Advertisement

அத்தியாயம் 2

15 அரிசி மூடைகளை குடோன் வாசலில் வைத்தப்பிறகு தான் ப்ரதீபா இன்னொரு கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.

ப்ரதீபா சடச்சடவென குமார் அண்ணன் சொன்ன சரக்குகளுக்கு பில் போட, செல்வி அக்கா அவரது சரக்குகளை எடைபோட்டு அவரிடம் கொடுத்தார்.

“தவுடு, புண்ணாக்கு எல்லாம் விற்கிறது இல்லையா?” என்று சிரித்துக்கொண்டே பில் போட்டுக்கொண்டிருந்த ப்ரதீபாவிடம் குமார் அண்ணன் கேட்க,

“எங்க சூப்பர்மார்கெட்டை என்னன்னு நினைச்சீங்க?” என்று  குமார் அண்ணனிடம் சண்டைக்கு வந்தாள் ப்ரதீபா. அவளது கோபத்தை கண்டுகொள்ளாமல், “உங்க ஓனர்கிட்ட தவுடு வாங்கி வைக்கச் சொல்லணும்… இவ்வளவு பெரிய சூப்பர்மார்கெட்டுல ப்ரதீபாவுக்கு பிடிச்ச ஐயிட்டம் இல்லாமல் இருக்க கூடாதுல?” என்று செல்வி அக்காவிடம் சிரித்துக்கொண்டே சொன்ன குமார் அண்ணனை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் ப்ரதீபா. அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே தனது பில்லுக்குரிய பணத்தை செல்வலட்சுமியிடம் கொடுத்துவிட்டு,

“சரி செல்வா, மத்தியானம் பார்க்கலாம்.” என்றபடி கடையை விட்டு வெளியேறினார் குமார் அண்ணன்.

“குமார் அண்ணனுக்கு ஓவர் குசும்பு…” என்று பற்களைக் கடித்தபடி சொன்ன ப்ரதீபா தனது வேலையில் தனது கவனத்தை திருப்ப… வாசலில் இருந்த தனது செருப்பைப் போட்டுக்கொண்டே பாக்கெட் போடும் இடத்தை எட்டிப்பார்த்தார் குமார் அண்ணன்.

“ஜனா இரும்பு டிராலி எடுத்துட்டு வர்றியா? எடை போட்ட பருப்பு பாக்கெட்டுகளை ராக் (Rack) பக்கம் கொண்டு போயிடலாம்… ராக்ல பருப்பு, எண்ணெய் எல்லாம் தீர்ந்துபோச்சு… சரக்கு இல்லைனா கஸ்டமர் கம்ப்ளைன்ட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க டா.” என்று மாரிச்செல்வி அக்கா சொல்லவும்,

“சரி செல்விக்கா… இரும்பு டிராலி எடுத்துட்டு வர்றேன்.” என்ற ஜனா வேகமாக ஒரு டிராலியை எடுத்துக் கொண்டு வந்தான்.

அந்த இரும்பு டிராலியை ஜனா பாக்கெட் போடும் செக்ஷனுக்கு கொண்டு வர்ற, அதில் செல்வி அக்கா 30 துவரம் பருப்பு பாக்கெட்டுகளை அடுக்கிவிட்டு அதற்கு மேல் 10 ஃபார்ச்சூன் எண்ணெய் பாக்கெட்டுகளை  அடுக்கினார்.

பாக்கெட் போடும் இடத்தில் இருந்து டிராலியை ஜனா கடைக்குள் இழுத்துச் செல்ல ஆரம்பித்தபோது,

“ஜனா இந்த மூடையை மட்டும் பிரிச்சு கொடுத்திருப்பா… இப்பத் தான் பாக்கெட் போட உட்கார்ந்தேன்… என்னால எக்கிகிட்டு மூடையை பிரிக்க முடியல…” என்று யாஸ்மின் அக்கா வேலை கொடுக்க உடனே,

“சரி யாஸ் அக்கா.” என்று கூறி யாஸ்மின் அக்காவிற்கு பருப்பு மூடையை பிரித்துக் கொடுத்தான் ஜனா.

