Advertisement

இரவு 10 மணிக்கு ப்ரதீபாவை தனது பைக்கில் ஜனா அழைத்துச்சென்றபோது, “ஜனா அண்ணா என் மேல கோபமா இருக்கியா?” என்று ப்ரதீபா கேட்டதற்கு பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தான் ஜனா.

சைலன்ட்டில் இருந்த  கைபேசி வைப்ரேட் ஆனதும் யார் அழைப்பது என்று எடுத்துப் பார்த்தான். ஜனாவின் அண்ணன்தான் அழைத்தது. உடனே அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டே பைக்கை ஓட்டினான் ஜனா.

 “ஜனா எங்க இருக்க?” -ஜனாவின் உடன்பிறந்த அண்ணன் கைபேசியில்….

“வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்னா.”

“ஓ… நாளைக்கு தோது இருக்கும்போது வீட்டுப்பக்கம் வந்துட்டுப் போ.”

“சரிண்ணா.”

“அண்ணி உனக்காக நாளைக்கு மீன் குழம்பு வைக்கப்போறாளாம். அதான் வரச் சொன்னேன்.”

“ம் சரிண்ணா… பாப்பா என்ன செய்யிறா?”

“சேட்டை பண்ணிகிட்டு பொழுதை போக்குறா… சன்டே வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்… ஆமா, எப்ப வீடு கட்ட ஆரம்பிக்கப்போற?”

“பூஜை போட்டதோட நிற்குதுண்ணா… ஒரு 3லட்ச ரூபாய்க்கு சீட்டு போட்டுருக்கேன். அது முடிஞ்சி பணம் வந்ததும் கொஞ்சம் கொஞ்சமா வேலையை ஆரம்பிக்கணும். மாமாவும் 5 லட்சம் வரை தர்றேன்னார்…”

“சீட்டு முடிய இன்னும் 2 வருஷம் இருக்கே? நீ மொத்த பட்ஜெட்டுக்கும் லோன் போட்டு வேலையை ஆரம்பிப்பன்னு நினைச்சேன்…”

“மொத்த பணமும் லோன் போட்டா ஆரம்பிக்க? 15 லட்சம் வரை ஆகலாம்னு இன்ஜினியர் சொல்றாரு… 15லட்சத்துக்கு  யார் வட்டி கட்டி அடைக்கிறது? நான் சீட்டு முடிஞ்சதும் வீடு கட்ட ஆரம்பிக்கறேன்னா… 6ல இருந்து 7 லட்சம் வரை லோன் போட்டுக்கலாம்…”

“சரி சரி நீ ஏதோ கணக்குப் போடுற… அதைப் பற்றி நேர்ல பேச வர்றேன்… நாளைக்கு என் வீட்டுக்கு வந்து உன் அண்ணிகிட்ட 2 லட்சம் வாங்கிக்கோ…”

“எதுக்குன்னா அவ்வளவு பணம்?”

“சின்ன சின்ன செலவுக்குத் தான்… டைல்ஸ், ஸ்விட்ச் போர்ட், பி.வி.சி பைப்.. இப்படி ஐயிட்டத்தை எல்லாம் வாங்கிப் போட்டு வைடா… “

“இப்பவே வாங்கி வச்சி என்ன பண்ண?”

“அது என்ன கெட்டுப்போற பொருளா? என் வீட்டு மாடியில சின்ன ரூம் இருக்குல? அதுல போட்டு வச்சிக்கோடா. வீட்டு வேலை ஆரம்பிக்கும்போது எடுத்துக்கோ.”

“இருக்கட்டும்ணா… நீ கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…”

“உன் வீட்டுக்கு நான் வாங்கிப்போட்டதா இருக்கட்டும்.”

“அண்ணா…”

“சொல்றேன்ல? மறுத்துப்பேசாத. நாலு மணிக்குள்ள மீன் குழம்பை வாங்கிட்டுப் போயிடு. மறந்திடாத… போனை வச்சிடறேன்.” என்று கூறி அழைப்பில் இருந்து ஜனாவின் அண்ணன் விலகிவிட ஜனா அமைதியாக தனது கைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

ஜனா என்றுமே தனது அண்ணனிடம் மறுத்துப்பேசியதில்லை. ஜனாவுடன் கூடப்பிறந்தது ஒரே ஒரு அண்ணன் தான். அவனைவிட பத்து வயது மூத்தவரும் கூட… அனுபவமும் அன்பும் மிகுந்த தனது அண்ணன் மீது ஜனாவிற்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் அவன் தனது அண்ணன் வரைந்த கோட்டை என்றும் தாண்டியதில்லை.

ஜனாவின் கைபேசி ஸ்பீக்கரில் இருந்ததால் அவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டே இருந்த ப்ரதீபா, “உன் அண்ணன்கிட்ட பயங்கரமா பம்முற? அண்ணா… அண்ணா-ன்னு எத்தனை அண்ணா சொல்லிட்ட தெரியுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“ப்ச்… குமார் அண்ணன் சரக்கை எடுத்துவச்சிட்டியா? காலையில ஒன்பது மணிக்கே ஆர்டர் கொடுத்துட்டாரு. அவர் டி.வி.எஸ் 50-யைப் பார்த்ததும் சரக்கை எடுத்து வைக்காத…”

“பேச்சை மாத்தாத ஜனா அண்ணா… உன் அண்ணன் குரல் கேட்டே நடுங்குற… ஆனா எங்ககிட்ட தான் உன் பந்தா அதிகாரம் எல்லாம் செல்லுபடியாகுது போலயே?”

