Advertisement

மருந்து தொழிற்சாலை தொடர் கண்காணிப்பில் இருக்க, இந்த போதை மருந்து விற்பனையில் மந்திரிக்கு, நேரடி தொடர்பு இருப்பதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என்று தீவிரமாக, தேடி கொண்டு இருந்தனர் நால்வரும்.

ஒரு பக்கம் இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதோடு சேர்த்து செழியன் திருமண வேலைகளையும் பார்த்து கொண்டிருந்தான்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நெருங்கிய நங்கையின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைப்பதென்று செழியனும், நங்கையும் முடிவு செய்திருந்தனர்.

சரியாக தொழிற்சாலை சம்பந்தமான பேச்சு வார்த்தை முடிந்து, கல்யாணம் சம்பந்தமாக பேச ஆரம்பிக்கும் போது வந்து சேர்ந்தான் விஜய்.

வெற்றிக்கும், தமிழுக்கும் தான் தன்னுடைய திருமணத்திற்கு எடுத்திருந்த உடைகளை செழியன் கொடுக்க, அவர்களும் ஆர்வமுடன் அவற்றை வாங்கி கொண்டனர்.

அவர்கள் சிறு பிள்ளையின் குதூகலத்துடன், உடையை பிரித்து பார்க்க, அதை எல்லாம் பார்த்து கொண்டே உள்ளே வந்த விஜய், செழியனிடம்,

“என்னடா கல்யாண மாப்பிள்ளை, அவங்களுக்கு மட்டும் தான் ட்ரெஸ் அஹ, எனக்கு எல்லாம் இல்லையா”

என்று கேட்க, செழியனோ,

“அவங்க சின்ன பசங்க, உனக்கு எதுக்குடா நான் எடுத்து தரணும், நீ தான் எனக்கு மேரேஜ்கு கிப்ட் கொடுக்கணும், அதுவும் பெருசா “

என்று அவனிடம் வம்பு வளர்த்தவன், பின்பு தான் ஏதோ நினைவு வந்தவனாக,

“கல்யாணத்துக்கு உ…ன்…னை…, நீ….”

என்று ஏகத்துக்கும் தயங்கிய செழியனின், கண்களில் சிறு வலியும் தெரிய, அப்போது தான் செழியனின் உண்மையான அடையாளம் நங்கைக்கு தெரியாது என்பது விஜய்க்கு நினைவு வந்தது.

இந்த சூழ்நிலையில், தன்னை திருமணத்திற்கு அழைக்கும் பட்சத்தில், தன்னை என்னவென்று சொல்லி நங்கையிடம் அறிமுகப்படுத்த முடியும் என்றும் யோசிக்க, அப்போது தான் செழியனின் கண்களில் இருந்த வலிக்கான காரணமும் புரிந்தது.

உற்ற நண்பனின் திருமணத்திற்கு செல்ல முடியாது என்பது தனக்கும் வருத்தம் தான் என்றாலும், அதை வெளிக்காட்டி கொண்டால், அது இன்னும் செழியனை வருத்தப்பட வைக்கும் என்பதால்,

“அது சரி, என்னோட கட்டிங், பிட்டிங் பார்த்தாலே நான் போலீஸ்னு தெரிஞ்சிடும், என்னை உன்னோட பிரின்ட்னு சொன்னா, எப்படி, என்னனு ஆயிரம் கேள்வி வரும் இல்லை”

என்று செழியனுக்காக பேசியவன், தன் முன்பு மகிழ்ச்சியுடன் ஆடைகளை பார்த்து கொண்டிருந்த இருவரையும் காட்டி,

“ஏன்டா அப்போ இவனுங்களை மட்டும் என்னனு சொல்லுவ நங்கை கிட்ட”

என்று கேட்க, செழியனோ இன்னும் தெளியாத குரலில்,

“அவனுங்களை தான் நங்கைக்கு ஏற்கனவே தெரியுமே, பார்சல் கொடுக்கிறேன் பேர்வழினு வந்ததுட்டு போய் இருக்காங்களே”

என்று சொல்ல, விஜய்யோ,

“சரி விடுடா, இந்த பார்மா விஷயம் முடிஞ்சதும் எப்படியும் நங்கைக்கு எல்லாமே தெரிய தானே போகுது, நான் அப்போ வந்து பார்த்துக்கிறேன்”

என்று சொல்லி செழியனை தேற்ற, இருவருக்குமே வருத்தமாக தான் இருந்தது. நண்பர்கள் என்று நிறைய பேர் இருந்தாலும், விஜய், செழியனுக்கு எப்பவும் தனி தான்.

