Advertisement

அன்று:

வேலவன் சூப்பர்மார்கெட்டில் நிஷாவின் முதல் நாள்:

நிஷாவின் முதல் நாள் வேலை அவளுக்கு சற்று கடினமாக இருந்தது. பலசரக்கு சாமான்களின் பெயர்களைப் படிக்கவும், அவற்றின் அளவுகளைத் தெரிந்து கொள்ளவும் அவள் கொஞ்சம் சிரமப்பட்டாள். முதல் இரண்டு நாட்கள் பாக்கெட் போடும் செக்ஷனில் சிறிது நேரம் பாக்கெட் போடச் சொன்னார் பாலன்.

அடுத்த இரண்டு தினங்களில் அவளுக்கு சரக்குகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைக் கொடுத்தார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அந்த சரக்குகளை ராக்குகளில் (rack-களில்) அடுக்கும் விதத்தை சொல்லிக் கொடுத்தார். இப்படி பத்து நாட்கள் சிறிது சிறிதாக நிஷாவை கடையின் வேலைகளுக்கு பழக்கினார் பாலன்.

இன்னும் சில நுணுக்கமான வேலைகளை கற்றுக் கொடுக்க அவருக்கு நேரம் போதவில்லை.

“ஏய் ஜனா, அந்த புதுப்பிள்ளைக்கு நாட்டுச் சக்கரை பாக்கெட்டை எல்லாம் எப்படி அடுக்கணும்னு சொல்லிக் கொடுத்துடுடா… அந்த பாக்கெட் எல்லாம் சரிஞ்சி விழாமல் அடுக்கச் சொல்லிக்கொடு. அப்புறம் முந்திரிபருப்பு, ஏலக்காய், பிரியாணி சாமான் எல்லாம் பாக்கெட் போட்டு வச்சிருக்காங்க. அந்த சரக்கை இரும்பு டிராலியில எடுத்துட்டு வந்து ராக்குல மொத்தமா அடுக்க வச்சிடு. எண்ணெய் பாக்கெட், மாவு பாக்கெட் எல்லாம் நீ பாத்துப்ப… மத்த வெயிட் இல்லாத சரக்குகளை இந்த பிள்ளையை வச்சி அடுக்கி விடுடா… உனக்கும் வேலை ஈஸியா இருக்கும்… யாஸ் அக்காவுக்கும் வேலை ஈஸியா இருக்கும்.” என்று பாலன் சொல்ல,

“சரி அண்ணே.” என்றான் ஜனா.

“அப்படியே வாட்ஸ் ஆப்ல கஸ்டமர் அனுப்புற லிஸ்ட்களுக்கு ப்ரியாகிட்ட கொடுத்து பில் வாங்கிக்கச் சொல்லு… பில் வாங்கிட்டு…”

“பில்லைப் பார்த்து சாமான் எடுக்கச்சொல்லணும்… அப்புறம் அதை டெலிவரிக்கு பேக் செய்யச் சொல்லணுமா… ஆகற வேலையைப் பாருங்கண்ணே…”

“ஏன்டா? அவ செஞ்சிறமாட்டாளா?”

“அண்ணே அவசரப்படாதீங்க… டெலிவரிக்கு பேக் செய்ய எல்லாம் அவளால இப்ப பழக முடியாது… அது பழக இன்னும் ஒரு வாரம் ஆகும்ன்னே… இப்பத்தான் அந்த பிள்ளைக்கு துவரம் பருப்பு எது… கல்லப்பருப்பு எதுன்னே தெரியிது….”

“அப்படியா?”

“ஆமாண்ணே. அன்னிக்கு பாக்கெட் போடும்போது ரொம்ப திண்டாடிருச்சு… துவரம் பருப்பையும் கல்லப்பருப்பையும் பாக்கெட் போட்டுட்டு எல்லாத்தையும் கலந்து வச்சிடுச்சு. அதனால வாட்ஸ்ஆப் சரக்குகளை எடுக்கிற வேலைய மட்டும் இப்போதைக்கு அவகிட்ட கொடுக்காதீங்க. பாசிப்பருப்பு கேட்டா பாசி பயறு எடுத்து வச்சுருவா… கல்லப்பருப்பு கேட்டா துவரம் பருப்பை பேக் பண்ணிடுவா. நமக்கு ரெண்டு வேலை… ப்ரியா கல்யாணம் ஆகிப் போறதுக்குள்ள டிரெயின் பண்ண நினைக்காதீங்க… ப்ரியா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு இருபது இருக்குல? இன்னும் ஒரு வாரம் ஆகட்டும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழக்கிடலாம்.”

