Advertisement

ஒரு நிலையில் நிற்கும் வரை தானே, மனது அலைப்பாய்ந்து கொண்டிருக்கும். திருமணம் செய்து கொள்வது, என்று முடிவு எடுத்த பிறகு, செழியனின் மனது அமைதியில் திளைத்து விட்டது.

தன் தினசரி வழக்கம் போல நங்கையின் தரிசனத்தோடு, அவள் வேலைக்கு சென்ற பிறகு, நன்மாறனின் உடல் நலத்தை விசாரித்து, அவனிடம் சிறிது நேரம் உரையாடுவதையும், தன் வாடிக்கையாக்கி கொண்டான் செழியன்.

தொழிற்சாலை முழுக்க, தங்கள் கண்காணிப்பில் இருக்க, தங்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு, எப்படி அவர்களால் மருந்துகளை தயாரிக்க முடிந்தது என்பது அவர்களுக்கு ஒரு சவாலான கேள்வியாகவே இருந்தது.

அந்த கேள்விக்கான பதிலை கண்டு பிடிக்கும் முயற்சியில், வெற்றியும், தமிழும், பழைய காணொளிகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

செழியன் தொழிற்சாலையின் தற்போதைய நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டு இருந்தான்.

விஜய் செழியன் கேட்டு கொண்டபடி, மருந்துகளை பதுக்கி வைத்திருக்கும், சேமிப்பு கிடங்கை பற்றிய தகவல்களை சேமித்து கொண்டு இருந்தான்.

அரசாங்கத்தின் கட்டு பாட்டில் இருந்தாலும், இப்போது அந்த சேமிப்பு கிடங்கு, எந்த பொருளையும் சேமித்து வைப்பதற்கு தரமாக இல்லை என்ற முத்திரையுடன், சட்ட படி, எதற்கும் உபயோகபடுத்த படவில்லை.

அத்தகைய கிடங்கை தான், திரை மறைவில் நடைபெறும் வேலைக்கு, அந்த மந்திரி பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.

ஊரை விட்டு தள்ளி, தனியாக பழுதடைந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அந்த சேமிப்பு கிடங்கிற்கு செல்லும் வழியில், பிரதான சாலையில் மட்டுமே, சில இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தது.

தான் கண்டு பிடித்து திரட்டிய தகவல்களை விஜய் செழியனிடம் தர, அவனும் நன்றி சொல்லி அதை வாங்கி வைத்து கொண்டான்.

செழியன் அடுத்த நாளில் இருந்து தன் வழக்கம் போல, புன்னகையுடன் வலம் வர, அன்றைய அவனின் வருத்திற்கான காரணத்தை, யாரும் அவனிடம் கேட்க முற்படவில்லை.

பகலில் அந்த தனி வீட்டில் இருக்கும் செழியன், மற்ற மூவரிடமும் சொல்லாமல், இரவில் அந்த சேமிப்பு கிடங்கிற்கு தனியே, சென்று அதை நோட்டம் விட ஆரம்பித்தான்.

பகலில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கும் அந்த பகுதியில், இரவில் பார்த்தவுடன் அடியாட்கள் என்று அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய சிலர், நடமாடுவதை பார்த்தான் செழியன்.

எத்தனை நபர்கள் இருக்கிறார்கள், எத்தனை மணிக்கு வருகிறார்கள், எப்போது மறுபடியும் செல்கிறார்கள் என்பதை எல்லாம், இருட்டில் மறைந்து நின்று கவனித்து கொண்டிருந்தான் செழியன்.

இதற்கிடையில், அந்த மந்திரியின் பினாமி பெயரில், தமிழ்நாடு முழுக்க ஏதேனும் மருந்தகங்கள் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து கொண்டிருந்தான் செழியன்.

அன்று நங்கையின் சித்தி கற்பகம், சிதம்பரத்தில் இருந்து விடியற்காலையிலேயே வந்து சேர்ந்தார்.

