Advertisement

அத்தியாயம் 5

மதியத்திற்குப் பிறகு சூப்பர்மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து கஸ்டமர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ப்ரதீபா பில் போட, தரையில் அமர்ந்தபடி ஷாம்பு பாடில்களுக்கு ரேட் ஸ்டிக்கரை sticker gun கொண்டு ஒட்டிக் கொண்டிருந்தாள் செல்வலட்சுமி.

சரியாக மாலை 6 மணிக்கு வேலவன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் நுழைந்தார்கள். கிருஷ்ணமூர்த்தியின் மகனின் கையில் நீளமான சிட்டை இருந்தது.

அவரது மகன் சிட்டையில் இருந்த பொருட்களின் பெயரைச் சொல்லச் சொல்ல கிருஷ்ணமூர்த்தி இரண்டு பெரிய ட்ராலிகளில் பலசரக்கு சாமானை எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார்.

“பாசிப்பருப்பு 3 கிலோ” என்று அவரது மகன் வாசிக்கவும் பாசிப்பருப்பு பாக்கெட்டை கையில் எடுத்தவர்,

“ஏம்மா செல்வலட்சுமி இங்கே வா…” என்று செல்வலட்சுமியை அழைத்தார்.

உடனே எழுந்து கிருஷ்ணமூர்த்தியின் அருகே சென்றாள் செல்வலட்சுமி.

“என்ன சார் கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“பாசிப்பருப்பு ஒரு கிலோ பாக்கெட் இருக்கு… அரை கிலோ இருக்கு… கால் கிலோ பாக்கெட் எங்க?”

அரை கிலோ பாக்கெட்டிற்கும் ஒரு கிலோ பாக்கெட்டிற்கும் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கால் கிலோ பாக்கெட்டை எடுத்து அவரது கையில் கொடுத்தாள் செல்வலக்ஷ்மி.

“பின்னாடி வச்சிருந்தா… யார் குனிஞ்சு எடுக்கிறது? முன்னாடி வைங்கமா…” என்று அதிகாரம் செய்த கிருஷ்ணமூர்த்தி,

“நீ இங்கேயே இரு. எங்கேயும் போயிராத. ஒவ்வொரு சாமானையும் நான் தேடித் தேடி எடுக்கிற மாதிரி இருக்கும். நான் வாசிக்கறேன். நீ எடுத்துப்போடு.” என்றவர் தனது மகனின் கையில் இருந்த லிஸ்டை பிடுங்கிக் கொண்டு சாமான்களின் பெயரை வாசிக்க ஆரம்பித்தார். அந்த பட்டியலை மெதுவாகக் கூட அவர் வாசிக்கவில்லை. வேக வேகமாக வாசித்தார்.

செல்வலட்சுமி அங்குமிங்கும் ஓடி ஒருவழியாக அவர் சொன்ன சாமான்களை எடுத்து ட்ராலியில் சேர்த்து விட்டாள். அவளுக்கு லேசாக மூச்சு வாங்கவே ஆரம்பித்துவிட்டது.

“அக்ஷயா பொன்னி அரிசி 25 கிலோ மூடை எடுத்து முன்னாடி ரெடியா வச்சிடு.”

“சரி சார்.”

“பில் போட்டு பணத்தை கட்டிட்டு வந்தப் பிறகு எடுத்து வைக்காதீங்க.”

“சரிங்க சார்.” என்ற செல்வலட்சுமி தனது ரேட் அடிக்கும் sticker gun-ஐ கையில் எடுத்தாள்.

“சரின்னு சொல்லிட்டு இங்க நிக்கிற? போய் அரிசி மூடையை எடுத்து வை மா.” என்று தனது வீட்டுப் பெண்களை அதிகாரம் செய்வது போல செல்வலட்சுமியை கிருஷ்ணமூர்த்தி அதிகாரம் செய்தார்.

