Advertisement

குற்றம் என்னவென்று கண்டு பிடிக்கும் வரை தான், இருட்டில் பாதை தெரியாமல் நடப்பதை போல, நிறைய குழப்பங்கள், போராட்டங்கள் எல்லாம்.

மருந்து தொழிற்சாலையில் நடக்கும் குற்றத்தை கண்டுபிடிக்கும் வரை, தடுமாறிய நால்வரும், இது தான் குற்றம் என்று கண்டுபிடித்ததும், குற்றத்தை நிருபிக்க தேவையான ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தனர்.

அன்று தான், வெற்றியும் தமிழும் எப்படி இவர்களுக்கு தெரியாமல், அதிகப்படியான மருந்துகளை உற்பத்தி செய்து இருப்பார்கள் கண்டு பிடித்து இருந்தனர்.

அதை விஜய்யிடமும், செழியனிடமும் விளக்கும் விதமாக, தமிழ்,

“கிட்டத்தட்ட அந்நியன் பட ஸ்டைல்ல, பத்து பத்து பைசாவா, பத்து பத்து தடவை திருடுற மாதிரி, மெடிசன் அஹ ப்ரோடியூஸ் பண்ணி இருக்காங்க அண்ணா”

என்று சிரிப்புடன் ஆரம்பிக்க விஜய்யும், செழியனும் புரியாமல் பார்க்க, வெற்றி விரிவாக சொல்ல விழைந்து,

“இல்ல அண்ணா, மெடிசன் எல்லாம் பேட்ச் வைஸ் தானே ப்ரோடியூஸ் பண்ணுவாங்க”

என்று கேட்க, செழியன்,

“ஆமாடா ஒரு பேட்ச்கு இவ்ளோ டேப்லெட்னு ப்ரோடியூஸ் பண்ணுவாங்க, பார் எக்ஸாம்பல் ஒரு பேட்ச்கு பத்தாயிரம் டேப்லெட்னு ப்ரோடியூஸ் பண்ணணும்னு வச்சிக்குவோம்”

என்று சொல்ல, இதை பற்றி ஒன்றுமே தெரியாத விஜய்யை பார்த்து தொடர்ந்தவன்,

“ஒரு டேப்லெட்ல, எல்லா இன்கீரீடியண்ட் எந்த அளவு இருக்கணும்னு ஒரு அளவு இருக்கு, ஒரு டேப்லெட்-கான மெஷர்மெண்ட் அஹ, அப்படியே பத்தாயிரம் டேப்லெட்கு, எந்த எந்த இன்கீரீடியண்ட், எவ்ளோ அமௌண்ட் வேணும்னு கால்குலேட் பண்ணி தான் பண்ணுவாங்க”

என்று சொல்லி, ‘தான் சொல்லியது சரியா’ எனும் விதமாக வெற்றியை பார்க்க, ஆமோதிப்பாக தலையசைத்த வெற்றி,

“ஆமா அண்ணா, ஆனா அதுல பர்பக்ட் அஹ நாம பண்ண கவுண்ட் வராது, எஸ்பெக்டட் அமௌண்ட் விட கொஞ்சம் அதிகமா தானே வரும்”

என்று கேட்க, செழியனுக்கும் சரி விஜய்க்கும் சரி, தமிழ் சொன்ன “அந்நியன் ஸ்டைல்” என்னவென்று புரிந்தது.

