பொற்செழியனை அழைத்து கொண்டு, கீழே இறங்கி வந்தான்.

கீழே வந்த பொற்செழியனை, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து நங்கையின் சித்தப்பா வரவேற்க முயல, அவரை தடுத்தவன், அவருக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில், தானும் அமர்ந்து கொண்டான் பொற்செழியன்.

அவரும் பொற்செழியனோடு, பொதுவான விஷயங்களை பற்றி உரையாட ஆரம்பிக்க, உள்ளே செல்ல முயன்ற நன்மாறனையும், தன் அருகிலே அமர வைத்து கொண்டான் அவன்.

சமையலறையில் தேவி பாட்டியும், கற்பகம் சித்தியும் மணமக்களுக்கு விருந்து செய்து கொண்டிருக்க, திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சிலரும் வீட்டில் இருந்தனர்.

நங்கையின் சித்தப்பாவோடு பேசி கொண்டிருந்தாலும், பொற்செழியனின் கண்களை நங்கையை தேடி கொண்டிருந்தது.

ஒரு சாதாரண இளம் மஞ்சள் நிற புடவையில் , கழுத்தில் பொற்செழியன் அணிவித்த புது தாலி அவளை பேரழகியாக காட்ட, ஒரு புன்னகையுடன் அறையில் இருந்து வெளி வந்தாள் நங்கை.

அவளை பார்த்ததும், பொற்செழியனின் கண்கள் சிந்திய காதலையும், அதரங்களில் உறைந்த புன்னகையும் பார்த்த, நங்கையின் சித்தப்பா தனக்குள் சிரித்து கொள்ள, நன்மாறனோ அதை கவனித்தாகவே காட்டிக்கொள்ள வில்லை.

விருந்து, உறவினர்களுடன் உரையாடல் அப்படி, இப்படி என்று நேரம் ஓட, நன்மாறனுக்கு அவனின் சித்தியிடம், தனிமையில் பேசவே நேரம் கிடைக்க வில்லை.

இரவு சடங்குக்கு பொற்செழியன் அறையில், தேவி பாட்டியும், கற்பகம் சித்தியும் எல்லாவற்றையும் தயார் செய்தார்கள்.

பொற்செழியனையும், நங்கையும் குளித்து புது உடை அணிந்து வர சொல்லி, இரவு உணவு கொடுத்து, நல்ல நேரத்தில் அவர்களுக்கான தனிமையையும் கொடுத்தனர்.

கற்பகம் சித்தி, நங்கையின் தாயாக அவளுக்கு அறிவுரை கூறி, பொற்செழியனின் அறையில் விட்டு வரும் போது, அவர் கண்களில் ஒரு துளி கண்ணீர்.

நங்கையின் வயதில் இருக்கும் பெண்கள் எல்லாம், குழந்தை குடும்பம் என்று இருக்கும் போது, நங்கை இருந்த இருப்பை நினைத்து எத்தனை நாள் வருந்தியிருப்பார் அவர்.

நங்கையையும், நன்மாறனையும் இப்படி தனியாக விட்டு சென்ற, தன் அக்காவையும், மாமாவையும் நினைத்து எத்தனை முறை தனிமையில் அழுதிருப்பார்.

இன்று அவர் ஆசைப்பட்ட படி, அவளை விரும்பிய துணை நங்கைக்கு கிடைத்து இருக்க, அவருக்கு அவ்வளவு நிம்மதி.

தன் ஆனந்த கண்ணீரை புடவை தலைப்பில் துடைத்தபடி, அவர் மாடியில் இருந்து கீழே இறங்க, நன்மாறன் அவருக்காக காத்திருந்தான்.

தங்கி இருந்த ஒன்றிரண்டு சொந்தங்களும் கிளப்பி இருக்க, வீட்டில் வீட்டு ஆட்கள் மட்டுமே இருந்தனர்.

அதுவும் சித்தப்பா, அவர்களின் பிள்ளைகள் என எல்லாரும் உறங்கி இருக்க, வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த, நன்மாறனை பார்த்த கற்பகம் சித்தி,

“என்னடா இங்க நிக்கிற, தூங்கலையா நீ, ஏதாவது வேணுமா”

என்று கேட்க, அவரை ஆழ்ந்து பார்த்த நன்மாறன்,

“மாமா யாருன்னு உங்களுக்கு தெரியுமா சித்தி”

என்று கேட்க, இவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சர்யப்பட்டாலும், அவனின் விளிப்பையும் குறித்து கொண்டவர்,

