Advertisement

மதியம் 3 மணி.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஜனா, ப்ரியா, செல்வலட்சுமி, ப்ரதீபா இவர்கள் நால்வரும் மதிய உணவை ஒன்றாகத் தான் சாப்பிட்டார்கள்.

அருண் எந்நேரமும் வெளி வேலைகளில் இருப்பதால் அவன் இவர்களுடன் இணைவதில்லை. மேலும் அவனது வீடு அடுத்த தெருவில் தான் இருந்தது. அதனால் மத்தியச் சாப்பாட்டு வேளையின்போது அவன் வீட்டிற்குச் சென்றுவிடுவான். அவன் அதிகம் மிஸ் செய்வது ஜனா மற்றும் அவனது கூட்டாளிகள் சிரித்துச்சிரித்துச் செலவிடும் மத்திய சாப்பாட்டு நேரத்தைத் தான். இந்தக் கூட்டணியில் இப்போது ப்ரியா விடுபட்டுவிட்டாள். அவள் திருமணமாகி திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டாள்.

 செல்வலட்சுமியும் ப்ரதீபாவும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள். அவர்கள் வேலவன் சூப்பர்மார்கெட்டில் வேலைக்குச் சேருவதற்கு ஒரு வருடம் முன்னர் தான் ப்ரியா வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அவர்கள் இருவரையும்விட ப்ரியா இரண்டு வருடங்கள் தான் மூத்தவள். வேலைக்குச் சேர்ந்த புதிதில் எதுவும் தெரியாமல் பேந்தப் பேந்த விழித்த ப்ரியாவிற்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்து தனது சொந்த தங்கச்சி போல பார்த்துக்கொண்டான் ஜனா. ஒரு நாள் ப்ரியா மதியச் சாப்பாடு கொண்டுவராமல் போக, ஜனா தனது சாப்பாட்டை அவளுடன் பகிர்ந்து சாப்பிட்டான். அன்றிலிருந்து இருவரும் சேர்ந்தே சாப்பிட ஆரம்பித்தனர். செல்வலட்சுமியும் ப்ரதீபாவும் அக்கடைக்கு பணிக்கு வந்தப்பிறகு அவர்களும் இணைந்து கொண்டார்கள்.

சாப்பாட்டுவேளையின்போது ஒருநாளும் இந்தக் கூட்டணி பிரிந்ததில்லை. ஜனாவின் வேலை முடிய எவ்வளவு நேரமானாலும் நால்வரும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்.

ஓர் ஆண்டிற்கு முன்பாக ப்ரியா திருமணம் ஆகிச் சென்றுவிட அவளது இடத்தை நிஷா நிரப்பினாள்.

நான்கு நாட்களுக்கு முன்பாக நடந்த பிரச்சனையில் நிஷா சூப்பர்மார்கெட்டைவிட்டுச் சென்றுவிட ஜனா, ப்ரதீபா மற்றும் செல்வலட்சுமி மட்டுமே இப்போது அந்தக் கூட்டணியில் மிஞ்சினர்.

அன்று மதியம் 3 மணிக்குத் தான் ஜனாவின் வேலைகள் முடிந்தன. அதன்பிறகு தான் ஜனாவுடன் சேர்ந்து ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் மதியச்சாப்பாடு சாப்பிடச் சென்றனர்.

“மணி 3 ஆகிருச்சு… இப்பத்தான் சாப்பிடப்போகுதுங்க… 2 மணிக்கு சாப்பிடப் போங்கன்னு சொன்னா, ஜனா வந்திரட்டும்னு சொல்லிடுச்சுங்க. வயசுப்பிள்ளைங்க காலா காலத்துல சாப்பிட்டா தான தெம்பிருக்கும்? காலையில 9 மணிக்கு வந்தப் பிள்ளைங்க நைட் பத்து மணிக்கு தான் வீடு திரும்புதுங்க… இவ்வளவு லேட்டா சாப்பிட்டா எப்படி?”  என்று யாஸ்மீன் அக்கா மாரிச்செல்வி அக்காவிடம் குறைபட்டுக் கொண்டார்.