அவரது குரலின் சப்தம் கேட்டு வேகமாக செல்வலட்சுமியின் அருகே சென்ற ஜனா,

“எதுவும் வேணுமா செல்வலட்சுமி?” என்று செல்வலட்சுமியைப் பார்த்துக் கேட்டான்.

“அக்ஷயா பொன்னி அரிசி 26 கிலோ மூட வேணும்ணே… அதை நான் எடுத்துட்டு வந்து முன்னாடி பென்ச்ல வைக்கணுமாம்…” – ஜனாவிடம் கிசுகிசுத்தாள் செல்வலட்சுமி.

“அரிசி மூடை தான? வாங்கண்ணே, நான் எடுத்துத் தர்றேன்” என்று கூறிக்கொண்டு வேகமாக அரிசி குடோன் பக்கமாக சென்று ஒரு 26 கிலோ மூடையை எடுத்து முன்னால் இருந்த பென்ச்சில் வைத்த ஜனா மீண்டும் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று, “அரிசியை ரெடியா எடுத்து வச்சாச்சுண்ணே.” என்றான்.

“சொல்லச் சொல்ல அசையாம அங்கேயே நிற்கிறா பாரேன்” என்று செல்வலட்சுமி பற்றி குறை கூறிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தி பில் போடும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

“பொம்பளப் பிள்ளைங்க அரிசி மூடையை தூக்க மாட்டாங்கண்ணே… அவுங்களால இழுத்துட்டுத் தான் வர முடியும்… அதான் அந்தப்பிள்ளை யோசிச்சது…” – ஜனா.

“என்னது? அரிசி மூடையை தூக்க முடியாதா? எங்க ஊரு பக்கம் வந்து பாரு, ஒவ்வொரு வீட்டிலும் பொம்பளப் பிள்ளைங்க எவ்வளவு வேலை செய்துன்னு… 26கிலோவைத் தூக்க எங்க ஊரு பொண்ணுங்க அஞ்ச மாட்டாங்க….”

“இங்க இருக்கிறது எல்லாம் சின்ன வயசு பிள்ளைங்க தான… அவர்களுக்கு என்ன விவரம் தெரியும்…”

“தெரிஞ்சிருக்கணும் தம்பி. 18 வயசு இருக்கும்ல? இப்பவே பொம்பளப்பிள்ளைகளுக்கு உடம்பு வளையனும்… இல்லன்னா கல்யாணம் பண்ணிப் போற இடத்துல கஷ்டம்.”

கிருஷ்ணமூர்த்தியின் அடாவடித்தனத்தைப் பார்த்த பாலன்,

“செல்வலட்சமி, ஹார்லிக்ஸ் 50 கிராம் ரீபில் பாக்கெட் என்ன விலைன்னு பில் புக்ல பார்த்துட்டு வா. ஹார்லிக்ஸ் பாக்கெட்டுல ரேட் ஒட்டணும்.” என்று செல்வலட்சுமியிடம் சொல்லவும் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பில் புக்கையும் ஃபைல்லையும் எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து மறைந்துவிட்டாள் செல்வலட்சுமி.

இப்போது ஜனா தான் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டு நின்றான். இது போன்ற அடாவடித்தனம் செய்யும் கஸ்டமர்களை சாமர்த்தியமாக பல முறை கையாண்டிருக்கிறான் ஜனா. இக்கடையின் துவக்க நாளில் இருந்தே பாலனுடன் சேர்ந்து இக்கடையில் உழைக்கிறானே? அவனுக்கு யாரிடம் எப்படிப் பேசுவது என்று தெரியாதா?

ஆனால் கடந்த சில நாட்களாக அவன் அனுபவித்த மனஉலைச்சல் பொறுமைசாலியான ஜனாவையே பொறுமையை கைவிட வைத்துவிட்டது. இன்று செல்வலட்சுமியை தன் இஷ்டத்திற்கு வேலைவாங்கிய கிருஷ்ணமூர்த்தியிடம் கோபமாக இருந்த ஜனா அனைத்து தெய்வங்களிடமும் “பொறுமையைக் கொடு கடவுளே” என்று கேட்டுக் கொண்டு பற்களைக் கடித்தபடி அமைதியாக நின்றான்.

