Advertisement

அத்தியாயம் 8

“ப்ரதீபா, வாட்ஸ் ஆப் ஆர்டர் பில்லுக்கு சரக்கெடுக்கறேன்… ஏதாவது டவுட் வந்தா கேட்கறேன்…” என்றபடியே கையில் இருந்த பில்லிற்கு சாமான்களை எடுத்துக்கொண்டிருந்தாள் நிஷா.

“சரி நிஷா.” – ப்ரதீபா.

அப்போது ஒரு உப்பு பாக்கெட்டை கையில் எடுத்தபோது, “ஆஹ்…” என்று பலமாகக் கத்திவிட்டாள் நிஷா.

“என்ன ஆச்சு?” என்று கேட்டு கம்ப்யூட்டரில் இருந்து எழுந்து வந்தாள் ப்ரதீபா.

“நேத்து நைட் பத்து மணிக்கு ஒரு ப்ளவுஸ் தைக்க ஆர்டர் வந்ததுப்பா.. அவசர ஆர்டர். கூலி மட்டும் 400 ரூபயாய் தர்றேன்னு சொன்னாங்க… இருக்குற கஷ்டத்துல ஆர்டரை வேணாம்னு சொல்ல முடியல… நேத்து நைட் அவசரம் அவசரமா தைச்சேனா… தைக்கும்போது நகத்துல ஊசி ஏறிடுச்சு… உப்பு பாக்கெட்டோட கவர் பிரிஞ்சிருக்கும்போல… அதான் விரல் நகத்துல உப்பு பட்டதும் வலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. வின்னு வின்னுன்னு தெரிக்கிது…” என்று கூறி விரலை லேசாக உதறினாள் நிஷா.

“கத்துனது யாரு? எதை கீழப்போட்டீங்க?” என்று கேட்டு அவர்களின் அருகே ஜனாவும் செல்வலட்சுமியும் வந்தனர். ப்ரதீபா விபரத்தை சொன்னாள்.

வலியில் சோர்ந்த நிஷாவின் முகத்தை ஜனா பார்த்தான்.

வேகமாக ப்ரிஜ்ஜைத் திறந்து ஒரு பன்னீர் பாக்கெட்டை எடுத்த ஜனா அதை நிஷாவின் விரல்களில் வைத்தான்.

வலி எடுத்த விரலில் குளிர்ச்சி ஏறியதும் சற்று இதமாக உணர்ந்தாள் நிஷா. ஆனால் முகத்தில் மட்டும் வியர்த்துக்கொட்டியது.

“ஏன் வேர்க்குது?” – ப்ரதீபா கேட்டாள்.

“இன்னிக்கி ஷஷ்டி விரதம்… காலையில இருந்து எதுவும் சாப்பிடல… தண்ணி ஆகாரம் மட்டும் தான் சாப்பிடுவேன்… அதான் படபடன்னு வருது… ப்ரதீபா என்னோட வாட்டர் பாட்டிலை எடேன்… தண்ணி குடிச்சா சரியாகிடும்.” என்ற நிஷா வியர்த்து வடியும் தனது முகத்தை துப்பாட்டாவில் துடைத்துக்கொண்டாள்.

 அவளது வியர்த்து வடிந்த முகத்தைப் பார்த்த ஜனா வேகமாக எதிரே இருந்த சர்பத் கடைக்குச் சென்றான். ஒரு லெமன் சர்பத் வாங்கி வந்து நிஷாவின் கையில் கொடுத்து, “இதைக் குடி… நைட் பத்து மணி வரை வேலை பார்க்கணும்ல? தெம்பா இருக்கும்.” என்றான்.

ப்ரதீபாவினால் நடப்பதை நம்பவே முடியவில்லை.

செல்வலட்சுமியும் ப்ரதீபாவும் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு அர்த்தத்தில் பார்த்துக்கொண்டனர்…

அவர்களது பார்வையை கவனிக்காத ஜனாவும் நிஷாவும் ஆளுக்கொரு திசையில் தங்களது வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டனர். ஜனா டெலிவரிக்குச் சென்றுவிட்டான். நிஷா டெலிவரிக்குப் பேக்கிங் செய்யும் இடத்தில் நின்றுவிட்டாள்.

அந்த ஏரியாவில் அன்று மின்தடை நாள். கடையில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென்று ஜெனரேட்டர் அணைந்துவிட மற்றாரு யூ.பி.எஸ் பேட்டரியை ஆன் செய்வதற்காக ஒரு பெரிய கோக்காலியின் மேல் ஏறி நின்றார் பாலன்.

ஏற்கனவே அரதப் பழசாகிப் போன அந்த கோக்காலியின் கால் பாலன் ஏறியதும் உடைந்து நொறுங்கியது. கோக்காலியே ஒரு பக்கமாகச் சாய்ந்துவிட பேட்டரியை ஆன் செய்ய முடியவில்லை.

