கண்டுகொண்டேன் உனை என்னுள் 22

“எங்க கிளம்பியாச்சு..?” பேக்கை மாட்டி கிளம்பி கொண்டிருந்த மகனிடம் வைத்தி  கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்த வெற்றி,

“வேலைக்குப்பா..” என்றான்.

“போகத்தான் வேணும்.. பாவம், நம்மை நம்பி வந்த பொண்டாட்டிக்கு சம்பாதிச்சு கஞ்சி தண்ணி ஊத்தணும் இல்லை, ஆமா எங்கப்பா உன் பொண்டாட்டி..?” படு நக்கலாக கேட்டார் மனிதர்.

வெற்றி முகம் இறுக நின்றான். “என்னங்க இது..” அபிராமி மகனுக்காக வர,

“நீ பேசாத, பிள்ளையா வளர்த்து வச்சிருக்க..? கட்டின பொண்டாட்டி மனசு கஷ்டப்பட்டு அம்மா வீட்ல உட்கார்ந்திருக்கா, அவளை என்ன ஏதுன்னு கவனிக்காம வேலைக்கு போறாராம் இல்லை வேலைக்கு..” வைத்தி கோபத்துடன் பொரிந்து தள்ளினார்.

“ப்பா.. நான் ஏற்கனவே நாலு நாள் லீவுல தான் வந்தேன், இப்போ இந்த வாரமே ஓடி போச்சு, இனியும் போலன்னா பிரச்சனை ஆகிடும்..” வெற்றி சொல்ல,

“பிரச்சனை ஆகட்டும், எனக்கென்ன, எனக்கு தேவை என் மருமக எப்போ வீட்டுக்கு வருவாங்கிறது தான், பதில் சொல்லிட்டு நீ கிளம்பு..” பிடிவாதமாக அமர்ந்து கொண்டார்.

அபிராமி மகனையும், கணவரையும் பதட்டத்துடன் பார்த்து நின்றார். வைத்தி கோவமாக இருப்பது ஒரு புறம் இருக்க, வெற்றி எப்போது கோவப்படுவான் என்று தெரியவில்லை. அப்பா, மகன் பஞ்சாயத்து ஆகிவிட கூடாது என்று கடவுளை வேண்டி நின்றார்.

“ப்பா.. புரிஞ்சுக்கோங்க, நான் போய்ட்டு சீக்கிரம் வர பார்க்குறேன்..” வெற்றி பொறுமையாகவே சொல்லி கொண்டிருக்க, இடையிட்ட தந்தை,

“நீ என் மருமகளை நம்ம  வீட்ல கொண்டு வந்து சேர்த்துட்டு அங்கேயே கூட இருந்துக்கோ, எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை..” என்றார்.

“ப்பா.. அவ வருவா, கொஞ்ச நாள் அத்தை வீட்ல இருக்கட்டுமே இப்போ என்ன..?”

“அவ ஒன்னும் சீராட அம்மா வீடு போல, நீ என் மருமகளை என்ன பண்ணியோ கஷ்டத்துல அங்க போய் இருக்கா, நீயே போய் அவளை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வா..”

“சும்மா சும்மா என் மருமக என் மருமக சொல்லாதீங்க, அவ என் பொண்டாட்டி, எனக்கு தெரியும்..”

“என்ன தெரியும் உனக்கு, வந்த ரெண்டாவது நாளே அவளை கஷ்டப்படுத்தி வீட்டை விட்டு அனுப்ப தான் தெரியும்..”

“அப்போ என்மேல தான் தப்பு சொல்றீங்களா..?”

“அது எனக்கு தேவையில்லாதது, நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு.. எனக்கு தேவை என் மருமக..”

“உங்க மருமக வீட்டுக்கு வரணும் அதானே..”

“ஆமா அதே தான், சொல்லு எப்போ கூட்டிட்டு வர..?”

“இப்போ முடியாதுப்பா, நான் போய்ட்டு இந்த வாரமே வந்து அவளை கூட்டிட்டு வரேன், இப்போ என்னை கிளம்ப விடுங்க..”