“ஜனா எங்கப்பா?” என்று அக்கடையின் முதலாளி பாலனின் குரல் கேட்கவும், “பாக்கெட் போடும் செக்ஷன்ல இருக்கேன்னே.. இதோ வர்றேன்.” என்று கத்திய ஜனாவின் வாயில் மிளகளவு கருப்பட்டித் துண்டு இருந்தது.

அவனது நாள் கருப்பட்டித் துண்டுடன் தான் தொடங்கும். கடைக்குள் நுழைந்ததும் மிளகளவு கருப்பட்டித் துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேதான் தனது வேலைகளை ஆரம்பிப்பான் ஜனா.

“ஜனா ஒரு நிமிஷம் வாயேன்” என்று பாலன் அவசரப்பட தனது நடையின் வேகத்தை கூட்டினான் ஜனா.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த குமார் அண்ணன், “இந்தக் கடைக்கு பத்து ஜனா இருந்தாலும் பத்தாது போலயே? ஆளாளுக்கு ஜனா… ஜனான்னு ஏலம் விடுறீங்க?” என்று கேட்டு பாலன் அருகே சென்றார்.

“அட வாங்க குமார் அண்ணே…” என்று பாலன் அவரை வரவேற்றார்.

“ம் ம்…” என்று சிரித்துக்கொண்டே தலையாட்டிய குமார் அண்ணன்,

“உனக்கு நல்ல வேலைக்காரப் பையன் கிடைச்சிருக்கான்ப்பா… 10 வருஷமா உன்கிட்டயே இருக்கான்ல? நீ யோகக்காரன்யா…” என்று கூறி பாலனின் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“ஆமாண்ணே… ஜனா மாதிரி வேலையாளு கிடைக்கிறது கஷ்டம்…” என்று கூறி பாலன் ஆமோதிக்க… அருண் ஆம்னி கார்-ஐ வாசலில் பார்க் செய்துவிட்டு பாலனிடம் வந்தான்.

“அடுத்த ஆளும் வந்தாச்சா? ஜனா வலது கைன்னா அருண் உனக்கு இடது கை… ஊர் கூடி தேர் இழுக்கிறதுன்னு சொல்வாங்க… நீ இந்த ரெண்டு சக்கரத்தை வச்சே சூப்பர்மார்கெட்டை இழுத்துட்டுப் போற பார்த்தியா… அது தான் உன் சாமர்த்தியம். குட் குட்…” என்று பாலனை பாராட்டிக்கொண்டே தனது டி.வி.எஸ் 50 வண்டியை நோக்கி நடந்தார் குமார் அண்ணன்.

“இந்த ரெண்டு பசங்களையும் இப்படியே எல்லாரும் கண் வச்சா என்ன பண்ண?” என்று சிரித்துக்கொண்டே பானு அக்கா கேட்க,

“அதான??” என்று கேள்வி கேட்டுவிட்டு, “ஆனா நல்ல மனசுக்காரங்க கண்ணு வச்சா கெடுதலா நடக்காது பானுக்கா” என்று முடித்தார் பாலன்.

பிறகு அருண்ணின் பக்கமாகத் திரும்பி, “என்ன அருண்… மண்டபத்துல சாமான் எல்லாம் ஏத்தியாச்சா?” என்று பாலன் கேட்க,

“எல்லாம் முடிஞ்சதுண்ணே… பேப்பர் கப் மட்டும் பத்தாதுன்னு நினைக்கிறாங்களாம். அதை மட்டும் வேணுங்கிறபோது கேட்குறேன்னு சொன்னாங்க.” என்றான் அருண்.

