Advertisement

அத்தியாயம் 6

ஒரு வருடத்திற்கு முன்பாக…

மதியம் 2 மணி.

வாடிக்கையாளர்களே இல்லாமல் கடைவெறிச்சோடிக் கிடந்தது.

சூப்பர்மார்கெட்டின் லான்ட்லைன் போன் அடித்தது.

ப்ரதீபாவும் செல்வலட்சமியும் பில் போடும்போது அடுத்தடுத்த கணினியில் தான் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து தான் கல்லாப்பெட்டி இருக்கும். அதாவது அவர்களுக்கு அடுத்ததாகத் தான் கேஷ் கவுன்டர் (cash counter) இருக்கும். பாலன் கேஷ் கவுன்டரில் தான் அமர்ந்திருப்பார். மூவருக்கும் எட்டும் இடத்தில் தான் லான்ட்லைன் போன் இருக்கும்.

“ப்ரதீபா, செல்வா… வாட்ஸ் ஆப் சரக்குக்கு தான ரெண்டு பேரும் பில் போடுறீங்க? யாராவது ஒருத்தர் போனை எடுங்க…”- ஜனா சொன்னான்.

“விடு ஜனா… எல்லாரும் வேலையா இருக்காங்க. அடிக்கட்டும்.” என்று வரவு செலவு கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்த பாலன் கூறிட பத்து வினாடிகள் கத்திக்கதறி ஓய்ந்தது அந்த லான்ட்லைன் போன்.

அடுத்த நான்கே நிமிடத்தில் மீண்டும் அடித்தது.

“அந்த போனை எடு ப்ரதீபா… எவ்வளவு நேரமா அடிச்சிக்கிட்டே இருக்கு? பாலன் அண்ணா வேலையா இருக்காருல?” – டோர் டெலிவரிக்கு பேக் செய்துகொண்டே கேட்டான் ஜனா.

“செல்வா நீ எடேன்…” ஒரு முக்கியமான கல்யாணச் சிட்டைக்கு பில் போட்டுக்கொண்டே சொன்னாள் ப்ரதீபா.

“ப்ரியா போனை எடுத்துப்பேச மாட்டாளா? நானும் பில் போட்டுட்டுத் தான இருக்கேன்? பத்து கையா இருக்கு?” – செல்வலட்சுமி.

“லான்ட்லைன் போனுக்கு நீங்க ரெண்டு பேரும் தான பொறுப்பு? ப்ரியா பொறுப்பில்லையே? இன்னும் பத்து நாள்ல அவ கல்யாணம் ஆகிப்போயிடுவா அப்ப யாரை வேலை ஏவுவ? உங்க வேலையை நீங்க தான பொறுப்பா பார்க்கணும்?”- ஜனா.

செல்வலட்சுமி ஜனாவின் பக்கமே திரும்பிப் பார்க்காமல் தன் வேலையில் மூழ்கிவிட,

“நான் இப்ப வேலையா இருக்கேண்ணே.. ப்ரியாவை எடுக்கச் சொல்லு…” என்று உறுதியாக மறுத்துவிட்டாள் ப்ரதீபா.

“அவ ரேட் ஒட்டுறால? திரும்பத் திரும்ப ப்ரியாவையே ஏன் வேலை வாங்கணும்னு நினைக்கிற?” என்ற ஜனாவிற்கு ப்ரதீபாவின் பிடிவாதம் கண்டு கடுப்பானது.

பொதுவாக ப்ரதீபா என்றால் ஜனாவிற்கு கொள்ளை இஷ்டம். ப்ரதீபா அவனது உடன்பிறவா தங்கையைப் போன்றவள். அவனுக்கு மிகவும் ப்ரியமான தங்கையும் கூட. அறத்தை என்றுமே மீறாத ஜனா எப்போதும் போல அப்போதும் ப்ரதீபாவிடம் பாரபட்சம் பார்க்காமல் தான் பேசினான்.