அவரின் வருகையை அறிவிற்கும் வண்ணம், நங்கையின் வீட்டில் இருந்து உற்சாகமான பேச்சு குரலும், சிரிப்பும், செழியன் எழும் போதே, அவன் செவியை நிறைத்தது.

இதமான மனநிலையில் எழுந்த செழியன் வேலைக்கு கிளம்ப, அன்று நங்கை வேலைக்கு செல்லவில்லை போலும், செழியனுக்கு அவளின் தரிசனம் கிடைக்கவில்லை.

நங்கையை காணாமல் மனதின் இதம் குறைய, நெஞ்சம் கொஞ்சம் சுணுங்க, நங்கை வேலைக்கு செல்லாததால், நன்மாறனையும் பார்க்க இயலவில்லை செழியனால்.

காலையில் கேட்ட கலவையான குரலில், தன் மனது பிரித்து இரசித்து கேட்டிருந்த, நங்கையின் குரலை நினைத்து, தன்னை சமாதானப்படுத்தி கொண்டு கிளம்பினான் செழியன்.

இங்கு நங்கையின் வீட்டிலோ, நங்கைக்கு தனது சித்தியின் வரவு மகிழ்ச்சியாக இருந்த போதிலும், அவருடன் எழ போகும் வாக்குவாதத்தை நினைத்து சோர்வும் எழுந்தது.

நங்கையின் தாயும், தந்தையும் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்க, இந்த சித்தியாக பட்டவர், தூரத்து சொந்தம் தான்.

இருந்தும், நங்கையின் தாயும், இவரும் சிறு வயதில் பக்கத்து, பக்கத்து வீட்டில் வளர்ந்து இருக்க, உடன் பிறந்த அக்கா, தங்கை போலவே பாசம் கொண்டிருந்தனர்.

சிறு வயதில் நங்கையும், நன்மாறனும் ஆண்டு விடுமுறைக்கு, கற்பகம் சித்தியின் வீட்டிற்கு சென்று தங்கி வந்ததும் உண்டு.

சித்தியும், சித்தப்பாவும் உள்ளத்தால் வசதியானவர்கள் தான் என்ற போதிலும், நங்கை, நன்மாறன் இருவரின் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாதவர்கள்.

அதுவும் அவர்கள் சிதம்பரத்தில் இருக்க, நங்கை வேலையை விட்டு விட்டு, அங்கு சென்று அவர்களோடு தங்க முடியாது.

மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் சென்னையில் இருக்க, நங்கைக்கும் வேறு வேலை தெரியாது எனும் போது, முழுதாக அவர்களுக்கு பாரமாக அங்கு செல்ல நங்கை விரும்ப வில்லை.

சித்தி பிள்ளைகளின் படிப்பும், சித்தப்பாவின் வேலையும் அங்கு இருக்க, இவர்கள் இருவர்களுக்காக, அவர்களை இங்கு வர சொல்லவும் முடியாது இல்லையா.

நங்கையின் பெற்றோர் இறந்த போது, எல்லா காரியத்தையும் எடுத்து கவனித்து கொண்டவர்களும், முடிந்த அளவு கூடவே இருந்து இவர்களை தெரியவர்களும் இவர்கள் தான்.

கடந்த இரண்டு வருடமாக கற்பகம் சித்தியும், நங்கையின் திருமண விஷயமாக, விடாமல் படையெடுத்து கொண்டு தான் இருக்கிறார்.

நங்கையும் ஒவ்வொரு முறையும், ஏதாவது காரணம் சொல்லி, அதை தவிர்த்து கொண்டு தான் இருக்கிறாள்.

இந்த முறை கற்பகம் சித்தி, ஒரு முடிவோடு வந்து இருப்பது போல தெரிய, அவரே ஆரம்பிக்கட்டும், பிறகு, அவர் பேசுவதற்கு ஏற்றார் போல பேசி, அவரை சமாளித்து கொள்வோம் என்ற முடிவில் இருந்தாள் நங்கை.

