Advertisement

நன்மாறன் கூறிய பதிலை கேட்ட செழியனுக்கு, முதலில் வியப்பாக இருந்தாலும், பின்பு தான் சரியாக தான் கேட்டோமா என்ற சந்தேகம் தான் எழுந்தது செழியனுக்கு.

“நாம எல்லாம் மிடில் கிளாஸ், கேஸ் கொடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் அலஞ்சிகிட்டு இருக்க முடியாது”

என்று காவல் நிலையம் செல்வதே, நடைமுறையில் ஆகாத காரியம் என்று செழியனுக்கு அறைவுரை கூறியவள் நங்கை.

அந்த நங்கையின் தம்பி, ‘ஐ.பி.எஸ்’ ஆக வேண்டும் என்று சொன்னால், செழியனும் குழம்பாமல் என்ன தான் செய்வான்.

ஆனால் நன்மாறனின் முகத்தில் இருந்த உறுதி, இதை அவன் விளையாட்டாக சொல்லவில்லை என்பதையும் பறைசாற்றியது.

சின்னவனின் விருப்பத்திற்கு எதிர்மறையாக எதுவும் சொல்லாத, சொல்ல பிரியப்படாத செழியன்,

“எல்லாரும் பொதுவா கலக்டர் ஆகணும்னு தானே ஆசைப்படுவாங்க, நீ என்ன வித்தியாசமா ஐ.பி.எஸ் ஆகணும்னு சொல்ற”

என்று கேட்க, நன்மாறனிடம் முழுதாக ஒரு நிமிட மவுனம். பேச வாயை திறப்பதும், பின்பு மூடி கொள்வதுமாக இருந்தான் இளையவன்.

அது கூற போகும் விஷயத்தை, செழியனிடம், சொல்லலாமா, வேண்டாமா என்று அவனுக்குள் எழுந்த போராட்டமாக இருக்க வேண்டும்.

கொண்ட காயத்தாலும், இரத்தம் அதிகம் வெளியேறியதாலும் உடல் தளர்ந்திருக்க, உள்ளமும் கொஞ்சம் தன் இறுக்கத்தை தளர்ந்தி இருந்ததோ…

அல்லது

தன் காயத்தை பார்த்து செழியன் பதறியதிலும், தன் மீது உண்மையான அக்கறை கொண்டு விசாரிப்பதிலும், அவனின் அவனின் உண்மையான பாசத்தை உணர்ந்தானோ…

அல்லது

தன் தோளை சுற்றி கையை போட்டு, அணைத்த மாதிரி அமர்ந்திருந்த செழியனின், அந்த அரவணைப்பில் மாறன் உணர்ந்த தோழமை உணர்வா….

அல்லது

யாரிடமும் பகிர முடியாமல், இத்தனை நாள் மனதில் இருந்த வலியின் கணம் தாங்காமல், இறக்கி வைக்க நினைத்தானோ….

இதில் எதாவது ஒரு காரணமா அல்லது எல்லாமே தான் காரணமா என்பதை நன்மாறன் மட்டும் தான் அறிவான்.

தன் தயக்கத்தை மீறி, நடுங்கும் குரலில் தான் பேச ஆரம்பித்தான் நன்மாறன்.

“அப்போ எனக்கு பதின்மூனு வயசு, அம்மா, அப்பா இறந்ததுக்கு சொந்தகாரங்க எல்லாம் வந்தாங்க, பார்த்தாங்க கிளம்பிட்டாங்க, சித்தி மட்டும் தான் கொஞ்ச நாள் எங்க கூட இருந்தாங்க”

என்று சொல்லி நிறுத்தியவன், நடுங்கிய தன் குரலை சீர்ப்படுத்த முயன்று, ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து விட்டவன், தொடர்ந்து,

“சித்தி போனதுக்கு அப்புறம், நான் நைட்ல எழுந்து பார்க்கும் போது எல்லாம், அக்கா கதவையே பார்த்துக்கிட்டு, வாயை மூடி அழுது கிட்டு இருப்பாங்க”

என்று சொல்ல, செழியனுக்கு நன்மாறன் சொல்ல வருவது நன்கு புரிய, அப்படியே சிலையென உறைந்திருந்தான் அவன்.