“அதிகாரமா? நானா?”

“மதியத்திலிருந்து மூஞ்சை உம்முன்னு வச்சிருக்க? என்னா வீராப்பு. இப்ப உன் அண்ணன்கிட்ட அதே வீராப்பை காட்டுறது…” என்று ப்ரதீபா சொன்னபோது ஜனாவின் பைக் அவளது வீட்டு வாசலில் நின்றது.

“வீடு வந்திருச்சு. இறங்கு…” என்றான் ஜனா.

“உண்மையாவே உனக்கு நிஷாவைப் பிடிக்கலயா? சொல்லு ஜனா அண்ணா… உன் மனசாட்சிகிட்ட நீயே கேட்டுப் பாரு… நீ பண்ணது சரியா தப்பான்னு…”

 “இப்ப எதுக்கு நிஷா பேச்சை எடுத்த?”

“மனசாட்சி பற்றிக்கூட சொன்னேன்… அதை விட்டுட்டு நிஷாவையே பிடிச்சிட்டு தொங்கு…”

ப்ரதீபாவின் பேச்சே காதில் விழாததுபோல ரோட்டை வெறித்துப் பார்த்தபடி நின்ற ஜனா, “மணி பத்து… வீட்டுக்குள்ள போ ப்ரதீபா.” என்று ப்ரதீபாவின் மேல் இருந்த கோபத்தில் மிதமான கடுமைக்குரலில் சொல்லிட,

 “ஆனாலும் உன்னை அடக்குறதுக்கு உன் அண்ணன் ஒருத்தராவது இருக்கார்ன்னு நினைக்கிறபோது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்றாள் ப்ரதீபா.

“உன்னை அடக்குறதுக்கு நாலு அண்ணன்கள் இருக்கிறதை நினைச்சா எனக்கும் ஆனந்தமா தான் இருக்கு…” என்று சரிக்குச் சரியாக பேசி ப்ரதீபாவை சீண்டினான் ஜனா.

வாக்குவாதம் என்று வந்துவிட்டால் அதில் ஜனா தான் எப்போதும் ஜெயிப்பான்.

அவன் கோபத்தில் இருந்தாலும் கலகலப்பாக இருந்தாலும் வாக்குவாதங்களை ஜெயிக்கும் திறன் அவனுக்கிருந்தது.

“என் மேல கோபமா இருக்கியான்னு கேட்டேன்ல?” என்று கேட்ட ப்ரதீபா பைக்கில் இருந்து மெல்ல இறங்கி வீட்டிற்குள் நுழையாமல் ஜனாவிடம் கேள்வி கேட்டுகொண்டு நின்றாள்.

“நான் பண்ணது தப்புன்னு எல்லாரும் நினைக்கிறீங்கல?” ஜனா கேட்டான்.

ப்ரதீபா அமைதியாக நிற்பதைப்பார்த்து, “மணி பத்தை தாண்டிருச்சு… வீட்டுக்குள்ள போ ப்ரதீபா… என்னால முடியல… ரொம்ப டயர்ட்டா இருக்கு… முதுகு வலிக்குது…” என்றான் ஜனா. அதற்குமேல் ப்ரதீபாவும் அவனுடன் வாக்குவாதம் செய்யாமல், “குட்நைட் ஜனா அண்ணா” என்று கூறி தனது வீட்டிற்குள் நுழைந்தாள்.

****

அன்று இரவு 12 மணிக்கு ப்ரதீபா ஜனாவிற்கு கால் செய்தாள்.

தனது தாய் தேவியிடம் அடி வாங்கிவிட்டு அழுதுகொண்டே கைபேசியில் பேசினாள் ப்ரதீபா.

“ஜனா அண்ணா நான் சாகப்போறேன்.”

“அம்மா தாயே நான் உன்மேல கோபமா இல்ல… தயவு செய்து என்னை தூங்கவிடு… விளையாடாத… எனக்கே நாலு நாளா சரியான தூக்கம் இல்ல… இன்னிக்காவது நான் தூங்கணும்…”

“இல்ல சீரியஸா பேசுறேன்… நான் சாகப்போறேன்…”

“அப்படியா? எப்ப? எப்படி?”

“நிஜமா சாகப்போறேன். பாலன் அண்ணா, செல்வா, அருண் அண்ணாகிட்டயும் சொல்லிடு. அவுங்களுக்கு எல்லாம் போன் போட்டுச் சொல்ல நேரம் இல்ல…”

இரண்டு நாட்களாக மனதில் பாரத்துடன் சுற்றித் திரிந்த ஜனாவிற்கே ப்ரதீபாவின் பேச்சு சிரிப்பை வரவழைத்தது. அவனது முதுகு வலி கூட காணாமல் போய்விட்டது.

