Advertisement

அத்தியாயம் 2

அத்தியாயம் 2

ஆளவந்தானிடம் வானதியோ, பானுரேகாவோ எதுவும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை. வானத்திற்கு உண்மை தெரிந்து விட்டது. இனி அவள் விலகிக் கொள்வாள் என்றெண்ணி அமைதியாக இருந்தனர். ஆனால் அவள் அமைதியாக இருக்கவில்லை. அடிபட்ட சிங்கம் போல் சீறிப் பாய ஆரம்பித்தாள் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

மனைவியும் மகளும் சென்னை செல்லும்வரை ஆளவந்தானால் வானதியோடு பேச முடியவில்லை. தொலைபேசி அழைப்பு விடுத்தாலும் அவள் துண்டித்துக் கொண்டே இருக்க, தான் அவளோடு இரவில் பேசாததால் கோபமாக இருக்கிறாள் என்றெண்ணிய ஆளவந்தான் சிரித்துக் கொண்டு தான் பேசினால் அவள் சமாதானமாகி விடுவாள் என்றும் எண்ணலானார்.  

பானுரேகா சென்னை செல்லும் பொழுது தந்தையின் முகநூலை பார்த்து விட்டுத்தான் சென்றிருந்தாள். வானதியிடமிருந்து எந்தவிதமான குறுந்செய்தியும் வராது இருக்கவே அவளால் எந்த பிரச்சினை இனி இருக்காது என்றெண்ணி அன்னையை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினாள். 

மனைவியும், மகளும் ஊருக்கு சென்ற உடன் ஆளவந்தானை மீண்டும் தனிமை பிடித்துக்கொள்ள வானதியின் நியாபகங்கள்  அவரை தாக்க உடனே அவளுக்கு குறுந்செய்தியை தட்டிவிட அது அவளுக்கு சென்றடையவே இல்ல. அவள் அவரை முடக்கி இருந்தாள். 

அது அவருக்கு புரியவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்றுப் போனவர் முகநூலில் தான் ஏதோ தவறு என்று அவளுக்கு அழைப்பு விடுக்க “எதுக்கு என்னை தொல்லை செய்யிறீங்க? நான்தான் உங்கள பிளாக் பண்ணி இருக்கேனே. உங்களுக்கு புரியலையா? வயசான நீங்க என்ன இருபத்தியெட்டு வயசுன்னு ஏமாத்திடீங்க. இனி நீங்க என் கிட்ட பேசக் கூடாது” தொலைபேசி இணைப்பு  துண்டிக்கப்பட்டது. 

அதிர்ந்து நின்றார் ஆளவந்தான். வானத்திக்கு உண்மை தெரிந்து விட்டதா? அவளுக்கு எப்படி தெரிந்தது? யார் சொன்னார்கள்? மனவேதனையை அன்றிரவு மதுவோடும், கண்ணீரோடும் கழித்தார். 

அடுத்தநாள் மாலை லயன்ஸ் கிளப்பில் அவருக்கு  ஒரு மீட்டிங் இருக்கவே சென்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவர் சென்றார். மாதம் ஒருநாள் நடக்கும் கூட்டம்தான். தொழிலதிபர்கள் அனைவரும் கூடுவதால் அறிமுகமும், தொழிற்சார்ந்த பேச்சுகளும் இருப்பதால் ஆளவந்தான் தவறாமல் சமூகமளிப்பார். 

அங்கு அனைவரும் அவரை ஒரு மாதிரியாக பார்ப்பதும், பேசுவதுமாக அவருக்கு தோன்ற அதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

போயும் போயும் ஒரு சின்ன பொண்ணுகிட்ட போய் பொய் சொல்லி ஏமாத்த பாத்திருக்காரு. அவர் பொண்ணு வயசுதான் இருக்கும்” யாரோ ஒருவர் ஆளவந்தாரின் காதுபடவே பேச, அனைவரினதும் பார்வைக்கு அர்த்தம் அப்பொழுதுதான் அவருக்கு புரிந்தது. 

இவர்களுக்கு எப்படி தான் வானதியிடம் பேசியது தெரியும் யார் சொல்லி இருப்பார்கள்? ஆளவந்தானுக்கு ஒன்றும் புரியவில்லை. 

அவர் யோசனையாக பார்த்திருக்கையில் அவர் அருகில் வந்து நின்றான் ராஜேந்திரன்.

