Advertisement

மறுநாள்… மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. விடுமுறை தினம். ஆனால் அன்றைய தினத்தில் அவர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குகூட பாலன் விடுமுறை அளித்திருந்தார்.

“நாளைக்கு வெளியூருல முக்கியமான கல்யாண வீடு இருக்கு. நான் கண்டிப்பா போகணும். அதனால நாளைக்கு கடைக்கும் லீவு உங்க எல்லாருக்கும் லீவு… அடுத்த வெள்ளிக்கிழமை ரேட் அடிச்சி சரக்கேத்திக்கலாம்…” என்று பாலன் சொல்லவும் சூப்பர்மார்கெட் பணியாட்களுக்கு குஷியோ குஷி.

“ஜனா அண்ணா… நாளைக்கு ஃபுல் டே லீவ்ல? என்ன ப்ளான் வச்சிருக்க? என்ன செய்யப்போற?”-ப்ரதீபா ஓடிவந்து ஜனாவிடம் கேட்டாள்.

“அம்மாவுக்கு ஏதாவது வேலை செஞ்சிக்கொடுக்கணும்… வீடு கட்டப்போறேன்ல? அதுக்கு டைல்ஸ் பார்க்கப்போணும்… நிறைய வேலை இருக்கு ப்ரதீபா.”

“இல்ல எக்ஸ்ஸிபிஷனுக்கு போலாமான்னு கேட்க நினைச்சேன்.”

“வேலையை எல்லாம் முடிச்சிட்டு நல்லா தூங்கி எழுந்திரிக்கணும்… நீங்க மட்டும் போயிட்டுவாங்க… நான் வரல…” என்று ஜனா மறுத்துவிட அதற்கு மேல் ப்ரதீபாவும் அவனை தொந்தரவு செய்யவில்லை.

அன்று இரவு 12 மணி.

ப்ரதீபா செல்வலட்சுமிக்கு கால் செய்தாள்.

“என்ன ப்ரதீபா தூங்கலையா?”

“நீ என்ன பண்ணிட்டு இருக்க?”

“போன் பாத்துட்டு இருக்கேன்.”

“அதேதான் நானும் பண்ணிட்டு இருக்கேன்… வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்த்தியா?”

“இல்லையே… என்ன மேட்டரு?”

“பாரேன்…”

“இரு பார்க்கறேன்…” என்று கூறிய செல்வலட்சுமி ப்ரதீபாவுடன் கைபேசியில் லைனில் இருந்தபடியே தனது வாட்ஸ் ஆப்பைத் திறந்து ஸ்டேடஸ்ஸைப் பார்த்தாள்.

“ஜனா ஸ்டேடஸ் வச்சிருக்கு…” என்றவள் ஜனாவின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்ஸிற்குள் நுழைந்தபோது அவளால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.

“என்னது இது ப்ரதீபா? ஜனா தியேட்டர்ல இருக்குற மாதிரி போட்டோ எடுத்து போட்டுருக்கு… அஜித் படத்துக்கு போச்சா? அது சினிமா எல்லாம் பார்க்குமா..”

“இன்னைக்கு எக்ஸ்பிஷனுக்குப் போலாம்னு கூப்பிட்டோம்ல..”

“ஆமா நம்மகிட்ட வரலன்னு சொல்லிடுச்சுல? ரொம்ப தான் பிகு பண்ணிகிச்சு… என்னமோ வீட்டுல அவ்ளோ வேலை இருக்கு… வீடு முழுக்க ஒட்டடை எடுக்கணும், தூசி தட்டணும்னு லிஸ்ட் போட்டுச்சு. இப்ப சினிமா தியேட்டர்ல உட்கார்ந்துகிட்டு போட்டோ போட்டுருக்கு….”

“செல்வா.. நிஷாவோட பேச்சு எப்படி ஜனாகிட்ட எடுபடுதுன்னு பார்த்தியா… நீயும் நானும் ‘சினிமாக்கு போ ஜனா அண்ணா’-ன்னு அட்வைஸ் பண்ணிருந்தா நம்மளை லூசுன்னு திட்டி இருப்பான்..”

“அதானே..”