“இந்த பேட்டரியை இவ்வளவு உயரத்துலயா வைப்பாங்க? அவசரத்துக்கு எதுவும் உதவ மாட்டிங்கிது.” என்று எரிச்சலடைந்தார் பாலன்.

“இனிமே இதுல ஏற முடியாது பாலன். இறங்குங்க. கீழ விழுந்திடுவீங்க…” என்று பாக்கெட் போடும் பானு அக்கா அதட்ட பாலன் வேறு வழி இல்லாமல் கோக்காலியில் இருந்து இறங்கினார்.

“இந்நேரம் ஜனா இருந்திருந்தா சடச்சடன்னு மேல ஏறி இருப்பான். டெலிவரிக்கு போயிருக்கானே, வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே…” என்றவர் ப்ரதீபாவிடம், “பில் போடுற கம்ப்யூட்டரை எல்லாம் ஷ்ட்டவுன் பண்ணிடுங்க… யூ.பி.எஸ் தாங்காது.” என்று சொல்ல அவளும் கம்ப்யூட்டர்களை அணைத்தாள்.

“சரி ஜனா வரும் வரை வெயிட் பண்ண முடியாது… வீட்ல ஒரு ஏணி வச்சிருக்கேன். அதைப் போய் எடுத்துட்டு வந்திடுறேன்.” என்று கூறி பாலன் கடையைவிட்டு நகரப்போக,

“நீங்க எங்க போறீங்க? காஸிம் இருக்கான்ல? அவனை வீட்டுக்கு அனுப்புங்க… அவன் தூக்கிட்டு வந்துருவான்.” என்றார் பானு அக்கா.

“அவனை எப்படி தனியா அனுப்புறது? ஏணி ரொம்ப கனக்கும்க்கா… அவனுக்கு ஒழுங்காவே வண்டி ஓட்டத்தெரியாது. சர்க்கஸ் பண்ற மாதிரி ஸ்பீட்டா தான் வண்டி ஓட்டுவான்…”

“அண்ணே… கம்ப்யூட்டரும் வொர்க் ஆகல… எல்லாமே கைச்சிட்டை தான் போடணும். எங்களுக்கு எல்லா சாமானின் ரேட்டும் தெரியாது. ஜனாவுக்கும் உங்களுக்கும் தான் ஐயிட்டத்தோட விலை தெரியும்… எங்களை தனியா விட்டுட்டுப்போறேன்னு சொல்றீங்க? ஏணி கனமா இருக்கும்னு தான யோசிக்கிறீங்க? காஸிம்மை தனியா அனுப்ப வேணாம்… காஸிம்மையும் அவன்கூட இன்னொரு பிள்ளையையும் அனுப்புங்க… ரெண்டு பேரா சேர்ந்து தூக்கிட்டு வரட்டும்…”

“பொம்பலப்பசங்களை பையன்கூடவா அனுப்ப?”

“அவன் சின்ன பையன் தான? இங்க வேலை பார்க்குற பொண்ணுங்களுக்கெல்லாம் இளையவன் தான? ஒண்ணும் தப்பில்ல. போயிட்டு வரட்டும் தம்பி.”

“நீங்க சொல்றதும் சரிதான். துணைக்கு ஆள் அனுப்புனா ஒழுங்கா மெல்லமா வண்டி ஓட்டுவான். நிஷாவை காஸிமோடு அனுப்பலாம்.” என்ற பாலன் காஸிம்மையும் நிஷாவையும் ஏணியை எடுத்துக்கொண்டு வருவதற்காக தனது வீட்டிற்கு அனுப்பினார்.

இருவரும் பாலனின் வீட்டிற்குச் சென்று ஏணியை எடுத்துக்கொண்டு டூவீலரில் அமர்ந்தபோது அந்த ஏணி மிகவும் கனமாக இருந்தது. அந்த ஏணியை தன்னால் தூக்கிட முடியும் என்று நிஷாவிற்கும் நம்பிக்கை இல்லை.

“ஏய் காஸிம், ஏணி ரொம்ப வெயிட்டா இருக்குடா. என்னால் அவ்வளவு தூரத்துக்கு இதை பிடிச்சுட்டு வர முடியுமான்னு தெரியல. ஒரு பக்கமா இழுக்குது.. வண்டியோட சேர்த்து ஏணியை கட்டலாமா?”

“நான் கயிறு எடுத்துட்டு வரல நிஷாக்கா… இன்னொரு ஐடியா இருக்கு. ஏணியை அப்படியே தலைக்கு மேல தூக்கிப்பிடிச்சிட்டு போயிடலாமா? ஏணி உன் தலைக்கு மேல இருக்கும்… ரெண்டு கையால பிடிச்சிக்கிட்டா உன்னால ஈஸியா பேலன்ஸ் பண்ண முடியும்.”

