Advertisement

அதிசயத்திலும், அதிசயமாக பேருந்தில்
சாளரம் ஓரம் இருக்கை கிடைத்திருக்க, அதில் அமர்ந்திருந்த நங்கையின் முகம், இரகசிய சிரிப்பில் முகிழ்ந்திருந்தது.

தான் “நீங்க எனக்கு கட்டுபடியாக மாட்டீங்க” என்ற போது, செழியனின் முகம் காட்டிய பாவனையை நினைக்க, நினைக்க, அவளின் முகம் விகசிப்பதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.

தன் அதரங்கள், தன்னை மீறி புன்னகையில் விரிய, யாரேனும் பார்த்தால், என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற, தன் முகத்தை, கைப்பையில் ஏதோ தேடுவது போன்ற பாவனையில், குனிந்து மறைந்து கொண்டாள்.

செழியனை சந்திக்க செல்லும் வரையில் கூட, இந்த திருமணதிற்கு தான் சம்மதம் சொல்வோம் என்று நங்கை நினைத்து பார்க்கவில்லை.

புரியாமல் முழித்த செழியனின் குழந்தை முகமா????

அல்லது

தனக்காவது சொந்தம் என்று சித்தி ஒருவர் இருக்க, யாருமே இல்லை செழியன் சொன்னதா????

அல்லது

நன்மாறனை பிரித்து பார்க்காமல் பேசியதா???

அல்லது

அன்று அந்த பேருந்து நிலைய பிரச்சனையில், தனக்கு துணையாக அருகில் செழியன் நின்றிருந்த போது, தன் தந்தையிடமும், மாறனிடம் மட்டுமே உணர்ந்த பாதுகாப்பை அவனிடமும் உணர்ந்ததாலா???

காரணம் எதுவென்று நங்கைக்கு பிரித்தறிய முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று, அவளை செழியனுக்கு சம்மதம் சொல்ல வைத்திருந்தது.

இப்படி பல வருடங்களுக்கு பிறகு, மலர்ந்த முகத்துடன் நங்கை பயணிக்க, செழியனோ தனிமையின் ஏகாந்ததை அனுபவித்தபடி, கடற்கரையில் அமர்ந்து இருந்தான்.

தனது ஐந்து வருடத்திற்கும் மேலான காதல், தன்னவளை நினைக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் வலியில் சென்ற நாட்கள், தன் கை சேருமா என்று தான் ஏங்கி தவித்த காதல்.

இன்று அவனவள், அவனுடனான திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க, தன்னுள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை தாங்க முடியாமல் இருந்தான் செழியன்.

அங்கு கடையில் இருவரும் சாப்பிட்டு முடித்ததும், செழியன் தாங்கள் உண்ணதற்கு பணம் செலுத்திவிட, நங்கையோ தன் பங்கை, செழியனின் அலைபேசி எண்ணோடு இணைக்கபட்டிருந்த வங்கி கணக்குக்கு, கைப்பேசி செயலி மூலம் அனுப்பி விட்டாள்.

அன்றும் இப்படி தான், நன்மாறனுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தொகையையும் எவ்வளவு என்று இவனிடம் கேட்டு, வலுக்கட்டாயமாக இவனிடம் திருப்பி கொடுத்து இருந்தாள்.

செழியனால் அவளை “ஏன் இப்படி” என்று பார்க்க மட்டுமே முடிந்தது. இவனுக்கும் அவளை தன்னுடன் இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு அழைத்து செல்ல விருப்பம் தான்.

இருந்த போதிலும், நங்கை பற்றி அவன் அறிந்து வைத்திருந்த வகையில், அவள் சம்மதிப்பது மிகவும் அபூர்வம். அதோடு அவனுக்கும் தனிமை வேண்டி இருக்க, நேராக கடற்கரைக்கு வந்து விட்டான்.

இப்படி இருவரும், தங்களின் உலகில் சஞ்சரிக்க, செழியன் வீட்டிற்கு சென்று தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான்.