“அது முடியாது மகனே, எனக்கு என் மருமக வீட்டுக்கு வரணும்..” வைத்தி அவரின் பிடியிலே நின்றார்.

வெற்றிக்கு தாறு மாறாக ஏறியது. இரண்டு நாட்களாக ஆபிசில் இருந்து வரச்சொல்லி தொடர் போன், அவனுக்கு தான் அம்மு விஷயத்தில் ஏதும் செய்ய முடியாமல் கிளம்ப முடியவில்லை.

“அவளை அங்க விட்டுட்டு எப்படி கிளம்ப..? போய் கூப்பிட்ட வருவாளா..? கண்டிப்பா வரமாட்டா, அப்பறம் எப்படி..?” என்று திணறி கொண்டிருக்க, அவனின் ஹெட்  நாளைக்கு வந்தே ஆகணும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். போகவில்லை என்றால் தேவையில்லாத பிரச்சனை, டென்க்ஷன். இவரோ அவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அடம் பிடித்து கொண்டிருக்கிறார்.

“ப்பா.. ப்ளீஸ் கொஞ்சம் என் நிலைமையும் யோசிச்சு பாருங்க, நான் போய்ட்டு வரேன்னு தானே சொல்றேன்..” இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டான்.

“நீ போறது பத்தி எனக்கு பிரச்சனையில்லை தம்பி, ஏன் நீ அங்கேயே இருந்துகிட்டா கூட எனக்கு கவலையில்லை. இத்தனை  வருஷம் அப்படி இருந்தவன் தானே நீ, எனக்கு தேவை என் மருமக அவ வீட்ல இருக்கணும், அவ்வளவு தான்..”

வெற்றிக்கு இதுக்கு மேல் எப்படி பேச என்று தெரியவில்லை. தன் கோவத்தை அடக்கி கொண்டு நின்றான். அவரிடம் காட்ட முடியாதே, அப்பா ஆயிற்றே. எல்லா மகன்களையும் போல உதவிக்கு அம்மாவை பார்த்தான்.

அபிராமியும் மகனின் நிலையை புரிந்து, “ஏங்க அவன்தான் போய்ட்டு வரான்னு சொல்றான் இல்லை, அனுப்பிவிடுங்க, நாம போய் அம்முவை கூப்பிட்டுக்கலாம்..” என,

“ஏன் இல்லை ஏங்குறேன், நாம ஏன் அம்முவை கூப்பிடனும், யார் அவளை துரத்தி விட்டாங்களோ அவங்க தான் போகணும், நாம ஏன்..?”

“ப்பா.. சும்மா துரத்தி துரத்தி விட்டேன்னு சொல்லாதீங்க, அவளே தானே அத்தை வீட்ல இருந்துகிட்டா..”

“அதான் ஏன்னு கேட்கிறேன், விருந்துக்கு கூட்டிட்டு போறேன்னு கூட்டிட்டு போய் சண்டை போட்டு என் மருமக மனசை கஷ்டப்படுத்தி அவளை அங்கேயே இருக்க வச்சது நீ தானே, அப்பறம் என்ன..? நீயே போய் கூட்டிட்டு வா போ..”

“ஏங்க அவனுக்கு தான் முக்கியமான வேலை..” அபிராமி திரும்பவும் மகனுக்காக பேச,

“நீ வாயை மூடுன்னு முதல்லே சொன்னேன் இல்லை, எல்லாம் உன்னை சொல்லணும், பிள்ளை வளர்த்து இருக்காலாம் பிள்ளை, வீட்ல உட்கார்ந்து என்ன தான் செஞ்ச..?”

“ப்பா.. அம்மாவை எதுக்கு பேசுறீங்க..?” அபிராமியின் கண்ணீரில் வெற்றி கேட்க,

“அவளை பேசாம வேற யாரை பேச, இது எங்க பிரச்சனை, நீ தலையிடாத..”

“ப்பா.. அவங்க என் அம்மா, நான் ஏன் பேசக்கூடாது..?”

“நீ முதல்ல உன் பொண்டாட்டிய கவனி, அப்பறம் அம்மாவை பார்க்கலாம்..”  இவர் சுத்தி முத்தி அங்க தான் போய் நிற்பார்.. கடுப்பாக முகம் திருப்பி கொண்டான்.