முயன்றும் தடுக்க முடியாமல், குரலில் கண்ணீரின் தடம் தெரிய நன்மாறன்,

“திடீர் திடீர்னு கதவை தட்டுற சத்தம் கேட்கும், சில சமயம் கதவையே உடைக்குற அளவுக்கு தட்டுவாங்க, அக்கா பயத்துல என் கையை கெட்டியா பிடிச்சுக்கிட்டு, விடியுற வரைக்கும் தூங்காம உட்கார்ந்து இருப்பாங்க”

என்று சொல்லிய, நன்மாறனின் கண்களில் இப்போது கண்ணீரின் தடம். அதை செழியனுக்கு காட்டாமல் தன் தலையை குனிந்து கொண்டவன்,

“அந்த வயசுல எனக்கு, அக்கா எதுக்கோ பயப்படுறாங்கனு மட்டும் தான் புரிஞ்சிச்சு, அதனால் அதுக்கு அப்புறம்,அக்கா வேலை விட்டு வர நேரத்துக்கு, தெரு முனை வரை போய் நானே கூட்டிக்கிட்டு வருவேன், அப்போ எங்களை வழி மறிச்சி என்னென்னவோ கேட்பாங்க”

என்றவனுக்கு தொடர்ந்து பேச முடியாமல் தொண்டை அடைக்க, தன் அழுகையை முழங்கிய நன்மாறன், அருகில் இருந்த செடிகளை வெறித்து பார்த்தவாறு,

“அவங்க முன்னாடி பயமே இல்லாத மாதிரி நின்னுட்டு, வீட்டுக்கு வந்ததும் அக்கா அழ ஆரம்பிச்சிடுவாங்க, அங்க தொல்லை தாங்க முடியாம தான், வாடகை அதிகமா இருந்தாலும் பரவாயில்லைனு, இந்த வீட்டுக்கு குடி வந்தோம்”

என்று சொல்லிய நன்மாறனுக்கு, அந்த மோசமான நாட்களின் நினைவில், கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

இளையவனை போல கண்ணீரை வழிய விட, வளர்ந்த ஆண் மகனான செழியனின் ‘ஆண்’ என்ற கவுரம் இடம் தராமல் போக, கண்ணீரை கட்டுப்படுத்த, அதன் பலனாய் கண்கள் கலங்கி சிவந்து போயின.

இதற்கிடையில் தன்னை முழுதும் தேற்றி கொண்ட நன்மாறன், திடமான குரலில்,

“அப்போ எனக்கு அர்த்தம் புரியாத வார்த்தைக்களுக்கு, செயல்களுக்கு எல்லாம், நான் ஓர் அளவுக்கு வளர்ந்ததும் அர்த்தம் புரிஞ்சது, அக்கா எவ்ளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனும் புரிஞ்சுது”

என்ற நான்மாறன், இப்போது அவனின் வழக்கமான அழுத்தமான குரலை முழுமையாக மீட்டு இருந்தான்.

“அக்காவை நெருங்கனும்ன்ற எண்ணம் கூட யாருக்கும் வர கூடாது, அவங்களை பாதுகாப்பா பார்த்துக்கணும், அப்படின்னு யோசிக்கும் போது, அதுக்கு போலிஸ் வேலை தான் சரியா இருக்கும்னு தோணுச்சு, அதும் ஏட்டு, எஸ்.ஐனு இருந்தா சரியா வராது, ஐ.பி.எஸ் ஆனா தான் சரியா இருக்கும்”

என்று அழுத்தமாக பேசி முடித்த நன்மாறன், செழியனை நிமிர்ந்து பார்க்க, அவனின் முகத்தையும், அதில் விரவி இருந்த வலியையும் பார்த்து துணுக்குற்று,

“என்ன ஆச்சு செழியன் சார்”

என்று கேட்க, தன் முகத்தை ஒரு முறை அழுந்த துடைத்த செழியன், அதோடு சேர்த்து தன் உணர்வுகளையும் துடைத்தவனாக, நிர்மலமான முகத்துடன் இளையவனை பார்த்து,

“சரி அதுக்கும், நீ இப்போவே வேலைக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம்”

என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான்.

செழியனின் முகத்தை பார்த்தே, அவனின் வலி, தன் வலிக்கு சற்றும் குறைவில்லாதது என்று புரிந்து கொண்டான் நன்மாறன்.