“நானும் சொல்லிப் பார்த்துட்டேன் யாஸ் அக்கா… இந்தப் பிள்ளைங்க கேட்க மாட்டிக்கிதுங்க.” என்று பாலன் சொல்ல,

“அதுங்களுக்கு ஒண்ணா சேர்ந்து சாப்பிட்டா தான் சாப்பிட்டது மாதிரி இருக்குமாம். அந்த பிஸ்கட் குடோன்ல உட்கார்ந்து அரட்டையடிச்சிக்கிட்டே சாப்பிட்டா தான் அதுங்களுக்கு நிம்மதி. விடுங்க தம்பி. கால்கட்டு போட்டுக்கிற வரை என்ஜாய் பண்ணட்டும். அந்த டிக்கெட்டுகளால தான் கடையே களைகட்டது…” என்று இளவட்டங்களுக்கு பரிந்து பேசினார் பானு.

அவர் கூறியது மிகச் சரி என்று நிரூபிக்கும் வகையில் அந்த மதிய வேளையின் சோம்பேறித்தனமான அமைதியை… தூக்கம் கண்களைத் தழுவும் கணங்களை விரட்டிவிடும்படி பிஸ்கட் குட்டவுனில் இருந்து பேச்சுச் சத்தம் பலமாகக் கேட்டது.

******

பிஸ்கட் குட்டவுனில்…

“எங்க அம்மா காலையில 5 மணிக்கு எழுந்து எனக்காக வடை சுட்டுச்சு தெரியுமா? எல்லா வடையையும் எடுத்துக்கிட்ட? எனக்கு ஒரு வடையை மட்டும் மிச்சம் வச்சிரு ஜனாண்ணா…” – ப்ரதீபா ஜனாவிடம் கெஞ்சினாள்.

“அப்படின்னா என்னோட உருளைக்கிழங்கை நீங்க காலி பண்ணிருக்கக் கூடாது… என்னோட அம்மாவும் காலையில 5 மணிக்கு எழுந்து தான் சமைக்க ஆரம்பிச்சாங்க…” – வடையை மென்றுகொண்டே சொன்னான் ஜனா.

“எங்களுக்கு அப்ப ரொம்ப பசிச்சது அண்ணே… அதான் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு முடிச்சோம்.” – ப்ரதீபா.

“அதே மாதிரி எனக்கு இப்ப பசிக்குது… ஆனா கரெக்டா நான் டெலிவரிக்கு போன நேரம் பார்த்து தினந்தினம் உங்க ரெண்டு பேருக்கும் பசிக்கிறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு…” என்ற ஜனா ப்ரதீபாவின் வடையை மட்டும் எடுக்கவில்லை. செல்வாவின் காலிப்ளவர் பொரியலையும் கனிசமான அளவில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தான் தனது தயிர் சாதத்தை சாப்பிடவே ஆரம்பித்தான்.

ஜனா சாப்பிட்டது போக தனது டப்பாவில் எஞ்சியதை செல்வலட்சுமி அடக்க ஒடுக்கமாய் சாப்பிட ப்ரதீபா தான் ஜனாவிடம் வாக்குவாதம் செய்தாள்.

“ஏன் இப்படி சாப்பாட்டு ராமனா இருக்க… எனக்கு ஒரு வடை வையீ…”- ப்ரதீபா.

“சாப்பாடு விஷயத்தில் எல்லாம் நான் கரெக்டா இருப்பேன்… வயித்த காயப்போடுற வேலை எல்லாம் எனக்கு செட் ஆகாது ப்ரதீபா…”

ப்ரதீபா முறைத்தாள்.

“சரி சரி ரொம்ப அழுற… போனா போகட்டும்… பொழச்சிப் போ…” என்ற ஜனா ஒரு வடையை பாதியாகப் பிய்த்து ப்ரதீபாவின் டிப்பன் பாக்ஸ் மூடியில் வைத்தான்.

“ரொம்ப பெரிய மனசுண்ணே உனக்கு… வா செல்வலட்சுமி, நாம போய் ஒரு மிச்சர் பாக்கெட் வாங்கிட்டு வரலாம்.” என்று எழுந்தாள் ப்ரதீபா.

“மிச்சர் பாக்கட்டா? அப்படியே உட்கார்ந்துரு. போன வாரம் தான அல்சர் வந்து வயித்த புடிச்சுக்கிட்டு இருந்த?” – ஜனா கோபப்பட்டான்.

