Advertisement

“பி.எஸ்” இன் மன இறுக்கத்தை உணர்ந்தது போலவே, வீசிக்கொண்டு இருந்த காற்றும் சற்று நின்று, நண்பர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

அந்த அந்தகார இரவில், வேலை செய்து களைத்து போய் வந்து இருந்த விஜய்க்கோ, அவன் நண்பனின் வார்த்தைகள் புரிந்தாலும், அதன் அர்த்தம் தான் விளங்கவில்லை.

ஒன்றும் புரியாத குழப்பமான முக பாவத்துடன், “பி.எஸ்”யை பார்த்த விஜய், 

“டேய் இது உனக்கே நல்லா இருக்கா சொல்லு, தெளிவா சொன்னாலே எனக்கு புரியாது, இதுல நீ காட்டுல தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி, காட்டெருமைக்கும், காண்டாமிருகத்துக்கும் கல்யாணம் வா போலாம்னு சொல்ற மாதிரி, பார்மா கம்பனி, சுயலாபம்னு, என்னென்னமோ சொல்ற, ஒரு மண்ணும் புரில எனக்கு”

என்று அங்கலாய்க்க, தன் சிந்தனையில் இருந்து வெளிவந்த “பி.எஸ்”, 

“நீ காட்டெருமை, அப்போ உன்னை கல்யாணம் பண்ண மகதி தான் காண்டாமிருகமா மச்சான், உங்க கல்யாணம் காட்டுலயா நடந்துச்சி சொல்லவே இல்லையே நீ”

என்று இவன் அவனை பதில் சந்தேகம் கேட்டு கலாய்த்து வைக்க, இப்போது நிஜமாகவே கடுப்பான விஜய்,

“எரும, எரும, நீ சொன்னது புரியுலனு சொல்றதுக்காக அதை உதாரணமா சொன்னேன், அதை ஆராய்ச்சி பண்ணாம, நீ விஷயத்தை தெளிவா சொல்லு பக்கி”

என்று கடுபடிக்க, ஒரு பெருமூச்சு எடுத்து தன்னை நிதானப்படுத்தி கொண்ட “பி.எஸ்”,

“அப்பா பார்மா கம்பெனி வச்சி இருந்தாங்க தெரியும் இல்ல” 

என்று சொல்லி நிறுத்த, விஜயும் அதை அறிந்து தான் இருந்தான்.

“பி.எஸ்” இன் தாயார், இரத்த புற்றுநோயால் இறக்க, அவரின் நினைவாக, அவரின் பெயரில் புற்று நோயாளிகளின் மருத்துவ செலவுகளுக்கு உதவும் வகையில், ஒரு தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது விஜய்க்கு தெரியும்.

விஜயின் “தெரியும்” என்ற தலையசப்பை பெற்று கொண்டவன் தொடர்ந்து,

“பார்மா கம்பனில மேலோட்டமா பார்த்தா எல்லாமே சரியா இருக்குற மாதிரி தான் இருக்கு, ஆனா எங்கேயோ, ஏதோ இடிக்குது, என்னவோ தப்பா இருக்கு” 

என்று யோசனையுடன் சொல்ல, விஜயோ,

“அப்போ உனக்கே நிச்சயமா தெரில தப்பு நடக்குதுனு, உன்னோட வெறும்  சந்தேகத்துக்காகவா என்னைய  இந்த அர்த்தராத்திரியில் வர வச்ச நீ”

என வெளியில் முறைத்தாலும், தான் பயந்த அளவுக்கு நண்பனுக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்பதில் சிறிது ஆசுவசமும் பட்டு கொண்டான். 

உண்மையில் நிலைமையின் தீவிரமும், ஆழமும், அவன் எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகம் என, அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

“பி.எஸ்”சோ, அவனுக்கு எதிர்பதமான மனநிலையில், விஜய்க்கு நிலைமையை விளக்கிவிடும் நோக்கத்தில், 

“இல்லடா விஜய், நான் அங்கே விசிட்டுக்கு போன அப்போ, நிறைய விஷயம் ஸ்டேரேஜ் அஹ  இருந்தது”

என்று புரியவைக்க முயல, விஜயோ ஒரு காவல்துறை அதிகாரியாக நிலைமையை ஆராயமுற்பட்டான்.