“அருண் அண்ணா இங்க தான இருந்தான்? அவன் எடுக்கலாம்ல?” என்று ப்ரதீபா வாக்குவாதம் செய்தபோது,

“அவன் டெலிவரிக்குப்போய் பத்து நிமிஷ்ம் ஆச்சு.” என்று பொறுமையாகத் தான் ஜனா சொன்னான்.

“அப்ப நீ எடுத்துப் பேசு..”

அதற்கு மேல் ப்ரதீபாவிடம் பொறுமை செல்லுபடியாகாது என்று புரிந்துகொண்டு,

“லான்ட்லைன் கனெக்ஷ்னை கட் பண்ணி விட்டுறவா?” என்று ஜனா சீரியஸாக மிரட்ட ஆரம்பிக்க ப்ரதீபா கப்சிப் என அடங்கிவிட்டாள்.

“பில் போட விட மாட்டியே?” என்று திட்டிக்கொண்டே போனை எடுத்துப் பேசினாள் ப்ரதீபா.

“அப்படியாண்ணே? மாத்திக் கொடுத்திடுறோம்ணே… பில்-ல இருந்து கழிச்சிடலாம்ணே.” – ப்ரதீபா கைபேசியில்.

மறுமுனையில் இருந்து ஏதோ பதில் வந்தது.

ப்ரதீபா போனை வைத்துவிட்டு, “டெலிவரிக்குப் போன சரக்கு தப்பா போயிடுச்சாம். மாத்தணும்னு கேட்டாங்க.” என்று ஜனாவிடம் சொல்லிவிட்டு மீண்டும் கல்யாணச் சிட்டைக்குப் பில் போட்டாள்.

“பார்த்தியா… முக்கியமான போன்… இதை எடுக்காமல் பிகு பண்ணிட்டு இருக்க… நான் டெலிவரிக்கு பேக் செய்யிறதா போனை எடுத்துப்பேசுறதா? இதுல விளையாடாத ப்ரதீபா…” என்று ப்ரதீபாவிற்கு அட்வைஸ் செய்த ஜனாவைப் பார்த்து உருத்துவிழித்து பொய்க்கோபத்தில் முறைத்தாள் ப்ரதீபா.

சிரித்துக்கொண்டே, “பாலண்ணே இந்த ஐநூறு ரூபாயை வச்சுக்கிட்டு எனக்கு அஞ்சு நூறு ரூபா தாங்க” என்று பாலனிடம் கேட்டான் ஜனா.

“இந்தப் பழக்கத்தை நீ இன்னும் விடலையா..” என்று கேட்டுக்கொண்டே 500 ரூபாயை வாங்கிக்கொண்டு ஜனாவின் கையில் ஐந்து நூறு ரூபாய் தாள்களைக் கொடுத்தார் பாலன்.

“பாக்கெட்ல எப்பயுமே கத்தையா ரூபாய் இருக்கணும்ணே… ஒத்தையா 500 ரூபா தாளா இருந்தா பணம் கம்மியா இருக்கிற மாதிரி ஃபீல் வந்துடும்.”