பதற்றத்துடன் அவனை எதிர்கொண்ட நன்மாறன், எதுவும் சொல்லாமல், அவனை கையோடு, தேவி பாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

செழியனுக்கு ஒன்றும் புரியாமல் போக,

“என்ன ஆச்சு மாறா”

என்று கேட்க, முழுக்க பதட்டத்தில் இருந்த நன்மாறனோ,

“அது வந்த… தேவி பாட்டிக்கு நெஞ்சு வலி சார்”

என்று சொல்ல, எப்போதும் இருவரும் எதிரும் புதிருமாக வார்த்தையாடி கொண்டே இருந்த போதிலும், தேவி பாட்டியின் மீது பாசம் கொண்ட செழியனோ,

“அப்போ ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போகாம என்ன பண்றீங்க, இதுக்கு முன்னாடி ஆயாக்கு இப்படி வலி வந்து இருக்கா, இல்ல இதான் முதல் தடவையா, என் கையை விடு மாறா, நான் அம்புலன்ஸ்கு கால் பண்றேன்”

என்று தன் அலைபேசியை எடுக்க போக, அப்போதும் அவனின் கையை விடாத நன்மாறனோ, அவனின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் விதமாக,

“ஆயாக்கு ரெண்டு வருஷம் முன்னாடி மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்துச்சு சார், ஆஞ்சியோ எல்லாம் பண்ணாங்க, மெடிசன் எடுத்துக்கிட்டு இருந்தாங்க, அதோட இப்போ தான் மறுபடியும் பெயின் வந்து இருக்கு”

என்று விளக்க, இதற்குள் அவர்கள் இருவரும் தேவி பாட்டியின் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

வீட்டின் கூடத்தில், நீல் இருக்கையில் தேவி பாட்டி படுத்திருக்க, அவரை சுற்றி நங்கை, கற்பகம் சித்தி, முத்தையா தாத்தா, மற்றும் சில அக்கம்பத்தினரும் இருந்தனர்.

செழியன் தேவி பாட்டிக்கு என்னவோ, ஏதோவென்று பதறி உள்ளே விரைய, அங்கு தேவி பாட்டியோ, நங்கையின் கையை பிடித்து ஏதோ பேசி கொண்டு இருந்தார்.

செழியன் அவரை நெருங்க, அவர் பேசி கொண்டிருந்தது தெளிவாக, இவனின் செவியிலும் விழுந்தது.

வலது கையால் வல பக்க நெஞ்சை நீவி விட்டபடி, இடது கையால் நங்கையின் கையை பற்றியிருந்த தேவி பாட்டி,

“உன்னோட கவலை தான் இந்த ஆயாவுக்கு, உன்னையும், மாறனையும் தனியா விட்டுட்டு போயிடுவேனோனு தான் எனக்கு பயமா இருக்கு”

என்றவர் நிறுத்தி ஒரு இடைவெளி விட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கியபடி,

“நீங்க என் சொந்த பேர பசங்க இல்ல தான், ஆனா உங்களை ஒரு நாளும் நான் அப்படி பிரிச்சி பார்த்ததே இல்லை, உன் கல்யாணத்தை பார்த்துட்டா எனக்கு நிம்மதியாக இருக்கும்”

என்று சொல்ல, அவரின் கண்களில் கரகரவென கண்ணீர் வழிய, சுற்றி நின்றிருந்த அனைவரின் கண்களும் கலங்கி தான் போனது.

செழியனுக்கு ஏதோ நெருட, தேவி பாட்டியை உற்று பார்க்க, அவரோ இடது பக்கம் இருக்கும் இதயம் வலது பக்கம் இடம் பெயர்ந்தது போல, வலது பக்கத்தை பிடித்து கொண்டு, பிழிய, பிழிய பேசி கொண்டிருந்தார்.

அவரின் அருகில் நின்றிருந்த முத்தையா தாத்தாவோ, பலியாடு போல பரிதாபமாக முழித்து கொண்டு நின்றிருந்தார்.

அதற்குள் நங்கை, தன் கையில் வைத்திருந்த மாத்திரையை தேவி பாட்டியிடம் நீட்டியபடி,

“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆயா, இந்தாங்க இந்த மாத்திரையை முதல்ல போடுங்க, வாங்க ஹாஸ்பிடல் போகலாம்”

என்று அழைக்க, வலியில் முகம் சுருங்கிய தேவி பாட்டியோ, அந்த மாத்திரையை வாங்காமல்,

“இப்போவே கல்யாணம் பண்ணிக்கோ நங்கை, அப்போ தான் நான் மாத்திரை போடுவேன்”

என்று ஏதோ கடையில் மிட்டாய் வாங்கி தர சொல்லுவதை போல, நங்கையை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி அடம் பிடித்து கொண்டு இருந்தார்.

சுற்றி இருந்தர்வகளுக்கு நங்கையின் மீதான தேவி பாட்டியின் பாசம் தெரிந்து இருந்த போதிலும், இன்றைய பாட்டியின் நடவடிக்கையில் அவரின் பாசத்தை கண்டு வியந்து போய் இருந்தனர்.