நன்மாறனுக்கு அவனின் சித்தியின் வருகைக்கான காரணம் புரிந்திருக்க, இந்த முறையாவது அக்கா திருமணத்திற்கு ஒப்பு கொள்ள வேண்டுமே என்ற கவலையில் இருந்தான் அவன்.

தன்னை காரணமாக கொண்டே, நங்கை திருமணத்தை தவிர்ப்பதை, அவனும் அறிந்து தான் இருந்தான். அது அவனுக்கு அளவில்லா, வலியையும் தர தான் செய்தது.

இந்த முறையும் நங்கை மறுக்கும் பட்சத்தில், என்ன என்ன சொல்லி, தன் அக்காவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று, மனதிற்குள் தான் பேசிய வேண்டியவைகளை எல்லாம், தொகுத்து கொண்டிருந்தான் நன்மாறன்.

அவ்வளவு தொலைவில் இருந்து, தனியே தங்களை காண வந்திருக்கும் சித்திக்காக, இன்று விடுமுறை எடுக்க முடிவு செய்திருந்தாள் நங்கை.

தேவை என்று வந்தால், சனிக்கிழமை கூட சலிக்காமல் வந்து வேலை பார்க்கும் நங்கைக்கு, கேட்டவுடன் விடுப்பும் கிடைத்து விட்டது.

விடியற்காலையில் வந்த நங்கையின் சித்தி, வந்த கலைப்பு போக குளியல் போட்டவர்,, நங்கை மறுக்க மறுக்க, காலை உணவை தயார் செய்ய கிளம்பி விட்டார்.

நங்கைக்கு பிடித்த கத்திரிக்காயை வெங்காயம், தக்காளியுடன் வேகவைத்து, கடைந்து சட்னி செய்து, மொறு மொறு வென்று தோசை வார்த்து கொடுக்க, திருப்தியாக உண்டனர் அக்கா, தம்பி இருவரும்.

காலை உணவை முடித்த பிறகு, சித்தியை கட்டாயமாக ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பிய நங்கை, மதியத்திற்கு சமைக்க கடைக்கு சென்று அசைவம் வாங்கி வந்தாள்.

நங்கை செய்யும் பிரியாணி என்றால் அவளின் சித்திக்கு பிடிக்கும் என்பதால், அதையே செய்தவள், தொட்டுக்கொள்ள கறியை வேகவைத்து அதை உதிர்த்து, வெங்காயம், தேங்காய் எல்லாம் போட்டு கறி பொடிமாஸ்ம் செய்தாள்.

மதிய உணவு முடித்தவுடன், நன்மாறனுக்கு மாத்திரை கொடுத்து, அவனை உறங்க சொல்லி அறைக்கு அனுப்பி வைத்தாள் நங்கை.

தேவி பாட்டிக்கு, காலையிலே கற்பகம் சித்தி வந்திருப்பது தெரியும். இருந்த போதிலும் நங்கைக்கும், அவளின் சித்திக்கும் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கும் என்பதால் தான், அப்போதே வீட்டிற்கு வரவில்லை பாட்டி.

சித்தியும், நங்கையும் வரவேற்பறையில் வந்து ஓய்வாக அமர, அப்போது தேவி பாட்டியும் வந்து சேர்ந்தார்.

கற்பகம் சித்தி தான், நங்கையை தனியாக சமாளிக்க முடியாது என்று, அவரை வர சொல்லி அழைத்து இருந்தார்.

தேவி பாட்டி, நங்கையின் சித்தியிடம் பொதுவான அவர்களின் நலன்களை விசாரித்து முடிக்க, கற்பகம் சித்தி மெதுவாக தான் வந்த பேச்சை பேச ஆரம்பித்தார்.