“நங்கையை பொண்ணு கேட்கும் போதே, மாப்பிள்ளை எல்லாம் சொல்லி தான் கேட்டார் “

என்று உண்மையை சொல்ல, நன்மாறனோ,

“அக்காக்கு தெரியுமா”

என்று அடுத்த கேள்வியை கேட்க, சிறிது குற்ற உணர்ச்சியுடன் அவனை பார்த்த கற்பகம் சித்தி,

“இல்லை”

என்று தலையாட்ட நன்மாறன் ஏதோ சொல்ல வர, அவனை முந்தி கொண்ட கற்பகம் சித்தி,

“பஸ்ட் அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு வந்து, தேவிமா வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லும் போது, நங்கைக்கு தெரியும்னு தான் நினைச்சேன்டா”

என்றவர், நன்மாறன் அவரையே பார்க்கவும், சின்ன குரலில் தொடர்ந்து,

“அப்புறம் தான் தேவிமா சொன்னாங்க, நங்கைக்கு உண்மையை சொல்லலனு”

என்று சொல்ல, அவரை கோவ பார்வை பார்த்த நன்மாறன்,

“என்ன சித்தி இப்படி பண்ணி வச்சி இருக்கீங்க, இதை என்ன காலத்துக்கும் அக்கா கிட்ட இருந்து மறைக்கவா முடியும், நாளைக்கு அக்காக்கு விஷயம் தெரிஞ்சா”

என்று முடிக்காமல் இழுக்க, நன்மாறனின், அக்காவின் வாழ்க்கை பற்றிய பயத்தை புரிந்து கொண்ட சித்தி, அவனின் தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்து,

“நங்கை புத்திசாலி பொண்ணுடா, முட்டாள் தனமா எதுவும் பண்ண மாட்டா”

என்று அவனுக்கு உறுதி அளித்தவர் தொடர்ந்து,

“பணம், பதவி, அந்தஸ்து இதுல எல்லாத்துலையும் அவர் நம்மை விட அதிகம் தான், நான் இல்லைனு சொல்லல, ஆனா மாப்பிள்ளை நங்கையை உண்மையா நேசிக்கிறார்டா, அதனால அவரு நங்கையை நல்லா பார்த்துப்பார்டா”

என்று சொல்ல, நன்மாறன் இன்னமும் அமைதியாகவே இருக்க, தொடர்ந்த அவனின் சித்தியோ மிரட்டும் குரலில்,

“மாப்பிள்ளையா நங்கை கிட்ட சொல்லும் போது சொல்லட்டும், இல்லனா அவளுக்கா தெரிய வரும் போது தெரியட்டும், புரியுதா”

என்று கேட்க, மறைமுகமாக தனக்கு தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளவோ, அல்லது அக்காவிடம் இதை பற்றி பேசவோ கூடாது என்று அவர் சொல்ல வருவது நன்கு புரிய, நன்மாறன்,

“ஹ்ம்ம் சரி”

என்று அரைமனதாகவே தலையாட்டினான். இன்னும் ஏதோ யோசனையில் இருந்த, அவனையும் கையோடு அழைத்து கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்று விட்டார் கற்பகம் சித்தி.

பொற்செழியனோ, தன் முன் அமர்ந்திருக்கும் நங்கையையே, கண்களில் காதல் வழிய, தன் பார்வையால் வருடி கொண்டிருந்தான்.

அவனின் அமைதியும், பார்வையும் நங்கைக்கு என்னவோ போல இருக்க, எதையாவது பேசினால் என்ன என்று யோசித்தவளுக்கு, அவனிடம் தான் கேட்க நினைத்த கேள்வி ஒன்று நினைவுக்கு வர,

“உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமே”

என்று மெதுவாக இழுக்க, தன் பார்வையை இம்மியளவும் மாற்றாத பொற்செழியனின் அதரங்கள் மட்டும்,

“ஹ்ம்ம் கேளு நங்கை”

என்று பதில் தர, அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த நங்கை,

“எவன்ஜெலின் அப்படின்னா என்ன அர்த்தம், என்னோட நம்பர் அஹ ஏன் அப்படி சேவ் பண்ணி இருக்கீங்க”

என்று கேட்க, அந்த பெயர் பொற்செழியனுக்குள் தித்திப்பாய் இறங்க, அவனின் இத்தனை வருட காதலையும் நினைவு கூற, அப்போது தான் அது நங்கைக்கு எப்படி தெரியும் என்ற எண்ணமும் உதிக்க,

“உனக்கு எப்படி தெரியும்”

