Advertisement

அத்தியாயம் 4

ஒரு வருடம் முன்பாக…

காலை 10 மணி.

கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்த முதலாளி பாலன், “அருண்ணு… அருண்ணு…” என்று பில் கவுன்டரில் இருந்தபடியே அருணை அழைக்க…

“நீங்க தான அவன்கிட்ட பாய்ஸ் ஸ்கூலுக்கு சரக்கு கொடுத்து அனுப்பினீங்க?” – செல்வலட்சுமி கேட்டாள்.

“ஆமா… மறந்தே போச்சு.” என்று கூறிய பாலன்,

“ஜனா… ஜனா எங்கயிருக்க?” என்று ஜனாவை சப்தமாக அழைத்தார்.

“இங்க இருக்கேன்னே…” என்று கடையின் கடைசி மூலையிலிருந்து கத்திய ஜனா கை அசைத்து தான் இருக்கும் இடத்தை பாலனுக்கு தெரிவித்தான்.

“ஜனா இங்க வா… உனக்கு ஒரு சின்ன வேலை…”

தனது முதலாளியின் குரல் கேட்டதும் வேகமாக அவரிடம் சென்ற ஜனா “என்னன்னே? கூப்பிட்டீங்களா?” என்று கேட்டான்.

“நந்தினி பேக்கரில 5000 ரூபாய்க்கு 100 ரூபாய் தாள் வாங்கிட்டு வா.. கஸ்டமர் எல்லாரும் ஐநூறு ரூபா தாளா கொடுத்தா சில்லரைக்கு நாம எங்க போறது?” – பாலன்.

அவர் கையில் வைத்திருந்த ஐயாயிரத்தை வாங்கிக் கொண்ட ஜனா,

“நந்தினி பேக்கிரியில இல்லேன்னா வேற எங்க போகண்ணா?” என்று கேட்டான்.

“சூர்யா காபி பார்-ல கேளுப்பா. கொடுப்பாங்க…”

“சரிண்ணே” என்று கூறிக்கொண்டு தங்களது கடையின் பக்கத்து கடையான நந்தினி பேக்கரிக்கு ஜனா கிளம்பிய போது…

“ஜனா ஒரு நிமிஷம் நில்லு… ப்ரதீபாவை உன்கூட வண்டியில் ஏத்திக்கோ…” என்றார் பாலன்.

“அவ எதுக்குண்ணே?”

“மார்க்கெட்டில் மாங்காய் ஒரு கிலோ, இஞ்சி ஒரு கிலோ வாங்கணும் ஜனா… கல்யாணச்சிட்டைக்குத் தேவையா இருக்கு… காய்கறி மார்கெட்டுல வண்டியை பார்க் பண்ண இடமே கிடைக்காது… அதனால ப்ரதீபாவை மார்கெட்ல இறக்கி விட்டிடு… நீ வண்டிய யூ டர்ன் எடுத்துட்டு வர்றதுக்குள்ள ப்ரதீபா மார்க்கெட்டுக்குள்ள போய் மாங்காயும் இஞ்சியும் வாங்கிட்டு வந்துரலாம்…”

“சரிண்ணே” என்று சொன்ன ஜனா ப்ரதீபாவையும் அழைத்துக் கொண்டு தனது பேட்டரி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

பக்கத்து கடையான நந்தினி பேக்கரியின் வாசலுக்கு சென்றதும் வண்டியை அணைக்காமல் பேக்கரியின் முதலாளியை, “டேவிட் அண்ணே” என்று உரிமையாய் அழைத்தான் ஜனா.

“என்ன ஜனா?” டேவிட் அண்ணன் கேட்டார்.

“அண்ணே… ஒரு 5000 ரூபாய்க்கு 100 ரூபாய் தாள் வேணும்ணே…”

“5000 ரூபாய்க்கு இருக்காது… 3000 ரூபாய்க்கு இருக்கும். 3000 ரூபாய்க்கு என்கிட்ட வாங்கிக்கோ. 2000 ரூபாய்க்கு வெளியே எங்கேயாவது வாங்கிக்கோ…”

“சரிண்ணே, ப்ரதீபாகிட்ட கொடுத்தனுப்புறேன்” என்று ஜனா கூறவும் வண்டியில் அமர்ந்திருந்த ப்ரதீபா இறங்கினாள்.

“நான் வாங்கிட்டு வா-ன்னு சொல்லாமலே வேலை பார்க்கிறியா? ஆச்சரியமா இருக்கே?” ஜனா ஆச்சரியப்பட,

“எல்லா எடுபிடி வேலையும் என்கிட்ட கொடுத்துடு… ஏற்கனவே என் வீட்டுல இருக்கிற நாலு தடியன்களும் என்னை பந்தாடுறானுங்க… இதுல நீயும் சேர்ந்துட்டியா? மூவாயிரத்தைக் கொடு.” என்று சலிப்பாகச் சொன்னாள் ப்ரதீபா.