என்ன சார் வானதி உங்கள பிளாக் பண்ணிட்டா போல” என்று பேச்சை ஆரம்பிக்க அவனை முறைத்தார் ஆளவந்தான். 

நீங்க பண்ணது, பேசினது எல்லாத்தையும் வானதி என் கிட்ட சொல்லிட்டா. உங்க பொண்ணு வயசு சார் அவளுக்கு. அவள போய் ஏமாத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது? அவ என் கிட்ட சொல்லி எவ்வளவு அழுதா தெரியுமா?” 

உன்கிட்ட சொன்னாளா? அழுதாளா? இது எப்போ?” ஆளவந்தானுக்கு ஒன்றும் புரியவில்லை. 

நடந்ததும் அதுதான். வானதியிடம் பேசும் பொழுது ஆளவந்தான் ஓரிரு தடவை ராஜேந்திரனை பற்றியும், அவனை தனக்கு பிடிக்காது என்றும் கூறி இருந்தார். அவள் ராஜேந்திரனிடம்  நட்பு பாராட்டி தனக்கும் ஆள்வன்தானுக்கும் இடையில் நடந்தவைகள் அனைத்தையும் கூறி இருந்தாள்.     

ஏன் சார் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க. உங்க கம்பியூட்டர்ல தானே உங்க பொண்ணும், மனைவியும் வானதிக்கு உங்க குடும்ப போட்டோவை அனுப்பி வச்சி உண்மையெல்லாம் சொல்லி இருக்காங்க. பாருங்க உங்க பிரென்ட் இப்படி பண்ணிட்டாருனு என் கிட்ட சொல்லி அழுதா. அவ்வளவு அழகான பொண்ணு அழுதா என் மனசு தாங்குமா சொல்லுங்க? உடனே கண்ணீரை துடைக்க கிளம்பிட்டேன் இல்ல” சத்தமாக சிரித்தான் ராஜேந்திரன். 

ஆளவந்தானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. “லேகாவுக்கும், பானுவுக்கும் தான் வானதியிடம் பேசியது தெரியுமா? தெரிந்தும் ஒன்றுமே கேட்கவில்லையா?” அப்பொழுதே ஆளவந்தான் வானதியை தூக்கி எரிந்து இருக்கலாம். விதி யாரை விட்டது.

ஆ சார் சொல்ல மறந்துட்டேன் நானும் வானதியும் காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். இப்போ நைட்டு முழுக்க அவ என் கூடத்தான் பேசிகிட்டு இருக்கா. நீங்க எங்க வாழ்க்கைல குறுக்க வராதீங்க. புரியுதா” மிரட்டும் தொனியில் கூறியவன் இடத்தை காலி செய்தான். 

செல்லும் ராஜேந்திரனை குரூர பார்வை பார்கலானார் ஆளவந்தான். 

அவன் சொன்னவைகளை நம்ப அவர் தயாராக இல்லை. வானதியிடமே கேட்டுது தெரிந்துக் கொள்ளலாம் என்று அவளுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தால் “நீங்க யார்னே எனக்கு தெரியாது” என்று அழைப்பை துண்டிப்பாள்.

சோர்ந்து போகாமல் தினமும் அவளை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டே இருக்க ஒருவழியாக வானதி பேசினாள்.

இப்போ என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு இப்படி தினமும் எனக்கு போன் பண்ணி தொல்ல பண்ணுறீங்க?” கோபத்தை அடக்கியவாறுதான் கேட்டாள். 

நான் உன் கிட்ட பேசணும்” 

எனக்கு உங்க கிட்ட பேச ஒன்னும் இல்ல” 

ஆனா எனக்கு உன்கிட்ட தெரிஞ்சிக்க ஒரு விஷயம் இருக்கு. நீ அந்த ராஜேந்திரன் கிட்ட பேசுறியா?” அப்படித்தான் கேட்டார். காதலிக்கிறியா என்றெல்லாம் கேட்க ஆளவந்தானுக்கு தைரியம் வரவில்லை. 

நான் யார் கூட வேணாலும் பேசுவேன். அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. போன வைங்க” வானதி தொலைபேசியை துண்டிக்க போக 

நீ சொன்னா இனிமேல் உனக்கு நான் போன் பண்ண மாட்டேன்” என்றார் ஆளவந்தான். 