“இந்த பாதி வடையை வச்சுக்கிட்டு நான் எப்படி சாப்பிடுறது? சோறே உள்ள இறங்காது ஜனா அண்ணா…”

“என்னமோ உங்க அம்மா 10 வடை வச்சு விட்ட மாதிரியும், அதுல ஒன்பது வடையை நான் தின்னுட்ட மாதிரியும் புலம்புற? உங்கம்மா 5 வடை தான் டிப்பன் பாக்ஸ்ல வச்சிருந்தது… ஆமா… இந்த 5 வடையை சுடத்தான் உன் அம்மா 5 மணிக்கே எழுந்திரிசிச்சா?”

“இப்ப வடை பஞ்சாயத்தே வேணாம்ணே… இன்னைக்கு மட்டும் மிச்சர் வாங்கிக்கிறோம்… ப்ளீஸ்ணே….”

“மிச்சர் கடைக்குப்போன… உங்க அண்ணனுக்கு போன் போட்டுருவேன்… அண்ணன் நம்பர் 1 க்கு கால் செய்யவா? இல்ல 2,3,4க்கு கால் செய்யவா?” (ப்ரதீபாவிற்கு நான்கு அண்ணன்கள்… )

“அவனுங்களுக்கு கால் பண்ணி என்ன சொல்லப் போற? மிச்சர் வாங்குறதுக்கு எல்லாம் அந்த தடியன்ங்க எதுவும் சொல்லமாட்டானுங்க… நான் என்னமோ சரக்கு பாட்டிலுக்கு மிச்சர் வாங்குற மாதிரி பேசுற? ஹா ஹா…”

“மிச்சர் பற்றி யார் சொல்லப் போறது? இந்த மேகி டீலர் வந்தான்-ல? அவன் கூட நீ சிரிச்சு சிரிச்சு பேசுறதை அப்படியே போட்டுக் கொடுத்துடுவேன்…”

“அண்ணே இது ரொம்ப ஓவர்…. அந்த ஆளுக்கு 35 வயசு எனக்கு 19 வயசு…”

“உன்னோட அண்ணனுங்க மேகி டீலரோட வயசை கேட்கப் போறது இல்லயே… எடுத்ததுமே ஆக்ஷன்ல இறங்கிடுவான்கல?”

“என்ன ஆக்ஷன் ஜனா அண்ணா?” என்று பிள்ளைப்பூச்சி செல்வலட்சுமி கேலியாகக் கேட்க,

“அடி, உதை, குத்து தான்… நாலு உதை உதைச்சப்பொறவு தான் ‘எதுக்கு மேகி டீலரைப் பார்த்து சிரிச்ச’-ன்னு ப்ரதீபாவோட அண்ணனுங்க கேள்வியே கேட்பானுங்க…” என்று சொல்லிச் சிரித்தான் ஜனா.

கடந்த நான்கு நாட்களாக சிரிக்கவே மறந்து போயிருந்த ஜனா அன்று தான் சிரித்தான்.

“ஜனா அண்ணா இப்படி எல்லாம் பிளாக் மெயில் பண்ணாத…” என்று கூறி சொத்தென்று மீண்டும் தரையில் அமர்ந்து வேகவேகமாக தனது தயிர் சாதத்தை சாப்பிட ஆரம்பித்தாள் ப்ரதீபா.

அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே தனது காலுக்கடியில் மறைத்து வைத்திருந்த தனது சிகப்பு நிற டிப்பன் பாக்ஸ்ஸை எடுத்து அவள் முன்னே வைத்தான் ஜனா.

“இது என்ன? இன்னொரு உருளைக்கிழங்கு பாக்ஸ்ஸை ஒளிச்சி வச்சிருந்தியா?” என்று கேட்டு டிப்பன் பாக்ஸ்ஸை திறந்தாள் ப்ரதீபா. அதில் உருளைக்கிழங்கு வறுவல் இருந்தது.

“இந்த ஜனா அண்ணா சரியான கேடிப்பா” என்று கூறிக்கொண்டே உருளைக்கிழங்கை தனது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஆரம்பித்தாள் ப்ரதீபா.