“பி.எஸ்”  தவறு நடக்கிறது என்று உறுதியாக நம்புகிறான், ஆனால் என்ன தவறு என்று இன்னும் கண்டறியவில்லை என்பதை, அவனின் கூற்றில் இருந்து உணர்ந்து கொண்ட விஜய், 

“உன்னோட கம்பனி தானே, இந்நேரம் நீயே கண்டு பிடிச்சி இருக்கலாமே, என்ன தப்புன்னு” 

என்று சொல்லும் போதே, தன் கூற்றில் இருக்கும் தவறும் அவனுக்கு புரிந்தது.

அப்படி அதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இந்நேரம் “பி.எஸ்” அதை செய்யாமலா இருப்பான் என்றும் தோன்ற, விஜய் அவனை கேள்வியுடன் பார்க்க, அவனும் கூர்மையுடன் இவனை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

விஜயின் கண்களில் தொக்கி நின்ற கேள்வியை புரிந்து கொண்ட “பி.எஸ்”, விஜயின் மீது இருந்து பார்வையை விலக்காமல்,

“பார்மா கம்பனி ஆரம்பிக்கும் போது சில பிரச்சனனால, வேற வழி இல்லாம மினிஸ்டர் கூட பார்ட்னர்ஷிப்ல ஆரம்பிச்சது விஜய், என்னோட கணிப்பு சரியா இருந்தா, அப்பாவுக்கு தெரியாம, மொத்த கம்பனியும் அவர், அவர் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து இருக்கனும்”

என்று சொல்ல, விஜயோ,

“அப்படினா??????” 

என்று தனக்கு புரிந்ததை, உறுதிப்படுத்தி கொள்ளும் விதமாக கேள்வியாக இழுக்க, “பி.எஸ்”உம்,

“ஆமாடா, நான் கம்பனி விசிட்க்கு போன அப்போ, என்னோட ஒவ்வொரு மூமெண்ட்டையும் யாரோ க்ளோஸ் அஹ வாட்ச் பண்ணதை நான் பீல் பண்ணேன்”

என்று சொல்லி நிறுத்த, நிலமையின் தீவிரம் அதிகமாவதை உணர்ந்த விஜய், 

“உன்னோட கம்பனில உன்னையே கண்காணிக்கிறாங்கனா, நிலைமை கொஞ்சம் சிக்கல் தான்”

என்று சொல்லி நிறுத்தியவன்,

“சோ உன்னோட சந்தேகப்படி தப்புன்னு ஒன்னு, அங்க நடக்கும் பட்சத்தில், நீ டிரைக்ட்டா அதை இன்வெஸ்டிகேட் பண்ண முடியாத சூழல்”

என்று சொல்லிய விஜய் தொடர்ந்து,

“அதும் அதுல அந்த மினிஸ்டர் இன்வால்வ் ஆகி இருக்கும் பட்சத்தில், ரிஸ்க் ரொம்ப அதிகம் தான்”

என்று நிலைமையை அலசி ஆராயந்தவன், இவ்வளவு நேரம் அமைதியாக தான் பேசுவதை செவிமடுத்து கொண்டிருந்த “பி.எஸ்” இடம், 

“என்ன தப்பு நடக்குதுனு நினைக்கிற, சிறிய லெவல்ல அஹ இருக்குமா இல்ல,  பெரிய லெவல்ல இருக்குமா” 

என்று பிரச்சனையின் ஆழத்தை  அளக்க முயன்றபடி கேட்க, 

“இங்க பாரு விஜய், பார்மா கம்பனி அஹ பொருத்தவரை, தப்பு சின்னதோ இல்ல பெருசோ, அதோட விளைவுகள் கண்டிப்பா பூதாகரமாக தான் இருக்கும்” 

என்று உண்மை நிலமையை விளக்க, யோசனையுடன் தாடையை தடவி கொண்ட விஜய்,

“உன்னோட டவுட், ஒருவேளை உண்மையா இல்லாமல் கூட போகலாம்”

என்று ஆதாரம் இல்லாமல் சந்தேகப்படும் நண்பனிடம், அது  வெறும் சந்தேகமா கூடவே போகலாம் என்று தெளிவுபடுத்தியவன், அவனின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டு,

“உன்னோட டவுட் உண்மையா இருந்தா, உனக்கு டவுட் வந்து இருக்குனு அந்த மினிஸ்டருக்கு தெரிஞ்சாலே உன்னோட உயிருக்கு ஆபத்து தான், எவ்ளோ பெரிய பிசினஸ் மேக்னட் அஹ இருந்தாலும், அரசியல்வாதிகளை எதிர்க்கிறது எப்பவுமே ரிஸ்க் தான்”

ஒரு வேளை சந்தேகம், உண்மையாய் இருக்கும் பட்சத்தில், ஒரு காவல்துறை அதிகாரியாக, அதன் விளைவுகளையும் விளக்க தவறவில்லை.