சிரித்துக்கொண்டே தனது பாக்கெட்டில் இருந்து மூவாயிரத்தை மட்டும் எடுத்து ப்ரதீபாவின் கையில் கொடுத்தான் ஜனா.

ப்ரதீபா பணத்தைக் கொண்டு போய் டேவிட்டிடம் கொடுத்ததும்,

“பாப்பா கொஞ்சம் கூட்டமா இருக்கு. நீ போய் ஜனா கூட நில்லு. ரெண்டு நிமிஷத்துல கடைப்பிள்ளைகிட்ட கொடுத்து விடுகிறேன்…” என்று டேவிட் சொல்லவும்,

“சரிண்ணே” என்று கூறிக்கொண்டு மீண்டும் ஜனாவின் வண்டியின் பக்கமாக சென்று விட்டாள் ப்ரதீபா.

“மார்க்கெட்டுக்கு வேற போகணும், வத்தல் எடை போடணும்… பாக்கெட் போடணும். நிறைய வேலை இருக்கு… இவரு வேற லேட் பண்றாரு…” என்று ஜனா தன் மனதில் ஓடிய எண்ண ஓட்டங்களை ப்ரதீபாவிடம் சொல்லவும்..

“எப்பப் பாரு வேல வேலன்னு அத பத்தியே பேசிட்டு இரு… ஏதாவது விஜய் படத்தை பத்தி பேசுறது..” என்று அறிவுரை சொன்னாள் ப்ரதீபா.

“விஜய்யா எனக்கு சோறு போடப் போறா? முதலாளி தானே சோறு போடப் போறாரு?”

“இருந்தாலும் நீ ரொம்ப ஓவர் ஜனா அண்ணா..”

“சரி பேக்கரியில இப்ப கொஞ்சம் ஃப்ரீ ஆயிருச்சு… போய் நைசா டேவிட் அண்ணன் பக்கத்துல போய் நில்லு… அப்பதான் டேவிட் அண்ணே வேமா சில்லரை கொடுத்து அனுப்புவாங்க…”

“பொறு ஜனா அண்ணா, நீ என்னை எடுபுடி வேலைக்கு வச்சிருக்கற மாதிரி… அவருக்குன்னு எடுபுடி ஆள் வச்சிருக்காராம்… கடை ஃப்ரீ ஆனதும் அந்த எடுபுடி கிட்ட காசு கொடுத்துவிடுறேன்னார்..”

“உன் வாய் கொழுப்பிருக்கே?”

“வெயிட் பண்ற நேரத்துல ஒரு சர்பத் குடிக்கலாமா? எதிர்த்த கடையில சர்பத் நல்லா இருக்காம்…”

“சர்பத்தா? எதுக்கு? வெயில் இல்லயே? அந்தக் கடையில ஒரு சர்பத் 20 ரூபா… நாளைக்கு நான் வீட்டுல இருந்து சர்பத் கொண்டு வர்றேன். 80 ரூபால நம்ம கடையில வேலை பார்க்கிறவங்க எல்லாரும் சர்பத் குடிச்சிடலாம்… நீ என்னடான்னா 20 ரூபாக்கு ஒத்த கிளாஸ் வாங்கலாம்னு கூப்பிடுற… அந்தக்கடை ரொம்ப காஸ்ட்லி ப்ரதீபா…”

“ஒரு சர்பத் தான் கேட்டேன் ஜனா அண்ணா… ‘சுப்மன் கில்’-ஐ வாங்கித்தான்னு கேட்கல…”

“சுப்மன் கில் யாரு?”

“உன்கிட்ட பேசுறது வேஸ்ட்… 20 ரூபாய்க்கு மூக்கால அழு…”

“சரி சரி வா… இதையே ஒரு வாரத்துக்கு சொல்லிக் காட்டுவ…” என்று கூறி ப்ரதீபாவை எதிரே இருந்த சர்பத் கடைக்கு அழைத்துச் சென்றான் ஜனா.

அந்த சர்பத் கடையில் கடைக்காரர் நன்னாரி பாட்டிலைத் திறந்தபோது, “இனிப்பு கம்மியா ஊத்துங்க…” என்றாள் ப்ரதீபா.. அடுத்ததாக அவர் எலுமிச்சம்பழத்தை அறுக்க கத்தியை எடுத்தபோது, “லெமன் கொஞ்சமா போதும்…” என்றாள். அடுத்தபடியக அவர் ஐஸ் கலந்தபோது, “ஐஸ் புதுசா? பழசா?” என்று கேட்டாள். உடனே தலையை நிமிர்த்திய கடைக்காரர் ப்ரதீபாவை அழுத்தமாகப் பார்த்தார். கப்பென்று வாயை மூடிக்கொண்டாள் ப்ரதீபா…

“இதுக்குத்தான்… என்கிட்ட பேசுற மாதிரி எல்லார்கிட்டயும் பேசக்கூடாதுன்னு சொல்றது…” என்று சிரித்துக்கொண்டே சர்பத்தை ப்ரதீபாவின் கையில் கொடுத்தான் ஜனா.

