Advertisement

உள்ளத்தின் உளைச்சல் உடலில் தெரிவது இயல்பு தானே. செழியன் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்லவே.

ஏதோ தேவி காலனியில் இருந்து நடந்தே வந்தது போல, கலைத்து ஓய்ந்து போய், அந்த தனி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் செழியன்.

உள்ளே நுழைந்த செழியன், எதுவும் பேசாமல், அமைதியாக சென்று, சோபாவில் தளர்ந்து அமர்ந்தான்.

வெற்றி, தமிழுக்கு கண்ணை காட்ட, அவன் சமையலறைக்கு சென்று, ஒரு குவளையில் குளிர்ந்த நீரை எடுத்து வந்து, செழியனிடம் நீட்டினான்.

அந்த குளிர்ந்த நீரை வாங்கி, செழியன் அப்படியே வாயில் கவிழ்க்க, அது அவன் உள்ளே எரிந்து கொண்டு இருந்த வெம்மையை, கொஞ்சம் தணிக்க தான் செய்தது.

செழியன் ஏதோ வருத்தத்தில் உழல்கிறான் என்பது புரிய, அவனே எப்போது பேச்சை ஆரம்பிக்கிறானோ ஆரம்பிக்கட்டும் என்று, அவனை தொந்தரவு செய்யாமல், அமைதியாக அமர்ந்திருந்தனர் இருவரும்.

அப்போது எப்போதும் போல, தாமதமாகவே அடித்து பிடித்து ஓடி வந்தான் விஜய். முக்கியமான விஷயம் என்று மட்டும் தான், விஜய்யிடம் சொல்லி இருந்தான் வெற்றி.

செழியனை பார்த்தவுடன், விஜய்க்கும், அவனிடம் ஏதோ சரியில்லை என்று புரிய, வெற்றியிடம் கண்களால் என்னவென்று தெரியுமா என்று கேட்க, அவனோ உதடு பிதுக்கி, தெரியாது என்று சைகை செய்தான்.

சோபாவில் அமர்ந்திருந்த செழியனின் கருத்துக்கு விஜய்யும் வந்துவிட்டது எட்ட, தன் தனிப்பட்ட எண்ண அலைகளில் இருந்து கரையேறியவன், ஏதோ விஜய்க்காக தான், இத்தனை நேரம் காத்திருந்தது போல,

“ஹ்ம்ம் சொல்லு வெற்றி, லேப் ரிஸல்ட் என்ன சொல்லுது”

என்று கேட்க, ஏற்கனவே செழியனிடம் விஷயத்தை சொல்லி இருந்ததால், ஆய்வக அறிக்கை முடிவுகளை அவனிடமே கொடுத்தான் வெற்றி.

விஜய் என்ன விஷயம் என்று கேள்வியாய் மூவரையும் பார்க்க, அப்போது தான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்பது வெற்றிக்கு நினைவு வர,

“இல்ல விஜய் அண்ணா, நாம கொடுத்த மெடிசன் சாம்பிள் எல்லாம் அனலைஸ் பண்ணிட்டாங்க, இல்லீகள் ட்ரக்ஸ் எதுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க”

என்று சொல்ல, அறிக்கையில் கண்ணை ஓட்டி கொண்டிருந்த செழியனை பார்த்து தமிழ்,

“என்ன அண்ணா இது, ரெண்டு நாள் முன்னாடி தான் நாம எதையோ கண்டுபிடிச்சிட்டோம்னு நினைச்சேன், இப்போ பார்த்தா திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்த மாதிரி இருக்கு”

என்று கவலையாக சொல்ல, தன் கையில் இருந்த அறிக்கையை கீழே வைத்த செழியன், எழுந்து குறுக்கும், நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான்.