“அதெல்லாம் இல்ல… எவ்வளவு ரூபா இருந்தாலும் பத்தாது டா ஜனா… என் கல்லாப்பெட்டியில் பாரு… எத்தனை 100 ரூபாய் தாள் இருக்குனு… பணத்த நான் சும்மா எண்ணிப் பார்க்கலாம்… அது எதுவுமே என் காசு கிடையாது. எண்ணெய் டீலருக்கு பணம் கொடுக்கணும், அரிசிக்காரனுக்கு பணம் கொடுக்கணும், ஆவின் நெய்காரனுக்கு செக் கொடுக்கணும்… இது போக கடைக்கு கரண்ட் பில் கட்டணும், வாடகை கொடுக்கணும், சம்பளத்துக்கு எடுக்கணும். தீபாவளி வருது… உங்க எல்லாருக்கும் போனஸ் போடணும். இப்படியே கணக்குப் பார்த்தா என்கிட்ட இருக்கிற 100 ரூபாய் தாளுக்கு எல்லாம் பத்து ரூபாய் தாளின் மதிப்பு கூட இருக்காது தெரியுமா? பணம் எண்ணுற மிஷ்ஷின் பாத்திருக்கியா? தினம் கட்டுக் கட்டா பணம் எண்ணும். ஆனா அதுக்குன்னு ஒத்தத் தாளை சொந்தமா வச்சுக்க முடியாது. சூப்பர்மார்கெட் வச்சிருக்கேன்னு பெருமையா சொல்லிக்கலாம். ஆனா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிறவன் நிலை இது தான்… பணத்தை எண்ண மட்டும் தான் முடியும். எண்ணுற பணம் எல்லாம் அவனுக்கு சொந்தம் இல்ல… என் தொழில்னு இல்ல… பொதுவா சொந்தமா தொழில் செய்யிறவன் நிலையே இது தான்… இதைப் புரிஞ்சிக்காமல் காசை கேஷ் கவுன்டரில் இருந்து எடுத்து செலவழிக்கிறவன் திவாலாகிடுறான். ஒரு வருஷ்த்துல வர்ற டர்ன்ஓவர் லாபத்தை மட்டும் தான் எடுத்து செலவு பண்ணணும்… அது தான் சுய தொழிலின் அடிப்படை தர்மம்… ஏதோ வர்ற சொற்ப லாபத்துல என் பிள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்சும் என் வீட்டு கரண்ட் பில்லும் கட்டிடுறேன்… அதனாலதான் பல்லைக் கடிச்சுட்டு ஓடிக்கிட்டு இருக்கேன். இல்லாட்டி ஒரு ரூபா லாபத்துக்கு சோப்பு விக்கிறதுக்கும் ரெண்டு ரூபா லாபத்துக்கு பிஸ்கட் பாக்கெட் வைக்கிறதுக்கும் காலையில 9 மணிக்கு கடையை திறந்து நைட்டு பத்து மணிக்கு கடையை மூடுவேனா?” என்று பாலன் தனது தொழிலைப் பற்றி புலம்பியபோது அவருக்கு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தது.

“டேய் பாய்ஸ் ஸ்கூல் ஆர்டர் வந்திருக்குடா… வாட்ஸ் ஆப்ல ஹாஸ்டல் சாமான் லிஸ்ட் அனுப்பிருக்காங்க. மணி 2 ஆகிடுச்சா? பேசிக்கிட்டே நேரம் போனதே தெரியல பாரு. அந்தப் புதுப் பொண்ணுகிட்ட லிஸ்ட்டை கொடு… அந்தப் பொண்ணுகூட சேர்ந்து சீக்கிரம் சரக்கை எடு..” பாலன் சொல்ல,

“சரி பாலண்ணே…” என்ற ஜனா வாட்ஸ் ஆப் லிஸ்ட்டை ப்ரியாவின் கையில் கொடுத்து பில் போடச் சொன்னான். ப்ரியா பில்லைக் கொடுத்ததும் அதை எடுத்துக்கொண்டு அவன் நிஷாவைத் தேட,

“பாலன் சார்… இந்த சோப்பு பெட்டியை எங்க வைக்கணும்?” என்று பாலனிடம் கேட்டுக்கொண்டு வந்து நின்றாள் நிஷா.

“அந்தப் பெட்டியை குட்டவுன்ல வச்சிடுமா… பாய்ஸ் ஸ்கூல் ஆர்டர் இருக்கு. அதை ஜனாகூட சேர்ந்து எடுத்துடு. பாய்ஸ் ஸ்கூல் ஆர்டர் தான் மொதோ பார்க்கணும்… சரியா?” என்று பாலன் நிஷாவிடம் கூறிட,

“சரி சார்…” என்றாள் நிஷா.

