Advertisement

செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது.

கண்காணிப்பு அறைக்கு சென்று பார்க்க, வெற்றியும், தமிழும் அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த மேசையின் மீதே, தலை கவிழ்த்து உறங்கி கொண்டிருந்தனர்.

மேசையின் அருகே சென்று, அவர்களின் தலையை மெதுவாக, ஒரு தந்தையின் வாஞ்சையோடு கோதி விட்டவன், மெதுவாக அவர்களை எழுப்பவும் செய்தான்.

“வெற்றி, தமிழ் ரெண்டு பேரும் எழுந்து போய் உங்க ரூம்ல தூங்குங்க”

என்று எழுப்பி விட, தமிழ் எழுந்து அறைதூக்கத்தில் தடுமாறிய படியே அறைக்கு செல்ல, அவனை பின்தொடர்ந்து நாலடி எடுத்து வைத்த வெற்றி நின்று, பாதி கண்ணை திறந்து செழியனை பார்த்து,

“வே…லை… நீங்க கொடுத்த வேலையை இன்னும் முடிக்கலையே அண்ணா”

என்று கடமை கண்ணாயிரமாக சொல்ல, அவனின் கடமை உணர்ச்சி செழியனுக்கு சிரிப்பையே தர,

“பரவாயில்லை போடா, போய் தூங்கு, எழுந்து பார்த்துக்கலாம்”

என்று சொல்லவும் தான், அரைகுறை தூக்கத்திலும், அறைகுறையாக சமாதானம் ஆன மனதுடன் சென்றான் வெற்றி.

விஜய்யை இரவே வீட்டிற்கு அனுப்பி இருந்தான் செழியன். அவனுக்கு இங்க எந்த வேலையும் இல்லை என்பதோடு, அவனுக்காக அங்கு மகதி காத்திருப்பாள் என்பதும் ஒரு காரணம்.

இன்னும் இருள் விலகாத, அதிகாலை பொழுதில் வீட்டின் வெளியே வந்து நின்றான் செழியன்.

சில்லென தென்றல் அவனின் உடலை ஊடுருவி செல்ல, அதை கண்களை மூடி ஆழ்ந்து அனுபவித்தான் செழியன்.

அந்த காலைநேர தனிமையின் இனிமையில், தலைவனுக்கு தலைவியை பற்றிய எண்ணம், வரவில்லை என்றால் தானே ஆச்சர்யம்.

செழியனின் மனது முழுக்க அவனின் மங்கையின் வாசம். அவனின் நங்கையின் வசம்.

“மை எவன்ஜெலின்”

என்று மென்மையாக உதடுகள் முணுமுணுக்க, நுனி நாக்கு முதல், தொண்டை வரை, தித்தித்த உணர்வு செழியனுக்கு.

எதற்கும் ஆசையே படாத செழியன், முதல் முதலில் விருப்பம் கொண்டது நங்கை மீது தான். அவளை அவனுடையவளாக ஆக்கிகொள்ள வேண்டும், என்ற பேராசையும் கொண்டான்.

காலமும், நங்கையின் அப்பாவும், அவனின் பிறப்பும் சதி செய்ய, ஐந்து வருட வனவாசத்திற்கு பிறகு இப்போது தான், மீண்டும் அவளவனின் அருகில் இருக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

தான் அன்று பார்த்து காதல் கொண்ட நங்கைக்கும், இன்று தன் கண் முன்னே இருக்கும் நங்கைக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.

காலமும், அவள் கொண்ட காயங்களும், நங்கையை வெகுவாக மாற்றி இருந்தன.

அன்றைய நங்கையின் நடையில், இளமையின் துள்ளலும், புத்துணர்ச்சியும் சாரலென தெரிக்கும்.

அவளின் நயனங்களில் சுற்றி நடப்பதை, இலயித்து இரசிக்கும் பாவம் இருக்கும்.

இவன், நங்கையை பார்க்க நேரும் போது எல்லாம், அவளின் அதரங்கள் வாடா புன்னகையை சூடி இருக்கும்.

ஆனால் இன்று…..

வெகு நிதானமான,அழுத்தமான நடை. சதா சிந்தனையில் மூழ்கி இருக்கும் நயனங்கள். முகமோ அசாத்தியமான இறுக்கம் என்று முற்றிலும் மாறி இருந்தாள் நங்கை.