“என்னோட அட்ரஸ் தெரியும்ல? ஐய்யனார் காலனி ரெண்டாவது தெரு, டோர் நம்பர் 223. முதல் தெருவுக்கு வந்து நின்னுகிட்டு டோர் நம்பர் கேட்டு உயிரை வாங்கக்கூடாது.”

“நாங்க ஒரு நாளும் அப்படி செஞ்சதில்லயேண்ணே…” பணிவாகக் கேட்டான் ஜனா.

“இந்த அமேஜான்காரன் வந்தா அப்படித் தான் செய்யிறான். பக்கத்து தெருவுல நின்னுகிட்டு போன் போட்டுக்கிட்டு கழுத்தறுக்குறான்… அதான் டோர் டெலிவரி பண்ற ஆளுங்ககிட்ட முன்கூட்டியே சொல்லிடுறது… போனைப் போட்டு உயிரை வாங்காதீங்கடான்னு…” என்று ஜனாவிடம் சொன்ன கிருஷ்ணமூர்த்தி தனது மகனிடம் திரும்பி,

“லலிதாவுக்கு போனைப் போட்டு ட்யூஷன் முடிஞ்சிடுச்சான்னு கேளூ… போகும்போது அவளையும் கூட்டிட்டுப் போயிடலாம்.” என்றார்.

லலிதா என்பது அவரது மகள். கிருஷ்ணமூர்த்தியின் கட்டளையை ஏற்று தனது தங்கைக்கு கால் செய்தான் அவரது மகன் மகேஷ்.

“சொல்லுண்ணா…” மறுமுனையில்.

“ட்யூஷன் முடிஞ்சிடுச்சா…” – மகேஷ்.

“இல்லண்ணா…”

“பேக்கை மூடிட்டு எழுந்து வாசலுக்கு வந்து நில்லு. கேட்டை தாண்டக்கூடாது. வெளியே வரக்கூடாது. நான் கூப்பிட வர்றேன்.”

“இன்னும் ட்யூஷன் முடியலண்ணா.”

“நான் சொன்னதை செய். ரோட்டுல நின்னு வேடிக்கை பார்த்த… செருப்பு பிஞ்சிடும்.” என்று பற்களைக் கடித்துக்கொண்டு போனில் தனது தங்கையை அரட்டினான் மகேஷ் என்ற தடியன்.

டியூஷனில் இருந்த மகளிடம் போனில் பேசும் வேலையை மகனுக்கு கொடுத்துவிட்டு தனது மனைவிக்கு கால் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. போனில் தனது மனைவியை திட்டிக்கொண்டே இருந்தார். அவருக்கு போட்டியாக அவரது மகன் போனில் தனது தங்கையை திட்டிக்கொண்டே இருந்தான். கடையில் இருந்த கஸ்டமர்கள் அனைவரும் அவர்களைத் தான் ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்தனர். அவர்கள் போனில் பேசுவது அடுத்த தெருவில் இருப்பவர்களுக்கே கேட்கும்போது அக்கடையில் இருந்த கஸ்டமருக்கு கேட்காதா என்ன?

கிருஷ்ணமூர்த்தியின் மானிட உடல் வேலவன் சூப்பர்மார்கெட்டைவிட்டுச் சென்றதும்,

“சரியான கிறுக்கனா இருப்பான் போல பாலண்ணா… உடம்பெல்லாம் அந்தாளுக்கு திமிறு…” என்று பாலனிடம் சொன்னான் ஜனா.