“சரி… நீயும் ஜனாவும் ஒரு ரெண்டு மூனு நாள் மட்டும் டூவீலர்ல டெலிவரி கொடுத்திடுறீங்களா? ஆம்னி கார்-ஐ சர்வீஸ் விடப்போறேன்…” – பாலன்.

“சரிண்ணே. ஒரு பிரச்சனையும் இல்ல…” என்று அருண் சொல்ல, ‘பசங்க சமாளிச்சிடுவாங்களா?’ என்று நினைத்து பாலன் சற்று தயங்கினார்.

பாலனின் அழைப்பைக் கேட்டு பாக்கெட் செக்ஷனில் இருந்து வெளிவந்த ஜனாவிடமும் பாலன் ஆம்னி காரை சர்வீஸ்ஸிற்கு விடுவதைப் பற்றிக் கேட்டார்.

அவரது தயக்கத்தை உணர்ந்து, “ரெண்டு பேட்டரி வண்டி இருக்குல? நாங்க மேனேஜ் பண்ணிப்போம்.” என்று உறுதியாகச் சொன்னான் ஜனா.

இந்த இடதும் வலதும் இருக்கையில் பாலனுக்கு என்ன கவலை? பாலன் நிம்மதியாக அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்தார்.

*********

 “சரிப்பா ஆம்னி கார் இல்லாமல் டெலிவரி கொடுக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க, காலேஜ் பசங்களை வரவழைக்கறேன்.” – பாலன் ஜனாவிடம் சொன்னார்.

“அதைப் பற்றி உங்களுக்கு டென்ஷனே வேணாம் பாலண்ணே… ஆமா என்னை எதுக்கு கூப்பிட்டீங்க பாலண்ணா?”

“அதான?? எதுக்கு கூப்பிட்டேன்னே மறந்துபோச்சு… ம் ஞாபகம் வந்திடுச்சு… இன்னைக்கு ரெண்டு முக்கியமான டெலிவரி இருக்கு…. நீ மொதோ டெலிவரியை எல்லாம் கொடுத்துட்டு அடுத்த வேலையை பாரு ஜனா… 10 ஃபோன் போடுறாங்க… வாட்ஸ் ஆப்ல மெசேஜ்ஜா அனுப்புறாங்க… என்னால பேங்க் வேலை கூட பார்க்க முடியல ஜனா.”

“ஆமா பாலண்ணா. என் நம்பருக்கும் போன் போட்டுக்கிட்டே இருக்காங்க. முந்தாநேத்து பேக் பண்ண சரக்கு வேற இருக்கு பாலண்ணா… நீங்க வந்தப்பிறகு டெலிவரிக்குப் போலாம்னு நினைச்சேன். 20 வீடுகளுக்கு டெலிவரி இருக்குண்ணா. இன்னிக்கி செம்ம டைட்டா போகும்.”

“நானும் டெலிவரிக்கு ஆள் தேடிட்டே இருக்கேன். கிடைக்க மாட்டேங்குது… பேசாமல் நார்த் பசங்க ரெண்டுபேரை டெலிவரிக்கு பிடிச்சிப்போடணும்.”

“அதை மொத செய்ங்க பாலண்ணா… நாங்களும் ஹிந்தி கத்துக்கலாம்…” என்ற ஜனா கடையைச் சுற்றி பார்த்தபடி “இந்த அருண் எங்க போய்ட்டான்? இங்க தான நின்னுட்டு இருந்தான்?” என்று கேட்டான்.

“அவன் ஆம்னி கார்ல கிளம்பிட்டானே? லக்ஷ்மி கல்யாண மண்டபத்திற்கு சரக்கு இறக்க போயிருக்கான்டா…. நீ இப்ப என்ன பண்ற…” என்றவர் சொல்ல வந்ததை மறந்து மீண்டும் குழம்பி நிற்க,

“டெலிவரியை ஆரம்பிக்கணும்…” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினான் ஜனா.

