Advertisement

நங்கையின் சித்தி முகவரியை கண்டுபிடிக்க தான் எடுத்து கொண்ட இந்த இரண்டு நாட்களில், நங்கைக்கு ஒரு வரனுடன் அவர் வருவார், என்று சற்றும் எதிர்பாக்காத செழியனுக்கு ஆயாசமாக இருந்தது.

“முறைப்படி பொண்ணு பார்க்க கூட வரல, வெறும் பேச்சு வார்த்தை தானே”

என்று செழியன் தன்னை தானே தேற்றி கொள்ள முயன்றாலும், அவனின் மனதோ,

“இந்த முறை நங்கையை மிஸ் பண்ணா, வாழ்க்கை முழுவதுக்கும் நங்கை உனக்கு இல்லை”

என்று விடாமல் அரட்ட,

“இல்லை, இல்லை, இந்த முறை என்ன ஆனாலும் சரி, நங்கையை விட மாட்டேன்”

என்று மனதிற்குள் உருப்போட்டு கொண்டவன், இருளை வெறித்த வண்ணம், தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர, போராடி கொண்டிருந்தான்.

அதற்குள் நங்கையின் சித்தி, முதல் படியில் நின்று நன்மாறனை கூப்பிட, வீட்டின் வாசலில் நின்றிருந்த செழியனின் செவியில் அது எல்லாம் விழவேயில்லை.

தன் சித்தியின் குரலில், உள்ளிருந்து வந்த நன்மாறனோ, செழியனின் முகத்தை பார்த்து,

“ஏதோ பிரச்சனனை”

என்ற அளவில் மட்டும் புரிந்து கொண்டு, அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல்,

“சித்தி கூப்டுறாங்க சார், நான் வரேன்”

என்று சொல்லி விடைபெற்றான். நன்மாறனின் வார்த்தைகள் செவியை சென்று சேர்ந்தாலும், மூளை அதை எல்லாம் உள்வாங்கி கொள்ளவே இல்லை.

அவனுடைய எண்ணம் எல்லாம், “எங்கே நங்கையை இழந்து விடுமோ” என்ற ஒற்றை புள்ளியிலே சுழன்று கொண்டிருந்தது.

அன்றைய இரவு தூங்கா இரவாக, நேரத்தை நெட்டி தள்ளி, விடியளுக்காக காத்திருந்தான் செழியன்.

மனது முழுக்க வலியில் திளைத்திருக்க, நேற்று நங்கையை பார்க்காமல் இருந்து இருக்க, தன் வலிக்கு எல்லாம், அவள் தான் மருந்து என்பது போல, வழக்கமான தன் இடத்தில், அவளை காண காத்திருந்தான் செழியன்.

என்றும் போல, இன்றும் நங்கை இவனை ஏறெடுத்தும் பார்க்காமல் செல்ல, காயம் கொண்டிருந்த செழியனின் மனதோ, அவளின், ஒரே ஒரு பார்வைக்கு ஏங்கி தவித்திருந்தது.

எதையும் எதிர்பார்க்காமல், ஒருவர் மேல் செலுத்தும் அன்பு தான், மேன்மையானது, உண்மையானதும் கூட.

இருந்த போதிலும் நாம் செலுத்தும் அன்புக்கு, நம்மவர்களிடம் இருந்து, ஒரு சிறு பிரதிபளிப்பையாவது எதிர்பார்ப்பது மனித இயல்பு தானே.

சொல்லாத தன் காதல், நங்கைக்கு புரியவில்லை என்ற உண்மையாய் ஏற்று கொண்ட செழியனுக்கு, இந்த ஒரு மாதத்தில், நங்கையிடம், தான் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை, என்பதை ஏற்றுக்கொள்ள தான் கஷ்டமாக இருந்தது.

தன் வலி, சோகம் எல்லாவற்றையும் தூக்கி தூர வைத்துவிட்டு, அதரத்தில் ஒரு போலி புன்னகையை ஒட்ட வைத்தவன், தேர்ந்து உடையணிந்து கீழே வந்தான்.