மூவரும் செழியன் என்ன சொல்ல போகிறேன் என்று பார்த்திருக்க, தன் நடையை நிறுத்தி அவர்களை பார்த்த செழியன்,

“நாம யூஸ் பண்ற எல்லா மெடிசனையும், ஐ மீன் ட்ரக்ஸ் அஹ எல்லாம், அதோட யூஸ், அதுல இருக்குற காம்போனன்ட் அஹ வச்சி வகைபடுத்துவாங்க தெரியுமா”

என்று கேட்க, மூவரும் செழியனை பார்த்த பார்வையிலே, அவர்களுக்கு தெரியாது என்று புரிந்து கொண்ட செழியன்,

“அதுல இருக்க ஒரு முக்கியமான கேட்டகிரி ‘*****’. இருக்கிற பெயின் கில்லர்ஸ் எல்லாம், இந்த கேட்டகிரில தான் வரும்”

என்றவன், தான் சொல்லியதை அவர்களுக்கு புரிந்து கொள்ள சிறு அவகாசம் கொடுத்து, பின்பு,

“இல்லீகள் ட்ரக்ஸ்ல நமக்கு நல்லா தெரிஞ்ச ஹெராயின் கூட அதே கேட்டகிரில தான் வரும்”

என்று சொல்ல, விஜய்க்கு ஏதோ புரிவது போல இருக்க, வெற்றியும், தமிழும், செழியன் சொல்ல வருவது புரியாமல் திருதிருவென்று முழித்தனர்.

உரையாடல் தீவிரமாக சென்று கொண்டு இருக்க, செழியனின் முகமும் சோபிக்காமல் போக, சூழ்நிலையை சற்று கலகலப்பாக முடிவு செய்த விஜய்,

“ஏன்டா இப்படி மக்கா இருக்கீங்க, சீலிங் பேன் மாதிரி யோசிக்காமா, ஏர் கண்டிஷனர் மாதிரி யோசிங்கடா”

என்று அவர்களை பார்த்து நக்கலாக சொல்ல, ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவர்களுக்கு, விஜய் சொல்லியதின் அர்த்தமும் புரியாமல் போக, இருவரின் முகங்களும் இன்னும் குழப்ப பாவத்தை தான் தத்தெடுத்தது.

விஜய் இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமாக சொல்லும் போது, ஆர்வமுடன், சிரிப்புடனும் விஜய்யை பார்க்கும் செழியன், இப்போதோ அவன் சொல்லியதை கவனித்ததாக கூட தெரியவில்லை.

தான் நகைச்சுவைக்காக சொன்ன உதாரணத்தை, தானே விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஜய், செழியனை சிரிக்க வைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தோற்று போனதை நினைத்து நொந்துகொண்டு,

“சீலிங் பேன் மாதிரி ஒரே இடத்துல போகஸ் பண்ணாம, ஏர் கண்டிஷனர் மாதிரி மூலை முடுக்கு எல்லாம் கவர் பண்ணுங்கடா, ஐ மீன் யோசிங்கடா”

என்று சொல்ல, அவர்கள் இருவரும் விஜய்யை இப்போதும் பாவமாக பார்க்க, விஜய்யோ அதைவிட அவர்களை பாவமாக பார்த்தவன், அவர்களின் தலையில் மெதுவாக தட்டிவிட்டு,

“ஒரே மாதிரியான குணம் இருக்குறதை தான் ஒரே கேட்டகிரில போடுவாங்க, சோ பெயின் கில்லரையும் வேற மாதிரி யூஸ் பண்ணா, போதை பொருள் மாதிரி எபெக்ட் இருக்கும்னு சொல்றான்”

என்று விளக்க, தமிழும், வெற்றியும் இப்படி எல்லாம் இருக்கா என்று விழிவிரித்து பார்க்க, விஜய் சொல்லியதை ஒட்டியே பேசிய செழியன்,

“அதனால் தான் மெடிக்கல் ஷாப்ல டாக்டர் பிரிஸ்கிப்ஷன் இல்லாம, பெயின் கில்லரஸ் கொடுக்க மாட்டாங்க, அதுவும் டாக்டர் பிரிஸ்கிப்ஷன்ல இருக்குற, கவுண்ட் மட்டும் தான் தருவாங்க”