பாலன் கல்யாணச் சிட்டை ஒன்றை சரிபார்க்க சென்று விட தனது கையில் இருந்த பெட்டியை குட்டவுனில் வைத்துவிட்டு வந்த நிஷா ஜனாவின் எதிரே சென்று நின்றாள்.

“ஜனா சார்… பாய்ஸ் ஸ்கூல் ஹாஸ்டலுக்கு சரக்கெடுக்கணும்னு பாலன் சார் சொன்னாரு… உங்க கூட சேர்ந்து எடுக்கச் சொன்னாரு… நான் என்ன பண்ணணும் ஜனா சார்?” என்று மெல்லக் கேட்டாள்.

“உன் பேரு என்னன்னு சொன்னமா? மறந்துடுச்சு…” – ஜனா கேட்டான்.

“நூர்நிஷா… நிஷான்னு கூப்பிடுவாங்க.”

“நிஷா, ஒரு டிராலி எடுத்துட்டு வா…” என்று ஜனா நிஷாவுடன் வேலையைத் தொடங்கினான்.

நிஷா ஒரு இரும்பு டிராலியை இழுத்துக்கொண்டு ஜனாவின் எதிரே வந்து நின்றாள். அதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே,

“இந்த டிராலி இல்ல… இது மாவு மூடை, அரிசி மூடை தூக்குற டிராலி. அப்புறம் கனமான பொருளை இதுல வச்சி கடைக்குள்ள தூக்கிட்டு வந்து ராக்குகளில் அடுக்குவோம்… நான் சொன்னது ஸ்டீல் டிராலி… சின்னக் குழந்தைகளை வச்சி தள்ளிட்டுப் போறது மாதிரி இருக்கும்ல? அது…”

“அது எங்க இருக்கு?”

“வாசல்ல… நுழையிற இடத்துல ஓரத்துல அடுக்கிருக்கும். அங்க இல்லன்னா வெளியில பாக்கெட் போடுற இடத்துக்குப் பக்கத்துலயே இருக்கும். நிறைய டிராலியை வரிசையா அடுக்கி வச்சிருப்பாங்க.”

“ஓ… அதுவா?” என்று கூறி ஓடிச்சென்று ஒரு ஸ்டீல் டிராலியை இழுத்துக்கொண்டு வந்தாள் நூர்நிஷா.

டிராலியை அவளின் கையில் கொடுத்த ஜனா, “ம், லிஸ்ட்டை வாசி…” என்றான்.

ராக்குகளின் பக்கமாக டிராலியை தள்ளிக்கொண்டே பில்லில் இருக்கும் சரக்குகளின் பெயரை நிஷா வாசிக்க… ஜனா சாமான்களை எடுத்து டிராலியில் போட்டுக்கொண்டே இருந்தான்.

“துவரம்பருப்பு 2 கிலோ…”- நிஷா.

“ம்…” என்று துவரம்பருப்பை எடுத்து டிராலியில் போட்டான் ஜனா.

“மொச்சைப் பயிறு கால் கிலோ…”

“ம்..”

இப்படியே நான்கு நிமிடங்கள் கடந்தன.

“பட்டர்..” – நிஷா.

“என்னது?” – ஜனா.

“பட்டரு… பட்டரு…”

“அளவைச் சொல்லிச் சொல்லு… என்னை பட்டர்னு திட்டுற மாதிரி இருக்கு…”

“அச்சோ…”

“சும்மா ஜோக்கு… சீரியஸா சொல்லலை…” என்று கூறி சிரித்த ஜனா, “பட்டர் ஃப்ரிஜ்ல இருக்கும். அதை கடைசியா எடுத்துக்கலாம். டிராலி நிரம்பிடுச்சு பாரு… அடுத்த டிராலி எடுத்துட்டு வா.” என்றான்.

Advertisement