குடும்பம் எனும் கூட்டில் பெற்றோரின் அரவணைப்பில் இளைப்பாறுவதற்கும், தனியே மோசமான உலகத்தை எதிர்த்து போரிடுவதற்கும், இடையில் உள்ள மாற்றம் அது.

இப்படி செழியனின் சிந்தனை முழுதும் நங்கையை சுற்றியே இருக்க, நேரத்தை பார்க்க அதுவோ ஆறு மணியை தொட்டிருந்தது.

இதற்கு மேலும் இங்கு தாமதித்தால், இன்று நங்கையை காண முடியாது என்பதால், தன் வீட்டிற்கு கிளம்ப ஆயுத்தமானான் செழியன்.

இரண்டு பக்கமும் பூட்ட கூடிய அந்த வீட்டின் உள் சென்று, தமிழும், வெற்றியும் உறங்குவதை உறுதி செய்து கொண்டவன், சத்தம் வராமல் தன்னிடம் இருந்த சாவியால், வீட்டை வெளிபக்கம் பூட்டினான் செழியன்.

தனது இருசக்கர வாகனத்தில், குளிர்ச்சியான காற்று முகத்தில் வந்து மோத பயணம் செய்த செழியனுக்கு, மீண்டும் நங்கையின் நினைவு தான்.

இப்போது யோசித்து பார்க்கும் போதும் செழியனுக்கு, எதனால் நங்கை மீது, இத்தனை தீவிரமான காதல் வந்தது என்று காரணம் புரியவில்லை.

காரண, காரியத்தோடு எல்லாம் காதல் வருவது இல்லை என்பதை செழியனுக்கு, யார் சொல்லுவது.

ஏதோ ஜென்ம ஜென்மமாக, அவளுக்காகவே தான் காத்திருந்தது போன்ற எண்ணம் செழியனுக்கு.

நங்கையால் மட்டுமே, இவனை முழுமையாக்க முடியும் என்பது போன்ற பிரேமை செழியனுக்கு.

இந்த மாதிரியான விவரிக்க முடியாத, வித்தியாசமான எண்ணங்கள் எல்லாம், காதலில் வெகு சாதாரணம் அல்லவா…..

செழியனுக்கே இன்று தன் எண்ணம், நங்கையை சுற்றியே அதிகம் பயணப்படுவது போல இருக்க,

“ஸ்டெடி செழியா, ஸ்டெடி”

என்று தனக்கு தானே சொல்லி, தன் தலையை உலுக்கி தன்னை நிலை படுத்தி கொண்டான் செழியன்.

தன் எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி விட்டு, தன் வீட்டை நோக்கிய பயணத்தை விரைவாக்க எண்ணி, இருசக்கர வாகனத்தை முறுக்கினான் செழியன்.

காலையில் வாகன நெரிசல் இல்லாத காரணத்தால் சீக்கிரமே, வீட்டிற்கு வந்து விட்ட செழியன், குளித்து உடைமாற்றி, மீண்டும் அங்கு செல்ல தயாராகி நங்கைக்காக காத்திருந்தான்.

தன் வழக்கமான நேரத்திற்கு நங்கையும் அவனை கடந்து செல்ல, முடிந்த அளவு அவளை கண்களில் நிரப்பி கொண்டு, தனக்காக காத்திருந்த வேலையை பார்க்க புறப்பட்டான் செழியன்.

அங்கு செல்லும் போதே, மூவருக்கும் சேர்த்து காலை உணவை வாங்கி கொண்டு சென்றவன், தமிழுக்கு கொடுத்த வேலையை, அவன் பார்த்தது போக மீதியை இவன் பார்க்க ஆரம்பித்தான்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் எழுந்து வந்து, அவர்களின் வேலையை தொடர, இடையில் ஒரு இரண்டு மணி நேரம் உறங்கி ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் வேலையை தொடர்ந்தான் செழியன்.

அந்த நாள் முழுக்க, மருந்து மாதிரிகளை ஆயவகத்திற்கு அனுப்புவதிலும், காணொளியை ஆயவு செய்வதிலும், அந்த சேமிப்பு கிடங்கின் உரிமையாளரை கண்டு பிடிப்பதிலுமே சென்றது.