செழியன் முகம் இன்னும் தெளியாமல் இருக்க, விஜய்யோ என்ன செய்வது என்று, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

அவனின் யோசனையில் விளைவாக, ஒரு யுக்தியையும் கண்டுபிடித்த விஜய், பரப்பரப்புடன் செழியனிடம்,

“ஆமா உன்னோட மேரேஜ் கோவில்ல தானே நடக்க போகுது”

என்று கேட்க, ஆமாம் என்று தலையசைத்து, கோவிலின் பெயரையும் செழியன் சொல்ல, அவனை புன்னகையுடன் பார்த்த விஜய்,

“கோவில்ல உன்னோட கல்யாணம் நடக்குற அன்னைக்கு, நான் அந்த கோவிலுக்கு சாமி கும்பிட்டு வரலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்ற”

என்று கேட்க, அவனை தோளோடு அணைத்து கொண்ட செழியனுக்கு அப்படி ஒரு நிம்மதி. திருமணத்திற்கு என்று வந்தால் தானே கேள்வி வரும், கோவிலுக்கு சாமி கும்பிட என்று வந்தால், யார் கேள்வி கேட்க முடியும்.

என்ன நண்பனாக அருகில் உரிமையுடன் நிற்க முடியாது. இருந்த போதிலும், தன் திருமணத்தில் நண்பன் இல்லை என்பதை விட, இது எவ்வளோ பரவாயில்லை என்று தன்னை தேற்றி கொண்டான் செழியன்.

இப்படி அப்படியென்று, நாட்கள் விரைய, கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கடைசி வரை தன் கை சேராமல் போய்விடுமோ, என்று செழியன் அஞ்சிய அவனின் நிலா, இன்று அவன் வசமாகும் பொன்னாள்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில், எளிமையான அலங்காகரத்தில் அழகாக, அமைக்கப்பட்டு இருந்தது மணமேடை.

செழியன் போராடி வாங்க வைத்திருந்த அந்த ஆழ்ந்த இளம்பச்சை நிற புடவையில், மிதமான ஒப்பனையில், செழியனின் அருகில் அழகு பதுமையென, தலை குனிந்து அமர்ந்திருந்தால் நங்கை, அவனின் ‘எவன்ஜெலின்’.

செழியனோ பட்டு, வேட்டி சட்டையில், முகம் கொஞ்சமேனும் தெரியும் வகையில் தாடியை அழகாக கத்தரித்து, நெற்றியில் சந்தன கீற்றுடன் கம்பீரமாக, மணமேடையில் அமர்ந்து இருந்தான்.

தன் இத்தனை வருட காதல், கல்யாணத்தில் கை கூட போவதில், உலகின் மொத்த மகிழ்ச்சியையும் தன்னகத்தே கொண்டவன் போல, புன்னகையில் அகமும், முகமும் மலர இருந்தான் செழியன்.

வெற்றியும், தமிழும் செழியனின் அருகிலே இருக்க, நங்கையின் அருகில், அவளுக்கு துணையாக நின்றிருந்தான் நன்மாறன்.

மாப்பிள்ளை வீட்டினராக தேவி பாட்டியும், முத்தையா தாத்தாவும் எல்லா சடங்கும் செய்ய, பெண் வீட்டாராக நங்கையின் சித்தியும், சித்தப்பாவும் எல்லவற்றையும் செய்தனர்.

மங்கலநாணை ஐயர் செழியனிடம் கொடுக்க எடுக்க, அந்த சொற்ப நேரத்தில், கூட்டத்தை ஒரு முறை கண்களால் துழாவினான் செழியன்.

அங்கு நின்றிருந்த விஜய்யை பார்த்தவன், மனம் முழுதும் நிறைய, மங்களநாணை உற்றார், உறவினர், ஊரார் முன்னிலையில், கோவிலில் உறையும் தெய்வம் சாட்சியாக, நங்கைக்கு அணிவித்து, அவளை இம்மையிலும், மறுமையிலும் தன் சரிபாதியாக ஏற்று கொண்டான்.

அதன்பிறகு திருமண சடங்குகள் தொடர, வந்திருந்தவர்கள் எல்லாம் ஒருவர் ஒருவராக வந்து, தங்களின் வாழ்த்தை தெரிவித்து சென்றனர்.

வெற்றி, தமிழ், அவர்கள் வளர்ந்த ஆசிரமத்தின் நிறுவனர் அருளானந்தம் ஐயாவை, எல்லாம் தனியாக நங்கைக்கு அறிமுகப்படுத்தவும் தவறவில்லை செழியன்.