“சரி சரி… நீ பாத்துக்கோ… இனிமே அந்தப் பிள்ளையை டிரெயின் பண்ண வேண்டியது உன் வேலை.” என்று ஜனாவின் கையில் நூர்நிஷாவை ஒப்படைத்தார் பாலன்.

“அதெல்லாம் ஒரு மாசம் தான். பக்காவா டிரெயின் பண்ணிடலாம் பாலண்ணே.” என்றான் ஜனா.

ஆனால் பாடம் நடத்துகுறேன் என்ற பேரில் நிஷாவை ஜனா டார்ச்சர் செய்யவில்லை.

“மெதுவா கத்துக்கோ… போதும். தெரியாத விஷயத்தை கேட்டு தெரிஞ்சிக்கோ…” என்று ஜனா சொன்னபோது அந்த பெரிய சூப்பர்மார்கெட்டைப் பார்த்து மிகவும் பயந்திருந்த நிஷாவின் பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.

அன்று இரவு பத்து மணிக்கு தங்களது வாகனங்களை எடுக்க ஜனாவும் செல்வலட்சுமியும் சந்துக்குள் நுழைந்தனர்.

ஜனாவின் பைக்கின் மீது சாத்தி வைக்கப்பட்டிருந்த பச்சை நிற சைக்கிள் ஒன்றை அப்போது தான் கண்டாள் ப்ரதீபா.

“என்ன ஜனா, உன் பைக் மேல பச்சை கலர் சைக்கிள் படுத்துருக்கு? யாருக்கும் உன் பைக்கை வாடகைக்கு விட்டுருக்கியா?” என்று ப்ரதீபா கேட்க,

“இது ஒரு தொல்லை ப்ரதீபா… அந்த சைக்கிளுக்கு ஸ்டான்ட் கிடையாது. அதான் அதை என் பைக் மேல சாச்சி வச்சிருக்காங்க. யார் சைக்கிளுன்னு தெரியல. இப்ப கொஞ்ச நாளா தான் இந்த சைக்கிளை கண்ணுல பார்க்கறேன்…” என்றபடியே அந்த பச்சை நிற சைக்கிளை நகர்த்தி சுவர் பக்கமாக ஜனா வைத்தபோது அந்த சந்துக்குள் நிஷா நுழைந்தாள்.

வேகமாக பச்சை நிற சைக்கிளின் அருகே வந்தவள், “சாரி இது என்னோட சைக்கிள் தான்… ஸ்டான்ட் மாற்றணும்… 900 ரூபா கேட்குறாங்க… அதான்..” என்றாள். நிஷாவின் மேல் பரிதாபப்பட்டு,

“சரி சரி பரவாயில்ல… நீ எந்த ஏரியா?” என்று கேட்டான் ஜனா.

“நிர்மலா ஸ்கூல் தெரு தான்…” – நிஷா.

“சரி கவனமா போ…”

“சரிங்க சார்…”

“கடை வேலை கஷ்டமா இல்லையில? வேலையில டிரெயின் ஆக கொஞ்ச நாள் பிடிக்கும்… ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லிடு.”

“இல்ல… நீங்க பொறுமையா சொல்லிக்கொடுக்கிறீங்க… எதுவும் பிரச்சனையா இல்ல ஜனா சார்…” என்று சிரித்துக்கொண்டே சொன்ன நிஷா தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

சூப்பர்மார்கெட்டில் தன்னை டிரெயின் செய்த ஜனாவே தான்  வேலையைவிட்டு நிற்பதற்கு ஒரு நாள் காரணமாகிப் போவான் என்று நிஷா அப்போது நினைக்கவில்லை.

நிகழ்காலத்தையும் ஏற்க முடியாமல் கடந்த காலத்தையும் மறக்க முடியாமல் நிஷா நந்தினி பேக்கரியில் ஜனாவுடன் தனது முதல் நாளை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “அக்கா வெஜ் பிட்சா இருக்காக்கா? நந்தினி பேக்கிரியில இருக்கும்னு சொன்னாங்களே?” என்று கேட்டு ஒரு சிறுவன் வந்தான்.