ஓஹ்… நல்லதா போச்சு. அப்போ நல்லா கேட்டுக்கோங்க நானும் ராஜேந்திரனும் காதலிக்கிறோம். இனிமேல் சும்மா சும்மா போன் பண்ணி தொல்ல பண்ணாதீங்க” என்றவள் தொலைபேசியை துண்டித்திருக்க ஆளவந்தானுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.

தனிமையில் தவித்த ஆளவந்தானுக்கு வானதி சொன்னவைகள் மட்டும்தான் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, வழமைக்கு மாறாக குடிக்க ஆரம்பித்தார். தனிமையில் இருந்தவர் மனச்சோர்வுக்கு மெல்ல மெல்ல ஆளானார். 

அடுத்த லயன்ஸ் கிளாப் சந்திப்பின் பொழுது ராஜேந்திரன் தானும் வானதியும் சந்தித்துக் கொள்ளப் போவதாக பெருமை பாடினான். 

அதற்காக அவன் கோயமுத்தூர் செல்வதாகவும், அங்கு சென்று வானதியின் பெற்றோரை சந்தித்து பெண் கேட்கப் போவதாகவும் கூற ஆளவந்தானின் இரத்தம் கொதித்தது.

தினமும் இரவில் முகநூலை திறந்து வைத்துக் கொண்டு ராஜேந்திரனும், வானதியும் பேசிக்கொள்வதாக கற்பனை பண்ண ஆரம்பித்தார். 

ஒரு படிமேல் சென்று வானதிக்கு தொலைபேசி அழைப்பி விடுபவர் அது இணைப்பை ஏற்படுத்த மறுக்கவே ராஜேந்திரனை அழைத்தார் அவன் தொலைபேசியும் இணைப்பை ஏற்படுத்த வில்லையாயின் இருவரும் பேசுவதாக எண்ணி மருகினார்.    

இரவில் தூக்கத்தை இழந்த ஆளவந்தான் வானதியின் நினைப்பாகவே இருந்தார். அவரால் அவளை மறக்க முடியவில்லை. அதற்கு மேலாக அவர் வெறுக்கும் அந்த ராஜேந்திரனை அவள் திருமணம் செய்து கொண்டு ஊட்டிக்கு வந்து விட்டால் தினம் தினம் அவளை அவனோடு பார்க்க நேரிடும். 

அவர்கள் இருவரும் கைகோர்த்து தேயிலை தோட்டத்தில் உலாவருவது போல் காட்ச்சிகள் தோன்ற தலையை பிடித்துக் கொண்டு கத்தினார்.  

ராஜேந்திரன் இவரை கேலி செய்வது போலவும், வானதி இவரை பார்த்து சிரிப்பது போலவும் மீண்டும், மீண்டும் தோன்றி மறைய பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தவர் முழு பைத்தியமாக மாறாதது மட்டும்தான்.

நேரம் சென்று எழுந்தவருக்கு இரவு நடந்தது எல்லாமே நியாபகத்தில் வந்தது. இன்றுதான் ராஜேந்திரன் வானதியை சந்திக்க செல்லும் நாள். அதை தடுக்க வேண்டும். எப்படி? எப்படி? எப்படி? யோகாசித்தவருக்கு கண்களில் பட்டது அவரது வேட்டை துப்பாக்கி. தயாராகி துப்பாக்கியோடு வண்டியில் ராஜேந்திரனின் பங்களாவை நோக்கி விரைந்தார். 

மலை பாதையின் வளைவுகளில் ராஜேந்திரனின் வண்டி மலையிறங்குவது கண்ணில் பட்டது. அவன் செல்வது வானதியை சந்திக்கத்தான். “கூடாது கூடவே கூடாது” ராஜேந்திரனின் வண்டியை பிடிக்க வேகமாக வண்டியை செலுத்தினார்.

ராஜேந்திரனும் வானதியை சந்திக்க செல்லும் ஆவலில் வண்டியை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தபடியால் கோயமுத்தூரை அடையும்வரை அவரால் ராஜேந்திரனின் வண்டியை பிடிக்க முடியவில்லை.

வானதியின் வீட்டுக்கு அருகே வந்தபின்தான் ஆளவந்தானால் ராஜேந்திரனின் வண்டியை மடக்கி பிடிக்க முடிந்தது. ராஜேந்திரன் திட்டிக் கொண்டே வண்டியை விட்டு இறங்க ஆளவந்தானைக் கண்டு அதிர்ந்தான். 