அதுப்போக தங்களின் திருமணத்திற்காக, இன்று முழுநாளும் ஆசிரமத்தில் இருப்பவர்களின் உணவுக்கான தொகையையும் கொடுத்து இருந்தான் செழியன்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு, உணவுக்கு அருகில் இருக்கும், ஒரு நடுத்தரமான உணவகத்தில் உணவுக்கு சொல்லியிருந்தனர்.

வந்தவர்களை கவனிக்கும் பொறுப்பை, வெற்றி, தமிழ், நன்மாறன் ஏற்றுக் கொண்டனர். அனைவரும் உண்ட பின்னர், மணமக்களையும் உண்ண வைத்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர் பெரியவர்கள்.

முக்கியமானவர்களை அறிமுகப்படுத்த, அவசியத்திற்கு என்றதை தவிர, செழியன்
நங்கையிடம் அதிகம் வார்த்தையாடவில்லை. ஒரு பூரண அமைதியில் திளைத்திருந்தான் அவன்.

அக்கினி வலம் வரும் போது பிடித்த தன்னவளின் கையை, பார்ப்பவருக்கு உறுத்தலாக தெரியாத வகையில், தன் கையில் பொக்கிஷமாக, பொதித்து வைத்திருந்தான் செழியன்.

தன்னவளின் கை பிடியில், அதன் வெம்மையின், அவனவளின் அருகாமையில், முழுதாக திளைத்து, தொலைந்து கொண்டிருந்தான் செழியன்.

வீட்டிற்கு முன்னாடியே வந்து இருந்த தேவி பாட்டி, மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, செழியனின் அறையில், புதிதாக வாங்கி வைத்திருந்த சாமி புகைப்படத்தின் முன், நங்கையை விளக்கேற்ற சொன்னார்.

நங்கை தன் வீட்டில் விளக்கேற்றும் போது தான், மனமே இல்லாமல், வேறு வழியும் இல்லாமல், அவளின் கையை தன்னிடம் இருந்து விடுவித்தான் செழியன்.

மணமக்களுக்கு கற்பகம் சித்தி, பால், பழம் கொடுக்க என அடுத்தடுத்து எல்லாமே தடையின்றி நடக்க, நன்மாறனோ தான், நங்கையின் அருகிலே இருக்குமாறு பார்த்து கொண்டான்.

செழியன் வீட்டிற்கு வரை அவனுடன் இருந்து, மணமக்கள் வீட்டிற்கும் வந்த பிறகு, இனி எதுவும் வேலையில்லை என்ற பின்னர் தான், வெற்றியும், தமிழும் அவனிடம் விடைபெற்று கிளம்பினர்.

நங்கை தன் பெற்றோரை வணங்க வேண்டுமே என்று நினைக்க, அதையே வாய் வார்த்தையாக சொல்லி இருந்தான் செழியன்.

நங்கை அவனை நன்றியுடன் பார்க்க, செழியனோ அவளுக்கு தன் அழகிய புன்னகையை தான் பதிலாக தந்தான்.

நன்மாறன் முன் சென்று அவர்களின் வீட்டை திறக்க, இருவரும் நங்கையின் வீட்டிற்கு வர, தன் பெற்றோர் முன்பு, புது தாலி கழுத்தில் மின்ன, தன் கணவன் சகிதம், கண் மூடி நின்றாள் நங்கை.

கை கட்டி, நங்கையின் பெற்றோரின் புகைப்படத்தையே பார்த்து கொண்டிருந்த செழியன், மானசீகமாக அவர்களுடன் பேசி கொண்டு இருந்தான்.

கண் திறந்து தன் அருகில் நின்றிருந்த செழியனனை பார்த்த நங்கை, அவனின் பார்வையில் இருந்த பாவம் புரியாமல் போக, மெதுவாக அவனின் கையை தொட்டு, அவன் கவனத்தை தன் பக்கம் திரும்பியவள்,

“என்னாச்சு”

என்று மென்மையாக கேட்க, தன்னை தீண்டி விலக பார்த்த நங்கையின் கையை, தடுத்து தன் கையோடு பிணைத்து கொண்ட செழியன், தன் பார்வையை நங்கையின் அப்பாவின் புகைப்படத்தில் நிலைக்க விட்டபடி,

“ஏன் நங்கை, உங்க அப்பாக்கு என்ன பிடிக்குமா, என்ன அவரோட மருமகனா ஏற்றுகொள்வாரா”

என்று அவர் தன் மருமகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசியதை, நினைவு கூர்ந்து கேட்டான்.