கடந்த கால நினைவுகளில் இருந்து விடுபட்டு, “இருக்குப்பா… வெஜ் பிட்சா வேணுமா? வெஜ் சீஸ் பிட்சா வேணுமா?” என்று கேட்டாள் நிஷா.

*****

மணி 12

இன்று…

கஸ்டமருக்கு பில் போட்டுக்கொண்டே செல்வலட்சுமி சரக்குகளை சரி பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள். ப்ரதீபா ஜி.எஸ்.டி பில்லைத் திறந்து வைத்துக் கொண்டு திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஜி.எஸ்.டி-பில் எடுத்துட்டியா?” என்று செல்வலட்சுமி கேட்க…

“ஒண்ணுமே புரியல பா.. பாலண்ணா வந்தா தான் வேலை ஆகும். நிஷா நம்ம கடையைவிட்டுப் போயி நாலு நாள் ஆச்சு… அவளுக்கு பேக்கரி வேலை செட் ஆகாது… இந்த ஜனா அண்ணாவுக்கு மனசாட்சியே இல்ல…”- ப்ரதீபா புலம்பினாள்.

ப்ரதீபாவின் புலம்பலைக் கேட்டுக்கொண்டே, “மண்டவெல்லம் கால் கிலோ, பச்சரிசி ஒரு கிலோ… வேற எதுவும் வேணுமா சார்?” என்று செல்வலட்சுமி கஸ்டமரிடம் கேட்க, “அவ்ளோ தான்மா. பில் போடலாம்.” என்றார் கஸ்டமர். அவருக்கு பில் போட்டுவிட்டு அவர் கொடுத்த பணத்திற்கு மிச்சத்தை கொடுத்துவிட்டு தனது கால்களை கம்ப்யு+ட்டர் டேபிளிற்கு அடியில் லேசாக நீட்டிக்கொண்டு அமர்ந்தாள் செல்வலட்சுமி.

“செல்வா அந்த ஸ்டாப்ளரைக் கொடேன்… பில்லை பின் அடிக்கணும்.” என்று ப்ரதீபா சொல்ல அவளது கையில் ஸ்டாப்ளரை எடுத்துக்கொடுத்த செல்வலட்சுமி,

“ப்பா.. காலையிருந்து உச்சா கூட போல… இன்னிக்கி கஸ்டமர் கம்மி தான்… ஆனா பாலண்ணா இல்லாமல் இடத்தைவிட்டு நகரமுடியலயே?” – செல்வலட்சுமி.

“வசூலுக்குப் போன பாலண்ணா ஏன் இன்னும் வரல?” ப்ரதீபா கேட்டாள்.

“தெரியலப்பா… அவர் போயி கால் மணி நேரம் ஆச்சு… இனியும் அவருக்காக வெயிட் பண்ண முடியாது. நான் போய் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன். பாத்ரூம் போயிட்டு வந்தப்பிறகு தான் ‘விக்ஸ்’ ‘ஜன்டூபாம்’ ராக்கை அடுக்கணும். ரெண்டு நாள் முன்னே வந்த சரக்கு… இன்னும் அடுக்காமல் இருக்கு…” என்று கூறிவிட்டு செல்வா எழுந்தபோது,

“நானும் வரேன்… எனக்கும் பாத்ரூம் போணும்.” என்று ப்ரதீபாவும் எழுந்தாள். அவளால் அதற்குமேல் ஜி.எஸ்.டி பில்லுடன் போராட முடியவில்லை.

“நீ இங்க இரு. கல்லாவுல ஆள் இல்லையில?” – செல்வலட்சுமி.

“பானு அக்கா இருக்காங்கல?” என்று கேட்ட ப்ரதீபா, “பானு அக்கா கொஞ்ச நேரம் கல்லாவுக்கு வாங்களேன் பாத்ரூம் போயிட்டு வர்றேன்…” என்று பானு அக்காவிடம் கூறி கல்லாவுக்கு ஆள் தயார் செய்த ப்ரதீபா, “இப்ப நாம போலாம்பா.” என்றாள்.