ஏனோ செழியன், அதை தன்னிடம் வெளிப்படுத்தி கொள்ள விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டான் சின்னவன்.

எனவே நடுவில், கடந்த காலத்தை பற்றி எதுவுமே பேசாதது போல பாவித்து, செழியனின் கேள்விக்கு பதிலாக,

“ஐ.பி.எஸ் ஆகுறது ஒன்னும் சும்மா இல்லை சார், அதுக்கு நிறைய படிக்கணும், நிறைய புக் வாங்கணும், இது எல்லாத்துக்கும் காசு வேணும், அக்கா கிட்ட கேட்டு, அவங்களுக்கு இன்னும் பாரத்தை ஏற்ற முடியாது”

என்று பெரிய மனித தோரணையில் பேச, அப்படி பேசிய நன்மாறனை மேலும், கீழும் தன் பார்வையால் அளந்த செழியன்,

“மாறா நீ ஸ்டிஸ்ல, ஆவேரேஜ் ஸ்டுடெண்ட் அஹ தான் இருக்கேன்னு கேள்வி பட்டேன், இந்த மாதிரி படிச்சா நீ எப்படி சிபில் சர்வீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணுவ”

என்று கண அக்கறையாக கேட்க, செழியனின் கூற்றில் சிலிர்த்து கொண்ட சின்னவனோ, வீராப்புடன்,

“நான் ஒன்னும் ஆவேரேஜ் இல்ல, நல்லாவே படிப்பேன், நான் இப்போவே சிவில் எக்ஸாம்கு படிக்க ஆரம்பிச்சிட்டேன், அப்போ தான் காலேஜ் முடிச்சதும் எக்ஸாம் கிளியர் பண்ண முடியும், ஒரு சுமாரான காலேஜ்ல சேர தேவையான அளவு டுவல்த்ல ஸ்கோர் பண்ணா போதும்”

என்று அவனுக்கு தெரிந்ததையும், அவனின் திட்டத்தையும் சொல்ல, நன்மாறனை நோக்கி நன்றாக திரும்பி அமர்ந்த செழியன்,

“இங்க பாரு மாறா, சிவில் எக்ஸாம் எழுத உனக்கு பர்ஸ்ட் டீவ்ன்ட்டி ஒன் இயர் கம்பிலீட் ஆகனும், அண்ட் நீ மினிமம் ஒரு பேச்செலர் டிகிரி முடிச்சி இருக்கணும்”

என்று சொன்னவன், நன்மாறன் ஏதோ பேச வர, அவனை பேச விடாமல் தொடர்ந்து,

“அது உனக்கு தெரிஞ்சி இருக்கு சரி, ஆனா அப்படி நீ டிகிரீ வாங்குற காலேஜ் ஸ்டேட் ஆர் சென்ட்ரல் கவர்மெண்ட் காலேஜ் அஹ இருக்கணும், இல்லைன்னா கவர்மெண்ட் அப்ருவ்ட் காலேஜ் அஹ இருக்கணும்”

என்று சொல்ல, அவனை நன்மாறன் கண்ணை விரித்து பார்க்க, அவனின் ஆச்சர்ய பாவத்தை அலட்சிய படுத்திய செழியன்,

“அது மட்டும் இல்லாம, சிவில் சர்வீஸ் மெயின் எக்ஸாம்ல ஆப்ஷனல் பேப்பர் வேற இருக்கு, அது உன்னோட டிகிரி மேஜர் அஹ இருந்தா உனக்கு ஈசி அஹ இருக்கும், சோ எந்த காலேஜ்ல, என்ன கோர்ஸ் சேர போறனு, முடிவு பண்ணணும்”

என்று தான் அறிந்ததை விலாவாரியாக சொல்ல, அதை கேட்ட நன்மாறன் யோசிக்கவும், தொடர்ந்து செழியன்,

“நாம மிடில் கிளாஸ் அதனால் முடிஞ்ச வரைக்கும், கவர்மெண்ட் காலேஜ் சீட் வாங்க பார்க்கணும், பிரைவேட் காலேஜ் எல்லாம் பீஸ் கட்டி மாளாது, அதனால இந்த பார்ட் டைம் ஜாப் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு, இப்போதைக்கு டுவல்த் போர்ஷன் மட்டும் படி”