அந்த சேமிப்பு கிடங்கு, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிடங்கு என்பது இவர்களுக்கே, சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.

மருந்தை பற்றிய ஆய்வு முடிவுகள் ஆய்வகத்தில் இருந்து வந்ததும் தான், என்ன மாதிரியான கடத்தல் நடக்கிறது என்பது தெரியும் என்பதால், இரண்டு நாட்கள் பொருத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

தொடர்ந்து இரண்டு நாள் உறக்கம் இல்லாமல் வேலை, கலைப்பை மிகுதியாக தந்த போதிலும், பிரச்சினையின் அடியை கண்டுபிடித்ததில் செழியனுக்கு மகிழ்ச்சி தான்.

அந்த மகிழ்ச்சியில் செழியன் நன்றாக ஆழ்ந்து உறங்கி, மறுநாள் எழும் போது மணி, பகல் பதினொன்றை தாண்டி சென்று இருந்தது.

பொறுமையாக எழுந்து கிளம்பியவன் கீழே வர, கீழ் வீட்டில் பெரிதாக பூட்டு தொங்கி கொண்டு இருந்தது.

“இந்த சனி கிழமையும் வேலைக்கு போயாச்சா”

என்று நங்கையை நினைத்து வருந்தியவனுக்கு, நன்மாறனும் வீட்டில் இல்லை என்பது தாமதமாகவே உரைத்தது.

“ஹா…….. இவன் வேற எங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கானு தெரியலையே”

என்று நன்மாறனை பற்றி யோசித்தவனுக்கு, மண்டை சூடாக ஆரம்பிக்க, கடுப்புடன் தான் வண்டியை எடுத்தான் செழியன்.

அவனின் இருசக்கர வாகனமும், அதன் பங்குக்கு, அதனால் முடிந்த அளவுக்கு, செழியனை கடுப்பேற்றி பார்த்தது.

வண்டி இடத்தை விட்டு நகராமல் உரும மட்டும் செய்ய, வித்தியாசமாக ஏதோ சத்தம் வேறு வர, முயன்று வண்டியை கிளப்பினான் செழியன்.

இப்படியே வாகனத்தை செலுத்த முடியாது என்பதால், அதை பழுது பார்க்க செழியன், பக்கத்தில் இருந்த வாகனம் பழுது பார்க்கும்
கடைக்கு செல்ல, அதுவோ மூடி இருந்தது.

இந்த நாள் வெகு அற்புதமாக விடிந்திருக்கிறது என்று கருவி கொண்ட செழியன், அக்கம்பக்கத்தில் விசாரித்து பார்க்க, அடுத்து இரண்டு தெரு தள்ளி, ஒரு வாகனம் பழுது பார்க்கும் கடை இருப்பதாக சொன்னார்கள்.

இந்த நாளின் அதி உன்னதமான சம்பவம், அங்கு தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தான் எ என்று தெரியாமல், அங்கு சென்றான் செழியன்.

செழியன் அந்த கடைக்கு செல்ல, கடையின் உள் அறையில் ஏதோ கூச்சலும், குழப்பமுமாக இருப்பது போல தெரிந்தது.

வெளியே இருந்த நபரிடம் வண்டியில் உள்ள பிரச்சனையை சொல்லி பார்க்க சொல்லிய செழியன், இயல்பாக மனிதர்களுக்கே உண்டான ஆர்வத்தில்,

“என்னாச்சு”

என்று உள்ளே பார்த்தப்படி கேட்க, இவனின் பார்வையை கவனித்த அந்த பழுது பார்ப்பவர்,

“ஒன்னிம் இல்ல சார், புதுசா வேலைக்கு வந்த பையன் கையில் கொடு போட்டுகிட்டான்”

என்று சொல்ல, “யாருக்கோ அடி பட்டு இருக்கு” என்ற வரையில் புரிந்து கொண்ட செழியனின் பார்வை ஏனோ மீண்டும் உள் பக்கம் சென்றது.

அங்கு காக்கி உடை அணிந்த இரண்டு ஆட்களுக்கு நடுவில், அதே காக்கி உடையில், கையில் இரத்தம் வழிய நின்று கொண்டிருந்தது நன்மாறனே.