செழியன் இப்போது, ஏன் இந்த கேள்வியை கேட்கிறான் என்று புரியா விட்டாலும், அவனின் கேள்விக்கு பதிலாக,

“கண்டிப்பா அப்பா இருந்து இருந்தா அவருக்கு உங்களை பிடிச்சி இருக்கும்”

என்று நங்கை சொல்ல, செழியனோ அவளின் பதிலில் சமாதானம் ஆகாமல் போக, அதை அவனின் முகக்குறிப்பில் இருந்து புரிந்துகொண்டாள் நங்கை.

செழியனின் கையில் சிறைப்பட்டிருந்த தன் கையால், அவனின் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தவள்,

“எல்லா அப்பாவும், தன்னை மாதிரியே,தன்னோட பொண்ணை, நல்லா பார்த்துக்குற ஒருத்தர் தான், கணவனா வரணும்னு நினைப்பாங்க, நீங்க என்ன நல்லா பார்த்துக்குவிங்கனு நான் நம்புறேன், அதனால் கண்டிப்பா அப்பாவுக்கும் உங்களை பிடிக்கும்”

என்று சொல்லி புன்னகை சிந்த, நங்கை தன் மீது கொண்ட நம்பிக்கையா அல்லது அவளின் புன்னகையோ, ஏதோவொன்று செழியனின் மனதை நிறைக்க, அவனும் பதிலுக்கு புன்னகை புரிந்தான்.

மானசீகமாக நங்கையின் அப்பாவுக்கு, அவரின் மகளை, எந்த குறையும் இல்லாமல், நல்ல படியாக தான் எப்பொழுதும் பார்த்து கொள்வதாக வாக்கும் கொடுத்தான் செழியன்.

அதன் பிறகு, மணமக்களை உடை மாற்றி ஓய்வெடுக்க சொல்ல, நங்கையை அவளின் வீட்டில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, செழியன் தன் அறைக்கு சென்றான்.

பட்டு, வேட்டியில் இருந்து, இலகுவான உடைக்கு மாறி படுக்கையில் படுத்தவனுக்கு, உறக்கம் தான் வரவில்லை.

இத்தனை நாள் கல்யாண வேலைக்காக அலைந்தது, கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டுமே என்ற கவலை, இன்று அதிகாலையில் எழுந்தது என்று உடல் சோர்ந்து இருந்த போதிலும், உள்ளம் நிறைந்து கிடந்தது.

விரிந்த புன்னகையுடன் புரண்டு, புரண்டு படுத்திருந்த செழியன் ஒரு கட்டத்தில் உறங்கியும் விட, மதிய உணவுக்கு அவனை அழைக்க நன்மாறன் வந்தான்.

நன்மாறன் வந்து கதவை தட்டியதும் தான், விழித்த செழியன், கதவை திறந்து அவனை உள்ளே அழைத்தான்.

தன் இன்னொரு அம்மா போன்ற, தனக்கு இருக்கும் ஒரே உறவான தமைக்கையின் கணவர். இனி தன் அக்காவிடம், தன்னை விட இவருக்கு தான் உரிமை அதிகம் என்ற நிதர்சனம் நன்மாறனுக்கு புரிந்தது. அது வலிக்கவும் செய்தது.

அதே சமயம் கடந்த சில நாட்களாக நட்புடன், நண்பனாக சகஜமாக செழியனிடம் உரையாடிய நன்மாறனுக்கு, இப்போது மைத்துனனாக எப்படி உரையாடுவது என்றும் புரியவில்லை.

இப்படி பல தயக்கத்துடனே உள்ளே வந்த நன்மாறன்,

“சித்தி உங்களை சாப்பிட கூட்டிகிட்டு வர சொன்னாங்க”

என்று தரையை பார்த்தப்படி சொல்லியவன், செழியனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக நிமிர்ந்து பார்க்க, அவனை புன்னகையுடன் பார்த்த செழியன்,

“நானும் பார்த்துகிட்டு இருக்கேன், கல்யாணம்னு பேசுனதுல இருந்து இப்படி தான் இருக்க, உனக்கு என்ன என்னை புதுசா இன்னைக்கு தானா தெரியும், எதுக்கு இப்படி தயங்குற”

என்று கேட்க, செழியன் தன்னை கண்டு கொண்டதில் நாக்கை கடித்து கொண்ட நன்மாறன் சமாளிப்பாக,

“இல்லையே, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே”

என்று முன்னர் மாதிரி ‘செழியன் சார்’ என்றும் சொல்லாமல், உரிமையாக ‘மாமா’ என்றும் விளிக்காமல் பேச, அவனை ஆதுரமாக பார்த்த செழியன்,

“நான் உறவு முறையில் தான் உனக்கு இப்போ மாமா, மத்தபடி முன்ன மாதிரி நீயும், நானும் எப்பவும் பிரின்ட்ஸ் தான் மாறா புரியுதா”

என்று மறைமுகமாக இருவருக்கும் இருக்கும் உறவுமுறையை சொல்ல, தன் தயக்கம் கொஞ்சம் விலகியவனாக நன்மாறன்,

“சரிங்க…. “

என்று சொல்லி ஒரு இடைவெளி விட்டவன், பின்பு ‘மாமா’ என்று முடித்தான்.