நங்கை, நன்மாறன், அவர்களின் சித்தியோ அதிர்ச்சியாக அவரை பார்க்க, செழியனோ தேவி பாட்டியின் மீது, கோவத்தில் இருந்தான்.

இருந்து இருந்து இப்போது தான், தான் நங்கையிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்க, இப்போது இவர், ஒரு புது குழப்பத்தை உருவாக்குகிறாரே என்று பல்லை கடித்தான் செழியன்.

தேவி பாட்டியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவரை எதித்து எதுவும் பேசாமல், நிலைமையை சமாளிக்க வேண்டுமே என்று எண்ணத்தில் நங்கை,

“இப்போ உடனடியா மாப்பிள்ளைக்கு எங்க போறது ஆயா”

என்று அவரை ஒட்டியே பேச, அங்கு இருந்தவர்களை சுற்றி பார்வையை ஒட்டிய தேவி பாட்டியின் கண்கள், செழியனின் நிலைத்து நின்றது.

தேவி பாட்டியின் கண்கள் கூறிய செய்தியை நம்ப முடியாமல் செழியன் பார்க்க, அவரின் பார்வையை தொடர்ந்த நங்கையும், அப்போது தான் செழியனை பார்தாள்.

தேவி பாட்டியோ தீனமான குரலில்,

“இங்க வா செழியா”

என்று அவனை தன் பக்கத்தில் கூப்பிட்டவர், அவன் அருகில் வந்ததும் நங்கையிடம்,

“செழியனை கல்யாணம் பண்ணிக்கோ நங்கை”

என்று சொல்ல, அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, அதை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாத தேவி பாட்டி, முத்தையா தாத்தாவிடம்,

“ஏங்க அங்க சாமி அறையில், மஞ்சள் கிழங்கு கோர்த்த தாலி இருக்கும், அதை எடுத்துக்கிட்டு வந்து செழியன் கையில் கொடுங்க”

என்று அதிகாரமாக சொல்ல, அனைவரும் பேய் முழி முழித்து கொண்டு இருக்க, தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த செழியனோ, தேவி பாட்டியின் காதருகில் குனிந்து,

“கிழவி இதயம் இடது பக்கம் இருக்கு, நீ வலது பக்கம் கைய வச்சிக்கிட்டு, இவ்ளோ வசனமும் பேசி கிட்டு இருக்க, ஆன் அப்புறம் லாஸ்ட் டயலாக் உணர்ச்சிவச பட்டு சத்தமா பேசிட்ட”

என்று சொல்ல, படக்கென வலது பக்கம் இருந்த தனது கையை, இடபக்கம் மாற்றிய தேவி பாட்டி, செழியனின் கையை எச்சரிக்கை செய்யும் விதமாக கிள்ளியும் வைத்தார்.

செழியனுக்கு திடிரென்று அவர், தனக்கு நங்கையை மணம் முடிக்க, வேண்டி, இப்படி எல்லாம் செய்வதன் காரணம் புரியவில்லை என்றாலும், இப்போது எதையும் கேட்க முடியாது என்பதால் அமைதியாக நின்றான்.

இதற்குள் தேவி பாட்டி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளி வந்திருந்த கற்பகம் சித்தி, பூஜை அறையை நோக்கி நகர்ந்து முத்தையா தாத்தாவை தடுத்து நிறுத்தியபடி,

“ஒரு நிமிஷம் இருங்கப்பா, தேவிமா உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை, இப்படி நாள் கிழமை பார்க்காம எப்படி கல்யாணம் பண்றது”

என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தயங்க, அவரை பாவமாக பார்த்த நம் நடிகையர் திலகமோ,

“என்ன கற்பகம் முன்ன பின்ன தெரியாத செழியனுக்கு எப்படி பொண்ணை கொடுக்குறதுன்னு யோசிக்கிறியா, எனக்கு ஒரு பேரன் இருந்து நங்கையை கேட்டா கொடுக்க மாட்டியா, செழியனும் என்னோட பேரன் தான்”

என்று ஒரே போடாக போட, ஏற்கனவே செழியனை பற்றி விசாரித்து அதில் திருப்தியாகி, நங்கையின் சம்மத்திற்காக காத்திருந்த கற்பகம் சித்தியோ, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாமல்,

“அய்யோ அப்படி எல்லாம் இல்லை தேவிமா, பிள்ளைங்க கல்யாணம் பண்ணி நூறு வருஷம் நல்லா இருக்கணும் இல்ல, அதுக்கு தான் சொன்னேன்”

என்று தனக்கு சம்மதம் என்று மறைமுகமாக தெரிவித்தார்.