“ஏய் எனக்கும் கொடு ப்ரதீபா” என்று கேட்டு  செல்வலட்சுமியும் அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

“எனக்கு ஒரு வாய்கூட கொடுக்காம இந்த வெட்டு வெட்டிட்டு என்னை சாப்பாட்டு ராமன்னு சொல்லுங்க…” என்று ஜனா தனது உடன்பிறவா தங்கைகளை கேலி செய்தபோது, பிஸ்கட் குட்டவுன்னிற்குள் வந்த பாலன், “ப்ரதீபா… நீ சாப்பிட்டதும் நந்தினி பேக்கரிக்குப் போய் 5000 ரூபாய்க்கு பத்து ரூபா இருபது ரூபா தாள் வாங்கிட்டு வாயேன்…” என்றார்.

நந்தினி பேக்கரி என்ற பெயரைக் கேட்டதும் அந்த இடத்தில் இருந்து சத்தம்காட்டாமல் அப்படியே எழுந்துவிட்டான் ஜனா.

“நந்தினி பேக்கரிக்கு தான? நான் போகட்டுமா இல்ல ஜனா அண்ணாவை அனுப்பவா?” என்று நக்கலாக ப்ரதீபா கேட்க,

“வேணாம் ப்ரதீபா…” என்று ஜனா கோப்பட்டான்.

“இப்ப எதுக்கு ஜனா அண்ணா நீ கோபப்படுற? அந்தக் கடையில வேலை பார்க்கிறவங்க எல்லாம் உன் தங்கச்சி மாதிரி தான? உன் தங்கச்சிங்ககிட்ட கேட்குறதுக்கு எதுக்கு தயங்குற?”

“நிஷா வேணாம்… இத்தோட நிறுத்திக்கோ…”

“இப்ப என்ன சொன்ன? என்னை நிஷான்னு தான கூப்பிட்ட?” என்று ஜனாவை மடக்கினாள் ப்ரதீபா…

மடத்தனமாக ப்ரதீபாவின் முன்னிலையில் தான் செய்த தவறை உணர்ந்த ஜனா பிஸ்கட் குட்டவுன்னின் கதவைச் சாற்றிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

“நழுவாத ஜனா அண்ணா…” என்று ப்ரதீபாவின் குரல் சாற்றிய கதவின் வழியே சன்னமாக அவனைத் தொடரவும் பேட்டரி வண்டியை எடுத்துக்கொண்டு சேலம் நகரத்தைத் தாண்டி ஹைவே ரோட்டில் செல்ல ஆரம்பித்தான். அப்போது அவனது மனதில் ஓராயிரம் எண்ணங்கள்.

நிலா இல்லாத பகல் நேரத்து வானில் நிலாவைத் தேடும் குழந்தைபோல ஏதோ ஒன்றை அவனது மனம் தேடியது.

நிஷாவை சூப்பர்மார்கெட்டில் இருந்து விரட்டியடித்தப்பிறகு தனது மனம் இத்தனை வேதனைப்படும் என்று அவன் நினைத்துப் பார்த்ததும் இல்லை.

அன்றைய நாளில் எல்லாம் ஒரு வேகத்தில் நடந்து முடிந்துவிட்டது.

நடந்தவற்றை ‘முற்றும்’ என்று கூறி முடிக்கப் பார்க்கிறான்… ஆனால் உள்ளே இருந்து ஒரு குரல் ‘தொடரும்’ என்று கூறுவதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

கடந்த நான்கு நாட்களாக நந்தினி பேக்கரியின் பக்கமாகத் திரும்பிக் கூட பார்க்காமல் இருப்பவனிடம், ‘நிஷாகிட்ட சாரி கேளூ ஜனா’ என்று மனது ஒருபக்கம் அரித்தெடுக்க… மனதின் குரலை சென்சார் செய்ய அவன் அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தவேளையில் ப்ரதீபாவின் குத்தல் பேச்சு அவனது பொறுமையாவையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

அவனுக்கு எதிராக எல்லோரும் செயல்படுவதுபோல அவனது நினைவலைகளும் சூழ்ச்சி செய்தன.

நிஷாவை முதல் முதலாக நந்தினி பேக்கிரியில் அவன் பார்த்த நாள் அவனது நினைவலைகளில்…

ஒரு வருடம் முன்பாக…

****

Advertisement