என்று சொல்ல, செழியன் சொல்லுவதில் உள்ள உண்மையை புரிந்து கொண்ட நன்மாறன்,

“ம்ம்ம் சரி, ஆனா உங்களுக்கு எப்படி இவ்ளோ தெரியுது, சிவில் சர்வீஸ் எக்ஸாம் பத்தி”

என்று கேட்க, அவனை நோக்கி ஒரு கோடளவு புன்னகையை சிந்திய செழியன்,

“என்னோட பிரின்ட் ஒருத்தர் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதுனாங்க, அதான் தெரியும், நீ காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம், நானே உனக்கு அவங்க கிட்ட இருந்து நோட்ஸ் எல்லாம் வாங்கி தரேன் சரியா”

என்று சொல்ல, உற்சாகமாக தலையசைத்தான் நன்மாறன். உற்சாகத்தையும் மீறி அவனின் முகத்தில் களைப்பு தெரிய, வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடித்தான் செழியன்.

நன்மாறன் ஒரு இலட்சியத்தை முடிவு செய்து, அதை அடைய அவனால் முயன்ற வரை, அவனுக்கு தெரிந்த வகையில் முயன்று இருக்கிறான்.

ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாததால், சில அடிப்படை விஷயங்கள் பற்றி அறியாமல் இருந்து இருக்கிறான்.

சரியான நேரத்தில் நன்மாறனிடம் பேசியதிலும், அவனுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய போவதிலும், செழியனுக்கு அளவு கடந்த ஆறுதல்.

இருந்தாலும், இன்று நன்மாறன் கூறிய விஷயங்கள், நெருஞ்சி முள்ளாய் நெஞ்சை உறுத்தி கொண்டிருந்தன.

அந்த வேதனையை வெளி காட்டி கொள்ள துளி கூட விரும்பவில்லை செழியன். அவனுக்கு இப்போது தேவை எல்லாம் தனிமை, தனிமை தனிமை அவ்வளவே.

எப்போதடா தனிமை வாய்க்கும், கதறி தீர்க்கலாம் என்று செழியனின் உணர்வுகள், கொந்தளித்து கொண்டிருந்தன.

நன்மாறனும், செழியனும் வீட்டிற்கு வர, வீட்டில் நங்கை வந்ததற்கான அடையாளங்கள் இருக்க, இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

நன்மாறனை ஒரு கையிலும், மாத்திரைகளை மற்றுமொரு கையிலும் பிடித்து கொண்ட செழியன், வெளியே இருந்தே நங்கையை கூப்பிட்டான்.

செழியனின் குரல் கேட்டு வெளியே வந்த நங்கை, நன்மாறன் நின்ற கோலத்தை கண்டு பதறி,

“என்ன மாறா இது, என்ன ஆச்சு”

என்று கேட்க, நன்மாறன் பேச வாயெடுக்க, அவனை முந்தி கொண்டு, நங்கையை சமாதானம் படுத்தும் விதமாக செழியன்,

“ஒன்னும் பெரிய அடி இல்ல நங்கை, சின்ன காயம் தான், கட்டு தான் பெருசா போட்டு இருக்காங்க”

என்று சொல்ல, அப்போது தான் அருகில் நின்றிருந்த செழியன், நங்கையின் பார்வை வட்டத்திலே விழு, அவனிடம்,

“எப்படி ஆச்சி செழியன் சார்”

என்று குரல் தழுதழுக்க கேட்க, இன்னதென்று விளங்கா பார்வையை நங்கை மீது செலுத்தியவாறு,

“பிரின்ட் பார்க்க போய் இருக்கான் போல, பார்த்துட்டு திரும்பி வரும் போது, எதிர்க்க வந்த பைக்காரன் மோதி கீழ விழுந்துட்டான், அங்க இருந்த கல்லு கொஞ்சம் ஆழமா குத்திடுச்சி, அப்போ நான் அந்த பக்கமா வந்தேன், அதான் ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போயிட்டு வரேன்”

என்று தடுமாறாமல் இவ்வளவு நேரம் யோசித்து வைத்த கதையை கோர்வையாக சொல்லியன், நன்மாறனை நோக்கி ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையையும் செலுத்தினான்.

