Advertisement

அடுத்த டிராலியை நிஷா எடுத்துக்கொண்டு வந்தாள்.

“இப்ப நான் வாசிக்கிறேன். நீ சாமான் எடு.” என்று கூறி நிஷாவின் கையில் இருந்த பில்லை வாங்கிக்கொண்டான் ஜனா.

“அச்சோ… எனக்கு பலசரக்கோட பேருகூடத் தெரியாதே?”

“பழகிக்கோ. வா நான் சொல்லித் தர்றேன். தினம் இது மாதிரி ஒரு பத்து லிஸ்ட்க்கு சரக்கு எடுத்தீனா கடையே உனக்கு அத்துப்படி ஆகிடும்.”

“சரி ஜனா சார்.” என்று கூறி மற்றொரு டிராலியை எடுத்துக்கொண்டு வந்தாள் நிஷா.

“சொல்லுங்க சார்…”

“வெள்ளைப் பட்டாணி 250கிராம்.”

“எடுத்துட்டேன்…”

“சீட்லெஸ் டேட்ஸ்”

“ஆ??”

“விதை இல்லாத பேரிச்சம்பழம் கேட்டுருக்காங்க.”

“ஓ… சரி சரி.”

“நம்மகிட்ட ரெண்டு வகை இருக்கு. சீட் உள்ளதும் இருக்கு. சீட் இல்லாததும் இருக்கு. இதுல நிறைய அயிட்டம் இருக்கு… 200கிராமும் இருக்கும் 400 கிராமும் இருக்கும். லயன் டேட்ஸ்-ல இப்ப புதுசா ஒரு ஆப்பர் போட்டுருக்காங்க… ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ… 1 ப்ளஸ் 1 ஆப்பர் இருந்தா கவனமா எடுத்து வைக்கணும். ப்ரீ கொடுக்கலன்னா கஸ்டமர் கோபப்படுவாங்க…”

“சரி சார்.”

“ரேட், அளவு, variety பெயர் எல்லாம் கவனமா பார்க்கணும்.”

“சரி சார்…”

அப்போது தனது கண்காணிப்பில் இருக்கும் ராக்கிற்குச் செல்வதற்காக அவர்களைத் தாண்டிச் சென்ற யாஸ் அக்கா, “ஜனா சாரா? அண்ணான்னு கூப்பிடு.” என்று கூறி நிஷாவின் தோளில் இடித்தார்.

அதைக் கண்டு எதிர் ராக்கில் நின்றுகொண்டிருந்த மாரிச்செல்வி அக்கா, “அந்தப் புள்ளையோட பெரிப்பா பையன் இப்ப கொஞ்ச நாள் முன்னே ஆக்சிடென்ட்ல இறந்துட்டானாம். அதுல இருந்து யாரையும் அண்ணான்னு கூப்பிடாதாம்.” என்றார்.

“ஓ… அப்படின்னா சும்மா ஜனான்னு கூப்பிடுமா… ஜனா ஒண்ணும் நினைக்காது… சார்-ன்னு கூப்பிடறது வித்தியாசமா இருக்கு…” என்றார் யாஸ் அக்கா.

நிஷா பதில் பேசாமல் தயங்கி நின்றாள்.

ஜனாவின் கவனம் அவனது கையில் இருந்த பில்லில் இருந்தபோதும் அவளது தயக்கத்தை உணர்ந்து,

“சரி சரி, சும்மா ஜனான்னே கூப்பிடு. சார்-ன்னு கூப்பிட வேணாம். நான் ஒண்ணும் நினைக்க மாட்டேன்.” என்றான் ஜனா.

தற்செயலாக அவ்விடத்திற்கு வந்த ப்ரதீபா அவர்கள் பேசுவதை கவனித்துவிட்டு, “ஆமா ஆமா… எருமைன்னு கூப்பிட்டாக்கூட ஜனா அண்ணா கோச்சிக்காது.” என்று கேலி பேசிவிட்டு அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டாள்.

“நீ என் கையில வசமா மாட்டப்போற பாரு…” என்று இப்போதும் பில்லில் இருந்து பார்வையை எடுக்காமல் ப்ரதீபாவை எச்சரித்தான் ஜனா.

அன்று மதிய வேளையில் ப்ரதீபா, செல்வலட்சுமி, ப்ரியா… இவர்கள் மூவரும் ஜனாவை ‘சார்… ‘சார்’ என்று அழைத்து வம்பிழுத்தனர். அவர்களின் கேலி கிண்டல் தாங்க முடியாமல் ஜனாவே நிஷாவிடம் ஸ்டிரிக்ட்டாக,

“என்னை சார்னு கூப்பிடாத. ஜனான்னு கூப்பிடு போதும்.” என்று கூறிவிட்டான்.

சரியாக இரண்டு வாரங்கள் கடந்தன.

ஏற்கனவே பரிசம் போடப்பட்டிருந்த ப்ரியாவிற்கு திருமண நாள் நெருங்கியது.

அன்று அக்கடையில் ப்ரியாவின் கடைசி நாள்.