நங்கை செழியனுக்கு சம்மதம் சொன்னது தெரியாமல், நங்கை செழியனை மறுக்காமல் இருக்க வழி செய்ய, நங்கையோ பேசும் இவர்கள் இருவரையும் மாறி, மாறி பார்த்து கொண்டிருந்தாள்.

கற்பகம் சித்தி இப்படி சொன்னதும், அவரையே அருகில் இருக்கும் நாற்காட்டியை எடுத்து, அடுத்த முகூர்த்தம் எப்போது என்று பார்க்க சொன்னார் தேவி பாட்டி.

எட்டு நாளுக்கு பிறகு, ஒரு நல்ல முகூர்த்த நாள் இருக்க, அன்றே செழியன், நங்கை திருமணத்தை கோவிலில் வைத்து செய்வதென்று, அக்கம்பத்தினர் முன்னினையில், அவர்களே முடிவு செய்தனர்.

செழியனோ இப்படி அவசர அவசரமாக எதற்கு திருமணம் என்று யோசிக்க, நங்கைக்கோ, செழியனை திருமணம் செய்ய ஏற்கனவே சம்மதித்து இருக்க, இத்தனை விரைவாகவா என்ற மலைப்பு மட்டுமே மிஞ்சி இருந்தது.

நங்கை அமைதியாக இருப்பதை பார்த்த தேவி பாட்டி, அவள் இன்னும் அவளின் வாயால் சம்மதம் சொல்ல வில்லை என்பதால்,

“என்ன நங்கை, எதுவே சொல்ல மாட்டுற, உனக்கு செழியனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே”

என்று நைச்சியமாக கேட்க, மாலை செழியனிடம் மட்டும் சொல்லியிருந்த தன் சம்மதத்தை, இப்போது அனைவர் முன்பும் சொல்லி விட்டாள்.

செழியன், தங்களின் சக்திக்கு மீறிய வரன் என்ற போதிலும், நல்ல வரன். எங்கே நங்கை எதாவது காரணம் சொல்லி வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்று கற்பகம் சித்தி, பயந்த பயம் அவருக்கு தானே தெரியும்.

நங்கை இவ்வளவு எளிதாக சம்மதம் சொல்லுவாள் என்று எதிர்பார்க்காத தேவி பாட்டி, தன் நடிப்பை மறந்து, படக்கென எழுந்து உட்கார்ந்தே விட்டார்.

அவரை ஒரு கையால் மீண்டும் படுக்க வைத்த செழியன், அவரின் காதுக்குள்,

“கிழவி ஷாக் அஹ குறை, உனக்கு நெஞ்சு வலி நியாபகம் இருக்கட்டும்”

என்று சொல்ல, செழியனை பார்த்து அசடு வழிந்த தேவி பாட்டி, தன் நடிப்பை விடாமல், நெஞ்சை பிடித்து கொண்டு மீண்டும் படுத்து விட்டார்.

நன்மாறனுக்கோ, அவனின் அக்கா, திருமணத்திற்கு சம்மதித்தது, அதுவும் செழியனை மணக்க போவது எல்லாமே, மகிழ்ச்சி தான்.

ஆனால் அக்கா அதை முழு மனதோடு செய்யாமல், இவர்கள் எல்லாம் சேர்ந்து, நிர்பந்தித்து சம்மதம் சொல்ல வைக்கிறார்களே, என்று கோவத்தில் கனன்று கொண்டிருந்தான் அவன்.

மீண்டும் நங்கை, தேவி பாட்டியிடம்,

“அதான் நான் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டனே ஆயா, இப்போவது வாங்க ஹாஸ்பிடல் போகலாம்”

என்று அவரின் மீதான பாசத்தில், இது எல்லாம் வெறும் நடிப்பு என்று உணராமல் கரைய, இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்த தேவி பாட்டி,

“நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுலயே எனக்கு வலி பாதி போய்டுச்சி, மாத்திரை இருக்கு இல்ல, அதை போட்டுகிறேன், அப்புறமும் வலி குறையலனா ஹாஸ்பிடல் போகலாம்”

என்று தன் மொத்த திறமையையும் திரட்டி, நங்கையின் கன்னத்தை தடவிய படி பேச, நங்கையோ அவரின் கையை, தன் கன்னதோடு அழுத்தி பிடித்து கொண்டாள்.