நன்மாறன் பள்ளிக்கு செல்ல கிளம்பி, தன் பையுடன் வெளியே வருவதை பார்த்து,

“மாறா ஸ்கூல் போறியா என்ன, கை சரியாகிடுச்சா”

என்று ஒட்ட வைத்த புன்னகையுடன் கேட்க, செழியனை போல, தன் வருத்தத்தை மறைக்க எந்த முயற்சியும் செய்யாமல், வதங்கி போன முகத்துடனே செழியனை ஏறிட்ட நன்மாறன்,

“ஓர் அளவுக்கு சரியாகிடுச்சு சார், அல்ரெடி டூ டேஸ் லீவ், அதான் இன்னைக்கு கிளம்பிட்டேன்”

என்று சொல்ல, படப்படக்கும் தன் மனதை வெளியே காட்டி கொள்ளாமல்,

“அப்புறம் என்ன ஆச்சு, நேத்து உங்க அக்காவை”

என்று முழுதும் சொல்லி முடிக்காமல், சொல்ல பிடிக்காமல் இழுக்க, நன்மாறனோ, செழியன் கேட்க வருவதை புரிந்து கொண்டு,

“அக்கா வேண்டாம் சொல்லிட்டாங்க சார்”

என்று ஒற்றை வரியில் பதிலை சொல்ல, உணர்ச்சிகளின் பிடியில் இருந்த செழியனோ,

“ஓஓஓ”

என்று மட்டும் தான் சொன்னான். நன்மாறன் பதில் சொல்ல எடுத்து கொண்ட, அந்த இரண்டு வினாடிகளில், அவன் இதயம் துடித்த துடிப்பை, அவன் மட்டுமே அறிவான்.

நன்மாறன் சோகத்துடன் நடந்ததை சொல்ல, செழியனின் முகத்திலோ பெயருக்கு ஒட்ட வைத்த புன்னகை, அப்போது தான் உண்மையாகவே மலர்ந்தது.

இரவில் இருந்து, இதயத்தை அழுத்தி கொண்டிருந்த பாரம் ஒன்று, எதிர்பாராமல் இலகுவான இறகாகி போன உணர்வு செழியனுக்கு.

பள்ளிக்கு நேரம் ஆகிறது என்று சொல்லி, நன்மாறன் செழியனிடம் விடைபெற, அவனை வழியனுப்ப வெளியே வந்தார் கற்பகம் சித்தி.

வாசலில் நின்று நன்மாறனிடம் பேசி கொண்டிருந்த செழியனை, யார் இது எனும் விதமாக பார்க்க, அவரின் பார்வையை பார்த்த நன்மாறன்,

“சித்தி இது செழியன் சார், மாடில குடி இருக்காரு”

என்று சொல்லி அறிமுகப்படுத்த, செழியன் வணக்கம் வைக்க, அவரும் பதிலுக்கு வணக்கம் சொன்னவர், நன்மாறன் பள்ளிக்கு கிளம்பியதும், உள்ளே செல்ல திரும்பினார்.

ஒரு முறை ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து, தன்னை திடப்படுத்தி கொண்ட செழியன், உள்ளே செல்ல திரும்பிய அவரை,

“ஒ..ரு.., ஒரு நிமிஷம்”

என்றவன் அவரை எப்படி அழைப்பது என்று தெரியாமல் நிறுத்த, இவனை திரும்பி பார்த்த அவரோ, “என்ன தம்பி” என்று சாதாரணமாகவே கேட்டார்.

நேற்று நங்கையே நன்மாறனை செழியன் வீட்டிற்கு அனுப்பியதிலும், இங்கு யாரிடமும் பேசாத நன்மாறன், சஜமாக செழியனிடம் பேசியதிலும், அவருக்கு செழியன் மேல் ஒரு நல்ல எண்ணம் வந்து இருந்தது. செழியனோ,

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமே”

என்று சொல்ல, இந்த பையனுக்கு தன்னிடம் பேச என்ன இருக்க போகிறது என்று யோசித்த போதிலும், அவனை உள்ளே அழைத்தவர், அமர நாற்காலியும் எடுத்து போட்டார்.

