Advertisement

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக….

*******

காலை ஏழு மணி:

காய்கறி மார்கெட்…

ப்ரதீபாவின் அன்னை தேவியும் செல்வலட்சுமியின் அன்னை திலகமும் இருவரையும் அழைத்துக் கொண்டு அன்று ஒரே ஆட்டோவில் காய்கறி மார்க்கெட் சென்றார்கள். வாரம் ஒருமுறை மொத்த மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்று மொத்தமாக காய்கறி வாங்குவது அவர்களது பழக்கம்.

ப்ரதீபாவின் அன்னை தேவி அங்கு எல்லோருக்கும் நல்ல பழக்கம். அவரைத் தெரியாத கடைக்காரர்களே இருக்க மாட்டார்கள்.

தனது சொந்தபந்தங்களின் மத்தியிலும் அவர்களின் இனத்தவர்களின் மத்தியிலும் தேவி அக்காவைத் தெரியாதவர்கள் மிகவும் சொற்பம் தான்.

அவர் மிகவும் பிரபலமாக இருந்தது இரண்டே இரண்டு காரணத்தினால் தான்.

ஒன்று அவர் மகளிர் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார். இரண்டாவது, தேவி அக்கா ஒரு மாஜி கவுன்சிலர். கவுன்சிலர் பதவி எல்லாம் அவரது திருமணத்திற்கு முந்தைய கதை. திருமணத்திற்குப் பிறகு இப்போது அரசியலில் இருந்து அவர் முற்றிலும் விலகி இருந்தாலும் தேவி அக்காவின் செல்வாக்கு குறையவில்லை.

தேவி அக்கா பிரபலமாக இருப்பதற்கு மூன்றாவது காரணமும் உண்டு. தேவி அக்காவிற்கு நான்கு மகன்கள் ஒரு மகள்(ப்ரதீபா). ஆண் வாரிசுகளை தலையில் வைத்துக்கொண்டாடுவார்கள் தேவி அக்காவின் இனத்தவர்கள். ஆண்பிள்ளை பிறந்தாலே கெடா வெட்டி பொங்கல் வைத்து பிரகண்டம் செய்பவார்கள் அவர்கள். அதனால் நான்கு ஆண் பிள்ளைகளை தேவி அக்கா பெற்றெடுத்தது அவரை இன்னும் பிரபலமாக்கியது.

“ஏய்… அந்த அக்காவுக்கு நாலு பசங்க… ஒரு பொண்ணு…”

“அப்படியா? யோகக்கார அக்கா தான். நாலு ஆம்பளப்புள்ளைகளும் சேர்ந்து தங்கச்சியோட கல்யாணத்தை முடிச்சிடுவாங்க… நாலு பசங்க இருக்கும்போது வருமானத்துக்கு என்ன குறை? கால்மேல கால் போட்டு ஜம்முன்னு இருக்கலாம்…” என்று அக்கம் பக்கம் வீட்டில் இருந்த பெண்கள் பேசியது தேவி அக்காவின் காதில் கூட விழுந்திருக்கிறது.

ஆனால் இந்த பெயர் புகழை எல்லாம் அவர் பெரியதாக எடுத்துக்கொண்டதே இல்லை. மகன்களின் வருமானத்தையும் அவர் தொட்டதில்லை. முதல் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடித்த கையோடு அவர்களை தனிக்குடித்தனம் வைத்தவர் மகன்களின் சம்பாத்தியத்தில் இன்றுவரை அரிசி பருப்புகூட வாங்கியதில்லை. தேவி அக்காவின் கணவரும் குணத்தில் தேவி அக்காவைப் போலத்தான்.

தனது குணத்தால் அனைவரிடமும் தேவி அக்கா நல்ல பெயரையும் நல்மதிப்பையும் சம்பாதித்து வைத்திருந்தார். தேவி அக்காவை எதிர்த்து நிற்கும் ஒரே ஒரு ஜீவன் அவரது மகள் ப்ரதீபா மட்டும் தான். கடைக்குட்டிச் சிங்கமாக பிறக்க வேண்டிய ப்ரதீபா தப்பித் தவறி ஜான்சி ராணியாகப் பிறந்துவிட்டாள். தேவி அக்காவிடம் சரிக்கு சரி சண்டையிடுவாள். வாய் பேசுவாள். ப்ரதீபா வீட்டில் இருக்கும்போது வீடே அமளிதுமளியாக இருக்கும்.