“சாகப்போறவளுக்கு இனி நேரம் இருந்தா என்ன இல்லாட்டினா என்ன?” என்று சிரிக்காமல் தான் கேட்டான் ஜனா.

“சாகப்போறேன்னு சொல்றேன்… இன்னும் என்கூட கோபமா பேசுற?”

“சரி… கோபப்படாமல் பேசுறேன்… என்ன ஆச்சு?”

 “என் அம்மா தான் என் சாவுக்கு காரணம்னு எழுதி வச்சிட்டு சாகப்போறேன். இந்த வாட்ஸ்ஆப் சாட்டைகூட போலிஸ் கேட்கலாம். அதனால கவனமா பேசு.”

“தேவி அக்காகிட்ட தொடப்பத்தால அடி வாங்கினியா?”

“பூரி கட்டையால அடிச்சிச்சி ஜனா அண்ணா…”

“நீ என்ன பண்ண? அதை மொத சொல்லு…”

“போன் பார்த்துட்டு இருக்கும்போது பட்டுன்னு புடுங்கிடுச்சு… அதான் கோவத்துல திட்டிட்டேன்…”

“என்ன திட்டுன?”

“லூசாமா நீ-ன்னு கேட்டேன்… அவ்வளவு தான்… பின்னிப் பெடல் எடுத்திடுச்சு… கடவுள் எனக்கு நல்ல அம்மாவையே கொடுக்கல…”

“உன் வாய்க்கு ஏத்த அம்மாவை தான் கடவுள் உனக்கு கொடுத்திருக்காரு…”

“என்ன சொன்ன?”

“இல்ல… கடவுள் எதையும் சரியா தான் செய்வாருன்னு சொன்னேன்.”

“உன்னோட அம்மா உன்னை பூரிக்கட்டையால அடிச்சா தான் உனக்குத் தெரியும்…”

“நான் என் அம்மாவை லூசுன்னு திட்டினதில்ல…”

“சரி… நான் சாகப்போறேன்னு சொல்லத்தான் கால் பண்ணேன். நாளைக்கு காலையில என்னைக் கூப்பிட வராத…”

“ஓ… அப்படியா? சரி.”

“நாளைக்கு குமார் அண்ணனுக்கு டெலிவரி கொடுக்கணும். மறந்துடாத… அதை ஞாபகப்படுத்தனும்னு தோணுச்சு.”

“சொல்லிட்டீல? குட்நைட்.” ஜனா சிரித்துக்கொண்டே கைபேசியை வைத்துவிட்டான்.

மறுநாள் காலையில் வழக்கம்போல அவளை பிக்அப் செய்ய ஜனா தான் தனது பைக்கில் சென்றான்.

“அம்மா… ஜனா அண்ணா வந்திருச்சு… நான் போயிட்டு வர்றேன்.” – ப்ரதீபா.

“இரு இரு… காத்து கருப்பு வராம இருக்கும்.” என்று கூறி அவளது தலைமுடியில் இரண்டு வேப்பிலைகளை சொருகினார் தேவி.

“சரிம்மா போயிட்டு வர்றேன்.” என்று கூறி ஜனாவின் பைக்கில் ஏறினாள் ப்ரதீபா.

பைக் அந்தத் தெருவை தாண்டிச் சென்றதும்,

“என்ன? சாகலையா?” – ஜனா சிரித்துக்கொண்டே கேட்டான்.

“அதைப் பற்றி பேசாத…”

“பாசம் வேப்பிலை ரூபத்துல வந்து கொட்டுது? நைட் ரெண்டு பேரும் அம்மன் படம் பார்த்தீங்களா?”

“நைட்டே என்கிட்ட என் அம்மா சாரி கேட்டுருச்சு தெரியுமா?”

“யாரு? தேவி அக்காவா? நான் நம்ப மாட்டேன். யார் காதுல பூ சுத்துற? இரு… உன் அம்மாகிட்டயே கேட்டுட்டு வந்திடுறேன்.” என்று கூறி பைக்கை திருப்ப ஆரம்பித்தான் ஜனா.

“சரிரிரி… நான் முதல்ல சாரி கேட்டேன். அதுக்கப்புறம் என் அம்மா கேட்டுச்சு…போதுமா?”

சிரிப்பதையே மறந்து போயிருந்த ஜனா ப்ரதீபாவின் பேச்சைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே பைக்கை சூப்பர்மார்கெட் நோக்கி ஓட்டிச் சென்றான்.

அவன் சிரிப்பதை பைக்கின் கண்ணாடியில் பார்த்த ப்ரதீபாவின் மனதிலும் கொஞ்சம் நிம்மதி வந்தது.

‘ஜனா அண்ணா… உனக்கு நல்ல லைஃப் அமையணும்னு நான் ஆசைப்படுறேன்… அதுக்கு நீயே ஏன் முட்டுக்கட்டையா இருக்க?’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவள், ‘கடவுளே ஜனாவோட மனசை மாத்துப்பா…’ என்று வேண்டிக்கொண்டாள்.

***

Advertisement