இப்போது தான் முதல் முறையாக நங்கையின் வீட்டுக்கு வந்திருக்கும் செழியன், வீட்டை சுற்றி தன் பார்வையை ஓட்டினான்.

அதற்குள் செழியனுக்கு, அருந்த நீரை ஒரு குவளையில் எடுத்து வந்து கொடுத்தார் கற்பகம் சித்தி.

அந்த நீரை வாங்கி மேசையில் வைத்த செழியன், விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசனையில் இருக்க, சித்தியோ இவன் பேசுவதற்காக காத்திருந்தார்.

“நான் நங்கையை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”

என்று எடுத்த எடுப்பிலேயே விஷயத்தை சொன்னவன், மளமளவென நங்கையை தான் காதலித்ததில் ஆரம்பித்து, அவளுக்காக இங்கு குடி வந்தது வரை அனைத்தையும் சொன்னான்.

செழியன் சொல்ல அனைத்தையும் கேட்ட, நங்கையின் சித்தியோ அதிர்ச்சியில் இருந்தார். நடுத்தர குடும்பங்களில், இன்றளவும் காதல் ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே.

இதில் அவருக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இது செழியனின் விருப்பம் மட்டும் தான்.

அதோடு செழியனின் காதல், விருப்பம் எல்லாம், நங்கைக்கு தெரியாது என்பது தான். தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வராத கற்பகம் சித்தி,

“இப்படி திடுதிப்புன்னு வந்து காதல், அது இதுன்னு சொன்னா எப்படி தம்பி”

என்று தயக்கத்துடன் கேட்க, அவரை புன்னகையுடன் பார்த்த செழியன்,

“எனக்கு புரியுது, இப்படி யாருனே தெரியாத ஒருத்தன் வந்து, உங்க பெண்ணை விரும்புறேன், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் சொன்னா, உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்”

என்றவன், தன் பர்ஸில் இருந்து தன்னுடைய கார்டை எடுத்து, அதை அவரிடம் நீட்டியபடி,

“இது என்னோட கார்ட், என்ன பத்தி விசாரிச்சுட்டு, அப்புறமா உங்க முடிவை சொன்னா போதும்”

என்று சொல்ல, அவன் கொடுத்த கார்டை வாங்கி பார்த்த நங்கையின் சித்தியோ, முன்னினும் அதிக அதிர்ச்சியுடன்,

“இது, இது”

என்று திணற ஆரம்பித்தார். காதலே அவருக்கு அதிர்ச்சி என்றால், அவன் கொடுத்த கார்டில் இருந்த விவரம், அவரை மிரல தான் செய்தது..

இதை நான் எதிர்பார்த்தேன் என்ற பாவனையுடன், தன் வாடா புன்னகையுடன் அவரை பார்த்த செழியன்,

“நீங்க பெரியவங்க உங்க கிட்ட எதையும் மறைக்க நான் விரும்பல, நான் யாருன்னு இங்க இருக்குற யாருக்குமே தெரியாது, நங்கை, நன்மாறனுக்கு கூட”

என்றவன் சுருக்கமாக, தான் இப்போது செய்து கொண்டிருப்பவை பற்றியும், மேலோட்டமாக சொல்லி வைத்தான்.