நேரம் போய் கொண்டே இருந்தது. இப்போது பஸ் ஏறினால் தான் காலையில் ஆபீஸ் சென்று சேர முடியும், இவர் விட மாட்டேன் என்று நிற்க, வெற்றி அம்முவை பார்க்க கிளம்பினான்.

“அந்த பேக் இங்கேயே இருக்கட்டும்..” வைத்தி சொல்ல,

“அப்படியே ஓடிட மாட்டேன்..” அபிராமியை பார்த்து கத்திவிட்டு கிளம்பினான்.

“என்ன வெற்றி இந்த நேரத்துல..?” எல்லோரும் தூங்கவே சென்றிருந்தனர்.

“ஏன் வரக்கூடாதா அத்தை..?” பாய்ந்தான்.

“ஏன் இவ்வளவு கோவம்..?” பவானி புரியாமல் பார்த்து நின்றார்.

“எங்க நான் தாலி கட்டின மகராசி.. நிம்மதியா தூங்கிட்டு இருக்காளா..?” கேட்டு கொண்டே அவளின் ரூம் ஏறிவிட்டான்.

பவானி இதற்கு மேல் எங்கு தூங்க..? கவலையுடன் அமர்ந்துவிட்டார். உடன் சேனாதிபதியும் தான். இப்போ என்ன..? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“அபிராமிக்கு போன் போட்டு கேளேன்..” சேனாதிபதி சொல்ல, பவானி உடனே அழைத்துவிட்டார்.

“சொல்லுங்கண்ணி..” அபிராமி குரல் நம நமவென்று இருக்க,

“என்ன ஆச்சுண்ணி..? அழுறீங்களா..?” பவானி பதட்டத்துடன் கேட்டார்.

“இல்லை அண்ணி.. நீங்க சொல்லுங்க, வெற்றி அம்முவை பார்க்க வந்துட்டானா..?”

“ஆமா அண்ணி.. அம்மு ரூமுக்கு போயிருக்கான், ரொம்ப கோவமா இருக்கான் போல, ஏதாவது பிரச்சனையா அண்ணி..?”

“என்ன சொல்லண்ணி.. எப்போவும் போல உங்க அண்ணன் அவன்கிட்ட சண்டை..”  என்று ஆரம்பித்து எல்லாம் சொல்லி முடித்தார்.

“ஓஹ்.. அதுக்கு அண்ணா ஏன் உங்களை பேசணுமாம்..?”

“ பேசாம என்ன..?  நான்னா இளக்காரம் தானே, கேட்க நாதியில்லை, அம்மா வீடு போக்கு வரத்து இல்லை, பேரன் பேத்தி எடுத்த பின்னாடி புருஷன் கூட சண்டை போட்டு வீட்டை விட்டு போக முடியாது, நம்ம மானம் தான் போகும், இத்தனை வருஷம் என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம், எப்போ பாரு இதே பேச்சு தான், வெறுத்து போச்சு அண்ணி,  போதும் இந்த பொம்பளை ஜென்மம்..”  இத்தனை வருட குடும்ப வாழ்க்கை வெடிக்க வைத்தது.

“அண்ணி.. ஏன் இப்படி சொல்றீங்க, நான் இருக்கேன் உங்களுக்கு, எனக்கு கல்யாணம் பண்ணதுல இருந்து இப்போ வரை எனக்கு ஒரு அம்மாவா இருந்து எல்லாம் செய்றது நீங்க, உங்களுக்கு என்ன நாதியில்லை, நான் வரேன் இருங்க, வந்து அண்ணனை என்னன்னு கேட்கிறேன்..” பவானி கோபத்துடன் பேச, அபிராமியின் கண்ணீர் நின்றது.

“எனக்கு இதுவே போதும் அண்ணி, என்னால உங்களுக்குள்ள  ஏன் சண்டை..?” அபிராமியின் பேச்சு மீண்டது.

