Advertisement

கணனிக் காதல்
அத்தியாயம் 1  
வருடம் 2008
ஊட்டிக் குளிர் சில்லென்று உடலை தாக்க ஆளவந்தான் குளிருக்கு இதமாக பாட்டிலை திறந்து கோப்பையில் மதுபானத்தை நிரப்பி வாயில் சரித்துக் கொண்டார். 
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேயிலை காடு. நடுவில் பெரிய பங்களா. அங்கே தனியாக ஆளவந்தான். தனிமை அவரை கொல்லாமல் கொல்ல. குளிர் கூட உதவி செய்து கொண்டிருந்தது. 
ஆளவந்தானுக்கு வயது ஐம்பத்தி இரண்டு. மனைவி இந்த்ரலேகா. ஒரே மகள் பானுரேகா. 
பரம்பரை சொத்துக்கள், நிலபுலன்கள், தேயிலையால் வரும் வருமானம் என்று ராஜபோக வாழ்க்கைதான். அதுபோக அவருடைய ஒரே பொழுதுபோக்கு வேட்டையாடுவது. தாத்தா காலத்தில் சிங்கம், புலி என வேட்டையாடிய பரம்பரை. தந்தை காலத்தில் மான், மறை என வேட்டையாடிக் கொண்டிருக்க, அரசாங்கம் வேட்டையாடுவதை தடை செய்து விட்டது. 
இரத்தத்தில் ஊறியதல்லவா… திருட்டுத் தனமாக, தனியாக சென்று வேட்டையாடிக் கொண்டு வந்து விடுவார். 
வயதானத்தில் ஆர்வம் குறைந்து துப்பாக்கியை அடிக்கடி துடைத்து வைப்பதில் மட்டும் மும்முரம் காட்டலானார். 
பானுரேகா சென்னையில் காலேஜில் படிக்கிறாள். அவளை தனியாக அனுப்ப மனம் வராமல் மனைவி இந்த்ரலேகாவோடு மனை வாங்கி தங்க வைத்திருக்கிறார் ஆளவந்தான். மகள் மீது அவ்வளவு பாசம். 
சமையலுக்கு ஒரு முதியவர். தோட்ட வேலைக்கு ஒரு முதியவர். ஒரு காவலாளி. இவர்களை தவிர அந்த பங்களாவில் ஈக், காக்கா இரவில் நுழையாது. 
குளிர் அதிகம் என்பதால் வேலையாட்கள் எட்டு மணியாகும் பொழுதே தூங்கி விட, ஆளவந்தானுக்கு பேச்சுத் துணைக்கு கூட யாருமில்லை. 
தூக்கமும் வராமல், தனிமையும் படுத்த வாழ்க்கையே வெறுமையாக கழிக்கலானார் ஆளவந்தான். 
நாளை பிறந்தநாள் வருடா வருடம் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆளவந்தானின் பிறந்தநாள் இந்த வருடம் கட்டின மனைவியும், பெத்த மகளும் இல்லாமல் கொண்டாட முடியாது என்று மறுத்து விட்டார். 
தங்கள் மீது ஆளவந்தானுக்கு எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போன மகளும், மனைவியும் அவருக்கு பிறந்தநாள் பரிசொன்றை அனுப்ப முடிவு செய்தனர். 
அந்த பரிசால் தங்களது குடும்பமே அழிந்து போவதை அறியாமல் அதை பத்திரமாக ஆளவந்தானுக்கு அனுப்பியும் வைத்திருந்தனர்.
காலையில் நேரம் சென்று கண்விழித்த ஆளவந்தானுக்கு வேலையாள் பழனி காபி கொடுக்க அதை குடித்து விட்டு இன்றைய வேலைகள் என்ன என்று சிந்தித்தவாறே குளிக்க சென்றார்.  
குளித்து விட்டு வந்தவருக்கு தொலைபேசி வழியாக மனைவியும், மகளும் வாழ்த்து சொல்ல “நான் எந்திரிக்கிற நேரத்தை சரியா தெரிஞ்சி வச்சிருக்குறீங்க” 
எனக்கு இன்னைக்கு லீவு ப்பா.. இல்லனா இந்த நேரத்துல நான் எப்படி வீட்டில் இருக்க முடியும்?