என்று நங்கையிடம் கேட்டான் பொற்செழியன். இதழோரம் சிறு புன்னகை மலர நங்கையோ,

“அன்னைக்கு கடைக்கு போய் இருக்கும் போது, மாறனை கூப்பிட அவன் கிட்ட இருந்த என்னோட போன்கு தானே கால் பண்ணிங்க, அப்போ பார்த்தேன்”

என்று சொல்ல, நங்கையின் கைகளை, தன் இரு கைகளில் புதைத்து கொண்டவன், சம்பந்தமே இல்லாமல்,

“நீ ‘தி பிரின்ஸஸ் அண்ட் ப்பிராக்’ (The Princess and frog) படம் பார்த்து இருக்கியா”

என்று கேட்க, தான் ஒரு கேள்வி கேட்டால், இவர் என்ன வேறு ஒரு கேள்வி கேட்கிறாரே என்று நினைத்த நங்கை, அவனின் கேள்விக்கு பதிலாக ‘இல்லை’ எனும் விதமாக இட வலமாக தலையசைத்தாள்.

நங்கை தலையை அசைக்கும் போது, ஊஞ்சலாடிய அவளின் சிறிய தொங்கட்டானோட, பொற்செழியனின் மனமும் சேர்ந்து ஊசலாட, அவளை காதலோடு பார்த்தவன்,

“அந்த படத்துல ஒரு மின்மினி பூச்சி, ஒரு ஸ்டார் அஹ பார்த்து, அதுவும் தூரத்துல இருக்கிற மின்மினி பூச்சினு நினைச்சி, ரொம்ப சின்சியரா, டீப் அஹ லவ் பண்ணும்”

என்று சொல்ல, நங்கை கதையை ஆர்வமாக கேட்டு கொண்டிருக்க, பின்பக்கமாக அவளை அணைத்து, தன் கைவளைவில் நங்கையை வைத்திருந்த பொற்செழியன்,

“அந்த ஸ்டார் அஹ, அந்த மின்மினி பூச்சி ‘எவன்ஜெலின்’ அப்படின்னு தான் கூப்பிடும்”

என்று அவளின் காதோரம் சொல்ல, அவனின் அருகாமையை உணராத நங்கையோ, கதையில் மூழ்கி விட்டாள்.

ஒரு மின்மினி பூச்சி, ஒரு நட்சத்திரம் மேல் காதல் கொண்டதாக பொற்செழியன் சொல்ல, சேரவே முடியாத அந்த காதல், முடிவில் என்ன தான் ஆனது என்று அறியும் ஆர்வம் அவளுக்கு.

அதனால் நங்கை, பொற்செழியனிடம்,

“அப்புறம் என்ன ஆச்சு”

என்று கேட்க, நங்கை இன்னமும் தன் அணைப்பை உணராமல் இருக்க, அவளின் தோளில், வாகாக தாடையை பதித்த பொற்செழியன்,

“கடைசில அந்த மின்மினி பூச்சி செத்து போயிடும்”

என்று சொல்ல, நங்கையோ அந்த மின்மினிக்காக வருத்தப்பட்டவளாக,

“ஐயையோ”

என்று மெதுவாக சொல்ல, அவளின் தோள் மேல் இருந்த தன் தலையால், அவளின் தலையை மெதுவாக முட்டியவன்,

“இறந்ததும், அந்த மின்மினி பூச்சியும், அதோட எவன்செலின் பக்கத்துல, இன்னொரு குட்டி ஸ்டார் அஹ ஆகிடும்”

என்று சொல்லி நிறுத்த, நங்கையோ யோசனையுடன் தன் மணவாளளின் முகத்தை திரும்பி பார்த்து,

“என்னோட நேம் ஏன் அப்படி சேவ் பண்ணிங்க, நான் ஒன்னும் நீங்க நெருங்க முடியாத உயரத்தில் இல்லையே, உங்க கைக்குள்ள தானே…”

இருக்கேன் என்று சொல்ல வந்தவள், பின்பு தான் மன்னவனின் அணைப்பில் தான் இருப்பதை உணர்ந்து, வெட்கம் கொண்டு விலக முற்பட்டாள்.

அவளை தடுத்த பொற்செழியனோ, கணவனாக நங்கையின் மனதில், தன் முதல் அடியை எடுத்து வைத்தான்.

அவர்களின் இல்லறம், நல்லறமாக, முடியா இரவும் முடிந்து பொழுதும் புலர்ந்தது, நங்கையின் வாழ்க்கையை போலவே.

நங்கையின் சித்தி, இரவே அவளுக்கு தேவையான உடைகளை, இங்கு வைத்துவிட்டு சென்று இருக்க, நங்கை குளித்து உடை மாற்றி வந்தாள்.