நங்கையின் சித்தி, செழியனை பரிதாபமாக பார்த்து வைக்க, செழியனோ,

“நீங்க பயப்பட எல்லாம் எதுவுமே இல்லை, நங்கை எப்படி ஐ.டில வேலை பாக்குறாங்களோ, அதே மாதிரி, நான் என்னோட வருமானத்துக்காக பண்றது தான் அந்த கார்டுல இருக்கு”

என்று சாதாரணம் போல சொல்லி, கற்பகம் சித்தியின் பயத்தை போக்க முயன்றவன் தொடர்ந்து,

“நான் நல்லவனா, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனா, நங்கைக்கு பொருத்தமா இருப்பேனா, நங்கையும், நன்மாறனையும் நல்லா பார்த்துக்குற அளவுக்கு வருமானம் இருக்கா, இப்படி யோசிச்சி பாருங்களேன்”

என்று அவரை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டுமே என்று பேச, நன்மாறனையும் நங்கையோடு சேர்த்து சொன்னதிலேயே, கற்பகம் சித்திக்கு செழியனை பிடித்து விட்டது.

இருந்த போதிலும், இது கல்யாண விஷயம். வாழ்வு முழுமைக்குமான உறவு. இதில் எடுத்தோம், கழித்தோம் என்று முடிவு எடுக்க அவர் தயாராக இல்லை.

எனவே கொஞ்ச நேரம் யோசித்தவர்,

“இதுல நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது தம்பி, நங்கை சித்தப்பா கிட்ட கேட்கணும், நங்கை கிட்ட பேசணும், உங்க உண்மையான அடையாளம் என்னனு, நங்கைக்கும் தெரியாதுனு சொல்றிங்க”

என்று மறைமுகமாக தனக்கு சம்மதம் என்று சொல்ல, பெரிதாக புன்னகைத்த செழியன்,

“நானே உங்களையும், நங்கை சித்தப்பாவையும் நேரில் சிதம்பரம்ல வந்து பார்க்குறதா தான் இருந்தேன், ஆனா அதுக்குள்ள”

என்றவன் நேற்று நடந்ததை பற்றி பேச விரும்பாமல்,

“நங்கை சித்தப்பா கிட்ட நான் பேசனும்னாலும் சொல்லுங்க பேசுறேன், எனக்கு இந்த முறை எல்லாம் தெரியாது,”

என்று சொல்ல, கற்பகம் சித்தியோ ஒரு புன்னகையுடன்,

“அது எல்லாம் வேண்டாம் தம்பி, நானே பேசிட்டு சொல்றேன்”

என்று சொல்ல, முற்று முழுதாக வேண்டாம் என்று மறுக்காமல், விசாரித்துவிட்டு பேசலாம் என்றதே ஒரு நம்பிக்கையை தர,

“சரிங்க, அப்போ நான் கிளம்புறேன்”

என்று சொன்னவன், தன் அலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்து, அவரின் எண்ணையும் வாங்கி கொண்டான்.

செழியன் வெளியேறிய நொடி முதல், கற்பகம் சித்தி, இந்த சம்பந்தத்தின் சாதக பாதகங்களை, தீவிரமாக அலச ஆரம்பித்தார்.

தனியாக இருக்கும் பெண் தானே என்று, காதலோடு நங்கையை அணுகாமல், திருமணதிற்கு தங்களை அணுகியது, அவருக்கு செழியன் மீது மரியாதையை கொடுத்தது.

எந்த இடத்திலும், செழியன் நன்மாறனை பிரித்து பேசவே இல்லை என்பதையும் குறித்து கொண்டார் அவர்.

நங்கை செழியனை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், நங்கை எதிர்பார்த்த மாதிரி செழியன் நன்மாறனின், பொறுப்பை ஏற்று கொள்வான் என்பதிலும் அவருக்கு ஐயமில்லை.

சமுதாயத்தில் அவனின் நிலையும், அடையாளமும் கொஞ்சம் அவரை மிரட்டிய போதிலும், செழியனை மணந்தால் நங்கையின் வாழ்க்கை, சிறக்கும் என்று தான் தோன்றியது அவருக்கு.

எனவே சிறிதும் தமாதிக்காமல், தன் கணவருக்கு அழைத்தார் கற்பகம் சித்தி.