ஆனால் விஜய்க்கு வேற ஒரு சந்தேகம் முளைக்க,

“நீ சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும், எல்லா பேட்ச்லையும் எஸ்ட்ராவா ப்ரோடுடியூஸ் ஆகுற மெடிசன் அஹ, கம்பனில பொதுவா என்ன பண்ணுவாங்க “

என்று கேட்க, விஜய்யின் கேள்விக்கு வெற்றி பதிலளிக்கும் விதமாக,

“பேட்ச்ல பிளான் பண்ண கவுண்ட் டேப்லெட் பேக்கிங் முடிஞ்சதும், எஸ்ட்ராவா இருக்கிறதை ‘கியூ.ஏ’ பர்சன் முன்னாடி, டிஸ்போஸ் பண்ணனும், மோஸ்லி தண்ணீர்ல கரைச்சி கீழ ஊத்திடுவாங்க”

என்று சொல்ல, விஜய்யோ புரியாமல்,

“ஏன் அப்படி பண்ணனும், அதையும் பேக் பண்ணி, சேல் பண்ணலாம் இல்ல”

என்று கேட்க, இதற்கு செழியன் பதிலளிக்கும் விதமாக,

“பேக்கிங் பண்ற அப்போ, அது ப்ரோடியூஸ் ஆகுற டேட் வச்சி தான் அதோட எஸ்பியரி டேட் பிக்ஸ் பண்ணுவாங்க, ஒரு வேளை இந்த எஸ்ட்ரா டேப்லெட் எல்லாம், நெஸ்ட் டே ப்ரோடியூஸ் பண்ற டேப்லெட் கூட மிக்ஸ் ஆகிட்டா, எஸ்பியரி டேட் மாறும் இல்லயா, அதை அவாய்ட் பண்ண தான் வெற்றி சொன்ன ப்ரோசஸ்ஸ் அஹ பண்ணுவாங்க”

என்று விளக்க, விஜய் யோசனையுடன்

“ஏன் வெற்றி நீ சொல்ற மாதிரி, எல்லா பேட்ச்லையும், கொஞ்சம் கொஞ்சம் எஸ்ட்ராவா ப்ரோடியூஸ் பண்ணறதை மட்டும் எடுத்து வைத்த, அதற்கு நிறைய நாள் ஆகாதா???”

என்று கேட்க, வெற்றியோ,

“ஆமா அண்ணா, நீங்க சொல்றது சரி தான், ஆனா நான் என்ன சொல்ல வந்தது என்னன்னா, அவங்க பதுக்க தனியா மருந்தை உற்பத்தி பண்ணல, அந்த குறிப்பிட்ட மருந்தை உற்பத்தி பண்ணும் போது எல்லாம், பேட்ச் கவுண்ட்ல கிட்டதட்ட ஐம்பது சதவீதம், அதிகமா ப்ரோடியூஸ் பண்ணி, எஸ்ட்ரா டேப்லெட் அஹ டிஸ்போஸ் பண்ணாம பேக் பண்ணி ஸ்டார் பண்ணுறாங்க”

என்று விலாவாரியாக சொல்ல, எதையோ யோசித்த செழியன்,

“அப்போ நீ சொல்றதை எல்லாம் பார்த்தா, கம்பனில இருக்கிற நிறைய பேருக்கு இதுல பங்கு இருக்கும் போலவே”

என்று இழுக்க, தமிழ் ஒரு பட்டியலை, செழியனிடமும், விஜய்யிடம் நீட்டி,

“அந்த டேப்லெட் கம்பனில ப்ரோடுடியூஸ் பண்ண, எல்லா டைம்மும், இந்த லிஸ்ட்ல இருக்குறவங்க மட்டும் தான் ஷிப்ட்ல இருந்து இருக்காங்க, அண்ணா”

என்று கொடுக்க, அந்த பட்டியலில் மருந்து செய்ய ஆரம்பிப்பது முதல், கடைசியாக அதை அட்டையில் அடைக்கும் வரையிலான பணியில், ஈடுபட்ட எல்லா துறையை சேர்ந்தவர்களின் பெயர்களும் இருந்தது.

அதை பார்த்த செழியன், வெற்றி, தமிழ் இருவரையும் தோளில் தட்டி கொடுத்து,

“குட் ஜாப் பாய்ஸ்”

என்று சொல்ல, இவருக்கும் செழியனிடம் இருந்து கிடைத்த பாராட்டில் அவ்வளவு மகிழ்ச்சி. அதை மறைக்காமல், முகத்தில் “ஈஈஈ” என்று காட்டியபடி நின்றிருந்தனர்.