“ஆமா ஆமா… ப்ரவீனா அக்கா வீட்டு டெலிவரியையும் கல்யாணி அக்கா வீட்டு டெலிவரியையும் மட்டும் முடிச்சிடு ஜனா… ஆம்னி கார்ல மற்றதை டெலிவரி பண்ணிடலாம்.”

“சரிண்ணே அந்த ரெண்டு வீட்டுக்கும் நானே  டெலிவரி கொடுத்துடறேன்.” என்றபடி மீண்டும் பாக்கெட் போடும் இடத்தின் பக்கமாக ஜனா நுழைந்தபோது, “இப்ப நீ டெலிவரிக்கு வண்டி எடுக்காம எங்க போற? பேட்டரி வண்டியில சரக்கு ஏத்திட்டேன் ஜனா.” என்று அவனை தடுத்தார் பாலன்.

“அண்ணே ரெண்டே வேலை தான் முடிக்க வேண்டிருக்கு. யாஸ் அக்காவுக்கு பருப்பு மூடையை பிரிச்சுக் கொடுக்கணும்… செல்வி அக்காவுக்கு பாக்கெட் போட்ட சரக்குகளை ராக் பக்கம் கொண்டுபோணும். இந்த ரெண்டு வேலையை மட்டும் செய்திடுறேண்ணா… ராக் பக்கம் பாக்கெட்டுகள் போயிருச்சுன்னா பிள்ளைங்க சரக்கை அடிக்கிருவாங்க. லேட் ஆச்சுன்னா பிள்ளைங்களுக்கு வேலை வந்துரும்… ராக்-ல சரக்கு அடுக்க முடியாதுண்ணா.”

ஜனா சொல்வது சரி எனப்பட்டதால், “சரி சரி உனக்கு அஞ்சு நிமிஷம் டைம். டக்கு டக்குனு அந்த வேலையை செஞ்சிட்டு நீ வண்டி பக்கம் வந்து நில்லு…” என்றார் பாலன்.

சரியாக பத்து நிமிடத்தில் தான் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்த ஜனா, சரக்குகள் கட்டப்பட்டு தயாராக இருந்த பேட்டரி வண்டியை ஆன் செய்துவிட்டு,

“அண்ணே அந்த ‘பிரெஸ்டீஜ் காலன்டர்’ அட்ரஸ் மட்டும் திரும்ப எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடுங்க. என்கிட்ட அந்த ஆஃப்பீஸ் அட்ரஸ் இல்ல. எல்லா டெலிவரியும் முடிச்சிட்டு கடைசியா அங்க போய் பில்லுக்கு பணத்தை வசூல் பண்ணணும்… நேத்து டெலிவரி பண்ண சரக்குக்கு அவுங்க இன்னும் பணம் கொடுக்கல..” என்றான் ஜனா.

“ஓகே டன்.” என்று கூறி கடைக்குள் செல்ல ஆரம்பித்த பாலனை ஜனாவின் குரல் இடைமறித்தது.

“அப்புறம் அந்த காஸிம்மை ஒழுங்கா வண்டி ஓட்டச் சொல்லுங்க. நேத்து போலிஸ்கிட்ட அடிவாங்கிருப்பான். நான் தான் பேசி பிரச்சனையாகாமல் பார்த்துக்கிட்டேன். ரொம்ப ஸ்பீட்டா வண்டி ஓட்டுறாண்ணே… அவனை மெதுவா போகச்சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே வண்டியை உயிர்ப்பித்து வாசல் தாண்டிச் சென்றான் ஜனா.

“சரி ஜனா.” என்று சப்தமாகச் சொல்லிக்கொண்டே கடைக்குள் சென்றார் பாலன்.

பாலனிடம் சொல்ல வேண்டிய விபரங்களை சொல்லிவிட்டு சரக்குகளுடன் ஜனா அந்த தெருமுனையில் திரும்ப ஆரம்பித்தபோது அழுக்குச்சேலையில் கையில் ஒரு பொம்மையுடன் இருந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வருவோர் போவோர் சிலரிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.