அவர் அந்த பக்கம் அழைப்பை ஏற்றதும், மடமடவென, செழியன் பேசியதை எல்லாம் சொல்ல, நங்கையின் சித்தப்பா எல்லாவற்றையும் கவனமாக கேட்டு கொண்டவர்,

“நீ சொல்றத வச்சி பார்க்கும் போது நல்ல வரனா தான் தெரியுது, அப்பா, அம்மா இல்லாம நம்ப பொறுப்புல இருக்கிற பிள்ளை, நல்லா விசாரிப்போம், அதுவரைக்கும் நங்கை கிட்ட எதும் பேசாத சரியா “

என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு, தன் கைபேசியில் இணையத்தில் செழியனின் முழு பெயரை இட்டு தேட, குவிந்த விடைகளை ஆச்சர்யத்துடன் பார்த்தவர், அதை நிதானமாக படிக்க ஆரம்பித்தார்.

நங்கையின் வீட்டில் இருந்து வெளியே வந்த செழியனுக்கு, நங்கை, தன்னுடையவளாக ஆகும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை வந்தது.

உற்சாகத்தில் இருந்த செழியனுக்கு, அப்போது தான், தான் நேற்றே செய்திருக்க வேண்டிய ஒரு காரியம் நினைவுக்கு வந்தது.

அதை இப்போது செய்து முடிக்க சித்தம் கொண்டவன்,அலைப்பேசியை எடுத்து, விஜய்க்கு அழைத்தான்.

அங்கு தனது அறையில் இருந்த விஜய்யோ, தனக்கு கீழே பணிபுரியும் காவலரை கடுமையாக திட்டி கொண்டு இருந்தான்.

“உங்க கிட்ட ஒரு ஒர்க் கொடுத்து எவ்ளோ நாள் ஆச்சு, இன்னும் நான் கேட்ட ரிப்போர்ட் என் டேபிளுக்கு வரல, என்ன வேலை பார்க்குறீங்க நீங்க”

என்று காக்கி உடையில் சிங்கம் மாதிரி கம்பீரமாக தன் இருக்கையில் அமர்ந்து, உருமி கொண்டு இருக்க, அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த காவலரின் நிலமையோ படு மோசமாக இருந்தது.

இரும்பை ஒத்திருந்த குரலில் விஜய் கேட்ட கேள்விக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், பயத்தில் எச்சில் முழுங்கி கொண்டு அமர்ந்திருக்க, கைபேசி ஒலி எழுப்ப, திடுக்கிட்டு விஜய்யை பார்த்தார் அவர்.

கைப்பேசியின் ஓசையை கேட்டு, இன்னும் கடுப்பான விஜய், முன்னினும் கடுமையான குரலில்,

“ஹையர் ஆபிஸியல்ஸ் கூட மீட்டிங்கு வரும் போது, போன் அஹ சைலண்ட்ல போடணும்னு தெரியாதா”

என்று கேட்க, நடுங்கி கொண்டிருந்த அவரோ, கம்மிய குரலை சரி செய்து கொண்டு மெதுவாக,

“உங்க போன் தான் சார்”

என்று சொல்ல, அவரை ஒரு பார்வை பார்த்தவன், தன் கைபேசியை எடுத்து, அழைப்பவரை பார்த்துவிட்டு, அவரிடம் பேசி கொண்டிருந்த அதே இரும்பின் குரலில்,

“நான் கேட்ட கேஸ் டீடெயில்ஸ் நாளைக்கு என் டேபிள இருக்கணும், நீங்க போகலாம்”

என்று சொல்ல, விட்டால் போதுமென்று வெளியே கிட்டத்தட்ட ஓடிய அந்த காவலர்,

“ஹப்பா மனுஷன் அப்படியே சிங்கம் தான், அவர் குரலை கேட்டாலே படப்படனு ஆகிடுது, போன் பண்ண அப்பாவி ஜீவன் யாரோ, எவரோ, பாவம், மீடிங்கல இருக்கும் போது கால் பணத்துக்கு கடிச்சி கொதற போறாரு”

என்று செழியனுக்காக பாவப்பட்டவர், விஜய் சொல்லியது நினைவுக்கு வர, அவன் சொன்ன வேலையை முடிக்க விரைந்து சென்றார்.