கலக்கத்தில் இருந்த நங்கை, தன் தம்பியின் கட்டு போட்ட கையை வருடியவாறே இருக்க, இவர்களின் கண் ஜாடைகளை எல்லாம் அவள் கவனிக்கவில்லை.

நன்மாறனின் தலையை வாஞ்சையுடன் வருடி விட்ட நங்கை,

“ரொம்ப வலிக்குதா மாறா”

என்று தன் குட்டி தம்பியின் வலியை, தன் வலியாய் நினைத்து வருந்தி கேட்க, நன்மாறனோ தமக்கை வருந்துவது பிடிக்காமல்,

“இல்ல அக்கா, கொஞ்சம் தான் பெயின் இருக்கு”

என்று சிரித்து கொண்டு சொல்ல, இன்னும் எத்தனை நேரம் இங்கு நங்கையை பார்த்து கொண்டு நிற்க முடியும் என்று தெரியவில்லை செழியனுக்கு.

தன் உணர்வுகளை நங்கையின் முன் கொட்டும் முன்பு, அங்கிருந்து கிளம்ப எண்ணி, தன் கைகளில் இருந்த மாத்திரை கவரை நங்கையிடம் நீட்டி,

“இதுல பெயின்கு மெடிசன் இருக்கு, சாப்பிட வச்சி டேப்லெட் கொடுங்க, கை காயம் ஆறுற வரைக்கும் தண்ணி படாம பார்த்துக்க சொல்லி இருக்காங்க”

என்று மறுத்த குரலில், மருத்துவர் சொன்னதை முழு மூச்சாக சொன்னான் செழியன்.

செழியனுக்கு ஒரு நன்றி சொல்லி, அந்த கவரை வாங்கி கொண்டு, நன்மாறனையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் நங்கை.

நன்மாறனின் தோளில் தட்டி, அவனுக்கு விடை கொடுத்த செழியன், தனிமையை நாடி, தனது மாடிக்கு செல்ல போக, சரியாக அவனின் அலைபேசி அடித்து, அவனை தடுத்து நிறுத்தியது.

அழைப்பரின் பெயரை பார்க்க, அழைத்ததோ வெற்றி. இப்போது யாரிடமும் பேச கொஞ்சம் கூட விருப்பம் இல்லை செழியனுக்கு.

இருந்தாலும், ஏதேனும் முக்கியமான விஷயமாக இருந்தால் என்ன செய்வது, என்ற எண்ணத்தில் அழைப்பை ஏற்று,

“சொல்லு வெற்றி”

என்று சொல்ல, இவனின் குரலில் என்ன படித்தானோ வெற்றி,

“என்ன அண்ணா வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு, ஏதாவது ப்ரோப்ளமா”

என்று இவனை அறிந்தவனாக கேட்க, எதையும் சொல்ல பிரியப்படாத செழியன்,

“ஒன்னும் இல்ல வெற்றி, சொல்லு, என்ன விஷயம், எதுக்கு கால் பண்ண”

என்று கேட்க, அவனின் குரலிலே ஏற்கனவே ஏதோ சரியில்லை என்று புரிய, இப்போது இதை சொல்வதா வேண்டமா என்று யோசித்த வெற்றி, எப்படியும் சொல்லி தானே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து,

“இல்ல அண்ணா, லேப்ல செக் பண்ண கொடுத்த மெடிசன் ரிப்போர்ட் வந்துச்சு, எல்லாமே நார்மல் மெடிசன் தானாம், இல்லீகள் ட்ரக்ஸ்-கான ட்ரேஸ் எதுமே இல்லைனு ரிப்போர்ட்ல சொல்லி இருக்காங்க”

என்று சொல்ல, அதை கேட்ட செழியனோ வெகு நிதானமாக,

“ஹ்ம்ம் எதிர்பார்த்தது தான், நான் இப்போ அங்க வரேன், நேர்ல பேசுவோம்”

என்று அழைப்பை துண்டித்தவன், தான் தேடிய தனிமை இப்போது கிட்ட போவது இல்லை என்று புரிய, தனக்காக காத்திருக்கும் கடமையை பார்க்க கிளம்பினான்.

காந்தன் வருவான்……..

Advertisement