“தாய்மைக்கே தாய்மை தேவைபடுகிறது போல. ஒரு கனிவான வார்த்தைக்கு, பாசத்திற்கு, நான் இருக்கிறேன் என்று ஆதரவிற்கு எவ்வளவு ஏங்க வேண்டியுள்ளது தாயுள்ளம்..!!”

“என்ன ஆச்சு பவானி.. அபிராமி ஏன் அழுறாங்க..?” அவர் பேசி முடித்து வைக்கவும் சேனாதிபதி கேட்க,

“எப்போவும் போல உங்க இனம் எல்லா பிரச்னையும் தூக்கி எங்க தலையில போடறது தான் காரணம், இதுக்கு என் அன்ணன் மட்டும் விதி விலக்கா என்ன..? இவங்க  பிரச்சனைக்கு அண்ணியை பேசியிருக்கார், அவங்க  என்ன செய்வாங்க..?” கணவரிடம் பொரிந்தார் பவானி.

“மச்சான் ஏன் அப்படி பேசினார்..?”

“எல்லாம் இவங்க சண்டை தான், வெற்றி நாளைக்கு ஏதோ வேலைக்கு போகணுமாம்..” அபிராமி சொன்னதை சொன்னார்.

“ஓஹ்.. என்ன முடிவெடுக்க போறாங்களோ..?” கணவனும், மனைவியும் மேலே பார்த்தனர்.

அங்கு அம்மு ரூமிற்கு வெற்றி போகும் போது அவள் கையில் புக் வைத்து உட்கார்ந்திருக்க, பார்த்த வெற்றிக்கு பொங்கியது. “இவளால நான் படாத பாடு பட்டுட்டு இருக்கேன், இவ என்னடான்னா எனக்கென்னன்னு புக் படிச்சிட்டிருக்கா..” காண்டனவன், அவளிடம் இருந்து அந்த புக்கை பிடுங்கவே செய்தான்.

யாரு.. என்று அம்மு பார்க்க வெற்றி.

“ஏண்டி.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா, உன்னால நான்  மண்டையே உடைச்சுக்கிற நிலையில இருக்கேன், நீ என்னடான்னா அம்மா வீட்ல ஜம்ன்னு உட்கார்ந்து புக் படிச்சுட்டு இருக்க, உண்மையை சொல்லு, அங்க வந்தா இப்படி இருக்க முடியாதுன்னு தானே என் கூட வம்படியா சண்டை போட்டு இங்க இருக்க..”  உர்ரென்று கேட்க, அம்மு ஏதும் பேசாமல் எழுந்து சென்று கதவை தாள் போட்டு வந்தாள்.

“அது என்னாத்துக்கு வேஸ்ட், திறந்தே இருக்கட்டும்.. ஒன்னும் முடியாது, கிளம்பணும்..” என்றான் கடுப்பாகவும், வேண்டுமென்றே சீண்டலாகவும்.

அவனின் வேண்டும் என்றே சீண்டல் பேச்சை  புரிந்த அம்மு பதில் ஏதும் சொல்லவில்லை. அமைதியாக நின்றாள்.

“ஆரம்பிச்சுட்டியா வாய்க்கு கம் ஒட்ட..”  கட்டிலில் ஆயாசத்துடன் அமர்ந்து கொண்டவன்  போன் ஒலித்தது. அவன் சென்னை செல்ல புக் செய்திருந்த ஏசி பஸ்ஸிலிருந்து பேசினார்கள்.

“வரவில்லையா..? வண்டி எடுக்க போகிறோம்..” என்றனர்.

“வரல..நீங்க கிளம்புங்க..” என்றுவிட்டான்.

“எங்க..?”அம்மு பார்க்க,

“தெரியாத மாதிரி பார்க்காத, எத்தனை மெசேஜ் அனுப்பியிருக்கேன் பாரு..” என்றான் கத்தலாக. அவள் தான் அவன் போன், மெசேஜ் எதுவும் எடுப்பதில்லையே. இப்போது எடுத்து பார்த்தாள். இன்று சென்னை போவதை பற்றி சொல்லியிருந்தான்.