அப்போது செழியனின் அலைபேசி ஓசை எழுப்ப, புதிய எண்ணில் இருந்துது அழைப்பு வர, யோசனையுடன் அதை பார்த்த செழியன், அழைப்பை ஏற்று கம்பீரமான குரலில்,

“ஹலோ”

என்று சொல்ல, அந்த பக்கமோ ஒரே அமைதி. தன் கைப்பேசியை பார்த்தவன், அழைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க மீண்டும்,

“ஹலோ”

என்க, இப்போது அந்த பக்கம் இருந்து,

“ஹலோ, நான் சுந்தரம்”

என்று சொல்ல, செழியனோ அந்த பெயரை தன் நினைவடுக்கில் தேடி கொண்டிருக்க, அதற்குள் அந்த பக்கம் இருந்து,

“நங்கையோட சித்தப்பா பேசுறேன்”

என்று சொல்ல, நங்கை என்ற பெயர், செழியனின் குரல் அப்படி ஒரு மாற்றத்தை தர, வெகு மரியாதையாக,

“சொல்லுங்க சார்”

என்று சொல்ல, அவரோ,

“கற்பகம் சொன்னா, நீங்க நங்கையை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா”

என்று இழுக்க, செழியனோ தன் வாய் மொழியாகவே,

“ஆமா சார், எனக்கு நங்கையை பிடிச்சி இருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன்”

என்று சொல்ல, அங்கு இருந்த மூவரும் செழியனின் பேச்சில் அவனை ஆர்வமாக பார்க்க, நங்கையின் சித்தப்பாவோ சுற்றி வளைக்காமல் நேரடியாக,

“உங்களுக்கு பற்றி விசாரிச்சேன், எங்களுக்கு பரிபூரண திருப்தி, நீங்க நங்கையை பார்த்து பேசுங்க, நங்கைக்கும் சரின்னா மேற்கொண்டு பேசுவோம்”

என்று சொல்ல, செழியனோ மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய், வார்த்தைகள் வராமல் திக்கி,

“சரிங்க சார்”

என்று சொல்ல, ஏதோ சொல்ல வந்து, ஒரு நொடி தயங்கிய அவரோ,

“நங்கை உங்களுக்கு கால் பண்ணும், பேசிட்டு சொல்லுங்க, அப்போ நான் வைக்கிறேன் தம்பி”

என்று அழைப்பை துண்டிக்க, அடுத்த நொடி செழியனின் அலைப்பேசி, நங்கையின் அழைப்பை தாங்கி வந்தது.

“எவன்ஜெலின்”

என்று திரையில் ஒளிர்ந்த பெயரை செழியன் விழிவிரித்து பார்த்திருந்தான். செழியனின் பார்வையையும், அவனின் அலைபேசியையும் எட்டி பார்த்த விஜய், அழைப்பை ஏற்று செழியனின் காதில் வைத்து, பேசுமாறு சைகை செய்தான்.

விஜய்யை முறைக்க கூட நேரம் இல்லாமல், குரல் வலையை தாண்டி வர மறுத்த குரலை, கட்டி இழுத்து வந்து செழியன் ‘ஹலோ’ என்று சொல்வதற்குள், நங்கை மூன்று ‘ஹலோ’வை உதிர்த்திருந்தாள்.

செழியன் ஹலோ என்றதும் நங்கை,

“செழியன் சார், நான் நங்கை”

என்று மேற்கொண்டு எப்படி பேசுவது என்று யோசிக்க, அவளின் குரல் வழி தன் பெயரை கேட்ட செழியன், பறக்க துடித்த மனதை இழுத்து பிடித்து கட்டியபடி, அவளின் தயக்கம் உணர்ந்து,

“உங்க சித்தப்பா சொன்னாங்க நங்கை, எங்க மீட் பண்ணா உங்களுக்கு கம்பர்டபிளா இருக்கும்னு சொல்லுங்க, அங்கேயே பார்க்கலாம்”

என்று சொல்ல, நங்கை வீட்டிற்கு வரும் வழியில் இருக்கும் ஒரு காபி ஷாப்பிற்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் வர சொல்லி, அழைப்பை துண்டித்தாள்.