அதானே சாப்டியாடா தங்கம்”
உங்களுக்கு பிடிச்ச எல்லா ஐட்டத்தையும் பண்ண சொல்லி பழனி தாத்தாகிட்ட சொல்லி இருக்கேன். நீங்க நல்லா சாப்பிடுங்க. நானும் அம்மாவும் சாப்பிட்டோம். ஆ.. அப்பா உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கி இருக்கேன். அத கொண்டு வந்து தருவாங்க” பானுரேகா புதிராகவே பேச 
என்னம்மா அப்பாக்கு புது வண்டி ஏதாச்சும் வாங்கினியா? இல்ல. புது மாடல் துப்பாக்கி வாங்கினியா?” ஆளவந்தான் அமர்க்களமாக கேக்க
இது அத விட சூப்பர் ப்பா… நீங்க என்ன வாங்க நினைச்சாலும் இதுல பார்த்து வாங்கலாம்” பானுரேகா என்னவென்று சொல்லாமலையே விளக்கம் கூறிக் கொண்டிருக்கையில் காவலாளி ஒரு வண்டி வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். 
அப்பா உங்க கிப்ட் தான் ப்பா.. என்ஜோய்” பானுரேகா அழைப்பை துண்டிக்க, அப்படி என்ன அனுப்பி இருக்கிறாள் என்று ஆவலாக ஆளவந்தான் சென்று பார்க்க ஒரு பெட்டி மட்டும்தான் வாசலில் இறக்கி வைக்கப்பட்டிருந்தது. 
என்னவாக இருக்கும்?” என்று யோசனையாக பார்க்க 
சார் டெஸ்க்டாப், மொனிட்டர் எங்க பிக்ஸ் பண்ணனும்னு சொன்னா பண்ணி கொடுக்குறேன்” என்றான் வந்தவன். 
காரியாலய அறையில் வைக்குமாறு ஆளவந்தான் கூற, வந்தவனும் எல்லாவற்றையும் பொருத்தி விட்டு வைஃபை இணைப்பையும் பொருத்தி, எவ்வாறு உபயோகிப்பது என்று மேலோட்டமாக  சொல்லிக் கொடுத்து விட்டு சென்று விட்டான். 
நாடே கணனி மயமாக்கப்பட்டு விட்ட நிலையில் தாங்களும் கணக்கு வழக்குகளை கணனியில் வைத்துக்கொள்ளலாம் என்று கணக்காளர் கூற ஆளவந்தானின் தேயிலை தொழிற்சாலையிலுள்ள காரியாலய அறையில் கணனி வசதியை ஏற்படுத்தி இருந்தார். அவர் அதை உபயோகிக்காவிட்டாலும். எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்று கவனித்து, மெல்ல மெல்ல கணணியை கற்றுக்கொண்டார்.
பானுரேகா அடிக்கடி கூறுவதுதான். இணைய வசதி இருந்தால் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம். கோப்புக்களை சுமந்து கொண்டு அலைய வேண்டியதில்லை என்று. தான் கற்றுக்கொண்டதை அறியாமளையே தனக்கு மகள் பரிசாக அனுப்பி இருப்பதை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் தந்தை.
நேரமானதால் தொழிற்சாலைக்கு கிளம்பி சென்றவர் காரியாலயத்தில் சுற்றிவர, கணக்காளரின் மகன் கோகுல் கணணியை பார்த்தவாறு சிரித்துக் கொண்டிருப்பதை கண்ட ஆளவந்தான் என்ன எது என்று விசாரித்தார். 
தான் தனது நண்பனோடு முகநூலில் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவன் சொன்னதற்கு சிரித்ததாகவும் அவன் கூற, முகநூல் என்றால் என்ன? என்று வினவினார் ஆளவந்தான். 
ஐயோ அங்கிள் உங்களுக்கு தெரியாதா?” என்றவன் அதை பற்றி விளக்கமளித்தது மட்டுமல்லாது ஆளவந்தானுக்கும் முகநூலை உபயோகிக்க கற்றுக் கொடுத்தான். 
அன்றிரவு வீடு வந்த ஆளவந்தானுக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று நிறைய பேர் நண்பர்களாவதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 
ஒவ்வொருவராக பார்த்துப் பார்த்து தனது நண்பர்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டு வந்தவருக்கு ராஜேந்திரன் என்ற பெயரை பார்த்ததும் கோபம் வந்தது. 