“அந்த ஆள்கிட்ட போய் நீ நியாயம் தர்மம் பேசலாமா? விடு ஜனா… தான் பிடிச்ச முயலுக்கு அஞ்சு கால்னு அந்த ஆளு சொல்லுவாப்புல…”

“அஞ்சு காலா? காலே இல்லைன்னு பிடிவாதம் பிடிக்கிற ஆள் அந்தாளு…”

“அவர் பையனைப் பார்த்தியா? எப்படி பெட்டிப் பாம்பா அவர் பின்னாடியே டிராலியை இழுத்துட்டுப் போனான்? அந்தப் பையன் சரியான அப்பனுக்குப் பயந்த புள்ள…”

“அந்த வீட்டு ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்க மேல மரியாதை இல்ல…” பேசிக்கொண்டே கருப்பட்டி மூடையில் இருந்து மிளகளவு துண்டை எடுத்து வாயில் போட்டான் ஜனா.

“அவுங்க கதை இருக்கட்டும்… உன் பேர்ல தினம் 50 கிராம் கருப்பட்டி பில் போடணும் போலயே” என்று ப்ரதீபா வம்பிழுக்க,

“அட சாப்பிடட்டும் ப்ரதீபா… இதுக்கெல்லாம் கணக்குப் பார்க்கலாமா?” என்றார் பாலன்.

ஜனா உடனே தனது காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள, “பாலண்ணா சப்போர்ட் பண்ணிட்டா போதுமே? உன்னை இனி கையில பிடிக்க முடியாதே? ஆனா நீ பண்றதுக்கெல்லாம் பாலண்ணா உனக்கு சப்போர்ட் பண்றது ஓவர் தான்… நீ தப்பு பண்ணும்போதும் உன்னை சப்போர்ட் பண்ணக்கூடாதுல?” என்றாள் ப்ரதீபா.

ப்ரதீபா எதைப் பற்றி பேசுகிறாள் என்று ஜனாவிற்குப் புரியாதா?

ப்ரதீபாவிடம் பதிலுக்கு பதில் பேசக்கூட ஜனாவிற்கு அப்போது நேரம் இருக்கவில்லை. அடுத்தடுத்து வேலைகள் இருந்தன. மாதத்தின் முதல் வாரம் என்பதால் அக்கடையில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் பெண்ட்டை நிமிர்த்தும் வேலைகள் இருந்தன.

அந்த மாபெரும் சூப்பர் மார்க்கெட்டின் சாமான்களுக்கு ரேட் அடித்து, ராக்குகளில் அடுக்கி, இல்லாத சரக்குகளை சரிபார்த்து, டோர் டெலிவரி சாமான்களை பில்லோடு ஒப்பிட்டுப் பார்த்து சரிபார்த்து பேக் செய்து… என அத்தனை வேலைகளையும் அக்கடையின் பணியாட்கள் செய்வார்கள்.

மேலும் அன்று இரவு 10 மணி வரை கூட்டம் அதிகமாக இருந்ததால் அன்றைய நாள் அனைவரையும் பந்தாடிவிட்டுத் தான் முடிந்தது.

அன்று கடையடைத்துவிட்டு வீடு திரும்பும்போது அனைவருக்கும் எக்ஸ்டிரா பேட்டாவாக 200 ரூபாயைக் கொடுத்தார் பாலன்.

மிகவும் கால தாமதமானதால் அன்று இரவு ப்ரதீபாவை அவளது மூத்த அண்ணன் அழைத்துச் சென்றுவிட செல்வலட்சுமியும் தனது தந்தையுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

 ஜனாவும் பாலனும் தான் கடைசியாகக் கிளம்பினார்கள்.

தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிய ஜனாவிடம், “ஜனா நாளைக்கு பாய்ஸ் ஸ்கூல் ஹாஸ்டலுக்கு சரக்கெடுக்கணும். மறந்திடாத…” என்று பாலன் சொன்னபோது தன்னையறியாமல், “சரிண்ணே நானும் நிஷாவும் சேர்ந்து பாய்ஸ் ஸ்கூல் சரக்கை பேக் செஞ்சிடறோம்.” என்று சொன்ன ஜனா மறு நொடி தனது நாக்கைக் கடித்துக்கொண்டு, “நாளைக்கு நானும் ப்ரதீபாவும் சரக்கை எடுத்து வச்சிடுறோம் பாலண்ணா.” என்றபடி அவசரமாக தன்னைச்சுற்றி திரும்பிப் பார்த்தான்.