உள்ளேயோ விஜய், அவரிடம் பேசிய அதே இரும்பின் குரலில் அழைப்பை ஏற்று, கம்பீரமாக,

“ஹலோ”

என்று சொல்ல, அந்த காவலரால் சிங்கம் என்று அழைக்கபட்ட விஜய்யை, அவரால் அப்பாவி என்று அழைக்கப்பட்ட செழியன்,

“உன்னை நம்பி, உன் கிட்ட போய் ஒரு வேலை கொடுத்தேன் பாரு என்னய சொல்லணும்”

என்று எடுத்த எடுப்பிலே வறுக்க ஆரம்பிக்க, செழியன் எதைப்பற்றி பேசுகிறான் என்று புரியாமல் பாவமாக விஜய்,

“என்னடா சொல்ற”

என்று கேட்க, அப்படி கேட்டவனின் மனமோ,

“இப்படி தானே அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுனேன், அவர் அப்படி மிரண்டாறு, இந்த பயபுள்ள மட்டும், எப்படி பேசுனாலும் அசர மாட்டுதே, இன்னும் பயிற்சி வேண்டுமோ”

என்று நினைத்து நொந்து கொள்ள, விஜய்யின் கேள்வியிலும், பாவனையிலும், போகவா என்று கேட்ட பொய் கோவத்தை, இழுத்து பிடித்த செழியனோ,

“நங்கை சித்தியோட வீட்டு அட்ரஸ் கண்டுபிடிக்க சொல்லி இருந்தேன் இல்ல”

என்று கேட்க, குழம்பி போன விஜய்,

“அதை தான் நேத்தே உன் கிட்ட கொடுத்தேனேடா”

என்று சொல்ல, செழியனோ,

“நல்லா வந்துடும் என் வாயில, நீ எல்லாம் ஒரு அசிஸ்டன்ட் கமிஷ்னர், போயும், போயும் ஒரு அட்ரஸ் கண்டு பிடிக்க ரெண்டு நாலு ஆகுது உனக்கு, நீ லேட் பண்ணதலா என்ன ஆச்சு தெரியுமா”

என்று ஆரம்பித்து, நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை நடந்ததை சொல்ல, விஜய்,

“உன்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை அவங்களுக்கு எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டான், எதுக்கு டைம் வேணுமாம் அவங்களுக்கு, நான் வேணா என் ஸ்டைல்ல பேசட்டுமா”

என்று செழியன் இவ்வளவு நேரம் திட்டியதை எல்லாம் மறந்து கேட்க, செழியனோ,

“வேணா ராசா, நீ பண்ண வரைக்குமே போதும், இப்போ யோசிச்சு நல்ல முடிவா சொல்றேன் சொல்லி இருக்காங்க, நீ பேசி அவங்களை வேண்டாம்னு சொல்ல வச்சிடாத, இது என் வாழ்க்கைடா வாழ்க்கை”

என்று அவனை கிண்டல் அடிக்க, விஜய்யோ,

“நீ இவ்ளோ தூரம் கெஞ்சி கேட்குறதுனால போன போகுதுன்னு விடுறேன், பட் உண்மையாவே அவங்க ரொம்ப தயங்குறாங்கனா சொல்லு, நானும் மகதியும் வந்து அவங்களை பார்த்து பேசுறோம்”

என்று சொல்ல, தன் நண்பனின் தன் மீதான அக்கறையில் நெகிழ்ந்த செழியன்,

“தேங்க்ஸ் விஜய்”

என்று சொல்லி, விஜய் தன்னை திட்டுவதற்கு முன், அழைப்பை துண்டித்து இருந்தான். அதரங்களில் உறைந்த புன்னகையுடன் வேலையை பார்க்கவும் கிளம்பினான் செழியன்.

காந்தன் வருவான்……….

Advertisement