செழியன் அழைப்பை வைத்ததும், மூவரும் அவனை சூழ்ந்து கொள்ள, செழியனோ கனவில் மிதப்பவன் போலவே, அதரங்களில் நிறைந்த புன்னகையுடன் இருந்தான்.

செழியனின் முதுகில் ஒரு அடி வைத்து, அவனை நிஜ உலகத்திற்கு அழைத்து வந்த விஜய்,

“என்னடா கனவு கண்டுகிட்டு இருக்க, சிஸ்டர் என்ன சொன்னாங்க”

என்று கேட்க, நங்கை பேசியதை செழியன் சொல்ல, விஜய்யோ,

“அப்போ கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க, இந்த ட்ராபிக்ல நீ நீந்திக்கிட்டு போக சரியா இருக்கும்”

என்று அவனை துரிதப்படுத்தி அனுப்பி வைத்தான்.

விஜய் சொல்லியபடி வாகன நெரிசல் அதிகம் இருக்க, செழியன் நங்கை சொன்ன இடத்திற்கு வரும் போது, அங்கு முன்பே வந்து, நங்கை அவனுக்காக காத்திருந்தாள்.

தன் இருசக்கர வாகனத்தில் கண்ணாடியில் முகத்தை ஒரு முறை பார்த்து, தலையை சரி செய்து கொண்ட செழியன் உள்ளே சென்றான்.

அவனை பார்த்த நங்கை, வழக்கம் போல அதே ஒரு சென்டிமீட்டர் அளவிலான புன்னகையையே பதிலாக தந்தாள்.

நங்கைக்கு எதிர் இருக்கையில், அவள் முகம் காணும் படி வசதியாக அமர்ந்த செழியன், இயல்பாக,

“சாரி செம ட்ராபிக், அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா”

என்று கேட்க, கொஞ்சமே கொஞ்சம் பதட்டத்தில் இருந்த நங்கை,

“இல்ல, இல்ல அது எல்லாம் ஒன்னும் இல்லை, நானும் இப்போ தான் வந்தேன்”

என்று சொல்ல, நங்கையின் முன்பு வெறும் தண்ணீர் மட்டும் இருக்க, கலைத்து போய் இருந்த நங்கையின் முகத்தை பார்த்துவிட்டு,

“என்ன சாப்பிடுறீங்க நங்கை”

என்று கேட்க, அங்கு ஒரு காபியின் விலை என்னவென்று அறிந்த நங்கை, வேண்டாம் என்று எப்படி தவிர்ப்பது என்று யோசிக்க, செழியனோ,

“ரொம்ப தலை வலியா இருக்கு, ஒரு காபி குடிச்சா பெட்டர் அஹ இருக்கும்”

என்று ஒரு கையால் தலையை அழுத்திவிட்ட படி சொல்ல, இனி மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால், நங்கை இருப்பதிலேயே விலை குறைவான ஒன்றை தேர்வு செய்தாள்.

நங்கையை ஒரு பார்வை பார்த்த செழியனோ, தனக்கு ஒரு காபியும், அதோடு இருவருக்கும் சேர்த்து கேக்கும் ஆர்டர் செய்தவன், நங்கையை பார்த்து,

“மதியம் சரியா சாப்பிடல லைட் அஹ பசிக்குது, உங்களை பார்க்க வச்சிட்டு நான் மட்டும் சாப்பிட முடியாது இல்ல, அதான் உங்களுக்கும் சேர்த்து கேக் ஆர்டர் பண்ணிட்டேன், சாரி”

என்று பாவமாக சொல்ல, நங்கையின் மனதோ தான் கொடுக்க வேண்டிய தன்னுடைய பங்கு எவ்வளவு என்று கணக்கிட, வெளியே மையமாக தலையாட்டி வைத்தாள்.