சந்தேகம் என்று ஒன்று வந்தால் தானே, அது உண்மையா, பொய்யா என்று ஆராய தோன்றும். தேவி பாட்டியை முழுமையாக நம்பிய நங்கைக்கு, அவரில் சிறிதும் சந்தேகம் முளைக்க வில்லை.

இங்கு வந்த நாட்களில் இருந்து, அத்தனை அனுசரனையோடும், பாசத்தோடும் பார்த்து கொண்ட மூதாட்டி மீது, உண்மையில் நங்கைக்கு அத்தனை பாசம்.

நங்கை கலங்க, அவளின் பாசத்தில் தேவி பாட்டிக்கும் உண்மையில் கண் கலங்க தான் செய்தது. அவளை ஏமாற்றுவது அவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது.

ஆனால் எல்லாம் அவளின் நன்மைக்காக தான் என்று தன்னை தானே தேற்றி கொண்டார் தேவி பாட்டி.

காலையில் கல்யாண ஏற்பாட்டை பற்றி பேசலாம், இப்போது பாட்டி ஓய்வெடுக்கட்டும், என்று எல்லாரையும் அனுப்பி வைத்தார் முத்தையா தாத்தா.

நங்கையின் பின் செல்ல முயன்ற, செழியனின் கையை மட்டும் பிடித்து, தன்னுடன் நிறுத்தி கொண்டார் தேவி பாட்டி.

தேவி பாட்டி வீட்டில் இருந்து வெளியே வந்ததும், நங்கையை பிடித்து கொண்ட நன்மாறன்,

“செழியன் சாரை நீ கல்யாணம் பண்றதுல எனக்கு சந்தோஷம் தான், ஆனா ஆயா சொன்னதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்காத, உனக்கு உண்மையிலே செழியன் பிடிச்சா சரி, இல்லனா சொல்லு நான் ஆயா கிட்ட பேசுறேன்”

என்று சொல்ல, இவனின் பேச்சை கேட்ட அவர்களின் சித்தியோ மனதிற்குள்,

“இவளை சரிக்கட்ட நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோம், இவன் குட்டையை குழப்பிடுவான் போலவே”

என்று நொந்து கொண்டு, நங்கையின் பதிலுக்காக அவளை பார்க்க, நங்கைக்கோ அந்த நிமிடம், நன்மாறன் தனக்கு தம்பியாக இல்லாமல், அண்ணணாக தோன்ற, புன்னகையுடன்,

“எனக்கு சம்மதம் தான் மாறா”

என்று ஆரம்பித்து, செழியன் சித்தியிடம் பேசியதில் இருந்து, தான் அவனை சந்தித்து பேசியது வரை எல்லாம் சொல்ல, நன்மாறனுக்கு மகிழ்ச்சியில் தலை, கால் புரியவில்லை.

அக்காவை தோளோடு அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவன், தரையில் கால் பாவாமல் குதித்து கொண்டு, வீட்டிற்குள் ஓடினான்.

கற்பகம் சித்தியும், கலங்கிய கண்ணை தன் சேலையின் தலைப்பில் துடைத்து கொண்டவர், நங்கையின் தலையை வருடியபடி,

“ரொம்ப சந்தோஷம்டா”

என்று சொல்லி, வீட்டின் உள்ளே சென்றார். நங்கையிடம் செழியனின் பற்றி எதுவுமே சொல்லாத சித்தி, எல்லாம் செழியன் சொல்லி இருப்பான் என நினைத்து கொண்டார்.

உண்மையில் நங்கைக்கு, செழியனின் உண்மையான அடையாளம், தெரிந்திருக்கவில்லை. இது அவளின் சித்திக்கு தெரியவில்லை.

அங்கு தேவி பாட்டியின் வீட்டிலோ, அவரை முறைத்து கொண்டிருந்த செழியன், நங்கையின் கலங்கிய முகம் நினைவுக்கு வர,

“எதுக்கு கிழவி இந்த ட்ராமா எல்லாம், பாரு நங்கை உண்மைன்னு நம்பி எவ்ளோ வருத்தபடுறா”

என்று கேட்க, அவனை நக்கலாக, ஒரு பார்வை பார்த்த தேவி பாட்டி,

“எல்லாம் அவ நல்லதுக்கு தான்டா பொடியா, இல்லைனா உன்னை கல்யாணம் பண்ண அவ சம்மதிச்சு இருப்பாளா”