ஆக மொத்தம் பணம் காசுடன் செழிப்பாக இல்லாவிட்டாலும் அன்பான கணவன், ஒழுக்கமான மகன்கள், துடுக்கான மகள் என நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் தேவி அக்கா.

தேவியும் திலகமும் பெரிய பெரிய கட்டைப் பைகளுடன் காய்கறி மார்க்கெட்டுக்குள் இறங்கியதும் அறிந்தவர் தெரிந்தவர் என கண்ணில் பட்டவர்கள் அனைவரிடமும் கதைபேசியபடியே காய்கறிகளை வாங்க ஆரம்பித்தனர். பெரியவர்களின் உரையாடலில் கலந்துகொள்ளாமல் ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் தங்களுக்குள் ரகசியமாக கதை பேசிக்கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

“தேவி அண்ணி நல்லா இருக்கீங்களா?” என்ற குரல் கேட்டு ப்ரதீபாவின் அன்னை தேவி திரும்பினார்.

“அட… கருப்பு அண்ணே சம்சாரமா? நல்லா இருக்கியா மதினி?” என்று கேட்டார் தேவி.

“நல்லா இருக்கேன் அண்ணி” என்று கருப்பசாமியின் சம்சாரம் விசாலம் சொல்ல, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நூர்நிஷா சற்று முன்னே வந்தாள். கருப்பசாமி- விசாலம் தம்பதியின் ஒரே மகள் தான் நூர்நிஷா.

அவ்விடத்தில் ப்ரதீபாவையும் செல்வலட்சுமியையும் பார்த்துவிட்டு லேசாக சிரித்தாள் நூர்நிஷா.

“இதுதான் உங்க பொண்ணா?” என்று விசாலம் செல்வலெட்சுமியைக் காட்டிக் கேட்க ப்ரதீபாவின் பக்கமாக கை நீட்டிய தேவி,

“இது தான் என் பொண்ணு மதினி… பேரு ப்ரதீபா… அது எங்க பங்காளி வீட்டுப் பொண்ணு… பேரு செல்வலட்சுமி…” என்றார்.

“அம்மா… நான் வேலை பார்க்கிற கடைக்குப் பக்கத்துல இருக்கிற சூப்பர்மார்கெட்டுல தான் இவுங்க வேலை பார்க்கிறாங்க…” என்று நூர்நிஷா அமைதியான குரலில் விசாலத்திடம் கூறினாள்.

விசாலம் “அப்படியா” என்று கேட்க,

“ஓ? நீ எங்க வேலை பார்க்கிற?” என்று தேவி நூர்நிஷாவிடம் கேட்டார்.

“நந்தினி பேக்கரில…”-நிஷா.

“உன் பேரு என்னடா?”

“நூர்நிஷா. எல்லாரும் நிஷான்னு கூப்பிடுவாங்க.”

“ஆமா ஆமா… உனக்குப் பேரு வைக்கிறப்ப நானும் வந்திருக்கேன்… கருப்பு தன்னோட பொண்ணுக்கு முஸ்லிம் பேரு வச்சிருக்கான்னு காயத்ரி தெருவெல்லாம் சொல்லிட்டு திரிஞ்சது… எத்தனை வருஷம் ஆச்சு? நேத்து நடந்த மாதிரி இருக்கு…”

“ஆசை ஆசையா பேரு வச்சாரு. ஆனா இப்படி அள்பாயிசுல போயிட்டாரே அண்ணி… அவர் சாகும்போது இவளுக்கு 8 வயசு…” – நிஷாவின் அன்னை.

“சரி சரி… தைரியமா இருங்க… கருப்பு அண்ணே எங்க போயிரும்? உங்க கூடவே தான் இருக்கப்போகுது. கருப்பசாமி அண்ணனுக்கு இன்னொரு அண்ணன் இருந்தாருல?”