அவனை ஒரு பார்வை பார்த்த “பி.எஸ்”, தன் திட்டத்தை அவனிடம் விவரிக்கும் விதமாக,

“முதல யாருக்கும் சந்தேகம் வராம, அவங்க அங்க என்ன தப்பு பண்றாங்கன்னு கண்டுபிடிக்கனும்”

என்று நிறுத்த, விஜயோ, 

“அதையும் அவங்க கவனம் நம்ப பக்கம் திரும்பாம கண்டுப்பிடிக்கணும், அதுக்கு அட்லிஸ்ட் கம்பனில இருக்கிற ஒருத்தரோட உதவியாவது நமக்கு தேவை”

என்று சொல்லி நிறுத்தி, “பி.எஸ்”யை பார்க்க, அவனோ,

“வினோத் இருக்கான், அவன் நம்ப ட்ரஸ்ட்ல படிச்ச பையன் தான், அதனால் அவனை நம்பலாம், நமக்கு தேவையான ஹெல்ப் எல்லாம் அவன் செய்வான், அவனை வச்சி தான் நம்ப காரியத்தை சாதிக்கனும்”

என்று அவனின் கேள்விக்கான பதிலை தர, அதை தலையசைத்து ஏற்று கொண்ட விஜய்,

“சந்தேகம் உறுதியாகி, நமக்கு அதுக்கு ஆதாரமும் கிடைக்கிற வரை, நமக்கு சந்தேகம் இருக்குனு, அவங்களுக்கு சந்தேகம் வரதா அளவுக்கு நாம நடந்துகனும்”

என்று நிறுத்தியவன், தன் நண்பனை ஒரு சங்கடமான பார்வை பார்த்துவிட்டு, 

“ஒரு வேளை அவங்க பார்மா கம்பனியை மிஸ்யூஸ் பண்ணி இருந்தா…., அதோட இம்பாக்ட்…..”

என்று ஆரம்பித்தவன், அவர்களின் தவறுகள் கம்பெனியின் பெயரை கெடுப்பதோடு, அதை நிரந்தரமாக மூடுவதற்கும் வகைசெய்யும் என்பதால், அதை சொல்ல ஆரம்பித்து, சொல்ல முடியாமல் இழுத்து நிறுத்த, அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட “பி.எஸ்”,

“எனக்கு இந்த கம்பனி ரொம்ப முக்கியம் விஜய், நடக்கிற தப்பை கண்டுபிடிச்சு, அதை அந்த மினிஸ்டர் தான் பண்ணி இருக்காரு, கம்பனியை மிஸ் யூஸ் பண்ணி இருக்காருனு ப்ரூவ் பண்ணனும்”

என்றவன், ஒரு பெருமூச்சு விட்டு,

“என்னோட அம்மாவை தான் எங்களால காப்பாத்த முடில, அட்லீஸ்ட் அவங்க பேருல இருக்கிற கம்பனியையாவது காப்பாத்தனும் விஜய்”

என்று சொல்ல, விஜயால் அவனின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அது தான் அவனுக்கு இன்னும் பயத்தையும் கொடுத்தது.

ஒரு தொழிலதிபராக தொழிலில் சிறப்பாக சிந்தித்து செயல்படுவன், இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொள்வானோ என்ற எண்ணம் தான் விஜய்க்கு.

ஆரம்பத்தில் “பி.எஸ்” இன் சந்தேகம் வெறும் சந்தேகமாகவே இருந்துவிடாத என்ற நப்பாசையும் இருந்தது விஜய்க்கு.

ஆனால் மனிதர்களையும், சூழ்நிலையும், நுணுக்கமாக அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு, இத்தனை வருட தொழில் அனுபவமும் கொண்ட, “பி.எஸ்” இன் சந்தேகம் உண்மையாக இருக்க தான் வாய்ப்புகள் அதிகம் என்று இப்போது தோன்ற தொடங்கியது விஜய்க்கு.