“யாஸ் அக்கா… நாளையில இருந்து கடைக்கு வரமாட்டேன். நான் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்…” – ப்ரியா அழுகைக் குரலில் சொன்னாள்.

“கல்யாணச் சாப்பாடு போடப்போற… எதுக்கு அழற?” என்று கேட்டு ப்ரியாவின் தலையை வாஞ்சையாக தடவிக்கொடுத்தார் யாஸ் அக்கா.

“மாரிச்செல்வி அக்கா… போயிட்டு வர்றேன்.”

“கல்யாணம் பண்ணி குழந்தையும் குட்டியுமா நல்லா இரு டா…” என்று மாரிச்செல்வி அக்கா மனதார வாழ்த்த அவரின் அருகே நின்றுகொண்டிருந்த அருணிடம் சென்று, “அருண் அண்ணா பை.” என்றாள் ப்ரியா.

“பை ப்ரியா. கல்யாணம் பண்ணி ஹாப்பியா இரு.” என்று அருண் சிரித்துக்கொண்டே சொல்ல கண்ணீருடன் ஜனாவின் பக்கமாக நகர்ந்தாள் ப்ரியா.

ஜனாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு கண்களில் தேங்கியிருந்த கண்ணீருடன் அசையாமல் நின்றவளிடம்,

“அழுத… செவுல்லயே ரெண்டு விடுவேன் ப்ரியா… கல்யாணம் பண்ணி சந்தோஷ்மா இருக்கப்போற… எதுக்கு அழணும்?” என்று ஜனா அதட்டியதைக்கூட பொருட்படுத்தாமல் ‘ஓ’ வென அழுதுவிட்டாள் ப்ரியா.

“சரி சரி அழாத… மாசத்துல ஒரு தடவையாவது புருஷ்ன்கூட கடைக்கு வந்து எங்களை எல்லாம் ஒரு எட்டு எட்டிப்பாரு…” என்று கூறி ப்ரியாவை கனத்த மனதுடன் அனுப்பி வைத்தான் ஜனா.

அன்று காலையில் இருந்தே அழுது கொண்டே இருந்த செல்வலட்சுமியும் ப்ரதீபாவும் அன்று இரவு வீடு திரும்பும்போது ப்ரியாவின் வீட்டிற்குச் சென்று அவளை வழியனுப்பிவிட்டுத் தான் தங்களது வீட்டிற்குச் சென்றார்கள்.

*****

செல்வலட்சுமி, ஜனா, அருண், ப்ரியா, ப்ரதீபா, நிஷா என அனைவரும் ஒரே இனத்தவர்கள் என்பதால் அந்த கல்யாண வீட்டில் இருந்த அத்தனை பேரும் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக இருந்தனர்.

ஜனா ஒருவரைப் பார்த்து “மாமா” என்று அழைக்க ப்ரியா அவரைப் பார்த்து “சித்தப்பா” என்று அழைத்தாள். அருண் ஒருவரை பார்த்து தாத்தா என்று அழைக்க ஜனா அவரைப் பார்த்து பெரியப்பா என்று அழைத்தான்.

ப்ரதீபா மற்றும் நிஷாவிற்கு சித்தியாக இருந்த பெண்மணி ஜனாவிற்கு அத்தையாக இருந்தார்.

இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக ஒரே உறவு பட்டாளமாக அக்கல்யாண வீடு இருந்தது.

விருந்தினர்களை பன்னீர் தெளித்து வரவேற்ற செல்வலட்சுமி அழகு சிகப்பு நிறத்தில் தாவணி அணிந்திருந்தாள்.

பந்தியில் விருந்தினர்களுக்கு ஜனா உரிமையாக பரிமாறினான்.

மணமக்களை வாழ்த்த மேடையேறினார் குமார் அண்ணன்.

“என்னமா ப்ரியா… திருநெல்வேலிக்கு தனிக்குடித்தனம் போற போலயே?” – குமார் அண்ணன்.

“ஆமாண்ணே.” வெட்கத்தோடு சொன்னாள் ப்ரியா.

“பொரியல் கிரியில் வச்சிக்கிட்டு உடம்பை அலுப்படுத்தாத… தினம் தினம் கால் கிலோ அல்வா வாங்கி வச்சிடு… கூட்டு வைக்கிற வேலை மிச்சம்….”

“உங்க வீட்டுல தினம் அல்வா பொரியல்னு எனக்கும் தெரியும்… ஆன்ட்டிகிட்ட போன் போட்டு கால் கிலோ போதுமா இல்ல இன்னும் வேணுமான்னு கேட்டுக்கறேன்…”

“அது சரி… நீ பொழச்சிக்குவ…” என்ற குமார் அண்ணன் மாப்பிள்ளையிடம் திரும்பி,

“நல்ல வேலைக்காரப் பொண்ணுப்பா… கண்கலங்காமல் பார்த்துக்கோ.” என்று கூறினார்.

மாப்பிள்ளை, “சரி சார்.” என்று பணிவாகக் கூறிட குமார் அண்ணன் ப்ரியாவிடம்,

“நான் மாப்பிள்ளையை பற்றி நல்லா விசாரிச்சிட்டேன்… இன்னிக்கி வரை மாப்பிள்ளை சார் அழுதது இல்லயாம்… இனிமேலும் அழாமல் பார்த்துக்க வேண்டியது உன் பொருப்பு… சரியா?” என்று கூறி மீண்டும் ப்ரியாவை வம்பிழுக்க அந்த இடத்தில் ஒரே சிரிப்பு மழை தான்.