நல்லவேளையாக அவ்விடத்தில் சூப்பர்மார்கெட்டில் பணிபுரிபவர்கள் யாரும் இல்லை. அவனது பதற்றத்தையும் தடுமாற்றத்தையும் கவனித்து,

“ஜனா… கோபத்துல எடுக்கிற முடிவு தப்பா போகலாம்…” என்று பாலன் ஆரம்பித்தபோது,

“அன்னிக்கி நான் கோபத்துல முடிவெடுக்கலண்ணே… அது பல நாள் மனசுல ஓடிட்டு இருந்த நினைப்பு தான்… பிரச்சனை வந்ததும் அன்னிக்கி என் மனசுல இருந்தது வார்த்தையா வெளிய வந்துடுச்சு…” என்றான் ஜனா படபடப்பாக.

“சரி ஜனா கவனமா வீடு போய்ச் சேரு… மனசை திடமா வச்சிக்கோ…” அறிவுரை சொன்னார் பாலன்.

‘ரொம்ப திடமா இருக்கிறது தான் எல்லாருக்கும் பிரச்சனையா இருக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்ட ஜனா அவரது முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டு, “சரிண்ணா” என்று குனிந்தபடியே சொன்னவன் தனது பைக்கை வேகமாக செலுத்தி அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டான்.

பாலனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் தப்பிச் சென்ற ஜனாவினால் இரவில் தனது மனம் கேட்கும் கேள்விகளிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

தனது ப்ளாஸ்டிக் பாயில் படுத்துப் புரண்டுகொண்டிருந்த ஜனாவிற்கு தூக்கம் என்பது தனக்கு எட்டும் தூரத்தில் இல்லை என்று புரிந்தது.

முகம் வரை போர்வையை இழுத்து மூடிக்கொண்டு தூங்கிட முயற்சி செய்தான். அதுவும் பழிக்கவில்லை.

ஜனாவின் வீடு ஒற்றை அறை கொண்ட வீடுதானே? ஜனா தரையில் புரண்டு புரண்டு படுப்பதை கட்டிலில் படுத்திருந்த அவனது அன்னை கவனித்தாலும் அவனிடம் எந்த விபரமும் கேட்கவில்லை.

‘வயசுப் பையன்… எத்தனையோ நினைப்பு இருக்கும்…’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டு சுவற்றில் இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தார் ஜனாவின் அன்னை.

‘மணி 12 ஆகிடுச்சு…. இன்னும் இந்தப்புள்ள தூங்கலயே’ என்று நினைத்தபடி லேசாக கண்களை மூடினார் ஜனாவின் அன்னை.

ஜனாவின் அன்னை நினைத்ததுபோல ஜனாவின் மனதில் எத்தனையே நினைவுகள் தான்…

‘நிஷாகூட கள்ளம் கபடம் இல்லாமல் தான பழகுனோம்? அது எப்ப தப்பா போச்சு? ஏன் தப்பா போச்சு?’ என்று அலசி ஆராய்ந்தவனின் மனதில்,

“ஜனா சார்… பாய்ஸ் ஸ்கூலுக்கு சரக்கெடுக்கணும்னு பாலன் சார் சொன்னாரு… உங்க கூட சேர்ந்து எடுக்கச் சொன்னாரு…” என்று அவனிடம் முதல் முதலாக நிஷா உதவி கேட்டு நின்ற நாள் நினைவில் வந்தது.

‘அப்போ நிஷா சூப்பர்மார்கெட்டில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம் தான் ஆகியிருந்தது… ப்ரியாவுக்கும் கல்யாணம் ஆகல… ச்ச அப்ப எல்லாம் பிரச்சனையே இல்லாம நிம்மதியா இருந்தேன்…’ என்று ஜனாவின் மனம் ஒரு வருடத்திற்கு முன் சென்றுவிட்டது.

Advertisement