“இப்போ சந்தோஷமா..?  நீயும் உன் மாமனாரும் சேர்ந்து என்னை  சாவடிக்கிறீங்க..? அவர் என்னடான்னா நீ வீட்டுக்கு வந்தா தான் நான் வேலைக்கு போகணும் சொல்றார், நீ என்னடான்னா வாயைவே திறக்காம என்னை பிபி ஏத்துற, நான் என்ன தான் செய்ய..?” திரும்பவும் கத்த, அவனின் முகத்திலே அவன் டென்ஷன் புரிந்தது.

“முதல்ல இப்படி கத்தாதீங்க, பொறுமையா பேசுங்க..” என்றாள் நிதானமாக.

“நீ பண்றதுக்கு புத்தருக்கு கூட பொறுமை  இருக்காது..”

“அப்படி என்ன பண்றேன் நான்..?”

“அது தான் எனக்கும் புரியல, ஆனா நீ என்னை ஏதோ பண்ற, பாரு  இந்த ரெண்டு நாளா நான் நானா இல்லை, நிம்மதியா சாப்பிட முடியல, தூங்க முடியல, உன்னை யோசிச்சு யோசிச்சே என் மண்டை சூடாகி போச்சு..”

“ ஏன் யோசிக்கிறீங்க, நீங்க தான் எங்கேயும் தப்பு இல்லையே.. அப்பறம் என்ன..?”

“என்னடி நக்கலா..?”

“இல்லைங்க நீங்க சொன்னதை  தான் சொல்றேன்..”

“முதல்ல இப்படி மூணாவது மனுஷன் மாதிரி பேசாத, மாமா சொல்லி பேசு..” கண்டிப்புடன் அதட்டினான்.

“இப்போ நான் பேசணுமா வேண்டாமா..?”அவன் கண்டிப்பை புறக்கணித்தாள்.

வெற்றி அவளின் கையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்தான். அம்மு எழவில்லை. என்ன கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.

“உண்மையாவே எனக்கு இப்போ தான் புரியுது ஏன் கல்யாணம்ன்னா எல்லாரும் அலறுறாங்கன்னு, பாரு கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள அவ்வளவு பிரச்சனை வரும், போகும், ஆனா இப்படி பேசாம யாரோ போல இருந்ததில்லை. இப்போ பாரு,  உன் கழுத்துல தாலி கட்டின நாளிலிருந்து  உனக்கும் எனக்கும் ஒரு பெரிய கேப் தான்..”

“அது தாலினால இல்லை, உங்க மனசால தான்..”

“ஏன் என் மனசுக்கென்ன..”

“அது என்னை  உங்க பொண்டாட்டியா மட்டும் தான் பார்க்குது,  என்னை நேசிக்கல.. அம்முவா என்னை உணரல, உணர்ந்திருந்தா என்னை நேசிச்சிருந்திருந்தா என்னை புரிஞ்சிருக்கும், என் மனசு  புரிஞ்சிருக்கும்,

“அந்த சுவாதிக்கு ஏன் எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்ற என் கோவம் புரிஞ்சிருக்கும், என் பக்க நியாயம் புரிஞ்சிருக்கும்..”

“இதை எல்லாம் விட என் காதல் புரிஞ்சிருக்கும்..”

“உங்களுக்கு தான் என் காதலே புரியலையே, அது ஏதோ செய்ய கூடாத தப்பு மாதிரி இல்லை முகம் சுழிச்சீங்க.. என்னால இப்போ வரை அதை ஏத்துக்க முடியல..” வலியுடன் பேச வெற்றி தலையில் கை தாங்கி அமர்ந்திருந்தான்.

கனத்த அமைதி..

அம்முவின் காதல் உணர்வுகள் ஏதோ சுழல் போல அவனை அடித்து சென்றது. ஏதும் புரியவில்லை. அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவள் உன் மனைவி என்று சொல்லி வளர்க்க பட்டவன்.

இது உன் அப்பா, உன் அம்மா, உன் மாமா, உன் அத்தை மாதிரி “உன் பொண்டாட்டி என்ற உறவு தான் அம்மு..”

அதில் அவள் சொல்லும் உணர்வுகள், காதல் எல்லாம்.. அம்மு சொல்வது போல உணரத்தான் முடியவில்லை அவனால்.