என்று சொல்ல, வெற்றிக்கு செழியன் சொல்லியதில் ஒரு சந்தேகம் தோன்ற, அதை தெளிவு படுத்தி கொள்ளும் விதமாக,

“நாம சாதாரணமா கை வலி, கால் வலினு போனா கூட பெயின் கில்லர் கொடுப்பாங்க தானே, அந்த பெயின் கில்லரை கூட தப்பா யூஸ் பண்ண முடியுமா அண்ணா”

என்று கேட்க, அவனை மெச்சுதலாக பார்த்த செழியன்,

“இல்ல வெற்றி, எஸ்ட்டீரீம் பெயின்கு கொடுக்குற பவர் புல் பெயின் கில்லர் மட்டும் தான் அந்த மாதிரி தவறா உபயோகபடுத்த முடியும்”

என்று சொல்ல, தமிழோ

“எஸ்ட்டீரீம் பெயின்னு சொன்னா……”

என்று இழுக்க, இனி இந்த மருந்தை சார்ந்தது தான் அவர்கள் வேலை என்பதால், அதை பற்றி அவர்கள் முழுதும் அறிந்திருப்பது அவசியம் என்பதால் செழியன் விரிவாக,

“கேன்சர் ட்ரீட்மென்ல இருக்குறவங்க, மேஜர் சர்ஜ்ரி ஆகி ஹாஸ்பிடல்ல இருக்குறவங்க, இந்த மாதிரி கேஸ்கு தான், பவர் புல் பெயின் கில்லர் கொடுப்பாங்க”

என்றவன், நிறுத்திய நடையை தொடர்ந்த படி,

“சில சமயம் தொடர்ந்து அந்த பவர் புல் பெயின் கில்லர் எடுக்கும் போது, அதுக்கு அடிட்க்ட் ஆகி, டாக்டர் பிரிஸ்கிப்ஷன் இல்லாம அதை வாங்க முடியாம,போதை பொருள் எடுக்க ஆரம்பிக்கிறதா ஓரு ஆர்டிகல் படிச்சேன், ஆனா அது வெளிநாட்டுல”

என்று சொல்ல, செழியன் சொன்ன விஷயத்தில் ஏதோ ஒன்று உறுத்த விஜய்,

“அப்போ அங்க இந்த பெயின் கில்லர் வாங்குறது கஷ்டம், இல்லீகள் ட்ரக்ஸ் வாங்குறது ஈஸினு சொல்லுறியா”

என்று கேட்க, அதை அமோதித்த செழியன்,

“ஆமா விஜய், ஏனா அந்த பெயின் கில்லர்ஸ் அளவு கொஞ்சம் அதிகமா போனாலும், பேஷண்ட் கோமா ஸ்டேஜ்கு போறதுக்கோ, இல்ல இறக்கவோ வாய்ப்பு அதிகம்”

என்று சொல்ல, மருந்து என்ற பெயரில் எடுப்பதே, எந்த அளவுக்கு விபரீதமான விளைவுகளை கொடுக்கும் என்று தெரிய வர, மூவருக்கும் அது அதிர்ச்சி தான். தொடர்ந்து பேசிய செழியன்,

“அங்கு எல்லாம், இல்லீகள் ட்ரக் எடுத்து இறந்தவங்க எண்ணிக்கையை விட, டாக்டர் கொடுக்குற பெயின் கில்லரை தப்பான அளவுல, தப்பான விதத்தில் எடுத்து இறந்தவங்க எண்ணிக்கை அதிகம்”

என்றவன், எதையோ யோசித்து பார்த்து, அந்த நினைவே கசப்பது போல, தன் தலையை குலுக்கி கொண்டவன், தனக்கு தானே சொல்லி கொள்வது போல சத்தமாக,

“இங்க ஹெராயின் வாங்குறது தான் ரொம்ப கஷ்டம், ஒருவேளை அந்த பர்டிகுலர் பெயின் கில்லரை, எப்படி யூஸ் பண்ணா ட்ரக் எபெக்ட் கிடைக்கும்னு சொல்லி கொடுத்து, மெடிக்கல் ஷாப்ல டாக்டர் பிரிஸ்கிப்ஷன் இல்லாமலே பெயின் கில்லரும் கிடைச்சா”