இன்று மதியம் சித்தி அலுவகத்திற்கு கைபேசியில் அழைத்து, ஒரு வரன் வந்திருப்பதாக சொல்லவும், நங்கைக்கு முதலில் கோவம் தான் வந்தது.

இரண்டு நாள் முன்னாடி தான், தான் அவ்வளவு பேசி இருக்க, மீண்டும் அவர் ஆரம்பிக்க, கடுப்புடன் பேச ஆரம்பிக்க, செழியன் என்ற பெயரே, நங்கையை திகைக்க வைக்க போதுமாக இருந்தது.

எல்லாவற்றையும் செழியனே சொல்லட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, கற்பகம் சித்தி செழியனை பற்றி எதுவுமே சொல்லவில்லை.

அதிசயமாக நங்கையும், செழியனின் வேலை, குடும்பம் என்று எதை பற்றிய தகவலையும் கேட்கவில்லை நங்கை.

இவள் அதிர்சியில் பேசாமல் இருக்க, அதற்குள் அவளின் சித்தி, இன்றே செழியனிடம் பேசி, ஒரு முடிவை சொல்ல சொல்லி, அழைப்பை துண்டித்து விட்டார்.

இன்னமும் செழியன் தன்னை மணக்க கேட்டதை நம்ப முடியாத நங்கைக்கு, செழியனை பார்த்து பேசுவதை தவிர வேற வழியும் இல்லாமல் போக, அவனை பார்க்க வந்திருந்தாள்.

தன்னுடைய வீட்டிலோ, செழியனின் வீட்டிலோ பார்த்து பேசினால், ஒரு வேளை இந்த சம்பந்தம் திருமணத்தில் முடியாத பட்சத்தில், அக்கம் பக்கத்தினருக்கு தவறாக பட வாய்ப்பு உள்ளது.

இந்த இடத்தை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், இங்கு இவர்கள் இருவரையும் தெரிந்தவர்கள், யாரும் வர வாய்ப்பில்லை தான்.

தாங்கள் ஆர்டர் கொடுத்தது வரும் வரை, நங்கை தன் சிந்தனையில் மூழ்கி இருக்க, செழியனோ நங்கையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்.

காபி வந்ததும், இருவரும் குடிக்க ஆரம்பிக்க, நங்கை வந்த விஷயத்தை பேச எண்ணி,

“சித்தி உங்க விருப்பம் பற்றி சொன்னாங்க, எனக்கு சில கண்டிஷன் இருக்கு, அதை சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

என்று ஆரம்பிக்க, செழியனோ நங்கையின் சித்தி இதை பற்றி தன்னிடம் ஏதும் கூறவில்லையே என்ற யோசனையுடன்,

“சொல்லுங்க நங்கை”

என்று மட்டும் சொல்ல, இரண்டு நாள் முன்னாடி வந்திருந்த வரன் பேசிய நினைவில் நங்கை,

“கல்யாணத்துக்கு அப்புறமும் மாறன் பொறுப்பு என்னுடையது தான், அவனை ஹாஸ்டலுக்கு அனுப்ப எல்லாம், நான் சம்மதிக்க மாட்டேன்”

என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி, செழியனின் முகத்தை பார்க்க, அவனோ குழப்பத்துடன்,

“மாறனை எதுக்கு ஹாஸ்டலுக்கு அனுப்பனும், அவன் படிக்க ஆசைப்படுற காலேஜ், நம்ப வீட்டுல இருந்து பஸ்ல போய்ட்டு வர தூரம் தானே”

என்று புரியாமல் கேட்க, நன்மாறன், செழியன் நட்பை ஏற்கனவே அறிந்து தான் இருந்தால் நங்கை.