“என்னமோ சொல்ற, சரி… என் தலைக்கு மேல ஏணியை வை..” என்று நிஷா சொன்னதும் ஏணியை அவளின் தலைக்கு மேல் தூக்கிய காஸிமிற்கு இன்னொரு யோசனை வந்தது.

“ஏய் நிஷா அக்கா இந்த ஏணியைப்பிடி… இன்னொரு ஐடியா வச்சிருக்கேன்…” என்று ஏணியை அவளது கையில் கொடுத்துவிட்டு டூவீலரில் ஏறி அமர்ந்தான்.

“ஏணியை தலைக்கு மேல பிடிச்சிக்கிட்டே என் பின்னாடி உட்காரு…” என்றான்.

அவன் சொன்னது போலவே செய்து, “என்ன பண்ணப்போற?” என்று கேட்டாள் நிஷா.

“இப்ப நான் சொல்ற ஐடியா நல்லா வொர்க்கவுட் ஆகும்… இந்த ஏணியோட ஓட்டைக்குள்ள நாம ரெண்டு பேரும் நம்ம தலையை உள்ள விட்டுக்கிட்டா இன்னும் ஈசியா இருக்கும்..” என்று கூறிய காஸிம் டூவீலரை நன்றாக பேலன்ஸ் செய்து அமர்ந்துகொண்டு அந்த ஏணியின் படிக்கட்டுகளின் ஊடே இருக்கும் இடைவெளியில் தன் தலையை நுழைத்தான்.

“நீயும் கேப்புக்குள்ள தலையை விடு நிஷாக்கா…” என்று காஸிம் சொல்ல அவளும் அதேபோல இடைவெளிக்குள் தனது தலையை விட்டுக் கொண்டாள்..

“ஆமா… இப்போ ஏணி நல்லா பேலன்ஸ் ஆகுது டா காஸிம்…. ரெண்மு பேரோட தோளிலிலும் பேலன்ஸ் ஆகுதுல? அதான் இப்ப ஈசியா இருக்கு.” என்று நிஷாவிற்கும் காஸிமின் யோசனை உருப்படியாகத் தோன்றியது.

“கரெக்ட்… அப்படியே அந்த ஏணியை உன்னோட தோள்ல வைச்சிக்கோ… நானும் ஏணியை என்னோட தோள்ல வச்சிக்கறேன்… இப்ப ஏணியோட வெயிட்டை ரெண்டு பேரும் சமமா பேலன்ஸ் பண்ணிக்கலாம்.” என்றபடி ஏணியை தனது தோளில் லாவகமாக வைத்துக்கொண்ட காஸிம், “போலாமா?” என்று கேட்டான்.

“ம்… நானும் ரெடி.”- நிஷா சொன்னாள்.

இருவரும் கடை நோக்கி டூவிலரில் கிளம்பினார்கள்.

மிகவும் நெரிசலான சாலையில் காஸிமின் டூவீலர் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது.

ஒரு டிராபிக் சிக்னலில் டூவீலர் நின்றபோது அனைவரும் அவர்களையே வேடிக்கை பார்த்தனர். ஏணிக்குள் தலையை விட்டுக் கொண்டு இருவரும் சர்க்கஸ் செய்வதை அந்த ட்ராபிக் சிக்னலில் காத்திருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

அந்த இடத்தில் அதிகப்படியான வாகனங்கள் வந்ததால் டிராபிக் ஜாம் ஆனது. அவர்களது டூவீலர் இன்ச் இன்ச்சாகத்தான் அந்த சாலையில் நகர்ந்தது.

கூட்ட நெரிசலில் முன்னே இருந்த வண்டியை இடிக்காமல் செல்வதற்காக அப்போது சட்டென்று காஸிம் பிரேக் பிடிக்க ஏணி சற்று முன்னால் நகர்ந்தது. அப்போது இருவரின் பின்கழுத்திலும் பலமாக அடி விழுந்தது.

“ஆ” என்று நிஷாவும் காஸிமும் கத்தினார்கள்.

“எப்பா பிரேக் போடாம வண்டி ஓட்டு… ஏணி கழுத்துல இடிக்குதுல? இன்னும் அழுத்தி பிரேக் போட்டினா கழுத்து உடைஞ்சிடும்.” என்று அருகே இருந்த வண்டியில் இருந்தவர் காஸிம்மை அதட்டினார்.

“சரிண்ணே… சரிண்ணே” என்று கூறிக்கொண்டு காஸிம் மெல்ல மெல்ல வண்டியை நகர்த்திக்கொண்டு கடைக்குப் போய் சேர்ந்தான். கடையின் வாசலிற்கு அவர்கள் சென்றடைந்தபோது பின்னால் இருந்து பலமாக ஹார்ன் அடித்தபடி ஜனா வந்து சேர்ந்தான்.

Advertisement