தனது அன்னையின் சாயல் அப்பெண்ணின் முகத்தில்… உடனே மனம் தாங்காமல் வண்டியை அப்பெண்ணின் அருகே கொண்டுசென்ற ஜனா தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுத்தான்.

ஆனால் அந்தப்பெண் அதை வாங்கவில்லை.

“இந்தப் பைத்தியம் இப்படித்தான்ப்பா… எல்லார்கிட்டயும் வாங்காது… காசு கொடுக்கிறவங்ககிட்டக்கூட வாங்காமல் போயிடும்.” என்றார் பக்கத்துக் கடைக்காரர்.

“தெரியும்ணே… ஆனாலும் சும்மா கொடுத்துப் பார்த்தேன்… அந்தப் பொண்ணை பைத்தியம்னு சொல்லாதீங்க… அதோட பேரு திவ்யா… திவ்யபாரதி…” என்றான் ஜனா.

திவ்யாவைப் பார்த்துக்கொணடே வண்டியை நகர்த்திக்கொண்டு ஜனா சென்றபோது குமார் அண்ணன் தனது டி.வி.எஸ் 50-ஐ பார்க் செய்த இடத்தில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் திணறுவதைப் பார்த்ததும், “இருங்கண்ணே நான் எடுத்துத்தர்றேன்” என்று கூறி அவருக்கு உதவி செய்தான் ஜனா. தனது வண்டியை ஜனா எடுத்துக்கொடுத்தப்பிறகு,

“ரொம்ப தாங்க்ஸ் ஜனா… பார்ப்போம்… நான் கிளம்புறேன்…” என்று கூறி தனது டி.வி.எஸ் 50 யை கிளப்பிக்கொண்டு சென்ற குமார் அண்ணன் பேக்கரி கடையில் நின்றுகொண்டிருந்த நிஷாவைப் பார்த்து ‘இந்தப்பொண்ணு ஏன் நந்தினி பேக்கரியில நிற்கிது? இது சூப்பர்மார்கெட் பிள்ளை தான?’ என்று நினைத்துக்கொண்டு ஒன்றும் புரியாமல் விழித்தபடியே சென்றார்.

தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று அவருக்கு லேசாக புரிய ஆரம்பித்தது. நிஷாவைப்பற்றியும் ஜனாவைப் பற்றியும் நினைத்துக்கொண்டே வண்டியை நிறுத்தாமல் சென்றார்.

குமார் அண்ணன் நிஷாவைப் பார்த்தபோது நிஷாவும் அவரைப் பார்த்தாள்.

தனது வாழ்வில் முக்கியமான நிகழ்விற்கு காரணமாக இருந்த குமார் அண்ணனை பார்த்த நொடியே அவளது கண்கள் கலங்கின.

“அக்கா இந்த கடையில வேலைக்கு ஆள் எடுக்கிறாங்களா?” என்று கேட்டு ஒரு இளம் வயது பெண் வந்தபோது நிஷா அந்தப் பெண்ணையே இமைக்காமல் பார்த்தாள்.

குமார் அண்ணனைப் பார்த்தப்பிறகு நிஷாவிற்கு பேசவே முடியாதபடி நெஞ்சடைத்துப்போய் இருந்தது.

நிஷாவின் கலங்கிய கண்களை கவனித்த வானதி, “பக்கத்துல இருக்கிற வேலவன் சூப்பர்மார்கெட்டுல கேட்டுப் பாருங்க… அங்க வேலை இருக்கலாம்.” என்றாள்.

மனதுக்குள் தவியாகத் தவித்த நிஷாவிற்கு அவள் வேலவன் சூப்பர்மார்கெட்டில் வேலைக்குச் சேர்ந்த நாள் தான் அப்போது ஞாபகத்திற்கு வந்தது.

Advertisement