இருந்த போதிலும், நன்மாறன் தன் கல்லூரி விருப்பம் பற்றி பேசும் அளவு இருவரும் நெருக்கமா, என்று வியந்த நங்கை,

“மாறன் படிப்பு, அவனோட செலவு எல்லாம் நான் தான் பார்ப்பேன்”

என்று தன் எண்ணத்தை விளக்கமாக சொல்ல, இதை எல்லாம் நங்கை ஏன் சொல்கிறாள் என்று புரியாமல் பார்த்த செழியனோ,

“அது நம்ப கடமை தானே, இதை எல்லாம் ஏன் ஸ்பெசிபிக் அஹ சொல்றிங்கன்னு எனக்கு புரியல நங்கை”

என்று நேரடியாகவே கேட்க, செழியன் ‘உன் கடமை’ என்று சொல்லாமல், ‘நம் கடமை’ என்றதிலேயே அவனின் மனதை புரிந்து கொண்ட நங்கை, அவனின் கேள்விக்கு பதில் அளிக்காமல்,

“உங்க சேலரி எவ்ளோ”

என்று அடுத்த கேள்வியை கேட்க, இதை எதற்கு நங்கை கேட்கிறாள் என்று புரியாமல், அது கேட்க பட்ட விதம் யோசனையை தர, முன்னெச்சரிக்கையாக, அவளை ஓர கண்ணால் பார்த்து கொண்டே செழியன்,

“ஒரு பார்ட்டி பைவ் தவுசண்ட் இருக்கும்”

என்று குறைவாக ஒரு தொகையை சொல்ல, மனதிற்குள் சில கணக்குகளை போட்டு பார்த்த நங்கையோ,

“நீங்க எனக்கு கட்டுபடியாக மாட்டீங்களே செழியன் சார்”

என்று வெளிப்படையாக சொல்ல, செழியனோ பேந்த பேந்த முழித்தபடி,

“எது கட்டுபடியாக மாட்டனா”

என்று கேட்க, அவனின் பாவனையை இரசிக்க துடித்த மனதை கட்டுப்படுத்தியபடி, நங்கை,

“உங்க சேலரிக்கு குறைந்தது இருபது பவுன் நகை, டூ வீலர் எல்லாம் உங்க வீட்டுல எதிர்பார்பாங்க, என்னால அவ்ளோ வரதட்சணை எல்லாம் கொடுக்க முடியாது”

என்று சொல்ல, தன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்,

“உங்க சித்தி உங்ககிட்ட சொல்லல போல, எனக்குன்னு யாரும் இல்லை, உங்களை கல்யாணம் பண்ணா, நீங்களும், மாறனும் தான் என் சொந்தம்”

என்று சொல்ல, செழியனின் பதிலில் மனம் எல்லாம் பாரமாக நங்கை,

“சாரி, சாரி செழியன் சார், எனக்கு தெரியாது”

என்று உண்மையான வருத்ததுடன் மன்னிப்பு கேட்க, ஒரு சிரிப்புடன் தன்னுடைய இயல்புக்கு திரும்பிய செழியன், காரியத்தில் கண்ணாக,

“என்னோட சொந்தமாக வர, உங்களுக்கு சம்மதமா நங்கை”

என்று அவளின் கண்களை பார்த்து கேட்க, காதல் முகிழும் செழியனின் கண்களை சந்திக்க முடியாமல், முதல் முறை தன் கண்ணை தாழ்த்தி கொண்ட நங்கை,

“ம்ம்ம்ம்”

என்று சம்மதம் தர, செழியனோ நங்கையின் சம்மதத்தை நம்ப முடியாமல், எங்கே கண்களை சிமிட்டினால், எல்லாம் கனவாக கலைந்து விடுமோ என்ற ஐயத்தில், உறைந்து போய் அமர்ந்திருந்தான்.

காந்தன் வருவான்……….

Advertisement