“செல்வா… இதப் பத்தி நாளைக்கு கடையில ஒரு வார்த்தை கூட கேட்காத. ஜனா அண்ணாவா என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..”

“ம்… சரி மச்சி…”

“எனக்கு ஒரு டவுட்டு…” என்று ப்ரதீபா ஆரம்பித்தாள்.

“டவுட்டே வேணாம்… கேள்வியே கேட்காத…”

“ஜனாவுக்கு நிஷாவை பிடிச்சிருக்கோ? ஜனா மனசுல நிஷா இருக்கோ?”

“இது what is  your name?-கிற கேள்வியைவிட ரொம்ப ஈசியான கேள்விப்பா…”

“ஹா… ஹா…”

******

மறுநாள் காலையில் வழக்கம்போல ப்ரதீபாவை தனது பைக்கில் ஏற்றியபோது அவள் தான் சினிமாவுக்குச் சென்றதைப்பற்றி கேட்பாள் என்று நினைத்தான் ஜனா.

ஆனால் அவள் கேட்கவில்லை.

கடைக்குள் நுழைந்ததும் செல்வலட்சுமியும் ப்ரதீபாவும் கூட்டணியாகச் சேர்ந்துகொண்டு தனது தியேட்டர் பிரவேசத்தை கேலி செய்வார்கள் என நினைத்தான். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

மணி 10 ஆனது…

11 ஆனது.

இருவரும் அமைதியாக பில் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் வேண்டுமென்றே தான் கேட்காமல் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான் ஜனா.

‘எவ்வளவு சீரியஸா பில் போடுதுங்க… நேத்து அதுங்ககூட எக்ஸ்ஸிபிஷனுக்கு வரலன்னு கோவம்…’ என்று மனதுக்குள் நினைத்த ஜனா நிஷாவை பார்த்து வேண்டுமென்றே, “நிஷா என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்த?” என்று கேட்டான்.

“பார்த்தேன் ஜனா… சினிமாக்கு போயிருந்தீங்களோ? பரவாலயே” என்று கூறி சிரித்துக் கொண்டே பலசரக்கு ராக் பக்கமாகச் சென்றாள் நிஷா.

ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் ஜனாவை பார்த்து முறைக்க அவர்களை தற்செயலாகப் பார்ப்பதுபோல பார்த்த ஜனா,

“எங்க தெரு பசங்க எல்லாம் சேர்ந்து படத்துக்கு போனாங்க ப்ரதீபா… அதனால தான் உங்களை கூப்பிடல. அம்மா கூட போயிருந்தா உங்களையும் கூட்டிட்டுப் போயிருப்பேன்ல?” என்றான்.

“நீ ஒன்னும் கூட்டிட்டுப் போக வேணாம்… அடுத்த வாரம் அந்தப் படம் சன் நெக்ஸ்ட்ல வந்துரும் அதுல நாங்க பார்த்துக்கறோம்… ஆனா ஸ்டேடஸ் வச்சி உசுப்பேத்துன பாரேன்… அதை தான் நாங்க மன்னிக்கவே மாட்டோம்…”  என்று கூறி அவனிடம் பேசாமல் தர்ணாவில் ஈடுபட்டார்கள் ப்ரதீபாவும் செல்வாவும்.

ஆனால் தாங்கள் பேசாமல் இருப்பதைக்கூட கண்டுகொள்ளாமல் பலசரக்கு ராக்கு பக்கமாக நின்று கொண்டு நிஷாவுடன் பேசிக்கொண்டே இருந்த ஜனாவைப் பார்த்த ப்ரதீபாவிற்கும் செல்வாவிற்கும் உள்ளுக்குள் கிலோ கணக்கில் பொறாமை.

“இன்னைக்கி நிஷாவை கூப்பிட்டு தெளிவா பேசப் போறேன்… ரெண்டு பேருக்குள்ளும் என்ன இருக்குன்னு கேட்கணும். ரெண்டும் அடிக்கடி தனியா உட்கார்ந்து கதை பேசுதுங்க.” என்று ப்ரதீபா இத்தனை நாளும் தனது மனதுக்குள் வைத்திருந்ததை செல்வலட்சுமியிடம் சொன்னாள்.