“உனக்கு வாங்கல?” என்று கேட்ட ப்ரதீபாவிடம்.,

“எனக்கு வேணாம்ப்பா…” என்று மறுத்துவிட்டான் ஜனா.

“கஞ்சப் பிசினாரி…”

“ஏன் சொல்ல மாட்ட? நம்ம கடையில நன்னாரி சர்பத்தும் சோடாவும் வாங்கி அதை மிக்ஸிங் பண்ணி நம்மகிட்டயே விற்கிறாரு… அதை வாங்கிக் குடிச்சிட்டு என்னை திட்டுற… வியாபாரியா கணக்குப் பார்த்தா கெட்டப் பேரு தான் கிடைக்கும் போல…”

“எல்லாத்துக்கும் கணக்குப் பார்க்காத ஜனா அண்ணா…” என்று திட்டிய ப்ரதீபா ஜனாவின் அவசரத்திற்கு கட்டுப்படவில்லை. நிறுத்தி நிதானமாகக் குடித்துவிட்டுத் தான் அந்த இடத்தில் இருந்து கிளம்பினாள்.

இருவரும் மீண்டும் நந்தினி பேக்கரிக்குச் சென்றனர். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் முன்னே நூர்நிஷா  வந்து நின்றாள்.

 “மூவாயிரத்துக்கு சேன்ஞ் சார்…” என்று கூறி பணத்தை நீட்டினாள்.

நூர்நிஷாவின் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது…

ஜனாவின் கண்கள் அவளது கண்களில்… அவளது முகத்தில் இருந்த சோர்வும் அசதியும் தெரிந்தபோதும் தனக்கு இருந்த அவசரத்தில் அதைப்பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளாமல் பணத்தை வாங்கிக்கொண்டு ப்ரதீபாவை அழைத்துக்கொண்டு மார்க்கெட்டுக்கு வண்டியைச் செலுத்தினான்.

இஞ்சியும் மாங்காயும் வாங்கி வந்த பிறகு கூட அவன் அடுத்தடுத்த வேலைகளில் கவனமாக இருந்தான். வரும் வழியில் ப்ரதீபா தான் லொட லொடவென ஜனாவுடன் பேசிக் கொண்டு வந்தாள்.

ஜனாவின் கருத்த தேகமும் உழைப்பால் இறுகிய உடம்பும் நூர்நிஷாவின் மனதில் கடுகளவு கூட பதியவில்லை. அதே நேரத்தில் கோதுமை நிறத்திற்கும் சற்று மங்கலான நிறத்தில் இருந்த நூர்நிஷாவும் அவளது நைந்துபோன காட்டன் சுடிதாரும் ஜனாவின் மனதில் கசகசாவின் அளவில் கூட பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

இது தான் நிஷாவை முதல் முதலாக ஜனா பார்த்த நாளின் சுருக்கமான விளக்கம்.

இது ஓர் ஆண்டிற்கு முன்பாக நடந்த கதை…

ஆனால் இன்று??

இன்று எந்த உணர்ச்சியும் இன்றி அவனால் நிஷாவின் கண்களை ஏறெடுத்து பார்க்க முடியுமா?

ஒரு வருடகாலமாக நாள் ஒன்றிற்கு குறைந்த பட்சமாய் இருபது முறை நிஷாவின் பெயரை உச்சரித்து அவளிடம் நட்பு பாராட்டியவனால் அவளை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? அவளை துளியும் வெறுக்காமல் ஒதுங்கிச் செல்லத்தானே முயற்சி செய்கிறான்… இதை ஏன் ப்ரதீபா உட்பட எவரும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்? அவளிடம் இருந்து ஏன் ஒதுங்கிச் செல்கிறான் என்பதை நிஷா அறிவாளா? தோழன் என்ற அந்தஸ்த்தை தவிர அவனால் எதையும் அவளுக்கு கொடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை நிஷா புரிந்துகொண்டிருப்பாளா? அதனால் தான் அன்று மறுப்பேதும் சொல்லாமல் விலகிப் போனாளா?

தனது செயலின் நியாயத்தை அவனால் அவளுக்கு எப்படி உணர்த்த முடியும்?

கடந்த நான்கு நாட்களில் விதி அவனது வாழ்வில் நாலு கால் பாய்ச்சலின் வேகத்தில் காரியங்களை நடத்தியது எப்படிச் சரியாகும்? என்று நினைத்து வெதும்பியபடி சேலத்தின் ஹைவே ரோட்டில் திக்குத் திசையறியாமல் ஜனா சென்றுகொண்டிருந்தபோது அவனது கைபேசி அடித்தது.

அவனை நிகழ்காலத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்தது.

கைபேசியை சைலன்டில் போட்டுவிட்டு பைக்கை ஓரமாக நிறுத்தினான். மனம் அமைதியானதும் மீண்டும் கடைக்குள் வந்த ஜனா மடமடவென வேலைகளைப் பார்த்தான்.

Advertisement