அதும் அவன் குறிப்பிட்ட அந்த அரசியவாதியோ, வெளிவுலகத்திற்கு நல்லவர் வேஷம் போட்டாலும், அவரின் வீரதீர பராக்ரமங்களை, ஒரு காவல்துறை அதிகாரியாக விஜய் அறிவான்.

மருந்து நிறுவனம் எனும் போது, அது தொடர்பான குற்றங்களை கையாளும், சிறப்பு காவல்துறையின் பிரிவினரிடம் உதவி கேட்கலாம் என்றாலோ, அந்த அரசியல்வாதியின் கைகள், கை கூலிகள் அனைத்து இடடத்திலும் உண்டு.

இன்னும் தவறுக்கான ஆதாரமும் இல்லாத போது, மிகப்பெரிய சமூக அந்தஸ்தில் இருக்கும் ஒருவரின் மீதான குற்றச்சாட்டு, பல வகையில் இவர்களுக்கு தான் பிரச்சனையாக முடியும்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதிகவனமாக வைக்க வேண்டிய கட்டாயம் இப்போது. ஒரே ஒரு தவறான அடி, இவன் நண்பனின் உயிரை கூட பறிக்கலாம்.

என்ன ஆனாலும் நண்பனுக்கு துணை நிற்பது என்று முடிவு எடுத்த விஜய், முடிந்த அளவு அவனை ஆபத்தில் இருந்து விளக்க விழைந்தவனாய்,

“ஹே “பி.எஸ்” நான் சொல்றத கேளு, நீ இந்த கேஸ்ல எந்த விதத்திலயும் இன்வால்வ் ஆகாத, என் கிட்ட சொல்லிட்ட இல்ல, நானே பர்சனலா இதை ஹண்டல் பண்றேன் சரியா”

என்று தன் நண்பன் மீதான உண்மையான  அக்கறையுடன் சொல்ல, ஏற்கனவே ஒரு திட்டத்துடன் இருந்த “பி.எஸ்”சோ, ஒரு மையமான புன்னகையுடன் தலையசைத்தான்.

அந்த புன்னகையின் அர்த்தம் அறிந்த பால்ய நண்பனான விஜயோ, 

“டேய், எதும் ஏடாக்கூடமா பிளான் பண்ணாத, சொல்றத கேளு”

என்று கிட்டத்தட்ட கத்த, விஜயின் பதட்டம், இவனுக்கு புன்னகையை தர, சூழல் மீண்டும் இலகுவாக ஆரம்பித்தது. 

விஜயின் பதட்டம், இவனை அவன் கண்டு கொண்டதற்கான அடையாளம் அல்லவா.….

அதேநேரம், “பி.எஸ்” இன் சிறுவயது குறும்புத்தனம் தலைதூக்க, துள்ளலான நடையுடன், மாடியிலிருந்து கீழே, வீட்டிற்கு செல்வதற்கான படிகள் ஆரம்பிக்கும் இடத்தின் அருகே சென்று நின்றவன், 

“நான் கீழ போக போறேன், நீ வ….ரி….யா.… இல்ல….. இங்கயே…. இருந்து…. உன்னை கூட கூட்டிகிட்டு தான் போவோம்னு, உன் பின்னாடிகாலே இல்லாம, காத்துல கஷ்டப்பட்டு  நின்னு அடம்பிடிக்கிற, உன்னோட வைப் ரிலேஷன் கூட சேர்ந்து மேல போக போறியா”

என்று தன்னை நோக்கி திருப்பி நின்றிருந்த விஜயின் பின்பக்கம், யாருமில்லா இடத்தில், யாரோ இருப்பது போலவே பாவித்து கேட்டு வைத்தான் “பி.எஸ்”.

நண்பனின் சொன்னவற்றை கேட்டு குழம்பி போன விஜய், அவனின் பார்வை சென்ற இடத்தை   திரும்பி பார்க்க, கிடைத்த அந்த இடைவெளியில் சத்தம் இல்லாமல் நழுவி, ஒரு பத்து படிகள் இறங்கி உள்பக்கமாக மறைந்து நின்றான் “பி.எஸ்”.