அவனை அங்கு, இப்படி கண்டதும் பதறிய செழியன், விரைவாக அவனை அடைந்து, தன் கைக்குட்டையை கொண்டு, அவனின் கையில் அடிபட்டு இரத்தம் வழிந்த இடத்தை அழுத்தி பிடித்த படி,

“எப்படி ஆச்சு மாறா”

என்று சுற்றி நின்றவர்களை ஒரு பார்வை பார்த்தபடி கேட்க, அங்கு செழியனை எதிர்பாக்காத நன்மாறனோ முதலில் திகைத்தவன், பின்பு அவனின் கேள்விக்கு பதிலாக,

“ஒன்னும் இல்ல சார், சின்ன காயம் தான், நான் தான் கவனமாக வேலை பார்க்காம, கையை கட் பண்ணிக்கிட்டேன்”

என்று சொல்ல, அதை கேட்ட செழியனுக்கு கோவம் பெருக, அதை முயன்று கட்டுபடுத்தியபடி,

“சரி வா ஹாஸ்பிடல் போகலாம்”

என்று அவனை இழுக்க, அவனை மறுத்து நன்மாறன் ஏதோ சொல்ல வர, அவன் பேசவே இடம் கொடுக்காத செழியன் அவன் அருகில் குனிந்து,

“இப்போ நீ வரியா, இல்ல நங்கைக்கு போன் பண்ணட்டுமா”

என்று மிரட்டலாக கேட்க, இப்படி கேட்ட செழியனை வியப்பாக பார்த்த நன்மாறன், முதலாளியிடம் தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு, இவனுடன் கிளம்ப ஆயுத்தமானான்.

தன் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு, அவர்களையே பழுது பார்க்க சொன்ன செழியன், தான் பின்பு வந்து வண்டியை எடுத்து கொல்வதாக, சொல்லி விட்டு வந்தான்.

கடைக்கு வெளியே வந்தவன், ஒரு ஆட்டோ பிடித்து, நன்மாறனையும் ஏற்றி கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவமனை கொஞ்சம் பிரம்மாண்டமாக இருக்க, நன்மாறன் செலவை நினைத்து தயங்க, அவனின் தயக்கத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் உள்ளே அழைத்து சென்றான் செழியன்.

நன்மாறனின் காயத்தை பரிசோதித்த மருத்துவர், அதை சுத்தப்படுத்தி, காயம் கொஞ்சம் ஆழமாக இருந்ததால், தையலும் போட்டும் விட்டார்.

தானாக கரைந்து விடும் தையல் என்பதால், மீண்டும் மருத்துவமனை வரும் அவசியம் இல்லை என்றும் சொல்லி விட்டனர்.

நன்மாறனுக்கு ஊசியும் போட்டு, வலிக்கு மாத்திரை எழுதி கொடுத்து, காயத்தில் தண்ணீர் மட்டும் படாமல் பார்த்து கொள்ள சொல்லி அனுப்பினார் மருத்துவர்.

மருத்துவர் கொடுத்த மருந்துகளை வாங்கி கொண்டு, மருத்துவருக்கான தொகையையும் செலுத்தி விட்டு, நன்மாறனுக்கு குடிக்க மாதுளை பழரசமும் வாங்கி கொண்டு வந்தான் செழியன்.

அந்த பெரிய மருத்துவமனையின் வெளியே பூங்கா போல இருந்த இடத்தில், நன்மாறன் பழரசம் அருந்தும் வரை, பொறுமையாக இருந்த செழியன், அவன் குடித்து முடித்ததும்,

“அந்த மெக்கானிக்கல் ஷெட்ல நீ வேலை பார்க்குறியா”

என்று எடுத்த எடுப்பில் கேள்விகளை தொடுக்க ஆரம்பிக்க, கட்டு போட பட்டிருந்த தன் வலது கையை ஆராய்ந்து கொண்டிருந்த நன்மாறன்,

“ஹ்ம்ம் ஆமா”

என்று சொல்ல, முழு விவரத்தையும் அறிய நினைத்த செழியன்,

“உனக்கு எப்படி வேலை அங்க வேலை கிடைச்சது, எவ்ளோ நாளா வேலை பாக்குற”

என்று அடுத்த கேள்வியை கேட்க, நன்மாறனோ இன்னும் தன் கையை பார்த்தபடியே,

“அந்த ஷெட் என்னோட பிரென்ட் அப்பாவோடது, என் பிரின்ட் சொல்லி தான் பார்ட் டைம் அஹ வாங்கி கொடுத்தான், ஸ்கூல் முடிச்சிட்டு தினமும் டூ ஹௌர், அப்புறம் சாட்டர் டே ஈவினிங் வரை”