“ம்… அவரோட அண்ணன் எங்களுக்கு எல்லா உதவியும் செஞ்சாரு.. ஆனா திடீர்னு அவரோட பையன் ஆக்சிடென்ட்ல செத்துட்டான்… அதுல இருந்து அவரே நடைபிணமாகிட்டாரு. அவருக்கு துணையா இருக்கலாம்னு தான் நாங்க திண்டிவனத்துல இருந்து சேலத்துக்கு வந்தோம்… வந்து ஆறு மாசம் ஆச்சு…”

“யாரு? திலீப்பா இறந்தது? எனக்கு விஷயம் தெரியாதே…”

“பத்து மாசம் முன்னே தான் திலீப்புக்கு ஆக்சிடென்ட் ஆச்சு… உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்…”

“கடவுள் ஏன் தான் இப்படி சோதிக்கிறாறோ?”

“பெரிப்பா பையனா இருந்தாலும் நிஷாவை சொந்த தங்கச்சி மாதிரி தினேஷ் பார்த்துக்கும்… அவன் போனதுல இருந்து நிஷா ரொம்ப உடைஞ்சிபோயிட்டா… திலிப்பைத் தவிர யாரையும் அண்ணான்னு கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா… ஆம்பளத் துணையா இருந்த ஒத்த உசுரும் எங்களை விட்டுப் போயிடுச்சு…”

“வருத்தப்படாதீங்க அண்ணி… நாம ஒரு கணக்குப் போட்டா அந்த கடவுள் இன்னொரு கணக்குப்போடுறாரு. புள்ளயை இவ்வளவு தூரத்துக்கு வளத்துட்டீங்க… பாதி கடல் தாண்டிட்டீங்க… இவளை நல்லவன் கையில பிடிச்சிக் கொடுத்தா மீதி கடலையும் தாண்டிடலாம்…” என்ற தேவி, “காய்கறி வாங்கிட்டியா மதினி?” என்று வேறு பேச்சிற்கு தாவினார்.

“ம்… ஆச்சு… பஸ் பிடிக்கத்தான் கிளம்பிட்டு இருந்தேன்.” என்ற விசாலம்,

“அட மினி பஸ் வந்திடுச்சு. நான் கிளம்பட்டுமா?” என்று தேவியிடம் கேட்டார்.

 “வா, நாங்களும் உன்கூட பஸ் ஸ்டாப் வரை வர்றோம்.” என்று தேவி சொல்லிட அனைவரும் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தனர். மீண்டும் பேச்சு ஆரம்பித்தது.

“உன் பொண்ணு நிஷா என்ன படிச்சிருக்கு?”

“ப்ளஸ் டூ தான் முடிச்சா அண்ணி. அதுக்கப்புறம் படிக்க மாட்டேனுட்டா. டெய்லரிங் படிச்சா… இரண்டு வருஷமா நிஷா ஒரு டெய்லர் கடையில வேலை பார்த்தா… நல்லா ப்ளவுஸ் தைப்பா… ஆனா அந்த வேலையில சம்பளம் கட்டல…. வேலையும் அதிகம். ஒரு நாளைக்கு 4 ப்ளவுஸ் தைக்கணும்… நைட்டெல்லாம் முழுச்சி தைக்கிற மாதிரி ஆகிடுச்சு. அதான் அந்த வேலையை விடச் சொல்லிட்டேன். பேக்கரியில வேலைக்குப் போய் சேர்ந்தா… ஆனா அவளுக்கு அந்த பேக்கரியில் வேலை செட் ஆகல… அந்த ஸ்வீட் வாடை எதுவுமே அவளுக்கு ஒத்து வரல.”

“வேலவன் சூப்பர் மார்க்கெட்ல தான் இவளுங்க வேலை பார்க்கிறாளுங்க. பாலன் முதலாளி குனத்துல தங்கம்…”

“ஆமா… நானும் கேள்விப்பட்டேன். வள்ளி அக்கா பையன் அருண்கூட அங்கதான வேலை பார்க்கிறாப்ல?” என்று ப்ரதீபாவைப் பார்த்து விசாலம் கேட்க,

“ஆமா ஆன்ட்டி. அருண் அண்ணன் அங்க தான் வேலை பார்க்குறாரு…” என்றாள் ப்ரதீபா.