என்று கேட்க,

“அப்படி மட்டும் நடந்தால்,என்ன ஆகும்”

என்ற கேள்வியே, அங்கு இருந்த அனைவரிடத்திலும் பல அதிர்வலைகளை எழுப்ப, தன் நடையை நிறுத்தி, தன் முன் இருந்தவர்களை பார்த்த செழியன்,

“அந்த கண்டெய்னர்ல அன்னைக்கு போன மெடிசன் லிஸ்ட்ல, பவர் புல் பெயின் கில்லர் ‘*****’ ஒன்னும் இருக்கு”

என்று அதன் பெயரை சொல்ல, அங்கு அப்படி ஒரு அமைதி. இப்படி ஒரு திருப்பத்தை யாருமே எதிர்பார்க்க வில்லை.

அதேநேரம், ஆய்வக அறிக்கையில், போதை பொருள்கள் எதுவும் இல்லை என்ற முடிவு ஏன் வந்தது, என்ற குழப்பமும் தெளிவாகி போனது.

ஏனெனில் அதை தவறாக பயன்படுத்தலாம் என்ற போதும், அது மருத்துவத்திற்கு பயன்படுத்த படும், அங்கீகரிக்க பட்ட மருந்து தானே.

பிரச்சனை முற்றிலும் தாங்கள் எதிர்பார்க்கா விதத்தில் விரிய, செழியன் மட்டுமே அதை எதிர்பார்த்த தோரணையில், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான்.

செழியன் யோசித்து கொண்டிருக்க, வெற்றியை கூப்பிட்ட விஜய்,

“வெற்றி நீ எதுக்கும் வினோத்கு மெயில் பண்ணி, அந்த பர்டிகுலர் மெடிசன், டெலிவரி பண்ண வேண்டிய இடத்துக்கு, பண்ண வேண்டிய அளவு தான் போய் சேர்ந்து இருக்கானு கன்பார்ம் பண்ணு”

என்று சொல்ல, செழியனோ,

“டெலிவரி பண்ண வேண்டியதுல கைய வச்சா, வெளிய தெரிஞ்சிடும் இல்லயா, எனக்கு தெரிஞ்சி எஸ்ட்ராவா ப்ரோடியுஸ் பண்ணி, அதை தான் குடோன்ல பதுக்கி இருக்கணும்”

என்று சொல்ல, அவன் சொல்லியதை அமோதித்த விஜய்,

“நாம எங்கேயும்எதையும் மிஸ் பண்ணலனு கன்பார்ம் பண்ண தான் செக் பண்ண சொன்னேன், அதோட நமக்கு அதுவும் ஒரு எவிடன்ஸ் தானே”

என்று சொல்ல , அதை ஏற்று கொண்ட செழியன்,

“மெடிக்கல் ஷாப்ல இந்த மாதிரி பெயின் கில்லர் சேல் பண்ணா, டாக்டர் நேம், பேஷண்ட் நேம் எல்லாம் நோட் பண்ணிட்டு தான் கொடுப்பாங்க”

என்ற செழியன் ஏதோ யோசித்தவனாக ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, பின்பு,

“முறைப்படி வாங்குனா மெடிசனுக்கு, அவங்க ரெகார்ட் மெயின்டைன் பண்ணணும், அதே கணக்குலயே வராததா இருந்தா, இது எதுக்குமே அவசியமே இருக்காது இல்ல”

என்று அவர்களின் திட்டம் இதுவாக தான் இருக்கும் என்று தான் யூகத்தை சொன்னவன்,
தொடர்ந்து,

“இது எவ்ளோ நாளா நடந்துகிட்டு இருக்குனு தெரியல, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பரவி இருக்குனும் தெரில, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் முன்னாடி, இதை தடுத்து நிறுத்தனும்”

என்று சொல்ல, தாங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலையின் முக்கியத்துவத்தையும், தங்கள் தோள்களில் உள்ள சுமையின் அளவையும், புரிந்து கொண்டனர், அங்கு இருந்த நால்வரும்.