“ஆமா ஆமா என்ன விஷயம்னு கேட்டுரலாம்… ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சே ஆகணும்.” என்று செல்வலட்சுமியும் ப்ரதீபாவின் பக்கம் நின்றாள்.

ஜனா இல்லாத நேரத்தில் நிஷாவிடமே தங்களது சந்தேகத்தை வெளிப்படையாகக் கேட்டனர் ப்ரதீபாவும் செல்வலட்சுமியும்.

“ரெண்டு பேரும் பலசரக்கு ராக் பக்கமா நின்னு என்ன பேசினீங்க?”

“எப்ப?” -நிஷா.

“ஜனா கருப்பட்டி மூடையில இருந்து கருப்பட்டியை எடுத்து வாயில போட்டுக்கேட்டே பேச்சே? என்ன பேசுச்சு?” – ப்ரதீபா.

“ஒண்ணுமே பேசலயே?”

“பத்து நிமிஷமா பலசரக்கு ராக்கைவிட்டு நகரல…”

“இல்லயே…” என்று மறுத்த நிஷா உண்மையில் தான் மறந்த விஷயத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஆமா ஆமா… பேசுனோம்… ஆனா கொஞ்ச நேரம் தான பேசுனோம்… என்ன பேசுனோம்னுகூட எனக்கு மறந்துடுச்சு.”

“நான் கேமராவுல பார்த்தேன் நிஷா… கேமராவுல போட்டுக்காட்டவா?” என்ற ப்ரதீபா கடையின் சிசிடிவி கேமராவை ரிவைன்ட் செய்து ஜனாவும் நிஷாவும் பேசிக்கொண்டிருந்த வீடியோவைக் நிஷாவிடம் காட்டினாள்.

 “ஓ… முந்திரிப்பருப்பு அடுக்கும்போது பேசினேன்… காலையில துவரம் பருப்பு வாங்குறதுக்கு அம்மாகிட்ட காசு கேட்டேனா, அம்மா ரேஷன் பருப்பே போதும்னு சொன்னாங்களா… அதைத்தான் ஜனாகிட்ட சொல்லிட்டு இருந்தேன். ரேஷன்ல இப்ப மசூர் பருப்பு தான போடுறாங்க? அது ரொம்ப வாய்வுன்னு அம்மாகிட்ட சொன்னா அம்மா கேட்க மாட்டிக்கறாங்க… அதைத்தான் ஜனாகிட்ட சொன்னேன்…”

“நீ மசூர் பருப்பு பற்றி பேசுன… சரி, ஆனா ஜனா என்ன பேசுச்சு?”

“ஜனா வீடு கட்டப் போகுதாமே? சிமென்ட் விலை ஏறிடுச்சுன்னு சொல்லிட்டு இருந்தது… வரவும் செலவும் சரியா இருக்குன்னு சொல்லிட்டு இருந்துச்சு.”

“ஓ அரிசி பருப்பு… வரவு செலவு பற்றியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டீங்க. அப்படின்னா உங்க ரெண்டு பேரையுமே இனி நாங்க அண்ணா அண்ணின்னு கூப்பிடனும் போல…” என்று ப்ரதீபா சொல்ல,

“நீங்க ரொம்ப ஓட்டுறீங்க…” என்று கோபத்தில் சொன்னாலும் நிஷாவிற்கு உள்ளுக்குள் பயங்கர பெருமிதம்.

“ஓட்டுறோமா? நடப்பைச் சொன்னோம் நிஷா…” என்று கூறிவிட்டுச் சென்றார்கள் ஜனாவின் உடன்பிறவா தங்கைகள் இருவரும்.

அவர்கள் சென்றபிறகு நிஷாவின் முகமெல்லாம் வெட்கப் புன்னகை. ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் கற்பனையாய் புனையும் கட்டுக்கதை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது கட்டுக்கதை தான் என்று தெரிந்தாலும் அவளுக்குப் பிடித்திருந்தது.

யாருக்கு கதைகள் பிடிக்காமல் போகும்? அதுவும் காதல் கதைகள்…

Advertisement