“உங்களுக்கு வேலை எல்லாம் செட் ஆயிடுச்சாப்பா?” என்று இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக் கேட்டார் நிஷாவின் அன்னை விசாலம்.

“அதெல்லாம் ஜாலியா போகுது ஆன்ட்டி. நாங்களும் ப்ளஸ் டூ வரை தான் படிச்சோம்… இப்ப நாங்க வேலைக்கு சேர்ந்து மூணு வருஷம் ஆகப்போகுது…”

“நிஷா பேக்கரியில வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் தான் ஆகுது. அடுத்த மாசம் கணக்கை முடிச்சு வேலையை விட்டு நின்னுருன்னு சொல்லிருக்கேன். இந்த ஆறு மாசமா பயங்கர கஷ்டம் அண்ணி… என்ன… இவ வேலைக்கு போனா வீட்டு வாடகைக்கு… மல்லிகை சாமானுக்கு அல்லாட வேண்டியது இல்ல… என்னோட சம்பாத்தியத்துல கொஞ்சம் நகை நட்டாவது வாங்குவேன்…”

“எதுக்கு வேலையை விட்டு நிக்கணும்னு நினைக்கிற? வேற கடையில வேலைக்குச் சேரு… இந்த கடை செட் ஆகலைனா இன்னொரு கடை கிடைக்காம போகாது. எத்தனை இடத்தில் போர்டு போட்டு இருக்காங்க தெரியுமா?”- தேவி சொன்னார்.

“தெரிஞ்ச இடமா இருந்தா நல்லா இருக்கும்னு பார்த்தேன் தேவி அண்ணி. ஒத்தப்பிள்ளை வச்சிருக்கேன்… அதான்… யாரையும் நம்பி வேலைக்கு அனுப்ப முடியல. கொஞ்சம் பணம் காசு சேர்த்து டெய்லர் கடை போடலாமான்னு யோசிக்கறேன்… கடை போடலாம்னு பார்த்தா… பகடியா லட்ச ரூபா கேட்குறாங்க. அதான் அகலக்கால் வைக்க யோசனையா இருக்கு.”

“பொறு, அவசரப்படாத…” என்று நிஷாவின் அன்னையிடம் சொன்ன தேவி தன் அருகே நிற்கும் செல்வலட்சுமியிடம், “ஏ பிள்ளைங்களா… உங்க சூப்பர் மார்க்கெட்டில் ஆள் தேவைன்னு போர்டு போட்டு இருக்காங்கல?” என்று கேட்டார்.

“ஆமா… ஆனா டெலிவரிக்குத்தான் ஆள் தேவையா இருக்கும்மா… வேலைக்கு அதிகமா ஆள் சேர்த்தா சம்பளம் கொடுக்க முடியாதுன்னு எங்க பாலன் அண்ணன் சொல்லுவாரு.” – ப்ரதீபா தனது அன்னை தேவியிடம் சொன்னாள்.

“ஏய்… அடுத்த மாசம் ப்ரியா கல்யாணம் ஆகி போய்டுவா-ல? அதுக்குள்ள ஒரு பிள்ளையை பழக்கிட்டீங்கன்னா நல்லதுல? ப்ரியா பார்க்குற வேலையை நிஷா பார்க்கப் போறா.. உங்க முதலாளிகிட்ட சொல்லிப் பாருங்களேன்.” – தேவி.

“ஆமா மா… அது ஒன்னு இருக்கு… அதனால கேட்டுப் பார்க்கலாம். நாளைக்கு கேட்டுச் சொல்றேன்.” -ப்ரதீபா.

“ரொம்ப நல்லது டா… மறக்காம உங்க முதலாளி என்ன சொன்னார்ன்னு நிஷா பேக்கரியில் தான இருப்பா? அவகிட்ட சொல்லி விடு.” என்று கூறிக்கொண்டே மினி பஸ்ஸில் ஏறினார் நிஷாவின் அன்னை.

பஸ் புறப்பட்டது.

அடுத்த நான்கே தினங்களில் பேக்கரியில் கணக்கை முடித்துவிட்டு நூர்நிஷா வேலவன் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தாள்.

****

Advertisement