அதன்பிறகு வெற்றியிடம் அந்த சேமிப்பு கிடங்கின் முகவரியை வாங்கி கொண்ட செழியன், மீண்டும் மருந்து தொழிற்சாலையின் காணொளிகளை ஆராய சொன்னான்.

இவர்கள் தினமும் தொழிற்சாலையின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டிருக்க, இவர்களுக்கு தெரியாமல் எப்படி அதிக அளவு, அந்த மருந்துகளை உற்பத்தி செய்தார்கள் என்று இன்னும் தெரியவில்லையே.

அதுபோக தொழிற்சாலையில் பணிபுரியும் யாருக்கு எல்லாம், இதில் பங்கு உண்டு என்றும் அறிய வேண்டுமே.

அவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்த செழியன், தான் கிளம்புவதாக சொல்ல, வெற்றியும், தமிழும் அவனை கவலையோடு பார்த்தனர்.

வாசல் வரை செழியனோடு சென்ற விஜய், அவனை நெருங்கிய தோளோடு, தோளாக அணைத்து ஒரு முழு நிமிடம் நின்றான். பின்பு,

“எதை பத்தியும் யோசிக்காம போய் கொஞ்ச நேரம் தூங்கு, எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும்”

என்று சொல்ல, அதுக்கு பதில் என்று வாய் வார்த்தையாக எதுவும் சொல்லாமல், தன் பார்வையை மட்டும் விஜய்க்கு பதிலாக கொடுத்து விட்டு, தன் வண்டியை கிளப்பினான் செழியன்.

செழியனை ஏதோ ஒன்று வாட்டுவது புரிய, அது என்னவென்று அவன், இப்போதைக்கு பேச போவதில்லை என்பதும் புரிய, அணைப்பிலே ஆறுதல் சொல்லி இருந்தான் விஜய்.

சில விஷயங்களை பகிர முடியாமல், வலியில் உழலும் போது, என்ன ஏதென்று கேட்டு, என்னிடம் பகிர்ந்து கொள்ள மாட்டாயா என்று கோவப்படாமல், காரணமே அறியவில்லை என்றாலும், ஆறுதலை தரும் உறவுகள் வரம்.

வீட்டிற்கு வந்த செழியன் உடைகளை கூட மாற்றாமல், விளக்கை அணைத்து விட்டு, அப்படியே படுக்கையில் விழுந்தான்.

அவனின் இடது கண்ணீல் இருந்து, சூடாக, கோடாக கண்ணீர் அவனின் காதோரம் இறங்கியது.

இத்தனை நேரம், உள்ளுக்குள் கொந்தளித்து கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம், முட்டி மோதி கொண்டு, கண்களின் வழியே வெளியே வழிந்து கொண்டிருந்தது.

பொதுவாக நாம் நம்மை நேசிப்பவர்களின் நன்மைக்காக என்று, நம்மை வருத்தி கொண்டு ஒரு விஷயம் செய்ய, அதுவே நம்மவர்களுக்கு கெடுதலாக முடிந்தால், அது தரும் வேதனையை அளவில்லாதது.

நங்கை அவள் அப்பாவின் ஆசைப்படி, ஆளும் பேரும் கொண்ட பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நினைத்து விட்டு சென்று இருக்க கூடாதோ…..

தன் காதலியை, அடுத்தவன் மனைவியாக காண்பது உயிர்வதை தான் என்றாலும், நங்கையின் நலத்தை ஒரு முறையேனும் உறுதி செய்து இருக்க வேண்டுமோ….

தன்னுடைய வலியை பற்றி மட்டுமே யோசித்து, முழு மொத்தமாக நங்கையை விட்டு ஒதுங்கி போகாமல் இருந்து இருந்தால், அவளுக்கு ஆதரவு தேவையான நேரத்தில், துணையாக இருந்து இருக்கலாமோ…..