“ஏன் நங்கை, இன்னும் எவ்ளோ நாள் தான் இப்படி கல்யாணத்தை தள்ளி போடுறதா இருக்க”

என்று கேட்க, தேவி பாட்டியும் அவருடன் சேர்ந்து கொண்டு,

“வருஷம் ஏற ஏற வயது குறையுதுனு நினைப்பா உனக்கு நங்கை, அது அது பண்ண வேண்டிய நேரத்தில் பண்ண வேண்டாமா”

என்று அவரும் நங்கையை ஒரு பக்கம் தாக்க, நங்கையோ,

“கல்யாணம்னா சும்மாவா ஆயா, வரதட்சணை, சீர் அது இதுன்னு எவ்ளோ இருக்கு, அதுக்கு எல்லாம் பணம் வேணாமா”

என்று தங்களின் பொருளாதார நிலையை காரணமாக சொல்ல, நங்கையை ஆதுரத்துடன் பார்த்த தேவி பாட்டியோ,

“நீ ஹ்ம்ம்னு மட்டும் சொல்லு, நாங்களே பொண்ணுக்கு நகை போட்டு கல்யாணம் பண்ணிக்கிறோம், நீங்க பொண்ணு கொடுத்தா மட்டும் போதும்னு சொல்லி எவ்ளோ பேரு வருவாங்க தெரியுமா”

என்று சொல்ல, அவரின் தன் மீதான பாசத்தில் நங்கைக்கு சிரிப்பு வர, அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவருக்கு நிதர்சனத்தை எடுத்து சொல்லும் விதமாக,

“ஆயா நீங்க சீரியல் பார்த்து ரொம்ப கேட்டு போய் இருக்கீங்க, நெஜத்துல அப்படி எல்லாம் யாரும் வரமாட்டங்க, பையன் வேண்டாம் சொன்னாலும் அவங்க வீட்டுல கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க”

என்று நடைமுறையை விளக்க, இப்போது வாயை திறந்த நங்கையின் சித்தியோ,

“அடியேய் யாரும் உன்னை, ஒண்ணுமே இல்லாம கல்யாணம் பண்ணிட்டு போக சொல்லல, எங்க அக்கா உனக்கு சேர்த்து வச்ச நகை, ஒரு பத்து பவுனாவது இருக்காது, அப்புறம் அவங்க இன்சூரன்ஸ் வந்த அமெண்ட் இருக்கும் தானே”

என்று கேட்க, தன் தலையை குனிந்து கொண்ட நங்கை,

“அம்மா நகை, எனக்கு வாங்குனது எல்லாம் சேர்த்து பத்து பவுன் இருக்கும் தான் சித்தி, ஆனா அந்த பணம் எனக்கு மட்டும் உரிமையானது இல்லையே, மாறனுக்கும் பங்கு இருக்கு இல்ல அதுல”

என்று சொல்ல, அவளை முறைத்த அவளின் சித்தியோ, இப்படியே விட்டா இப்படி தான் எதாவது காரணம் சொல்லுவாள் என்று புரிந்து கோபமாக,

“இப்போ நீ முடிவா என்ன தான் சொல்ற”

என்று கேட்க, அவரின் கோவம் தன் மீதான பாசம் இல்லையா, தன் மீது உண்மையான பாசம் கொண்டிருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர் அல்லவா, அதனால் நங்கை,

“இன்னும் ஒரு மூணு இல்லனா நாலு வருஷம் போகட்டும் சித்தி”

என்று திருமணத்தை பற்றிய தன் உண்மையான முடிவை சொல்ல, கடுப்பான தேவி பாட்டியோ,

“ஏன் நாலு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ற, பேசாம நேரடியா அறுபதாவது கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே”

என்று பொரிந்து தள்ள, கற்பகம் சித்தியோ,

“அது என்ன நாலு வருஷம் கணக்கு”

என்று ஒன்றும் அறியாதவரை போல கேட்க, உங்களுக்கு தெரியாதா எனும் விதமாக அவரை பார்த்த நங்கை,