ராஜேந்திரன் பக்கத்து தேயிலை ஸ்டேட்ஸ் சொந்தக்காரன். வயது இருபத்தி எட்டு. ஆணழகன். புதிதாக பணக்காரனானவன் மட்டுமல்ல, லயன்ஸ் கிளப்பில் சந்தித்தால் போதும் ஆள்வந்தானை சீண்டுவதை போல்தான் பேச்சும் இருக்கும். ஒவ்வொரு காரியத்தையும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றான்.
இவன் எனக்கு நண்பனா?” புறக்கணிக்க போனவர் “என்னதான் செய்கிறான் என்றுதான் பார்க்கலாம்” என்று ராஜேந்திரனை தனது நண்பர்களின் பட்டியலில் சேர்த்திருந்தார்.     
 கடைசியாக கோயம்புத்தூரிலிருந்து வானதி என்ற பெண் கோரிக்கை விடுத்தது மட்டுமல்லாது. “வணக்கம். என்னை உங்கள் தோழியாக ஏற்றுகொள்வீங்களா?” எனக் கேட்டு குறுந்செய்தியும் அனுப்பி இருந்தாள். 
ஏனோ ஆளவந்தானுக்கு அந்த பெண்ணும் தன்னை போல் தனிமையில் வாடுவது போல் தோன்ற “நிச்சயமாக தோழி” என்று பதில் அனுப்பினார். 
உடனே வானதியிடமிருந்து “நன்றி” என பதில் வந்தது.  
வானதி… வயது இருபது. கோயமுத்தூரை சேர்ந்தவள் என்றாள். தான் ஐம்பத்தி இரண்டு வயதானவன் என்று கூறினால் எங்கே அவள் தன்னிடம் பேச மறுத்து விடுவாளோ என்று ஆளவந்தான் தனக்கு இருபத்தி எட்டு வயதுதான் ஆகிறது என்றார். 
அன்று ஆரம்பித்த அவர்களின் நட்பு பல இரவுகள் தொடர்ந்தது. இசை, சினிமா, அரசியல், நாட்டு நடப்பு, இயற்கை, என எல்லா விதமான தலைப்புகளையும் அலசி ஆராயலானார்கள் இருவரும். ஆளவந்தானுக்கு அலைபேசி உபயோகிக்கும் பழக்கம் இல்லை. அது அவருக்கு தேவைப்படவுமில்லை. அதனால் வானதிக்கு அவரது தொலைபேசி எண்ணையே கொடுத்திருந்தார். வானதியும் தன்னிடம் அலைபேசி இல்லை என்றும் வீட்டு எண்ணை கொடுத்திருந்தாள்.  
உங்க பிறந்தநாள் எப்போ?” வானதி கேட்டிருக்க
எதற்கு கேட்டீங்க?” ஆளவந்தான் கேட்டிருந்தார். 
பரிசு அனுப்பத்தான்” 
என் பிறந்தநாள் அன்னைக்குதான் உங்க கூட பேசவே ஆரம்பிச்சேன். நீங்கதான் எனக்கு கிடைச்ச பரிசு” புன்னகைத்தவர் “உங்க பிறந்தநாள் எப்போ?” 
வானதி சொல்ல குறித்துக் கொண்டவர் வானத்திற்கு பிறந்தநாள் பரிசும் அனுப்பி வைத்தார். 
நாட்கள் நகர, நகர ஆளவந்தானுக்கு வானதியின் மேல் தோழி என்பதையும் தாண்டி ஒருவித ஈர்ப்பு உருவாக்கி இருந்தது. 
அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் அவள் புகைப்படத்தை கேட்க தயக்கமாக இருந்தது. அவள் புகைப்படத்தை கேட்டால் தானும் தன் புகைப்படத்தை அனுப்ப வேண்டுமே. அதனாலயே கேட்காமல் இருந்தார். 
ஆனால் வானதி அவளாகவே அவள் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். சேலையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தவள் சினிமா நடிகைகளை விடவும் ஆளவந்தாரின் கண்களுக்கு அழகாக தெரிந்தாள்.  
வானதி நீ இவ்வளவு பேரழகியா?” குறுந்செய்தியிலையே வழியலானார். 
எந்த பதிலையும் சொல்லாமல் “நான் உங்கள பார்க்கலாமா?” என்று கேட்டாள் வானதி. 