அப்படி இருந்து இருந்தால், நங்கையும், அந்த சிறுவனும், அந்த மோசமான நாட்களை கடந்து வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.

இப்படி, தான் முழுதாக ஒதுங்கி, நங்கையை பற்றி பிடிவாதமாக எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருந்தது தான் தவறு என்பதிலே, செழியனின் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது.

நங்கையின் வாழ்க்கையில் நடந்தற்கு எல்லாம், தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்ற போதும், காதல் கொண்ட செழியனின் மனது, அவன் மீதே, குற்றத்தை சுமத்தி கொண்டது.

நங்கையின் பெற்றோருக்கு, அப்படி ஒரு முடிவு நேரும் என்று தெரிந்திருந்தாலோ, அல்லது நங்கை தனியாக துன்புறுவாள் என்று அறிந்திருந்தாலோ, செழியன் நிட்சயம் அவளை விட்டு விலகி சென்று இருக்க மாட்டான்.

நங்கையும், செழியனும் ஒருவரை ஒருவர் விரும்பிய பிறகு, நங்கையின் தந்தை ‘அந்த காரணத்தை’ சொல்லி மறுத்து இருந்தால், கண்டிப்பாக செழியன் அவரிடம் போராடி இருப்பான்.

ஆனால் காதலை, நங்கையிடம் சொல்லியே இல்லாத போது, தன் மாப்பிள்ளை பற்றிய அவரின் எதிர்பார்ப்பு தெரிந்த பிறகு, காதலோடு நங்கையை நெருங்க, செழியன் மனது இடம் தரவில்லை.

தான் வாழ ஆசைப்பட்ட, அழகான குடும்ப சூழலில் இருந்து, தன் காதலை கொண்டே நங்கையை விலக்க, செழியன் விரும்பவில்லை.

இப்படி அன்றைய தனது மனநிலைமையையும், இன்று நன்மாறன் கூறிய அவர்களின் கடந்த காலமும், தானே நேரிலே பார்த்த அந்த பேருந்து நிலைய சம்பவமும், மாறி மாறி கண் முன் வந்து கொண்டிருந்தது செழியனுக்கு.

நங்கைக்கு இந்த சமுதாயத்தில், மிக பெரிய பாதுகாப்பு என்றால், அது தன் மனைவி என்ற உரிமை தான், என்று முதலில் சிறு தூரலாக தோன்றிய எண்ணம், கொஞ்ச நேரத்தில் அடைமழை என செழியனும் நிறைய ஆரம்பித்தது.

நங்கைக்கு தன் காதல் மனதை புரியவைத்து, பிறகு தான் திருமணம் என்ற தன் எண்ணத்தை மாற்றி கொண்டான் செழியன்.

இந்த சமுதாயத்தில், மனித மிருகங்களுக்கு இடையில் பயத்தோடு நங்கையை தனியாக நடைபோ விட செழியன் தயாராக இல்லை.

எல்லாவற்றையும் விட, இப்போது நங்கையின் பாதுகாப்பு தான் முக்கியமாக பட்டது செழியனுக்கு.

நங்கையை முதலில் தன்னை திருமணம் செய்து கொள்ளட்டும். பின்பு தன் காதலை பொறுமையாக புரிந்து கொள்ளட்டும்.

காதலை புரிந்து, அனுபவிக்க தான், தங்களின் வாழ்வு முழுக்க இருக்கிறதே என்று நினைத்து தன்னை தேற்றி கொண்டான் செழியன்.

செழியன் இப்படி திருமணத்தை பற்றி யோசித்த மூன்றாவது நாள், நங்கையின் சித்தி ‘தேவி காலனிக்கு’ வந்து இறங்கினார், அதுவும் நங்கையின் திருமணம் பற்றிய பேச்சோடு.

அவரின் வரவு, செழியனுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதமாக முடியுமா????

பொருத்திருந்து பார்ப்போம்.

காந்தன் வருவான்….……

Advertisement