என்று சொல்ல, “அப்புறம் சன் டே மார்னிங் வேற இடத்துல வேலை” என்று மனதிற்குள் சொல்லி கொண்ட செழியன்,

“நங்கைக்கு தெரியுமா”

என்று அடுத்த கேள்விகயை முன்வைக்க, அக்காவிடம் மறைக்கிற குற்ற உணர்வு மனது முழுக்க வியாபிக்க தடுமாறிய நன்மாறன்,

“இல்லை”

என்று இடவலமாக தலையசைக்க, அவனின் மனதை புரிந்து கொண்ட செழியன் அவனை பரிவுடன் பார்த்து,

“மாறா நான் அட்வாண்டேஜ் எடுத்துகுறேனு நினைக்காத, உன் மேல் இருக்கிற அக்கறையால் தான் கேட்குறேன்”

என்று சொல்லி நிறுத்தியவன், தான் அவனுக்கு உதவிய நன்றிக்காக, தன் கேள்விக்கு பதில் அளிக்கும் நன்மாறனிடம், பேச கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விழைந்தவனாக,

“உனக்கு உங்க அக்கா கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு என்ன செலவு மாறா, என்ன உன்னோட பிரென்ட் அஹ நினைச்சி, என் கிட்ட சொல்ல கூடாதா”

என்று கேட்க, சின்னவன் அப்போதும் மவுனத்தையே பதிலாக தர, அவனின் அருகில் அமர்ந்து அவனின் தோலை சுற்றி, அணைவாக கையை போட்ட செழியன்,

“பொய் சொல்றது, திருடுறது, சட்டத்துக்கு புறம்பான வேலை செய்யுறது தான் தப்பு, அதை தவிர எந்த வேலையும் செய்யலாம் தான், ஆனா”

என்று ஒரு சிறு இடைவெளி விட்டவன், நன்மாறன் தன்னை நிமிர்ந்து பார்த்ததும்,

“ஆனா நீ இப்போ வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான கட்டத்துல இருக்க மாறா, நீ டுவல்த்ல நல்ல மார்க் எடுத்தா தான், நல்ல காலேஜ்ல நீ விரும்புற கோர்ஸ் சேர முடியும்”

என்று பொறுமையாக எடுத்து சொல்ல, இளையவனிடம் இப்போதும் அசாத்திய அமைதி தான், அதை கவனிக்காதது போல தொடர்ந்து பேசிய செழியன்,

“எது பண்றதுக்கு முன்னாடியும் யோசிச்சு பண்ணு, நங்கைக்கு உன்ன பத்தின நிறைய கனவு இருக்கும், எந்த விதத்திலையும் நங்கையோட எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டனு நினைக்கிறேன்”

என்று தான் பேசும் பாவனையை மாற்றி அவனை தூண்டி விடுவது போல பேச, இப்போது வாயை திறந்த இளையவன்,

“அக்கா எதிர்பார்ப்பை நான் பொய்யாக்க மாட்டேன், அவங்க நினைக்குறதை விட ஒரு பெரிய வேலைக்கு போய், அவங்களை நான் நல்லா பார்த்துப்பேன், அதுக்காக தான், நான் இப்போவே இந்த வேலை எல்லாம் பாக்குறேன்”

என்று ரோஷத்துடன் சொல்ல, வயதுக்கு மீறி பெரியவன் போல நடந்து கொண்டாலும், இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டி கொண்டு இருக்கும் குழந்தை தனத்துடன் சொல்ல, சிரித்து கொண்ட செழியன்,

“அப்படி என்ன பெரிய வேலைக்கு சார் போக போறீங்க”

என்று குழந்தையிடம் கேட்பதை போல, கிண்டல் குரலில் கேட்க, அந்த கிண்டல் பாவம், நன்றாகவே வேலை செய்தது.

பெரியவனின் கேள்விக்கு, இளையவன் கூறிய எதிர்பாரா பதிலில், செழியனின் புருவங்கள் உட்சி மேட்டிற்கு உயர்ந்தது.

காந்தன் வருவான்……..

Advertisement