“சரி வா…” என்று கூறிய செல்வலட்சுமி ப்ரதீபாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்புறமாக கடைக்கோடியில் இருந்த பாத்ரூமிற்குச் சென்றாள். இருவரும் பாத்ரூம் போய்விட்டு வந்தபிறகு செல்வா மீண்டும் பில் போட ஆரம்பிக்க ப்ரதீபா மீண்டும் ஜிஎஸ்டி பில்லை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

சரியாக அந்நேரம் தான் பாலனும் கடைக்குள் வந்தார். வந்து கம்ப்யூட்டரை செக் செய்தார்.

“என்னப்பா இன்னைக்கு காலைல இருந்து ரெண்டு மூணு கஸ்டமர் தான் வந்திருக்காங்க…” என்று செல்வலட்சுமியிடம் கேள்வி கேட்டுவிட்டு, “20 தேதி ஆயிடுச்சு இல்ல… இனிமே ஒன்னாம் தேதி வரை இப்படித்தான் டல்லா இருக்கும்.” என்று பதிலையும் கூறினார் பாலன்.

பத்து நிமிடங்கள் கடந்தன.

வாடிக்கையாளர்கள் இல்லாததால் மீண்டும் போர் அடித்திட,

“பசிக்கிற மாதிரி இருக்கு இல்ல?” என்று ப்ரதீபா சொல்ல அவளின் அருகே அமர்ந்திருந்த செல்வலட்சுமியும்,

“மணி 1 கூட ஆகலப்பா.” என்றாள்.

“பரவாயில்ல… ஜனாண்ணா என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்குன்னு போய் பாத்துட்டு வா…” என்று ப்ரதீபா சாப்பாட்டு ஆசையை ஏற்றிவிட, செல்வலட்சுமி ஓடிச்சென்று ஜனாவின் சாப்பாட்டு பேக்கை எடுத்துக் கொண்டு வந்தாள்.

டிப்பன் பாக்ஸ்களை திறந்தபோது மணக்க மணக்க உருளைக்கிழங்கு வறுவல் ஒரு டப்பாவில் இருந்தது. தயிர் சோறும் மாங்காய் ஊறுகாயும் மற்றொரு டப்பாவில் அடைக்கப்பட்டிருந்தது.

“தயிர் சோறு… ஊறுகா… உருளைக்கிழங்கு வறுவல்.”- செல்வலட்சுமி கண்ணால் பார்த்து வாயால் படித்தாள்.

“சோத்தை ஜனாவுக்கு வச்சிரு. உருளைக்கிழங்கை மட்டும் நாம சாப்பிடலாமா?” – ப்ரதீபா.

“சரி எனக்கும் பசிக்கிற மாதிரி தான் இருக்கு” என்று செல்வலட்சுமி உருளைக்கிழங்கைப் பார்த்துச் சொல்ல, “ஜனா பாக்ஸ்ஸை எடுக்காதீங்க…” என்று பாலன் கட்டளையிட்டார்.

“மாட்டுனோம்டா சாமி…” என்று ப்ரதீபா முணுமுணுத்தாலும் அந்தக்கூட்டணி பின்வாங்குவதாக இல்லை… உருளைக்கிழங்கின் முன்னே பாலனின் குரல் தோற்றுப்போனது…

“கொஞ்சோன்டி தான் சாப்பிடுவோம் பாலண்ணா…” என்று ப்ரதீபா கெஞ்சும் குரலில் சொல்ல…

“சரி சரி, பண்ற தப்பை ஒழுங்கா செய்ங்க” என்றார் பாலன்.

இரண்டும் திருதிருவென முழித்தன.

 “கையை கழுவிட்டு சாப்பிடுங்க” என்று பாலனின் குரல் மீண்டும் கட்டளையிட்டது.

உடனே இருவரும் கையை கழுவிக்கொண்டு வந்தார்கள்.

ப்ரதீபா தான் ஆரம்பித்து வைத்தாள்.

செல்வலட்சுமியின் கையில் இருந்த டிப்பன் பாக்ஸிற்குள் கையை விட்டாள். உருளைக்கிழங்கை எடுத்து ஒரு வாய் அள்ளி வாய்க்குள் போட்டாள்.

அடுத்ததாக செல்வலட்சுமியின் கை…

5 நிமிடங்கள் கழித்து குற்றம் நடந்த இடத்தில் இருந்த தடயத்தை எல்லாம் அழித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

****

Advertisement