முதன் முதலில் உறவு முறை வைத்து, உரிமையாக உறவொன்று அழைக்க, தனிமையில் வளர்ந்த செழியனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். உற்சாகமாக சின்னவனின் தோளில் தட்டிய செழியன்,

“தட்ஸ் குட், ரெண்டு நிமிஷம் கொடு, நான் போய் பிரெஷ் ஆகிட்டு வரேன்”

என்று சொல்லி,குளியலறை உள்ளே சென்று மறைந்தான். நின்ற வாக்கில், வீட்டை பார்த்து கொண்டிருந்த நன்மாறனின் கண்களில், அங்கு நாற்காலியின் மீது இருந்த கோப்பு கண்ணில் பட்டது.

அந்த கோப்பில், தன் அக்காவின் பெயர் இருக்க, அதை கையில் எடுத்த நன்மாறன், அது என்னவென்று பார்த்தான். அது செழியன், திருமணத்தை பதிவு செய்ய சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தின் நகல்.

அசிரத்தையாக தமக்கையின் பெயருக்கு அருகில் இருந்த கட்டத்தில் இருந்த, மணமகனின் பெயரில் கண்களை ஓட்டிய நன்மாறனின் கண்கள், அங்கு இருந்த பெயரில் அப்படியே நிலைகுத்தி நின்றன.

அந்த பெயரை பார்த்தவனுக்கு, முதன் முதலில் செழியனை பார்த்ததும்,

“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே, எங்கே பார்த்தோம்”

என்று வண்டாய் குடைந்த கேள்விக்கு, இன்று பதில் கிடைத்தது.

ஆரம்பத்தில் அந்த கேள்வி செழியனை பார்க்கும் போது எல்லாம் தோன்றினாலும், பின்னாளில் அவனுடன் உண்டான நட்பின் காரணமாகவோ, அல்லது அவன் மீது ஏற்பட்ட நல்ல எண்ணத்தின் காரணமாகவோ, அது அடி மனதிற்கு சென்று விட்டது.

அக்காவுடன் திருமணம் என்ற போது, சித்தியிடம் செழியனை பற்றி தான் விசாரிக்கவா என்று கேட்க, அவரோ ஏற்கனவே சித்தப்பா விசாரித்து விட்டார், ஒரு பிரச்சனையும் இல்லை என்று முடித்துவிட்டார்.

அப்போ இது எல்லாம் சித்தி, சித்தப்பாக்கு தெரியுமா????

அக்காவுக்கும் தெரியுமா, தெரிந்து தான் சம்மதித்தாரா???

என்று கேள்விகள் படையெடுக்க, இன்னொரு மனமோ, முதலில் இது உண்மையா என்று உறுதி செய்ய பரபரத்தது.

இன்று கல்யாண வேலை காரணமாக, தன்னிடம் இருந்த தன் அக்காவின் கைபேசியை உயிர்ப்பித்து, அதில் செழியனின் முழு பெயரை இட்டு தேடினான் நன்மாறன்.

இணையத்தில் தகவல்கள் வந்து குவிய, அதில் புகைப்படம் ஏதேனும் இருக்கிறதா என்று நன்மாறன் தேட, பத்திரிகையில் வந்திருந்த ஒரு செய்தியில் புகைப்படம் இருக்க, அதை பெரிதாக்கி உற்று நோக்கினான் நன்மாறன்.

அப்போது முகத்தை பூந்துவாலையில் துடைத்தபடி செழியன் வர, அவனின் முகத்தையும், தன் கைபேசியில் இருந்த புகைப்படத்தையும் மாறி, மாறி பார்த்தான் நன்மாறன்.

இருவருமே ஒருவர் தான் என்பது தெளிவாக புரிய , மித மிஞ்சிய வியப்பில், நன்மாறனின் உதடுகள், ஒவ்வொரு எழுத்தாக, அந்த பெயரை உச்சரித்தன.

“பொ…ற்…செ…ழி.…ய…ன்”

காந்தன் வருவான்………..

Advertisement