என்று கெத்தாக கேட்க, அதைவிட அவரை நக்கலாக பார்த்த செழியன்,

“மண்ணாங்கட்டி”

என்று பொரிந்து தள்ளியவன், ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்ல, அதை கேட்டு பல்லை கடித்த தேவி பாட்டி,

“இந்த கற்பகம் இருக்காளே….., இதே வேலையா போச்சு அவளுக்கு, முன்னாடியே இதை எல்லாம் என் கிட்ட சொல்லி இருக்கணுமா இல்லையா, டேய் நீயும் ஏன்டா என் கிட்ட எதுவும் சொல்லல”

என்று அவனை கடித்து வைக்க, அவரை புரியா பார்வை பார்த்த செழியன்,

“ஆன் என்னனு சொல்றது, நங்கையை பார்த்ததுக்கே என்ன நாய்க்கு, பாயாவா ஆகிடுவேணு சொன்ன ஆள் தானே நீ, ஆமா என்ன திடிர்ன்னு நங்கையை, எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க இவ்ளோ வேலை பார்க்குற நீ”

என்று சந்தேகமாக இழுக்க, தேவி பாட்டியோ கூலாக,

“நீ யாரு, என்னனு தெரிஞ்சிடுச்சு, உன்னை கல்யாணம் பண்ணா நங்கை நல்லா இருப்பானு தோணுச்சி அதான்”

என்று சொல்ல, இவ்வளவு நேரம் இவர்கள் இருவர் உரையாடுவதை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்த, முத்தையா தாத்தாவை செழியன் முறைக்க, அவரோ அவனை பாவமாக பார்த்து வைத்தார்.

இதை எல்லாம் கவனிக்காமல் எதோ யோசனையுடன், குறுக்கும் நெடுக்கும் நடந்த தேவி பாட்டி, செழியனிடம்,

“ஆமா நீ யாரு, என்னனு நங்கைக்கு தெரியுமா”

என்று கேட்க, செழியன் மறுப்பாக தலையசைக்க,

“அதானே பார்த்தேன், அது தெரிஞ்சி இருந்தா நங்கை சம்மதம் சொல்லி இருப்பானு நினைக்கிற”

என்று அவனையே திருப்பி கேள்வி கேட்க, மாலை நடந்ததை நினைத்து பார்த்த செழியனுக்கும் பாட்டி சொல்வது தான், சரி என்று பட்டது.

செழியன் பாட்டியை வருத்தத்துடன் பார்க்க, தேவி பாட்டியோ தீர்க்கமாக,

“நங்கை கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் செழியா, முதல்ல கல்யாணம் நடக்கட்டும்”

என்று சொல்ல, செழியனின் நியாய மனது அதை ஆட்சேபிக்க,

“பொய் சொல்லி கல்யாணம் பண்றது தப்பு ஆயா”

என்று சொல்ல, அவனின் மனதை புரிந்து கொண்ட தேவி பாட்டியோ, அவனை ஆதுரத்துடன் பார்த்து,

“நாம பொய் சொல்ல போறது இல்ல செழியா, உண்மையாய் மறைக்க போறோம், அவ்ளோ தான்”

என்று சொல்ல, செழியனோ இன்னமும் சமாதானம் ஆகாமல் நிற்க, தேவி பாட்டியோ,

“அப்போ நீ நங்கையை மறந்துட வேண்டியது தான்”

என்று தயை தாட்சிண்யம் பார்க்காமல் கூற, அந்த எண்ணமே கசந்து வழிய, அவரை வலியுடன் பார்த்த செழியன்,

“என்னால முடியாது ஆயா, என்னால எதுக்காகவும் நங்கையை இழக்க முடியாது”

என்று உறுதியுடன் சொல்ல, செழியனிடம் இருந்து இந்த பதிலை தான் எதிர்பார்த்த தேவி பாட்டி,

“அப்போ நான் சொல்றதை மட்டும் கேளு, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்”

என்று அவனை சமதானப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்தவரின் மனமோ,

“கல்யாணத்துக்கு அப்புறம், நங்கை உன்னோட காதலை உணரும் போது, இதை எல்லாம் நாம அவளுக்காக தான் பண்ணோம்னு, நங்கையை புரிஞ்சிப்பானு நம்புவோம் செழியா”

என்று நினைத்து தன்னை தேற்றி கொண்டார். காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை யார் தான் அறிவார்.

உண்மை தெரியும் பட்சத்தில், அதற்கு நங்கையின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்..

காந்தன் வருவான்…….

Advertisement