“அதுக்குள்ள மாறன் படிச்சி முடிச்சுடுவான், ஒரு வேலைக்கும் போய்டுவான், அதுக்கு அப்புறம்”

என்று இழுக்க, நங்கையை தீயாய் முறைத்த தேவி பாட்டி,

“மாறன் சொந்த கால்ல நின்னுடுவான், நீ என்ன பண்ணுவ, அப்போ உனக்கு என்ன வயசு ஆகும் தெரியுமா, கல்யாணம் எல்லாம் காலா காலத்துல பண்ணனும்”

என்று சொல்ல, கற்பகம் சித்தியோ கண்கலங்க,

“இதே என்னோட அக்கா, மாமா இருந்து இருந்தா உன்னை இப்படி விட்டு இருப்பாங்களா, இந்நேரம்”

என்று தொடர்ந்து பேச போக, அழுத்தமான குரலில் அவரின் பேச்சை இடைமறித்த நங்கை,

“அவங்க தான் இல்லையே சித்தி, அவங்க எங்களை தனியா விட்டுட்டு போன மாதிரி, என்னால மாறனை தனியா விட்டுட்டு போக முடியாது, அவன் என்னோட பொறுப்பு”

என்று கணீரென பேச, அவள் பேசியதை கேட்ட, அவளின் சித்திக்கு தான், கண்களில் கண்ணீர் பெருகியது.

தேவி பாட்டிக்கும் கண்கள் கலங்க, கற்பகம் சித்தியின் கண்களை துடைத்து கொள்ள சொல்லி, அவரை தேற்றியவர், நங்கையை பார்த்து,

“இப்போ என்ன சொல்ற நீ, இன்னும் நாலு வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றியா”

என்று காட்டமாக கேட்க, தேவி பாட்டியின் கோவத்திற்கு எல்லாம், சிறிதும் அசைந்து கொடுக்காத நங்கை,

“ஆமாம்”

என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, கண்களை துடைத்து கொண்ட கற்பகம் சித்தியோ,

“இப்போ உன்னோட பிரச்சினை என்ன, நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா, மாறன் தனியா ஆகிடுவான் அதானே”

என்று கேட்க, அவரின் பேச்சில் ஏதோ சரியில்லை என்று தோன்ற, குழப்பதுடன் அவரை பார்த்த நங்கை,

“ம்ம் ஆமா”

என்று யோசனையுடனே சொல்ல, நங்கையை நேர் பார்வை பார்த்த அவளின் சித்தியோ,

“அப்போ உன்னோட சேர்த்து, மாறனோட பொறுப்பையும் ஏத்துக்குற வரன் கிடைச்சா உனக்கு சம்மதமா”

என்று கேட்க, அப்படி எல்லாம் யாரும் சம்மதம் சொல்ல மாட்டார்கள், என்ற அதீத நம்பிக்கையில் நங்கை,

“அப்படி சொன்னா, எனக்கு ஓக்கே சித்தி”

என்று சொல்ல, அவளின் சித்தியோ,

“இப்போ சரி சொல்லிட்டு அப்புறம் மாத்தி பேச கூடாது”

என்று அவளிடம் கறாராக பேச, நிட்சயம் யாரும் அப்படி எல்லாம் ஒற்று கொள்ள மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்த நங்கை அலட்சியமாக,

“மாத்தி எல்லாம் சொல்ல மாட்டேன் சித்தி”

என்று சொல்ல, ஒரு வெற்றி புன்னகையை அவளை நோக்கி செலுத்திய கற்பகம் சித்தி,

“அப்படி ஒரு வரனோட தான் வந்து இருக்கேன், எப்போ பேசலாம்”

என்று தடாலடியாக கேட்க, நங்கையோடு சேர்ந்து தேவி பாட்டியும் அதிர்ச்சியாக அவரை பார்த்தார். தேவி பாட்டியின் கண் முன்பு, செழியனின் உருவம் நிழலாடியது.

காந்தன் வருவான்…………

Advertisement