என்ன செய்வது என்று தடுமாறிய ஆளவந்தான் பழைய ஆல்பத்திலிருந்து அவருடைய இளைமை கால புகைப்படமொன்றை எடுத்து அனுப்பி இருந்தார். 
அதை பார்த்த வானதி “நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க” என்று புகழ்ந்தாள். 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்ட மகிழ்ச்சியில் அவர்களின் நெருக்கம் இன்னும் அதிகமானது. இரவிப் பேச்சும் நீண்டது. ஆளவந்தானின் தனிமையும் விடை கொடுத்தது.   
இப்படியே சென்ற இவர்களின் சம்பாஷணைக்கு வேகத்தடையாக வந்து சேர்ந்தனர் பானுரேகாவும், இந்திரலேகாவும். 
பானுலேகா செமாஸ்டர் லீவில் ஒரு மாதம் ஊருக்கு வந்திருக்க, அவளை அழைத்துக் கொண்டு அங்கும், இங்கும் செல்ல வேண்டியதால் ஆளவந்தானுக்கு வானதியோடு சரியாக பேசவே நேரம் கிடைக்கவில்லை. 
இரவில் மனைவி அருகுகில் இருப்பதால் பேசவே முடியாமல் போக, தனக்கு வானதி மீது இருப்பது வெறும் ஈர்ப்பல்ல காதல்தான் என்று உணர்ந்துக் கொண்டார் ஆளவந்தான். 
இது எப்படி சாத்தியம்? தன் மகளின் வயதை ஒத்த பெண்ணிடம் தனக்கு காதலா? என்றெல்லாம் அவர் சிந்திக்கவில்லை. தனது ரசனைக்கு ஒத்துப்போன பெண்ணிடம் அவர் மனதை பறிகொடுத்து விட்டார். அவளுக்கும் அவரை பிடித்து விட்டது அவ்வளவுதான். அவளிடம் அவர் காதலை சொல்லப் போவதுமில்லை. கணனியில் பேசிக் கொள்கின்றோம் வேறு எதையும் அவர் அவளிடம் எதிர்பார்க்கப் போவதில்லையே. என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டார். 
ஆனால் விதி அவர் வாழ்க்கையில் வேறு விதமாக விளையாடியது. 
அன்று செவ்வாய்க்கிழமை ஆளவந்தான் தொழிற்சாலைக்கு கிளம்பிச் சென்றிருந்தார்.
செய்வதற்கு ஒன்றுமில்லாது வீட்டை சுற்றி வந்துகொண்டிருந்த பானுரேகா தந்தையின் கணனியில் ஏதாவது செய்யலாம் என்று அதன் முன் அமர்ந்தாள். 
அதை திறந்தவளுக்கு வெளியேறாத ஆளவந்தாரின் முகநூல் கணக்கும் கண்ணில் பட்டது. 
என்னது அப்பா பேஸ்புக் கூட யூஸ் பண்ணுறாரா?” என்றவாறே உள்ளே சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தவளுக்கு வானதியிடமிருந்து குறுந்செய்தி வந்தது. 
அவளால் ஆளவந்தானிடம் பேசாமல் இருக்க முடியவில்லை என்றும் அவள் அவரை காதலிப்பதாக நினைப்பதாகவும் அதில் இருக்க, அதை பார்த்து அதிர்ந்த பானுரேகா அன்னையை அழைத்து அந்த குறுந்செய்தியை காட்டி இருந்தாள். 
இந்த்ரலேகாவுக்கு அதிர்ச்சி தாளவில்லை. இருந்தாலும் தனது குடும்பத்தை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கவே வானதியிடம் தான் ஆளவந்தானின் மனைவி என்றும் பானுரேகா மகள் என்றும் கூறி ஆளவந்தானை விட்டு விடும்படி கெஞ்சினாள். 
வானதியோ தான் காதலிப்பது இருபத்தி எட்டு வயதான ஆளவந்தானை என்று ஆளவந்தான் அவளுக்கு அனுப்பி வைத்த புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தாள். 
இல்லை இது என் கணவரின் பழைய புகைப்படம்” என்ற இந்த்ரலேகா இதுதான் தற்போதைய புகைப்படம்” என்று அவர்களது இன்றைய புகைப்படத்தை வானத்திற்கு அனுப்பி வைக்க அதை பார்த்து அதிர்ந்தாள் வானதி.

Advertisement