செல்ஃப்பிக்கள், சிரிப்புகள், கேலிகள், என எல்லாம் கலந்து ப்ரியாவின் திருமணம் இனிதே முடிந்தது.

மணமக்களின் வீட்டார்கள் மண்டபத்தை காலி செய்யும் நேரத்தில் தான் ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் தங்களது வீட்டிற்கு கிளம்பினார்கள். அவர்கள் இருவரும் சைக்கிளில் செல்ல ஜனா அவர்களுக்குத் துணையாக தனது பைக்கில் வந்துகொண்டிருந்தான்.

“ஏய் ப்ரதீபா… நம்ம செட்ல அடுத்து யாருக்கு கல்யாணம் நடக்கும்னு நீ நினைக்கிற?” – செல்வலட்சுமி.

“ஏன் உனக்கு ஆசையா இருக்கா?” ப்ரதீபா.

“ச்ச ச்ச… நான் சீரியஸா கேட்குறேன். ஜனாவுக்கா அருணுக்கா?”

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” என்று ஜனா கேட்டதைக்கூட கண்டுகொள்ளாமல் இருவரும் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.

“அருண் அண்ணாவுக்கு தான். அது தான ஜனா அண்ணாவைவிட மூத்தவன்?”

“ஆமால? ஆனா ஜனா கல்யாணத்தப்ப ஜாலியா இருக்கும்ல? நாம கேலி கிண்டல் பண்ணா அருண் கண்டுக்கவே கண்டுக்காது. ஆனா ஜனா அண்ணா பதிலுக்கு பதில் பேசி நம்மகூட சரிமல்லுக்கு நிற்கும். அதனால நான் ஜனா அண்ணா கல்யாணத்துக்குத் தான் வெயிட்டிங்.” – செல்வலட்சுமி.

“ஆமாப்பா… ப்ரியா கல்யாணம் முடிவான நாளில் இருந்து பிரிஞ்சிடுவோம்னு ரொம்ப கவலையா இருந்தது… ஆனா ஜனா கல்யாணத்தப்ப நாம யாரும் பிரிஞ்சி போக மாட்டோம். அதனால ரொம்ப ஹாப்பியா இருக்கும். யாரும் அழ மாட்டோம்… நல்லா ஜாலியா இருக்கலாம்.”

“ஆமா ப்ரதீபா… ஜனா கல்யாணத்துக்கு செம்ம ஆட்டம் போடணும்.” என்று செல்வலட்சுமி பேசியபோது கூட எந்த எதிர்ப்பும் சொல்லாத ஜனா காலப்போக்கில் கல்யாணம் என்பதையே வெறுக்கும்படி தான் சம்பவங்கள் நடந்தன.

அடுத்த சில மாதங்களிலேயே கல்யாணம் என்றாலே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் நிலைக்கு வந்துவிட்டான் ஜனா.

கடந்த ஒரு வருட காலத்தில் நடந்த சம்பவங்களின் நினைவுகளால் தூக்கத்தை முற்றிலும் தொலைத்துவிட்ட ஜனா தனது ப்ளாஸ்டிக் பாயில் இருந்து மெல்ல எழுந்தான்.

“ஜனா… இன்னும் தூங்கலயாப்பா?” என்று தனது அன்னையின் குரல் கேட்டப்பிறகு தான் நிஷாவைப் பற்றி நினைப்பதை நிறுத்தி நிகழ்காலத்திற்குள் முற்றிலும் பிரவேசித்தான் ஜனா. மணி ஒன்றைத் தாண்டிவிட்டதை உணர்ந்தான் ஜனா.

கடந்த கால நினைவுகளை… அதாவது நிஷாவுடன் சேர்ந்து முதல் முதலாக ‘பாய்ஸ் ஸ்கூல்’ சரக்குகளை எடுத்தது… ப்ரியாவின் திருமணம்… என பழைய நினைவுகளை அவனது மனம் தீவிரமாக அசைபோட்டதை நினைத்து, “இல்லம்மா… தூக்கம் வரல… ஒரு பழைய ப்ரண்டைப் பார்த்தேன்… அவனைப் பற்றியே நினைச்சிட்டு இருந்தேனா… தூக்கம் வரல…” தனது ப்ளாஸ்டிக் பாயில் புரண்டு படுத்தபடியே சொன்னான் ஜனா.

“பழசை யாராலப்பா மறக்க முடியும்… எதையும் நினைச்சி ரொம்ப யோசனை பண்ணாத… தூங்குப்பா ஜனா…” என்றார் ஜனாவின் அன்னை. “சரிம்மா இதோ தூங்கப்போறேன்…” என்ற ஜனா,

வரமாட்டேன் என்ற தூக்கத்தை மிகவும் க’டப்பட்டுத் தான் அன்று இரவு வரவழைத்துக்கொண்டான்.

Advertisement