இதை அறியாத விஜயோ, அவன் இருப்பதாக நினைத்து கொண்டு, அந்த தைரியத்தில் மொட்டைமாடி முழுவதையும் ஒரு பார்வை பார்த்தவாறே,

“எது மகதி ரிலேஷன் அஹ, அவங்க எப்படிடா இங்க வருவாங்க, அதும் காலே இல்லாம காத்துல கஷ்டப்பட்டு  நிக்கிறாங்களா…..”

என்று இழுத்த விஜய்க்கு, தாமதமாகவே “பி.எஸ்” யாரை சொல்லி இருக்கிறான் என்பது புரிந்து தொலைத்தது.

ஆளில்லா மொட்டைமாடியும், சிறு அரவமும் இல்லா அந்த இருட்டும், அவனுள் சிறு திகிலை விதைக்க, அதை மறைத்து, முயன்று வருவிக்கபட்ட சாதாரண குரலில், நண்பனும் அங்கு தான் இருக்கிறான் என்ற தைரியத்தில்,

“நீ இன்னும் மாறவே இல்லைடா, எப்போ பாரு வி…ளை..யா..ட்…டு…”

என்று சொல்லியபடி திரும்பியவன், முன்னாடி தன் நண்பன் இல்லாமல் போக, இன்னும் பயம் சற்று அதிகரிக்க,

“அடப்பாவி பயலே, நண்பனு நம்பி உன்னை பார்க்க வந்ததுக்கு, நடுராத்திரல பைத்தியக்காரன் மாதிரி தனியா புலம்ப விட்டுட்டு போய்ட்டியேடா, ஐயையோ இப்போ நான் யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்னு, எனக்கே தெரியலையே……” 

என்று பயமிகுதியில் உலறியவன், சற்று நிதானித்து தன்னை திடப்படுத்தி கொள்ளும் விதமாக,

“அவன் சொன்னது தான் சரி, பேய், பிசாசு எல்லாம் வெறும் க…ட்…டு…க்…க…தை…டா… விஜய்” 

என்று சற்று உரக்கவே தனக்கு தானே சொல்லிகொள்ள, அதேநேரம், அவனின் பின்புறம் திடீரென பெருங்காற்று வீச ஆரம்பித்தது.

காற்றின் இனிமையான தீண்டல், பயந்திருந்தவனுக்கு யாரோ பல கைகள் கொண்டு, அவனை தீண்டுவது போல இருக்க, இருந்த கொஞ்ச, நஞ்ச தைரியமும் விடைப்பெற, அடுத்த நிமிடம்,

“அய்யோ, அம்மா, பேய்”

என்று அலறியபடி மாடிப்படிகளில் இறங்கி ஓட ஆரம்பித்திருந்தான் விஜய். 

கீழே நின்றிருந்த “பி.எஸ்” சோ, விஜயின் அலறல்களை  கேட்டதற்கு அடையாளமாக விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்தான்.

இப்படி அந்த இரவு “பி.எஸ்”கு சிரிப்புடனும், விஜய்க்கு சற்று கலவரத்துடனும் சென்று இருந்தாலும், பின்னாளில், தன்னிடம் சொல்லாமல், “பி.எஸ்” அந்த பிரச்சனையை அணுகிய விதத்தை கண்டு, விஜயால் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.

நண்பர்களின் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு வாரத்தில் “பி.எஸ்” தொழில்முறை சுற்றுப் பயணமாக இரண்டு மாதங்கள், வெளிநாட்டிற்கு செல்லும் செய்தி அரசல்புரசலாக பரவியது.

அதற்கு ஆதாரமாக விமானநிலையத்தில், விமானத்திற்கு காத்திருக்கும் “பி.எஸ்” இன் பின்புறம் மட்டும் தெளிவாக தெரியும் படி படமெடுக்கப்பட்ட காணொளி, எல்லா ஊடங்களிலும், அவனின் சுற்றுபயணத்தை பற்றிய விவரங்களுடன், செய்தியாக வெளியிடப்பட்டது.

அதேநேரத்தில் மத்தியதர மக்கள் வசிக்கும் ஒரு சாதாரண “தேவி காலனி” யில், மொட்டை மாடியில் இருக்கும், ஒரே  ஒரு அறைக் கொண்ட மிக சிறிய வீட்டில், மிக மிக சொற்ப பொருட்களுடன் குடி புகுந்தான் செழியன்.


காந்தன் வருவான்…………

Advertisement