பொற்செழியனோ இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அப்போதும் மலர்ந்து விகசித்த இருந்த தலைவனின் முகம், தலைவியை வசீகரிக்க, தன்னை மறந்து ரசித்து கொண்டு நின்றால் நங்கை.

பின்பு தான் நேரம் ஆவது புரிய, கீழே செல்ல வேண்டும் என்பதால், நங்கை சென்று கணவனை எழுப்ப, குழந்தையை போல அழகாக, துயில் கலைந்து, கண் விழித்தான் பொற்செழியன்.

அடர் நீல நிற புடவையில், தலையில் கட்டிய துவாலையுடன் நின்ற நங்கையை பார்த்த, பொற்செழியன், வெகு இயல்பாக, அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,

“குட் மார்னிங் கண்ணம்மா”

என்று சொல்ல, நங்கை உறைந்து நிற்கும் போதே, குளியலறை நோக்கி சென்றவன், அதே வேகத்தில் திரும்பியும் வந்தவன்.

கணவனின் காலை வணக்கத்தில், அதன் இனிப்பில் திளைத்து சிவந்து நின்றிருந்த நங்கை, அவன் திரும்பி வரவும், என்னவோ ஏதோவென்று பதறி அவனை திரும்பி பார்த்தாள்.

ஆனால், அவனோ வெகு தீவிரமாக, அங்கு அறையில் எதையோ தேட ஆரம்பித்தான். தேடியது கிடைத்ததும், அதை கொணர்ந்து நங்கையின் கைகளில் கொடுக்கவும் செய்தான்.

கொடுத்தவன் கண்களால் அதை பிரித்து பார்க்க சொல்ல, கணவனின் செயல்களை வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்த நங்கை, ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

இருந்தும் கணவன் சொல்லியபடி, அவன் கொடுத்ததை பிரித்து, உள்ளே இருந்த பொருளை பார்த்தவள், பொற்செழியனை கேள்வியுடன் பார்க்க, பொற்செழியனோ,

“உனக்கு தான் கண்ணம்மா”

என்று சொல்ல, அந்த ‘கண்ணம்மா’ என்ற விளிப்பில் உள்ளம் கரைய, புன்னகையுடன்,

“ஹேர் ட்ரயர் எல்லாம் எதுக்கு, துவிட்டிட்டு கொஞ்ச நேரம் முடியை விரிச்சி போட்டா, முடி காய போகுது”

என்று சாதாரணமாக சொல்ல, அவளின் தலையை மென்மையாக வருடி விட்டவன்,

“இப்படி தான் சொல்லுவ, ஆனா உனக்கு எப்பவும் தலையை காய வைக்க நேரமே இருக்காது, ஈரம் சொட்ட சொட்ட தானே பின்னி போட்டுக்கிட்டு போவ, அதுக்கு தான் இது”

என்றவ சொல்ல, நங்கையோ மனதிற்குள்,

“சரியா தான் சொல்றாரு, ஆனா இவருக்கு எப்படி தெரியும், அப்போ அந்த அளவுக்கு என்ன கவனிச்சு பார்த்து இருக்காறா”

என்று யோசிக்க, அதற்குள் பொற்செழியனோ, அவள் தலையை அலங்கரித்து இருந்த துவாலையை அவிழ்த்து, அதை அவளின் கைகளிலே கொடுத்தவன்,

“ரொம்ப நேரம் தலையில் ஈர துண்டோட இருக்காத கண்ணம்மா, சளி பிடிக்கும், முதல்ல தலையை உலர்த்து”

என்று சொல்லி, குளியறைக்குள்ளே சென்று மறைய, செல்லும் அவனையே விழி விரித்து, பார்த்து கொண்டிருந்தால் நங்கை.

பொற்செழியன் கடைசியாக சொன்ன வார்த்ததையை, முன்பு இதே வாஞ்சையுடன், அவளின் அப்பா உரைத்ததாக நினைவு அவளுக்கு.

பொற்செழியனோ இத்தனை வருடம் ஆணையிட்டு வைத்திருந்த காதலை, மடை திறந்த வெள்ளம் என, தன் சின்ன சின்ன செயல்களில் கூட, தன்னவளிடம் கொட்டி கவிழித்து கொண்டு இருந்தான்.

அவனின் கண்ணம்மாவோ, அவனின் இந்த அக்கறையில், அவனின் விளிப்பில், அவனின் அரவணைப்பில் என்று சுகமாக கரைய ஆரம்பித்து இருந்தாள்.

காந்தன் வருவான்….…..

Advertisement