துப்பாக்கியை அவன் புறம் நீட்டியவாறே “ராஜேந்திரா மரியாதையாக திரும்பி ஊருக்கு போ..” சிங்கக் குரலில் கர்ஜித்தார் ஆளவந்தான்.

என்ன மிஸ்டர் ஆளவந்தான் பூச்சாண்டி காட்டுறீங்களா? வழிய விடுங்க நான் என் வானதிய பார்க்கணும்” ராஜேந்திரன் பயப்படவில்லை. முதல் முதலில் வானதியை நேரில் காண செல்கின்றான். காதல் போதை அவன் கண்களை நிரப்பி இருந்தது.  

உன் வானதியா? அவ என் வானதி. நடுவில் வந்தவன் நீ மரியாதையாக போ…” மீண்டும் மிரட்ட 

அவள ஏமாத்தினது நீங்க, அவ காதலிக்கிறது என்ன. நீங்க போங்க சார்” ராஜேந்திரன் அவரை கண்டு கொள்ளாது வண்டியை பின்னால் எடுத்து வேறு வழியில் செலுத்தலாம் என்று வண்டியில் ஏற சென்றான். 

சொன்னா கேக்க மாட்டியா?” ஆளவந்தாரின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மிருகம் கோபத்தால் தட்டி எழுப்பப்பட்டு அவரை உசுப்பேத்தி இரண்டு முறை ராஜேந்திரனை சுட்டு விட, ராஜேந்திரன் அந்த இடத்திலையே உயிர் துறந்தான். 

ராஜேந்திரனை கொன்ற பின்னும் ஆளவந்தாரின் ஆத்திரம் அடங்கவில்லை. வானதியின் வீட்டை நோக்கி விரைந்தார். 

அன்று ஞாயிற்றுக்கிழமையும் கூட, வீட்டில் தொலைக்காட்ச்சி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

அவர் வயதில் ஒருவர் தொலைக்காட்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார். ஆளவந்தான் துப்பாக்கியோடு வீட்டுக்குள் வந்ததை கண்டு மிரண்டு எழுந்தவர் அச்சத்தோடு “யார் நீங்க?” என்று கேட்ட பொழுது வெளியே செல்ல புடவையில் தயாராகி அறையிலிருந்து வெளிப்பட்டாள் வானதி. புகைப்படத்தில் இருந்ததை விட நேரில் பேரழகியாகவே இருந்தாள்.    

ஆளவந்தானின் மூளை இருமுறை சிந்திக்கவில்லை. அவள் ராஜேந்திரனை சந்திக்கத்தான் கிளம்பி விட்டாள் என்று முடிவு செய்து சற்றும் யோசிக்காமல் கையிலிருந்த துப்பாக்கியை கொண்டு அவளையும் சுட்டார். 

இரத்த வெள்ளத்தில் அவள் சரியும் பொழுதே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து ஓடி வந்த வானதியின் அன்னை ஆளவந்தானை கண்டு “நன் தானே உன் கூட பேசினேன். எதற்கு என் மகள் கொன்ன?” என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

அதே குரல் ஆளவந்தானொடு அலைபேசியில் உரையாடிய அதே குரல் ஆளவந்தான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்க, அவளின் அந்த வாக்கு மூலம் ஆளவந்தானுக்கு மட்டுமல்ல, அங்கு அதிர்ச்சியாக நின்றிருந்த இன்னொரு ஜீவனுக்கும் மேலும் ஒரு அதிர்ச்சியையும் கொடுத்திருந்தது.

துப்பாக்கி சூடு நடந்தால் மக்கள் பீதியடைய மாட்டார்களா? உடனடியாக காவல்துறை களத்தில் இறங்கி இருந்தது.

மறைக்கப்பட்ட பல திடுக்கிடும் உண்மைகள் காவல்துறை விசாரணையில் இந்த உலகத்துக்கு புலப்பட போவது உறுதி. 

ஆணென்ன? பெண்ணென்ன? ஏமாறுபவர்களும், ஏமாற்றப்படுபவர்களும் அன்று தொடக்கம் இன்றுவரை இருந்துகொண்டே தான் இருக்கின்றனர்.

Advertisement